மூன்று கவிதைகள்

 

முகமூடி

எப்போதும் அணிந்து செல்லும்
முகமூடியை
அத்தனைக்கும்
அணிந்து
அணிந்து
மலிவாகிவிட்டதின் பொருட்டு
நனவோடு எடுத்த முடிவாய்
அணியாது போன ஒரு நாள்
நீண்டன கைகள் முகம் முன்னே
இதென்ன முகமூடியென்று.
நாள்முடிந்து வீடுவந்து பார்க்கையில்
நகங்கள் கீறி
முகமெங்கும் வழிந்திருந்த குருதியில்
தெரிந்தது
புதிய முகமூடியொன்று.

முந்தைய முறை

ஒவ்வொரு முறை முடிவெட்டிக்கொண்டு வருகையிலும்
திருப்தியே இருந்ததில்லை
பார்வையற்ற எனக்கு.
என்னவோ செய்துகொண்டு வருகிறாய் என
அம்மாவும் அதிருப்தி படுவாள்.
எத்தனையோ கடைகளில் வெட்டிக்கொண்டு
எதுவும் பிடிக்காமல்
என்னவாகினும் பரவாயில்லையென
யாரும் அதிகம் செல்லாத
அருகிலிருக்கும் முதியவரின் கடைக்கே சென்றேன்.
நான் ஏதும் சொல்லாமல் அவரே
தலைமேல் விரல் வைத்து ஆராய்ந்து
இதற்கு முந்தைய முறை செய்தவர்
சரியாகவே வெட்டியிருக்கவில்லை போல என்றார்.
தன் பல வருட அனுபவங்களைப் பற்றி
சொல்லிக்கொண்டே முடித்து
இப்போதுதான் கச்சிதமாய் இருப்பதாய் சொன்னார்.
அம்முறையும் அம்மாவிடம் அதே அதிருப்தி தான்.
இப்போதெல்லாம்
அவர் கடைக்கு மட்டுமே செல்கிறேன்.
இப்போதும் அவர் சொல்வது
இதற்கு முந்தைய முறை செய்தவர்
சரியாகவே வெட்டியிருக்கவில்லை என்று.

பலவீனம்

எதிரிகள் யாருமில்லையென
மகிழ்ந்திருக்க விடாது
கொலை செய்யுமளவு வன்மம் தூண்டும்
சின்னச் சின்ன துரோகங்கள்
நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன.
அவை நேர்கையிலெல்லாம்
நிழலாடுகின்றன
நிகழ்த்தும் முகங்கள்.
கூர் நுனியால்
மெல்லிய கோடு தீட்டி
கொல்லாமல் ரத்தம் மட்டும் காட்டி
பலவீனம் உரைத்து
மீண்டும் மடங்கிக்கொள்கின்றன
முகங்களினுள் முகங்கள்.
கதைகள் பல
தேக்கி வைத்திருக்க
அவற்றை கேட்க நேரமில்லாத
நெருங்கிய முகங்கள்
பழகிக்கொள்ள சொல்கின்றன.
கதைகளோடு
அழிந்துபோகின்றன
வன்மங்கள்.