துணிப்பிடிப்பி தொழிலகத்தில் நாங்கள் அடிக்கடி லெனினை நினைத்துக்கொள்வோம்

குறிப்பு: கை டாவன்போர்ட்டின் ‘We Often Think of Lenin at the Clothespin Factory’ என்ற கவிதை ஒரு டெகாஸிலபிக் உரையாடலாய் அமைக்கப்பட்டுள்ளது (ஆங்கில பாவின அடிகள் accentual-syllable கணக்கை அடிப்படையாய்க் கொண்டவை. ஆங்கில syllableகள் ஒவ்வொன்றும் குற்றெழுத்து தவிர்த்த தமிழ் எழுத்துகளுக்கு நிகராகும். எனவே டெகாஸிலபிக் என்பது தமிழில் குற்றெழுத்து தவிர்த்து பத்து எழுத்துக்கள் கொண்ட அடி என்று கொள்ளலாம்). கிரேக்க அபிநயக்கூத்துக்களை மொழிபெயர்க்க டாவன்போர்ட் இவ்வடிவைப் பயன்படுத்தியிருக்கிறார். இதில் ஹெரோண்டஸின் (Herondas) “தாங்கு புளிமாக்களை” முன்னுதாரணமாய்க் கொண்டுள்ளதாய் அவர் குறிப்பிடுகிறார் (“Limping iambs”). அவரது கிரேக்க கவிதை மொழிபெயர்ப்புகளின் தொகுப்பான Seven Poets என்ற நூலில் இவை உள்ளன.

ஏழு நூற்றாண்டு கால கிரேக்க கவிதைகள் மற்றும் கவிதைத் துணுக்குகளை பர்டன் ராஃபெல்ஸ் மொழிபெயர்த்த Pure Pagan என்ற நூலுக்கு டாவன்போர்ட் ஒரு முறை முன்னுரை அளித்தார். அதில் அவர் ஒருமைப்பாடு கொண்ட மானுட இயல்பு குறித்து எழுதுகிறார். நாம் பேசும் மிருகங்கள். நமக்கு இருக்கக்கூடிய சித்த சுவாதீனம் இல்லாதவர்கள் நாம். அரிஸ்டாட்டில் ஒருமுறை கூறியது போல் கட்டுக்கடங்காது திரிந்த நாம் நட்பு பூண்டு வாழ்கிறோம், ஒரு சமூகமாக, நாகரிக மனிதர்களாக. கிரேக்க தத்துவமும் இலக்கியமும் நாகரீகப்படுத்துவதை, மானுட இயல்பைப் புரிந்து கொள்வதை, நம் அறவுணர்வைக் கேள்விக்குட்படுத்தி கூர்மைப்படுத்துவதை, நம் அழகுணர்வை மேம்படுத்துவதை, இவ்வுலகை மதித்து அதற்குரிய மதிப்பளிப்பதை நோக்கமாய்க் கொண்டவை. இலியாத் அசில்லஸின் சீற்றத்தில் துவங்கி, “குதிரைகளை அடக்குபவன்” ஹெக்டரின் ஈமச் சடங்கில் முடிகிறது. இது தன்னிகழ்வல்ல. பார்த்தெனொன் சீலையோவியம் (parthenon frieze) மனிதர்களையும் குதிரைகளையும் சித்தரிக்கிறது. இவ்விரண்டையும் இணைக்கும் பல நூறு ஆண்டுகால கலாசாரம், நாகரீகம் என்பதைக் கட்டுப்படுத்துவதாய், நயம்படுத்துவதாய்க் கண்டது. கய் டாவன்போர்ட் எழுதிய ஒவ்வொன்றின் உரைகல்லும் இதுவே. மீண்டும் மீண்டும் அவர் மானுட வரலாற்றின் சுவர்க்கீய தருணங்களை (நாம் எவ்வாறு இருந்திருக்க வேண்டும்), அதன் நரகுத் தருணங்களில் (நாம் எவ்வாறாகி விட்டோம்) ஈடு செய்கிறார் (கொலாஜ் என்று நாம் சொல்லும் bricolage அவர் சிறப்பாகக் கையாண்ட கலைவடிவம்). ஃபூரியரிஸ்டுக்கள், ஷேக்கர்கள், உடனடி உலக அழிவில் நம்பிக்கை கொண்ட கிறித்தவர்கள், பாசிஸ்டுகள், கம்யூனிஸ்டுகள் மற்றும் பலர் நிறைந்த அவரது ஆக்கங்கள் பலவற்றினுள் பொன்னுலக தரிசனம் எப்போதும் நுழைந்து விடுகிறது. இவ்வுலகின் திட்டமிட்ட கட்டமைப்பு குறித்த உணர்வு கொண்ட ஷேகர், ஃபூரியரின் சுகவுணர்வு, தோரோவின் சூழியல் இவற்றுக்கு இணக்கமானவராகவும் பிழையுலகுக்கு இட்டுச் சென்ற பிற சந்தேகத்துக்குரிய கருத்துகளுக்கு எதிரானவராகவும் கய் இருந்தார் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

கய் கிரேக்க கலையின் மானுட நேயத்தைப் போற்றியவர். மானுடம் தன்னோடு நிகழ்த்திக்கொள்ளும் உரையாடல் என்று அதனை அவர் அடையாளம் கண்டார். இக்கவிதை மேற்கூறிய எதிர்களின் உரையாடலாய் அமைக்கப்பட்டுள்ளது: பெயர் குறிப்பிடப்படாத ஒரு பெண், மாண்டெல்ஸ்டாமின் விதவையின் சாயல் கொண்டவளின் பின்னோக்கு தரிசனத்தின் ஆதர்சவுலகம், தனது “பொன்னுலகம்” அழித்தொழித்த மகோன்னதங்கள் பற்றிய ஓர்மை சிறிதும் இல்லாத, கோட்பாட்டு மயக்கத்தில் ஆழ்த்தப்பட்ட கட்சிக்காரன் ஒருவன், இவற்றை எதிர்கொள்கிறது. ஆனால் இது எளிய கருப்பு வெள்ளைச் சித்திரம் அல்ல. ஹெரோண்டஸின் பாத்திரப்படைப்பு குறித்து டாவன்போர்ட் கூறியது இங்கு பொருந்தும்: “தாமே கொதியேற்றிய குழம்பில் அவர்கள் வேகின்றனர், ஹெரோண்டஸ் எப்போதும் அவர்களை அங்கு விட்டுச் செல்கிறார். இவை நகைச்சுவைச் சித்திரங்கள் அல்ல, நகைப்புக்குரிய கணங்கள். ஒரு பாத்திரத்தைக் கூர்மையாகவும் முழுமையாகவும் விவரிக்குமளவு இக்காட்சிகள் நீடிக்கின்றன”.

மொழியாக்கம் பற்றிச் சில குறிப்புகள்:  ஆங்கில கவிதையில் ஒவ்வொரு அடியும் பத்து சிலபிள்கள் கொண்டுள்ளன. இதைத் தமிழில் என்னால் கொணர முடியவில்லை என்பதால் நேர் நிறை அசைகளைத் தமிழாக்கத்தின் அடிப்படையாய்க் கொண்டுள்ளேன். எனவே தமிழாக்கம் ஒவ்வொரு அடியிலும் பத்து அசைகள் கொண்டுள்ளது. தமிழ் இலக்கணமோ அதன் யாப்போ முழுமையாய் அறியாதவன் நான். ஆங்கில வாக்கிய அமைப்புக்கு நேரெதிர் வாக்கிய அமைப்பு கொண்டது தமிழ் மொழி. எனவே ஒவ்வொரு அடியும் பத்து அசைகள் கொண்டவையாய் இருக்க வேண்டும் என்ற விதியை முழுமையாய் கடைப்பிடிக்க இயலவில்லை. ஆங்கிலத்திலும் சரி தமிழிலும் சரி, ஒரு அடியில் பத்து சிலபில்கள்/ அசைகள் என்ற கணக்கு குறையும்போது அவை அடுத்த அடியில் சேர்ந்து கொண்டு அக்குறையைச் சரி செய்கின்றன. இது போன்ற இடர்களும் என் குறைகளும் சில இடங்களில் சற்றே அசௌகரியமான சொல்லமைப்புக்குக் காரணமாகியுள்ளன. ஆனால் பொதுவாய்ச் சொன்னால் ஆங்கில கவிதையின் வடிவை தமிழாக்கம் செய்கையில் நெருக்கமாய்ப் பின்பற்றியிருக்கிறேன்.

oOo

பரீ அல்லாத ஒரு நகரம். நாட்ச், ஒரு முதிய பெண்மணி உயரமான பீங்கான் அடுப்பிற்கு அருகே பீப்பாயிலிருந்து செய்யப்பட்ட நாற்காலியொன்றில் அமர்ந்திருக்கிறாள், மடியில் ஒரு கூடை உருளைக்கிழங்குகளுடன். கைக்குட்டை, சால்வை, தாராளமான பாவாடை, பூட்சுக் காலணி. போல்டென், இளம் படைவீரன், காவி நிறத்தில் கொத்துக்கொத்தான சுருட்டைமுடியுடன், மங்கோலிய கன்ன எலும்புகள், ஒண்சிவப்பு தோள்பட்டைகள் வைத்த பச்சைச் சீருடை.

நாட்ச்

முன்னொரு நாள் வெர்னன் என்றோர் ஆங்கிலேயன்
பத்தொன்பதாவது நூற்றாண்டில் எப்போதோ
கார்தேஜில் ஹயினாக்களை வேட்டையாடுகையில்
தடுமாறி விழுந்தான் படுபாதாளமொன்றில்.
ஆனால் விழுகையிலோ ஆச்சரியப்பட்டான்
உண்மையிலே அடித்தளம் இல்லாதது கண்டு.
தரைதட்டுகையில் அவனுக்குத் தன்னையாரோ
வாத்திறகு மெத்தையிலிட்டது போலிருந்தது.
அதைவிட ஆச்சரியம் அவன் மேலெழும்பியதுதான்.
உறுதியான மும்முர எழுச்சியொன்று அவனை
சிறிதுசிறிதாக குழி விளிம்பிற்கு உயர்த்தி
திடமான தரையில் உருட்டித் தள்ளியது.
அவன் விழுந்ததோ ஒரு வௌவால் திரளின் மீது.
உறக்கத்திலிருந்து உலுக்கப்பட்டு அவை
குழியிலிருந்து ஒன்றாக உயர்ந்தபோது
ஆங்கில வேடனையும் உடனழைத்து வந்தன.

போல்டென்

இது உண்மையா?

நாட்ச்

ஒவ்வொரு அழகான வார்த்தையும்.
ஓசிப், என் கணவன், புத்தகத்தில் படித்தான்.
அவன் கவிஞன். அவனைக் கொண்டு சென்றார்கள்.
அவன் கவிதைகள் அனைத்துமே எனக்கு மனப்பாடம்.

போல்டென்

புத்தகம் வந்ததா?

நாட்ச்

இல்லை. எப்போதுமில்லை.
அதிலொன்று அந்த கிழ கரப்பான் பூச்சி
முகத்தை பூட்ஸின் மினுக்கில் பார்ப்பது பற்றி.

போல்டென்

லெனின் நடைப்பயிற்சிக்கு காரில் சென்றது பற்றி
ஒரு கவிதை எழுதியிருக்கிறார் இல்லையா?

நாட்ச்

சதுக்கம். வடக்கே காவலர்களின் பாளையங்கள்.
கொடிமரம் கொடியோடு, நீலக் காவலர் நடை,
ஒண்சிவப்பு முகப்புகளில் ஒற்றையெண் ஒன்பது
தங்கயிழைகளில் மின்னும் கழுத்துப்பட்டைகள்,
குளிரில் சுவர் மீது அவர்களின் துரிதநடை.
சிறுதூபியில் தொடங்கி சந்திப்பு நிகழும்
கோபுரவாயில் வரை, பின் கனமிதித் திருப்பம்
மீண்டும் தூபிக்குத் திரும்பும் துரிதநடை.
கீழே வெறுமையாகக் கிடக்கும் சுவர்மீதும்
குளிரில் மற்றொரு காவலர் ஜோடி அதே போல்
அதே உறைந்த அசைவியக்கங்களைச் செய்தபடி.

போல்டென்

சதுக்கம், மேற்கே ஃபிரெட்ரிக் எங்கல்ஸ் நிலையம்.
இரும்புக்கதவுகள். உழைப்பு பற்றிய உருவகம்,
செவ்வியல் தூண்கள், சிவப்புக் கொடித்துணி பதாகைகள்
ஆண்டுவிழாக்களன்று முகப்புகளின் குறுக்கே.
சீன மக்கள் குடியரசிலிருந்து சில
சமயம் பிரதிநிதிக் குழு, ரோஜாக்களுடன்.
ஷீப்பெரியாவின் செயற்குழு இப்போதெல்லாம்
வருவதில்லை, அதன் கால்பந்தணியும் கூட.
ஆண்டிற்கு இருமுறை இரவில் ஐன்னல்களில்
விளக்கொளி. ரிம்ஸ்கீ கோர்சகோவை கேட்கமுடியும்.

நாட்ச்

ஆனால் ஈகோர் ஸ்டிராவின்ஸ்கியின் பல்லிசையையோ
ஃப்ரான்சிஸ் பூலன்கையோ கேட்க முடியாது.
சதுக்கம், தெற்கே பண்பாட்டு அமைச்சரவை.
செக்கோஸ்லொவாக்கியாவிய பைசைக்கிள் ஓட்டுனர்கள்,
அலெக்சாண்டர் தினெகா வரைந்த ஓவியங்கள்.
செவாஸ்தோபோலின் தினாமோ நீர் விளையாட்டுகள்.
ஊழியர்களின் கோடை விடுமுறை நீச்சல்குளம்.
லெனின் காரில் எடுத்துக்கொள்ளும் நடைபயிற்சி.

போல்டென்

ஹங்கேரியிலிருந்து உழவர்களின் பூந்தையல்.
லெனின் சிறுவர்க்கு வரலாறு பயிற்றுவித்தல்.

நாட்ச்

சதுக்கம், கிழக்கே. அமைதி அமைச்சகம். Dom ஆலயம்.
நவீன மனிதன் புனித பால் ஆலயத்தில்
விளக்கேற்றமாட்டான் என்பது அனைவரும் அறிந்ததே.
ஆனால் சாத்தானை விரட்ட பூண்டணிந்து
ஆந்தையின் கூவொலியை இரவில் கேட்டாலோ
துர்நிமித்தமாக பூட்ஸ் நாடா அறுந்தாலோ
சுவற்றிலிருந்து கண்ணாடி விழுந்தாலோ
ஒன்பது நொவீனாக்களை முணுமுணுத்துக் கொள்வான்.
வரிசைகளில் காத்திருப்பதற்கு முன்னதாக
பெண்களும் குழந்தைகளும் டாம் போய் வருகிறார்கள்.

போல்டென்

கிழவிகள் வாய் நீளம்

நாட்ச்

பப்பிகள் ஆய் போகும்.
இதோ பார் அதற்குள் அடுத்த கதை! ஹெர் ஷ்ரிஃபில்ட்
பதிப்பாளர், ராபர்ட் வால்ஸர் என்ற ஸ்விஸ்
எழுத்தாளர் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த
அபார்ட்மெண்ட் கட்டிடத்தை குழந்தைகளும் நாய்களும்
நிரம்பிய சதுக்கத்தை ஒட்டிய கூடத்தில்
கண்டுபிடித்த உடன் அதில் வால்சரின் கதவையும்
அடையாளங்கண்டு அழைப்புமணியை இழுத்தார்.
ஒரு சிறு இடைவெளி. கவைமுள்வால் கோட்டணிந்த
பட்லர் ஒருவரால் கதவு திறக்கப்பட்டது.

போல்டென்

முதலாளித்துவம்.

நாட்ச்

நீர்மமான அகல்விழிகள்.
மிலிட்டரி மீசை. பின்ஜடை இருக்குமோ என்று
வியக்குமளவிற்கு இணைகோட்டு முறைமையுடன்
பின்னந்தலைப் பக்கமாக சீவிய கேசம்.

போல்டென்

ஏகாதிபத்தியம். ஆங்கிலேயர்களின் கடற்படை.

நாட்ச்

எழுத்தாளர் ஹெர் ராபர்ட் வால்சர் வசிக்கும்
அபார்ட்மெண்ட் இதுதானே. ஹெர் ஷ்ரிஃபில்ட் கேட்டார்.
மிகச்சரியே ஐயா பட்லர் பதிலளித்தார்
ஹெர் ஷ்ரிஃபில்டின் கார்டை பெற்றுக்கொண்டே.

போல்டென்

பணபலமிக்க தரங்கெட்ட பெருச்சாளிகள்.

நாட்ச்

ஹெர் ஷ்ரிஃபில்ட் ஒரு நொடி காத்திருப்பாரானால்
அவர் எதிர்பார்த்திருந்த விருந்தினரின் வருகை
ஹெர் வால்ஸருக்கு அறிவிக்கப்பட்டிருக்கும்.

போல்டென்

மயிராண்டி.

நாட்ச்

ஹெர் ஷ்ரிஃபில்ட் உட்கார்ந்துகொண்டார்.
பொழுதை போக்குவதற்காக அவர் கார்பெட்,
பழைய அறைகலன், சுவற்றில் தொங்கிய, ஒருகால்
ஜெர்மனியிலிருந்து வந்திருக்கக்கூடிய
ஆனால் நிச்சயம் நவீன காலம் என்று
கருதக்கூடிய விசித்திரமான படங்கள்,
நீல ஜாடியொன்றில் புல்நிலத்துப் பூக்கள்,
மூங்கில் மீது வீற்றிருக்கும் காகிதக் கிளி,
வண்ணக்கல் அச்சு பிரதியில் பால்மய்ரா,
காட்ஃப்ரீட் வான் லைப்னிட்ஸின் ஒரு கண் மட்டும்
சிவப்பு சுற்றுக்கோட்டில் காட்சியளிக்கும்
மார்பளவு பட்டிச்சாந்து சிலை, அனைத்தையும்
உள்வாங்கிக்கொண்டார். ஜன்னலுக்கு வெளியே,
வெற்றுச் செங்கற்சுவர். விருந்தினர்களை சிறிது
காக்கவைப்பதில் கண்டிப்பாக வால்சருக்கு
அலாதி பிரியமென்று அவர் நினைத்துக்கொண்டார்.
ஒரு பத்தியை முடித்துக்கொண்டிருக்கலாம் அல்லது
பின்பக்க படிக்கட்டிற்கு கீழே பெண்
விருந்தினரொருவரை சந்தித்துக் கொண்டிருக்கலாம்?
இந்த எழுத்தாளர்கள் எதைத்தான் செய்ய
மாட்டார்கள் என்பதை சொல்வதற்கு இல்லை.
கால்நகங்களை வெட்டிக்கொண்டு, மெய்மறந்து,
ஃபிரெஞ்சகராதியை பக்கத்திற்கு பக்கம்
படித்துக்கொண்டு… இந்த எழுத்தாளருக்கோ
பட்லர் அமர்த்துமளவு வசதியிருக்கிறது.

போல்டென்

பூர்ஷ்வா சுகவாசி.

நாட்ச்

கார்பெட் இதற்கு முன்
பல முகவரிகளில் வசித்திருந்தது. நாற்காலிகள்
மூப்பெய்திய குதிரைகள் இழுக்கும் வண்டிகளில்
பல தெருக்கள் வழியே ஊர்வலம் சென்றிருந்தன.
ஹெர் ஷ்ரிஃபில்ட் லைப்னிட்ஸின் சிவப்பு கண்ணையும்
காகிதக் கிளியின் மஞ்சள் கண்ணையும் தவிர்த்து
ஈ மொய்த்த பால்மய்ரா இடிபாடுகளை
நோக்கி வேதாகமம் சமய சார்பற்ற
வரலாறு இவற்றிலெதில் அந்நகரத்தை
தான் எதிர்கொண்டோம் என்பதை நினைத்துப்பார்த்தார்.
அப்போது பட்லர் முன்னதாக வெளியே
சென்ற கதவு ஒரு ஆள் மட்டுமே செல்லும்
அளவிற்குத் திறந்து கசங்கிய கார்டிராயும்
ஆங்கில பொதுவுடமைவாதிகள் மிகவும் விரும்பிய
நீல நாரியல் சணல் சட்டையணிந்த ஆள்
ஒருவரை உள்ளே அனுமதித்தது. நீர்மமான
அகல்விழிகள், மிலிட்டரி மீசை. கட்டற்ற
கேசம் மட்டும் இணைகோட்டு முறைமையுடன்
பின்தலைப் பக்கமாக சீவப்பட்டிருந்தால்
பின்ஜடை பற்றிய சந்தேகம் எழுந்திருக்கும்.

போல்டென்

ஏகாதிபத்தியம். ஆங்கிலேயர்களின் கடற்படை.

நாட்ச்

கடவுள்தான் நம்மை காப்பாத்தணும். ஷ்ரிஃபில்ட்
தனக்கே சொல்லிக்கொண்டார். எவளோ கழிசடை
ஒருத்தியை தொடையின் மீது அமர்த்தியிருக்கும்
அல்லது ஃபிரென்சகராதியை படிக்கும் வால்சர்
தான் தானென்று நான் நினைக்க வேண்டுமென்று
பட்லர் விரும்புகிறார். ஆனால் ஷ்ரிஃபில்டை
பழக்கமான குதூகல அசட்டையுடன் விளிக்கும்
குரலோ பட்லரின் குரலிலிருந்து முற்றிலும்
வேறுபட்டிருந்தது.

போல்டென்

கார்ல் மார்க்ஸ். மடங்கிய கரங்கள்.
ஆழ்ந்த சிந்தனை. அவரது தலை வெண்கலத்தில்
பிரம்மாண்டமாக. லெனின் முஷ்டியை மேலுயர்த்தி
மக்களை தூண்டுகிறார்.

நாட்ச்

விஷயம் என்னவென்றால்
வால்சரே அவரது பட்லரும்கூட. மிமிக்ரி
செய்வார். கவிஞர். சிறிது காலத்தில் அதை
எல்லாம் துறந்து மனநோய் இல்லம் புகுந்தார்.
நம் கவிஞர்களோ சிறைகளுக்குச் சென்றார்கள்.

போல்டென்

அவரே அவரது பட்லரா?

நாட்ச்

அப்போதிருந்த
உலகம் அப்படி. வகைவளம். அஷ்டாவதானம்.
ஆஹா! நமக்கு முன் வந்த பத்தொன்பதாம்
நூற்றாண்டு ஒரு வித பூலோக சுவர்க்கம்.
எலுமிச்சைகள் புன்னைகள் அணிவகுத்த வீதிகள்.
ஆண்கள். பெண்கள். குழந்தைகள். குதிரைகள். நாய்கள்.
இப்போதோ பெருக்கிக்கொண்டிருக்கும் கிழவிகள்
மட்டுமே. பிராஸ்பெக்டிலிருக்கும் டிராம் நிறுத்தம் 6
அருகிலுள்ள சந்தையில் கிடைக்கும் தக்காளி
பற்றிய செய்தி. கஷ்டம் தூ! இதைக்காட்டிலும்
சிர்கின் கோமாளிகளைக்கூட நம்பலாம்.
எப்படியும் நீங்கள் வந்தபோது அவர்கள்
போயிருப்பார்கள்.

போல்டென்

அமெரிக்க நகரங்களில்
தாதா கூட்டங்கள் வளைய வருகின்றன.
ஊழியர் பணத்தைக் கத்திமுனையில் பறிக்கின்றன.
பணக்காரர்களோ நற்குணமோ மனசாட்சியோ
இன்றி போதைபொருட்கு அடிமைகளாகி
குடிபோதையில் கார் விபத்துகளில் இறக்கிறார்கள்.
வருடத்திற்கு ஐம்பதாயிரம் விபத்துக்கள்.
உரிமைகளை ஒடுக்கி பாசிஸம் உலகெங்கும்
வேர்கொள்ள நிதி அளிப்பதே அரசாங்கத்தின்
ஒரே கொள்கை.

நாட்ச்

தையதக்கா! அப்படிப் போடு.

போல்டென்

புனித போரிஸில் கவிஞர்களும் ஊழியர்களும்
கடந்த செவ்வாயன்று மறியல் நடத்தினர்.
அவர்களிடம் 1917 பதாகையும்
அட்டையில் செய்த சில நவீன ஓவியங்களும்
இருந்தன. ஒரு படத்தின் பெயர் வாழ்க்கையின் லட்சியம்.
இது அனைத்திற்கும் பொருளென்ன? அடுத்த படம்.
மோசமான படங்கள். உண்மையில் திட்டுக்கள்.
கவிஞருள் ஒருவன் பின்ஸ்கில் செய்யப்பட்ட
சுத்தியல் அரிவாள் முத்திரையிட்ட நீல
ஜீன்ஸ் அணிந்திருந்தான். அவனுக்கது பொருந்தவில்லை.
மேற்கத்திய ஜீன்ஸைப் போலல்லாது அதன்
நீலமும் ஊதாவை போல் தோற்றமளித்தது.
காவலர் வந்து இழுத்துச் செல்வதற்கு முன்
கவிஞன் கேவலமான கவிதையை கத்தினான்.

நாட்ச்

கிழ கரப்பான் பூச்சி.

போல்டென்

நாடோடிகள் திரும்பி
விட்டார்கள். சினகாக் முன்பிருந்த இடத்தில்
அழகிய வெள்ளை குதிரைகளுடன் அவர்கள் முகாம்.
அவரே அவர் பட்லராக ஏன் பணியாற்றினார்?

நாட்ச்

அதனால் உண்டாகும் நகைச்சுவைக்காகத்தான்.
அந்த காலத்தில் இதையெல்லாம் செய்து
பார்த்தார்கள். அமர்க்களமாக இருந்திருக்கும்.

போல்டென்

வெள்ளி இடி. அது அந்த கவிதையில் வந்தது.

நாட்ச்

பொமோனாவின் மார்பளவுச் சிலை. முட்டைக்கோஸ்,
அவளருகே சிவப்பு விடியலின் பிரதியொன்று.
கூட்சு ரயில் கடந்து செல்கையில் குவளைகளை
உலுக்கிவிட்டு பொமோனாவையும் நடுங்கச் செய்தது.
ஜன்னல் அதிர்ந்தது. கிடுகிடுக்கும் ஒளிக்கீற்று
பொமோனாவின் கண்களைத் திறந்தது. எப்போதோ
பழங்காலத்தில் நடந்தது. பழைய கவிதையில்
ஆப்பிள் பேரிப் பழங்களில் குடிகொண்டிருக்கும்
அணங்கவள். மலர்களும் இலைகளுமாலான உடை
அணிந்திருக்கும் உயரமான பெண். கோபுரத்து
கடிகாரம் வேலை செய்வதில்லை. இருப்பினும்
அதுவும் இடலியோடு இணைந்திருக்கும் துண்டமே.
இங்கோ சாம்பலொளியில் மாறா அதே சலிப்பு.

போல்டென்

இறந்த காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள்.

நாட்ச்

நான் மனதில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.

போல்டென்

அவள் மனதில்.

நாட்ச்

அங்கு பழைய நிறங்களில் கனவுகள் உதிப்பதால்.
நிழலே வா, வந்திந்த நிழலை தூக்கிச்
செல். ஒண்சிவப்பு ஒரு ஆரஞ்சின் நிழலில்.
வார்த்தைகள்.
இம்மரம். இந்த ஆந்தை. இந்நிலா.
காற்றில் ஆந்தை கண்டறியமுடியா மரணம்,
நெருஞ்சிலில், நிலவின் வெள்ளை ரொட்டியில் மரணம்.
போல்டன் ஓநாய்க் கண்ணா, முன்பு எதெல்லாம்
இருந்ததென்று உனக்குத் தெரியாது. ஆயிரம்
கிளை ஓக்குமரம் ஒவ்வொரு கிளையிலும் ஆயிரம்
இலைகள், சிவப்பு சிவப்பு இலைகள். வெலிமிர்
க்லெப்நிகோவின் சிவப்பு ஓக்குமரம். அது மிகச்
சிவப்பாகவே இருந்தது.
இப்போது இங்கே
நகரங்கள் கிடையாது, கல்லாலான
தொலைவுகள் மட்டுமே. வெரோனா மஞ்சள் நிறத்தில்
இருந்தது. வெனிஸோ சிவப்பு நிறத்தில். நமக்கு
Urbs et fanum, நகரமும் தேவாலயமும்,
Gorod I khram, பரந்திருக்கும் மணியோசையும்.
இருப்பே கொடை. இருந்து கொண்டிருப்பதே கடினம்.

போல்டென்

ஆனால் நானிருக்கிறேன். நீங்களிருக்கிறீர்கள்
அப்படி இதிலென்ன கஷ்டம் இருக்கிறது?

நாட்ச்

உலகை இணைக்கும் ஊடிழை. அவர் மனம் ஒருபுறம்
புரவிமனிதன் மறுபுறம் மெகாராவின் தெருக்கள்.
பண்டைய கிரேக்க கவிஞன் தியோனிஸைப் பற்றி
வகுப்பறையில் ஒருமுறை இதை நான் கேட்டிருக்கிறேன்.
டார்டெஸோசின் வெள்ளிவேர் பாய்ந்த நீரோட்டம்.
நீ அறிந்திருக்கமாட்டாய். அவர் எண்ணை பூசிய
விளையாட்டுவீரர்கள், உடைமைச் சட்டங்கள்,
முகைநரண், வில்லாளிகள் நடத்தையிலிருக்கும் லயம்,
ஒண்பொருள் வீண்பொருள், அன்பான நண்பர்கள்,
நற்பேச்சு, இவையெல்லாவற்றையும் பேசினார்.
ஜனநாயகத்தை கடுமையாக விமர்சித்தார்.
புதல்வர்கள் புதல்விகளைக் காட்டிலும் குதிரைகள்
நன்றாக பேணப்படுகின்றன என்று
முணுமுணுத்தார். இரண்டு இனத்திலும் பொலிகளையே
விரும்பினார். விசாலமான மனம் படைத்த மனிதர்.

போல்டென்

அது இயற்கையை மறுப்பது.

நாட்ச்

லெனின் ஒரு மடிசஞ்சி.
தியோனிஸ் புரட்சி காலகட்டத்தில் வாழ்ந்தார்.
புத்தகங்கள் ஆலிவ் தோப்புகள் வீடு என
பலவற்றை விலையாகக் கொடுத்தார். அவரது
பந்தயக் குதிரைகளையும்.

போல்டென்

நன்றாக வேண்டும்.

நாட்ச்

மேலும் மற்றொரு போர் அவரது ஸ்பார்டனிய
சுயக்கட்டுப்பாட்டை காவு வாங்கியது.
நகரம்விட்டு நகரம் பெயர்ந்தார். ஆனால்
எப்போதும் கிரேக்க நகரங்கள் மட்டுமே.
வார்த்தைகளின் வடிவவியலில் எழுதப்பட்ட
அவர் கவிதையை ஹீசியடின் வேகத்துடனும்
ஹோமரின் நயத்தோடும் ஒப்பீடு செய்வது
ஜிம்னேசிய அடிமைகளை மாதிரிகளாகக்
கொண்டு வனையப்பட்ட பிற்காலத்து
அப்போலோவை புராதன கூரோய்க்களுடன்
ஒப்பிடுவதற்குச் சமமானது.

போல்டென்

இதையெல்லாம்
எப்படி நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?

நாட்ச்

ஷேக்ஸ்பியரும் பெட்ரார்க்கும். இவையெல்லாமே
எளிதாக திரும்புகின்றன. லென்ஸ்கி புஷ்கின்.
அவர்களுடன் வில்லோ மரங்களும் விண்மீன்களும்.

போல்டென்

அரோரா கப்பல் சிவப்புக்கொடியை பறக்க
விடுவதற்கு முன். ஒரு கணநேர பெருமிதம்.

நாட்ச்

கடவுபெருக்கி சுத்தம் செய்துகொண்டிருக்கிறாள்.
தெரிகிறதா, அதோ அங்கே

போல்டென்

ஆம்,தெரிகிறது.

நாட்ச்

கடிகாரகோபுரம், பாளையங்கள். அவளுக்கு
அவை தொலைநோக்கமைத்துத் தருவதை கண்டாயா?
ஒரு கானலெட்டோ ஓவியத்தில் வருவது போல்.

போல்டென்

ஒரு இயற்கைநிலைக்காட்சி ஓவியர். ஹெர்மிடாஜ்.

நாட்ச்

மேலே வானம். மந்தமான குட்டையைப் போல்.
அவள் என்ன நினைக்கிறாள்?

போல்டென்

எதையுமே இல்லை. லெனின்.

நாட்ச்

பாளையத்தில் பறக்கும் கொடியின் அடிக்க வரும்
சிவப்பு, பித்தநீர் மஞ்சள் இவற்றைத் தவிர
வேறெந்த நிறத்தையுமே காண்பதற்கில்லை.

போல்டென்

ஆமாம். சிவப்பு திட்டு. சிறிது மஞ்சள்
மற்றதனைத்தும் சாம்பல் நிறம். சதுக்கத்தில்
தனித்திருக்கும் உருவமாவதை அவள் தவிர்த்திருக்க
முடியும்போல் நீங்கள் ஏதோவொரு கதையை
ஜோடிப்பீர்கள். அவள் உங்கள் கற்பனையில்
வசித்துக் கொண்டிருக்கும் படம் மட்டுமே.

நாட்ச்

கிழவி.
அவள்அது மட்டுமே. நிகழ்வுகளின் மீள்நிகழ்வு
நினைவுகளில், அறிதலில், அல்லது கதையாடலில்.
காலம் உருண்டு செல்கையில் கடந்தகாலத்தையும்
உடனழைக்கிறது. எதையுமே அது துறப்பதில்லை.

போல்டென்

வரிசையில் நிற்கும் பணித்தலைவர்களுக்கு முன்
துடைப்பமேந்தும் கிழவி கூலி வாங்குகிறாள்.

நாட்ச்

ரீல்காவும் லூ ஆன்ட்ரேயாஸ் சாலோமியும்
யாஸ்நயா-போலியானாவை போய்ப்பார்த்தார்கள்.
ஹாரியட் பீச்சர் ஸ்டொவ் பற்றி பேசினார்கள்.
ஆ! என்ன இசை. நரம்பிசைக் குழுக்கள். கவிதை.
ஜீவெர்னியில் அல்லிகுளத்திற்கு அருகே
மொனேயை பார்த்தவரை அங்கு சந்திக்கலாம்.
ப்ரூஸ்ட். அவர் வீட்டு கதவைத் தட்டினால் பணியாள்
அனைவருக்கும் அதே தயாரித்த பதிலளிப்பான்:
விழித்திருக்கும் வேளைகளில் உங்களைப் பற்றி
நினைக்காமல் இருந்ததே இல்லை என்றாலும்
தற்சமயம் நேரமின்மை நிமித்தமாய் அவரால்
விருந்தினரைச் சந்திக்க இயலாதென்று
உங்களிடம் தெரிவிக்கச் சொன்னார். தட்லின்
பொராடின்ஸகி, க்லெப்னிகொவ், ஓசிப் மான்டல்ஸ்டாம்.
கெர்ட்ரூட் ஸ்டைன் இல்லத்திற்குச் சென்றவர்கள்.
யார் பரிந்துரைத்ததின் பேரில் வந்திருக்கிறீர்கள்?
வாசலில் நிற்கவைத்தே கேட்பாராம். என்ன
ஒரு காலம். அப்போது.

போல்டென்

தூ! ஒட்டுண்ணிகள்.

நாட்ச்

வெனிஸ், ரோம், லண்டன். ஒவ்வொரு கடையிலும் உருளைக்
கிழங்குகள் விலைக்குக் கிடைத்தன. ஆரஞ்சுப்பழம்
திராட்சை, பழம்பதிப்புகளில் ஹோமர். மேலும்
ஜூரிச்சிலேயே சுத்தமான பைசைக்கிள்
லெனினிடம் இருந்தது. கர்லாக்கட்டைகளை அவர்
ஜன்னலருகே நின்றபடி சுழற்றுவார். ஒன்று
இரண்டு மூன்று. ஒன்று இரண்டு மூன்று.

போல்டென்

லெனின் இல்லாதிருந்தால் லெனின் தோன்றியிருப்பார்.

நாட்ச்

முத்திரையிட்ட ஒரு ஜெர்மானிய ரயிலும்.
இன்ஜினில் சிவப்புக் கொடிகளும் ஃபின்லண்ட் இரயில்
நிலையத்தில் அவரை வரவேற்பதற்காக
காத்துநிற்கும் கூட்டமும். ஹெகலின் முரணியக்க
கோட்பாடறிய விரும்பும் உழவர் குழுவும்
தோன்றியிருக்கும்.

போல்டென்

இன்டெர்நாஷனெல் புரட்சி
கீதத்தை ஊழியர்களின் பித்தளை இசைக்குழு
வாசித்தது.

நாட்ச்

இங்கிருப்பதை விட இனிமையான
வசந்தங்களும் பசுமைததும்பும் கோடைகளும்.
அந்த ஆப்பிள் மரங்களும், பாட்டும், ஜொலிப்பும்.
காருண்யமான வருடங்கள் ஒழிந்துவிட்டன.

போல்டென்

ஆனால் வருடங்கள் இன்னமும் இருக்கின்றன.

நாட்ச்

ஆமாம், வாக்களிக்கப்பட்ட வருடங்கள்,
டானென்று மிகச்சரியான நேரத்தில்.

—————————————

மொழியாக்கம்: நம்பி கிருஷ்ணன்
Original: We often think of Lenin at the Clothespin factory. From “ the death of Picasso, new and selected writing” , by Guy Davenport

 


பதிப்புக் குறிப்புகள்: இந்தப் பாடலை கய் டவன்பொர்ட் எவ்வாறு புனைந்திருக்கிறார்? எட்டுக்கால் பூச்சி சிலந்தி வலை பின்னுவது போல் எனலாம். பூச்சியின் திரவ நூல், எவ்வாறு திட நூலாக மாறுகிறதோ, அது போல் இந்தக் கவிதையும் மீளவொண்ணாத மாற்றத்தை நம்மிடம் உருவாக்குகிறது. தாமிரபரணி ஆற்றின் கரையில் விளையும் கோரைப்புல் கொண்டு செய்யப்படும் பத்தமடை பாய் போல் இக்கவிதையை டவன்போர்ட் நெய்திருக்கிறார் எனலாம். பச்சைப் பசேலென்றிருக்கும் பசும்புல்லாய் விற்கப்படும் கொள்கையை இறுத்து, ஈரப்பதமில்லாத சூழலில் உலர்த்துகிறார். கவிதையின் கருத்தை நேரடி கவிதையெனும் தறியில் போட்டால் சிதைந்து விடும். எனவே, நனைய வைத்து காயப் போடுகிறார். இப்படி உலர்ந்த புல்லை ஓடும் தண்ணீர் என்னும் பத்து அசைகள் கொண்ட பாவின் அடிகளில் அமிழச் செய்கிறார். அதன் பின் நுண்புரி நூல் கொண்டு கோரையின் புறவுறையை உரித்து தன் கவிதையைப் புனைகிறார். இப்போது அது மும்மடங்கு கூர்மையடைந்து மனதில் தைக்கிறது. அதன் பின் நுண்புரி நூல் கொண்டு கோரையின் புறவுறையை உரித்து தன் கவிதையைப் புனைகிறார்.

எவ்வாறு புனைகிறார்? யாப்பு என்றால் யாக்கையைக் கட்டுதல். அதாவது நம் உடம்பானது ரத்தம், தோல், எலும்பு, நரம்பு போன்றவற்றால் கட்டப்பட்டிருப்பதைப் போல எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்பவற்றால். தமிழ்ப் பாட்டு, கட்டப்பட்டுள்ளது என்பதனால் யாப்பு என்று பெயர். அவ்வாறு இயற்றப்படும் பாக்களில் நமக்கு உறுப்புக்கள் இருப்பது போல, அவற்றுக்கும் உள் உறுப்புக்கள் அமைத்து செய்வதனால், செய்யுள் என்கிறார்கள். இது சோவியத் சித்தரவதையில் துண்டு துண்டாகப் பிரிப்பதை நினைவுறுத்தினால், அதற்கு நான் பொறுப்பல்ல.

ஒரெழுத்து தனித்தோ இணைந்தோ ஒலிப்பது அசை.

அசைகள் பல சேர்ந்து அமைவது, சீர் எனப்படும்.

சீர்கள் ஒன்றுடன் ஒன்று பொருந்த அமைவது தளை எனப்படும்.

இரண்டு அல்லது பல சீர்கள் சேர்ந்து அமைவது அடி எனப்படும்.

அடிகள் இரண்டு முதலியனவாகத் தொடர்ந்து அடுக்கிப் பாடுவது பா எனப்படும்.

உங்களுக்கு குறள், வெண்பா தெரிந்திருக்கும். நம்பி மொழியாக்கம் செய்த இந்தக் கவிதை பத்து அசைகள் கொண்ட பா. குறில் நெடில் ஈரசைச் சீர் கொண்டு எழுதப்பட்ட ஐஞ்சீரடி எனலாம்.

நம்பி கிருஷ்ணன் மொழிபெயர்த்த இந்தப் பாடல் அடிமறி மண்டில ஆசிரியப்பாவா அல்லது கொச்சகக் கலிப்பாவா அல்லது பஃறொடை வெண்பாவா என்பதை உங்களின் வீட்டுப்பாடமாக வைத்துக் கொள்ளவும். அதை நான் சொல்லப் போக புலவர் புகழேந்தியை ஒட்டக்கூத்தர் ஜெயிலுக்குள் தள்ளியவாறு என்னையும் நேரசை, நிரையசை கம்பி எண்ண அனுப்பி விடுவீர்கள்.

புலவர் புகழேந்தியை ஏன் இழுக்க வேண்டும்? அபிதான சிந்தாமணியில் புகழேந்திப் புலவரின் வரலாறு வருகிறது. 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குறுநில மன்னன் ‘சந்திரன் சுவர்க்கி’ புகழேந்தி புலவரை ஆதரிக்கிறான். பின்னர் பாண்டிய மன்னனின் அவைப் புலவராகப் பதவி ஏற்றுள்ளார். பாண்டிய இளவரசி சோழ மன்னனின் மனைவியானபோது புகழேந்தி புலவர் சீதனமாகச் சோழ நாட்டுக்கு அனுப்பப்படுகிறார். அங்கே சோழநாட்டு அவைப் புலவரான ஒட்டக்கூத்தரின் காழ்ப்புணர்ச்சியால் (பொறாமையால்) வெறுக்கப்பட்டுச் சிறை வைக்கப்படுகின்றார்.

அதே போல் நம்பி கிருஷ்ணன் மொழிபெயர்த்த கவிதை நாயகரான ஓசிப் மண்டெல்ஸ்டம் (Osip Mandelstam) என்பவரும் சிறையில் வதங்கியிருக்கிறார். ஓசிப் மண்டெல்ஸ்டமின் மனைவியை ஒத்த நபர் இந்த ஆக்கத்தில் வருகிறார். பழங்காலப் பெருமிதத்தைக் குறித்துப் பாடுகிறார்; அந்தக்கால நினைவேக்கத்தைக் காய்ச்சுகிறார்; அவளின் பெயர் நடெஸ்டா மண்டெல்ஸ்டம் (Nadezhda Mandelstam).

இந்த ஆக்கத்தை மூலத்தின் அளவிலும் நேர்த்தியிலும் எந்த சேதமும் இல்லாமல் தமிழுக்குக் கொணர்கிறார் நம்பி. ”அந்த கிழ கரப்பான் பூச்சி” என்னும்போது அப்படியே ஸ்டாலின் நிழலாடுகிறார்.

நடெஸ்டாவின் கணவன் ஓசிப் — “இரும்பு மனிதர்” ஜோசப் ஸ்டாலின் அரசாங்கத்தின் குலாக் வதைமுகாமில் கொல்லப்பட்டவர். சோசலிச சோவியத் ரஷ்ய தலைவராக விளங்கிய ஸ்டாலின் பல லட்சம் பேரைக் கொன்றவர் என்பது குருஷ்சாவ் போன்ற ருஷியத் தலைவர்களே ஒப்புக் கொண்ட ஒன்று. உக்ரைன் உள்ளிட்ட ரஷியாவின் நட்பு நாடுகளிலேயே செயற்கை பஞ்சங்களை ஏற்படுத்தியவர் ஸ்டாலின். சோல்ட்ஸ்னீட்ஸின் எழுதிய குலாக் தீபகற்பம் பல கோடி மக்களின் சித்திரவதையைக் காட்டும். முப்பதாண்டுகள் கொடுங்கோலனாக ஆட்சியில் இருந்த ஒருவன், நீண்ட கொடிய யுத்தத்தையும் சந்தித்து வெற்றிபெற்ற சர்வாதிகாரி — மனிதநேயனல்லாத ஒரு கொடூரன் என்பதற்கு புனைவுகள் தேவையில்லை. அதற்கு சரித்திர ஆதாரங்கள் நிறைய இருக்கின்றன.

இந்தக் கவிதை கணவனை இழந்த நடெஸ்டா மண்டெல்ஸ்டம் பார்வையில் புனையப்பட்டிருக்கிறது. கவிஞர் நாடு கடத்தி, சிறையில் தள்ளி, கொல்லப்பட்டதை எண்ணிப் பார்த்து, தற்கால சோவியத் இராணுவ வீரனிடம் நினைவுகூரும்விதமாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதற்குத் தொட்டுக்கொள்ள மேகரா நாட்டின் தியோக்னி (Theognis of Megara)யும் ஸ்விட்சர்லாந்து நாட்டின் ராபர்ட் வால்ஸர் (Robert Walser)ம் துணைக்கு அழைத்துக் கொள்ளப்படுகின்றனர். வதை முகாமில் வாடுவது ஒரு பொருட்டேயல்ல. அவர்களின் தியாகம் அலட்சியப்படுத்தப்படுவதும் அவர்களின் குரல் சரித்திரத்தில் ஒலிக்காமல் பார்த்துக்கொள்ளப்படுவதும் எவ்வளவு பெரிய குமுறலை எழுப்பும்?

இந்த மாதிரி பத்து அசைகள் கொண்ட பா பாடல்களாக தன் படைப்பை உருவாக்குவது குறித்து கய் டவன்பொர்ட்டிடம் கேட்டபோது:

“விகாரப்படுத்துகருவிகள் என்றோ இடர்ப்பாடுகள் என்றோ அவற்றை நான் சொல்ல மாட்டேன். என்னுடைய ஒவ்வொரு படைப்பின் நடையும் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு இருக்கின்றன. ஒரு நாவலை எடுத்தால் அத்தியாயங்களாகப் பிரிக்கிறோம். அத்தியாயங்களில் உரையாடல்களை போதிய இடைவெளிகளில் நுழைக்கிறோம். அதில் ஒன்றில் என்னுடைய பத்திகளை சமநீளமாக்கி புனைந்திருக்கிறேன். செய்யுள் பத்தி என்பது இடம். அதன் மேல் என் கட்டமைப்பு நிகழ்கிறது. என்னுடைய ஒவ்வொரு ஆக்கத்திலும் கட்டமைப்பு வேறு வேறாக அமைக்கிறேன். அதில் ஒரு லயம் கிடைக்கிறது. அது காப்பியத்தின் தாளத்தை நிகழ்த்துகிறது. பிரபந்தத்தின் சீர் அமைப்பை இயைபாக்குகிறது.”

பத்தமடை பாய் பார்த்தால் ஓட்டைகள் இருக்கும். பட்டு மெத்தைகள் எல்லாம் அதனிடம் பிச்சை வாங்க வேண்டும். பாயில் இருக்கும் அந்த இடைவெளிகள்தான் இந்தக் கவிதையை உயர்த்துகின்றன. முறுக்கின் நடுவே ஓட்டையே இல்லாமல் இப்போது மெஷின்கள் பிரதியெடுக்கின்றன. அதைப் போல் இல்லாமல், மணப்பாறை முறுக்கு போல் நட்ட நடுவே ஒரு பெரிய சுழியத்தை வைத்து இந்தக் கவிதையை அதன் மூலச்சுவை கெடாமல் மொழிபெயர்த்திருக்கிறார் நம்பி கிருஷ்ணன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.