க்ரேஸ் பேலிக்கு, அரசியல் என்பது வீட்டு வாழ்விலிருந்தோ அல்லது எழுதுவதிலிருந்தோ வேறுபட்டதாக இருக்கவில்லை- அது அவற்றின் மையத்தில்தான் இருந்தது.
மாகி டோஹெர்ட்டி
“சில வட்டங்களில் நான் பிரபலமாக இருந்தேன்,” பேசுபவர் சாதிக்கிறார், இது க்ரேஸ் பேலியின், “குட்பை அண்ட் குட் லக்” எனும் சிறுகதையின் முதல் வரி. சுயநம்பிக்கையும், புத்திக் கூர்மையும், தற்பெருமையும், தன்னடக்கமும் சரியான அளவுகளில் கலந்த அறிக்கை இது, ஒருவரின் குணாதிசயத்தை ஐந்தே சொற்களில் எடுத்துச் சொல்லி விடுகிறது. அதில், அவர் தான் நினைக்கிற அளவு முக்கியமானவராக இருக்க மாட்டார் என்பது ஒலிப்பதைக் கேட்கும் அதே நேரம், அவர் நிச்சயம் சுவாரசியமானவராக இருப்பார் என்பதையும் கேட்கிறோம். அதில் மாறுபடும் ஒலிகள் கொண்ட இங்கிலிஷையும், யிட்டிஷையும் கேட்கிறோம், புது நாட்டையும், பழைய நாட்டையும் கேட்கிறோம், இருப்பையும், கடப்பையும் கேட்கிறோம், எல்லாம் நன்றாகக் கலந்து ஒன்றுபட்டு சீரான ஒழுங்கைக் காட்டுகின்றன.
“குட்பை அண்ட் குட்லக்” ஒரு ஒருவரின் நீண்ட தனியுரை- ரோஸ் அத்தை, வயதான யூதப் பெண்மணி, இதைத் தன் மருமாளிடம் நிகழ்த்துகிறார்- இது ரோஸின் இளமைப் பருவ உறவுச் சிக்கல்கள் பற்றிய நினைவு கூரல்:
நான் அப்போதும் அத்தனை ஒல்லியாக இல்லை, சதை அத்தனை ஆடிக் குலுங்காமல் மட்டும் இருந்தது. இனி வரும் காலத்தில், லில்லீ, ஆச்சரியப்படாதே- மாறுதல் என்பது கடவுளின் உண்மை. இதிலிருந்து யாரும் விலக்குபெறுவதில்லை. உன் அம்மாவைப் போல ஒரு நபர்தான் ஒற்றைக் காலில் நிற்கிறவர், அவர் தன் பின்பாகம் எத்தனை பெரிதாக ஆகிறதென்பதைச் சட்டை செய்யாதவர், பாட்டுக் குருவியின் காதில் முப்பதாண்டுகளாகப் பாடிக் கொண்டிருக்கிறவர்.
நேரடியாக, நாம் ரோஸுடைய உலகில் இருக்கிறோம்: பசிகளும், வயதாகிக் கொண்டிருக்கும் உடல்களும், சாமர்த்தியமான நிந்தைகளும், அலங்காரமான பேச்சுகளும் நிறைந்த ஓர் உலகு. இங்கே பிடிபட்டிருக்கிற குரல்- கண்டிப்பதும், சீண்டுவதும், ஆணையிடுவதுமானது – முழுதுமே கற்பனை செய்யப்பட்டதல்ல என்பது நமக்கு வியப்பு தராது. “சில வட்டங்களில் நான் பிரபலமாக இருந்தேன்” என்பது க்ரேஸ் பேலியிடம் ஓர் அத்தை ஒரு முறை ஒப்புக் கொண்டதுதான், அந்த வாக்கியம் அவர் (க்ரேஸ்) மனதில் தங்கி இருந்தது.
அந்தக் கதையை எழுதிய போது, பேலி தன் 30களில் இருந்தார், அதனால் தற்காலிகமாக வீட்டுக்குள்ளும், வெளியிலும் பொறுப்புகளிலிருந்து விடுபட்டிருந்தார். அவருடைய ஆசிரியராக நியு ஸ்கூலில் இருந்த, டபிள்யு. எச். ஆடன், சொந்தக் குரலிலேயே எழுதுமாறு அவரை ஊக்குவித்திருந்தார். பேலியோ தன் உலகில் இடம் பிடித்திருந்த பல பெண்களின் குரல்களில் எழுதப் போவதாகத் தீர்மானித்திருந்தார். இக்கதை அவரை புனைகதை எழுத்தாளராக அடையாளம் காட்டிப் பிரபலமாக்கியது. டபுள்டே (பிரசுர) அமைப்பில் பதிப்பாசிரியராக இருந்த ஒருவர், கிரேஸின் எழுத்தில் படித்தது பிடித்திருந்ததால், பேலியிடம் அவர் இன்னும் கூடுதலாக ஏழு கதைகள் அதைப் போல எழுதினால், டபுள்டே அவற்றை ஒரு தொகுப்பாகப் பிரசுரிக்கும் என்று சொல்லி இருந்தார்.
த லிட்டில் டிஸ்டர்பன்ஸஸ் ஆஃப் மேன், 1959 இல் வெளி வந்தது. பேலிக்கு 37 வயது அப்போது, இலக்கிய வட்டங்களில் அவர் அனேகமாக தெரிய வராதவராக இருந்தார்; இந்தப் புத்தகம் விமர்சகர்கள் நடுவே பாராட்டுதல் பெற்றது, குக்கன்ஹைம் விருது பெற்றது, டானல்ட் பார்தல்மேயின் நட்பைப் பெற்றுத் தந்தது, தவிர பிற்காலத்தில் பல போதிக்கும் வேலைகளுக்கு இட்டுச் சென்றது. ஃபிலிப் ராத் இவருடைய மொழியை, அதன் ‘செழுமையான உணர்ச்சி நுட்பங்கள்… ஒரு விதமான எதிரோட்டத்தில் கிட்டும் வசீகரமும், அங்கதமும் நிரம்பியது’ என்று மெச்சினார். (க்ரேஸ் பேலி) சீக்கிரமாகவே அமெரிக்க புனைவிலக்கியத்தில் புதிய, முக்கியமான குரலாக உருப்பெற்றார்.
இதற்குப் பிறகு க்ரேஸ் பேலி இரண்டு சிறுகதைத் தொகுப்புகளைத்தான் பிரசுரித்தார்: எனார்மஸ் சேஞ்சஸ் அட் த லாஸ்ட் மினிட் (1974), அவருடைய முதல் தொகுப்புக்குப் பிறகு 15 ஆண்டுகள் கழித்து வெளி வந்தது; பிறகு லேடர் த ஸேம் டே (1985) வெளிவந்தது. அவருடைய கதைகளில் பெரும்பாலானவை நியூயார்க் மாநகரில் நிகழ்வனவாக அமைக்கப்பட்டிருக்கின்றன, அங்குதான் கிட்டத்தட்ட அவருடைய வாழ்நாள் பூராவும் அவர் வாழ்ந்திருந்தார். அவருடைய பிரசுரங்களின் இடைப்பட்ட வருடங்களில், அவர் குழந்தைகளை வளர்த்தார், போருக்கு எதிரான கிளர்ச்சிகளை ஒருங்கிணைத்தார், கொலம்பியா (பல்கலையிலும்), சாரா லாரன்ஸ் கல்லூரியிலும் போதனையாளராக இருந்தார். இந்த வருடங்களில் க்ரேஸ் பேலி குறைவாக எழுதவில்லை; சிறுகதை என்ற வடிவோடு தன் எழுத்தை அடக்கிக் கொள்ள அவர் மறுத்தார். தன் வாழ்நாள் பூராவும், அவர் ஒரு போராட்டக்காரராக இருந்தார், துண்டுப் பிரசுரங்கள், கட்டுரைகள், அரசியல் அறிக்கைகள், கவிதை- அந்தக் கணத்தில் என்னவெல்லாம் தேவைப்பட்டனவோ, அவற்றை எழுதினார். பலவிதமான எழுத்துப் படைப்புகளை அவர் கட்டி எழுப்பினார், எல்லாம் இலக்கியமாக இருக்கவில்லை- எனவே அவருடைய புனைவிலக்கியத்தைப் பாராட்டியவர்கள் பலராலும் இவற்றில் பெரும்பாலானவை கவனிக்கப்படாமல் விடுபட்டிருக்கின்றன.
பேலியின் பிரசுர நிறுவனம், ஃபாரார், ஸ்ட்ரௌஸ் மற்றும் ஜிரூ, இந்தக் கவனிப்பின்மையைத் திருத்த முடிவு செய்து, அவருடைய அ-புனைவுகளைச் சில வருடங்களாக வெளியிடுகிறார்கள். 1998 இல் பேலியின் கட்டுரைகளில் பலவும் ஒரு தொகுப்பாக வெளியிடப்பட்டன, அவருடைய கவிதைகளின் தொகுப்பு ஒன்று 2000 ஆவது ஆண்டு வெளியிடப்பட்டது. இப்போது, அ க்ரேஸ் பேலி ரீடர் (எனும் புத்தகம்) அவருடைய புனைவுகளோடு, இவற்றை எல்லாம் சேர்த்துக் கொணர முற்படுகிறது. ஜ்யார்ஜ் சாண்டர்ஸின் முன்னுரையோடு, இந்தத் தொகுப்பு கதைகள், கட்டுரைகள், உரைகள் மற்றும் கவிதைகளைக் கொண்டிருக்கிறது. சிறுகதை எழுத்தாளர் பேலி, கூடவே போராட்டக்காரி பேலியாகவும், பிரச்சாரக் குறிப்புகளை எழுதியவராகவும், கவிஞராகவும், சமூக ஒருங்கிணைப்பாளராகவும், முழு மனதோடு ஓர் இடதுசாரியாளராகவும் இருந்ததை நமக்கு இப்புத்தகம் நினைவூட்டுகிறது.
2007 இல் இறந்த பேலி, தன் வாழ்வின் பெரும்பகுதியை, இலக்கியத்தைவிட அரசியலில்தான் செலவிட்டார். இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தின் முக்கியமான சமூக இயக்கங்களில் பலவற்றில் அவர் ஈடுபட்டிருந்தார் என்றபோதும், அவர் எழுதியவை, அவற்றுக்குத் தூண்டுதலாக இருந்த வரலாற்றுப் பின்னணியைக் கருத்தில் கொண்டு நோக்கப்படுவது என்பது எல்லா நேரமும் நடப்பதில்லை. அவருடைய புனைகதைகள் எத்தனை தூரம் அந்தந்த நேரத்தின் வெளிப்பாடுகள் என்பதைக் கவனிக்கத் தவறுதல் எளிது. சிறுகதைகளை எழுதுவதில் உள்ள பிரச்சினைகளில் இது ஒன்று. அது எழுதப்படும் காலம், இடம் ஆகியவற்றிலிருந்து அது முற்றிலுமே பிரித்து வாசிக்கப்படலாம். பேலியின் புனைகதைகள் வரலாற்றின் கூளத்திலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட துல்லியமான வைரக்கல் போலத் தோன்றுவதால், இப்படிப்பட்ட வாசிப்புக்கு மேலான வாய்ப்பு எழுகிறது.
அ க்ரேஸ் பேலி ரீடர் எனும் புத்தகம், எழுத்தாளரை அவரது வரலாற்றுக் காலத்தில் பொருத்தி விட உதவுகிறது. ஒரு கலைஞராக, ஒரு போராட்டக்காரராக அவருடைய வாழ்வு இருக்க உதவிய குறிப்பிட்ட நிலைகளுக்குத் திருப்புகிறது. இப்புத்தகத்தின் பின்பகுதியில் உள்ள கால அட்டவணை ஒன்று, பேலியின் இலக்கிய பிரசுரங்களை அவரது அரசியல் நடவடிக்கைகளோடு இணைத்துக் காட்டுகிறது. ஒரு சிறு மாதிரியை இங்கு பார்ப்போம்: “1959: டபுள்டே பிரசுரத்தால் த லிட்டில் டிஸ்டர்பன்ஸஸ் ஆஃப் மேன் வெளியிடப்படுகிறது. அணு ஆயுத எதிர்ப்புப் போராட்டங்களைக் கட்டமைப்பதில் முனைகிறார், மேலும் பள்ளிகளில் விமானத் தாக்குதலுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை எதிர்க்கும் போராட்டங்களிலும் கலந்து கொள்கிறார்.” “1969: வட வியத்நாமுக்கு சமாதானம் தேடிப் போகும் சிறு குழுவுடன் பயணிக்கிறார். இக்குழு போர்க்கைதிகளாக இருந்த மூன்று அமெரிக்கப் படைவீர்களைப் பெற்றுக் கொள்ளப் போகிறது. ‘டிஸ்டன்ஸஸ்’ (எனும் பிரசுரம்) ஓ’ஹென்ரி பரிசைப் பெறுகிறது.” “1978: வெள்ளை மாளிகையின் புல்வெளியில் நடந்த அணு ஆயுத எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு கைது செய்யப்படுகிறார். ஆறு மாதங்கள் ஒத்தி வைக்கப்பட்ட தண்டனை பெறுகிறார். நியுயார்க்கர் பத்திரிகையில், ‘ஸம்வேர் எல்ஸ்’ பிரசுரமாகிறது.” பேலியின் வாழ்வில், அவருடைய புனைவுகளைப் போலவே, சொந்த வாழ்வுக்கும் அரசியலுக்கும் இடையேயும், வீட்டுக்கும் உலகத்துக்குமிடையேயும், குறிப்பிடத்தக்க விதத்தில் சுலபமாக ஊடுருவப்பட்ட எல்லைகளே இருந்தன. நன்கு பழகிய அண்டை வீட்டுக்காரர் ஒருவர் அவரது அடுக்ககத்தின் வாயிலைத் தாண்டி சகஜமாக நுழைவதைப் போலவே அரசியல் அவரது புனைவுகளுள் நுழைந்தது. கொஞ்ச காலத்துக்கு, விமர்சகர்கள் பேலியைக் கொண்டாடினார்கள், காரணம் அவரது கருக்கு, நகைச்சுவை உணர்வு, மேலும் அவரது உரைநடையின் சுபாவம் ஆகியன. ஆனால் நாம் புரிந்து கொள்வதற்கு, அதே அளவு முக்கியத்துவம் வாய்ந்தவை, அவரது காலத்துச் சமூக, அரசியல் இயக்கங்களில் அவருக்கிருந்த ஆழ்ந்த ஈடுபாடும்- மேலும் அந்த ஈடுபாடு, அந்த உணர்ச்சி நிறைந்த நிகழுலகத்தன்மை எப்படி அவரது புனைவை அமைத்தது என்பதும்.
பேலி பிறந்தபோது க்ரேஸ் குட்ஸைட் என்ற பெயர் கொடுக்கப்பட்டிருந்தது. மூன்று குழந்தைகளில் இவர் கடைசி. 1922 ஆம் வருடம் ப்ராங்க்ஸில் பிறந்தார். அவருடைய பெற்றோர்கள் உக்ரைனியக் குடியேறிகள், ஈடுபாடுள்ள சோசலிசவாதிகள், சொந்த நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டவர்களாகவே தம் வாழ்வைக் கழித்தவர்கள். அப்பா சைபீரியாவிலும், அம்மா ஜெர்மனியிலும் வாழ்ந்தனர். பிறகு 1906 இல் இருவரும் சேர்ந்து தப்பித்து அமெரிக்காவுக்கு ஓடினார்கள். சிறுவயதிலிருந்தே பேலி தன் பெற்றோரின் அரசியல் சாய்வுகளை அறிந்திருந்தார். அவற்றோடு அவர்களின் ரஷ்ய, யித்திஷ் மொழிகளையும், கலப்படமான இங்கிலிஷையும் அறிந்தார். அவற்றின் தொனிகளும், தாளகதிகளும் அவருடைய புனைவுகளில் பிற்பாடு ஒலித்தன. 1930களில் அரசியல் உணர்வு பரிமளித்த பல வீடுகளில் வளர்ந்த யூதக் குழந்தைகளைப் போலவே, பேலியும், தன் பெற்றோர்களை விடத் தீவிரமானவராக மாறி இருந்தார். 1995 இல் அவர் எழுதிய ‘இன்ஜஸ்டிஸ்’ (அநீதி) என்ற கட்டுரையில், அவர் தன் பெற்றோர், ‘ஒதுக்கப்பட்ட பகுதியில் (கெட்டோவில்) கடும் உழைப்புடனும், தீவிரக் கல்வியோடும் புகழ் பெற்ற அமெரிக்க மேம்படுத்தல் முறையுடன் போராடினார்கள்,’ இறுதியில், ‘தொழில் நுட்பம் தெரிந்த மத்திய வர்க்கத்தை… வசதியான இடத்தை (சாதனங்கள் கொண்ட வாழ்வு எனலாம்)’ அடைந்தனர் என்று எழுதினார். தன் வாழ்வு பூராவும் குடி உரிமைகளுக்கான போராட்டங்களில், பெண் விடுதலை, போரெதிர்ப்பு இயக்கங்கள் போன்றனவற்றில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்த பேலி, சுகமான நிலையில் இருந்து விட ஒருபோதும் ஒப்பியதில்லை. த பேலி ரீடர் இந்த இயக்கங்கள் ஒவ்வொன்றையும் பற்றிய அவரது எழுத்துகளைக் கொண்டிருக்கிறது. இவற்றில் சில ஏற்கனவே பிரசுரமானவை: உதாரணமாக, அமெரிக்கர்கள் வியத்நாமியக் குழந்தைகளைத் தத்து எடுத்துக் கொள்வதைப் பற்றிய சர்ச்சைக்குள்ளான கட்டுரை ஒன்று, இதை அவர் எம் எஸ் பத்திரிகையில் 1975 இல் வெளியிட்டார். அவரது பல துண்டுப் பிரசுரங்களும், கட்டுரைகளும், பாலடையாள அரசியல் பற்றியும், பெண்களின் அரசியல் வாழ்வு பற்றியும் பேலி எழுதியவற்றில் பெருமளவும் தேசம் பூராவும் விற்கும் பத்திரிகைகளில் வெளியானதில்லை. 1983 ஆம் ஆண்டில் நடந்த செனெகா பெண்களின் அமைதிப் பாசறை பற்றிய அவரது குறிப்புகள், எதிர்ப்பு இயக்கத்தில் பங்கெடுக்கையில் சட்டப் பராமரிப்பு அமைப்பின் வெறுப்பைச் சந்திக்க நேர்ந்த எவருக்கும் முழுதும் அர்த்தப்படும். ‘த இல்லீகல் டேஸ்’ என்ற தலைப்பு கொண்ட இன்னொரு கட்டுரையும் குறிப்பிடத் தக்க ஒன்று, கருக்கலைப்பு என்பதே சட்டத்தால் தடை செய்யப்பட்டிருந்த காலத்தில் பேலி கருக்கலைப்பு செய்ய முயன்றதைப் பற்றிய நேர்மையான, அளவாக எழுதப்பட்ட குறிப்பு அது.
ஆனால் பல அரசியல் ஈடுபாடு கொண்ட புனைவெழுத்தாளர்களைப் போலவே, பேலியும் தன் கதைகளில் அரசியலைப் பற்றி எழுதும்போதே மிக்க வலுவாக எழுதினார். “அம்மா,” என்கிற கதை அவருடைய சொந்த வாழ்விலிருந்து எழுதப்பட்டது, குடியேறியான அம்மாவுக்கும், முதல் தலைமுறையாகப் புது நாட்டில் வளரும் மகளுக்கும் இடையே உருவாகும் தலைமுறைகளுக்கிடையான பிளவு பற்றியது. இந்த மகளையே பேலி தன் சுயசரிதைக் கட்டுரைகளில் சிலவற்றில் வருணித்து இருக்கிறார். கதையைச் சொல்லும் நபர், “சோவியத் யூனியன் மீது தன் குடும்பத்தின் நிலைப்பாடைத் தாக்கி ஒரு அரசியல் அறிக்கையை” பிரகடனம் செய்கிறார், அது அவருடைய அம்மாவிடம் இருந்து கண்டனத்தைப் பெறுகிறது: “கடவுளே, தூங்கப் போ, கேடுகெட்ட முட்டாளே, நீயும் உன் கம்யூனிஸ்டு கருத்துகளும். நாங்கள் அதையெல்லாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம், உன் அப்பாவும் நானும், 1905 இல்.” அந்த மகள், பொருளாதாரச் சரிவில் சிக்கியிருந்த அமெரிக்காவில் வளர்ந்தவள், குடியேறிகளான தன் பெற்றோர் என்ன பயங்கரங்களைச் சந்தித்திருந்தார்கள் என்பதை ஒருபோதும் அறிய முடியாது, அதே போல அவளுடைய பெற்றோரும், தங்கள் மகளின் அரசியல் பிடிப்புகள் பற்றிப் பரிவேதும் கொள்ள முடியாது.
இதே சவால்கள் பேலியின் பல புனைவு அவதாரங்களுக்கு நேர்கிறது, நடுவயது போராட்டக்காரர்களும், அம்மாக்களும் தங்களுடைய பதின்ம வயது மகன்கள் மகள்கள் பற்றி இப்போது கவலைப்படுவது நடக்கிறது. ‘ரூதியும், எடியும்’ என்ற கதையில், 50ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் பெண்கள் குழு ஒன்று, அங்கு வராமல் இருக்கும் ஒரு மகள் எங்கே இருக்கக் கூடும் என்பதைப் பற்றி உரையாடுகிறார்கள். “எங்கே போய்த் தொலைந்தாள்?” ஒருத்தி கேட்கிறார். “ஓ, ஏதோ முட்டாள்தனமான உட்கார்ந்து செய்யும் மறியலுக்காகவோ வேறெதற்காகவோ ஜெயிலில் இருப்பாள்,” என இன்னொருத்தி பதிலுரைக்கிறாள். “அவள் ஐந்து நிமிடத்தில் வெளியே வந்து விடுவாள்…. நீ அவளை அப்படித்தான் வளர்த்தாய், இப்போது ஆச்சரியப்படுகிறாயாக்கும்.” அரசியல் விழிப்புணர்வு அம்மாவிடம் இருந்து குழந்தைக்குச் செல்கிறது; தீவிரமான குழந்தைகள் தங்கள் அம்மாக்களின் கவலைகளையும் சொத்தாக வரிக்கிறார்கள்.
பேலியின் அரசியல் செயலூக்கம் வீட்டைப் பராமரிப்பது, குழந்தை வளர்ப்பு ஆகியவற்றோடு சம முக்கியத்துவம் கொண்டிருந்தது. பெண்கள் குழந்தைகளைப் பெற்றதாலேயே அவர்கள் உலகைப் பற்றியும் அக்கறை கொள்ள வேண்டியதாக இருக்கிறது. பாஸ்டன் ரெவ்யு பத்திரிகைக்கு 1976 இல் அவரளித்த ஒரு பேட்டியில், ஒரு தாய் தன் குழந்தையை முழு நிறைவான வகையில் வளர்ப்பது – குறையேதுமில்லாத உணவு, சிறப்பான பள்ளிகள் இப்படி- அத்தனை முக்கியமல்ல, மாறாக அவர் அரசியலில் ஈடுபாடுள்ளவராக இருப்பதே மேல் என்று பேலி வாதிட்டார். ஒரு அம்மாவாக, “நீங்கள் முக்கியமானவர்,” அவர் விளக்கினார், “ஆனால் உலகம் [குழந்தைகளை] வளர்க்கிறது என்பதால், உலகம் வளர்க்கும்போது… நீங்கள் உலகத்தைப் பற்றியும் கவனம் செலுத்துவது அவசியம். அதெல்லாம் ஒன்றுடனொன்று சம்பந்தப்பட்டவையே.” பேலி ஒவ்வொருவரும், ஒவ்வொன்றும் சம்பந்தப்பட்டவை என்று நம்பினார்: ஆயுதங்களில் இருக்கும் ரசாயனப் பொருட்கள் சீக்கிரமே உங்கள் குழந்தைகளின் குடிநீரில் கலந்து விடும்; எந்தக் குரூரமான போருக்கு நீங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையோ அந்தப் போரில் உங்கள் மகனே பணி செய்ய நேரிடலாம்.
இந்த பரஸ்பரம் சார்ந்திருப்பது என்ற கோட்பாடுதான் பேலியின் அரசியலின் அடித்தளமாகவும், அவருடைய கலையை ஒருங்கமைக்கும் கருத்தாகவும் இருந்தது. ‘எனார்மஸ் சேஞ்சஸ் அட் த லாஸ்ட் மினிட்’ என்ற புத்தகத்தில் உள்ள ‘ஃபெய்த் இன் எ ட்ரீ’ என்கிற கதையே இதை வேறெந்த கதையையும் விட மேலாக எடுத்துக் காட்டுகிறது. ஃபெய்த், அவருடைய கதைகளில் அடிக்கடி தோன்றும் ஒரு பாத்திரம், நியூயார்க் நகரத்தில் ஒரு பூங்காவில் ஒரு சனிக்கிழமை அன்று ஓய்வாகத் திரிகிறார். அது ஒரு குழப்பமான காட்சி: குழந்தைகள் ஓடியாடி விளையாடுகிறார்கள்; அம்மாக்கள் மிரட்டி ஓட்டுகிறார்கள், தமக்குள் உரையாடுகிறார்கள்; அங்கு “சட்டையைத் திறந்து போட்டபடியும், அதிகப்படியான ஆர்வமுள்ளவராகவும், சனிக்கிழமை உலா வரும் இளம் அப்பாக்கள்,” தொல்லை கொடுத்து சரசமாடுகிறார்கள். ஃபெய்த் ஒரு மரத்தின் மீதேறி சூழலைப் பார்வையிடுகிறார்: “ஜனநாயக காலத்தில் என்னவொரு இடம்!” என்று வியக்கிறார். அங்கே தொத்திக் கொண்டு அமர்ந்திருக்கையில், வரிசையாக நண்பர்களும், அண்டை வீட்டாரும் அவளைப் பார்க்க வருகிறார்கள். அவர்களோடு அரட்டை அடிக்கும் ஃபெய்த், அங்கிருப்பவர்களையும், இல்லாதவர்களையும் பற்றி விளக்கவுரையும், தீர்ப்புமாக அள்ளி விடுகிறார். தன்னிடமிருந்து பிரிந்து போய் விட்ட கணவன் ரிகார்டோ, அவன் பணம் தேவைப்படும்போது மட்டும் தனக்குக் கடிதம் எழுதுவது எல்லாம் பற்றியும் பேசுகிறாள். அவருடைய வசிப்பிடத்தின் மொத்த சுற்றுப்புறம் – அதாவது, மொத்த உலகே- இந்தப் பூங்காவில் அடங்கி விடுகிறது, பெண்களும் அவர்களது குழந்தைகளுமான மாநிலம் அது.
போரை எதிர்க்கும் ஊர்வலம் ஒன்று பூங்காவுக்குள் பாய்ந்து வரும்போது கதை முடிகிறது. வளர்ந்தவர்கள் கோஷங்கள் பதித்த அட்டைகளைச் சுமந்திருக்கிறார்கள்- ஒரு குழந்தையை எரிப்பீர்களா நீங்கள்?- தள்ளு வண்டிகளில் அந்த விளையாட்டுத் திடல் முழுதும் தங்கள் குழந்தைகளைத் தள்ளிச் செல்கிறார்கள். ஃபெய்த், பாலுறவுச் சம்பவம் ஒன்றைப் பற்றிப் பகல் கனவில் இருக்கிறாள், தன் மகன் ரிச்சர்ட் சாக்கட்டி ஒன்றை எடுத்து ஆர்ப்பாட்டக்காரர்களின் குற்றச்சாட்டுக் கேள்விகளை அருகில் தார் பூசிய பரப்பில் பிரதி செய்வதைப் பார்க்கிறாள். தன்னெழுச்சியாக ரிச்சர்ட் அந்த ஆர்ப்பாட்டக்கார்களுடன் இணைவதும், அந்த ஊர்வலமும், ஃபெய்த்தின் மனதில் ஒரு திருப்பு முனையாக அமைகின்றன: “அந்தச் சமயம்தான் நடப்புகள் என்னை வழி திருப்பின என்று நினைக்கிறேன்… அதன் பிறகு பல வகை வேலைகளைச் செய்யும் ஆண் பெண்களை நான் சந்தித்தேன், தம் வேலைகளால் செலுத்தப்பட்ட சிந்தனை கொண்ட அந்த மனிதர்களாலும், என் குழந்தைகளின் உணர்ச்சிபூர்வமான புத்தியாலும், பாலுறவில் ஊறிய அந்த விளையாட்டுத்தடலிலிருந்து நான் வெளியே வழிநடத்தப்பட்ட பின், நான் மேன்மேலும் ஒவ்வொரு நாளும் உலகைப் பற்றி யோசிக்கத் துவங்கினேன்.” அரசியல் என்பது வீட்டு நிகழ்வுகளைத் தடுப்பதில்லை, மாறாக இயல்பாகவே அவற்றின் ஒரு பங்காக இருப்பதாகக் காட்டப்படுகிறது. அந்த மைதானம் ஏற்கனவே அரசியல் கொண்டதுதான்.
இந்தக் கட்டுரையின் இரண்டாம் பகுதி
(தொடரும்)
(தமிழாக்கம்: மைத்ரேயன்
மூலக் கட்டுரை: த நேஷன் என்கிற வாராந்தர இடது சாரிப் பத்திரிகையின் ஜூலை 17-24, 2017 ஆம் தேதியிட்ட இதழில் வெளி வந்தது. Maggy Doherty எழுதியவர். தலைப்பு: Big Differences.
த நேஷன் பத்திரிகைக்கு சொல்வனம் பத்திரிகையின் நன்றி உரித்தாகும். )