பைரவி

மழலை வரமருள
முன்மதிய நேரம்
பூசனை முடிந்த தருணம்
கதவைத் தட்டினார் யாரோ.
பிறந்தமேனியாயெதிரில் நின்றது
பிச்சைக்காரியா பைத்தியக்காரியா
திகைத்து நின்றாள் அகமுடையாள்.
’சண்டிகைக்குப் படையலிட்ட
சர்க்கரைப் பொங்கலும் எலுமிச்சை சாதமும்
உண்டு செல்ல வந்தேன். கொஞ்சம் தந்தாலும்
கோடி புண்ணியமுன்னைச் சேருமென்று
கெஞ்சல்குரலில் வந்தவள் வினவ
பூசனைத் தேவுமிட்ட படையலும்
பரதேசிக்கெப்படித் தெரியுமென்று
சிந்தைக்கெட்டா வியப்பும்
படபடக்கும் பயமும் நிறைய
இரந்து நின்றவளுக்கு உணவுதந்தாள் இல்லத்தரசி.
’நன்றிச் சொல்மட்டுமல்ல நான் சொல்வது
நடக்கப் போவதைச் சொல்லும் சொல்.
வரும் வருடமிதே நாளில்
பெண் மகவைப் பெற்றெடுப்பாய்
பைரவியெனப் பெயரிடு’ எனக்கூறி
வந்தவள் புறப்பட்டாள் கையைத் தலையில் துடைத்து.
வீட்டுக்காரி தந்த சேலையை மறுத்து.