முகப்பு » ஆன்மீகம், இந்தியக் கவிதைகள், இறையியல்

அருளிச்செயல்களில் அணைகட்டுதல்

தந்தை தயரதன் உரைத்தார் என்று சிற்றன்னையான கைகேயி சொல்ல, “மன்னவன் பணியன்றாகில் நும்பணி மறுப்பனோ” என நவின்ற இராமபிரான் சீதாபிராட்டியும் தம்பி இலக்குவனும் உடன் வர கானகம் புகுந்தார். அங்கே தண்டகாரணியத்தில் இருக்கும்போது சூர்ப்பனகை சூழ்ச்சியால் இலங்கை அரக்கன் இராவணன் சீதாபிராட்டியாரைச் சிறை எடுத்து இலங்கையில் அசோகவனத்தில் வைத்தான்.

ஜடாயு மூலம் செய்தி அறிந்து சுக்ரீவன் நட்பைப் பெற்ற இராமபிரான் பிராட்டியைத் தேட வானரர்களை அனுப்பினார். இலங்கை சென்று பிராட்டியைக் கண்ட அனுமன் திரும்பி வந்து, “கண்டேன் கற்பினுக்கணியை” என உரைக்க இராமபிரான் கடலைக் கடக்க அணை ஒன்றை வானரர்களைக் கொண்டு கட்ட முடிவு செய்தார். அவ்விதம் அவர் அணைகட்டிய அற்புதச் செயலை ஆழ்வார் பெருமக்கள் தம் பாசுரங்களில் அருளிச்செய்துள்ளார்கள்.

யசோதை கண்ணன் என்னும் குழந்தையிடம் சப்பாணி கொட்டி அருள வேண்டும் என விண்ணப்பிக்கிறார். குழந்தையானது தன் ஒருகையோடு மறுகையைச் சேர்த்துக் கொட்டுவதே சப்பாணி என்னும் விளையாட்டாகும்.

”கண்ணனே! எம்பிரானே! அழகிய கையிலே சக்கரத்தைக் கொண்டவனே! எப்பொழுதும் ஒலித்துக் கொண்டிருக்கும் கடலை இரண்டு பக்கங்களிலும் தேங்கும்படிச் செய்து, குரங்குக் கூட்டங்களைக் கொண்டு அணையைக் கட்டினாய். அதன் மூலம் இலங்கையை அடைந்து அங்குள்ள அரக்கர் எல்லாம் அழியும்படி அம்புகளைக் கொண்டு போர் செய்த கைகளைக் கொண்டு சப்பாணி கொட்டி அருள்வாயாக” என்று யசோதை வேண்டுவதாகப் பெரியாழ்வார் அருளிச் செய்கிறார்.

”குரக்கினத் தாலே குரைகடல் தன்னை
நெருக்கி அணைகட்டி நீள் நீரிலங்கை
அரக்கர் அவிய அடுகணை யாலே
நெருக்கிய கைகளால் சப்பாணி நேமியங் கையனே! சப்பாணி”  [1-7-8]

என்பது அவர்தம் அருளிச் செயலாகும்.

பெரியாழ்வார் கிருஷ்ணனையும், இராமனையும் ஒருங்கே அனுபவிக்க அந்த அவதாரங்களை எடுத்த பரம்பொருளைத் தேடித் திரிகின்றவரைப் பார்த்து அருளுதுவதாக சில பாசுரங்கள் பாடி உள்ளார். அவற்றில் ஒன்றில் ஸ்ரீராமபிரான் அணை கட்டியதைப் பற்றிப் பாடி உள்ளார். அப்பாசுரம் இது.

”கொலையானைக் கொம்புபறித்துக் கூடலர்சேனை பொருதழிய
சிலையால் மராமரம் எய்ததேவனைச் சிக்கெனென நாடுதிரேல்
தலையால் குரக்கினம் தாங்கிச் சென்று தடவரை கொண்டடைப்ப
அலையார் கடற்கரை வீற்றிருந்தானை அங்குத்தைக் கண்டாருளர்    [4-1-3]

ஸ்ரீராமனைத் தேடுகிறவர்களிடம் உரைப்பதுபோல் பெரியாழ்வார் அருளிச் செய்கிறார்

“குவலாயாபீடம் என்னும் யானையின் தந்தங்களை ஒடித்துப் பகைவர்கள் படையை அழித்து ஏழு மராமரங்களைத் துளைத்த கடவுளாகிய இராமபிரானைத் தேடுவீர்களானால் குரங்குக் கூட்டம் பெரிய மலைகளைச் சுமந்து கொண்டு போய்க் கடலில் அணைகட்ட அக்கடற்கரையிலே தமது பெருமை தோன்ற எழுந்தருளி இருந்தவனை அந்த இடத்திலே கண்டார் உளர்’ என்பது இப்பாசுரத்தின் பொருளாகும்.

ஆயர் சிறுமிகள் மணலில் சிறு வீடு கட்டி விளையாடுகிறர்கள். அப்பொழுது கண்ணன் ஓடி வந்து அவர்களின் சிற்றில்களைச் சிதைக்கிறான். ”கண்ணா! எம் சிற்றில்களைச் சிதைக்க வேண்டாம்” என அவர்கள் வேண்டும்போது அச்சிறுமிகள் சேது பந்தனம் என்னும் அணைகட்டியதைக் குறிப்பிடுவதாக நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் அருளிச் செய்கிறார்.

“ஓதமா  கடல்வண்ணா! உன் மணவாட்டி மாரொடு சூழறும்
சேது பந்தம் திருத்தினாய்! எம் சிற்றில் சிதையேலே”              [2-7]

குலசேகராழ்வார் பெருமாள் திருமொழியில் இராமபிரானுக்குத் தாலாட்டுப் படுகிறார். திருக்கண்ணபுரம் திவ்யதேசத்தை மங்களாசாசனம் செய்யும் பாசுரம் இது. இதில் ”மலைகளைக் கொண்டு சேது அணையைக் கட்டி அரண் உடைய இலங்கையை அழித்தவனே!” என்ன்னும் பொருளில்,

”மலையதனால் அணைகட்டி மதிலிலங்கை அழித்தவனே”        [8-8]

என்று ஆழ்வார் அருளிச் செய்கிறார்.

திருமழிசை ஆழ்வாரின் திருச்சந்த விருத்தத்தில் 39-ஆம் பாசுரம் மிகுந்த நயம் வாய்ந்தது. அப்பாசுரத்தின் நான்கு அடிகளும் ‘வெற்பு’ என்னும் ஒரே எதுகை பெற்று வரும். வெற்பு என்பது மலையைக் குறிக்கும். இப்பாசுரத்தில் மந்தர மலையை எடுத்துக் கடலைக் கலக்கியதும், வானரர்களைக் கொண்டு மலைகளை எடுத்து தெற்குக் கடலிலே அணைகட்டியதும், மலையாலே சூழப்பட்ட இலங்கையின் அரணை அழித்ததும், கோவர்த்தன மலையைக் குடையாக எடுத்ததுமான  எம்பெருமானின் செயல்கள்  அருளப்படுகின்றன.

”வெற்பெடுத்து வேலைநீர் கலக்கினாய், அதன்றியும்
வெற்பெடுத்து வேலைநீர் வரம்புகட்டி வேலை சூழ்
வெற்பெடுத்த இஞ்சிசூழ் இலங்கை கட்டழித்த நீ
வெற்பெடுத்து மாரிகாத்த மேகவண்ணன் அல்லையே!”

திருமங்கை ஆழ்வார் தம் பெரிய திருமொழியில்  கிருஷ்ண அவதாரத்தில் பெரிதும் ஈடுபாடு கொண்டு அருளிச் செய்கிறார். கிருஷ்ணலீலையைச் சொல்லும்போது எம்பெருமான் இராமனாக அவதரித்துக் கடலிலே அணைகட்டிய விருதாந்தத்தையும் அருளிச் செய்கிறார்.

”படைத்திட்டது இவ்வையம் உய்ய முனநாள்
பணிந்தேத்த வல்லார் துயராய வெல்லாம்
துடைத்திட்டு அவரைத் தனக்காக்க வென்னத்
தெளியா அரக்கர் திறல் போயவிய
மிடைத்திட்டெழுந்த குரங்கைப் படையா
விலங்கல் புகப்பாய்ச்சி விம்ம கடலை
அடைந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால்
அளை வெண்ணெயுண்டு ஆப்புண்டிருந்தவனே”          [10-6-7]

”முன்னொரு காலத்தில் இவ்வுலகங்களைப் படைத்து, அவ்வுலகம் பிழைப்பதற்கு உறுப்பாக திருவடிகளிலே பணிந்து துதிக்க வல்லவர்களுடைய துன்பங்களைப் போக்கி அப்படிப்பட்டவர்களை எல்லாம் தனக்கே உரியவாராக்கிக்கொள்ள  நினைத்த அளவிலே அத்திருவுள்ளத்தைப் பொறுக்க மாட்டாமல் கலங்கித் தீங்கிழைத்த அரக்கர்களுடைய வலிமை பாழ்படும்படியாக நெருக்கித் தள்ளி எழுந்த வானர வீர்ர்களைச் சேனையாகக் கொண்டு கடல் நிரம்பும்படி மலைகளைப் பரப்பிக் கடலைத் தூர்த்தவனான பெருமானன்றொ இன்று தயிர், வெண்ணெய் திருடி உண்டு ஆய்ச்சியரிடம் கட்டுண்டு கிடக்கிறான் என்பது பாசுரத்தின் பொருளாகும்.

திருமழிசை ஆழ்வார் நான்முகன் திருவந்தாதியில் இராமபிரான் அணை கட்டிய விருத்தாந்தத்தை அருளிச் செய்கிறார்.

”இது—இலங்கை ஈடழியக் கட்டிய சேது
இது—விலங்கு வாலியை வீழ்த்தது—இது– இலங்கை
தானெடுக்க வில்நுடங்கத் தண்தார் இராவணனை
ஊனொடுங்க எய்தான் உசுப்பு”                         [26]

இராமபிரானின் லீலைகளைச் சொல்லும் பாசுரம் இதுவாகும். ஒவ்வொன்றாக ஆழ்வார் சொல்லிக்கொண்டே வருகிறார். முதலில் ”இலங்கையானது சீர்குலைந்து போகும்படியாக வானர சேனையைக் கொண்டு கட்டிய திருஅணை இது காண்மின்” என்கிறார். அடுத்து, ”விலங்காகப் பிறந்த வாலியை முடித்த செயல் காண்மின்” என்கிறார். அடுத்து, ”இலங்கை அழியும்படியாக கோதண்டம் என்னும் வில் வளைத்து மாலை அணிந்து கொண்டிருந்த இராவணனின் உடம்பு ஒழியும் படியாக அம்புகளைச் செலுத்திய செயலைக் காட்டுகிறார்.

இதேபோன்று திருமால் கடலில் அணை கட்டித் தூர்த்ததை இரண்டாம் திருவந்தாதியில் பூதத்தாழ்வார் அருளிச் செய்கிறார்.

”கடல்போன்ற வண்னம் கொண்ட திருமாலே! அன்றொரு நாள் நீ உலகை அளந்து கொண்டாய். மற்றொரு காலத்தில் வராகமாகி பூமிப்பிராட்டியை நிலத்தைக் கிடந்து விடுவித்துக் கொண்டாய். நீயே அன்று கரிய கடலை முன்னே கடைந்தாய்; பிறகு நீயே அந்தக் கடலில் அணைகட்டி அதைத் தூர்த்தாய்” என்பது இப்பாசுரத்தின் பொருளாகும்.

”நீயன் றுலகளந்தாய்; நீண்ட திருமாலே
நீயன் றுலகிடந்தா யென்பரால்—நீயன்று
காரோத முன்கடைந்து பின்னடந்தாய் மாகடலை
பேரோத மேனிப் பிரான்”                                       [30]

தொண்டரடிப்பொடியாழ்வார் திருமாலையில் 27-ஆம் பாசுரத்தில் தாம் திருவரங்கப் பெருமானுக்கு நெஞ்சார அடிமை செய்யாமல் போனேனே என்று தன்னைத்தானே நொந்து கொள்கிறார். அப்போது அவர் ஓர் அணிலைப் பற்றிப் பேசுகிறார். அந்த அணிலானது இராமபிரான் அணைகட்டும்போது அவருக்குத் துணை செய்ததாம். அந்த அணிலானது முதலில் தண்ணீரிலே முழுகியதாம். பிறகு கரையிலே உள்ள மணலிலே சென்று புரண்டதாம். அதன் பிறகு அப்படியே அலைகள் வீசும்படியான கடலிற்குச் சென்று தண்ணீரில் மூழ்கி அம்மணலால் கடலைத் தூர்க்க முயற்சி செய்ததாம்.   அப்படிப்பட்ட கபடமற்ற அணிலைப் போல நான் உனக்கு அடிமைச்செயல் செய்ய வில்லையே என ஆழ்வார் அருளிச் செய்கிறார்.

இவ்வாறு ஆழ்வார் பெருமக்கள் இராமபிரான் வானர சேனையின்  துணைகொண்டு சேதுபந்தனம் அமைத்ததை அருளிச் செய்துள்ளார்கள்.

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.