முகப்பு » கட்டுரை, மகரந்தம், விவாதக் களம்

மகரந்தம்


அச்சுப் பத்திரிகைகளின் அந்திம காலமா இது?

அச்சுப் பத்திரிகைகளின் அந்திமக் காலம் நெருங்கி விட்டது என்று சில வருடங்களாகச் சொல்லிக் கொண்டே இருந்தார்கள். ஆனால் சில பத்திரிகைகள் மூடினவே தவிர பெரும்பாலானவை இன்னும் ஓடிக் கொண்டு இருக்கின்றன. செய்தித்தாள்களில் பல க்ஷீணித்த நிலையில் இருப்பதால் யாராவது புரவலர் வந்து முட்டுக் கொடுத்தாலொழிய நீடிப்பது கடினம் என்று பிரலாபித்தபடி ஏதோ மூச்சிழுத்துக் கொண்டு பிரசுரமாகின்றன. பெரும் செய்தித்தாள்கள் என்று கருதப்பட்ட நியூயார்க் டைம்ஸே சில முறை இறுதி நிலையில் இருப்பதான தோற்றம் கொடுத்து, பின் வெவ்வேறு முதலீட்டாளர்களின் உதவியோடு தள்ளாடி நின்று விட்டு, பல உள்ளடக்க/ உருவ மாறுதல்கள் கொணர்ந்த பிறகு, சமீபத்தில் ஒரு வாரியாக வலைத்தளத்திலேயே கூட ஓரளவு வருமானம் கிட்டுவதால் ஓடிக் கொண்டிருக்கிறது.

இதே நிலை லண்டன் டைம்ஸ், த கார்டியன் போன்ற ‘உலகப் பத்திரிகைகளுக்கும்’ நேர்ந்தது. அவையும் சமாளித்து நிற்கின்றன. ஆனால் அமெரிக்காவில் பல மாநிலங்களில் நிறைய செய்தித்தாள்கள் மூடி விட்டிருக்கின்றன. எஞ்சியவற்றில் பலவும் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டு, வலையாக ஓரளவு நின்று பிரசுரமாகின்றன. ஆனால் முன்னளவு உலகளாவிய நிருபர் பட்டாளங்கள் இல்லை, அத்தனை தோண்டித் துருவி ஆராய்ந்து அலசி எழுதும் அறிக்கைகள் இல்லை, நிறைய வெற்றுப் பரபரப்புச் செய்திகளையே பிரசுரிக்கின்றன. இவற்றில் பிரசுரமாகும் பத்தியாளர்களுக்கும் முன்னளவு சமூக அங்கீகாரமோ, தாக்கமோ இல்லை.

மாறாக பரபரப்பும், உண்மை/ பொய் என்பனவற்றிற்கிடையே இருக்க வேண்டிய தெளிவும் இல்லாத வலைத்தளங்கள், பிரசுரங்கள், வதந்திப் பிரசுரங்கள், சமூக ஊடகங்களின் வெளியீடுகள் என்று தகவலும், செய்தியும், கருத்தும் ஏராளமான புத்திடங்களில் வெளியாகி ஒரு பிரவாஹமாக தகவல் பாய்கிறது. இந்தப் பாய்ச்சலில் எத்தனை பயனுள்ளது எத்தனை தேவையானது எத்தனை வெறும் குப்பை என்பது நுகர்வோருக்கும் தெரியவில்லை, அனுப்புவோருக்கும் அனேகமாகத் தெரியவில்லை என்றே கூட வைத்துக் கொள்ளலாம். சில கூட்டங்கள், முன்னெப்போதையும் போல முனைந்து குப்பையை, விஷத்தை, வெறுப்பை, வன்முறையைத் தூண்டவே இத்தகைய வெள்ளமான தகவல் பெருக்கைப் பயன்படுத்தி, அதில் ஓரளவு வெற்றியையும் தொடர்ந்து காண்கிறார்கள். சில அறம் பிறழ்ந்த அரசுகள், தம் உலக அதிகார வீச்சைப் பெருக்கவும், தம் எதிரிகளின் வலுவைக் குறைத்து அவற்றை நிலை குலைய வைக்கவும் இந்த தகவல் வெளியைப் பயன்படுத்துவதற்காக படை போன்ற அமைப்பையே உருவாக்கி வைத்து அந்த அமைப்புகள் மூலம் உள்நாட்டிலும் மக்களை ஒடுக்கி வைத்திருக்கின்றன.

இப்படி 21 ஆம் நூற்றாண்டின் தகவல் வெளி புரையோடிய நிலையில் உள்ளது. இந்த அவலநிலைக்குப் பலியாகும் முதல் கட்ட ஆடுகளாக அமெரிக்கச் சந்தையில் இத்தனை காலம் கொடிகட்டிப் பறந்த பற்பல பளபளப்பான சஞ்சிகைகள், அவற்றின் பல மிலியன் டாலர் விளம்பர வருமானம், நட்சத்திர எழுத்தாளர்கள், ஆடம்பரமான விருந்துகள், பிரபலஸ்தர்களான பதிப்பாசிரியர்கள் என்ற ஜிகினாவை எல்லாம் இழந்து சாதா தாள்களாக ஆகி விடும் நிலை வரத் தொடங்கி விட்டது என்று ஒரு கட்டுரை துவங்குகிறது.

வானிடி ஃபேர் என்ற பிரபல, பளபள சஞ்சிகை (glossy magazine என்றே இது போன்றனவற்றை வருணிக்கிறார்கள்) சமீபத்தில் அதன் 25 ஆண்டு கால அனுபவம் கொண்ட தலைமைப் பதிப்பாசிரியரை இழந்தது. அவர் ஓய்வு பெறத் தீர்மானித்து பதவியை விட்டு இறங்கி விட்டார். அவருக்கான விருந்தில் சில பிரபல பதிப்பாசிரியர்களும் எழுத்தாளர்களும் அவருடைய சிறப்பான பணியைப் பற்றிப் பேசினார்களாம்.

அடுத்த சில வாரங்களில் டைம், எல் (elle), க்ளாமர் ஆகியவற்றின் பதிப்பாசிரியர்கள் பதவி துறந்தனர். ரோலிங் ஸ்டோன் என்ற பத்திரிகையின் முதலீட்டாளர் தன் பங்கை விற்கத் தயாராகினார். வில்லேஜ் வாய்ஸ் பத்திரிகை இப்போது தன் அச்சுப் பிரசுரத்தை நிறுத்தியே விட்டது.
எல்லாமே இருட்டி வருகிறதா? இல்லை என்கிறார்கள் சிலர். பல பழம் பதிப்பாசிரியர்கள் ஓய்வு பெறுவதால் இளைஞர்களுக்கு புதுத் திறப்புகள் கிட்டும், பத்திரிகைகளின் இயல்பு மாறும், அச்சு மட்டுமே கொடி கட்டிப் பறந்த நிலை போய், பல வகை வெளியீடுகள் கிட்டும் நிலை வரும். உலகமே மாறுகையில் ஒரு வகை ஊடகம் மட்டும் மாறாது நிலையாக இருப்பது சாத்தியமில்லை என்கிறார்கள்.

டைம் பத்திரிகைப் பிரசுர நிறுவனத்தின் மொத்த வருமானம் 3 பிலியன் டாலர்கள் (வருடத்துக்கு) அதில் பத்திரிகை 66 சதவீதம் போல வருமானம் பெற்றுத் தருவது. ஆனால் அந்த நிறுவனம் தன் வளங்களை விடியோவுக்கும், தொலைக்காட்சிக்கும் மாற்றத் துவங்கி உள்ளது என்கிறது அறிக்கை.
பல பத்திரிகைகள் விற்கப்பட்டு கை மாறி விட்டன. பொதுவாக அச்சுப் பத்திரிகைகளின் விளம்பர வருமானம் இந்த வருடம் 13 சதவீதம் வீழ்ந்திருக்கிறது. அடுத்த வருடமும் அதே அளவு விழும் என்று சொல்லப்படுகிறது.

ஒரு காலத்தில் இசை உலகில் மையமாக இருந்த வைனைல் இசைத் தட்டுகள் திடீரென்று சந்தையை இழந்து ஒதுக்கப்பட்ட ஊடகமாக ஆனது போல அச்சுப் பத்திரிகைகளும் ஆகும் என்று ஒரு அனுபவசாலியான ரேடியோ நிகழ்ச்சித் தயாரிப்பாளர் கருதுகிறார்.

இதெல்லாம் மேற்கில் நடக்கும் சம்பவங்கள். இந்தியாவிலும் அச்சுப் பத்திரிகைகள் நிறைய மாற வேண்டிய கட்டாயத்தில் இருந்தாலும், இன்னும் அவை ஏராளமாக விற்கும் நிலையில்தான் உள்ளன என்று தெரிகிறது. இதே நிலை இந்தியாவிலும் வரத் துவங்குமா? எப்போது?

முழுச் செய்தியை இந்தச் சுட்டியில் பார்க்கலாம்.

https://www.nytimes.com/2017/09/23/business/media/the-not-so-glossy-future-of-magazines.html


போக்குவரத்துச் சந்தடியால் நரம்பு இழி நோய் வருமா?

இங்கே பேசப்படும் செய்தி புதிதே அல்ல. மாசு நிரம்பிய போக்குவரத்து ஏராளமாக உள்ள இடங்களில் வசிப்போருக்கு என்னென்னவோ உடலநலக் குறைபாடுகள் வரும். ஆரோக்கியம் கிட்டுவது கடினம். இது இந்தியாவில் பட்டி தொட்டிகளில் உள்ளவருக்கும் தெரியும். ஆனால் பெரு நகரங்களில் வாழ்க்கை நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் உள்ள மக்கள் என்ன செய்வார்கள்? எதிர்காலத்தை அடகு வைத்து, நிகழ்கால வாழ்க்கையை நகர்த்திச் செல்கிறார்கள். இதில் என்ன பிரச்சினை என்றால், நிகழ்காலத்தில் உடலில் இன்னும் வலுவும், ஓரளவு தாங்கும் சக்தியும் இருக்கும். அதனால் ஆரோக்கியம் என்பதைப் படிப்படியாக இழப்போம். புகை பிடிப்பவர்கள் இளைஞராக இருக்கையில் தமக்கு எதுவும் நடக்காது என்று நம்புவார்கள். 40 வயதுக்கு மேல் மூச்சு இளைப்பு வரத் துவங்கி, நுரையீரலில் பாதி வேலை செய்யாமல் போகும் நிலையில்தான் தாம் அத்தனை பத்தாண்டுகள் என்னவொரு செல்வத்தை அழித்தோம் என்று உணர்வார்கள்.

அதே போலத்தான் பெருநகர வாசிகளின் நிலையும் ஆகும் என்று சொல்கிறது இந்த அறிக்கை. சாதாரண உடல் நலக் குறைவுகள், படிப்படியான சரிவுகள் என்பன மட்டுமில்லை. போக்குவரத்து அதிகமும் உள்ள பகுதிகளுக்கு அருகில் வாழும் மக்களுக்கு அல்ஸைமர் நோய் வரும் ஆபத்து அதிகமாக இருக்கும் என்று தோன்றுவதாக கனடிய தேக நல ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். அல்ஸைமர் நோய் என்பது நரம்பு நலிவு நோய், இது முற்றினால் முழு மறதி நோய் வந்து நோயாளிகள் சீக்கிரமே இறக்கும் வாய்ப்பு அதிகமாகும். இந்த நோயின் அறிகுறிகள், இது வளரும் கட்டங்கள், முற்றிய கட்டம், இறப்பு நேரும் வாய்ப்புகள் பற்றிய விவரணையை இங்கே காணலாம்.

http://www.mayoclinic.org/diseases-conditions/alzheimers-disease/symptoms-causes/dxc-20167103

போக்குவரத்து கனமாக உள்ள இடங்களில் மாசுபட்ட காற்றும், பெரும் சத்தத்தால் வரும் ஒலி மாசும் இந்த நோய் உண்டாகும் வாய்ப்பை அதிகரிப்பதாகக் கருதும் கனடிய ஆய்வு பற்றிய அறிக்கை இங்கே:

https://www.theguardian.com/society/2017/jan/04/living-near-heavy-traffic-increases-dementia-risk-say-scientists

இங்கு பேசப்பட்ட புள்ளி விவரங்கள் நோய் எழும் வாய்ப்பு பற்றியன. இத்தகைய புள்ளி விவரங்களைச் சரிவரப் புரிந்து கொள்வது அவசியம். அப்போது நிலைமையின் தீவிரம் பற்றிய ஒரு சமனநிலைப் புரிதல் எழும். கூடதிகப் பரபரப்பை உருவாக்குவதல்ல இந்தச் செய்தி அறிக்கையின் நோக்கம். மனிதர் வாழும் நிலைகள், இடங்கள், நகரங்கள் ஆகியனவற்றை வடிவமைப்பதில் என்ன அம்சங்களில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்கு இத்தகைய செய்தி அறிக்கைகள் உதவும்.


காற்றாலை மேடைகளின் அதிசய உடன் விளைவுகள்

காற்றாலை மூலம் மின் சக்தி தயாரிப்பது பற்றி இந்தியாவில் பல பகுதி மக்களுக்கு இப்போது தெரிந்திருக்கும். அதில் மின் சக்தி தயாரிப்பது கடினமில்லை, ஆனால் அதை விற்பதும், அந்த ஆலைகளைப் பராமரிப்பதும் என்னென்னவோ சிக்கல்கள் கொண்ட வேலை என்பதையும் நாம் இதற்குள் அறிந்திருப்போம். மேற்கில் சில நாடுகளில் இந்த ஆலைகளை கரையிலிருந்து பல மைல்கள் தள்ளி நடுக்கடலில் கான்க்ரீட் மேடைகள் கட்டி அவற்றில் நிறுவுகிறார்கள். இது குடியிருப்புப் பகுதிகளிலிருந்து தள்ளி உள்ள இடங்களில் இவற்றை அமைப்பதால் இவை போடும் சத்தத்தால் வரும் தொல்லை அகற்றப்படுகிறது.

வேறு ஏதும் பிரச்சினை உண்டா என்று சமீபத்தில் ஆராய்ந்தவர்கள் சில வியப்பூட்டும் கண்டுபிடிப்புகளை அடைந்திருக்கிறார்கள். அவற்றில் சிலவற்றை இங்கு எடுத்துக் கொடுக்கிறோம். மீதியை நீங்கள் செய்தியைத் திறந்து படித்தால் அறியலாம்.

முக்கியமான செய்தி என்னவென்றால், இந்த காங்க்ரீட் தூண்கள்- இவை பெரும் மேடைகள், ஏனெனில் இந்த ஆலைகள் ராட்சத உருக் கொண்ட ஆலைகள். கடல் நடுவே உள்ளதால் கடும் காற்றையும் இவை சந்திக்க நேரும். எனவே இவற்றின் அடித்தளம் பெரும் மேடைகளாகவும், நன்கு ஸ்திரப்பட்ட அஸ்திவாரம் கொண்டனவாகவும் இருக்க வேண்டி இருக்கும். இவை பெரும்பாலும் பல பத்து மேடைகளின் வரிசையாக இருப்பதால், இவற்றின் அருகே கடல் நடுவே ஒரு தீவு போன்ற நில அமைப்பு உருவாகிறது. பொதுவாக கடற்கரையோரங்களில் வசிக்கும் மஸ்ஸல் எனப்படும் சிப்பியின கடல் ஜீவராசிகள் இவற்றை ஒட்டித் தம் காலனிகளை அமைக்கத் துவங்குகின்றனவாம். பொதுவாக இந்த சிப்பியின ஜீவன்கள் இதர கடல் பிராணிகளுக்கு உணவாக ஆகும் என்பதால் இவை பெருமளவில் வளரும் இந்த காற்றாலை மேடைகளைச் சுற்றி பல கடல் பிராணிகள் உலாவத் துவங்குகின்றன. சாதாரணமாக வட கடலில், யூரோப்பியர் இந்த மேடைகளை நிறைய அமைக்கத் துவங்கி உள்ளதால், இப்போது அங்கு முன்பு எப்போதும் உலவாத பல வகைக் கடற்பிராணிகள் உலாவுகின்றனவாம்.

இது வரை இந்த ஆய்வு கண்டவை நன்மை பயப்பன என்பது தெரிகிறது. ஆனால் இன்னும் பத்தாண்டுகளில் என்ன நடக்கும்? அதை ஊகிப்பது எளிதாக இல்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள். கடற்கரை ஓரத்தில் சாதாரணமாகக் கிட்டும் மொத்தச் சிப்பி இனங்களில் சுமார் 20 சதவீதம் அளவு இந்தக் காற்றாலைகளின் அடித்தளங்களில் இப்போது கிட்டுகின்றதால், அங்கு நகர்ந்து விட்ட கடற்பிராணிகளின் அளவு கடலோரத்தில் குறையுமா? அங்கு மீன்வளம், நண்டு வளம் குறையுமா? அல்லது அங்கும் இங்கும் அளவு கூடுமா? சிப்பிகள் உண்ணும் உணவு ஃபைலோப்ளாங்க்டன் எனப்படும் ஒருவகை ஜீவராசிகள். இவை இப்போது ஏகமாக வளரும் சிப்பிகள் கடலில் கரையிலிருந்து வெகு தூரம் தள்ளியும் வளர்வதால் அங்கு நிறைய உண்ணப்படுவதால் அவற்றின் தொகை மீது என்ன தாக்கம் இருக்கும்.

இத்தகைய கேள்விகளுக்கு விடை காண்பது எளிதல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். அறிவியலில்தான் எத்தனை வினோதச் செடுக்குகள் கிட்டுகின்றன!

https://www.technologyreview.com/s/608930/first-evidence-that-offshore-wind-farms-are-changing-the-oceans

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.