எம். எல். – அத்தியாயம் 7

பஸ் ஸ்டாண்ட் பக்கம் ஒரே நெருக்கடியாக இருந்தது. வெளியூர்களிலிருந்து வருகிற தனியார் பஸ்களும், டவுன் பஸ்களும் குறுக்கும் நெடுக்குமாக நின்றன. ரிக்‌ஷாக்காரர்கள் வேறு வரிசையாக ஒருத்தர் பின்னால் ஒருத்தராக ரிக்‌ஷாவைத் தள்ளிக்கொண்டு சவாரிகளை ஏற்றிக்கொண்டிருந்தார்கள். பீட்டர் அங்கே போய்ச் சேர்ந்ததும் திருமுருகன் ட்ரான்ஸ்போர்ட் பஸ் எங்கே நிற்கும் என்று விசாரித்தான்.

“கூடல் அழகர் கோவிலுக்குப் பக்கத்திலே போங்க. வீனஸ் எலக்ட்ரிக்கல்சு தாண்டி நிற்கும்” என்று ஒரு வெற்றிலைபாக்குக் கடைக்காரர் சொன்னார். அவன் ஏறி வந்த ரிக்‌ஷாக்காரரிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு வேகமாக கூடலழகர் பெருமாள் கோவிலுக்குப் போகும் பின்புறப் பாதையை நோக்கிப் போனான். நடக்கவே முடியவில்லை. ஒரு பக்கம் சாக்கடைத் தண்ணீர் வேறு குட்டையாகத் தேங்கிக் கிடந்தது. குடலைப் பிடுங்குகிற நாற்றம். தெருமுனையைத் திரும்பியதும் சற்றுத் தொலைவில் திருமுருகன் ட்ரான்ஸ்போர்ட் என்று எழுதிய பஸ்ஸின் பின்புறப் பலகை தெரிந்தது. அந்தக் கடைக்காரர் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் என்று சந்தோஷமாக இருந்தது.

அப்போதுதான் பஸ் வந்திருக்க வேண்டும். பிரயாணிகள் பைகளுடன் இறங்கிக் கொண்டிருந்தனர். பீட்டர் கால்களை எட்டிப்போட்டு நடந்தான். அவ்வளவு காலையிலேயே வெயில் சுள்ளென்று அடித்தது. முன்பக்கமும் முதுகுப் பக்கமும் சட்டை வியர்வையில் பனியனோடு பனியனாக ஒட்டிப்போயிருந்தது. சட்டை, பனியனை எல்லாம் கழற்றிவிடலாம் போலிருந்தது. பஸ்ஸின் அருகே போனதும் சத்தமாகவும் இல்லாமல், மெதுவாகவும் இல்லாமல் ஒரு கமறலான குரலில் இறங்கிக்கொண்டிருந்தவர்களைப் பார்த்து “சாரு மஜும்தார்…” என்று இரண்டு தடவை குத்துமதிப்பாகக் கூப்பிட்டான்.

கூப்பிட்டுவிட்டு வேறு எங்கோ பார்ப்பது போல் தலையைத் திருப்பிக்கொண்டான். சற்று மாநிறமாகவும் குள்ளமாகவும் இருந்த ஒருவர், எங்கேயிருந்து குரல் வந்தது என்று திரும்பிப் பார்த்தார். அவர்தான் சாரு மஜூம்தார் என்று பீட்டர் முடிவு செய்தான். அவருடன் உயரமான, கருத்த நபரும் பக்கத்தில் நின்றிருந்தார். அவன்தான் கிட்டன். கிட்டனிடம் சாரு மஜும்தார், “சம்படி கால் மீ” என்றார். கிட்டனுக்கும் யாரோ ‘சாரு மஜும்தார்’ என்று கூப்பிட்டது கேட்டது, சாரு மஜும்தார் கூறியது பீட்டருக்கும் கேட்டது. சந்தேகமே இல்லை, அவர்தான். நல்லவேளையாக பஸ் அப்போதுதான் வந்திருந்தது. அதனால்தான் கண்டுபிடிக்க முடிந்தது. சிறிது நேரமாகியிருந்தாலும் அவர் எங்காவது போயிருப்பார். பிறகு கண்டுபிடிப்பதும் கஷ்டம். கம்யுனிஸ்ட் கட்சி ஆட்களிடம்தான் விசாரிக்கவேண்டியிருக்கும். இவ்வளவு பெரிய ஊரில் அவரை எங்கே என்று தேடுவது? அவருடைய போட்டோவும் இல்லை. எப்படியோ வேலை சுலபமாக முடிந்ததே என்று சந்தோஷப்பட்டான்.

நாவெல்லாம் வறண்டது. ஒரு செம்புத் தண்ணீர் குடித்தால்தான் தாகம் அடங்கும் போலிருந்தது. வியர்வையில் முதுகில் ஊறலெடுத்தது. ஒரு சர்பத் சாப்பிட்டால் தாகத்திற்கும் வெயிலுக்கும் இதமாக இருக்கும். சாரு மஜும்தாரும் கிட்டனும் வலதுபுறமாகத் திரும்பி திண்டுக்கல் ரோட்டுச் சந்திப்பை நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்குப் பின்னால் பீட்டரும் போய்க்கொண்டிருந்தான். மஜும்தார் ஒரே ஒரு துணிப்பையைத் தான் தோளில் போட்டிருந்தார். விசுவிசுவென்று வேகமாக நடந்தார். அவருடைய வேகம் பீட்டருக்கு ஆச்சரியமாக இருந்தது.

பீட்டர் அவரைப் பற்றி கேள்விப்பட்டிருந்தான். பத்து நாட்களுக்கு முன்னால் ஆபிசில் நடந்த ரெவியு கூட்டத்தில் அவரைப் பற்றி பேச்சு வந்தது. சென்ட் ரல் இண்டலிஜென்ஸிலிருந்து அவர் கேரளாவில் இருப்பதாவும், தமிழ்நாட்டிற்கும் அவர் வரலாம் என்றும் தகவல் வந்திருந்தது. எஸ்.பி. அதை எஸ்.பி. சொன்னார்.

அவர் “எய்ட் டாக்குமெண்ட்ஸ்” என்ற பேரில் பிரசுரங்களை எழுதியிருப்பதாகவும் சொன்னார். அவை எல்லாம் ஆயுதப் புரட்சியைத் தூண்டுபவை. ஒருவேளை அந்தப் பிரசுரங்களை அவர் தன்னுடன் எடுத்து வந்திருக்கலாம் என்றார். அந்த ரெவியு கூட்டத்தில் சி.பி.ஐ., சி.பி.எம். கட்சிகளில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள், யூனியன் லீடர்களையும் கண்காணிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

சர்க்கிள் ஆபிஸில் கூட்டம் போட்டால் கொசுக்கடியிலும் புழுக்கத்திலும் அகப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான். அவ்வளவு பெரிய அறைக்கு இரண்டே இரண்டு ஃபேன்கள்தான் இருந்தன. அது நாயக்க மன்னர்கள் காலத்தில் கட்டிய பழைய கோட்டையின் ஒரு பகுதி. சுவர்களெல்லாம் கற்களால் ஆனவை. சுண்ணாம்புக் காளவாசலுக்குள் போன மாதிரி இருக்கும். இருக்கிற இரண்டு ஃபேன்களில் ஒரு ஃபேனின் கீழே டி.எஸ்.பி.யும், ஏ.எஸ்.பி.யும் உட்கார்ந்திருப்பார்கள்.

கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது சங்கரபாண்டி எழுந்து, “ரஷ்யாவிலிருந்து வருகிற மார்க்ஸ், லெனின் புஸ்தகங்களை எல்லாம் தடை செய்யமுடியாதா?” என்று கேட்டான்.

“அதைத் தடை பண்ணினா?…” என்று எஸ்.பி. எதிர்க் கேள்வி கேட்டார்.

அந்தப் புஸ்தகங்கள்லேதான் சார் புரட்சியைப் பத்தி, ஆயுதப் புரட்சியைப் பற்றி எல்லாம் எளுதியிருக்கு சார். அந்தப் புஸ்தகங்களெல்லாம் தாராளமா நியூ செஞ்சுரி புத்தகக் கடையிலே பப்ளிக்கா விற்குது சார்…”

“வெவரந்தெரியாம பேசாதே… அதெல்லாம் நாம ஸ்டேட் கவர்மெண்ட் ஒண்ணும் பண்ண முடியாது. சென்ட்ரல் கவர்மெண்டுக்கும் ரஷ்யாவுக்கும் சுமுகமான உறவு இருக்கு. கொடுக்கல் வாங்கல் எல்லாம் இருக்குது. ரஷ்யா இந்தியாவோட நட்பு நாடுப்பா… அதையெல்லாம் தடுக்க முடியாதுப்பா…” என்றார் டி.எஸ்.பி.

“நாமல்லா கெடந்து கஷ்டப்பட வேண்டியிருக்கு. அந்தப் புத்தகங்களைப் படிச்சிட்டுதானே யூத்தெல்லாம் கட்சி சேத்துக்கிட்டு அலையுதாங்க…”

“அதைக் கண்காணிக்கறதுதான் அப்பா நம்ம வேலை”

அன்று ரெவ்யூ கூட்டம் முடியும்போது எட்டு மணிக்கு மேலாகி விட்டது. ஆபீஸிலிருந்து செல்லத்தம்மன் கோவில் வரை நடந்தே வீடு போய்ச் சேரும்போது பரமேஸ்வரி டாக்கீஸில் இங்கிலீஷ் படம் முதல் ஷோவே விட்டுவிட்டான்.

மேலப்பெருமாள் மேஸ்திரி வீதியும் திண்டுக்கல் ரோடும் சந்திக்கிற முனையில் இருந்த ஒரு ஹோட்டலுக்குள் சாரு மஜூம்தாரும் கிட்டனும் நுழைந்தனர். ரொம்ப சுமாரான ஹோட்டல்தான். அவர்கள் இருவரும் வாஷ் பேசினில் வாய் கொப்பளித்து முகத்தையும் அலம்பிக் கொண்டனர். ஒரு மேஜையில் எதிரெதிரே இருவரும் அமர்ந்து கொண்டனர். பீட்டரும் டீ குடிக்கலாம் என்று நினைத்தான். கல்லாவுக்கு எதிரே இருந்த சேரில் பீட்டர் உட்கார்ந்து கொண்டான். சர்வர் உடனே வந்து விட்டான். “ஒரு டீ…” என்றான் பீட்டர். “டீ இல்லை. காபிதான்…” என்றான் சர்வர். “சரி, ஒரு காபி கொண்டு வாங்க…” என்றான்.

சாரு மஜூம்தார் எதிரே இருந்த கிட்டனிடம் “வாட் டூ யு வாண்ட் கிட்டன்?” என்றார். ஏதோ சாப்பிடுவதைப் பற்றித்தான் கேட்கிறார் என்பதைக் குத்து மதிப்பாகப் புரிந்து கொண்ட கிட்டன், “இட்லி…” என்றான். சாரு மஜூம்தார், ” ஐ வாண்ட் தோசா…” என்றார். கிட்டன் சிரித்தான். சர்வரிடம், “எனக்கு இட்லி, அவருக்கு தோசை” என்றான். சாரு மஜூம்தார் சட்டைப் பையிலிருந்து பீடியை எடுத்து வாயில் வைத்தார். சட்டைப் பையிலிருந்து தீப்பெட்டியை எடுத்தார். கிட்டன் பதறிப் போனான். “நோ, நோ பீடி, சிகரெட்…” என்றான். பீடி குடிக்கக்கூடாது என்று சைகையும் செய்தான். சாரு மஜூம்தார் சிரித்துக்கொண்டே பீடியையும் தீப்பெட்டியையும் தோள் பையினுள் போட்டார்.

பீட்டர் காபியைக் குடித்து விட்டு, சாரு மஜூம்தாரும் கிட்டனும் சாப்பிட்டு முடிக்கும்வரை சுவரில் மாட்டியிருந்த படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தான். இரண்டுபேரும் பில்லை எடுத்துக் கொண்டு கல்லா பக்கம் போனார்கள். அதற்கு முன்னால் பீட்டர் எழுந்து தன் காபிக்குப் பணம் கொடுத்தான். 25 பைசாதான் காபி. ஆனால் அவனிடம் சில்லறை இல்லை. ஒரு ரூபாயைக் கொடுத்து மீதியை வாங்கிக்கொண்டு, கடைக்குக் கீழே பிளாட்பாரத்தில் நின்று கொண்டான்.

சாரு மஜூம்தார் பில் பணத்தைக் கொடுத்து விட்டு கல்லாவில் இருந்தவரிடம் “வேர் ஈஸ் த கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆபீஸ்?” என்று கேட்டார். கல்லாவில் இருந்தவருக்கு ஆங்கிலம் தெரியவில்லை.

“என்னது?…” என்றார்.

“கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆபீஸ்?” என்று சுருக்கமாகக் கேட்டார் சாரு மஜூம்தார்.

“கம்யூனிஸ்ட் கட்சி ஆபீஸா?”

“கிட்டன், “ஆமா,” என்றார்.

“வேற ஒண்ணுமில்லே… இப்பிடியே வலது கைப்பக்கம் திரும்பி அந்தத் தெருவிலேயே போங்க. டவுன் ஹால் ரோடு வரும். அதிலே வடக்கே பார்க்கப் போங்க. ஒரு தெப்பக்குளம் வரும். அது பக்கத்திலே மண்டையன் ஆசாரிச் சந்து இருக்கும். அங்கேதான் கம்முனிஸ்ட் கச்சி ஆபீசு இருக்குது,” என்றார்.

சாரு மஜூம்தார் கிட்டனைப் பார்த்து, “டூ யூ நோ த அட்ரஸ்?” என்று கேட்டார். கிட்டன் அவரிடம், “வாங்க விசாரிச்சுக்கிட்டு போயிரலாம்…” என்றான். பீட்டர் அவர்கள் கண்ணில் படாமல் சற்றுத் தள்ளி நின்று கொண்டான். சாரு மஜூம்தாரும் கிட்டனும் மேலப்பெருமாள் மேஸ்திரி வீதியில் நடக்க ஆரம்பித்தனர். பீட்டர் அவர்களைப் பின்தொடர்ந்தான்.

(தொடரும்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.