உடல் தடிப்பு- தவிர்ப்பும் நிவர்த்திப்பும்

எடை கூடுவதைத் தவிர்ப்பதற்கு இரண்டு முக்கியமான வழிகள், உணவின் அளவை குறைப்பதின் மூலம் கலோரியின் எண்ணிக்கையை குறைப்பதும், உடற் பயிற்சி மூலம் ஏற்கனவே சேகரித்த கலோரிகளை செலவழிப்பதுமேயாகும். உடல் எடை கூடியவர்கள் இதன் மூலம் கூடிய எடையை இழந்தாலும், இவ்விரண்டையும் தொடர்ந்து கடை பிடிப்பது கடினமாயுள்ளதாலும் முன் சொன்னது போல் இதை தடுத்து நிறுத்தும் உட்சக்திகளின் வேலையினாலும் பெரும்பான்மையோருக்கு நிரந்தர எடையிழப்பு என்பது ஒரு கானல் நீராகவே உள்ளது.

சமீபத்தில் நான் கேட்டது: இங்கிலாந்தில் 40லிருந்து 60 வயது உள்ளவர்களிடையே மாதத்தில் ஒரு நாளாவது 10 நிமிடங்கள் விரைவாக நடப்பவர்களின் எண்ணிக்கை 40 சதவிகிதமே என்ற ஒரு அறிக்கை. இருந்தும், சிறிதளவு எடையிழப்பிற்கும் பலன்கள் உள்ளன. 5% எடையிழப்பு இன்சுலினுடைய தாக்கத்தை அதிகரிப்பதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைகிறது. ஒரு வருடத்தில் 8.6% எடையிழப்பை அடைந்தவர்களிடம், இரத்த அழுத்தம், கொழுப்பின் அளவு, மூன்று மாதத்திய சர்க்கரை அளவு ஆகியன எல்லாமே குறைந்து காணப்படுகிறது.

சர்க்கரை வியாதிக்கான அறிகுறிகள் உள்ள நபர்கள் 2.8 வருடங்களில் 5.6 கிலோ எடையை குறைத்தால் சர்க்கரை வியாதி ஏற்படுவதை 58% குறைக்க முடிகிறது. இவர்களை 10 வருடங்கள் தொடர்ந்து கவனித்ததில், மீண்டும் எடை கூடினாலும், இவ்வியாதி 34% குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது. அறுவை சிகிச்சையின் மூலம் 16-32% எடையை இழந்தவர்கள் சர்க்கரை வியாதியிலிருந்து தற்காலிக நிவாரணம் அடைகிறார்கள். இவ்வாறு உடற் தடிப்போடு சம்பந்தப்பட்ட பல வியாதிகள் எடையிழப்பின் மூலம் நிவர்த்தியடைந்தாலும், சில வியாதிகள் தொடர்கின்றன. அவை- தூக்கத்தில் ஏற்படும் மூச்சடைப்பு(ஸ்லீப் அப்னியா), மாரடைப்பு, இரத்த குழாயடைப்பு, மனோவியாதி. இவற்றிற்குச் சிகிச்சையைத் தொடர வேண்டியுள்ளது.

உடற்பருமனாயுள்ளவர்களுக்கு எவ்விதமான பரிசோதனைகளை செய்ய வேண்டும்?

இன்சுலின் ஆற்றல் குறைந்துள்ளதா என்று கணிக்க வேண்டும். வயிற்று பகுதியிலும் உடம்பின் மேற்பாகத்திலும் அதிக கொழுப்பு சேர்ந்திருந்து இன்சுலின் ஆற்றலும் குறைந்திருந்தால் அதை மெட்டபாலிக் சின்ட்ரோம் என்று மருத்துவம் சொல்கிறது. பி.எம்.ஐ 30 க்கு மேலுள்ளதா என்றும், இடைச் சுற்றளவு அதிகமாயுள்ளதா என்பதையும் கணிக்க வேண்டும். மேலும் தனி நலம், குடும்ப நலம், மனோநலம், உடற் பயிற்சியளவு, உணவின் தரம், உண்ணும் பழக்கங்கள் ஆகியவற்றையும் கேட்டறிய வேண்டும்.

இதற்கு அளிக்கும் சிகிச்சைகள் உடற் தடிப்பின் அளவையும், இதனுடன் சம்பந்தப்பட்ட நீண்ட நாள் பிணிகளையும், செயற்திறன் வரையறுப்பையும் பொறுத்துள்ளவை. வாழும் முறையை மாற்றியமைத்தல், எடையை குறைக்கும் மருந்துகள், அறுவை சிகிச்சை மூலம் இரப்பையைச் சுருக்குதல் என்ற மூன்று வகை சிகிச்சை முறைகளை மருத்துவம் அளிக்கிறது.

உணவுக்கட்டுப்பாடும் தேகப்பயிற்சியுமே சிகிச்சையின் முதல் படி. நடத்தை மாற்றலுக்கு தீவிர சிகிச்சை தேவைப்படுவதால், குடும்ப மருத்துவர்களால் இப்பொறுப்பை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. மேலெழுந்தவாரியாக இவர்கள் கொடுக்கும் ஆலோசனைகள் பயனளிக்கத் தவறுவதால் மருத்துவர், நோயாளி இருவருமே ஏமாற்றமடைகிறார்கள்.

பெண்கள் ஒரு நாளைக்கு 1200-1500 கலோரியளவும், ஆண்கள் 1500-1800 கலோரியளவுமே உண்ண வேண்டும். இந்த உணவுத் திட்டத்தையும் தேகப்பயிற்சியையும் கடைப்பிடிக்கிறார்களா என்பதை 6 மாதங்கள்வரை குறைந்த பட்சம் 14 முறை நேரடிப் பார்வையிட வேண்டும்.இதற்கு ஊடே, அவர்களுடைய சூட்டிகைப் பேசி(ஸ்மார்ட் போன்) யைப் பயன்படுத்தி உணவையும், தேகப்பயிற்சியையும், எடை குறைப்பையும் வாரத்திற்கொரு முறை கண்காணிக்கலாம். வெயிட் வாட்சர்ஸ் போன்ற வியாபார நிறுவனங்களையும் மருத்துவர்கள் மேலை நாடுகளில் பரிந்துரைக்கிறார்கள். தொலைபேசி, வலைத்தளம் ஆகியவை மூலமாகவும் உடற் பருமனாயுள்ளவர்கள் ஆலோசனை பெறுவதற்கு வழியுள்ளது. எடை குறைவது நின்ற பின்னும் எடை அதிகரிக்காமலிருக்க இக்கருவிகளைத் தொடர்ந்து பயன்படுத்த வேண்டியது மிக அத்தியாவசியம் . ஆனால், எடை குறைவது தொடர்வில்லையே என்று மனமிழந்து இந்த ஊக்கக் கருவிகளைபலர் துண்டித்து விடுகின்றனர். மீண்டும் எடை கூடுவதற்கு இது ஒரு காரணமாகக் காட்டப்படுகிறது.

எடை குறைப்பு மருந்துகள்: பென்டர்மின் எனும் மருந்துதான் 1959லேயே எடை குறைப்பிற்காக மூன்று மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்து கொள்ள அனுமதிக்கப்பட்டது. அமெரிக்காவில் இதற்காகக் கொடுக்கப்படும் மருந்தாக அனுமதி பெற ஒரு வருட காலத்திற்குத் தொடர்ந்து எடுத்து கொள்வதினால் ஒரு விதமான அபாயமும் இல்லை என்று நிரூபிக்க வேண்டும். மேலும், மருந்தில்லாத மாத்திரையை எடுத்துக் கொள்பவர்களோடு ஒப்பிடும்போது 35-50% அதிகமாக மருந்தினால் எடை குறைய வேண்டும். சமீப காலத்தில் 5 புதிய மருந்துகள்-மூன்று தனி; இரண்டு கலவை- உபயோகத்திற்கு வந்துள்ளன. இம்மருந்துகளை வாழ்முறை மாற்றம், தேகப் பயிற்சி ஆகியவற்றோடு சேர்ந்து எடுத்து கொள்வதின் மூலம் ஒரு வருடத்தில் 5.8 கிலோவிலிருந்து 10.2 கிலோ வரை எடையிழப்பு சாத்தியமாகிறது அது மட்டுமல்லாமல் சர்க்கரை வியாதியையும் கட்டுப்படுத்துகிறது. சக்தி வாய்ந்த இம்மருந்துகளை வைத்தியர்களும் வேண்டிய நபர்களுக்கு போதிய அளவு கொடுப்பதில்லை; நோயாளிகளும் மிதமான எடையிழப்பினால் உற்சாகமிழந்து மருந்தை நிறுத்தி விடுகின்றனர். உயர் விலையும் ஒரு காரணமாகக் காட்டப்படுகிறது. இரத்தக் கொதிப்பு, சர்க்கரை போன்ற வியாதிகளுக்காக எடுத்து கொள்ளும் மருந்துகளைப் போல் இம்மருந்துகளைத் தொடர்ந்து எடுத்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மருத்துவர்கள் நோயாளிகள் இருவரிடையுமே தற்போது இல்லை என்றே சொல்ல வேண்டும்.

அறுவை சிகிச்சை

இருபத்தோராம் நூற்றாண்டின் முதல் பத்து வருடங்களில் பி.எம்.ஐ 40க்கும் மேலானவர்கள் எண்ணிக்கை 70% அதிகரித்துள்ளது. இதற்காகச் செய்யப்படும் அறுவை சிகிச்சையும் இந்த பத்து ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. மூன்று வகைச் சிகிச்சைகள் புழக்கத்தில் உள்ளன. முதல் வகை இரைப்பையை வெளிப்புறத்திலிருந்து கட்டுவதாகும் (காஸ்ட்ரிக் பாண்டிங்) . இதன் பலன் குறைவாக உள்ளதால் இச்சிகிச்சையை பெறுபவர்களின் எண்ணிக்கை சமீபத்தில் வெகுவாகு குறைந்துள்ளது. இரப்பை மாற்று வழி (காஸ்ட்ரிக் பைபாஸ்) இரப்பை நீக்குதல் (காஸ்ட்ரெக்டமி ) என்ற இரு அறுவை சிகிச்சை முறைகளே அதிக அளவில் செய்யப்படுகின்றன. தற்சமயம், அறுவை சிகிச்சை மூலமே உடற் தடிப்பிற்கும் அதன் பக்க விளைவுகளான சர்க்கரை வியாதி போன்றவைகளுக்கும் நீண்ட கால நிவாரணம் பெற இயலுகிறது.

சிகிச்சைத் தடைகள்

  • சிகிச்சை முறைகளைத் தொடர்ந்தளிப்பதில் மருத்துவர்கள் அக்கறை காட்டாமலிருத்தல்
  • உணவுக் கட்டுப்பாடு, உடற் தடிப்பு சிகிச்சை முறைகளில் மருத்துவர்களுக்கு போதிய பயிற்சியின்மை
  • சிகிச்சை முறைகளுக்காகக் காப்பீடு திட்டங்கள் ஒதுக்கும் பண அளவு பற்றாக்குறை
  • வாழ்க்கை முறைகளை மாற்றியமைக்க உதவும் சமுதாயக் கூடங்களின் குறைந்த எண்ணிக்கை
  • சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர்களிடம், தேவைப்படும் நோயாளிகளை தேர்ந்தெடுத்து அனுப்பாமல் இருத்தல்

இது போன்ற பல காரணங்களினால் 20-21ம் நூற்றாண்டுகளின் மிக முக்கியமான வியாதியை கட்டுப்படுத்த முடியாமல் நவீன மருத்துவம் தவிக்கின்றது என்றால் மிகையாகாது.

ஆதாரம்

  1. Mechanisms, Pathophysiology , and management of Obesity by Stephen B. Heymsfield, M. D., et al NEJM 2017; 376; 254-66
  2. Health Effects of Overweight and Obesity in 195 countries: NEJM;2017;377;13-27

(குறிப்பு: NEJM என்பது New England Journal of Medicine என்கிற சஞ்சிகை)