பெருவெளிக் காற்று

அவன் வீட்டைத் துறக்க முடிவு செய்தான்.

யசோதரா, அவளுக்கு என்ன குறை? அழகு இல்லையா? அறிவு இல்லையா? நளின நாசூக்கு இல்லையா… எல்லாமே இருந்தன. எல்லாமே முழுமையாக இருந்தன. அவனை அவள் எத்தனை நேசித்தாள், அதிலும் குறை சொல்ல என்று ஒன்றுமில்லை. அவன் இரவுகளை அவள் அலங்கரித்தாள். அந்த இருளிலும் அவளது அருகாமை, பெண்வாசனை எத்தனை இதம். எல்லாவற்றையும் மூடி மறைத்தது இருள். வாசனையை மூட முடியுமா? யசோதராவின் வாசனையை அந்த இருளிலும் அவன் அறிவான். எந்த இருளிலும் அறிவான். அவள் அருகே இல்லாவிட்டாலும் கூட அறிவான் நன்றாக. செயற்கையை விட இயற்கையை நேசிக்கிறவன் அவன். வணங்குகிறவன் அவன்… தலையணை மேலே விரிந்து பரந்து கிடந்த கூந்தல். அவள் தலை நிறைய சூடியிருந்த மல்லிகை மலர்கள், இருளில் நட்சத்திரங்களாய்க் கண்டன. மலர்களை விலக்கி கூந்தலை முகர்ந்தான் அவன். பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டோ? பெண்ணே, மொத்த பெண் அம்சமுமே, ஆணுக்கு மணம் தான். பெண்ணுமே ஆணைப்பற்றி இப்படி உணரவும் கூடும். யசோதரா, உண்மையா யசோதரா?

இருள் மொத்த உலகத்தையுமே ஒரு சீசாவுக்குள் போல மூடி அடைத்து விடுகிறது. மனிதனின் கண்ணைப் பொத்தி இருள் ஆடும் கண்ணாமூச்சி. அதேசமயம், மனிதனை தன் யத்தன, பிரயத்தன வியூகங்கள் தாண்டி, விலங்கு நிலையின் சூட்சுமத்துக்கு இருள் கொணர்கிறது. அறிவின் ஆணி தளர மனிதன் ஆக இயல்பாக இயங்கும் கணங்கள் அவை. வேகமும் மோகமும் நதிப்பெருக்காய் உரு பெருகுகையில் அவள், யசோதரா ஈடுகொடுத்தாள். இழைந்து வளைந்து கொடுத்தாள். மறுத்ததே கிடையாது அவள். அவன் மனசறிந்து நடந்து கொண்டாள். கொடுக்கும் போதே எடுத்துக் கொள்ளும் ஜால வித்தை அவள் அறிந்து வைத்திருந்தாள். எல்லாப் பெண்களுமே அதை அறிந்து தான் வைத்திருக்கிறார்கள். அது பாசமா? தியாகமா? வள்ளல் தன்மையா? அன்பினால் திகைக்க வைத்து விடுகிறார்கள், திக்கு முக்காட வைத்து விடுகிறார்கள் பெண்கள்.

அவளுக்கு என்ன பிடிக்கும்? அவன் கேட்டபோது சிரிக்கிறாள். உங்களுக்குப் பிடிக்கிற எல்லாமும் எனக்கும் பிடிக்கும், என்கிறாள். அது உண்மையா? சிரிக்கிறாள், பொய்யல்ல என்கிற சிரிப்பு மாதரிதான் தெரிகிறது. ஒரு ஆணின் முன்னால் தன்னை, சுயத்தை அழித்துக் கொள்ள வல்லவள் அவள். பெண்கள் அப்படித்தானோ? ஆணால் இப்படி முடியுமா? கற்பகத் தருவாய் இருந்தாள் அவள். ஆனால் தனக்கென எதுவுமே, ஆசைகளே இல்லாத அவள். யசோதரா… அவளைக் குறை சொல்லுதல் தகாது. அபாண்டம் அது. அவளிடம் அவன் குறை சொல்ல என்று என்ன இருந்தது? எதுவுமே, ஒன்றுமே இல்லை. ஆனால், ஹ்ம். அவன் வீட்டைத் துறக்க முடிவு செய்தான்.

நடந்து கொண்டிருந்தான். எங்கே போகிறான்? அவனுக்கே தெரியாது. எந்த திசையில் போகிறான் என்றும் அவன் சட்டை பண்ணவில்லை. வெளியேற்றம். அதுவே அப்போதைய யோசனையாய் இருந்தது. யோசனை என்று கூட இல்லை. அவன் யோசனையற்று இந்தப் பெருவெளியில் ஒரு காற்றைப்போல நடமாட விரும்பினான். செய்த செயல்களையும், தன்னை இதுவரை இயக்கிக் கொண்டிருந்த அத்தனை நியதிகளையும் தளைகளாக உணர்ந்தான் அவன். புதிய பிரதேசங்களில் தன்னை நாற்றங்காலாக உருவி நட்டுக்கொள்ள விரும்பினானா? அதுகூட இல்லை. பிரதேசங்களில் இருந்து தன் வேர்களைப் பிடுங்கிக் கொள்கிற ஆவேசம் அது… என்பதுதானே சரி. தான் பிறந்தபின், வளர்ச்சி முதிர்ச்சி என்கிறதாக, சூட்சுமங்களால் ஆளப்பட்ட ஓர் ஆத்மாவை, அறிவு நெய்யூற்றி அனுபவச் செறிவூட்டி உக்கிரப் படுத்துகிற பாவனையில், கடைசியில் காண்பது என்னவோ போதாமையே. காரணம்… ஒன்றைத் தேடி மனம் குவிகையில், ஆசையும் அதன் செயல் வேகங்களும் வாழ்க்கையை இயக்கும் போது, வாழ்க்கையின் பிரம்மாண்டம் சுருங்கிப் போகிறது. வலையில் மீன் பிடித்தாப் போல. ஆனால் நதி. அதில் துழாவித் திளைக்கும் கோடானு கோடி மீன்கள். வாழ்க்கை அப்படியாய் இருக்கிறது. பிரம்மாண்டமானது வாழ்க்கை. அதன் பிரம்மாண்டத்தை உணராமல் வாழ்க்கையைப் புரிந்துகொள்வதாக, புரிந்து கொண்டதாக பிரமை கொள்வது வேடிக்கை அல்லவா? பெரு நதியில் கையள்ளிய நீர். அவரவருக்கு வாய்ப்பது அவ்வளவே.

பின்னிரவுப் பொழுதில் அவன் கண்விழித்தான். கலவியில் களைத்து மயங்கிப் படுத்திருந்தாள் யசோதரா. எத்தனை அழகான பெண் இவள். அழகு என்பதே அன்பு தான். பரிவு தான். ஆணுக்குப் பெண் அழகு. பெண்ணுக்கு ஆண் அழகு. அவளிடம் அன்பெனும் வாசனை பூக்கப் பூக்க அவளை அவன் புணர்வான். தேன் என்பது பூக்களின் வியர்வை. ஆண்களிடம் இந்த வாசனை உண்டோ? தெரியாது… பெண்களுக்கான கேள்வியோ இது? சற்று கலைந்து கிடந்தாள். கலந்த அசதி. பின் கலைந்து அலுத்த உறக்கம். மனம் அமைதியுறும் போது உறக்கம் வந்து விடுகிறது. நியதிகள் பிறகு தங்களைத் தாங்களே தளர்த்திக் கொண்டு விடுகின்றன. உடைகள் போல நியதிகள். உடைகள் களையப்படும் போதே நியதிகள் தளரும் பரபரப்பு, மூர்க்க வேகம் பெற்று விடுகின்றன போலும். பெருங் களைப்பில் உறக்கத்தை பசியுடன் ஆவேசமாக உண்டு கொண்டிருந்தாள் யசோதரா. ஆடைகள் நெகிழ்ந்திருந்தன. அதை இறுக்கி அணிந்து கொள்ளவும் கூடாத அலுப்பில் அவள் இருந்தாள். ‘கூடிய’தால் கூடாத அலுப்பாயிற்று. அவை அழகான இரவுகள். இரவுக்கு பெண்ணால் அழகு வந்துவிடுகிறது. அவள் விழித்துக் கொள்ளாத கவனத்துடன் மாடியேறி வந்தான். வானுக்கும் பூமிக்குமான இருள். அவன் மேலே ஏற ஏற ஏதோ உறைக்குள் நுழைந்து கொள்வது போல் இருந்தது. ஒரு நட்சத்திரம் கூட இல்லை. அவைகளும் உறங்கப் போய் விட்டனவா என்ன- அத்தனை இருளின் கருஞ் சாந்தில் சிறிது நாசியை உறிஞ்சி இருளுக்கு வாசனை இருக்கிறதா என்று பார்த்தான். வாசனை இல்லாத உலகம் எது? கீழே காற்றுக்கு அசைப்புறும் கொடிகளின் சிறு மலர்கள் வாசனையைக் காற்றில் பரப்பி விட்டிருந்தன. கொடிகள் அசையும் ஓசையைக் கேட்க முடியுமா, என்று கூட ஆசையாய் இருந்தது.

ஒளி அப்பா என்றால் இருள் அம்மா போல என்று தோன்றியது. பகலின் அந்த உக்கிரம் வீர்யம்… கடுமை அம்மாவிடம் இல்லை. இருள் மென்மையானது. சமையல் அறையில் இருந்து ஈரக் கையுடன் வந்து அவனை அணைத்துக் கொள்ளும் அம்மா. குளிர் கலந்த இருள் அவனுக்குப் பிடிக்கும். உலகம் சமிக்ஞைகளால் ஆனது. காத்திரு. பெற்றுக் கொள். அறிவு… ஆனால் உன்னைச் சுருக்கி விடுகிறது அல்லவா? அறிவு என்பது இறுக்கம் என்றால், ஞானம் அதன் தளர்ந்த நிலை, பரபரப்பற்ற நிதான நிலை அல்லவா? அறிவு மாட்டை தன் எல்லைகக்குள் முளையடித்துக் கட்டி விடுகிறது… அந்தக் கணத்தில் திடீரென்று அவன் முடிவெடுத்தான். இப்படி ஒரு நியதிப்பட்ட வாழ்க்கையை, பெண்ணின் முந்தானையில் கட்டிப்போட்டு முளையடிக்கப் பட்ட வாழ்க்கையை… நான் விலகுவேன். மனசில் ஓர் ஒளி பாய்ந்தாப் போலிருந்தது அந்தக் கணம். இருளில் முதல் கிரணம் அவனை வந்தடைந்தாப் போலிருந்தது. ஒரு ரகசியத்தின் பரிமாற்றம் நிகழ்ந்தாப் போல.

வாழ்க்கையின் ஏமாற்றங்களின் பால் கலவரப்பட்டு மறுகரை யோசனைக்கு வருகிற, அந்த மாதிரியான விலக்கம் இல்லை அது. விரும்பியதைத் துறக்க வேண்டும். அதற்கு அபாரமான தைரியம் வேண்டியிருக்கிறது. ஒரு தற்கொலையின் தைரியம் அது. ஜப்பானில் அநேகம் பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஞானிகள் நிறையப் பேர் அப்படியோர் முடிவு எடுப்பதாகவும் தெரிகிறது. நான் ஞானி அல்ல. அத்தனை பெரிய ஆத்மா அல்ல நான். குறைந்த பட்சம் அல்லது முதல் நிலையாய்… இருக்கும் என் வசதிகளை, அழகுகளை, சுகங்களை என்னில் இருந்து அப்புறப் படுத்துவேன். எனக்கு மகிழ்ச்சி தரும் விஷயங்களை விலக்கி, விலகி நிற்பேன். முடியுமா? அந்த தைரியம் திண்ணக்கம் உறுதி, எனக்கு அது இருக்கிறதா? இருக்கிறது… இருக்கிறதாக நான் அதை நம்ப வேண்டும். அல்லது அதைத்தான்…சோதித்துப் பார்த்துவிட்டால் என்ன?

துறவு என்பதன் முதல் படிநிலையா இது, என்று யோசித்தான். விரும்பியதைத் துறத்தல். சில கணங்களில் சில கீற்றுகள் நம்மை வந்தடைகின்றன. முகூர்த்த கணங்கள் அவை. மொத்த வாழ்க்கையுமே அந்த ஒரு கணத்தில், தருணத்தில் திசை விலகுகிறது, திசை திரும்புகிறது. அறிந்தோ அறியாமலா. ஒருவேளை, எல்லாருக்குமே, சாமான்ய, வெகுஜனங்களுக்குமே கூட, இந்தத் தருணங்கள் வந்து போகலாம். அவர்கள் அதைத் தவற விட்டிருக்கவும் கூடும்.

வாழ்க்கை தன் நியதிகளால், அவை மனிதன் வகுத்தவை என்றே நினைத்தான் அவன், ஒரு பரபரப்பை ஒழுங்கை நிர்ப்பந்திக்கிறது. இயற்கையில் நியதிகள் உள்ளனவா? ஒரு பெரிய சித்திரத்தை உள்வாங்கிக் கொள்ள முடியுமா அவனால்? பெரும் சுழல் அதில் மனித யத்தனங்களின் நியதிகள் சிதறியே போக வல்லவை என்று தோன்றியது. என். இத்துனூண்டுக் கண்ணால் என்னால் வானத்தை அளக்க முடியுமா? ஆனால் அளக்க வேண்டும் என்கிற அந்த விழைவே அழகு. இது இழப்பு அல்ல. துறத்தல் என்பது ஒரு கணக்கில் துறத்தலே அல்ல. தழுவுதல். பெருங் கையால் பரந்து விரிந்த உலகம் முழுவதையும் நான் தழுவிக் கொள்ள விழைகிறேன். இது கசப்பினால் வந்த ஒடுக்கம் அல்ல. அன்பினால் வந்த பெருக்கம்.

நான் மனிதனுக்கு மனிதனிடம் விழையும் அன்பை, காதலை அலட்சிக்கிறேனா? புறக்கணிக்கிறேனா. நிராகரிக்கிறேன் நான் அதை. அதுவும் ஒரு பார்வைதான். நீரடித்து நீர் விலகுவது போல. உண்மையான அன்பு தாமே பின் வந்து கலந்து கொள்ளும் அல்லவா? தானே அறியாமல் இணங்கிக் கரைந்துவிடும் என்று தோன்றியது. நடந்து கொண்டிருந்தான். எதையும் யோசிக்காமல் நடக்க முடிந்தால் நல்லது. பாம்பு படத்தைக் கீழே போட்டாப் போல இருளில் வெப்ப மூர்க்கம் அடங்கி யிருந்தது. கால்களை மாற்றி மாற்றி இயக்குவது தவிர வேறு யோசனை அவனிடம் இல்லை. பகலில் வேண்டாம். இரவுகளில் கிளம்பலாம். நடக்க இரவு அழகு. வண்டுகள் இரவுப் பாடல் பாடுகின்றன. குரல் அற்றவர்களின் குரல் கேட்கும் இரவு. தன் உணர்வுகள், வலி போன்ற அம்சங்களைப் பின் தள்ளி அவன் இயற்கையோடு இயங்க விரும்பினான். பெரும் இயற்கையே தன்னை இயக்குவதைப் போன்ற எளிமையைக் கைக்கொள்ள விரும்பினான். இயங்குதல் அல்ல மிதத்தல். உலகம் ஆனந்த மயமானதா. துக்க மயமானதா. இரண்டும் அற்ற ஒரு நிலையில் அவன் உலகை எதிர்கொள்வான். உலகம் அல்ல, உணர்ச்சிகள் தன் அளவிலானவை என உணர்ந்த கணம் அது. என் காதுகளுக்கு இத்தனை நுட்ப ஒலிகளை அறியும் கிரகிக்கும் திறன் இருப்பதையே இன்று உணர்கிறேன். என் நாசிகள்… ஆகா எத்தனை துல்லியமாய் இயங்குகின்றன இப்போது- ஒலிக்கவிதை.

அமாவாசை அருகில் ஓர் தினம். அவன் கிளம்பிய தினமே அமாவாசையோ என்னவோ? இருளின் கரும் பால் எங்கும் சிந்திக் கிடந்தது. திரவத் திரை போல உலகை அது மூடி யிருந்தது. நிசி விசித்திரம்., அதனுள் மீன் போல கண்ணால் துழாவி எதுவரை தன்னால் பார்க்க முடியும் என்று தேடிப் பார்த்தான். தாயின் மார்பைத் தேடும் குழந்தையின் ஆர்வம் அது. இரவே பார்வதி. அவன் ஞானசம்பந்தன். இயற்கை தான் நம் எல்லாருக்குமே அம்மா. ஒளிந்து கொள்ளாமல் எங்கும் நிறைந்து கொள்ளும் அம்மா அவள் இப்போது. கால்கள் வலிக்கிறதோ. அதைப் பற்றியென்ன?

வீடு சார்ந்த நினைவுகள் அவனிடம் இல்லை. துப்புரவாக இல்லை. ஒருவேளை அவள், யசோதரை அவனைத் தேடுவாளோ? அவனைக் காணாமல் திகைப்பாளோ?… என பரபரப்பில்லாமல் யோசனை வந்தது. சில நாட்களாகவே அவனில் எழுந்த மாற்றங்கள். சிந்தனை இங்கே இல்லாமல் எங்கோ சஞ்சாரம் செய்ய உலவிக் கொண்டிருந்தான் அவன். அவள் கவனித்திருக்கலாம். தனிமைப்படுதல், பிட்டுக் கொள்ளுதல், விலகுதல், அதன்மூலம் புதிய உலகையும், ஏன் இந்த, எனக்கு வாய்த்த உலகையுமே பற்றிக் கூட அறிந்து கொள்ளுதல். யசோதரா நுட்பமானவள். நம்மைவிட, ஆண்களை விட பெண்மை மேலும் சுதாரிப்பானது என்று தோன்றியது. தற்காப்பு சார்ந்த, தன் பாதுகாப்பு சார்ந்த சூட்சுமத்தின் சதா கண் விழித்த நிலை தான் அது. தற் காத்து, தற் கொண்டாற் பேணி… என்பார் வள்ளுவர். யசோதரா சிறிது திகைத்தாலும், ஆமாம்… நடந்ததை யூகிப்பது அவளுக்குக் கடினமாய் இராது. தவிரவும், அவன் புன்னகை செய்து கொண்டான். பிரிதல் என்பது எனக்கான அனுபவம் மாத்திரம் அல்ல. அவளுக்குமே புது அனுபவம்தான். அவளுக்குமான அந்த அனுபவ சுதந்திரத்தை நான் முழு மனதுடன் தந்தேன்…இப்போது இல்லாவிட்டாலும் காலம் அவளுக்கு அதைப் புரிய வைத்து விடும்.

என்னைக் கவலைகள் தின்னத் தகாது.

நாற் சந்திகள், திசை காட்டிகள், ஒழுங்குகள், அம்புக் குறிகள். எல்லாவற்றையும் அலட்சித்தான். தத்துவங்கள். ஆ, அதுவே எத்தனை சுயநலமானவை என்று திடீரென்று தோன்றியது. ஒருவன் வாழ்க்கையின் திரட்சி என்று தத்துவமாக எதுவும் பேச ஆரம்பித்தாலே அவனது சுயநலத்தை, நான் சொல்வதை நீ கேள் என்கிற ஆக்கிரமிப்பைத் தான் அது காட்ட முடியும். அன்பே, பரிவே, அக்கறையே, கரிசனமே… எத்தனை விதமான ஆதிக்கங்கள். செல்ல அடி முதல் முரட்டுக் கடி வரை.

பகலில் தெருவோரங்கள் எங்காவது தங்குவான். இடுப்பு பெருத்த விருட்சங்கள். அதனடியில் அவன் தன்னை சிற்றுயிராக உணர்ந்த கணங்கள். பெரும் அமைதியை அவனுக்குத் தந்தன அவை. மேலே விதவிதமான பட்சிகளின் சப்த ஜாலங்கள், காற்றில் விளைவித்த தானியங்கள்.. காலை விடிய அவை எப்படி சுறுசுறுத்து இரை தேடப் புறப்பட்டன. குறைந்த பட்ச உணவு, அருந்த நீர்… என தேவைகளை மிகச் சுருக்கிக் கொண்டிருந்தான்.

பொழுது சூரியன் எழ இறங்க என அடையாளப் பட்டது. உத்தேச குத்துமதிப்பில் வாழ்க்கை, இன்னும் தெளிவான ஸ்மரணையுடனான சுய இலக்குகளோடு இது இப்போது இருப்பதாய்த் தெரிந்தது. பிறர் நிர்ணயிக்காத, இயற்கை வழங்கிய, தனக்குள்ளேயே ஊறிய இலக்குகள். தன் அறிவைச் சார்ந்து ஒழுகும் மனிதன் சூட்சமத்தின் பிரகாசத்தை மங்க விட்டு விடுகிறான், என்பது ஆச்சர்யம்தான். கால காலமாக முன்னோர்கள் நடந்து நமக்கு வழங்கி வந்த, காட்டிய பாதை… அது? ராஜபாட்டை தான் அது. அங்கே மனிதன் நடந்து நடந்து தடங்கள் மிகுந்து அவ் வழியில் பிற தாவரங்கள் இல்லை. அவனும் அந்த அடையாளத்தைப் போஷித்துப் பேணுகிற அளவில் ரஸ்தாக்களை அமைக்கிறான். ஆயின் இது மனம் சொல்லும் வாழ்க்கை. கடிகார முள்ளின் குத்தல், வண்டி மாட்டை வேகமாய் ஓட வைக்கிற சாட்டைக் குச்சியின் முடுக்கம் இதில் இல்லை. சூட்சுமத்தின் விழித்த தயாருடன் அதைப் பின்பற்றி கால்களை இயக்கினான். தரும் நிலை அல்ல அது. பெறும் நிலை… பெருவெளிக் காற்றே என்னைத் தழுவிக் கொள். வேர்க்கடலைப் பொட்டலமாய் காற்று என்னைச் சுழன்று சற்றி வளைத்து பொதிந்து கொள்ளட்டும்.

கிடைத்த நீர்த் தேக்கத்தில், குளத்தில் ஏரியில் தண்ணீர் அருந்தினான். ருசி பார்க்காமல் தேவைக்கு அருந்தினான். இன்னும் வசதி கிடைத்தால் குளித்தான். இல்லாத சௌகர்யங்களை அலட்சித்தான். எளிமை பெரும் போதையாய் இருந்தது. இல்லாதவற்றில் சலிப்பு இல்லை. யசோதரா இப்போது அருகில் இல்லை. அதனால் என்ன, யார் உலகில் சாஸ்வதம், என்று நினைத்தான். என்னை சமாதானப் படுத்திக் கொள்கிறேனா, என்றும் தன்னையே கேட்டுக் கொண்டான். எல்லாக் கேள்விகளையும் மனதை நோக்கித் திருப்புகிறவனாய் இந்நாட்களில் இயங்க ஆரம்பித்தான். அறிவு அல்ல சூட்சுமம் சொல்கிற சேதிகளை உன்னித்துக் கேட்கிற யத்தனம் வந்திருந்தது. குளிரையும் வெப்பத்தையும் உடல் உணர்வது போல சூட்சுமம், உலக மதிப்பீடுகள் சார்ந்து அது கவனம் குவிவது மேல்மட்ட அறிவுக்கும் அப்பாலான விஷயம் என்பதே ஆச்சர்யமாய் இருந்தது. அறிவின் படிவுகளே உரம் போல சூட்சுமமாகத் தேங்குகிறதோ என்னவோ? இது கால காலமாக பிறப்பு தோறும் மானுடத்தில் கைமாற்றப் படுகிறாக அமைந்திருக்கலாம்… ஒரு விஷயத்தை நினைக்கையிலேயே அறிவு சார்ந்து யோசனைகள் நீண்டாலும் சூட்சுமம் தன்னளவில் உடல் பரபரப்பை படபடப்பை அறிவிக்க வல்லது என்று உணர்ந்தான். பறவைகள் விலங்குகள் இந்த சூட்சும அறிவினால் சுதாரிப்பு கொள்கின்றன. சூட்சுமங்கள் புலன்கள் மூலம் உள்வாங்கப் படுகின்றன. மொழியினால் அல்ல சப்தங்கள், சமிக்ஞைகள் மூலம் பெறப்பட்டு, அவற்றுக்கான எதிர்வினையான சப்தங்களும் சமிக்ஞைகளும் நிகழ்கின்றன என்று தோன்றியது. இப்படியே உள்முகப் பயணம் போவது அபார மன நிறைவைத் தருவதாய் இருந்தது. நடை வலி தெரியவில்லை. பசி தெரியவில்லை. பசியை வேடிக்கை பார்க்க ஆரம்பித்திருந்தான்.

பசியை வேடிக்கை பார்ப்பது முதல் கட்ட சவால். உடல் லேசாய் நடுங்கும் வரை பசித்தது. வயிறு உள் வாங்கி ஒட்டிக் கொண்டது. நடக்க முடியாத அளவு சோர்வு ஆட்கொண்டது. கண் இருண்டது. புலன்கள் ஒத்துழைக்க மறுத்தன. அறிவு வேலை செய்கிறதா என்றே தெரியவில்லை. பசி வந்தால் பசி தவிர வேறு எதுவுமே தெரியவில்லை. அதில் தெளிந்து வர வாரங்கள் எடுத்தன. வயிற்றை போஷித்து அதற்கு ஈடு கொடுத்து அதைக் கொண்டாடி வாழ்ந்த வாழ்க்கை அல்ல இது… என்ற தெளிவுடன் அதற்குப் போராட வேண்டியிருந்தது.

காலப்போக்கில் உட்கொண்ட எதிலுமான ஆகப் பட்ச சக்தியை வயிறு எடுத்துக்கொள்ளப் பழகிக் கொண்டாப் போலிருந்தது. அவனுக்கே ஆச்சர்யம். ஆக அறிவைத் தாண்டி சூட்சுமம் வழி நடத்துகிற ஒரு நிலை இருக்கிறது என்றும் அதை எட்டினோம், அல்லது அதை நோக்கி நடக்கிறோம் என்றும் புரிந்தது. மனப் படபடப்பு ஒரு நிலை என்றால் அதையும் தாண்டிய மௌனம் என்று ஒன்று இருக்க வேண்டும் என்று தோன்றியது. அதை எட்டுவேன்… என்று சொல்லிக் கொண்டான். பேச்சே இல்லை இப்போது. நடுக்கடலின் மௌன நிலை அது. லேசான அலைத் தாலாட்டு தவிர வேறு சலனங்கள் அங்கே இல்லை. ஒலிகள் இல்லை. பிரம்மாண்ட வெளி அது. அதில் நெஞ்சை நிமிர்த்தி நிற்கவே அபாரப் பயிற்சி வேண்டும் தான். இல்லாவிட்டால் மிரட்டி விடும் உன்னை. ஒரு இருநூறடி… மனிதன் போட்ட சாலையையே கடக்க அத்தனை மிரட்டுகிறது. இது இயற்கையின், அதைவிட பிரம்மாண்டம் அல்லவா?

இது எந்த இடம் தெரியாது. இரவுகளில் அவன் பயணிப்பதால் பிற மனிதர்களின் பார்வை என்று தொந்தரவுகள் அவனுக்கு இல்லை. கூட்டு வாழ்க்கையில் மனிதன் சக மனிதனைப் போல வாழவும், அவனை அனுசரித்து அவன்சார்ந்து வாழவும் பழகிய நிலையில் தனித்துப் போகிறவன் பைத்தியக்காரன் என்றாகிறது. அவன் மனிதர்களைத் தவிர்க்க விரும்பினான். மனிதர்களாலான உலகம் விலகி, மனிதர்களுமான உலகம் நோக்கி நான் என் புரிதலை விகாசப்படுத்துவேன், என நினைத்தான். ஓரளவு திட்டத் தெளிவுடன் தான் செயல்படுகிறேன். உடலின் சவால்களை வெல்ல வேண்டியிருக்கிறது. பழகிய அறிவு காட்டும் பயமுறுத்தல்களைத் தாண்டி வர வேண்டும். வசதிகளுக்கு மனம் திரும்ப வேகப்படக் கூடும்… என்றாலும் அதற்கும் தயாராய் இருந்தான். அதை ஒரு பயிற்சி எனவே கைக்கொள்ளவும் சித்தமானான். ஒரு நாளில் தன் கால் செருப்புகளைக் கழற்றி விசியெறிந்துவிட்டுத் தொடர்ந்து நடந்தான். பருக்கைக் கற்கள் உறுத்தின. இது உலகம். இது நான்… என நினைத்தபடி தொடர்ந்து நடந்து போனான். முள்ளும் கல்லுமான பிரதேசங்கள் என்னைக் கலவரப் படுத்த அனுமதிக்க மாட்டேன், என்று சொல்லிக் கொண்டான். தனக்குத் தானே நிறையப் பேசிக்கொள்ள வேண்டியிருந்தது. கூட பேச்சுத் துணைக்கு ஆள் இல்லை. அப்படி அல்ல, என தலையை உதறிக் கொண்டான். பேச்சுத் துணை என்றாகாமல் அது இடைஞ்சல் ஆகிவிடலாம். ஒரு அறிவு அல்ல இரண்டு அறிவு இயங்கும் இடம் அது. கொடிகள் கிடைத்த இடங்களில் பின்னிப் படர ஆரம்பித்து திசைகள் உருவாகி விடலாம். நிறுத்தப் படலாம். தடைகள் நேரிடலாம். இப்பவே நீரும் நிழலும் கிடைத்த இடங்கள் சொர்க்கமாக அமைந்தன. கால் கெஞ்சக் கெஞ்ச வந்து சேர்ந்திருப்பான். படுத்த ஜோரில் உறக்கம் தழுவியது. சின்னாட்களில் மேலே வானில் நிலா வெளிச்சம் மெல்ல ஒரு துகிலைப் போல அவனை வருடியது. மௌனமான இசை ஒன்று தன்னில் கேட்பதாக உணர்ந்தான். இனிமைகளை அடக்கிய பெட்டகம் இயற்கை. அதைத் துய்த்துணர ஞானம் வேண்டும். நாம் எல்லாரும் கரையில் இருந்தபடியே சொம்பு நீரில் குளித்துவிட்டு நதியை வணங்கிவிட்டுப் போகிறோம்… என நினைத்தான். மேலே பாலம். கீழே தேங்கிக் கிடந்த சிறு நீர்ப் பள்ளம். காய்ந்த நதியின் மிச்சம். நிழலுக்குத் தப்பித்த நீர்… ஆளரவமற்ற இடம். இரவில் எங்கிருந்தோ நரிகள் வந்தன நீர் அருந்த. விலங்குகள் நீர் இருக்கும் இடத்தை வாசனையால் அறிகின்றன… எனக்கு அப்படி நுட்பங்கள் இல்லை. இருந்திருக்கலாம். நான் காலப் போக்கில் இழந்திருக்கவும் கூடும். மிக வசதி என்று இருந்தது அந்த இடம்… அந்த எண்ணம் தோன்றிய கணமே அவன் எழுந்து அதை விலகி நடக்க ஆரம்பித்தான். நரிகள் அவன் கிளம்பியதை மகிழ்ச்சியாக உணரட்டும்.

இந்நாட்களில் காலடித் தடங்களையே புறக்கணிக்க ஆரம்பித்திருந்தான். மெல்ல விலகி புல்வெளிகளின் ஊடே கால் சரசரக்க நடந்தான். கொல்லென்று நெருக்கமாய்ப் புதர் மண்டிக்கிடந்த பகுதியைத் தாண்டுகையில் பச்சை வாசனை வந்தது. ஈரத்தையும் குளிர்ச்சியையும் பாச ஆவேசத்துடன் இறுக்கிப் பிடித்துத் தக்கவைத்துக் கொண்டிருந்த இடம் அது. மரப்பட்டைகளில் பாசியேறி இளம் பச்சை மினுமினுப்பு. புதர் உள்ளிருந்து எதும் சிறு புள் விருட்டென வெளியே வந்து உயர்ந்து கடந்து போனது. வர்ணஜாலப் பறவை. வானவில்லைச் சுருட்டினாப் போல. சட்டென பதறி விலக வேண்டி வந்தது. தன் பதட்டம் தனக்கே சிரிப்பாயிற்று. இன்னும் நான் நிதானப்பட வேண்டும். எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டான். புதர்களின் வண்டுகள் குளவிகள் ஹெல்காப்டராய்ப் புறப்பட்டு வந்து தாக்கக் கூடும்.

மனித வாசனை அடங்கி இது வேறு உலகத்தின் வேறு அடையாளங்கள். மண்ணே மாறுபட்டாப் போலிருந்தது. அதை அத்துமீறி உட் புகுந்து நான் அனுபவிக்கிறேன், என்றுகூடத் தோன்றியது. ஆனால் நான் இதை அழிக்க வரவில்லை என்று அவை அறியுமா. ஏ அறிவீர்களா, என்று கூட கேட்க வேடிக்கை வந்தது. அறிவின் சுடருடன் நல்ல நிதானத்தில் தான் இருக்கிறேன். உண்மையில் பசி அதன் படத்தை இந்நாட்களில் கீழே போட்டிருந்தது. நீரள்ளிக் குடிக்கையில் உள்ளே உணவின் வழியெல்லாம் அப்படியொரு குளுமை. உடம்பின் அழுக்கோ, சவரம் எடுக்காத முகமோ உறுத்தலாகவே இல்லை. யோசனை அவற்றையெல்லாம் தாண்டி வந்திருந்தது. ஒருவேளை என் முகத்தை இப்போது நான் கண்ணாடியில் பார்த்தால்… ஒரு குட்டையிலேயே கூட எட்டிப் பார்த்தான். லேசான புன்னகையுடன்.

பெரு வனம் ஒன்றில் தானறியாமல் நுழைந்திருந்தான் அவன். சற்று தள்ளி யிருந்தவாறே கீரிகள் அவனைப் பார்த்துவிட்டு புற்களுள் மறைந்தன. அவற்றின் கண்கள் தாம் எத்தனை சிவப்பு. தீட்சண்யம். என் கண்களும் சரியாகத் தூக்கம் இல்லாமலும், இத்தனை உடல் வருத்தத்திலும் சிவந்திருக்கலாம். மனிதன் தவிர, அவனை அண்டிப் பிழைக்கும் விலங்குகள் தவிர பெரும்பாலானவை இரவுகளில் தான் இரையெடுக்கின்றன. அவற்றின் கண்களின் தீட்சண்யம் அபாரமானது. மனிதன் தான் அதை இழந்து விட்டான்… புற் படுகை தாண்டுகையில் காலடியில் அவை மிதிபடுகையில் இயற்கையின் ஸ்பரிசம் அற்புதமாய் இருந்தது. நான் இயற்கைக்கு என்றும் குழந்தைதானே, என நினைத்துக் கொண்டான். வனங்களுக்கு சூரியன் அப்பா. மழை தான் தாய். தாயின் குளுமையில் அப்பாவின் கதகதப்பை என்னமாய் அனுபவிக்கின்றன தாவரங்கள். தாய் இடுப்புக் குழந்தையின் கன்னத்தைக் கிள்ளும் சூரியன்.

ராமன் அல்ல நான், தனியே நான் வன வாசம் வந்திருக்கிறேன்… என நினைத்துக் கொண்டான் அவன். கால்கள் தம்மைப் போல அவனை அந்த வனப் பகுதிக்கு அழைத்து வந்திருந்தன. வேறு உலகம் இது. தனி உலகம். இதன் பிரஜைகள், தாவரங்கள். விலங்குகள். உயிர்கள் இங்கே தமக்கான சுதந்திரத்துடன் வாழ்ந்ததாக அவன் உணர்ந்தான். மனிதர்கள் செலுத்துகிற வழிநடத்துகிற நிர்ப்பந்திக்கிற சமூக அடையாளங்கள் இங்கே இல்லை. குடில்கள், வீடுகள் அற்ற அத்துவானம். மேலே வானம். கீழே பூமி. கலைடாஸ்கோப் போல பூமி வெவ்வெறு அளவில் முகம் காட்டும் பூமி. இது வனம். தாவரம் செழித்துக் கிடந்தது. சூரியனையே நிறுத்தி விசாரிக்கிற இடம் இது. பாதைகள் அற்று புதர் புதராய் அடர்ந்து கிடந்தது. தோளில் கை போட்டாப் போல மரங்களை, புதர்களைக் கொடிகள் வடக் கயிறுகளாய் அணைத்துக் கிடந்தன. மரத்தடியில் மழை நாட்கள் இன்னும் ஜோராய் இருக்கும் என்று தோன்றியது.

மேகத்தின் நீர் தெளித்த ஆசிகளுடன் தாவரங்கள் முளைவிட்டுக் கிளைவிட்டுப் பெரிதாய் வளர்ந்து எழும்பி நின்றன. வயசுக்கு வந்த ஸ்திரீகள் போல. எப்படியும் ஆண் பெண் சார்ந்த சிந்தனைகளைத் தவிர்க்க முடியவில்லை எனக்கு, என நினைத்து அவன் புன்னகை செய்து கொண்டான். இருக்கட்டும். இது என் சிந்தனை வந்த வழி. ஒரேயடியாய் அதை மறுத்து நான் இயங்க எழ இயலாது தான். அப்படியே புல்வெளி ஒன்றில் படுத்துக் கிடந்தான். மாலை மெல்ல மயங்கி இருள் கவிய ஆரம்பித்தது. பௌர்ணமி இரவுகள் இப்படிக் கிடந்தால் அற்புதமாய் இருக்கும். நிலாப்பால் குடிக்கலாம்… ஞானசம்பந்தனைப் போல… என வேடிக்கை காட்டியது மனசு. ஆச்சர்யம். பெரும் உவகையாய்க் கழிந்தது காலம். இப்படி விலகிப் பிரிந்துவந்தது குறித்து மனுசு அதைரியப்படவே இல்லை. அது தவறு என்று ஒருகணமும் முறையிடவே இல்லை. சில தவறுகள், பிறகு குற்றவுணர்வு இல்லாமலேயே சரி செய்துகொள்ளப் பட்டுவிடும் என்று இருந்தது. எப்படிப் பாடினார் அப்பர் பெருமான். யாமார்க்கும் குடியல்லோம்…

இரவுகளில் அபார குளிராய்க் கண்டது. மரங்களூடே புறப்பட்டு வந்து காற்று உடலை ஊ ஊவென்று நடுக்கியது. புற்கள் பனி சுமந்து நிமிர்ந்து நின்றன. பொழுது முகம் மாறினாப் போல. எதுவுமே தெரியாத காரிருள் கடந்த பேரிருள். மரங்கள் பூதங்களாய்த் தலைவிரித்தாடும் இரவு. இருளின் தரிசனம் மருட்டுவதாய் இருந்தது. எல்லாமுண்டு, என்று தழுவிக்கொள்ள வந்தவன் அவன். எதுவுமே இல்லை, என்கிற சூன்ய நிலைக்கு அவனைத் தள்ளிச் சென்றது இருள். அருகில் கைநீட்டித் தடவித் தேடி பொருட்களைக் காண வேண்டிய நிலை. தொடு புலன்கள் சார்ந்த வேறொரு உலகமாக அது இருந்தது. கண்கள் இருந்தும் பயனில்லாதவை ஆயின. அதுவரை கேட்டிராத ஒலிகள் உருமல்கள் வேறு பயங் காட்டின. ஒருதடவை மரத்தில் இருந்து ஒரு கொடி போல பாம்பு ஒன்று பொத்தென்று விழுந்து அவனைக் கடந்து போனது. என்ன பாம்பு தெரியவில்லை… இருள் தன்னளவிலேயே யூங்களை அதன் வழி பயங்களைக் கிளர்த்தி விடுகிறது. கையது கொண்டு மெய்யது பொத்தி காலது கொண்டு மேலது தழுவிக்கொண்டு நடுங்கிக் கிடந்தான். கண்ணை மூடி ஒடுங்கிக் கிடந்தான். வாய் தன்னையறியாமல் என்னென்னவோ சொற்களைச் சிந்தின. பயக் குடம் நிரம்பி சிதறும் வார்த்தைகள். ஜுரம் வரலாம் என்றிருந்தது… அ இதுவும் பழகிவிடும்…. பழகிக் கொள்வேன் என்று சத்தமாய்க் கத்தினான். யார் கேட்கப் போகிறார்கள். இன்னும் சத்தமாய்க் கத்தினான். காலை விடிந்தபோது தன் செயல்கள் தனக்கே வெட்கமாய்ப் போயிற்று. இந்த மனிதர்களே வெளிச்சத்தில் ஒரு விதமாகவும் இருளில் வேறு விதமாகவும் இருக்கிறார்கள்… புன்னகை செய்து கொண்டான்.

நேரக் கணக்கு நாட் கணக்கு பிசகி விட்டது. என்றாலும் பௌர்ணமி நெருங்குதல் தெரிந்தது. பின்னிரவில் நிலா மெல்ல வானத்துக்கு ஏறுவதைப் பார்க்க முடிந்தது. ஒரு திருவிழா போல இருந்தது அந்தக் காட்சி. உப்பரிகைச் சந்திரிகை. பெரியவரகள் பிறைக்காலங்களை வைத்து பொழுதைக் கணக்கிட்டுப் பார்த்தது எத்தனை கவிதானுபவம். எந்த ஒரு அறிவுபுர்வமான செயலிலும் ஒரு கவிதைத்தன்மை பின்னணியில் இருக்கவே செய்கிறது. கவிதை என்பது என்ன? அது அறிவின் ஒரு பரவச அனுபவம். வாழ்க்கை என்பதே முழுக்க முழுக்க தன்னனுபவம் தான். விளக்க அல்ல, அது விளங்கிக் கொள்வதாய் இருக்கிறது. இப்படித் தனியே உலகைப் பிரிந்து வந்த என் நாட்கள், இவை எனக்கு என்னவோ அற்புதமாய்ப் படுகின்றன. இதைக் காணாதவர் விண்டிலர். அவர்களுக்கு இதை விளக்க முடியாது. எப்படி முடியும்… இந்த அனுபவங்களைப் புலன்களால் அறிந்துகொள்ள ஒருபோதும் முடியாது. ஏ இயற்கையின் தாய்மடியில் நான் கிடந்தேன்… சொன்னால் சிரிக்க மாட்டார்களா, என நினைத்துச் சிரித்துக் கொண்டான். அவர்கள் பெற்ற தாய்மடியே, அதன் அருமையே உணராதவர்கள்.

பெருமரம் ஒன்றை அடையாளங் கண்டான். அதனைச் சுற்றிலும் விஸ்தாரமான களம். வேர் முண்டிக் கிடந்தது. விழுதுகள் துணித் தூணென நாடக அரங்கமாய்த் தெரிந்தது. இங்கே எனக்கு எதுவும் நாடகம் அரங்கேறுமா? நானே நாடகத்தின் பாத்திரமாய் ஆவேனா… இதுவே என் இடம் என்று என்னவோ திடீரென்று பட்டது. சிரிப்பு வந்துவிட்டது உடனே. என்னடா ‘என் இடம்’. எதை உதற நினைத்தோமோ அதை உதறவே முடியாதா, என நினைத்தான். காலம் என்னை இங்கே நிறுத்தி இருத்துகிறது…

இரவு ஏற ஏற நிலா மரத்தின் உச்சிக் கிளை வழியே பிறைசூடிய ஈசனாய்க் கண்டது. ஏன் இப்படியெல்லாம் எனக்குத் தோன்றுகிறது தெரியவில்லை. இந்த இடத்தில் இந்தத் தருவில் என்னவோ சிறப்பு எனக்குப் பட்டிருக்கிறது, என நினைக்க ஆச்சர்யம் வந்தது. ஒருவேளை பிரக்ஞை இங்கே சுதாரிக்கிறதாக இருக்கலாம். ஒரு நதிப்படுகை அது. சற்று தள்ளி புதர் தாண்டிப் போனால் நதி. இரவுகளில நதி ஓடும் சலசலப்பு கேட்டது. இருளில் தனித்த அதன் ஒலி குளிரைத் தர வல்லதாய் இருக்கிறது. ஒரு புலன் உணர ஒரு புலன் சுறுசுறுப்பாகிறது. சிறு விலங்குகள் இரவுகளில் அங்கே வநது நீர் அருந்திச் செல்கின்றன. பறவைகள் ஒன்றையொன்று கொஞ்சும் போதும் தகவல் தெரிவிக்கும் போதும் நிகழ்த்தும் இசைக் குறிப்புகள். நாட்பட அவனுக்கு அவை புரியும் போலிருந்தது. இசை என்பது என்ன? ஒலிகளின் நடனம். மனசு தன்னைப் போல சுருதி எடுக்க ஆரம்பித்திருந்தது. காத்திருக்கும் தயார்நிலை அது. எப்படி நான் இப்படி கவன உட்சுருக்கம் கொண்டேன். எனக்குள் எதோ விதை விழுந்து முளைக்க நேரம் பார்க்கிறதா. விருடங்களை யாரும் நட முடியாது. பறவைகள் செய்யும் புண்ணிய காரியம் அது. வெறும் மண்மூடிக் கிடந்த இடத்தில் எதோவொரு மழையில் எப்படியோ ஒரு விருட்சம் உறக்கம் உதறி எழுந்து நிற்கிறது. காலப் பறவை என்னில் எதுவும் விருட்சத்தை நிறுவப் பார்க்கிறதா.

இருந்த ஒற்றை உடையைக் களைந்து அலசி பிழிந்து கொடி ஒன்றில் காயப் போட்டான். நிர்வாணமாய் சூரியன் முன்னால் நின்றான். உடம்பின் ஒட்டுமொத்தப் புள்ளிகளில் எல்லாம் வெப்பத்தைக் கண்மூடி அனுபவித்தான். மழையும் ஊசிகள் தான். வெயிலும் ஊசிகள் தான். அதுவரை அவன் சூரிய நமஸ்காரம் செய்தது இல்லை. செய்தால் என்ன என்று இருந்தது. மனப்பூர்வமாக அங்கேயே அப்படியே படுத்து சூரியனை வணங்கினான். சுற்றிலும் இதோ மரம் செடி கெடிகள்… சூரியக் குழந்தைகள். ஏ நானும் தான்.

அந்த இடத்தில் சிறிது தங்க முடிவெடுத்த கணம் முக்கியமானது. போய்க்கொண்டே யிருக்கத் தோன்றிய திட்டம் அலுத்து விட்டதா? மனசின் யோசனை என்ன தெரியவில்லை. அந்தப் பகுதியை இன்னுமாக ஸ்வாதீனப் படுத்திக்கொள்ள முயன்றான் அவன். வெயிலேற மெதுவே அந்தப் பகுதியின் எட்டு திசைகளையும் நடந்து பார்த்தான். உணவு என்றும் தன் பாதுகாப்பு என்றும் கவனப்பட வேண்டியிருந்தது. குறிப்பாக இரவில் உறங்க தரையை விட மரமே சிறந்ததாக இருந்தது. அவசரம் என்று கையில் கழி ஒன்றை வைத்திருந்தான். நடக்கவும் மேடுகளில் ஏறவும் கழி மூன்றாம் கால் எனப் பயன்பட்டது. பெயர் தெரியாத காட்டுச் செடிகள். விதவிதமான வண்ணங்களில் பூக்கள். அந்த இடத்தைச் சுற்றிலும் பூச்செடிகள் மண்டிக் கிடந்தன. அதனால்தான் அந்த இடம் பிடித்ததோ என்னமோ. உள்ளங்கையை விடப் பெரிது பாவாடையாக அல்லாமல் அதன் தலைகீழ் வடிவமாக, மகரந்தக் கிண்ணம். நடுவே மெலெழுந்து நிற்கிறது மகரந்த மேடை. நெருப்பு படாமல் தாவர உணவு பச்சையாக அப்படியே சாப்பிட வேண்டியிருந்தது. அதுவும் பழகிவிட்டது இப்போது. எத்தனை குளிரிலும் தீ மூட்டி அமரத் தோன்றவே இல்லை. எதோ தாவரத்தின் பழம். எடுத்துக் கடித்தான். ருசியாய் இல்லை. அதனால் என்ன, என நிதானமாய்ச் சுவைத்தான். உடலுக்கு ஒத்துக்கொள்ள வேண்டும். ஆனால் உடல் எல்லாவற்றுக்குமாகப் பழகிக்கொள்ளும் போலிருந்தது. இனிப்பை விட கசப்புச் சுவை உடலுக்கு அதிக ஆரோக்கியம் தருகிறது.

ஆதிவாசிகளின் குடில்களை விலகி நடந்தான். இதுவரை அவர்கள் கண்ணில் படவில்லை அவன். நடக்க நடக்க காடு விரிந்து கொடுத்தாப் போலிருந்தது. உள்ளே உள்ளே என்று அடர்ந்துகொண்டே போய்க்கொண்டே இருந்தது. விலங்குகள் வந்து போன சாணி கிடக்கும் சில இடங்களில். யானையின் லத்தி கூட பார்த்தான். பயமாய் இருக்கிறதா, என நெஞ்சைத் தொட்டுப் பார்த்துக் கொண்டான். எந்த விலங்கையும் அவன் எதிர்ப்பட நேரலாம். ஒருநாள் பாம்பு அவன் அருகில் கடந்து போகவில்லையா. அனைத்து சாத்தியங்களுமானது உலகு. கையில் ஆயுதம் என்று எதுவும் இல்லை. வேண்டாம், கூடாது என்று நினைத்தான். உலகைத் தழுவ வந்தவனுக்கு ஆயுதமா என்று இருந்தது. கையில கழி. இதுவே அதிகம்…

இரவின் நிலா வெளிச்சத்தில் அந்த உலகமே மோகனியாக ரூபங் கொள்கிற மயக்கம் தந்தது. சாறு ததும்பி நிற்கும் கனி போலக் கண்டது உலகு. அதில் துன்ப துயரங்கள் அற்பமானவை. தனியொருவன் அல்லாது இணையாய், இன்னொரு உயிருடன் இதை அனுபவிக்கவும் கூடுமோ? பெரு விருட்சங்கள் நிறைந்த இடம் அது. கால காலங்களைக் கடந்து பல தலைமுறைத் தாவரங்களை அவை தன்னைச்சுற்றிப் பார்க்கின்றன. பல தலைமுறைப் பறவைகளைக் கண்டவை அவை. தலைமுறை தலைமுறையாக ஆசான் போல முப்பாட்டன் போல, பேரக் குழந்தைகளின் விளையாட்டை வேடிக்கை பார்ப்பது போல அவை ஒரு புன்னகையுடன் எல்லாம் பார்த்து ரசிப்பதாகப் பட்டது. மனிதனுக்கு அத்தனை ஆயுள் இல்லை. ஆனால் தன் அறிவினால் யூகங்களால் அறிவின் ஓயாத யத்தனத்தால் தன் ஆயுளைக் காட்டிலும் பெருவாழ்வு வாழ ஆவேசப் படுகிறான் மனிதன்.

இது மனித இனத்தின் இடையறாத தேடல் என்று திடீரென்று தோன்றியது. ஆ வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும் ஆழ்மனம், பிறந்த கணத்தில் இருந்து எல்லாவற்றையும் உற்றுப் பார்த்தபடியே தான் உயிர் நகர்கிறது. அதன் அடிப்படையில் பல வண்டல்களை உரமாகக் குவித்தபடியே தான் இருக்கிறது. நூற்றாண்டுகளுக்கு முன்னே மனிதன் அனுபவித்த சுவைகள் நாவுக்கு அடியில் மிச்சமாய் அடையாளம் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். மனிதன் மாத்திரமா என்ன? எவ்வுயிராயினும் அவ்வகை தாமே. விலங்குகளின் தேடலே வால். பறவையின் தேடலே இறக்கை… அல்லவா? தகவமைத்துக் கொள்ளுதல் அவ்வாறல்லாமல் எப்படி சாத்தியமாகும்? மலருக்கு முள்ளும், பாம்புக்கு விஷமும். தேடுக. அவ்வண்ணமே ஆகுக… தேடல் இடையறாதது. தவிர்க்கவும் முடியாததாக அது இருக்கிறது. உயிர் தான் சாஸ்வதமாக வாழவும், இன்புற்று சுகிக்கவும் தேடலைக் கைக்கொள்கிறது. உயிரின் இயல்பே தேடல்தான்.

இந்த இடத்தின் அற்புதம். இதை ஆதிவாசிகள் எப்படி விட்டார்கள் தெரியவில்லை. சதுர மேடை போலும் தரை. ஆல மரத்தின் வேர்கள் திண்டு திண்டாக அங்கங்கே எட்டிப் பார்த்து நிற்கின்றன. குரங்குகள் கூட இல்லை இங்கே. அவை பழக் காடுகளுக்குப் போயிருக்கலாம். மலர்ப் பள்ளம் இது. அருகே நதி வேறு. தன் கண்ணில் பட்டது நல்லூழ் தான் என்று இருந்தது.

மெல்ல நிலா மேலே ஏறுவதைப் பார்த்தான். நாடகத்தின் திரைபோலும் மேகங்கள் மறைத்து வைத்திருந்தது நிலவை. முகூர்த்தம் பார்த்து கட்டியக்காரன் இல்லாமல் நிலா வெளியே வருகிறது. சூரியனிடம் இருந்து பெற்றதை எப்பெருங் கருணையுடன் எனக்கு நீட்டுகிறது நிலா… ம். தேடல்… என யோசனைகளைத் தொடர்ந்தான். நான்… எனக்கு இங்கே என்ன வேலை? நான் எதைத் தேடி வந்திருக்கிறேன். ஒரு சித்திரத்தின் மறு பக்கத்தைக் காண நான் வந்திருக்கிறேன் என்று சொல்ல முடியுமா? அதன் முப் பரிமாண நிலையை அறியத் துடிக்கிறேன், என்று சொல்வதா? அதன் எளிய பயிற்சி நிலையில் நான் இருக்கிறேன், என்னலாமா? நேர் எதிர்க் கணக்கை வைத்தான் ஜென். பாதி காலியாக இருக்கிறது பாத்திரம், என்பது ஒரு பார்வை. பாதி நிரம்பி யிருக்கிறது, என்பது ஒன்று. காலியாக எதுவும் இருப்பது இல்லை என்றும் வேறு கருத்து. உண்மை என்பதே பாவனை தானோ என்னவோ. சாரமற்ற என் மொழி, காலியாக என்று விட்டு, இருக்கிறது… என்கிறேன்! காலியாக இல்லை, அதைவிட அபத்தம்…

மரத்தடியில் உட்கார்ந்திருந்தான். கண்கள் மூடி யிருந்தன. இன்று பௌர்ணமியா? பாலாய்ப் பொங்கிச் சிரித்தது நிலவு. அந்த நிலவொளியைக் கண்மூடி மனசுக்குள் பிடிக்கிறவனாய் ஆசையுற்றான். காலியாய் இருந்த இடம் நிரம்புகிறதா? நரம்புகள் மௌனத்தை சுருதியாய் ஏற்றுக் கொண்டனவா. இசை ஒருபோதும் மறப்பது இல்லை. அதன் ஒலிகள் விலகிக் கொண்டிருக்கலாம். நல்லிசையின் ருசி நூற்றாண்டுகளாக மனித ஜென்மங்களுக்கு பிறவிதோறும் கடத்தப் படுகின்றன. நெஞ்சு விம்மித் தணிந்தது. பாலாபிஷேகம் செய்தது நிலா. உச்சந் தலையில் விழுந்த முதல் துளி சிலீரென்றிருந்தது. கிரண மழை. மெல்ல தலை முழுதும் நனைகிறது. அவனுக்குக் குளிர் எடுத்தது. ஒளிப் பால் இப்போது அவன் தலையை நனைத்து மெல்ல கழுத்துப் பகுதியில் பிடரியில் பாம்பு போலும் இறங்குகிறது. அவன் ஒளிப் பால் அணிந்த சிவன். தோள்கள் நனைகின்றன. மனிதனே கடவுள்… என நினைத்த கணம் அது. ஆமாம். மனிதன் கடவுளின் ஒரு பிரசாதப் பின்னம். உயிர்கள் அனைத்துமே அவனது துளி தான். கண்பக்கம் எல்லாம் பிசுபிசுப்பாக நனைந்து கிடந்தது. நாபியில் சிதறும் பால் துளிகள். பால் கட்டுக்கடங்காமல் பெருகி வழிகிறது. நாபியில் மோதும் பாற்கடல். பிரம்ம தேவன் பிறப்பானா.

நேரக் கணக்கு எல்லாம் இல்லை. பசி கூட இல்லை. என்ன அனுபவம் இது. மூச்சு கூட லேசாகி விட்டது. காற்றில் மூச்சு நூல்நூற்கிறது. வெளியை உள்ளிழுத்து நிறைத்துக் கொள்கிறேனா, என் உள்ளை வெளியே அனுப்பி நிறைகிறேனா என்றே மயக்கமாய் இருந்தது. மெல்ல அந்த சுகத்துடன் விழிகளைத் திறந்து பார்த்தான். அரை மயக்க லகரி. எல்லா அனுபவங்களும் புலன் வழிப் பட்டவையே போலும். வேறு அவற்றைச் சொலல வார்த்தைகள் கிடையாது போலும். மனக் குடம் நிரம்பித் ததும்புகிறது. எழுந்துநிற்கத் தள்ளாடியது. அமர்ந்திருந்த நிலையில் முட்டிகள், இணைப்புகளில் ஒரு சக்கரம் சட்டென சுழல ஆரம்பித்திருந்தது. மெல்ல அது மேலும் கீழுமாக உடலெங்கும் பரவி கிடுகிடுவென சறுக்கி விளையாட்டுக் காட்டியது. அவயவங்களில் புத்துண்ர்சசி பீரிட அபார சுறுசுறுப்பு கண்டது.

வெறும் ஆண் பெண் உறவு நிலைகளோடு நான் நின்றுவிடத் தெரிந்தேன்… என நினைத்துக் கொண்டான். இவ்வனுபவங்கள் எனக்கேயானவை. ஒருகாலும் இந்தக் கணங்களை இனி என்னால் மறக்க முடியாது. நான். எளிய நான். எனக்கே இத்தனை பரந்துபட்ட அனுபவம் சித்தித்தது என்றால் மகான்கள், ரிஷிகளை நினைக்கவே சிலிர்ப்பு கண்டது. ஆ கௌதமா. இப்படியோர் ஆல நிழலில் நீ எப்பேறு பெற்றாயோ. ஆல மரத்தில் என்னவோ சக்தி இருக்கத்தான் இருக்கிறதோ. மௌன குரு அது. அப்படியே கண்ணை மூடி அவர்களை வணங்கினான். கடல் அடியிலும் அலைகள். வெப்ப நீரோட்டங்கள்… என நினைத்துக் கொண்டான்.

திரைகள் விலகுவது போன்ற கணமா இது. சுற்றிலும் எல்லாமே கனவு வடிவம் எடுத்தாப் போல. விழித்துக் கொண்டுதானே இருக்கிறேன். இது என்ன? தான் இருந்த மரத்தடியில் முண்டாய் எழுந்து நின்றிருந்த ஒரு மர வேர். அதைப் புதிதாய்ப் பார்த்தான். சுயம்பு லிங்கம் போல, தவத்தில் இருக்கும் ஒரு முனி போல… அது முளைத்துக் கிடந்தது. இத்தனை நாள் அது இப்படி ஒரு காட்சியைத் தந்தது இல்லை. அப்படியே அதன் அருகே அமர்ந்து பார்த்தான். அதை வணங்கினான். தன் செயல்கள் தனக்கே வியப்பளித்தன. சிவன் கோவில் என்றில்லை. எந்தக் கோவிலுக்குள்ளும் போய் நின்று கை குவித்து அவன் கும்பிட்டதே இல்லை. தன் சிறுமையை உணர்கையில் பெருமையை வணங்கத் தோன்றுகிறது. தனக்கு மாத்திரம் அர்த்தம் மிகுந்ததாகவே வழிபாடுகள் அமைகின்றன என்று நினைத்தான். ஒரு பூ தான் பூத்து அனுபவிப்பது போல. பூக்காத மொட்டு அதை உணர முடியுமோ? இதில் கேலிக்கு இடம் இல்லை. உனது ஆகப் பிரியமான காரியங்களைப் பிறர் கிண்டல் செய்வதும் சகஜம்தான்.

நிதானமாய் அந்த இடத்தை விட்டு வெளியே வந்தான். நான் இயங்குகிறேனா, இயக்கப் படுகிறேனா. இரவு இரவாய் இல்லை. என்ன அற்புதமான பொழுது இது. அதை உறங்கிக் கழிக்க முடியாது. எங்கே போனாலும் கூடவே வருகிற நிலா. புல்வெளி அற்புதமாய் இருந்தது. லேசாய்ப் பனி விழும் இரவு. அவன் மேற்சட்டை எதுவும் அணிந்திருக்கவில்லை. அதனால் என்ன, என அலட்சித்தான். எதற்காக இப்படி எங்கே நடக்கிறான் என்றே தெரியவில்லை. அப்படியே நின்றான். காட்டுப் பூக்களின் வாசம் நாசியை நிறைப்பதாய் இருந்தது. பகலானால் இந்த வாசம் இன்னும் ஜோராய் இருக்கும்.

அவன் பூக்களைக் கை நிறைய நிறையப் பறிக்க ஆரம்பித்தான். இதுவரை அவற்றைப் பறித்துக் கையில் ஏந்த அவன் நினைத்ததே இல்லை. விதவிதமான மலர்கள். வண்ண வண்ண மலர்கள். மலர்கள் பூசைக்குரியவை. ஆராதனைக்குரியவை. கை நிறைய மலர்களை ஏந்தியிருப்பதே அவனுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. மலர்கள் ஆன்மிகத்துக்கும் லௌகிகத்துக்குமான பாலம் என்று தோன்றியது. மிகந்த மன நிறைவுடன் பூக்களைச் சுமந்தபடி தன் இடம் திரும்பினான். நிலா நல்ல அளவில் மேலேறி யிருந்தது. எல்லாவற்றையும் அது வேடிக்கை பார்த்தாப் போல.

வந்து அந்த மர வேரைப் பணிந்து பூக்களை அதற்கு சமர்ப்பித்தான். அந்தப் பகுதி முழுமைக்கும் அந்த வேர்கள் ராஜ்ஜியத்தை நிர்மாணித்திருக்கும். எங்கே தோண்டினாலும் அவை நிரடும் என்று தெரிந்தது. அதன் எதிரிலேயே அமர்ந்துகொண்டான். கண்ணை மூடி முதுகு விரைக்க அப்படியே உட்கார்ந்திருந்தான். எங்கும் நிறைந்த இறையருளே என்னை உன்னில் அமிழ்த்திக் கொள். என்னைத் தாங்கு. என்னைத் தழுவிக்கொள். சிறிது நேரத்தில் மனதின் வார்த்தைகள் ஓய்ந்தன. பிரார்த்தனைகள்… அவைகளே ஓர் ஆரம்ப நிலை தான்… அவை எளிய நிலையிலானவை என்று பட்டது. எல்லாம் வழங்கும் பேரருளுக்குப் பிரார்த்தனை எதற்கு. அலை ஓய கடலின் நடுப்பகுதியில் போல அவன் மிதந்தான்.

தனித்துக் கிளம்பி வந்தேன். புதிய அனுபவங்கள் தேடி வந்தேன்… இவை சற்றும் நான் எதிர்பாராதவை. எனக்கு இவ்வாறு நான் வராமல் எனக்கு வாய்த்திருக்கப் போவது இல்லை. இது தான் என் தேடலா? தாழம்பு மடல் விரித்தல் என்பது இதுதானா? நான் எதை அடைந்தேன். தேடல் என்பது என்ன? தேடி அடைதல் என்றால் என்ன… ஆனால் தேடல் இல்லாத ஆத்மா உள்ளதா என்ன, என்று ஒரு யோசனை மறித்தது. எதிர்பார்ப்பின் அடிப்படையிலான தேடல் ஒரு வகை. சுகமான வாழ்க்கைக்கான பொருள் தேடல் என்பது போல. ஆனால் சுகமான வாழ்க்கை… அது பொருளில் இல்லை.

பொருள் இல்லாமலும் இல்லை, என்று மறித்தது மறு யோசனை. நானே கூட இத்தனை வசதிகளை எட்டி நுகர்ந்து அனுபவித்து திளைத்து, பின் தனித்துக் கிளம்பியிருக்கிறேன். அது கிடைக்கா விட்டால் என் தேடல் அந்த அளவிலேயே, அதை எட்டுவதிலேயே முடிந்தும் இருக்கலாம். அதில் எனக்கு நிறைவு எட்டவில்லை. அதில் நிறைவு எட்டியவர் இருக்கலாம். எது கடைசிப் புள்ளி. யார் நிறைவு வாழ்க்கை வாழ்கிறவர் என்பது எல்லாம் அதிக பட்சம் தானே, என்று தோன்றியது. கிணற்றுத் தவளைக்கு கிணறே கடல். வாழ்க்கை தரும் அனுபவங்களை நேர்மையாக எதிர்கொள்ளும் எந்தக் கணமும் பொற்கணம் தான், அல்லவா? எதிர்க்கரையில் வாழ்கிறதாகவே மனம் இயங்குகிறது. மனதின் இயல்பு அது, என அடுத்த யோசனை வந்தது. இருக்கும் போதே இல்லாத ஒன்றைத் திரும்பிப் பார்ப்பது. அதில் திளைக்க விரும்புவது. அப்படியாய் எல்லைகளை விரித்துக் கொள்வது அறிவின் இயல்பாய் இருக்கலாம். பாவாடை பரத்தி அமர விரும்பும் சிறுமி போல.

கையள்ளிய பூக்களை லிங்கத்துக்கு சமர்ப்பித்திருந்தான். வாசனை மிகுந்த இரவு. ஒரு மண்ணுக்கு அந்தப் பகுதியின் பூக்கள் வாசனை அறிவிப்பைத் தர வல்லவையாக அமைகின்றன. மனசை ஒருமுகப் படுத்த ஒருவேளை பூக்களின் வாசனை நாசிக்கு வேண்டியிருந்திருக்கக் கூடும். பூசையிலும் படுக்கையிலும் அவற்றை மனிதன் ஆராதிக்கிறான். இறைவன் யார்… என நினைத்துப் பார்த்தான். சிவன்… லிங்கம்… லிங்கம் என்பது ஆண்மகனின் அடையாளம் என்றுதான் சொல்கிறார்கள். மல்லாக்கப் படுத்த ஆண்மகன் தானா இந்த வேர் என நினைத்தான். துறவு பூண்டவர்கள் எதைத் தேடித் திரிகிறார்கள்? அவர்கள் கண்டடைவ்து என்ன? லிங்கத்தை வணங்குதல் துறவு நிலை என்று எப்படி ஆனது?

இயற்கையின் பாதையை அறிய என நான் வெளியே கிளம்பி வந்தேன். ஆண் பெண் என இரு பாலரை நிறுவி இயற்கை ஒரு ஈர்ப்பை தேடலை வாழ்க்கையில் பிணைத்து வைத்திருப்பதாக நினைத்தான். அதை மீற மனிதனால் கூடுமோ. வாழ்க்கையின் தேவைகளை அதனோடு சேர்த்து புலன்களில் அந்த உணர்வுக்குச் செறிவூட்டி… அதனாலேயே ஒரு சாரார் அதில் இருந்து விடுபட உந்தப் படுகிறார்கள், என்று நினைத்தான். பிறந்த உயிர் அனைத்துக்கும் வம்சம் தழைத்தல் என்பது இயற்கை போதித்த ஒன்றாகவே இருக்கிறது. அதுவும் பிறவிக் கடமைகளில் ஒன்று தான், என எண்ணுவதில் என்ன பிசகு?

பூசைகள். தவம். இந்த வேர். லிங்கம். இது ஆணின் இன அடையாளம்… என்பதான புரிதலில் இந்தப் பூக்கள்… அவனுக்கு திடீரென்று வெளிச்சம் கண்டாப் போல இருந்தது. பூக்கள் என்பவை… ஒரு தாவரத்தின் இன விருத்தி உறுப்புகள் தானே… எந்த ஆன்மிகத்திலும், எந்தத் துறவு நிலையிலும் இயற்கையின் இந்த பால் சார்ந்த நிர்ப்பந்தங்களைப் புறக்கணிக்க முடியுமா என்று பெரிய கேள்வி ஒன்று அவனில் எழுந்தது. புலன் வழி உலகம். அதை மீற முடியவே முடியாதோ.

மேகங்களுக்குள் ஒளிந்து கொண்டது நிலா. வானத்தில் நிகழும் கண்ணாமூச்சி விளையாட்டா இது. பிறகு ஒரு குழந்தை போல மெல்ல எட்டிப் பார்த்தது நிலா. தேடல் ஒரு தொடர் நிகழ்வாகத் தான் இருக்க முடியும். தேடலுக்கு முடிவும் இல்லை. அவரவர் தேடல் ஒரு மகா மானுட சமுத்திரத்தில் ஒன்று கலக்கும். அது தலைமுறைகள் அளவில் பகிரவும் பரிமாறப் படவும் ஆகிறது… என்று புரிந்தாப் போலிருந்தது. வாழ்க்கை அனுபவங்களின் தொடர் பயணம், என்று முணுமுணுத்தபடி அப்படியே படுத்துக் கொண்டான். முதுகுப் பக்கக் குளிர்ச்சியை அனுபவித்தபடியே கண்மூடிக் கிடந்தான். எந்நாளும் இல்லாத அளவில் அருமையாய் உறக்கம் வந்தது அவனுக்கு. அவன் கனவில் வெகு நாட்களுக்குப் பிறகு யசோதரா வந்தாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.