அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் ….

இடுப்பையும்,காலையும் அபாயகரமான கோணங்களில் வைத்தபடி இருபது, இருபத்தைந்து பேர் ஆடிக்கொண்டிருந்ததை அந்த மூன்று பெண்களும் ஆவென்று பார்த்துக் கொண்டிருந்தனர். திடீரென்று “ அட நாதாரிப் பயலே! இதுக்காகவாடா இம்புட்டு தூரம் துரத்திக்கிட்டு வந்தே! பிக்காரிப் பயலே!பிக்காரிப் பயலே!” வடிவேலு மொத்த ஆரம்பிக்க, ”யக்கா! ஏங்க்கா மாத்தினீங்க!” என்று மஞ்சள் சுடிதார் பெண், ரிமோட்டை பல் நீண்ட பெண்ணிடமிருந்து பிடுங்கத் தொடங்க அங்கே கூச்சலும் , குழப்பமும் தொடங்கியது.

சத்யமூர்த்தி பூட்டியிருந்த கிரில் கதவை அசைத்தபடி,

“ஏம்மா ! ஒரு நிமிஷம்!”

“ஹலோ! இங்க பாருங்களேன்!”

“எக்ஸ்யூஸ்மீ!”

“இத பாருங்கம்மா! கொஞ்சம் கதவைத் திறங்களேன்”

என்று வித விதமாக கூப்பிட்டுப் பார்த்தான்.  ம் ஹூம்… அவர்களுக்குக் கேட்டதாகத் தெரியவில்லை.

கிரில் கதவை ஒட்டிய மாடிப் படியிலிருந்து ஒரு பருமனான பெண் வாளியும் கையுமாக இறங்கியவள் இவனைப் பார்த்து “இன்னா சார்? இன்னா ஓணும்?” என்று கேட்டு விட்டு “இவளுக இப்பிடித்தான்,டி.வி பாத்தாளுகன்னா ,எதும் காதுலயே உளுகாது” என்று விட்டு

“ஏய் ஜோதி! இங்க பாரு சார் கூப்பிடறாரு” என்று பெருங்குரலில் சொல்லிவிட்டு பூட்டைத் திறந்தாள்.

பல் நீண்ட பெண் இவனைப் பார்த்து, ”வாங்க சார்! யாரைப் பாக்கணும்?” என்றாள்.

“சாந்தம்மா இருக்காங்க இல்ல …..”என்று ஆரம்பித்ததும்,

“மேடத்துகிட்ட பேசினீங்களா?” என்றாள்.

“ஆமா நேத்து ஃபோன்ல சொன்னேனே!” என்றான்.

“உங்க பேர் என்ன சார்?”

“சத்ய மூர்த்தி”

ஒரு பழைய டயரியைத் திறந்து பார்த்து விட்டு “சரிங்க சார்! ஏய் திலகா! சாரை சாந்தா அம்மா ரூமுக்குக் கூட்டிக்கிட்டுப் போ.அதுக்கு முன்னாடி அம்மா என்னா பண்றாங்கன்னு பாரு. தூங்கறாங்களோ என்னவோ!” என்றாள்.

மஞ்சள் சுடிதார் பெண் அந்த கூடத்தை ஒட்டி இருந்த இரண்டு அறைகளில் வலப் பக்க அறையில் நுழைந்து “பாட்டி! உங்களைப் பாக்க யாரோ வந்துருக்காங்க” என்று சொல்லிவிட்டு “முழிச்சுக்கிட்டுத்தான் இருங்காங்க , வாங்க சார் “ என்றது.

அந்த எட்டுக்கு பத்து அறையில் நுழைந்தவுடன் வலது பக்கம் இருந்த கட்டிலில் அந்த அம்மா உட்கார்ந்திருந்தார்.அடிக்கடி துவைத்ததால் வண்ணங்களை இழந்து வெளிறிய மெத்தை விரிப்பில் அமர்ந்தபடி இவனைப் பார்த்து “ வாங்க! வாங்க!” என்றபடி கை கூப்பினார்.

“எழுந்திருக்க முடியலை ! சாரி! உங்க பேரு……?” என்று இழுத்தார்.

அவன் பதில் சொல்வதற்குள் “உக்காருங்க!உக்காருங்க!” என்றார். அந்த அறையில் இருந்த ஒரே நாற்காலியில் அமர்ந்தபடி “ சத்திய மூர்த்தி!” என்றான்.

“அடடா! ரொம்ப அருமையான பேரு! தீரர் சத்திய மூர்த்தி பேராச்சே! எப்பேர்ப்பட்ட சுதந்திர போராட்டத் தியாகி,ஆற்றொழுக்கா அருமையா பேசக் கூடிய பேச்சாளர்! நம்ம பெருந்தலைவர் காமராஜரின் அரசியல் குரு, அவர் செய்த தியாகங்களைப் பற்றித் தெரிஞ்சுக்கறதைக் கூட விட்டுடுங்க, அவரோட பேர் கூட இன்றைக்கு ஐம்பது வயதுக்குக் கீழ்ப் பட்ட எத்தனை பேருக்குத் தெரியும்? ஏதோ காங்கிரஸ் கட்சி அலுவலக கட்டிடத்துக்கு அவர் பேரு வச்சதாலே லட்சத்துல ஒத்தர் யோசிப்பாங்களோ என்னவோ, யாருடா இதுன்னு? நம்ம சரித்திரங்கள் எழுதப்படற விதமும், போதிக்கப்படற விதமும் ரொம்பவே தவறா இருக்கு இல்லையா? என்ன சொல்றீங்க?  “ என்றார்.

தொலைக்காட்சித் திரையில் ஒரு கண்ணும் அறையில் ஒரு கண்ணுமாக இருந்த திலகா மெல்ல வெளியே செல்ல முற்பட்டாள்.

“திலகா! ஓடறதிலயே குறியா இருக்காத! சாருக்கு கொஞ்சம் தண்ணி கொண்டு வா! நல்ல வெயில்ல வந்திருக்கார் பாவம்!”

மேற்குப் பார்த்த ஜன்னல் சென்னை சூரியனின் கோபத்தை அந்த அறையில் கொட்டிக்கொண்டு இருந்தது

.இவன் பக்கம் திரும்பி “அப்புறம் சொல்லுங்க!உங்கசொந்த ஊரு எதுவோ?”என்றார்.

இவன்”மன்னார்குடி” என்றான்.

“அப்பிடியா?ரொம்ப ஸந்தோஷம்! ரொம்ப நல்ல ஊராச்சே! மன்னார்குடி மதிலழகு, திருவாரூர் தேரழகுன்னு சொல்லுவாங்க இல்ல?” சிரிக்கும் பொழுது பல் வரிசை அழகாக இருந்தது. பல் கட்டியிருக்கிறாரோ என்னவோ என்று நினைத்துக் கொண்டான். கொஞ்சம் உயரமாய், ஒல்லி உடல் வாகாக,எழுபது, எழுபத்தைந்து வயது மதிக்கலாம் போல இருந்தார்.

திலகா தண்ணீரைக் கொடுத்து விட்டு வடிவேலுவா,விஜய் யா, என்று தீர்மானிக்க அவசரமாக ஓடியது. கூடத்தில் சச்சரவு திருப்பியும் தொடங்கியது.

“இப்ப ஏதேதோ காரணங்களினால அந்த ஊர் பேரைச் சொல்றதுக்கே தயங்கறா மாதிரி ஆயிடிச்சு பாருங்க! அந்த கோவில் அழகு ஒண்ணு போதுமே! என்னோட ஒண்ணு விட்ட சித்தி ஒத்தங்க அந்தஊர்ல இருந்தாங்க! அவங்க பேரு பொன்னம்மா.பாக்க தங்கம் மாதிரி ஜொலிப்பா! நல்ல சேப்பு! அதான் அந்த பேரு வச்சாங்க போலிருக்கு!அவங்க கல்யாணத்துக்கு நான் போயிருந்தேன்.எனக்கு அப்போ ஆறு , ஏழு வயசிருக்கும்…..என் பக்கத்துல இருந்த ஒரு பாட்டி, இன்னொரு மாமிகிட்ட சொல்லிண்டு இருந்தா ‘இதென்னடி இது அட்சதையும் எள்ளையும் கலந்தாப்பல இருக்கே’ன்னா

‘ஆமா அத்தை, பொன்னு தணல் மாதிரி , அவர் தணலைக் குளுப்பாட்டின மாதிரி. அதனால என்ன, மாப்பிள்ளை நல்ல உத்யோகம் பாக்கறார்,கை நிறைய சம்பாதிக்கறார், மாமனார், மாமியார்னு பிக்கல் பிடுங்கல் கிடையாது. கூடப் பிறந்த சஹோதரா அவா அவா பாட்டுக்கு இருக்கா. வேற என்ன வேணும்’னா.

நான் அம்மாகிட்ட கேட்டேன் அட்சதையும் , எள்ளும் கலந்ததுன்னா என்ன அம்மான்னு ,அம்மா தலையில குட்டி ‘அசத்து! சும்மாயிருடி, யார் காதிலயாவது விழுந்துடப் போறது’ன்னா.அப்புறம் ரொம்ப வருஷம் கழிச்சு புரிஞ்சுண்டேன், அந்த சித்தப்பா கருப்பா, கொஞ்சம் வயசானவரா, கன்னம் ஒட்டி பல்லு துருத்திண்டு இருந்தார்னு. அதுக்கப்பறம் ஒரு பதினைந்து வருஷம் கழிச்சுதான் நான் சித்தியைப் பார்க்க நேர்ந்தது. அதுக்கு நடுப்ற , கல்யாண வீடுகள்ல , எதாவது விசேஷங்கள்ல, சொந்தக்காரா பாத்துக்கும்படியான சந்தர்ப்பங்கள்ல அரச புரசலா எல்லாரும்  பேசிப்பா, அந்த சித்தியை சித்தப்பா வீட்டுல வச்சு பூட்டிட்டு ஆஃபீஸுக்குப் போவாராம்.  ஒரு நா இல்ல ரெண்டு நா இல்ல , பதின்ஞ்சு வருஷம்! எனக்கு கேக்கும் போதே பயம்மா இருந்தது, அதெப்படி ஒரு மனுஷி பூட்டின வீட்டுக்குள்ளயே உக்காந்துண்டிருந்தான்னு. அப்பிடி எனக்கு நேர்ந்ததுன்னா என்ன பண்ணுவேன்னு யோசிச்சுப் பாப்பேன். ஒரே நடுக்கமா இருக்கும்.”

குனிந்து கொண்டு கோர்த்துக் கொண்டிருந்த கைகளைப் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தவர், நிமிர்ந்து  அவனைப் பார்த்து ”ஒரு பதினைந்து வருஷம் கழிச்சு சித்தியைப் பாத்தேன்னு சொன்னேன் இல்லியா, அப்போ கேட்டேன் ’பூட்டிண்டு போனது வாஸ்தவமா சித்தி? நீ எப்பிடி அப்படி இருந்தே’ன்னு. ’முதல் நா கதவைப் பூட்டும் போது திக்னு இருந்தது, கொஞ்ச நா பித்துப் பிடிச்சா மாதிரிதான் இருந்தது, அந்த மூணு கட்டு வீட்டுல வாசக் கதவுக்கும் , கொல்லைக் கதவுக்கும் நடப்பேன் , நடப்பேன் அப்பிடி நடப்பேன். கால் ஓஞ்சப்பறம் ஊஞ்சல்ல ஒக்காந்து வீசி வீசி ஆடுவேன். திருவையாத்தில எங்க அப்பாவாத்தில  இருந்ததையெல்லாம் நினைச்சுப்பேன். தெருக்குட்டிகளை எல்லாம் இழுத்துண்டு பெரு மத்தியான வேளையில, வெயில் வீணா போகாம எல்லாராத்துக் கொல்லையில இருக்கற மரங்கள்ல ஏறி கொட்டம் அடிக்கறது, அந்த ஆத்துப் பேருக்குத் தெரியாம பழங்களைப் பறிச்சுத் திங்கறதுன்னு……கோடியாத்து ஆத்மனாபையராத்து மாங்கா அத்தனை ருசியா இருக்கும், காவேரி மாமியாத்து சப்போட்டா, இப்பிடி ஒண்ணை விடறதில்லை. காவேரியில தண்ணி இருக்கற நாள்ல அந்த கரைக்கும் இந்த கரைக்கும் நீஞ்சி அதகளப்படுத்துவோம், தண்ணி வராதப்போ, அந்த மணல்ல எத்தனை விளையாட்டு விளையாடுவோம். அம்மா கத்துவா ’என்னடி எப்பப் பாரு தெருத் தங்கச்சியாட்டம் வீதியிலேயே சுத்திண்டு இருக்கே?  நாளைக்கு கல்யாணமாகிப் போற பொண்ணு! எல்லாரும் என்னைத்தானே கேப்பா பொண்ணை இப்பிடி வளத்திருக்காளேன்னு’, போம்மான்னுட்டு திருப்பி வாசலுக்கு ஓடுவேன். அதையெல்லாம் பத்தி நினைச்சுண்டு ஒக்காந்திருப்பேன்.

என்னடி என் பொன்னுக் குட்டி! என்ன பண்ணிண்டுருக்கேன்னு சித்தப்பா சிரிச்சுண்டே கேட்டுண்டு வரப்போ எல்லாம் மறந்து போயிடும்.

என்னை உக்காத்தி வச்சு அவர்னா நித்யம் சமைச்சுப் போடுவார்! நீ பக்கத்தில நில்லுடி குட்டி அது போறும்பார். எப்பிடி சமைப்பார்ங்கற? அடேயப்பா, அடேயப்பா , அது மாதிரி அதுக்கப்பறம் நா எங்கயுமே சாப்பிட்டதில்லை! கையா சமைக்கறது , மனசுன்னா சமைக்கறது.

ஒரு நா நான் ஊஞ்சல் ஆடிண்டிருக்கறச்சே காமெரா உள் ஜன்னல் வழியா வெளித்திண்ணையிலேந்து பக்கத்தாத்து மாமி பாத்துட்டு ‘ இதென்னடி கூத்தா இருக்கு, வீட்டை வெளியில பூட்டிண்டு போறதாவது? நா கேள்விப் பட்டதேயில்லையே’ன்னா. எல்லார் ஆத்து மாமியும் எட்டி எட்டி பார்த்தா. சாயங்கலம் சித்தப்பா வந்ததும் சொன்னேன். ’சொன்னா சொல்லிட்டுப் போறா, அவா சொல்றாங்கறத்துக்காக நாம இருக்கற ஜாக்கிரதையில நாம இருக்க வேண்டாமா? இது அயோக்யப் பசங்க ஊரு, நாமதான் ஜாக்ரதையா இருக்கணும். இதப் பாரு! உன் கிட்ட ஒரு விலை உசந்த ரத்னக் கல்லு இருக்குன்னு வச்சுக்கோ, அதை வாசத்திண்ணையில போட்டு வைப்பயா, இல்ல இரும்பு பெட்டியில வச்சு பத்ரமா பூட்டி வைப்பயா? நீ எனக்கு ரொம்ப ரொம்ப உசத்தியான பண்டம்டி குட்டி! புரியறதா?’ன்னு என்னைப் பாத்து வாத்சல்யமா சிரிச்சார். அப்பிடியே பழகிப் போயிடுத்துன்னா. ஆனா எனக்குத் தோணித்து ‘சித்தி  !கல்லுக்கு உணர்ச்சி கிடையாது, ஆனா நீ மனுஷியாச்சே’ன்னு ஆனா சொல்லலை.

பதினைஞ்சு வருஷம்  அப்படி வாழ்ந்தப்புறம் சித்தப்பா போய் சேர்ந்தார். அப்பறம் அந்த நாள்ல எல்லார் வீடுகளிலும் நடக்கற மாதிரிதான்,  சித்தப்பாவோட கூடப் பிறந்தவா சொத்தையெல்லாம் ஏமாத்தி பிடுங்கிண்டு அவளை நடுத் தெருவில நிறுத்தினா.

அதுல ஒரு முரண் நகை ,இல்லாட்டா நகை முரணா….ஏதொ ஒண்ணு! அப்பிடி சமையலே தெரியாத சித்தி, சித்தப்பா போனப்பறம் சமையக்காரியா மாறி தன் வயத்துப் பாட்டைப் பாத்துண்டா.

சொல்லுவா ’எனக்கு ஒண்ணுமே தெரியல கோந்தை! முத முதல்ல வெளியில பூட்டாத வீட்டுக்குள்ள இருந்தது பயமா இருந்தது. அந்த பயத்துக்கு ஜாஸ்தி இடமில்லாமதான் வெளியிலே துரத்திட்டாளே! அப்பறம் தெருவில நிக்கறப்போ, வேற விதமா பயமா இருந்தது. தம்பி இருந்த ஊருக்குப் போனேன். அக்ரஹாரம் முழுக்க எட்டணாவுக்கும் , நாலணாவுக்கும் இட்லி, தோசைக்கு அரைச்சுக் கொடுப்பேன். சின்ன பண்ணை ஆத்து மாமி கால் நடக்க முடியாதவா, எனக்கு சமையல் கத்துக் கொடுத்தா. புளியையும் , உப்பையும் ,  சாம்பார் பொடியையும் தட்டுல கொண்டு போய் காட்டி, காட்டி எதுக்கு அப்பறம் என்ன போடணும் ,எவ்வளவு போடணும்னு கேப்பேன், சொல்லிக் குடுத்தா.’”

பின்னர் மெல்ல பெரு மூச்செறிந்தபடி சொன்னார்,

“எதுக்கு சொல்ல வரேன்னா, வாழ்க்கை யாரை ,எப்போ, எங்கே , எப்படி வீசியெறியும்னு தெரியாததுதான் இயற்கையோட சூக்ஷுமமான மர்ம விதி போலிருக்கு! ‘’. அவனைப் பார்த்து லேசாக சிரித்தார்.

உடனே குற்ற உணர்ச்சி ததும்பும் முக பாவத்துடன், உண்மையான வருத்தம் குரலில் தொனிக்க,

“அடடா! வந்தவங்களுக்கு சாப்பிட ஒண்ணும் குடுக்காம பேசிக்கிட்டே இருக்கேன் பாருங்க! திலகா……! “என்று அழைத்தபடி பக்கத்திலிருந்த மணியை அழுத்தினார். வாக்கரைக் காண்பித்து “நடக்கறதுதான் கஷ்டமா இருக்கு, இல்லைன்னா நானே எழுந்து குடுத்துடுவேன்”

“பரவாயில்லைங்க”என்றான். இவரிடம் என்ன சொல்வது, எப்படி சொல்வது என்று நினைத்துக்  கொண்டே “அதாவது ….நான் எதுக்கு வந்தேன்னா…..”என்பதற்குள் அந்த பெண் வந்து “என்ன பாட்டி?” என்றது.

“அந்த அலமாரியைத் திறந்துக்கோ! இரண்டாவது தட்டில இருக்கற எவர்சில்வர் டப்பால மைசூர் பாக்கு இருக்கு! பக்கத்துல பிளாஸ்டிக் டப்பால காரா சேவு இருக்கு. பக்கத்துலயே தட்டு இருக்கு பாரு. அது இரண்டையும் எடுத்து வைச்சு அங்கிளுக்கு கொடு. உனக்கும் வேணுங்கிற அளவு எடுத்துக்கோ! அப்புறம் சமையல் ரூம்ல ரீடாகிட்ட சொல்லி காபி கொண்டு வந்து கொடு”

இவனைப் பார்த்து “காபி குடிப்பீங்க இல்லை, இல்லன்னா டீ சொல்லட்டமா? சக்கரை போடலாமில்ல?” என்றார்.

“இல்லீங்க எதுக்கு இதெல்லாம். வேணாமே”

“நல்லாருக்கே!வீட்டுக்கு வந்தவங்களுக்கு ஒண்ணும் சாப்பிடக் குடுக்காம அனுப்புவாங்களா என்ன?’அதிதி தேவோ பவ’ன்னும் ‘செல்விருந்தோம்பி வரு விருந்து பார்த்திருப்பான்’னும் சொன்ன தேசம் இல்லையா இது?” சிரித்து விட்டு

“காபி வித் சக்கரை இல்லியா?” என்று மறுபடி கேட்டார், இவன் தலையை ஆட்டினான்.அந்த பெண் சின்ன முக்காலியில் தட்டை தின்பண்டங்களுடன் வைத்துவிட்டு “தண்ணியும் , காபியும் கொண்டு வரென் சார்”என்றது.

“முதல்ல தண்ணி கொண்டு வை! அப்புறம் காபி வரட்டும். காபிக்காக தண்ணி கொண்டு வரதை டிலே பண்ண வேண்டாம்.”என்று சொல்லிவிட்டு

“கம்யூடருக்கு குடுக்கற மாதிரி கமாண்ட்ஸ் எல்லாம் கரெக்டா குடுக்கணும், இல்லன்னா குழப்பம்தான்” என்றபடி சிரித்தார்.

“சாப்பிடுங்க! சாப்பிடுங்க!’ என்றார்.

இவன் கொஞ்சம் குழப்பத்தோடும், சங்கடத்தோடும் வந்த வேலையை விட்டுட்டு இப்படி மைசூர் பாகு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேனே என்று நினைத்துக் கொண்டான்.

“ஒரு வேடிக்கை பாருங்க! இன்னிக்கு காலையிலேந்து’தலையாலங்கானத்து செரு வென்ற நெடுஞ்செழியன்’ங்கிற பேர் மனசுக்குள்ள திருப்பி திருப்பி வந்துகிட்டே இருந்தது. சில சமயம் அப்பிடி சம்பந்தா சம்பந்தமில்லாம ஏதாவது தோணும். என்ன காரணம்னே தெரியாது.உங்களுக்கு கூட அந்த மாதிரி அனுபவம் நிச்சயம் வந்திருக்கும். அப்புறம் எப்பவோபடிச்ச பழைய சங்க இலக்கிய பாடல்களிலிருந்து துண்டு துண்டா வரிகள் ’முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே’ எப்பேர்ப்பட்ட காவிய  சோகமான வரிகள், தலைவன் இறந்திட்டான் யாரும் உன்னை சூடப் போவதில்லை நீ ஏன் பூத்தேங்கிறது ஒண்ணு, தவிர உனக்கு பூக்க கூட எப்பிடி மனசு வந்தது , அவனே போய்ட்டானேங்கிறது  மாதிரி இன்னொரு தொனி அதில.

அப்புறம் சிலப்பதிகாரத்தில மாதவி சொல்ற மாதிரி வர ‘நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால்’அது ஒரு கொடுமையான நிலை இல்லியா யாருக்குமே?” பின்னர் மெதுவான குரலில் தனக்குத்தானே சொல்லுவது போல ‘நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால் ‘என்று சொல்லிக் கொண்டார்.

பிறகு தலையை லேசாக ஆட்டியபடி சொன்னார்,

“உங்க கையிலே ஜெய மோகனோட சங்க சித்திரங்கள் புத்தகத்தைப் பார்த்தவுடன் தோணுச்சு, உங்க்கிட்ட சொன்னா நல்லா புரிஞ்சிப்பீங்க இதையெல்லாம்னு. ஆனந்த விகடன்ல தொடரா வந்தப்போ படிச்சிருக்கேன்”

ஜெ மோ எத்தனை எழுதறார்?எழுதிக் குவிக்கறார்? அதுக்கு எத்தனைபடிச்சிருப்பார்? நினைச்சாலே மலைப்பா இருக்கு. நானும் ஒரு காலத்தில சுமாரா படிச்சிருக்கேன். கல்கி, தேவன்ல ஆரம்பிச்சு, ராஜம் கிருஷ்ணன்,அனுத்தமா, புதுமைப்பித்தன்,,சூடாமணி, கு.ப.ரா, தி. ஜானகி ராமன், லா.ச.ரா, மௌனி,அசோகமித்ரன்,சுஜாதா,ஆதவன், அம்பை, வண்ணதாசன், வண்ணநிலவன், நாஞ்சில் நாடன், ஆ…..ஜெய காந்தன் அவரை விட்டுட்டேனே,அவர் எழுதின சில வரிகள் இன்னிக்கும் மனப்பாடமா தெரியும்! இன்னும் எத்தனையோ மொழி பெயர்ப்பு கதைகள், மராத்தில வி.ஸ காண்டேகர் எழுதின கதைகளை தமிழ்ல கா.ஸ்ரீ.ஸ்ரீ.ன்னு ஒத்தர் மொழிபெயர்த்திருப்பார், இப்பிடி எத்தனையோ.

கணையாழில ஒரு தடவை எழுதியிருந்தாங்க ராஜம் கிருஷ்ணனைப் பத்தி, ’தமிழ் நாட்டின் வெளிறிய ஆர்தர் ஹெய்லி’ன்னு ஞாபகம் இருக்கா?

அப்ப இருந்தது எல்லாம் பொய் , இப்ப இருக்கிறதுதான் மெய்னு இருக்கு ம்……”

காபி வந்தது.

“குடிங்க! காபி சூடா குடிச்சாதான் டேஸ்ட்! சூடு ஒரு ருசி இல்லையா? அந்த பழமொழியோட இன்னோரு பகுதியோட  எனக்கு உடன்பாடு இல்லை” சிரித்தார். சிரிக்கும் போது அந்த முதுமையில் கனிந்த முகம் இன்னும் கனிந்து மனதை நனைத்தது.

அவன் ஒரு மிடறு குடித்து விட்டு

“இப்ப என்னன்னா….” என்று ஆரம்பித்தான்.

“ இருக்கட்டும், இருக்கட்டும்… மெதுவா குடிச்சுட்டு சொல்லுங்க! என்ன அவசரம்?”

தன்னைச் சுற்றியிருந்த தினசரிகளைஅடுக்கி கொண்டே சொன்னார்,

“நான் காலேஜ்ல படிக்கும் பொழுது ஒரு கவிதை எழுதினேன், சில வரிகள்தான் ஞாபகம் இருக்கு அதுவும் அவ்வளவு தெளிவா, சரியா நினைவில்லை, அது இப்படி வரும்,

‘சாவு ஒரு நாள் வந்து என்னை சல்லாத் துணியாய்  மூடும்

மந்திர மையாய் இமைகளின் மேலே மரணம் வந்து கூடும்’

இளமைங்கிற மந்திரக் கோல் செய்கிற ரசவாதத்தைப் பாருங்க! மரணத்தைக் கூட ஒரு விளையாட்டாய், கேளிக்கையாய் சரியா சொல்லப் போனால் ஒரு ரொமான்டிக் ஆன அனுபவமா பாக்கற மாயாஜாலம், அந்த மந்திரக் கோலால் மட்டுமே சாத்தியம்! நேற்றைப் போல இன்றும், இன்று போல நாளையும் இருக்கிற வாழ்க்கையில் மாறாத  சலிப்பு ஒரு பக்கம் , ஆனா இது வரை அனுபவத்திராத மரணம்ங்கிற மாறாத உண்மையை  சந்திக்கப் போற பயம் மறு பக்கம். இந்த சலிப்புக்கும், பயத்துக்குமான ஊசலாட்டத்துல கழியும் காலம்……இதற்கிடையில் ஒத்தன் ஏன் வாழணும்கறதுக்கு ஆயிரம் காரணங்கள் சொல்லலாம், ஆனா நீ ஏன் சாகலைன்னு கேட்டா ஒரு பதில் கூட இல்லையே? என்ன செய்யலாம்?” பார்வையே இல்லாத பார்வையாக பார்த்துக் கொண்டு மெல்லிய குரலில் கேட்டார்.

சத்யமூர்த்தி கடிகாரத்தைப் பார்த்தான்.

“சரிங்க! அப்ப நான் வரேன்”என்றான்.

அவர் உட்கார்ந்திருந்த இடத்தில் லேசாக அசைந்தபடி கையை லேசாக கூப்பியபடி,

“ரொம்ப தாங்க்ஸ் சத்யமூர்த்தி!” என்றார், முகம் லேசாக அழுவது போன்றும், மன்னிப்பு கேட்பது போன்றும் இருந்தது.

அவன் அறையின் வாசற்கதவை நெருங்குகையில் சொன்னார்,

“சாந்தம்மா முதல் மாடியில மூணாம் நம்பர் ரூம்ல இருக்காங்க! நான் சாந்தா”என்றார்.

அவரை ஒரு நொடி பார்த்துவிட்டு,

“பரவாயில்லீங்க! நான் வரேன்”என்றபடி கிரில் கதவை நோக்கி நடந்தான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.