மதி நுட்ப நகரம்

நகரம் ஒரு பொழுதும் உறங்குவதில்லை                                                 

அது ஒரு மதிநுட்ப நகரம் .

அதன் ஒரு மில்லியன் கண்கள் எப்போதும்  கண்காணிக்கின்றன .

அதன் ஒரு மில்லியன் காதுகள் எப்போதும் உற்றுக் கேட்கின்றன

 

நிகழ்நிலைப்படுத்தப்பட்ட(updated ) வானிலை மாடல் அன்று மாலை வரக்கூடிய ஈரப்பனிப்பொழிவை முன்னுரைத்தது . நகரம், அன்றைய  திறந்த வெளி இன்னிசை நிகழ்ச்சியை  உள்ளரங்கிற்கு மாற்றி முன்பதிவு செய்திருந்தோருக்கு போன் மூலம் அதைத் தெரிவித்தது .ஆங்காங்கே  பரவலாக நிறுத்திவைக்கப்பட  வேண்டிய  தனித்தியங்கும் (autonomous ) பனி நீக்கு வாகனத் தொகுப்புக்கும்   ஏற்பாடு செய்து கொண்டது .  

~oOo~

ஒரு நபர்- நிரந்தர குடிமகன் – (PID chip 02D 1 AFOE ) –  உள்ளரங்குப் (indoor ) பூங்காவிலுள்ள  ஒரு மரத்தில் McIntosh  ஆப்பிள் ஒன்றைப் பறித்தார் . நகரம்  அவர்  கணக்கில் அதற்கான கட்டணத்தை டெபிட் செய்தது; ஆப்பிள்களின் தேவையை ஸ்திரப்படுத்தும் விதமாக, ஒரு ஆப்பிளின்   கட்டண வீதத்தை (tariff ) 1/3000 சென்ட் அளவுக்குத் துல்லியமாக சரிசெய்தது .

~oOo~

வருவாய் மாவட்டத்திற்கு சற்று வடக்கில் அமைந்த நடைபாதையில்  சில்லு பொறுத்தப்படாத(unchipped ) ஒரு  நபர்- பெண் – தள்ளாடி நடந்தாள் . அவள் கைகள் நடுங்கின. தனக்குத் தானே பேசிக்கொண்டாள் . நகரம்  ரேடியோ சிக்னல்களை சரிபார்த்து  அவளிடம் செயலாற்றும்  போன் ஏதுமில்லை  எனக்  கண்டறிந்தது

அவள் அணிந்திருந்த தலை மூடும் இளஞ்சிவப்பு .ஜாக்கெட்டும் , வெளிறிய ஜீன்ஸ் பான்ட் -டும் நைந்து போய் இருந்தன  . சாப்பாடோ  அல்லது உடற்பாய்மங்களோ (body fluids)  அவள் உடுப்புகளைக் கறைப்படுத்தியிருந்தன . இத்தகைய  விவரங்களில் மனிதர்கள்தான் நாட்டம் காட்டுவார்கள் . ஆனால் எந்த மனிதரிடமும் இந்த பெண்ணின் நிலைமையை விவரிக்கவேண்டிய அவசியம் நகரத்துக்கு இல்லை . எனவே  ஜனங்கள் என்ன உடுத்துகிறார்கள் என்றெல்லாம் நகரம் கவலை கொள்வதில்லை .

~oOo~

எங்கோ புகைவதை   நகரம் முகர்ந்தது  . ஒரு அடுக்கு மாடி கட்டிடத்தின்  மின்சுற்று ஓவர்லோடு ஆகிவிட்டதன் காரணமாக  உண்டான தீ  என்று தெரிந்து கொண்டது  . தீ அணைப்புக்காக இரண்டு தூய்மைப்பணி  ரோபோட்களை அனுப்பியது . கட்டிடத்தில்  குடியிருக்கும்   56 பேரும்   வெளியேற ஆணையிட்டது. மனித தீயணைப்பு படை  திடீர் அழைப்புக்குத் தயார்நிலையில்  இருக்கவும் உத்தரவிட்டது .

~oOo~

சில்லு பொருத்தப்படாத அந்த பெண் ஒரு  பாதுகாப்புக்  கேமரா பக்கமாகக்  கடந்து சென்றாள் . நகரம் அவள் முகத்தை நுட்பமாக ஆராய்ந்தது  .அவள் கண்களின் வெண் படலம்  நீலஒளி வழித்தடத்தில்  கருமையாக  நிறம்மாறித் தெரிந்தது .  கடும் ஜுரம் தாக்கிய உடலையும் , குளிரில் விரைத்துப்போன  கை கால் விரல்களையும் அகச் சிவப்புக் (infra red )  கதிர்கள்   காட்டின – அவள் உடனடி  மருத்துவக்  கவனிப்பு தேவைப்படக்கூடிய மனுஷி என்று அடையாளம் காணப்பட்டாள் .

ஒரு பராமரிப்பு ரோபோட்   நடைபாதையில் அவளை நோக்கி உருண்டது . அவள் மேல் மோதிவிடாமல் கவனமாக விலகி நின்றது. இருப்பினும் அவள் தடுமாறி அருகிலிருந்த அடுக்ககத்தின் பொய்ப்பளிங்குச் (mock-marble) சுவரில் சரிந்து ஒரு கந்தல் பொம்மையைப் போல் கசங்கினாள் .

‘ஹலோ , நான் பேசுவது கேட்கிறதா ?’- நகரம் அவளிடம் பேசியது .

‘யா ,நான் குடிபோதையில் இருக்கலாம் ;ஆனால் செவிடல்ல ‘-இது அவள் பதில்

‘உனக்கு மருத்துவ உதவி தேவையா?’

‘காயம் ஏதுமில்லை. மெதுவாக  எழுந்து நிற்கவேண்டும் .அவ்வளவு தான் ‘

‘வேறு ஏதாவது தவறு நடந்ததா ?’

‘ஏராளம் . ஆனால் அதைத் திருத்தும்  காலம் கடந்து விட்டது.  என்னுடைய கல்லீரல் செயலிழந்து வருவதாகப் பல மாதங்களுக்கு முன்பே மருத்துவர் சொல்லி விட்டார். குடியை நிறுத்தினால் ஒழிய , உறுப்பு மாற்றத்துக்குத்   தகுதி பெற மாட்டாய் என்றார் . அதனால் ஆம்புலன்ஸை  அழைக்கும் சிரமம் உனக்கு வேண்டாம்’ என்றாள்.  பேச்சினிடையே அவளுக்கு வந்த அவலச் சிரிப்பு, தொடர் இருமலாகிப்பின்   வலிய கோழைத்  துப்பலுக்கு  இட்டுச் சென்றது. .

‘ஆதார மருத்துவ சேவைக்கு கட்டணமில்லை ‘

‘நான் சொன்னதை கேட்டாய் அல்லவா, தேனே ?’

‘நான் உனக்காக செய்யக்கூடியது வேறு  ஏதேனும் உண்டா ?’

‘நீ வெப்பக்காற்றுத் துளைகளை திறந்து விடலாம். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பெல்லாம்  நடைபாதைகளில் வெப்பக்காற்றுத்  துளைகள் இருந்தன. இனிதாக இதமாக இருக்கும்’ –  அமர்ந்திருந்த நிலையில் தன்  புஜங்களுக்குள்  முழங்கால்களை நெருக்கமாய் வைத்து இறுக்கிக் கொண்டாள் .

‘இணை மின்னாக்க அமைப்புகள் (cogeneration systems ) நிறுவப்பட்டபோது  அவை அகற்றப்பட்டு விட்டன. வடக்குத்  திசையில்  சுமார் 80 மீட்டர் போனால் அங்குள்ள ஒரு  சந்தில் வழங்கித் தொகுப்பின்  (server bank ) வெப்பக்காற்றுத் துளைகளைக் காணலாம்’

‘நன்றி , தேனே’.-என்றாள் . மிகவும் சிரமப்பட்டுத்  தடுமாறி எழுந்து  நின்று நடைபாதை வழியே தள்ளாடி நடந்து சென்றாள் .

~oOo~

தீ அணைக்கப் பட்டு விட்டதாகத் தூய்மைப் பணி ரோபோட்  தெரிவித்தது நகரம் எச்சரிக்கைக் குறிப்பை விலக்கிக் கொண்டது  . இரண்டு குடியிருப்புகள் தவிர மற்ற குடியிருப்பு வாசிகள் வீடு திரும்ப அனுமதிக்கப் பட்டனர் .

~oOo~

அந்த சில்லு பொருத்தப்படாத பெண் குறுகிய சந்துக்குள்  திரும்பினாள் . வெப்பக் காற்றுத் துளைகளை அணுகியதும் , குளிருக்கு இதமான காற்றை அனுபவித்தவாறு ஜாக்கிரதையாகத்  தரையில் அமர்ந்தாள்

‘இந்த இடம் திருப்தியளிக்கிறதா?’ -நகரம் கேட்டது

‘இன்னுமா தொடர்பில்  இருக்கிறாய் ?’   

‘ஆம் .இந்த இடத்தில் நகரப் பணியாளர்களைத் தொடர்பு கொள்ளும் தீவிர கண்காணிப்பு முனையம்(surveillance point)  அமைந்துள்ளது’

‘நானும் நகர பணியாளராக இருந்தவள் தான் ,தெரியுமா? மெய்யான மனிதர்களும் , மனுஷிகளும் நகங்களுக்கீழ்  அழுக்குடன் பணியாற்றிய முந்திய காலகட்டத்தில்  . அப்போது நான் கேபிள் குழாய்களை புதைக்கப்  பள்ளம் தோண்டும் பாப்கேட் (Bobcat ) பயன்பாட்டு வாகன ஓட்டுநராக இருந்தேன். அந்த சில ஆண்டுகளில் ஒரு நூறு கிலோமீட்டர் தூரத்துக்காவது பள்ளம் தோண்டியிருப்பேன் . ஆனால் இப்போது எல்லாமே ரோபோட் தான் . அவர்களுக்கு இனி என் உழைப்பு தேவையில்லை’.

‘நான் பெரிய அளவிலான மனிதவள முடிவுகள்  எடுப்பதில்லை . வருந்துகிறேன்’.

‘அது உண்மை. நான் அறிவேன் ’. புஜங்களுக்குள் முழங்கால்களை இறுக்கிக்கொண்டும்  , மூடிய வாய்க்குள் கள்ளக் குரலில் தனக்காக  ராகமில்லாத இசை எழுப்பிக்கொண்டும்  அங்கேயே  அமர்ந்திருந்தாள். சிறிது நேரத்துக்குப் பிறகு , நிமிர்ந்து தீவிர  கண்காணிப்பு முனையத்தைப் பார்த்து  ‘மிக அருகில் அமைந்துள்ள  பெண்டிர் ஒய்வு அறை  எங்கே இருக்கிறது ,தேனே’ என்று கேட்டாள் .

‘ஐந்து கட்டிடத் தொகுதிகளைக்  கடந்து சென்றால் அங்கே  கழிவறை உண்டு . வழி சொல்லட்டுமா ?’

‘அது ரொம்ப  தூரம் . என் செயல் உனக்கு வெறுப்பூட்டாது என நம்புகிறேன் . பெண்கள் செய்ய வேண்டியதை  பெண்களே தான்  செய்தாக  ஆகவேண்டும் ‘- எழுந்து நின்று சந்தின் குருட்டு முனை வரை நொண்டி நடையாக  நடந்து சென்று, அங்கே   கைவிடப்பட்டுக்கிடந்த மறு சுழற்சிக்கு தகுந்த  பிளாஸ்டிக் தொட்டிக்குப் பின்னால் மறைவாகக் குந்தினாள் . சிறிது நேரம் கழித்து ,உடுப்புகளை சீராக்கிக்  கொண்ட படியே, வெப்பக்காற்றுத்  துளைகளுக்கு கீழ் உள்ள தன் இடத்துக்குத் திரும்பினாள் .

நோயுற்ற மனிதர்களுக்காக  விதி முறைகளைத் தளர்த்தும்    விவேகமுள்ள நகரம்  எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை .

~oOo~

பனிப் பொழிவு தொடங்கியது . வெப்பக்காற்றுத் துளைகளுக்கு கீழே உருவான ஒரு ஈரமான கருவட்டப் பகுதி தவிர ,  சந்தின் பிறபகுதிகளில் ,அதன் தார் போட்ட  மேற்பரப்பு  வெண்ணிறத்துக்கு  மாறியது.

அந்தி நேரம் : நகரம், போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகளில் 60000 தெருவிளக்குகளை ஏற்றியது . அருகாமை நடவடிக்கைக்காக 100000 விளக்குகளைத்  தயார் படுத்தி வைத்தது .

~oOo~

அரைமணி நேரம் கழிந்த பின் மீண்டும்  அவளுடன் பேசியது : ‘நான் உனக்காக செய்யக்கூடியது ஏதேனும் உண்டா ?’

‘நீ எனக்கு மது பானம் தருவிக்க முடியாது அல்லவா ?.முடியுமானால்   இந்தக் குளிரை சமாளிக்க , Southern Comfort குட்டி பாட்டில் ஒன்று போதும்’

‘அங்கீகாரம் இன்றி நான் நுகர் பொருட்கள் எதுவும்  வழங்க முடியாது . அதற்கு விண்ணப்பிக்கட்டுமா? ‘

‘ஹா ! நல் வாழ்த்து ! விருப்பம் இருந்தால்  முயற்சி செய் ‘

நகரம்  அவள் பேசியவற்றை உன்னிப்பாக அலசிப்பார்த்த பின் , தான் நடவடிக்கை எடுக்கவேண்டிக்   கேட்டுக்கொள்ளப்  படவில்லை என்ற முடிவுக்கு வந்தது .

சில்லு பொருத்தப்படாத அப்பெண் குளிரில் நடுங்கியவாறு உடலைக் குறுக்கி அமர்ந்திருந்தாள் . பனிப் பொழிவு மேலும்  கடுமையாகிக் கொண்டிருந்தது.

‘ஹலோ ? இப்போதும் நலமாகத்தானே இருக்கின்றாய்  ?’ பதில் வரவில்லை . நகரம் அகச்சிவப்பு  அலைத்தடத்தை ஆய்வு செய்தது . பெண்ணின் சருமம் தன்   இதமான பொலிவை இழந்து விட்டிருந்தது . ‘உனக்கு ஆம்புலன்ஸ் தேவையா?’

அவள் முழங்கால்களில் முகம் புதைத்து , இலேசாகப் புலப்படும்  சிறுசிறு

முன்- பின் அசைவுகளுடன் அமர்ந்திருந்தாள் .

‘உனக்கு ஆம்புலன்ஸ் தேவைப்படுமா?’- மீண்டும் நகரம் கேட்டது

குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தாள் .உட்கார்ந்திருந்தவாறே கண்காணிப்பு முனையத்தின் குவிமாடத்தைத் தேடிக் கண்டுபிடித்து, ‘ இதற்கு மேல் பேசாதே’- என்றாள் . கட்டுக்கடங்காமல்  அவள்  உடல் நடுங்கியது . ‘நான் எழுப்பிய நகரம் இது , நன்றிகெட்ட பெண் நாயே’

‘ஒரு  மருத்துவமனையின்  இளவெப்பம்  உனக்கு ஆறுதல் அளிக்கும்’-நகரம் சொன்னது.

பதில் வரவில்லை . அடுத்த சில மணி நேரத்தில் உடல் அசைவும் நின்று விட்டது .

அகச் சிவப்பு அலைத்தடம் மெதுவாக கருமையடைந்தது .

நகரம்,  உடல் அகற்றும் வேலையை அதிக முன்னுரிமை கொண்டதென  வகைப்படுத்தி, மறு நாளைய மனித துப்புரவுப்பணிக்குழுவின் கால அட்டவணையில்  சேர்த்தது . பிறகு, சாலைகளில் உப்புத் தெளித்தல்  மற்றும்  உறைபனி அகற்றம் என்ற வேலைகளுக்குத் தன் கவனத்தைத் திருப்பியது.

 

ஆங்கில மூலம் : Sparrowfall : Nature : Nature Research

கதை பிறந்த கதை (கதாசிரியர் குறிப்புகள்)

மதிநுட்ப அமைப்புகளின் எல்லைகளை  ஆராய்வதற்காகவே இந்த கதையை எழுதினேன் .தானோட்டிக் கார் , Formula 1 ஓட்டுநரை விட துரிதமாக  எதிர் வினையாற்றி , களைப்பு  ,மதுமயக்கம் என்ற பேச்சுக்கே இடந்தராமல், சாலைகளில்   நெடுநேரம் இயங்கவல்லது. ஆனால் ‘ உள்ளரங்கில்  விளையாடிக்கொண்டிருக்கும் ஒரு குழந்தையின்   கால்பந்து தெருவுக்கு  உருண்டு வரும் போது அதைத் தேடி  பந்தின் உரிமையாளரும் தெருவுக்கு வருவார்’ என்றெல்லாம்  அதனால் யூகிக்க முடியுமா?

எங்கும் நிறைந்திருக்கும் புலன்சார் கருவிகள் , தன் சார்பாக எப்போதும் செயல்படக்கூடிய தனித்தியங்கி எந்திரங்கள்,  இவை அனைத்தையும் ஒருங்கிணைக்கத் தேவையான கணினி பலம், இவையெல்லாம்   ஒரு  வாழ்விடத்தை   ( நகரம்,  விண்வெளிக்கப்பல் எதுவாயினும் )  காவல்தெய்வ நிலைக்கு உயர்த்திவிடும் என்ற பாமர சிந்தனையில் சிக்குவது வெகு சுலபம்.   இக்கருத்தின்  மறுபரிசீலனைக்கு   வாசகரைத் தூண்டும் நோக்கத்தில்       விவிலியத்தின் Mathew 10:29 வாசகங்களின் சாரத்தை எதிரொலிக்கும் கதைத் தலைப்பு   (Sparrowfall ) ,  கதையின் ஆரம்பத்தில் வரும் ஆப்பிள் பறிப்பவர்

பாத்திரம் இவையிரண்டும் கதையில் சேர்க்கப்பட்டுள்ளன .

கதையில் வரும் நகரம் , மேலோட்டமான பார்வைக்கு எல்லாம் அறிந்த ,தரும சிந்தையுடைய (குறைந்த பட்சம் உதவிசெய்யக்கூடிய ) நகரமாகத் தெரிந்தாலும் , அதன் அதிகாரம் வரம்பிற்குட்பட்டது .அது  எல்லா நெருக்கடிகளுக்கும் பதிலளிக்கக்  கூடியதாக வடிவமைக்கப் படவில்லை .   நகரவாசிகள்  தாமாக முடிவெடுத்துக்கொள்ளும்  உரிமையை மதித்து   நடந்துகொள்ளும்  நகரத்தைத்தான்    நிரலாளர்கள் இங்கே  உருவாக்கியிருக்கிறார்கள் . தானே காவல் தெய்வமாகிக்கொள்ளும் செயற்பரப்புடையதாக  நிர்மாணிக்கப் படததாலேயே , அதனால்  ஒரு பெண்ணை  அவளிடமிருந்தே காப்பாற்ற  முடியவில்லை .

Sparrowfall -விளக்கம் :

ஒரு பென்னிக்கு இரு சிட்டுக்குருவிகள் என்று விற்பனை நடக்கிறது அல்லவா? இருப்பினும் இறைவனுக்குத் தெரியாமல் ஒரு சிட்டுக்குருவியும் மடிவதில்லை எனவே அஞ்சற்க  நீ சிட்டுக்குருவிகளை விட அதிக மதிப்புடையவன் -என்கிறது  Mathew 10:29வாசகம் .  தெய்வத்துக்கு நிகராக கருணை காட்டி  நிராதரவான பெண்ணைக் காக்க நகரத்தால் முடியாது என்கிறார் ஆசிரியர்

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.