முகப்பு » இலக்கிய விமர்சனம், நாவல், புத்தக அனுபவம்

கோரிப்பாளயத்தின் கதை

எழுத்தாளர் எஸ்.அர்ஷ்யா எழுதிய ”சொட்டாங்கல்” புதினம் குறித்த வாசிப்பனுபவம்

அடர்வாய் புதர் மன்றிப்போயிருந்த வனம், பண்படுத்தப்பட்டு விளை நிலமாய் மனிதப்பயன்பாட்டுக்கு வந்த போது, வனத்தின் மையமாய் அப்பொழுது தான் தளிர் விட்டிருந்த ஆலங்கன்று ஒன்று தன்னியல்பாய் தப்பிப் பிழைத்தது. விவசாயம் தழைத்து விளை நிலமாய் வனம் செழித்த போது, அந்தக் கன்று வலுவாய் வேறூன்றி ஆகாயம் நோக்கி கிளை பரப்பியது. நகரம் தன் நாகரீகத்தின் கரம் கொண்டு விளை நிலங்களை விழுங்கி கான்கிரீட் காடுகளாக உருமாற்றம் செய்த போது, அக்கன்று மிகப்பெரிய ஆல விருட்சமாய் வளர்ந்து, தன் விழுதுகளை தூண்களாக்கி தன் இருப்பை, தன் பசியத்தை, தன் உயிர்ப்பை தக்க வைத்துக் கொண்டே இருந்தது. நாகரீக மனிதர்கள் வஞ்சத்தை அறமாய் ஏற்று, பொதுப்பணியை சுயலாபத்திற்காய் சுருக்கி, ஒருவரை ஒருவர் புசிக்கத் துவங்கிய போதும், அந்த முதிய மரம், தன் கிளைகளில் இன்னும் இன்னும் புதிய இலைகளை தளிர்க்கச் செய்வதை, தன்னில் வந்து தங்கும் எத்தனையோ பெயர் தெரியாத பறவைகள் ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் நிழற்குடையாக இருப்பதை நிறுத்தவே இல்லை.

மதுரை மாநகரின் மையத்தில், தன்னை நாடி வரும் எளிய மக்களின் கடைசி நம்பிக்கையாக, அவர்களின் பிணிகளைப் போக்கி ஆறுதல் அளிக்கும் ரட்சகனாக, எண்ணற்ற தனது கருணைக் கரங்கள் மூலமாக நிழல்பரப்பி அரவணைக்கும் ஆல விருட்சமாய் இருப்பது, “சையத் சுல்தான் அலாவுதீன் பாதுஷா – சையத் சம்சுதீன் அவுலியா தர்ஹா” அல்லது எளிமையாக “கோரிப்பாளையம் தர்ஹா”. தர்ஹாவோடும், தர்ஹாவைச் சுற்றியும் வளரும் நகரத்தின், அதன் மனிதர்களின் கதையைப் பேசுகிறது எஸ்.அர்ஷியா எழுதிய “சொட்டாங்கல்” என்னும் புதினம். சொட்டாங்கல் விளையாட்டில் ஒரு கல்லைத் தவற விட்டாலும் தோற்றதாகத் தான் அர்த்தம். அது போலவே மேலும் கீழுமாய் தூக்கியடிக்கப்படும் வாழ்க்கையில், தவறவிட்ட கற்களாய் தோற்றுப் போய் கீழே விழுந்தவர்களாயும், பெருங்கருணையின் பிடியில் ஆட்பட்டு கரைந்து போனவர்களாயும் உலவும் மனிதர்களையும் பற்றியது இப்புதினம்.

வாழ்க்கையின் அதன் போக்கில், மகிழ்வாக வாழ நினைக்கும் இளைஞன் காட்டுவா. நண்பர்களின் தூண்டுதலினால் “செய்கை” செய்து ஏரியாவுக்குள் ”பெரிய கையாக” தலையெடுக்க முனைகிறான். அது கைகூடாமல், போலீஸில் மாட்டிக் கொள்ளும் நிலை வரும் போது, தப்பித்து ஊரை விட்டு ஓடுகிறான். ஆண்டுகள் பல சென்ற பின், கனிந்த பழமாகி ஊர் திரும்புகிறான். தான் வாழ்ந்த வீட்டை, தன் நண்பர்களை, உறவினர்களை என்று தேடி அலைகிறான். அத்தனை ஆண்டுகளில் ஊர் அடைந்த மாற்றங்களை, அரசியல் மற்றும் சமூக நோக்கில் அவனது பார்வை வழியாக விவரிக்கிறது புதினம். இடையில் அவனுக்கு ஒரு பொருந்தாக் காதல். பதின் வயது சிறுமியின் தாயான “அழகு” உடனான அவனது தொடர்பு, இடையில் அவன் ஊரை விட்டுச் சென்ற பின், அவள் மனம் பேதலித்து தெருவில் அலைந்தது கடைசி வரை அவனுக்குத் தெரியாமலே போகிறது.

பெரும் பணம் சேர்த்து வைத்திருக்கும் அரசு ஊழியரான தந்தையின் சிபாரிசின் பேரில், மிக எளிதாக அரசு வேலையில் அமரும் ரஃபியுத்தீனுக்கு நான்கு சுவருக்குள், எட்டு மணி நேரம் நாற்காலியில் அமர்ந்தபடி செய்யும் குமாஸ்தா வேலையில் இருப்புக் கொள்ளவில்லை. சொத்து சுகம், வேலை, சொந்த பந்தம் அத்தனையையும் உதறி விட்டு வடக்கு நோக்கி ரயிலேறுகிறான். தில்லியில் அமைச்சகங்களுக்கும், தொழில் அதிபர்களுக்கும் இடையேயான “லயசன் ஆஃபிசராக” சமூக நிலையிலும், பொருளாதாரத்திலும் சரசரவென மேலேறி தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறான். எவ்வளவு பணம், ஆதாயம் கிடைக்குமென்ற போதிலும் தனக்கென வகுத்திருக்கும் கொள்கையிலிருந்து பிறழாதவனாகவே இருக்கிறான். அதன் பொருட்டு இன்னும் நல்ல பெயரை சம்பாதிக்கிறான். ஒரு கட்டத்தில், மனைவியும் இறந்து, மகளும் திருமணம் முடிந்து வெளிநாடு சென்றுவிட்ட பிறகு வாழ்வின் வெறுமையை உணர்ந்து. பிறந்த மண்ணைத் தேடி மீண்டும் மதுரை வருகிறான். அரசியல்வாதிகளால் கையகப்படுத்தப்பட்ட தனது பூர்வீக சொத்தை மீட்க வேண்டி போராடுகிறான்.

முப்பது வயதாகியும், வடிவம் குறுகிய உடல்குறை மற்றும் அவ்வப்பொழுது பிசகிப்போகும் மனக்குறைபாடு காரணமாக வீட்டில் உள்ளவர்களாலேயே ஒதுக்கப்படுகிறான் தவுலத் பாட்சா. கண்ணுக்குள் வைத்து பாதுகாத்து வந்த அவனது தந்தை “மௌத்” ஆன பிறகு, நிராதரவாய் நிற்கிறான். அவனை யார் வைத்துப் பராமரிப்பது என்ற சண்டை குடும்பத்தினரிடம் நடந்து கொண்டிருக்கும் போதே, யாரும் அறியாமல் வீட்டை விட்டு வெளியேறுகிறான். அவனது இருப்பு மற்றும் செயலகள் குறித்த தெளிவான விவரங்கள் யாருக்கும் புலப்படவில்லை. குரங்கு முகச்சாயல் கொண்ட அவன், அவ்வப்போது கபர்ஸ்தானில் அவுலியாவின் தம்பி அவர்களுக்காக பிரத்யேகமாக வெட்டி வைக்கப்பட்டிருக்கும் குழியில் இருந்து எழுந்து போவதை பார்த்ததாகவும், அவன் தான் கருணை வடிவான அவுலியாவின் தம்பி என்றும் ஊருக்குள் அரசல் புரசலாக பேசத் துவங்குகின்றனர். விகல்பமற்று, மழலையாய் இருந்த அவன் இறுதியில் மீண்டும் தன் பிறந்த மண்ணான தர்ஹாவின் கபர்ஸ்தானில், இறைவனுக்குள் தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறான்.

இப்படி, வெவ்வேறு சூழ்நிலைகளின் பொருட்டு, பிறந்த மண்ணை விட்டு விலகிச் செல்லும் வெவ்வேறு நபர்கள், மீண்டும் தாய் மண்ணை அடைய நேர்கையில் அவர்கள் கைகொண்ட ஆன்ம பலம், அனுபவம், இறை நிலை ஆகியவை கோரிப்பாளயம் தர்ஹா என்னும் ஆல விருட்சத்தின் பெருங்கிளைகளாக எப்படி விரிகிறது என்று காட்சிப்படுத்தியிருக்கிறது இப்புதினம். அதே போல இந்த விருட்சத்தைத் தேடி வரும் பறவைகளுக்கு வாழ்வாதாரமான உணவையையும், இருப்பிடத்தையும், பாதுகாப்பையும் வழங்குவதாகவும் வளர்கிறது புதினம்.

பெரிய சம்சாரியான அய்யங்கோட்டை ஆகாசம்பிள்ளை தான் பிறந்த ஊரை விட்டு விட்டு, புதியதொரு இடமான கோரிப்பாளையத்தில் பதியம் போட வைக்கிறது காலம். கனவில் வந்து கருப்பணசாமி சொன்ன இடத்தைத் தேடியலைந்து இறுதியாக கோரிப்பாளையத்தில் வந்தடைந்த போது, அது தான் தனக்கான இடம் என்று உணர்கிறார். அங்கேயே தலைமுறை தலைமுறையாக அவரது வம்சமும் தழைக்கிறது. அதே போல், ஊரில் இருந்து கோயில் காசைத் திருடிக்கொண்டு வரும் சந்தனத்தேவர், காடு, கரை, வெள்ளாமை என்று செழித்து இருந்தாலும், அவரது நிலத்தில் கிடை போட வரும் ராசுக்கோனாரின் வளர்ப்புக் கிடாயின் மூலம் அவரது திருட்டுக்கும் தகுந்த தண்டனை கிடைக்கிறது.

மில் வேலைக்காக மதுரைக்கு வரும் வேலுத்தேவருக்கு மனதுக்குள் ஒரு பெருங்கனவு. தன் அதிகாரத்தை நிலைநிறுத்தவும், தனக்குப் பணிந்து போக, தன் சொல்லை மீறத் துணியாத ஒரு கூட்டத்துக்கு தலைமையேற்கவும் வேண்டும் என்று உள்ளூர ஆசை. அதை நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்பை காலம் வழங்க, அதனைப் பிடித்து மேல் எழுகிறார். அவருக்கு ஏற்ற துணையாக, மனைவி “தண்டட்டி”யும் அமைய அவரது ராஜாங்கம் விரியத்துவங்குகிறது. ஊருக்குள் வட்டிக்கு விட்டு, தவணைத் தொழில் செய்து காசைப் பெருக்குகின்றனர். அதற்கு அவர்களின் இயற்கையான மூர்க்க குணமும், அடாவடித்தனமும் கை கொடுக்க ஊருக்குள் அவர்களின் கொடி பறக்கிறது. ஒரு கட்டத்தில், வேலுத்தேவர் சிறைக்குச் செல்ல வேண்டிய நிலை வர, அவர் விட்ட இடத்திலிருந்து அவரது ஒரே பேரனான சங்கு முத்தையா தொடர்கிறான். அவனுக்கு அரசியல் ஆசையும் சேர்ந்து வர, எதிர்பாராமல் கிடைக்கும் அமைச்சரின் மகனுடனான நட்பை பயன்படுத்தி, தன் எல்லைகளை விஸ்தரிக்கிறான். இவன் மூலமாக, இன்றைய அரசியல் காட்சிகளின் கோர முகம், அதில் நடக்கும் தகிடுதத்தங்கள் மற்றும் சூழ்ச்சிகள் ஆகியவற்றை புனைவுக்குள் நைச்சியமாக ஒளித்து வைத்து விளையாட்டு காட்டியிருக்கிறது “சொட்டாங்கல்”

அதே போல, சாணி மற்றும் கவிச்சி வாசம் வீசும் நெல்ப்பேட்டை ஆட்டுத்தொட்டி, வகைவகையாய் பிரித்து விற்கப்படும் மீன் கடைகள், தினக்கூலிகளாக சோணையா கோவில் தெருமுனையில் தினமும் காலையில் நிற்கும், கொத்தனார் சித்தாள், நிமுந்தாள் வேலைக்குப் போகின்ற அன்றாடங் காய்ச்சிகளின் பிழைப்பு, செல்லூர் கைத்தறி தொழில் சித்தரிப்புகள், கந்து வட்டி, மீட்டர் வட்டி, ரன் வட்டி என்று நாள் கணக்கு வைத்து, தவணை கொடுக்கும் தண்டல்காரர்களின் மிரட்டல்கள், ரசிகர் மன்றங்களுக்குள் இருக்கும் போட்டி மற்றும் சண்டை சச்சரவுகள், அதனால் ஏற்படுகின்ற தகராறுகள், பெருகி வரும் ஃபிளக்ஸ் பேனர் கலாச்சாரம், மூன்றாம் நிலை அரசியல்வாதிகளின் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள், கோவில் சர்ச் மற்றும் மசூதி என்று அருகருகே ஒரே நேரத்தில் சமத்துவமாய் நிகழும் திருவிழாக்கள் என்று மதுரை மண்ணுக்கே பிரத்யேகமாக உள்ள நிலக் காட்சிகளை வாசகனே அருகில் இருந்து பார்ப்பது போன்ற தத்ரூபமான விவரிப்பு ”சொட்டாங்கல்”லின் பெரிய பலம். மதுரையைச் சேர்ந்தவர்களுக்கு தங்களின் அன்றாடத்தை அப்படியே புதினத்தில், காட்சிப்படுத்தியிருப்பது சிலிர்ப்பை உருவாக்கும் என்றால், மற்ற ஊர்களைச் சேர்ந்தவர்களுக்கு மதுரையின் அசல் சித்திரத்தை அறிந்து கொள்ளும் வாய்ப்பாக இருக்கும்.

“சொட்டாங்கல்” மேலோட்டமான வாசிப்புக்கு அரசியல் களம் சார்ந்த படைப்பு என்ற தோற்றத்தை உருவாக்கினாலும், உண்மையில் இது மனிதர்களுக்கு தங்கள் மண் மீது இருக்கும் தீராப்பிரியம் பற்றிய கதை தான். சூழ்நிலை காரணமாக மதுரை மண்ணை விட்டுப் பிரிய நேர்ந்தவர்களின் மீள்வருகையை பேசுவது ஒரு புறம் என்றால், உள்ளூரில் அடையாளமற்று சுற்றுக் கொண்டிருப்பவர்கள் தங்களை நிலைநிறுத்தவும், தங்கள் அதிகாரத்தை வலுப்பெறச்செய்யவும் நிலக்கையகப்படுத்துதலை ஒரு கருவியாக ஏற்றுக்கொள்ளுதலும், அதுவே அவர்களுக்கான கொலைக்கருவியாய் மாறுவதும் இன்னொரு பக்கம்.

கோரிப்பாளையம் தர்ஹாவும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளின் வளர்ச்சியும் புதினத்தில் அழகாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பாண்டிய மன்னனின் அரண்மனையின் மராமத்து வேலைக்காக, அழகர் கோவிலுக்கு வடக்கிலிருந்து வெட்டி எடுத்து வரப்பட்ட பாறை ஒன்று, கோரிப்பாளையம் தர்ஹாவுக்கான விதானக் கல்லாக மாறிய கதை சிலிர்ப்பூட்டக் கூடியது. அதே போல பல்வேறு இடங்களில் இருந்து இங்கே குடிபெயரும் பலதரப்பட்ட மக்கள் தங்களுக்கான வாழ்விடமாக இப்பகுதியை மாற்றுவதும், இந்நிலம் தன்னை நெகிழ்த்தி அம்மக்களை தனக்குள் வாழ அனுமதிப்பதும், காலப்போக்கில் அவர்களின் வாழ்வியல் வழிகளிலும், வழிபாட்டு முறைகளிலும் ஏற்படும் மாற்றங்கள் அதனால் அவர்களுக்குள் இருக்கும் ஒற்றுமை உணர்வு குலைந்து பகைமையும், பொறாமையும் வேர்விடுவதையும் இயல்பாக விவரித்திருக்கிறது இப்புதினம். இறுதியில், எந்தவித கொள்கை கோட்பாடுமின்றி, தங்களின் சுயலாபத்திற்காகவும், தன் அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்காகவும் அரசியலைக் கருவியாகப் பயன்படுத்துபவர்களின் நிலைமை என்னவாகிறது என்பதையும் சொல்லி முடிகிறது “சொட்டாங்கல்”.

மதுரையின் தற்கால நிலவியலையும், சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களையும் தொடர்ந்து தனது படைப்புகள் மூலமாக பதிவு செய்து வரும் மண்ணின் மைந்தன் எஸ்.அர்ஷியா அவர்களுக்கும், புதினத்தை வெளியிட்ட “எதிர் வெளியீடு” பதிப்பகத்திற்கும் அன்பும், வாழ்த்துகளும்.

~oOo~

சொட்டாங்கல் – புதினம்
எஸ்.அர்ஷியா
எதிர் வெளியீடு
பக்கம்: 264
விலை: ரூ. 220

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.