எம். எல். – அத்தியாயம் 6

நாராயணன் ‘செவ்வானம்’ ஆபீஸுக்குப் புறப்பட்டான். செவ்வானத்துக்கென்று தனி ஆபீஸ் ஒன்றும் கிடையாது. கம்யூனிஸ்ட் கட்சி ஆபீஸிலேயேதான் ஒரு மூலையில் இரண்டு டேபிள்கள் போடப்பட்டிருந்தன. ஒன்றில் செவ்வானத்தின் ஆசிரியர் பரமேஸ்வரன் உட்காருவார். இன்னொரு மேஜையின் முன்னால் நாராயணன் உட்காருவான். பரமேஸ்வரன் இல்லாத நேரத்தில், யாராவது கட்சி ஆட்கள் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள். நாராயணனின் தலைக்கு மேலே மங்கலான பல்பு எரிந்து கொண்டிருக்கும். ‘செவ்வானம்’ மாதப் பத்திரிக்கைதான். அதில் கதை, கவிதை, கட்டுரைகள் இடம்பெற்றன. ‘செவ்வானம்’ என்ற தலைப்புக்குக் கீழே ‘உழைக்கும் வர்க்கத்தின் கலை, இலக்கியத் திங்கள் இதழ்’ என்று 10 பாயிண்டில் அச்சிடப்பட்டிருக்கும்.

நாராயணன் ஆசிரியர் பயிற்சி எல்லாம் படித்துவிட்டு வேலையில்லாமல் ஒத்தக்கடையில் சுந்தரி வீட்டோடு இருந்து வந்தான். சுந்தரியுடைய அப்பாவுக்கு ஒத்தக்கடையில் வீடும், பலசரக்குக் கடையும் இருந்தது. ஊரிலேயே கொஞ்சம் பெரிய பலசரக்குக் கடைதான் அது. வியாபாரமும் தன்னைக் கட்டிப் போய்க் கொண்டிருந்தது. அவருக்கு மருமகனையும் கடைக்குள் இழுத்துப் போட வேண்டும் என்றுதான் ஆசை. ஆனால், என்ன இருந்தாலும் மருமகனாச்சே என்ற மரியாதை அதைத் தடுத்தது. அதுவும் கல்யாணமாகி ஏழு மாசம்தான் ஆகியிருந்தது.

நாராயணன், மனைவி வீட்டில் நல்ல சுகவாசியாகத்தான் காலத்தை ஓட்டினான். காலையில் இட்லியோ, தோசையோ தின்றுவிட்டு வாசகசாலைக்குப் போய்விடுவான். தினசரி, வார, மாதப் பத்திரிக்கைகள் ஒன்றையும் விடமாட்டான். ஜெயகாந்தன், நா.பார்த்தசாரதியின் அபிமான வாசகனாக இருந்தான்.

கோபால் பிள்ளை ஒரு நாள் ஒத்தக்கடை கூட்டமொன்றில் பேசுவதற்குச் சென்றிருந்தபோது, நாராயணனுடைய மாமனார் வீட்டுக்குப் போனார். அவரை கோபால் பிள்ளைக்கு வெகு நாட்களாகத் தெரியும். கூட்டமெல்லாம் முடிந்தபிறகு அவர் வீட்டுக்குப் போனபோது, தன் மருமகனைப் பற்றி கோபால் பிள்ளையிடம் கூறினார். கோபால் பிள்ளைக்கு மதுரையிலுள்ள நூற்பாலைகளில் நல்ல செல்வாக்கு இருந்தது. ஏதாவது ஒரு மில்லில் நாராயணனைச் சேர்த்து விடலாம் என்றுதான் அவனைத் தன்னோடு அழைத்துக்கொண்டு வந்தார்.

தன்னுடைய மகன்கள் ராமசாமி, பிச்சையா இருவரிடமும், அவனுக்கு வேலை கிடைக்கும் வரை அங்கேயே இருக்கட்டும் என்று சொல்லிவைத்தார். இரண்டு மூன்று மில்களில் வேலைக்கும் சொல்லி வைத்தார். கட்சி ஆபீஸுக்கு ஒரு நாள் கோபால் பிள்ளை போயிருந்தபோது, பரமேஸ்வரன், செவ்வானத்துக்கு உதவிக்கு ஒரு பையன் வேண்டுமென்று சொன்னார். அதற்கு கட்சியில் அனுமதி வாங்கியும் வைத்திருந்தார். எப்போது பார்த்தாலும் பத்திரிக்கைகளைப் படித்துக் கொண்டிருக்கிற நாராயணனுடைய ஞாபகம் வந்தது அவருக்கு. வீட்டுக்கு வந்ததும் நாராயணனிடம், “பத்திரிக்கையில் சேருகிறாயா?”, என்று கேட்டார் கோபால் பிள்ளை. நாராயணனுக்கு ஒரே சந்தோஷம்.

அவன் செவ்வானத்தில் சேர்ந்து இரண்டு வருஷங்களாகிவிட்டன. ஒத்தக்கடைக்குப் போய் சுந்தரியையும் அழைத்துக் கொண்டு வந்தான். ஒரு குழந்தையும் பிறந்தது. மாமனார், தன் மகளுக்கு அவ்வப்போது அரிசி, இதர பலசரக்குச் சாமான்களை போக்கு வண்டியில் போட்டு அனுப்புவார். இல்லையென்றால் அவனுடைய நூற்றைம்பது ரூபாய் சம்பளத்தில் குடித்தனம் நடத்துவது பெரிய பாடுதான்.

கோபால் பிள்ளையைப் பார்த்து நாளாயிற்று. அன்று ஆபீஸ் போகிறவழியில் அவரைப் பார்த்துவிட்டுப் போவதென்று முடிவு செய்தான்.

கோபால் பிள்ளையின் வீட்டிலேயே இரண்டு மூன்று மாதங்கள் இருந்திருக்கிறான். சாப்பிட்டிருக்கிறான். அவருடைய மகன்கள் இரண்டு பேருமே நல்ல மாதிரி. பெரியவர் வீட்டிலும், சின்னவர் வீட்டிலும் எப்போது வேண்டுமானாலும் போய்ச் சாப்பிடுவான். அந்த வீட்டுப் பிள்ளைகளுடன் விளையாடுவான். செவ்வானத்தில் வேலைக்குச் சேர்ந்த பிறகு கூட, சுந்தரியை ஒத்தக் கடையிலிருந்து அழைத்து வரும்வரை அங்கேதான் இருந்தான். ஆனால், தனிக் குடித்தனம் போனபிறகுதான் ஆபீஸ், வீடு என்று ஆகிவிட்டது. பெரியவர் ராமசாமி அவனை வெளியே எங்காவது பார்த்தால், ‘என்ன மருமகப் பிள்ளை.. எங்களை எல்லாம் மறந்திட்டீங்களா’ என்று சிரித்துக் கொண்டே கேட்பார். சுந்தரியிடம் சொல்லிக்கொண்டே செருப்பை மாட்டினான். அவள் குழந்தையைத் தூக்கிக்கொண்டு வாசலில் நின்றாள். குழந்தையின் கன்னத்தைக் கிள்ளிக் கொஞ்சிவிட்டுப் புறப்பட்டான்.

விவேகானந்தா பிரஸ்ஸைத் தாண்டி மேலமாசி வீதியில் நுழைந்ததும் பையிலிருந்த சில்லறைகளை எண்ணினான். அதை வைத்துத்தான் இந்த மாதம் பூராவும் ஓட்ட வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சி ஆபீஸில் எப்போது சம்பளம் கொடுப்பார்கள் என்று தெரியாது. சில மாதம் பதினைந்தாம் தேதிகூடக் கொடுத்திருக்கிறார்கள். சம்பளம் போட மறந்துவிட்டார்களோ என்று நினைப்பான். கோபால் பிள்ளை வீட்டுக்குப் போனதும், நேரே வெளிப்புற மாடிப்படி வழியாக அவர் அறைக்குப் போகவில்லை. கீழ்ப் பகுதியில் குடியிருந்த பெரியவர் ராமசாமியைப் போய் முதலில்  பார்த்தான். மதனி, பிள்ளைகளிடம் பேசிவிட்டு உள் பக்கமாகவே மாடிக்கு ஏறி சின்னவர் பிச்சையாவையும் அவர்  மனைவியையும் பார்த்துப் பேசிவிட்டுத்தான் கோபால் பிள்ளை அறைக்கு வந்தான்.

கோபால் பிள்ளைக்கு அருகில் கட்டிலில் சோமு உட்கார்ந்திருந்தான். கோபால் பிள்ளை அவனைப் பார்த்ததும் உற்சாகமான குரலில், “வாடே!..” என்றார். அவருக்கு எதிரே கிடந்த ஸ்டூலில் இருந்த புஸ்தகங்களை எடுத்துக் கீழே சுவரோரத்தில் வைத்து விட்டு அதன் மீது உட்கார்ந்தான். “என்னடே… எப்படி இருக்க?.. வீட்டிலே சுந்தரி, மகன் எல்லாம் செளக்கியமா?” என்று கோபால் பிள்ளை கேட்டார். “எல்லாரும் நல்லா இருக்காங்க..” என்றான். சோமுவைப் பார்த்துச் சிரித்தான். சோமுவும் பதிலுக்குப் புன்னகை செய்தான். இரண்டு பேருக்கும் நெருங்கிய பழக்கம் இல்லாவிட்டாலும், அறிமுகம் உண்டு. கோபால் பிள்ளையுடைய உறவினன் சோமு என்பது அவனுக்குத் தெரியும்.

“நாராயணா! நீ வந்ததும் நல்லதாப் போச்சு… நம்ம கச்சி ஆபீஸ்லே நக்ஸலைட் இயக்கத்தைப் பத்திப் பேசுதாங்களாடே?…” என்று நாராயணனிடம் கேட்டார் கோபால் பிள்ளை.

“நேத்தோ முந்தாநாளோ டவுன் செக்ரட்டரி சண்முகம் சொல்லிக்கிட்டிருந்தார்…”

“அது என்னன்னுதான் சோமு கேட்டுகிட்டு இருக்கான்… ரெண்டு வருசமா அது மேற்கு வங்காளத்திலே பரவிக்கிட்டு இருக்கு. ஆந்திரா, கேரளாவிலேயும் கொஞ்சம் பேர் ஆயுதப் போராட்டம் அது இதுன்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க. அதெல்லாம் நமக்கு, நம்ம நாட்டுக்குச் சரிப்பட்டு வராதுடே… நக்சல்பாரியிலே நடந்தது ஒரு திடீர் எழுச்சி… அங்கே உள்ள மக்கள் பழங்குடி மக்கள். அவங்ககிட்டே அம்பு  இதெல்லாம் இருக்கும். அதை வச்சு உள்ளூர் நிலச்சுவான்தார்களையும், அவங்களுக்கு ஆதரவா இருந்த போலீசையும் எதிர்த்தாங்க. நம்ம தமிழ் நாட்டிலே அப்படி எந்த நெருக்கடியும் இல்லை. ஜனங்களும் அதுக்கெல்லாம் தயாரா இல்லே..” என்றார்.

“ஆயுதப் புரட்சின்னா ரஷ்யா, சைனாவிலே எல்லாம் நடந்துதே அந்த மாதிரியா?…”

“ரஷ்யாவை இதிலே சேர்க்க முடியாது, அங்கே வேலை நிறுத்தம் மூலமா ஜார் அரசாங்கத்தைக் கவுத்தாங்க. சைனாவிலே மாசேதுங் ஒரு படையைத் திரட்டி சர்க்கார எதிர்த்தார். படைன்னா நேத்தாஜி வச்சிருந்த மாதிரிப் படை இல்லை… சீன விவசாயிகள் அவங்க. அவங்களைக் கூட்டிகிட்டு ஊர் ஊராகப் போனார். அதத்தான் ‘லாங்மார்ச்’ங்கிறாங்க. ரஷ்யாவிலேயும் சரி, சைனாவிலேயும் சரி புரட்சிக்கு முன்னாலே அந்த நாடுகள்லே தேர்தல் எல்லாம் கெடையாது. நம்ம நாட்டிலே பிரிட்டீஷ்காரனே தேர்தலை எல்லாம் அறிமுகப்படுத்திட்டான். கச்சிகள் எல்லாம் வந்துட்டுது, சண்டை போட்டுத்தான் அவனைத் தேர்தல் முறையைக் கொண்டுவர வச்சோம்ன்னாலும், 1947-க்கு முன்னாலேயே ரெண்டு மூணு தேர்தல் நடந்துட்டுது… ஜனங்கள் ஜனநாயக முறைக்கு சுதந்திரத்துக்கு முன்னாலேயே பழகிட்டாங்க… பார்லிமெண்ட் தான் இல்லையே தவிர, மாகாண சட்டசபைகள் அப்போவே நடக்க ஆரம்பிச்சிட்டுது…”

“அப்போ, நக்சல்பாரியிலே நடந்தது என்ன தாத்தா?…” என்றான் சோமு.

“ரொம்பச் சரியாச் சொன்னா அது உள்ளூர் மட்டத்திலே நடந்த தகராறு. மிராசுதார்களுக்கும், குடியானவங்களுக்கும் இடையிலே நடந்த கட்டுக்குத்தகை பிரச்சனை… விவசாயிகள், கூலி விவசாயிகளுக்கு, இன்னைக்கி மாதிரியே சொந்த நிலமோ, கட்டுப்படியாகக் கூடிய கூலியோ கிடையாது. நிலங்களை கட்டுக்குத்தகைக்கு எடுத்திருந்த விவசாயப் பழங்குடி மக்கள் கட்டுக்குத்தகையை அளக்க மாட்டோம்னு சொன்னாங்க. அந்த ஏரியாவிலே கனு சன்யால், சாரு மஜும்தார் இவங்களெல்லாம் பேர் வாங்கியிருந்தாங்க. தொழிற்சங்கத்திலே இருந்ததினாலே அவங்க பேர் தெரிந்த தலைவர்களா இருந்தாங்க. ஆனால் நக்சல்பாரி ஊர்லே கலவரம் ஏற்பட்டபோது கனு சன்யாலோ, சாரு மஜும்தாரோ அங்க இல்லை. அதை அவங்க ரெண்டுபேரும் ஆயுதப் புரட்சின்னாங்க. பத்திரிகைகளும் அப்படியே எழுதிச்சு…” என்றார் கோபால் பிள்ளை.

“ஒங்க கட்சிக்கும் நக்சல்பாரி கட்சிக்கும் என்ன வித்தியாசம் தாத்தா?…” என்று கேட்டான் சோமு.

“நாங்க ஆயுதப் புரட்சியை ஏத்துக்கலை. எங்களுக்கு ஜனநாயகத்துல நம்பிக்கை இருக்கு. கனு சன்யால், சாரு மஜும்தார் இவங்கள்லாம் ஆயுதப்புரட்சி தான் வேணும்ங்கிறாங்க..”

“ஆயுதம்னா அரிவாள், கத்தி இந்த மாதிரியா?..”

“அருவாளாவது, கத்தியாவது?… துப்பாக்கியத்தான் சொல்றாங்க…”

“துப்பாக்கிக்கு எங்க போக?…”

“சாரு மஜும்தார் சொல்லுதாரு சைனா துப்பாக்கி தரும்ங்காரு. இல்லேன்னா போலீஸ்காரங்ககிட்டே இருக்கிற துப்பாக்கிய எடுத்துக்கிட வேண்டியதுதாங்கிறாரு..”

“இதெல்லாம் நடக்க்கக்கூடியதா? போலீஸ் வேடிக்கை பாத்துக்கிட்டா இருக்கும்?”

“போலீஸ விடு சோமு… மிலிட்டிரியை எதிர்க்க முடியுமா?…ஹைதராபாத்லே தெலுங்கானா புரட்சின்னாங்க என்ன ஆச்சு?…”

“பைத்தியக்காரத்தனமால்லா இருக்கு?” என்றான் சோமு,

“பைத்தியக்காரத்தனம், முட்டாள்தனம் எல்லாந்தான்…”

நாராயணனுக்கு ஆபீஸுக்குப் போக வேண்டும். நேரமாகிறது என்று நினைத்தான். கோபால் பிள்ளையைப் பார்த்து, “நான் வாரேன்…” என்றான்.

“ஆமா! நீ ஆபீசுக்குப் போகணுமல்லா?..போயிட்டு வா..” என்றார் கோபால் பிள்ளை. சோமுவும் புறப்படுவதற்காக எழுந்தான். “நீயும் கெளம்புதியா?” என்று கேட்டார். “ஆமா தாத்தா… போயிட்டு வாரேன்…” என்றான் சோமு. நாராயணனும், சோமுவும் பேசிக்கொண்டே படியிறங்கித் தெருவுக்கு வந்தனர். தயிர்க்காரி சத்தமிட்டுக் கொண்டே போனாள். எதிரே உள்ள ஸ்வீட் லேண்டிலிருந்து இரண்டு பேர் பிளாட்பாரத்தில் இறங்கினார்கள். நாராயணன் தெருவைக் கடந்து நடக்க ஆரம்பித்தான். சோமுவும் வீட்டுக்குப் போகிற பாதையில் நடந்தான்.

ஆனால் சோமுவுக்கு வீட்டுக்குச் செல்லத் தோன்றவில்லை. தானப்ப முதலி தெருவிலுள்ள சபாபதியைப் பார்க்க வேண்டுமென்று தோன்றியது. கோபால் பிள்ளை தாத்தா நக்ஸல்பாரி பிரச்சனையைப் பற்றிச் சொன்னதில் நம்பிக்கை ஏற்படவில்லை. அவர் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர். அதனால் அதற்கு ஏற்றபடி பேசுகிறார் என்றுதான் தோன்றியது. அவன் கம்யூனிஸத்தைப் பற்றி  படித்திருக்கிறான். நக்ஸல்பாரியில் ஏற்பட்டது வெறும் மிராசுதார்- விவசாயிகளுக்கு இடையே நடந்த குத்தகைத் தகராறு என்று தோன்றவில்லை. அது வர்க்கப் போராட்டம் என்று நினைத்தான். அப்படித்தானே மார்க்ஸ், ஏங்கல்ஸின் புஸ்தகங்கள் கூறுகின்றன? ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையிலும், விவசாயிகளுக்கும் நிலவுடமையாளர்களுக்கும் இடையிலும் நடக்கிற வர்க்கப் போராட்டமாகத்தான் அது இருக்க வேண்டும். கோபால் பிள்ளை தாத்தா எதையோ மறைக்கிறார். அல்லது அவருக்கு முழு விபரம் தெரியாதோ என்னவோ?

‘சோவியத்லேண்ட்’ பத்திரிக்கையை சபாபதி வீட்டில் பல முறை பார்த்திருக்கிறான். வழவழப்பான தாளில் பல வர்ணங்களில் அச்சடிக்கப்பட்ட அந்தப் பத்திரிகையை சோமுவுக்கு ரொம்பவும் பிடிக்கும். அதிலுள்ள புகைப்படங்கள், கட்டுரைகள் எல்லாம் சோவியத் மண்ணை சொர்க்க பூமியாகக் காட்டின. அந்தப் படங்களில் இடம் பெற்றுள்ள ஆண்கள், பெண்களின் முகங்களில்தான் எவ்வளவு சிரிப்பு. எவ்வளவு புஷ்டியாக இருக்கிறார்கள் அவர்கள். தொழிற்சாலைகளிலும், பண்ணை நிலங்களிலும் சிரித்துக்கொண்டே வேலை செய்கிறார்கள் அவர்கள். மார்க்ஸின் கனவை நனவாக்கிய பூமியல்லவா அது? இந்தியா எப்போதும் அந்த மாதிரி மாறும்? இங்கே தொற்றல் உடம்பும், வறுமையுமாகத்தானே இருக்கிறார்கள்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ரூபாய்க்கு மூன்று படி அரிசி போடுவோம் என்றார்கள். தமுக்கத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தி.மு.க தலைவர்கள் எல்லாம், இது ஏழைகளின் கட்சி, பாட்டாளிகளின் கட்சி என்றார்கள். ஆனால் வறுமையும், சீக்கும் அப்படியேதான் இருக்கிறது. நம் வீட்டிலுள்ள வசதியும், சாப்பாடும் பாக்கியத்து அத்தை வீட்டில் ஏன் இல்லை. இத்தனைக்கும் பாக்கியத்து அத்தை அப்பாவுடைய ஒரே தங்கை. கோபாலக் கொத்தன் தெருவில் பாக்கியத்து அத்தை ஒண்டுக்குடித்தன போர்ஷனில் வாடகைக்கு இருக்கிறாள். கிட்டு மாமா, அப்பாவுடைய கடையில்தான் 150 ரூபாய் சம்பளத்தில் வேலை பார்க்கிறார். 150 ரூபாயில் என்ன செய்ய முடியும்?அவருக்குச் சீட்டாடுகிற பழக்கம் வேறு. பாக்கியத்து அத்தை பாவம். சோவியத் ரஷ்யாவில் அண்ணன் பணக்காரராகவும், தங்கை ஏழையாகவும் இருக்க விடுவார்களா? அது சொர்க்க பூமியல்லவா? சொர்க்கத்தில் ஏற்றத் தாழ்வு இருக்குமா என்ன?

சபாபதி வீடு தெருவிலிருந்து நல்ல உயரத்திலிருந்தது. நான்கு படிகள் ஏறித்தான் வீட்டுக்குள் நுழைய வேண்டும். முன்னால் கம்பி அழி போட்ட பெரிய நீளமான வராண்டா. படியேறி வாசலில் நின்று கொண்டே, “சபாபதி… சபாபதி..” என்று கூப்பிட்டான். வீட்டிற்குள்ளிலிருந்து கறி தாளிக்கிற வாசனை வந்தது. அறை அறையாக வீடு உள்ளே விரிந்து கொண்டே சென்றது. தூரத்தில் யாரோ பெண் எட்டிப்பார்க்கிற மாதிரி இருந்தது. இருட்டில் முகம் தெளிவாகத் தெரியவில்லை. பிறகு அந்த உருவம் வேகமாக நடந்து இவனை நோக்கி வந்தது. அது சபாபதியுடைய அம்மாவேதான்.

“யாரு?… சோமுவா?…” என்று கேட்டுக்கொண்டே சபாபதியின் அம்மா கதவைத் திறந்தாள். “உள்ளே வாயேன்… ”

“இல்லை, சபாபதி இல்லையா?”

“அவன் நேத்திக்கி என் நாத்தனார் குடும்பத்தோடு ராமேஸ்வரம் போயிருக்கான்… உன்கிட்டே சொல்லலையா?…”

“ரெண்டு நாளா அவரைப் பார்க்கலை…இந்தப் பக்கமா வந்தேன். அதான் பாத்துட்டுப் போலாம்னு…”

“உள்ளே வா..காபி சாப்பிட்டுப் போ..”

“இல்லை..அப்புறமா வர்றேன்”

“இன்னிக்குச் சாயந்திரம் வந்திருவான். வந்தான்னா அவன்கிட்ட சொல்றேன்”

“சரி..சும்மாதான் வந்தேன்… வர்றேன்…”

“காபி சாப்பிடலாம்… சரி போயிட்டு வா..”, சபாபதியோட அம்மா உள்ளே போய்விட்டாள். சோமு தெருவில் இறங்கி நடந்தான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.