தானோட்டிக் கார்கள் – காப்பீடு மற்றும் காப்புப்பிணை

சென்ற பகுதியில் சட்டம் மற்றும் ஒழுங்குமுறைகள் பற்றி அலசினோம். இவை சற்று போரடிப்பது போலத் தோன்றினாலும், நுகர்வோருக்கு மிகவும் முக்கியமானவை. அதைவிட மிக முக்கியமான விஷயம் வாகனக் காப்பீடு (vehicle insurance). தானோட்டிக் கார்களில் காப்பீடு ஒரு மிகப் பெரிய பிரச்னை. சொல்லப்போனால், தொழில்நுட்பத்திற்கு அடுத்தபடியாக, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது வாகனக் காப்பீடு சமாச்சாரம். இதோ ஒரு வருடத்தில், இரு வருடத்தில், ஐந்து வருடத்தில் தானோட்டிக் கார் வந்துவிடும் என்று சொல்லும் அனைவரும் காப்பீடு பற்றி நினைப்பதே இல்லை.

வாகனக் காப்பீடு வாகனத்தில் இல்லையேல், உங்களுக்குக் கார் ஓட்டும் உரிமம் இருந்தாலும், நீங்கள் கார் ஓட்டுவது சட்டப் புறம்பான விஷயம். இதற்குச் சட்டப்படி அபராதம் உண்டு. சரி, ஏன் வாகனக் காப்பீட்டிற்கு இவ்வளவு முக்கியத்துவம்?

எல்லாம் விபத்து நேர்ந்தால், யார் விபத்துச் சேதத்தை ஈடு கட்டுவது (compensation) என்பதை முடிவு செய்த பிறகு, காருக்குப் பழுது பார்ப்பது, மற்றும் பயணிகளின் மருத்துவச் செலவுக்கு யார் பொறுப்பு என்பதை முடிவு செய்யத்தான் இந்தக் காப்பீடு ஏற்பாடு.

ஒரு கார் விபத்து நேர்ந்தால், பல நிகழ்வுகள் இதில் அடங்கும். யாருக்கும் உயிர்சேதம் இல்லை என்னும் பட்சத்தில், கீழ்கண்ட விஷயங்கள் குறைந்தபட்சம் இதில் அடங்கும்;

 1. சம்பந்தப்பட்ட கார்களின் பழுது பார்க்கும் செலவு (repair costs)
 2. கார்கள் பழுது பார்க்கப்படும் காலம் வரை, காரின் ஓட்டுனருக்கு மாற்றுக் கார்
 3. விபத்தில் அடிபட்டவர்களுக்குச் சிகிச்சைச் செலவு
 4. விபத்தில் அதிர்வினால் உருவாகும் கழுத்துச் சுளுக்கிற்குச் சிகிச்சைச் செலவு. இது வாரங்கள், ஏன் சில சமயம், சில மாதங்கள் கூட ஆகலாம்

மிக முக்கியமான விஷயம், எந்தக் கார் மீது தவறு என்பது. முடிவு செய்யப்பட வேண்டும். விபத்தில் சம்பந்தப்பட்ட இரு வாகனங்களிடமும் காப்பீடு இருக்க வேண்டும். தவறு இழைக்கும் வாகனம், இரு வாகனப் பழுது மற்றும் மருத்துவச் செலவுகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதாவது, தவறிழைத்த வாகனக் காப்பீடு, இரு வாகனங்களின் செலவையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இதை வேறு விதமாகச் சொல்லப் போனால், வாகனக் காப்பீடு எதற்காக? விபத்து நேரும் பட்சத்தில் ஓட்டுனர் காப்புபிணையை (driver liability) பூர்த்தி செய்வதற்கே இந்தக் காப்பீடு அமைப்பு உள்ளது. வாகனக் காப்பீடு என்பதை ஒரு காப்பீடு நிறுவனம் நிர்வகிக்கிறது. ஓட்டுனர் மாதா மாதம், காப்பீடு தவணைத் தொகையைக் (insurance premium) கட்ட வேண்டும். ஓட்டுனர் காப்புபிணை என்பது ஒரு நிதி அமைப்பு. மேற்குலகில், சராசரி ஓட்டுனர் காப்புப்பிணை ஒரு மில்லியன் முதல் 5 மில்லியன் டாலர்கள் வரை சகஜம்.

முன் பகுதியில், இந்தியாவில் வாகனங்களின் புதிய மாடலில் உள்ள குறைகளுக்காக, இலவசமாகத் தயாரிப்பாளர்கள் கார்களைத் திரும்ப அழைக்கும் (Automotive recalls) ஒழுங்குமுறை இருப்பதாகத் தெரியவில்லை என்று சொல்லியிருந்தேன். இதற்குக் காரணம், இந்திய சட்ட அமைப்பில், பொருள் காப்புப்பிணைச் (product liability) சட்டங்கள் இல்லை. மேற்குலகில், இவ்வகைச் சட்டங்கள் நுகர்வோரை, தயாரிப்பாளர்களின் தவறுகளிலிருந்து காப்பாற்றுகிறது.

பொருள் காப்பிணைப்பு என்பதில் பலவித விஷயங்கள் அடக்கம். உதாரணத்திற்கு, ஒரு காரில் சரியான கச்சாப் பொருட்களைப் பயன்படுத்தாமல், விபத்து நேர்ந்தால், விபத்துச் செலவுகளைத் தயாரிப்பாளர் ஏற்க வேண்டும். உதாரணத்திற்குக், காரின் எஞ்சின் மூடி எஃகினால் செய்யப்பட்டிருப்பாதாகத் தயாரிப்பாளர் சொல்லியுள்ளார் என்று வைத்துக் கொள்வோம். ஒரு விபத்தில் எஞ்சின் நொறுங்கி, சோதனையில், எஞ்சின் மூடி, அலுமினியத்தால் செய்யப்பட்டது என்று தெரிய வந்தால், வாகனத் தயாரிப்பாளர் நஷ்டஈடு கட்ட வேண்டும். இது போன்ற விஷயங்களில், அந்தக் குறிப்பிட்ட மாடல் வாங்கிய எல்லா நுகர்வோருக்கும் நஷ்டஈடு அழ வேண்டும். சமீபத்திய, வோக்ஸ்வேகன் உமிழ்வு சோதனை ஊழலுக்காகப் பல கோடி டாலர் நஷ்டஈடு நுகர்வோருக்கு வோக்ஸ்வேகன் நிறுவனம், கட்ட வேண்டும்.

1980 –களில், பல ஜப்பானிய கார் நிறுவனங்கள் பெட்ரோல் மிச்சப்படுத்த காரின் முன்னே உள்ள பம்பர்களில் styrofoam நிரப்பி வந்தது ஒரு பெரிய நீதிமன்ற போராட்டமே  நடந்தது. பல அமெரிக்கக் கார்கள், இன்றும் பல பாகங்களை  எஃகினால் உருவாக்குவதால், பாதுகாப்பான வாகனங்கள். நுகர்வோருக்கு பாதுகாப்பா அல்லது பெட்ரோல் செலவா என்று கேள்வி எழுந்தால், எது வெற்றி பெரும் என்று அனைவருக்கும் தெரியும்.

பொருள் காப்புப்பிணையின் (product liability) இன்னொரு அம்சம் தயாரிப்புக் காப்புப்பிணை. காற்றுப் பை (air bags) என்பது ஒரு விபத்து நேரும் பொழுது, பயணிகளைப் பாதுகாக்க உதவும் ஒரு அமைப்பு. வேகமாக (குறிப்பாக, ஒரு வேக எல்லைக்கு மேல்) விபத்து நேர்ந்த  மோதிக் கொண்ட காரின் காற்றுப் பை வெளிவராமல் இருந்தால், இதை ஒரு தயாரிப்புக் காப்புப்பிணை என்றும் கொள்ளலாம்.

மேற்குலகில், பொருள் காப்புப்ப்பிணை மிகவும் சீரியஸான விஷயம். கார்த் தயாரிப்பாளர்கள், இதில் மிகவும் கவனமாக இருப்பார்கள். ஒரு காரின் மாடல் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டால், அதற்கான திட்டத்தில், பல விஷயங்கள் அடங்கும்;

 • காரின் உதிரி பாகச் செலவு
 • காரின் தயாரிப்புச் செலவு
 • காரின் உத்தரவாதப் பழுதுச் செலவு (warranty claims expense)
 • காரின் பொருள் காப்புப்ப்பிணை செலவு
 • காரின் விற்பனைச் செலவு

இதுபோன்ற பல விஷயங்கள் காரின் சில்லரை விலையைத் தீர்மானிக்கின்றன. தானோட்டிக் காருக்கு இப்படிச் செலவினைப் பட்டியலிடுவதில் ஒரு மிகப் பெரிய சிக்கல் உள்ளது.

காப்பீடின் முதல் கோட்பாடு – ஓட்டுனரின் கவனமின்மை.

இதையே பல நீதிமன்றங்கள் ஒரு அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதை driver negligence என்று சட்டத்துறையில் சொல்லுவார்கள். அதாவது, ஒரு விபத்தில் காரின் ப்ரேக் சரியாக வேலை செய்யவில்லை என்று நுகர்வோர் தயாரிப்பாளர் மீது ஒரு வழக்குத் தொடர்ந்தால், தயாரிப்பாளர் என்ன செய்வார்? ஓட்டுனரே, ப்ரேக்கை சரியாகப் பராமரித்தீர்களா? கடைசியாக ப்ரேக்கைப் பராமரித்ததற்குச் சான்று உண்டா? என்று இதை ஒரு driver negligence ஆக மாற்றி விடுவார்கள். அதாவது, காரை ஓட்டுபவரிடம் நிறையப் பொறுப்பு உள்ளது. பெரும்பாலும் விபத்து நேர்ந்தால், ஓட்டுனரே பொறுப்பு.

தானோட்டிக் காரில் மனித ஓட்டுனர் இல்லாத பட்சத்தில், விபத்து நேர்ந்தால் யார் பொறுப்பு?

ஓட்டுதல் என்பது மனிதரிடமிருந்து ஒரு காருக்கு (அல்லது ஒரு எந்திரத்திற்கு) மாறுகிறது. நம்முடைய சட்டங்கள் எதுவும் இதற்கு இடமளிப்பதில்லை.

விபத்து நேர்ந்தால், அது ஒரு தயாரிப்புக் காப்புப்ப்பிணையாகுமா? மனித ஓட்டுனர் உடைய ஒரு கார் தானோட்டிக் கார் மீது மோதினால், யார் பொறுப்பு?  இரு தானோட்டிக் கார்கள் விபத்திற்குள்ளானால், விபத்து நஷ்டத்தை எந்தத் தயாரிப்பாளர் ஏற்பது? ஏற்க வேண்டுமா?

பல கோடித் தானோட்டிக் கார்களை விற்கத் துடிக்கும் எந்த ஒரு தயாரிப்பாளருக்கும் கதி கலங்க வைக்கும் விஷயமிது. பல கோடிக் கார்கள் விற்பது ஒரு விஷயம். பல கோடிக் கார்களின் காப்புப்ப்பிணையைச் சுமப்பது இன்னொன்று.

தானோட்டிக் கார்கள் இன்று முழுத் தானோட்டித் தன்மையோடு (அதாவது SAE மாடலில் ஐந்தாவது தட்டு) வெளி வரத் தயங்குவதற்கு இது ஒரு முக்கிய காரணம்.

என்னதான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும், இவ்வகைச் சட்டச் சிக்கல்கள் இந்தத் தொழில்நுட்பத்தைச் சமூகப் பயனுக்கு வராமல் செய்துவிடுமோ என்று சில நிபுணர்கள் அஞ்சுகிறார்கள்.

பல நாடுகள், பல மாநிலங்கள் என்று மெதுவாக நகரும் சட்ட அமைப்பில், இந்தச் சிக்கலானப் பிரச்னைக்கு முடிவு என்பது குறைந்த பட்சம் இன்னொரு பத்தாண்டுகளுக்கு இயலாத விஷயம். ஒரு ஓட்டுனர் இல்லாமல் பயணிக்க டெஸ்லா போன்ற தயாரிப்பாளர்கள் அனுமதிப்பதில்லை. ஆட்டோ பைலட் வசதியை சோதனை செய்ய ஓட்டுனர்களுக்கு அனுமதி அளித்தாலும், முழுப் பொறுப்பு ஓட்டுனரிடமே. இன்று , இதற்கு விதி விலக்கு என்று எதுவும் இல்லை.

சிலர் இந்தப் பிரச்னைக்குத் தீர்வுகள் சிலவற்றை முன் வைத்துள்ளார்கள். ஆனால், சட்டம் எதுவும் முடிவாகாத நிலையில், தானோட்டிக் கார்களுக்கு ஒன்றுதான் வழி;

 • தகுந்த சட்டம் வரும்வரை, தானோட்டிக் கார்கள் வந்தாலும், அதனை நீங்கள் வாங்கினாலும், முழுப் பொறுப்பு ஓட்டுனர்களிடமே
 • காரில் ஒரு சில நிமிடங்களுக்கு மேல், ஸ்டீயரிங்கை விட்டு காரைச் செலுத்துதல் சட்டத்திற்குப் புறம்பானது
 • அடுத்த 10 வருடங்களில், தானோட்டிக் கார்களினால், உண்மையாகவே போக்குவரத்து நெரிசல் குறைகிறதா என்று கண்காணிக்கப் பட வேண்டும்
 • அதே போல, அடுத்தப் பத்தாண்டுகளில், கார் விபத்துக்கள் தானோட்டிக் கார்களினால், குறைகிறதா என்றும் கண்காணிக்கப்பட வேண்டும்

இந்த தரவுகளை வைத்தே காப்பீடு மற்றும் காப்புப்ப்பிணை முடிவுகளை எடுக்க முடியும்.

பல தொழில்நுட்ப ஆர்வலர்களுக்கு இது போன்ற விஷயங்கள் ஏமாற்றத்தை அளிக்கலாம். ஆனாலும், அவசரப்பட்டு, தொழிலிநுட்ப அடிப்படையில் சட்டங்களை மாற்றுவது ஒரு பொறுப்புள்ள சமூகத்திற்கு அழகில்லை என்பதே உண்மை.

தமிழ்ப் பரிந்துரை

தமிழ்ச் சொற்கள் எல்லோருக்கும் புரிய வேண்டும் என்று சில ஆங்கிலச் சொற்களை கட்டுரையில் பயன்படுத்தியுள்ளேன். கார் சம்பந்தமான பல தொழில்நுட்பச் சொற்கள் தமிழில் அதிகம் புழக்கத்தில் இல்லை. உதாரணம், ஆக்ஸிலரேட்டர் மற்றும் ப்ரேக். இதை தமிழில் மொழிபெயர்த்தால், நம்மில் பலருக்கும் புரியாது. இதனால், இது போன்ற வழக்குச் சொற்களை அப்படியே பயன்படுத்தியுள்ளேன். சில புதிய சொற்களுக்கு நிகரான சில தமிழ்ச் சொற்களை இங்கு பரிசீலனைக்கென முன்வைக்கிறேன்

ஆங்கிலச் சொல் தமிழ்ப் பரிந்துரை
Regulation ஒழுங்குமுறைகள்
Vehicle insurance வாகனக் காப்பீடு
Compensation ஈடு கட்டுவது
Repair costs பழுது பார்க்கும் செலவு
Driver liability ஓட்டுனர் காப்புபிணையை
Insurance premium காப்பீடு தவணைத் தொகை
Automotive recalls தயாரிப்பாளர்கள் கார்களைத் திரும்ப அழைக்கும் ஒழுங்குமுறை
Product liability பொருள் காப்புப்பிணைச்
Air bags காற்றுப் பை
Warranty claims expense உத்தரவாதப் பழுதுச் செலவு
Driver negligence ஓட்டுனரின் கவனமின்மை