ஒருவன் மனதில் ஒன்பதடா…

”நியூ டேல்ஸ் ஆஃப் தி அன் எக்ஸ்பெக்டெட்” (1987) எனும் ஆங்கில சிறுகதைத் தொகுப்பில் உள்ள ”தி ஸ்கெலிட்டன் இன் தி கப்போர்ட்”(The Skeleton in the Cupboard) எனும் இக்கதை, 1983 ஆம் ஆண்டு ’வீக் எண்ட் எக்ஸ்ட்ரா’ இதழில் வெளியாகி, பின் தொலைக்காட்சித் தொடராகவும் புகழ்பெற்றது. டோனி வில்மோட் (TONY WILMOT)(1935-) எழுதியது. இந்த சிறுகதை  பிரஞ்சு உள்ளிட்ட பலமொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

ஓடையோரமாக இருக்கும் அந்த பெஞ்சில்தான் அவன் எப்பொழுதும் உட்கார்ந்திருப்பது வழக்கம். இப்பொழுதும் அதே பெஞ்சில் இருந்தபடி எதிரில் உள்ள பூங்காவின் வாசலை கவனித்தபடி இருக்கிறான். நண்பகல் இடைவேளையில் அந்த இளம்பெண் அவனுடன் வந்து சேர்ந்துகொள்வது வழக்கம். இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடுவாள்.

ஒரு நாள் அவன் எறிந்த ரொட்டித் துண்டுகளை எடுக்கப் புறாக்கள் சண்டையிட்டுக் கொண்டதைப் பார்த்து அவள் சிரித்தாள். அப்பொழுது தொடங்கியது அவர்களது சந்திப்பு. அதே பெஞ்சில் பல நாட்களாகத் தொடர்ந்து உட்கார்ந்து தங்கள் நகைச்சுவைகளைப் பரிமாறிக் கொள்கிறார்கள்.

அவளுக்கு இருபது வயது இருக்கும். அவளுடைய கவர்ச்சியான உடலமைப்புப் பார்ப்பவரின் நாடித்துடிப்பை அதிகரித்துவிடும். ஆனால், அவள் இவனிடம் பழகுவதில் பாலியல் நோக்கம் இருக்கும் என்றெல்லாம் நினைக்கும் தற்புகழ்ச்சி இவனிடம் இல்லை. ஆள் வளர்ந்துவிட்டால் அறிவு வளர்ந்துவிடும் என்று சொல்லமுடியாது என்ற கொள்கை உடையவன். மேலும், அவளைவிட இருபது வயது அதிகமானவன் இவன்.

இவனைப் பொருத்தவரை, இது ஒரு ஆபத்தில்லாத சந்திப்பு. நடுத்தர வயதுடைய மனிதன் ஒருவனின் வாழ்வில் உள்ள வெற்றிடத்தை நிரப்பக்கூடியக் கருவி. எனவே, இந்த “பகல் இடைவேளைப் பணியை” விரும்பி ஏற்றுக்கொண்டான்.

ஆனால், அன்று காலை நடந்த சம்பவங்கள், எல்லாவற்றையும் புரட்டிப்போட்டன. நகரமன்றத்தில் உள்ள வாகனப்பதிவு அலுவலகத்துக்கு அவள் வந்திருந்தாள்.

இவனது அலுவலக அறைக்குள் நுழைந்த உதவியாளர்,

“சார், ஒரு இளம்பெண் வந்திருக்கிறார். வாகனங்களின் உரிமையாளர்கள் குறித்த பழைய ஆவணங்கள் இருக்கிறதா என்று கேட்கிறார். குறிப்பாக எம்.ஜி ஸ்போர்ட்ஸ் கார். இருக்காது என்று நினைக்கிறேன் என்று நான் சொன்னேன்”, என்றார்.

காரின் மாடலைக் கேட்ட மாத்திரத்தில் அவனுக்கு ஒருவித அசௌகரிய உணர்வு ஏற்பட்டது.

“ஆமாம், சரியாகத்தான் சொல்லியிருக்கிறீர்கள். இப்பொழுது அரசுக் கணினியில் எல்லாப் பதிவுகளும் உள்ளன என்று அந்த பெண்ணிடம் சொல்லுங்கள். எப்படி இருந்தாலும், இது போன்ற தகவலை நம்மால் தரமுடியாது” என்று சொல்லி அனுப்பினான்.

அவனது அலுவலக அறைக்கான கண்ணாடித்தடுப்பு வழியாக வரவேற்பு மேசையை நோட்டமிட்டான். விபரம் கேட்டு வந்தவள் பூங்கா பெஞ்சில் சந்திக்கும் அதே பெண்தான்.

இது ஒரு தற்செயலான நிகழ்வு என்று நினைத்தான். அலலது வேறு ஏதாவது இருக்குமா?

~oOo~

முகத்தில் தனக்கே உரிய பாவத்துடன் நடந்து வந்து, பூங்காவுக்குள் அவள் நுழைந்தபோது அவன் மீண்டும் அசௌகரியத்தை உணர்ந்தான்.

“ஹலோ – நாம் மீண்டும் சந்திக்கிறோம் இல்லையா”, என்று கேட்டுக்கொண்டே பக்கத்தில் வந்து அமர்ந்தாள்.

“ஆமாம். உண்மைதான் – வானம் கொஞ்சம் இருட்டிக்கொண்டு வருகிறது. மழை வராமல் இருந்தால் நல்லது. அவளிடமிருந்த பேனா கத்தியால் ஆப்பிளை சீவிக்கொண்டிருந்ததைப் பார்த்து, “என்ன பகல் உணவு?” என்று கேட்டான்.

“ஆமாம். என்ன செய்வது? நான் டயட்டில் இருக்கிறேன்” அவன் சிரித்தான்.

‘நிறைய நாட்களாக இங்கு பார்க்கிறேன். பக்கத்தில் எங்காவது வேலை பார்க்கிறீர்களா?’

‘இல்லை. சரியாகச் சொன்னால், நான் இங்கு வசிக்கவில்லை. ஒரு சில ஆராய்ச்சி விஷயமாக இந்த நகரத்தில் தங்கியிருக்கிறேன். உண்மையில் என் வீடு எல்ம்ஸ்டன் பகுதியில் இருக்கிறது.’

“அப்படியா? எனக்கு எல்ம்ஸ்டன் தெரியுமே….” என்று ஆரம்பித்தான். உள்ளே அபாய மணி அடிப்பதற்குள் வார்த்தைகள் வெளியே வந்து விழுந்துவிட்டன. “அதாவது, அந்த ஊரைப்பற்றி சரியாகத் தெரியாது …. என் நண்பன் ஒருவன் …. பல ஆண்டுகளுக்குமுன் பழக்கம் ….. அவன் அங்குதான் வசித்து வந்தான். இங்கு வருவது இதுதான் உங்களுக்கு முதல்முறையா?”

“ஆமாம்.”

“நல்ல இடம் தான். ஆனால், கொஞ்சம் டல் அடிக்கும்.”

“இல்லவே இல்லை. அருமையாக இருக்கிறது.”

“என்ன ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறீர்கள்? எங்கள் நகரத்தின் நெடிய வரலாறைப் பற்றியோ? ரோமானியரின் காலத்திலிருந்து தொடங்குமே.”

“அப்படியா சுவாரஸ்யமாக இருக்கிறதே. இல்லை. இதுவேறு. நான் ஒருவரைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.”

“ஓ! ஒரு விதத்தில் துப்பறியும் வேலை எனறு சொல்லுங்கள்?!”

அவள் சிரித்தாள். “ஒருவகையில் அப்படித்தான். தன்னை கண்டுபிடித்துவிடக்கூடாது என்று நினைக்கக்கூடிய ஒருவரைக் கண்டுபிடிப்பது எவ்வளவு கஷ்டமான காரியம் என்பது தெரிய ஆரம்பித்திருக்கிறது.”

“விசாரணை எல்ம்ஸ்டனிலிருந்து உங்களை இங்கு கொண்டுவந்துவிட்டது, அப்படித்தானே?”

“தற்சமயம் அப்படித்தான். ஆனால், ஆரம்பத்தில் பல இடங்களுக்கு செல்ல வேண்டியிருந்தது. இந்த இடம்தான் கடைசியாக இருக்கும் என்று நம்புகிறேன்”.

“மிகவும் புதிராக இருக்கிறதே” என்றான். அவளது அந்தரங்க வாழ்க்கைக்குள் நுழைவதுபோல் தோன்றாமல் அவளாகவே மேலும் பல தகவல்களை தருவாள் என்ற எதிர்பார்ப்பு அவனிடம் இருந்தது.

“ஒரு வகையில் அப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். இருபது ஆண்டுகளுக்கு மேலாக பின்னோக்கிப் போகிறேன். எனக்கு அது கஷ்டமான வேலையாக மாறுகிறது”. அவளது முகத்தில் சோர்வு வெளிப்பட்டது.

“அப்பொழுது நீங்கள் பிறந்துகூட இருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்”.

“அப்பொழுதுதான் பிறந்தேன். எப்படியும் சில முடிச்சுகளை அவிழ்க்க முடிந்தது. நான் தேடும் நபர் அப்பொழுது எம்.ஜி ஸ்போர்ட்ஸ் கார் வைத்திருந்தார். அதே காலக்கட்டத்தில் அவருக்கு திருமணமும் நடந்திருக்கிறது. அடிக்கவேண்டிய இலக்கு வெகு தூரத்தில் உள்ளது என்பது எனக்கு தெரியும். ஆனால் இது ஓரளவு கை கொடுக்கும் என்று சொல்லலாம்”.

அவனது அசௌகரியம் இப்பொழுது நடுக்கமாக மாறி இருக்கையின் நுனிக்கு அவனைக் கொண்டுவந்தது. பாம்பினால் மனோவசியம் செய்யப்பட்ட முயல்குட்டி போல், தப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் நகர முடியாமல் தவித்தான்.

“என் சொந்தக் கதையை சொல்லி உங்களுக்கு போர் அடிக்கும்படி செய்யக்கூடாது. சரி, உங்களுக்கு என்ன வேலை?

“அதுவா பெரிதாக ஒன்றும் இல்லை. அரசு ஊழியர். மிகவும் மந்தமான வேலை. உங்களைப் போல் நானும் ஒரு 007 ஆக இருக்க வேண்டும் என்று விருப்பம்தான். ஆனால் என்ன செய்வது. 9 மணி முதல் 5 மணி வரை மல்லுக்கட்டும் ஒரு சாதாரண மனிதன்.

“இவ்வளவு தன்னடக்கமாக இருக்கக்கூடாது. ஒரு அரசு ஊழியராக இருப்பதில் எந்த தவறும் இல்லையே” தன்னைத்தானே தாழ்த்திக்கொள்வது போன்ற பாவனையைச் செய்தாலும் உள்ளுக்குள் ஒரு அழகானப் பெண் தேடிவந்து பேச விரும்பும் அளவுக்கு தான் சுவாரஸ்யமானவனாக இருப்பதை நினைத்தபோது இனம் புரியாத உணர்ச்சி ஏற்பட்டது.

“நிச்சயம் திருமணம் ஆகியிருக்கும்?”

“இல்லை” என்று சொல்ல வாய் எடுத்தபோது அவள் கண்கள் அவனுடைய இடது கையில் உள்ள மோதிரத்தை நோட்டமிடுவதை கவனித்துவிட்டான். ‘ஆம்’ என்று தலையாட்டினான்.

“அழகான ஆண்களாக இருந்தால் அது இயல்புதான்”. உரையாடல் போகும் போக்கு அவனுக்குப் பிடிக்கவில்லை.

“ஆமாம். சில நேரங்களில் …..” என்று சொல்லியபடி, கையில் கட்டியிருந்த கடிகாரத்தை பார்ப்பதுபோல் பாவனை செய்தான்.

“நான் திரும்பியாக வேண்டும். எதுவும் நமக்கு காத்திருக்காது. ஆமாம்… அது அப்படித்தான். போகட்டும் மீண்டும் நாளை சந்திப்போமா?”

“சந்திக்கலாம். ஒரு மணி வாக்கில் வரட்டுமா? என்ன சரியா?

“எந்த பிரச்சனையும் இல்லை. அப்படியே செய்யலாம்”. திரும்பவும் நகரமன்ற அலுவலகத்தை நோக்கி நடந்து சென்றபோது, அறையின் மூலையில் மாட்டிக்கொண்ட எலியைப்போல், சந்தேகமும் பயமும் அவன் மண்டையைத் துளைத்தெடுத்தன. காரணங்கள் இருந்தன. அவன் ஒரு எம்.ஜி  கார் வைத்திருந்தான். இருபது ஆண்டுகளுக்குமுன் அவனுக்கு திருமணமாகியிருந்தது.

அலுவலகத்தில் அவனுக்கு வேலை ஓட வில்லை. அலுவலக நேரம் முடிய ஒரு மணி நேரம் இருந்தபோது தன் காரை எடுத்துக்கொண்டு அலுவலத்தைவிட்டு வெளியேறினான். நேராக, அவனது வீட்டுக்கு வாகனத்தைச் செலுத்தினான். புறநகர்ப் பகுதியில் மரங்கள் சூழ அமைந்திருந்த ஊரிலிருந்ததுஅவனுடைய வீடு.

மனைவி மார்கரெட், தோட்டத்தில் ஏதோ வேலையில் ஈடுபட்டிருந்தாள்.

“ராபர்ட், நீயா? என்ன இவ்வளவு சீக்கரம். ஆபிஸில் ஒன்றும் பிரச்சனை இல்லையே?”

“இல்லை, இந்த பெண்கள் ஏன் மோசமான விஷயங்களையே எப்பொழுதும் யோசிக்கிறார்கள்? என்று தனக்குள் சொல்லிக்கொண்டே “அப்படி ஒன்றும் இல்லை. நம் ஷெட்டில் இருக்கும் அந்த விளக்குக்கம்ப வேலையை கொஞ்சம் வெளிச்சம் இருக்கும்போதே முடித்துவிடலாமே என்று வந்தேன்” என்றான்.

”அப்படியா சரி! சாப்பாடு தயாரானதும் கூப்பிடுகிறேன்.” ஷெட் கதவின் உள்தாழ்ப்பினை போட்டுவிட்டு, அவனது மனைவி இன்னும் தோட்டத்தில் முன் பக்கத்தில் தான் இருக்கிறாளா என்பதையும் உறுதிசெய்து கொண்டான். அவன் உட்கார்ந்திருந்த பெஞ்சின் பின்புறத்திலிருந்து கனமான உலோகத்திலான அந்த பெட்டியை எடுத்தான். அப்பெட்டியின் சாவி, களைக் கொல்லி மருந்து பாட்டிலின் அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அந்த பெட்டிக்குள் ‘எல்ம்ஸ்ட்டன் அப்சர்வர்’ நாளிதழிலிருந்து கத்தரித்து எடுக்கப்பட்ட இரண்டு செய்தித்துண்டுகள் பழுப்பேறிய நிலையில் காணப்பட்டன.

ஒன்றில், தலைப்பு செய்தியாக, “அடையாளம் தெரியாத வாகனம் மோதி பத்து வயது பெண் பலி.”

பள்ளி தோழியின் வீட்டுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும்போது, பாதசாரிகள் கடக்கும் தடத்தில் எவ்வாறு அந்த பெண் விபத்தில் கொல்லப்பட்டாள் என்பதை எத்தனை முறை படித்திருப்பான் என்று தெரியாது. சம்பவங்கள் அனைத்தும் அவனது நினைவில் அழுத்தமாக பதிந்துபோயிருந்தன. அன்று மாலை மார்கரெட் வீட்டுக்கு போகத்தான் அந்த எம்.ஜி காரை ஓட்டிச்சென்றான். அப்பொழுது எல்ம்ஸ்டன் பகுதியை ஒட்டியுள்ள ஊரில் அவர்கள் வசித்து வந்தனர்.

ஏதோ சாலை பராமரிப்பு பணி நடந்து கொண்டிருக்கவே போக்குவரத்தில் மாற்றம் செய்திருந்தார்கள்.

அவனும் அன்றையதினம் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான வேகத்தில் சென்று கொண்டிருந்தான். அது அவனுக்கு பழக்கமில்லாத பாதை. திடீரென பாதசாரியின் தடம் ஒன்று குறுக்கிட்டதை எதிர்பார்க்கவில்லை.

காரின் பிரேக்குகளும் சரியாக பிடிக்கவில்லை. காரணம், பணத்தை மிச்சப்படுத்த ஒரு சர்வீஸை செய்யாமல் விட்டிருந்தான். மேலும் அன்று போட்ட தூறல் பாதையை வழுக்கச் செய்தது.

அது நடந்து இருபது ஆண்டுகள் கடந்திருந்தாலும்,  நெஞ்சை நொறுங்கச் செய்யும் அந்த அலறல், மரண ஓலம் …. பாதையோரத்தில் தூக்கி வீசப்பட்டு துவண்டு கிடந்த உடல்…

~oOo~

அவன் நிறுத்தியிருக்கவேண்டும் என்பதை மறுக்கமுடியாது. என்ன செய்வது, அவன் பயந்து விட்டான். புதிய வேலை ஒன்றுக்கு மனு செய்திருந்த அவனது பெயர் தகுதியானவர்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்த நேரம் அது. அவ்வேலைக்கு தெரிவு செய்யப்படுபவர்கள் கட்டாயமாக கறைபடியாத ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும். மேலும், திருமணம் நடக்க இன்னும் சில நாட்களே இருந்தன. விபத்து குறித்து தகவல் தெரிவித்து இருந்தால் இவை எல்லாமே பாழாய் போயிருக்கும்.

இரண்டாவது செய்தித் துணுக்கு: “சாட்சிகள் இருந்தால் தெரிவிக்கவும்” என்ற காவல் துறையின் அறிவிப்பு. இத்தலைப்பின் கீழ் இருந்த செய்தியில், அப்பகுதியைச் சேர்ந்த பலர் அன்று கார் பிரேக் கிரீச்சிடும் சத்தம் கேட்டதாக சொன்னார்கள். ஆனால் ஒருவரும் விபத்தைப் பார்க்கவில்லை என்று எழுதப்பட்டிருந்தது. “பல கோணங்களில் விசாரணை நடந்து வருவதாக” காவல் துறை செய்தி தொடர்பாளர் கூறியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இரண்டு செய்தி துணுக்குகளையும் மீண்டும் அதே பெட்டியில் வைத்து பூட்டி அது ஏற்கனவே இருந்த மறைவிடத்தில் வைத்தான். அவனுக்கு ஒரு விஷயம் சரியாக புரியவில்லை. இவற்றை ஏன் இத்தனை நாளாக பாதுகாத்து வந்தான் என்பதுதான் அது. உளவியலாளர்கள் இதிலிருந்து என்ன முடிவுக்கு வருவார்கள் என்று யோசித்து பார்த்தான். ஒரு வேளை குற்ற உணர்வாக இருக்குமோ? தான் செய்த குற்றத்திற்காக தானே தண்டனை கொடுத்துக்கொள்ள துடிக்கும் ஆழ் மனதின் விருப்பமாக இருக்குமா?

அன்று இரவு அவனுக்கு பிடித்த உயர் ரக டியூனா மீன் சேலட் இருந்தும் விபத்தைப் பற்றிய நினைவு அவனது பசியை அடக்கிவிட்டது. மார்கரெட் அன்றைய தினம் நடந்தவற்றைப் பற்றி விவரித்துக் கொண்டிருந்ததை ஏதோ சிந்தனையில் தலையை அசைத்தபடியே கேட்டு, வேகவேகமாக சாப்பிட்டுமுடித்தான். அவன் சாப்பிட்டுக்கொண்டிருந்த நேரம் முழுவதும் அந்த நினைவுகள் அவனைக் குடைந்த கொண்டே இருந்தன. அவனுள் எழுந்த கேள்வி : விபத்துக்குக் காரணமான காரை நிறுத்தாமல் தப்பிய ஓட்டுநர் இவன்தான் என்பதை அந்த பெண் எப்பொழுது கண்டுபிடித்தாள்?

இறந்த பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று விரும்பும் அவளது தோழிக்கும் மேலாக தெரிகிறாள். அல்லது உறவினராக இருக்கலாம். ஏன் இறந்தவளின் சகோதரியாகக்கூட இருக்கலாம். நீண்ட நாட்களுக்கு முன்பாகவே காவல் துறையைச் சார்ந்த விசாரனை நீர்த்துபோயிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில், இதைவிட அவசரமான பல வழக்குகள் அவர்கள்முன் அணிவகுத்திருக்கும். ஆனால் அந்த சிறுமியின் குடும்பமும், நண்பர்களும் தங்கள் முயற்சியை கைவிட்டிருக்க மாட்டார்கள் போல் தெரிகிறது.

அன்று இரவு அவன் தூங்கவே இல்லை என்று சொல்லலாம். அடுத்த நாள் அலுவலகத்திற்கு போனதிலிருந்து பூங்காவுக்குப் போகும் நேரம் வரும்வரை கடிகாரத்தை கவனித்தபடியே இருந்தான். அவன் போவதற்கு முன்பே அப்பெண் அங்கு வந்து சேர்ந்திருந்தாள்.

“உங்களை இன்று பார்த்துவிடலாம் என்ற நம்பிக்கை இருந்தது” என்றவள் தொடர்ந்தாள். ஒன்று சொல்லட்டுமா? சரியான நகரத்துக்குத்தான் நான் வந்திருக்கிறேன் என்பதில் சந்தேகம் இல்லை. உங்களுக்கு நினைவிருக்கிறதா? நான் ஒரு எம்.ஜி குறிப்பிட்டேனே. அமெச்சூர் புலனாய்வுக்கு இது போதாதா? கார் நம்பர் இருக்கிறது”.

அவளது கையேட்டில் இருந்த எண்ணைப் பார்த்ததும் அவன் முகவாய் தசையின் ஒரு பகுதி வேகமாக புடைத்துக்கொண்டது. அவனுடைய எம்.ஜி காரின் நம்பர்தான் அது. ஆனால் எப்படி அவளுக்கு ….? கண்ணால் பார்த்த சாட்சி யாரும் இல்லை என்று செய்தித்தாளில் போட்டிருந்ததே.

“நம்பர் பிளேட்டின் நடுவில் இரண்டு நம்பர்கள் தெரியவில்லை. ஆனால் இது போதும்”.

“மிகவும் மர்மம் நிறைந்ததாகத்தான் இருக்கிறது” என்று முகத்தில் சிரிப்பை வலிய வரவழைத்துக்கொண்டு சொன்னான். “எதற்கும் உள்ளூர் வாகனப் பதிவுத்துறையில் விசாரித்துப் பார்த்தீர்களா? சிலவேளை அவர்கள் உங்களுக்கு உதவலாம்” என்றும் சொல்லிவைத்தான்.

“கேட்டேன். அதிருஷ்டம் இல்லை. ஆனால் என்ன நடந்தது தெரியுமா? காரின் போட்டோ எனக்கு கிடைத்துவிட்டது.”

அந்த பூங்காவே சுழல்வது போல் இருந்தது. உட்கார்ந்திருந்த பெஞ்சை இரண்டு கைகளாலும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டான்.

“உங்களுக்கு ஒன்றும் இல்லையே?” என்று அவனைப் பார்த்து கேட்டாள்.

“என்ன? அதெல்லாம் ஒன்றுமில்லை. சாப்பிட்டது செரிக்காமல், சுரீர் என்று ஒரு வலி அவ்வளவு தான்”.

“உண்மையில் எனக்கு போட்டோ கிடைக்கவில்லை. நெகட்டிவை மட்டுமே பார்த்தேன். அதை 10 × 8 பிரிட்ன்ட் போட சொல்லிருக்கிறேன்”.

“உங்களுக்கு  தலைக்கு மேல் வேலை என்று சொல்லுங்கள்”. இப்பொழுது அவன் குரல் இயல்பாக இல்லை. “இங்கே கவனியுங்கள். எல்ம்ஸ்டன் நண்பன் பற்றி குறிப்பிட்டேனே. சற்றுமுன்தான் அவன் நினைவு வந்தது. அவனும் எம்.ஜி தான் வைத்திருந்தான். ஒருவேளை நீங்கள் தேடிக்கொண்டிருப்பது அவனாகவும் இருக்கலாம். வீட்டில் தேடினால் அவன் முகவரி இப்பொழுதும் கிடைக்கலாம். அப்படி கிடைத்தால், உங்களைத் தொடர்புகொள்ள உங்கள் தொலைபேசி எண் வேண்டும். தருகிறீர்களா? உங்கள் முகவரியைக் கொடுத்தால் இன்னும் நல்லது. நாளைக்கு உங்களை இங்கு பார்க்க முடியாமல் போனாலும் உதவும்”.

இரண்டையுமே அவளது நோட்புக்கில் எழுதி, அந்தப் பக்கத்தைக் கிழித்து அவனிடம் தந்தாள். “இப்பொழுது நான் கிளம்பியாக வேண்டும். மேலும் சில துப்பறியும் வேலைகள் பாக்கி இருக்கின்றன. நாளை மீண்டும் இதே இடத்தில் உங்களை எதிர்பார்ப்பேன்” என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள்.

அவள் போனதும் சில நிமிடங்கள் காத்திருந்து, அவளைப் பின் தொடர ஆரம்பித்தான்.

நகரின் முக்கிய சதுக்கத்தின் அருகேயிருந்த புகைப்படக் கடையில் முதலில் நுழைந்தாள். வெளியே வந்தவள் கையில் பெரிய அளவிலான மங்கிய மஞ்சள் நிற உறை இருந்தது.

அவள் நடையில் இருந்த உற்சாகத்தைப் பார்த்ததும் அது அந்த எம்.ஜி பிரின்டாகத்தான் இருக்கும் என்று நினைத்தான்.

நகரத்தின் மையப் பகுதியைக் கடந்து ‘ஈவ்னிங் கெஸட்’ நாளிதழின் அலுவலகத்தை நோக்கி நடந்த அவளைத் தொடர்ந்து சென்ற அவன் எதற்கும் 150 அடி தூர இடைவெளி இருக்குமாறு பார்த்துக்கொணடான்.

தகவலறியும் மேசையருகே நின்று பேசிக்கொண்டிருந்த அவளுக்கும் இவனுக்கும் இடையே நுழைவாயில் அமைந்திருந்த அலமாரிக்கூடுகளில் செய்தித்தாள்கள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. அங்கிருந்த சுழலும் கதவுகள் வழியாகத்தான் அவளை கவனித்துக் கொண்டிருந்தான்.

கடந்தவார பத்திரிக்கைகளை புரட்டுவதுபோல் பாசாங்கு செய்தபடியே, தட்டச்சு எந்திரங்களும் தொலைபேசிகளும் ஓயாமல் எழுப்பிய சப்தங்களைத் தாண்டி அவள் பேசிக் கொண்டிருந்ததில் சில வார்த்தைகள் காதில் விழுந்தன.

“இருபத்தியோரு ஆண்டுகளுக்கு முன் நடந்த திருமணம் பற்றிய செய்தி …. கிடைக்கக்கூடிய வாய்ப்பு உள்ளதா …..?’’

“பழைய பதிவுகள் நான்காவது தளத்தில் உள்ளன. லிப்டில் இருந்து வெளியேறியதும் உங்கள் வலது பக்கம் முதல் அறை’’.

அப்பெண் லிப்டில் ஏறுவதை கவனித்தான். நேரம் கடந்தது. மக்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். வியர்ப்பது போலவும் எல்லோரும் தன்னை கவனிப்பது போலவும் உணர்ந்தான்.

கடைசியில் அவள் லிப்டில் இருந்து மீண்டும் வெளியே வந்தாள். வரவேற்பாளரிடம் சிரித்தாள். அவள் தேடிக்கொண்டிருப்பது கிடைத்துவிட்டதா?

ஆம் கிடைத்துவிட்டது.

இப்பொழுது அவனுக்கு வியர்வை சில்லிட்டது. எனினும், அவளை தன் கண்கானிப்பிலேயே வைத்திருப்பதில் எந்த கஷ்டமும் இல்லை. ஏனெனில், அந்த நகரத்தின் மூலை முடுக்கு எல்லாம் அவனுக்கு அத்துபடி. அடுத்ததாக அவள் எங்கு போவாள்? கடவுளே அது காவல் நிலையமாக மட்டும் இருக்கக் கூடாது.

“ஏய் ராபர்ட்! என்ன ரொம்ப நாளாக பார்க்க முடியவில்லை” என்று பேச்சை ஆரம்பித்தான். அந்த பூங்காத் துறையில் அறிமுகமான நண்பன் அவன். ஏதோ தவறு செய்துவிட்டு மாட்டிக்கொண்ட பள்ளி மாணவனைப் போல் உணர்ந்தான்.

“என்ன ராபர்ட் இந்த பக்கம்? வாக்கிங்கா?

“ஆங், ஆமாம்”.

அந்த பெண் வீதியின் பக்கம் உள்ள திருப்பத்தில் நுழைந்து பார்வையைவிட்டு மறைந்து போனாள்.

“சிகரெட் பிடிக்கலாம் என்று வந்தேன்”.

நண்பன் இவனைப் பார்த்து பெரிதாக புன்னகைத்தான். “எதையோ பார்த்துக் கொண்டிருப்பது போல் இருந்ததே?’’

“என்ன?”

“முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாயே, அந்த பெண்!”

“ ஓ அதுவா?”, வலிய புன்னகையை வரவழைத்துக்கொண்டு, “இதோ பார்! இனிமேல் அதை நிறுத்தமுடியாது. அடுத்த வாரம் எங்காவது பாருக்கு போகலாம். நானே உனக்கு போன் செய்கிறேன்”.

ஒரு வழியாக அவன் இடத்தை காலி செய்ததும், அப்பெண்ணை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அன்று மீதமிருந்த பகல் பொழுதை அலுவலக இருக்கையில் அலுப்புடன் கழித்தான். யாருடைய திருமணத்தைப் பற்றி ஆராய்கிறாள்? ஏன்?

அன்று மாலை வீடு திரும்பியதும் மார்கரெட்டுடன் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்கும்போதுதான் அதற்கான விடை அவனுக்கு கிடைத்தது. உண்மையில் அது உள்ளங்கை நெல்லிக்கனியாக தெளிவாகத் தெரிந்தது.

வீட்டில் இருந்த பியானோ மீது அலங்கரிக்கப்பட்ட பிரேமிலான புகைப்படம். அவனும் மார்கரெட்டும் திருமணம் செய்து கொண்ட நாளில் எடுத்தது. இருக்கட்டும், அதைப்பற்றி ஏன் உடனே நினைத்துப்பார்க்கவில்லை? குடும்ப ஆல்பத்தில் இருந்த மற்ற புகைப்படங்கள். எம்.ஜி யோடு ஒரு படம் இருந்தது.

அந்த ஆல்பத்தைக் கண்டு பிடித்துவிட்டான். படங்களை திருப்பினான். இதோ அந்தப்படம் – வரவேற்பு முடிந்து ஜோடியாக தேனிலவுக்குப் புறப்படும் நேரத்தில் எம்.ஜி யுடன் எடுக்கப்பட்டப் படம்.

இருபது ஆண்டுகளுக்கு முன் இருந்தத் தன் தோற்றத்தை உற்று பார்த்தான். சுருக்கமில்லாத ஒட்டிய முகம், அடர்த்தியான சுருட்டை முடி. இப்பொழுது இரட்டை முகவாய், வழுக்கையும் விழ ஆரம்பித்திருந்தது. மீசை வைத்திருக்கிறான். பைஃபோக்கல் கண்ணாடிகள். ஆளே மாறியிருந்தான்!

எம்.ஜி காரின் பின்புற நம்பர் பிளேட்டில் இரண்டு எண்களை படிக்கத் தடையாக இருந்தது “புது மணத்தம்பதிகள்” என்ற அறிவிப்புப்பலகை.

இவர்களுடைய திருமண புகைப்படங்களை எடுத்த புகைப்படக்காரரைக் கண்டு பிடிக்கும் வரை ஒவ்வொரு புகைப்படக்காரரையும் அப்பெண் அணுகியிருக்க வேண்டும். நெகட்டிவ்கள் பெரும்பாலும் ஸ்டோர்ரூமில் இருந்த கோப்புகளில் கிடைத்திருக்கும்.

அப்பெண்ணுக்கு பிரின்ட் கைக்கு வந்தது. பிறகு, எம்.ஜி யுடன் காணப்படும் அந்த ஜோடியை படம் பிடித்த ‘ஈவினிங் போஸ்ட்’டிடம் அதன் அசலைப் பெற பழைய இதழ்களை தேடி இருக்கிறாள்.  அதன்மூலம் அந்த ஜோடியின் பெயர்களும் பெற்றோர் பெயர்களும் தெரியவரும்.

அதற்கு மேல் விசாரணை நகராது. காரணம் மார்கரெட்டின் பெற்றோர் நாட்டைவிட்டு வெளியேறி வெகு நாட்கள் ஆகின்றன. இவனது பெற்றோர் இறந்துவிட்டனர். எனவே இவனுக்கு ஆபத்து ஒன்றும் இல்லை.

திடுக்கென அது நினைவுக்கு வந்து பதறினான். “வாக்காளர் அட்டவணை”. சத்தமாகவே உச்சரித்துவிட்டான். அதை எடுத்து வைத்துக்கொண்டு, தெருத்தெருவாக பெயரைக் கண்டு பிடிக்கும் வரை சுற்றிவரப் போகிறாள்….”.

“ஏதாவது சொன்னாயா ராபர்ட்?” என்று மார்கரெட் கேட்டாள்.

“என்ன? இல்லையே. ஒன்றுமில்லை”.

எப்படியும் அவன் மறைத்துவைத்திருக்கும் அசிங்கம் வெளியில் தெரிந்து விடும். அதற்கான நேரம் நெருங்குகிறது. சிறுமியைக் கொன்றவன் என்று முத்திரையிடப்போகிறார்கள். அவன் தடயங்களையும் மறைத்துவைத்ததால் சதிச்செயல் மிகுந்ததாகவும் கருதப்படும். காரணம், தேனிலவு முடிந்து திரும்பிய கையோடு அந்த எம்.ஜி யை விற்றிருந்தான்.

மனித உயிரைக் கொன்றக் குற்றத்திற்காக எப்படியும் ஐந்து ஆண்டு தண்டனையாவது கிடைப்பது நிச்சயம். அவனது வேலை போகும். அவனது கௌரவம் குலையும். இத்தனை ஆண்டுகளாய் அவன் கட்டிவைத்த அனைத்தும் …. நொறுங்கி அதல பாதாளத்தில் விழும்.

அப்படி நடந்து விட்டால், எல்லாவற்றையும் முதலிலிருந்து தொடங்கி முன்னேறும் அளவுக்கான மனத்திடம் தனக்கு இல்லை என்பதை அவன் அறிவான்…. அந்த அளவுக்கு அவனுக்கு அமைந்த வாழ்க்கையோடு ஒன்றிப்போய் விட்டான்.

“தி சுவான் பார் வரைப் போய் வரலாம் என்று நினைக்கிறேன். எனக்காகக் காத்திருக்க வேண்டாம். தாமதமானாலும் ஆகலாம்,” என்று மார்கரெட்டிடம் சொன்னான்.

“அப்படியா. சரி. இரவு சாப்பாட்டுக்கு உனக்கு ஏதாவது எடுத்து வைக்கிறேன்”.

இது போன்ற நேரங்களில், இப்படித்தான் இருக்கும் என்று ஊகிக்க தெரிந்த மனைவி அமைவது ஒரு கொடுப்பினை தான் என்று தனக்குள் சொல்லிக்கொண்டான்.

~oOo~

அந்த பெண் வசித்துவந்த அடுக்குமாடிக்குடியிருப்புகள் இருந்த பகுதியை 15 நிமிட கார்ப் பயணத்தின் முடிவில் அடைந்தான். அவளது இருப்பிடம் தரைத்தளத்தில் இருந்தது.

அலங்காரத்துக்கு ஆயத்தமாகும் நிலையிலான உடையுடன், கூந்தல் டவலில் சுற்றியிருக்க, அவள் வந்து கதவைத் திறந்தாள்.

முன்னறிவிப்பு எதுவுமில்லாமல் வந்ததற்கு வருத்தம் தெரிவிக்கும்போது தடுமாறினான். அவள் வசிப்பது தன் வீட்டின் அருகில்தான் என்பது தெரியவரவே அவனது நண்பன் குறித்த தகவலை அவளிடம் தந்து விடலாம் என்று நினைத்ததாக சொன்னான்.

“ஓ!அதனால் என்ன? பரவாயில்லை. உள்ளே வாருங்கள். நான் இருக்கும் கோலத்துக்காக என்னை மன்னிக்க வேண்டும். என் கூந்தலைப் பராமரித்துக் கொண்டிருந்தேன். ஏதாவது குடிக்கக் கொண்டுவரட்டுமா?

“வேண்டாம். நான் கார் ஓட்டியாக வேண்டும்”.

“ஆமாம். மது குடித்ததை கண்டு பிடிக்கும் கருவிவேறு!”

அவன் சிரிக்க முயன்றான். ஆனால் அவனது முகத்தில் தசைகள் அசைய மறுத்தன. “அந்த நண்பன் … அவனது பெயர்…..” பாதி வார்த்தைகளை விழுங்கியபடி பேசினான்… “அவன் பெயர் சுமித் …… ராபர்ட் சுமித்”.

“அதே தான்!” அவள் கத்தினாள். “அவனைத்தான் நான் தேடிக்கொண்டிருந்தேன்! அவன் முகவரியை இன்று பகல் நகரமன்றத்தில் கிடைத்த வாக்காளர் அட்டவணையில் கண்டுபிடித்துவிட்டேன்’’.

எனவே நினைத்தது சரிதான். இவனைத்தான் அவள் தேடிக்கொண்டிருக்கிறாள்.

அவனது ஓவர் கோட்டின் பையில் கையை நுழைத்துக் கொண்டே, “சரி ஏதாவது குடிக்கலாம் என்று நினைக்கிறேன்” என்றான்.

பானங்கள் இருக்கும் அறையில் இருந்த அவளது முதுகின் பின் இருந்தவனிடம், “ஜின்னுடன் டானிக் போதுமா?” என்று கேட்டாள்.

“போதும்’’ என்று சொல்லியபடியே, ஒரு கயிரை வெளியே எடுத்தான்.  அது அவளது கழுத்தைச் சுலபமாக சுற்றி வளைத்தது. அதனை இறுக்கியபோது அவன் சத்தம் எதுவும் போடவில்லை. அவளும் தான் ….

~oOo~

அடுத்த நாள் காலை சிற்றுண்டி சாப்பிட மேசைமுன் அமர்ந்த போது, ராபர்ட்டை பார்த்தாள். அவன் வெளிறிப்போய் சோகமாக இருப்பதாக மார்கரெட் நினைத்தாள். கண்களைச்சுற்றி கருவளையங்கள், அவனிடம் வழக்கத்துக்கு மாறான பதற்றம் தெரிந்தது. அவனுக்கு நிச்சயமாக ஒரு நாள் ஓய்வு தேவை. அந்த அளவு அவன் அலுவலகத்தில் கடினமாக வேலை செய்கிறான்.

அவனை ஒரு நாள் விடுப்பில் இருக்கும் படி சொல்வதில் பெரிதாக பலனிருக்காது என்று அவள் தெரிந்துவைத்திருந்தாலும், முயற்சி செய்து பார்க்கலாம் என்று முடிவெடுத்தாள். அவன் ‘சரி’ என்று ஒப்புக்கொண்டது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.

“எனக்கு  ஏதோ ஒற்றைத் தலைவலி போல் இருக்கிறது” என்றான்.

“ஓய்வெடுத்தால் சரியாகிவிடும். நான் உங்கள் அலுவலகத்துக்கு தொலைபேசியில், உங்களுக்கு உடல் நலமில்லை என்று சொல்லிவிடுகிறேன்” என்றாள்.

முன்வாயில் கதவின் உட்பக்கமிருந்த தரைவிரிப்பில் கேட்ட ‘தொப்’ என்ற சத்தம் தபால் வந்து விட்டது என்ற அறிவிப்பை அவளுக்கு உணர்த்தியது.

“நான் போய் பார்க்கிறேன்” என்று சொல்லிவிட்டுப் போனாள்.

இரண்டு கடிதங்கள். ஒன்று, ராபர்டின் வங்கிக் கணக்கின் விவரங்கள். அடுத்தது அவளுக்கு : அறிமுகமில்லாத கையெழுத்து.

சமையலறைக்குத் திரும்பும் வழியில் அதைத் திறந்துப் பார்த்தாள். மூன்று பக்க கடிதம், ஒரு புகைப்படத்துடன். கடிதத்தைப் படிக்க ஆரம்பித்தவளுக்கு அதிர்ச்சியில் தலை சுற்றியது.

“…… உங்கள் பெயரை வைத்து தேடிப்பார்த்தேன் …. நான் பிறந்ததிலிருந்து எத்தனை மார்கரெட்டுகளுக்கு திருமணம் ஆகியுள்ளது என்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள் …. அதாவது, யார் அந்த சரியான மார்கரெட் என்று கண்டுபிடிக்க அப்படி ஒவ்வொருவராக சலித்துப் பார்த்தேன் என்று அர்த்தம் …..”.

புகைப்படத்தில் வெளிறியக் கூந்தலுடன் அழகாக இருந்த அந்தப் பெண்னை உற்றுப் பார்த்தாள். இவ்வளவு நாட்கள் கழித்து …. அது அவளாக …..? அவளது நினைவில் புதைத்து வைத்த விஷயம் அது. அப்படியே புதைந்து கிடக்கும் என்று நினைத்த விஷயம். ஆனால், உள்ளுக்குள் தன் கடந்த காலத்திலிருந்து எப்படியும் தப்பிக்க முடியாது என்பதை அறிந்திருந்தாள்.

“….. என்னைப் பற்றிய உண்மை முதன்முதலில் எனக்கு தெரியவந்தபோது என் மனம் காயப்பட்டது. கோபமும் வந்தது …. ஆனால், இப்பொழுது நானும் வளர்ந்து பெரியவளாகி விட்டதால் ஏன் நீ அப்படி செய்தாய் என்பதை புரிந்து கொள்ளமுடிகிறது.”

மேசைமுன் அமர்ந்து வழவழப்பான பைன் மரப்பலகையின் மீது தன் கைகளை வைத்து, அவை நடுங்காமல் பார்த்துக் கொண்டாள். ராபர்ட் பக்கம் பார்வையை செலுத்தினாள். இவளது பதற்றத்தை அவன் கவனித்ததாகத் தெரியவில்லை.

“….. கடைசியில் நீ ராபர்ட் சுமித் என்பவருடன் செய்து கொண்ட திருமணம் மூலம் உன்னை கண்டுபிடிக்க முடிந்தது….. இப்பொழுது உன்னை சந்திக்கவேண்டும் என்று விரும்புகிறேன்…… என்னை தத்தெடுத்த பெற்றோர்தான் எனக்கு ‘அப்பா’, ‘அம்மா’. அதில் எந்த சந்தேகமும் இல்லை…… ஆனால்…..’’

“கடிதத்தில் ஏதாவது கெட்ட செய்தியா?” என்று ராபர்ட் கேட்க, முகட்டில் கண்ணீர் முட்ட, கண்களை சிமிட்டியபடி,

“கெட்டதா? அப்படி ஒன்றும் இல்லை……” மாறாக, அதற்கு நேர் எதிர் அல்லவா என்று நினைத்துக் கொண்டாள். ஆனால், கணவன் இதை எப்படி எடுத்துக்கொள்வானோ?

இத்தனை ஆண்டுகள் மறைத்துவைத்திருந்தக் குற்ற உணர்வு திடீரென மேலெழும்பி அவளை ஆட்கொண்டது. அந்த புகைப்படத்தை மேசைக்கு அப்பால் நகர்த்திவைத்தாள்.

“ராபர்ட் …. எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை…. உன்னிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டும் …. உன்னை சந்திப்பதற்கு முன் நடந்த சம்பவம் அது …..”

~oOo~

பிரஞ்சு, தமிழ், ஆங்கில மொழிகளுக்கிடையே மொழிப்பாலம் அமைத்து வரும் சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர் (1963), கடந்த 28 ஆண்டுகளாக புதுச்சேரியில் பிரஞ்சுப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். பிரஞ்சு மொழியில் பி.ஏ, எம்.ஏ, ஆகியவற்றை புதுவை தாகூர் கலை கல்லூரியில் பயின்றவர். எம்.பில்(பிரஞ்சு), பட்டத்துக்கு தமிழ், பிரஞ்சு வினைகள்- ஒர் ஒப்பாய்வு எனும் ஆய்வுக் கட்டுரை வழங்கியவர்.

சுவிட்சர்லாந்து பிரஞ்சு எழுத்தாளர் பிலேஸ் சாந்த்ரார் படைப்புகளில் விலகித்தப்புதல் எனும் ஆய்வினை ஷெவாலியே கிருஷ்ணமூர்த்தி அவர்களை ஆய்வு நெறியாளராக கொண்டு, பிரஞ்சு மொழியில் முனைவர் பட்டம் பெற்றவர். ஆய்வுப் பட்டங்களை புதுவைப் பல்கலைக்கழகத்தில் பெற்றவர். மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் குறுந்திட்டத்தின் கீழ், 2011ல் குறுந்தொகையைப் பிரஞ்சு மொழியாக்கம் செய்துள்ளவர். இந்த ஆண்டு, பல்கலைக்கழக நிதி நல்கையின் உதவியோடு, ஐங்குறுநூறு தொகுதியை முழுமையாகப் பிரஞ்சு மொழியாக்கம் செய்துமுடித்துள்ளார்.

பிரஞ்சு மக்கள், பிரஞ்சு மூலம் தமிழ் கற்க நூலும் குறுந்தகடும் வெளியிட்டுள்ளார். புதுச்சேரி பொதுஅறிவு, அத்தையின் அருள் ஆகிய நூல்களின் ஆசிரியர். ’நற்றிணை’ பதிப்பில், கலகம் செய்யும் இடது கை, கடவுள் கற்ற பாடம் ஆகிய தலைப்புகளில், பிரஞ்சுக்கதைகளை மொழியாக்கம் செய்துள்ளவர். காலச்சுவடு பதிப்பில், ஹினெர் சலீமின் அப்பாவின் துப்பாக்கி எனும் பிரஞ்சுப் புதினத்தைத் தொடர்ந்து, நோபல் பரிசு பெற்ற லெ கிளெஸியோவின் சூறாவளி (அடையாளம் தேடி அலையும் பெண் உள்ளிட்ட இரண்டு குறு நாவல்கள்) எனும் நூலை மொழிபெயர்த்துள்ளவர்.

ஜப்பானின் டோக்யோ பல்கலைக்கழக பிரஞ்சுப் பேராசிரியர் மிக்கேயல் ஃபெரியே எழுதிய ஃபுக்குஷிமா எனும் நூலினை தமிழாக்கம் செய்துள்ளார். இதனை தடாகம் பதிப்பகம் 2017ம் ஆண்டு வெளியிட்டுள்ளது. இவரது பிரஞ்சு-தமிழ் மொழிபெயர்ப்பு திட்டம் ஒன்றினை, 2018ம் ஆண்டு மார்ச் முதல் மூன்று மாதங்கள் பிரான்ஸில் தங்கி முடிக்க பிரஞ்சு அரசின் உதவியுடன் மேற்கொள்ளவிருக்கிறார். விரைவில், ”பறக்க ஆயத்தமாகும் பறவைகள்” (ஆங்கிலம்வழியாக தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட கதைகளின் தொகுப்பு) வெளியாகவுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.