சங்கத்தில் பாடாத கவிதை..

உங்கள் வீட்டிற்கு வந்திறங்கிய முதல் டி.வி நினைவிருக்கிறதா? “solidaire” “dynora” போன்ற பெயர்கள் உங்களின் பால்யத்துடன் தொடர்புடையது என்றால் நீங்களும் நானும் வயதிலும் வார்ப்பிலும் எண்ணங்களின் சேர்ப்பிலும் ஓரளவு ஒத்துப் போக வாய்ப்பிருக்கிறது. புதுமணப்பெண் புகுந்த வீட்டில் நுழையும் போது அக்கம்பக்கத்து வீடுகளில் இருந்து ஆர்வம் கொப்பளிக்க அந்தக் காலத்தில் எட்டிப் பார்ப்பார்களே… அதுபோலத் தான் புது டிவியை நாங்கள் எதிர்கொண்டோம். டிவியுடன் ஷட்டர் கதவும், அதைப் பூட்ட ஒரு சாவியும் உடன் எங்களுக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும் அளித்ததோடு மட்டுமின்றி மகிழ்ச்சியையும் மட்டுப்படுத்தியது.  அந்த ஷட்டர் கதவுக்கும் பூட்டுக்கும் அப்படியோர் உபயோகம் நேரும் என்று சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை…டிவி பெட்டி வந்த சில மாதங்கள் இலங்கை இருக்கும் திசைநோக்கி உத்தேசமாக ஆன்டெனாவை இடவலமாய் திருப்பித் திருப்பி, கோடுகள் வழியேயும் நிழல் போல் ஆடும் படங்கள் வழியேயும் தமிழ் “பார்க்க” பிரயத்தனம் செய்ய நேர்ந்தது. பின்னர் ஒரு மாலைப் பொழுதில் “அஜீத் குமார் பாஞ்சா” வெள்ளை ஜிப்பாவில் தமிழகம் முழுவதும் இனி சென்னைத் தொலைக்காட்சி தெரியும் என்று இந்தியில் தெரிவித்து விட்டு போன பின் ஊர் முழுவதும் இலங்கைக்கு ஒன்றும் தூர்தர்ஷனுக்கு ஒன்றுமாய் இரட்டை ஆன்டனாக்கள் மொட்டைமாடிகளை நிறைத்தன…

“ஒளியும் ஒலியும்” காண வேண்டி வெள்ளிக் கிழமை இரவுகளை எதிர்நோக்கி காத்திருக்கத் துவங்கின வீடுகள்… எங்கள் வீடும் ஊரில் ஒன்றுதானே? நாங்களும் ஊருடன் ஒத்து வாழ்ந்தோம்… பாடாவதி மற்றும் மகா பாடாவதி என்னும் இரண்டு வகையான பாடல்கள் ஒளிபரப்புவதை வழக்கமாக வைத்திருந்த சென்னை தொலைக்காட்சி நிலையம், தப்பித் தவறி சில சமயம் அற்புதமான பாடல்களை ஒளிபரப்பிவிடும். அத்தகைய பாடல்கள் பெரும்பாலும் 8.35 போலத்தான் போடப்படும். முதல் ஸ்டான்ஸா முடியும் தறுவாயிலேயே “செய்திகள் தொடரும்” ஸ்லைடு போட்டு மகிழ்ச்சி பலூனில் ஊசி குத்திவிட்டு போய் விடுவார்கள். அவ்வாறு தப்பித் தவறி போடப்பட்ட பாடல் ஒன்றுடன் நான் இத்தனை தூரம் பயணிப்பேன் என்று எண்ணுவதற்கான எந்தவித முகாந்திரமும் இன்றி ஒரு சுபயோக சுபதின வெள்ளியில் போடப்பட்ட பாடல் தான் “சங்கத்தில் பாடாத கவிதை…”. அப்பாடலை வானொலியில் பலமுறை கேட்டிருந்தாலும் முதல்முறை அன்று பார்க்கிறேன். சிலநொடிகளிலேயே “இந்தப் பாடலையா…இப்படியா…பார்க்கும் நமக்கே இப்படி இருக்கிறதே இளையராஜா இதை எப்படி ஜீரணம் செய்தார்…” என்று எண்ணமெல்லாம் தோன்ற, மூன்றாவது சரணத்தில் முதுகை காட்டியபடி நிற்கும் விஜயகாந்தின் தோளருகே வந்து நாயகி ஒரு க்ளோசப் சிரிப்பு சிரிப்பார் பாருங்கள்… துள்ளி எழுந்த நான் ஷட்டரின் பயன்பாட்டை கண்டுகொண்டேன். அதன்பின் பலபாடல்களுக்கு எங்கள் வீட்டில் “ஒளியும்” ஒளிந்து காட்சிபடுத்துதலின் கன்றாவிகள் ஒழிந்து “ஒலியும்” மட்டுமே ஓடும்…அன்றைய‌ அதிர்ச்சிக்குப் பின் “சங்கத்தில் பாடாத கவிதை…” நான் “பார்க்க”வேயில்லை.

ஏராளமான வெள்ளிக்கிழமைகள் கடந்தபின் பால்யத்தின் நூல் பட்டென்று அறுபட வேலை தேடி பம்பாய்க்கு பயணப்பட்டேன் நான். கணிணியின் கண்ணி மெல்ல நம் அடியில் வைக்கப்படத் துவங்கியிருந்த ஆண்டுகள் அவை. நடுத்தர வர்க்கத்தின் கனவுகள் அனைத்தையும் தீர்க்கும் கடவுளாக கம்யூட்டனார் தெரிந்தார். ஒரு சிறிய கம்பெனியில் பணியில் சேர்ந்த நான், கடவுளின் வரம் விரைவில் கிடைக்க வேண்டி “Victoria Terminus” அருகே இருந்த இன்ஸ்டிடுயூட்டில் “ஆரக்கிள்” வழியே அர்ச்சனை செய்வது எப்படி என்று பயிலத் துவங்கினேன். தினமும் இரவு 7- 9 “கிளாஸ்”. அங்கிருந்து ஐந்து நிமிட வேக நடையில் VT ஸ்டேஷன் (தற்போது CST என்றழைக்கப்படுகிறது) . Harbour Lineல் லோக்கல் பிடித்து செம்பூரில் இறங்கி பத்து நிமிடம் நடந்தால் பத்து மணி வாக்கில் வீடு சேரலாம்.  முதல் நாள் அருகில் அமர்ந்து முறுவல் பூத்து மறுநாள் அறிமுகம் ஆகி அடுத்த நாள் நாங்கள் இருவருமே ஒரே ரயிலில் ஏறுகிறோம் என்றறிந்து கிளாஸ் முடிந்து ஸ்டேஷன் வரை இணைந்து நடக்கத் துவங்கி விட்டோம் நானும் சக்கியும்.  “சஜீவ் பாலகிருஷ்ணன்” எப்படி “சக்கி”யானார் என்பது இக்கட்டுரைக்கு உபயோகமில்லாதது.  சக்கி மலையாள வாசனையுடன் தமிழ் பேசக் கூடியவர்.  “நடந்து போவோம்” என்று சொல்வது தவறு. “விரைந்து” என்று சொல்லலாம். ஏனென்றால் சக்கிக்கு காலில் சக்கரம் பூட்டியது போலொரு அவசரம். 8.50க்கே அவர் “அவசர நிலை”யை அடைந்து விடுவார். “காண்டேஷ்வர்” என்னும் இடத்திற்கு அவர் சென்றாக வேண்டும். பெரும்பாலான ரயில்கள் “மான்குர்ட்” வரைதான் போகும். இரவாக இரவாக நீண்ட இடைவெளி விட்டே காண்டேஷ்வருக்கு ரயிலுண்டு. நாள் தோறும் வேலை, கிளாஸ் என்று தோய்வடைந்த பின் VTயிலிருந்து 50 கி.மீ தொலைவு அவர் போகிறார் என்று நினைக்கும் போதே எனக்கு மலைப்பாக இருக்கும். அவரோ, “என் பிரண்டு ஒருத்தன் தினம் கசாராவிலிருந்து வந்து போறான்” என்று சொன்ன பின் என் மலைப்பு ஓடி ஒளிந்து கொண்டது. ஏனென்றால் கசாரா என்பது “மெயின் லைனில்” 100 கி.மீ கடந்து வரும் ஒரு ஸ்டேஷன். ஐம்பது கிலோமீட்டர் தூரம் வரை ரயிலில் தினமும் என்ன செய்வீர்கள் என்றதற்கு மலையாளம், ஆங்கிலம் என பல தினசரிகளையும் ஒரு வாக்மேனையும் பேக்கிலிருந்து பதிலாய் காட்டினார். இரண்டு வாரங்களுக்குள்ளாகவே நாங்கள் எதைப்பற்றியெல்லாமோ பேசி, இசை பக்கம் வந்து இளையராஜாவை தொட்டு விட்டோம்…

பம்பாயின் மழைக்காலம் அச்சமூட்டும் அழகுடையது. நாள் கணக்கில் விடாது அடித்து வெளுக்கும் மழை ஊருக்கு புதிதானவர்களுக்கு சற்று பயமும் ஊட்டும். ஒரு மழைக்காலம் துவங்குவதற்கு முன்னர் தான் எங்கள் “கோர்ஸ்”சும் துவங்கியது. ரெயின்கோட், குடை சகிதமாய் நானும் அவரும் சாலையில் ஓடும் மழை நீர் “சப் சப்”பென்று அடிக்க VT நோக்கி துரித நடை போடுவோம். அத்தகைய ஒரு இரவில் தான் அவர் எனக்கு “தும்பி வா…”வை அறிமுகப்படுத்தினார். பெருமழையின் காரணமாக ரயில்கள் அன்று நேரம் தப்பி இயங்கிக் கொண்டிருந்தன. பாதி தூரம் வரைதான் செல்லும் என்றெல்லாம் ஏதேதோ வதந்திகள் பரவின. மணி 9.30க் கடந்து விட்டது. சக்கி நிலைகொள்ளாமல் பத்து நிமிடத்துக்கு ஒரு தரம் “காயின் பூத்”துக்குள் போய் வீட்டுக்கு பேசி விட்டு வந்தார். அங்கும் வரிசை கூடத் துவங்கியது. அவ்வாறு ஒரு முறை செல்லும் போது தன் பேக்கையும் கொடுத்துவிட்டு உள்ளிருந்த வாக்மேனில் பாட்டையும் கேட்டுக்கொண்டிருக்குமாறு சொல்லிவிட்டு போனார். “தும்பி வா…”வை நெரிசல் மிகுந்த VT ரயில் நிலையத்தில் இரவு வீட்டுக்கு போக முடியுமா என்று தெரியாமல் ஆயிரக்கணக்கானோர் அங்குமிங்குமாய் அலையும் பொழுதில் முதல் முறையாகக் கேட்டேன்…அந்த நெரிசலிலும், சூழலிலும் அப்பாடல் மெதுமெதுவாய் என்னை உள்ளே கரைப்பதை உணர முடிந்தது. தமிழ் பாடலில் இல்லாத ஏதோ ஒன்று மலையாள வெர்ஷனில் இருப்பது துல்லியமாய் தெரிந்தது.

அடுத்த தினம் இரவு மீண்டும் ரயில் நோக்கிய நடையின் போது “ஆட்டோ ராஜா”வில் இப்பாடல் ஏற்கெனவே வந்து விட்டது என்று சொன்ன போது, “இளையராஜா முதலில் இதை மலையாளத்தில் தான் போட்டார். நான் பத்திரிகையில் படித்திருக்கிறேன்” என்று அவர் சொன்னதை என்னால் ஒப்புக் கொள்ள இயலவில்லை. அன்று ரயிலில் அமர்ந்தபின் அவர் பேசத் துவங்கினார். “வாரம் முழுசும் நான் மனைவி மக்களோட பேசறதே இல்லை. என் குழந்தை முழிச்சுக்கிட்டு இருக்கறதையே நான் ஞாயிறு தான் பாக்கறேன். இந்தப் பாட்டு என்னைய வாரம் பூரா அவங்களோட வச்சிருக்கிற மாதிரி இருக்கு. எப்படியும் ரயில்ல போற வரப்ப ஒரு தடவையாவது இதை கேட்டுட்டு போனா வீட்டுல கோபம் சண்டை அண்டாது தெரியுமோ” என்றார். அந்த வயதுக்கு எனக்கு எந்தளவு புரிந்ததோ அதற்குரிய அகலத்தில் தலையாட்டினேன்…பல நாட்கள் அவரின் வாக்மேனில் தும்பி வா கேட்டிருக்கிறேன். நல்ல இசை என்பது இறை நோக்கியே நம்மை செலுத்தும். அதாவது நம்முள் இருக்கும் இறைமையை நீர் கண்ட மண்ணிலிருந்து வரும் முளை போல உயிர்க்க வைக்கும். அதையே தும்பி வா தருகிறது.  இப்பாடலை கேட்கும் பொழுதெங்கும் உலகம் அன்பில் நிரம்பி வழிவது போன்றதொரு நினைப்பு உள்ளில் தோன்றும். அந்த அன்பே நமக்குள்ளும் புகுந்து தளும்புவது போன்று…உள்ளும் புறமும் அன்பால் நிறைந்தால் அது ஒரு வகை ஏகாந்தமில்லையா? அதைத் தான் “தும்பி வா” தருகிறது. மொழி புரியாவிடிலும் இது எப்படி சாத்தியமாகிறது? அதற்கு விடை அதன் “bass guitar”ல் உள்ளது. இப்பாடலின் ஆகச்சிறந்த அற்புதம் அதுவே.. “பிஸியோ தெரபி” கேள்விப் பட்டிருக்கிறோம்…இப்பாடலின் “bass guitar”ரோ நம் உணர்வு நரம்புகளை நீவி விட்டு சாந்தப்படுத்தும் பணியினை செவ்வனே செய்கிறது.  நான் சக்கியிடம், “பண்டத்தே பாட்டுண்ட வரிகள் சுண்டத்தே தேன் துள்ளியாய் என்ற வரிக்கு மலையாளத்தில் என்ன அர்த்தம் வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும். இப்பாட்டு தேன் துளி வழிந்தோடும் பண்டம் போல சுண்டி இழுக்கிறது என்று நான் புரிந்து வைத்துக் கொள்கிறேன்” என்றேன். பகபகவென்று சிரித்தார் அவர்.

மேற்படிப்புககு பம்பாய் விடுத்து, அதையும் முடித்து, பெங்களூரில் வேலைக்குச் சேர்ந்து சில ஆண்டுகளுக்குப் பின் ஒரு தெலுங்கு நண்பர் “நிரீக்ஷணா”வுடன் வந்து நின்றார். “சங்கத்தில் பாடாத கவிதை” மரத்தின் மதிய நேர நிழல் தான் “நிரீக்ஷனா”வில் வரும் “ஆகாசம் ஏனாட்டிதோ…”. அதாவது, “கிளைகளிலும் இலைகளிலும்” நிறுத்தி நிதானமான அசைவு . இளைபாறுவதற்கு உகந்தது. இந்த வடிவத்தில் வயலினுக்கு ஓய்வு. இளையாராஜா காட்டும் ஸ்வர வரிசையில் காற்று தன் கால் வைத்து நடந்தால், அது கால் மாற்றி கால் வைக்கும் பொழுதாய் தபேலாவும், இடைப்பட்ட பொழுதின் இணைப்பாய் கிடாரும் ஒன்றை ஒன்று நகர்த்தி செல்லுவதே இப்பாடல். ஒரே பாட்டுக்கு மூன்று மொழியில் மூன்று வடிவங்களா என்று ஆச்சரியப்பட்டு அடுத்த முறை மதுரை சென்ற போது என் ஆஸ்தான கேசட் கடை முதியவரிடம் குறிப்பிட்ட போது, அவர், “இதென்ன ஆச்சரியம்” என்பது போல், “தம்பி, ஏற்கெனவே தமிழ்லயே இது இன்னொரு பாட்டாய் வந்திருச்சு…” என்ற படி “கண்ணே கலைமானே” படத்தில் (ஆம். பாட்டல்ல. படத்தின் பெயர்) “நீர்வீழ்ச்சி தீ மூட்டுதே” என்ற பாடலை தேடி ஓட விட்டார். ஆஹா…”ஆகாசம் ஏனாட்டிதோ…”வும் “நீர்வீழ்ச்சி..”யும் ஒன்றுக்கொன்று கண்ணாடி…! ஒருவேளை சங்கத்தில் பாடாத கவிதை படமாக்கப்பட்ட விதத்தினால் தூக்கம் தொலைத்த இளையராஜா “நீர்வீழ்ச்சி”யை உருவாக்கி நிம்மதி அடைந்தாரோ என்னவோ…

சரி இது தான் சங்கத்தில் பாடாத கவிதையின் சரித்திரம் போலும் என்று நினைத்து கொண்டிருக்கையில், சில ஆண்டுகள் கழித்து “பா” வந்தது. இப்போதோ “கம் சும் கம்” கும்மென்று இருப்பதாக அலுவல‌கத்தில் இருக்கும் நிறைய இந்திக்காரர்கள் இளையராஜாவை புகழ்ந்து தள்ளிக் கொண்டிருந்தனர்.எனக்கோ அப்பாடல் செயற்கை தன்மை கொண்டதாக இருப்பது போலத் தோன்றியது. அவர்களிடம், “கால இயந்திரம் என்பது மட்டும் சாத்தியம் என்றால் உங்கள் அனைவரையும் என்பதுகளுக்குள் ஏறச்சொல்லி மதுரை வீதிகளின் தேநீர் கடைகள் முன்பு நிற்கச் செய்து இளையராஜாவை பருகச் செய்திருப்பேன்…” என்று சொல்ல நினைத்தேன்…ஆச்சரியங்கள் தொடர்ந்தன. “பா” பற்றிய உரையாடலின் போது ஒரு பெங்காலி நண்பர், “இது ஏற்கெனவே வந்த இளையராஜாவோட இந்திப் பாட்டோட மாற்று வடிவம்” என்றார். நீங்கள் அந்தப் பாட்டை காட்டினால் தான் நம்புவேன் என்றேன் நான். “அவுர் ஏக் பிரேம் கஹானி” என்றொரு படமாம். அதில் “மண்டே தோ…” என்றொரு பாடல். புகை பிடிக்கவும் நீர் பிரிக்கவும் பலர் எழுந்து போவார்களே அதைப் போன்றதொரு சந்தர்ப்பம் தரும் பாடல். “சங்கத்தில் பாடாத கவிதை” வடிவங்களில் கடைசி இடம் இந்த இந்தி வடிவத்திற்குத்தான்…ஆனாலும் யானை படுத்தால் குதிரை மட்டம் என்பார்களே அதற்கும் தகுந்த “மட்டத்தில்”தான் இப்பாடல் உள்ளது என்பதையும் நினைவில் வைக்க வேண்டும்.

மிகச் சமீபத்தில்…ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு யூடியூப் சுட்டி வழியே மீண்டும் ஒரு ஆனந்த அதிர்ச்சி…”தும்பி வா”வை, அதன் இயல் வடிவத்தையே அசரடிக்கும் வண்ணம் வயலினில் வார்த்தெடுத்த வடிவம் சிக்கியது. இதை கேட்ட பின், வயலின் பயிலாத வாழ்வென்ன வாழ்வு என்று நமக்குத் தோன்றக் கூடும் வயலினை எடுத்து நாமும் இதை வாசிக்க முடியாதா என்று நமநம என்று கை அரிக்கவும் கூடும்.

பாற்கடலை கடைந்து அமுதம் எடுத்தாக புராணங்களின் வழி அறிந்ததுண்டு. இப்பா(ட)ற்கடல் நாற்பது வருடங்களாக கடையப்பட்டு கொண்டே இருக்கிறது. செவி வழியே உட்கொள்ளும் நம்மை அசுர குணங்களில் இருந்து தேவராக மாற்றும் சுவையும் பக்குவமும் இந்த அமுதத்திற்கு உண்டு என்று சொன்னால், இது புராணமல்ல. எதார்த்தம். ஏகாந்தத்தின் உச்சிக்கு இறைமையின் பண்புகளுக்குரிய பயிற்சியும் கொடுத்து நம்மை எடுத்துச் செல்லும் எளிய வகை எதார்த்தம்

3 Replies to “சங்கத்தில் பாடாத கவிதை..”

  1. Thank you for sharing your experience on ‘Thumbi Vaa’ song. I had collected all the 7 versions or variations of the song.

    The instrumental version that you are mentioning at the end, Raja-sir performed in Italy in 2004, it is titled ‘Mood Kaapi’ and it runs for about 8mins. There is an interesting story that was shared by Yugi Sethu how Raja-sir went about performing live in Italy.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.