துயரத்தில் முடிந்த சுந்தரராமசாமியின் காவியம்

சுந்தர ராமசாயின் கட்டுரைத் தொகுப்பைப் படித்துக் கொண்டே வந்தபோது உடனடியாகத் தோன்றியது அவரது ‘சவால்’ கவிதைதான்.

நோவெடுத்துச் சிரம் இறங்கும் வேளை

துடைகள் பிணைத்துக்கட்ட கயிறுண்டு உன் கையில்

வாளுண்டு என் கையில்

….

இந்தக் கவிதையை அவர் எழுபதுகளின் துவக்கத்தில், எழுதாமல் இருந்துபின் எழுத வந்த காலத்தில் எழுதப்பட்டது என்பது இலக்கிய வாசகர்கள் அறிந்த ஒன்று. இந்தக் கவிதையை எழுதப்படாத துவக்க காலத்திலேயே அவர் மனதில் எழுதிவிட்டார். அவரது கட்டுரைகளின் வழி தன் இருப்பு குறித்து தெரிவிக்க முயன்ற சாரம் அதுதான். இதனை 1963 வாக்கில் பாரதி குறித்து எழுதவந்த கட்டுரையிலேயே காணலாம். எனவே சுந்தர ராமசாமி பெரும் கனவுகளோடுதான் விரும்பி இலக்கியத்துறைக்கு வந்துள்ளார். இந்தக் கனவுகளே க.நா.சு. போல சற்று மூர்க்கமாக தமிழ் இலக்கியச் சூழலோடு மல்லுக்கட்டியும் தனது இலக்கிய வீச்சை வெளிப்படுத்த இயக்கியிருக்கிறது. இந்த இலக்கியப் பாத்திரத்தை தனது கட்டுரைகளின் வழி சிறப்பாக வெளிப்படுத்தி வந்துள்ளார்.

சுந்தர ராமசாமி பொருளாழ்ந்த நிலையில் ஒரு தனித்துவமான மொழி நடை (Style) யைக் கையாண்டார். முன்னோடிகளின் செல்வாக்குத் தன்னிடம் வெளிப்பட்டிருக்கலாம் என்பதைச் சொல்லவந்த சு.ரா., ‘வாடைக்காற்று அடிப்பதால் மலையில் மழையிருக்கலாம் என்பது போன்ற அனுமானம்’ என்றும், ‘சம்பட்டியால் தாக்குவது போலவோ உரலில் உலக்கை விழும்போது தரையில் வைத்திருக்கும் பாத்திரம் அதிர்வது போலவோ இது நிகழ்ந்திருக்கக் கூடும்’ என்று விசயத்தைத் தன் நடையில் காட்சி ரூபமாக்கி விடுகிறார்.

புதுமைப்பித்தனைப் பற்றி சொல்ல வரும்போதெல்லாம் ஆவேசம் கொண்டுவிடுகிறார். ‘தன்னுள்ளிலிருந்து கலையின் புயலைப் பரப்பி அப்புயல் இட்டுச்சென்ற திசை வழிகளில் சுழன்று ஒரு அசுரத்தன்மைக்கு ஆளான கலைஞர் அவர். இவருடைய தன்னிச்சையான வேகச்சுழற்சியில் கலையுலகில் சம்பிரதாய வேலிகள் எத்தனை எத்தனையோ சரிந்தன.’ ‘தான் ஆற்ற இருக்கும் வித்தியாசமானப் பங்கை முன்கூட்டி உணர்ந்த ஒரு கலைஞன் மிகுந்த தன்னம்பிக்கையோடு தன் மேதைமையைக் கிள்ளி தெருவில் நாற்புறமும் வீசிக்கொண்டு ஓடுவதைப் போன்ற சித்திரத்தை எழுப்புகின்றன இவரது கதைகள்.’ ‘பத்திரிக்கைகளின் முதல் தேவையாக சிறுகதைகள் இருந்த காலத்தில் புதுமைப்பித்தன் அதனைப் பூர்த்தி செய்த விதம் நீச்சல் குளத்திற்குள் ஒரு திமிங்கலம் வாலை அசைத்துக் கொண்டிருப்பதுபோல் இருக்கிறது’ என்று மொழியில் பித்தனை வசப்படுத்துவார்.

சிற்றிதழ்காரர்களிடம் தோன்றும் வர்த்தகரீதியான பத்திரிக்கைக் கனவு யதார்த்த உலகிற்கு ஒவ்வாதது என்பதை ‘சர்குலேசன் ஓங்கிவிடும் என்கிறீர்கள். மீண்டும் கனவு. தங்களுடன் பேசும் போதெல்லாம் மயக்கங்களின் குகைகளிலிருந்து நிஜ உலகத்தின் சூரிய ஒளிக்குத் தங்களைக் குப்புறப் பிடித்துத் தள்ளி விடுவதற்கு ஒரு தாயத்து இருக்கக் கூடாதா என்று நினைப்பேன்’. ‘நமது தமிழ் மாதாவையும் பாரத மாதாவையும் உலக அரங்கில் தூக்கி வைத்தபின்தான் அவர்கள் முடி இறக்கிக் கொள்வார்கள் என்று தோன்றுகிறது,’ என்று சூழலின் முரணை நண்பர்களை முன்வைத்து எழுதுகிறார். சுந்தர ராமசாமியைக் கடுமையான யதார்த்தவாதி என்று சொல்லும்போதே, அவருள் இருக்கும் ‘கனவு’ தான் மேலதிகமாக உழைக்கவைத்திருக்கிறது.

சு.ரா. நடையின் மற்றொரு சிறப்பு இலக்கிய ஆளுமைகளின் வெளிப்பாட்டைப் படிமமாக வரைந்து காட்டிவிடும் திறன் அவருக்கு இலகுவாக வெளிப்பட்டிருப்பதும்தான். பாரதியின் ஆளுமையைப் பற்றி “பாரதி ஒரு இடத்தில் வளரும் மரம் மட்டும் அல்ல. சுற்றி இருக்கக் கூடிய சாரங்களை ஒட்ட உறிஞ்சக்கூடியவன், நமக்குச் சக்கைதான் மிஞ்சுகிறது என்று நான் சொன்னது க.நா.சு. பாரதியை மனதில் வைத்துக் கொண்டுதான். எனக்காக இன்னொரு விசயம் தோன்றியது. அதாவது பாரதி பயன்படுத்திய எந்தச் சொல்லை நாம் பயன்படுத்தினாலும் அது பாரதி பக்கம்தான் போகிறதே தவிர நம் பக்கம் நிற்கவே செய்யாது. அப்படி ஒன்றும் அந்தச் சொற்கள் எல்லாம் பாரதிக்கு மட்டுமே சொந்தமானவை அல்ல. ஆனால் பாரதி பயன்படுத்திவிட்டால் அவனது முத்திரை அந்த வார்த்தைகள் மேல் அழுத்தமாக விழுந்துவிடுகிறது. அந்த வார்த்தைகளை நாம் நம் கவிதைக்குப் பயன்படுத்திக்கொள்ளவே முடியாது என்று ஆகிவிடுகிறது.’ என்று உணர்ந்து வெளிப்படுத்துகிறார்.

புதுமைப்பித்தன் கலை வெளிப்பாடு எத்தகையது என்பதை ‘கலையை அளவுகோலுக்கு ஏற்றபடி தயாரிப்பதைவிட தனது ஆளுமைக்கு ஏற்றபடி சதையும் ரத்தமுமாய் நம்முன் தள்ளிவிட்டுச் சென்றுவிடுகிறது. சீவுளி போட்டுச் சீவிக்கொண்டிருக்க அது பொறுமை கொள்வதில்லை. கலையின் பூர்ணவத்துவத்தை விடவும் இயற்கையின் ஜீவன் துடிப்பதையே அது சற்று மோட்டாவாக இருந்துவிட்டாலும் பாதகமில்லை. ஆசைப்படுகிறது இவருடைய கலை மேதமை’ என்று புதுமைப்பித்தன் நாடியைப் பிடிக்கிறார்.

மற்ற உலக எழுத்தாளர்களிடமிருந்து தாஸ்தாயெவ்ஸ்கியின் எழுத்து எப்படி வித்தியாசமானது என்பதை, ‘தாஸ்தாயெவ்ஸ்கியின் படைப்புலகம் நம் மனதில் உருவாக்கும் பிம்பம் என்ன? ஒரு இருட்டு குகை, முடிவற்றது. கிளைகள் பிரிந்து அக்கிளையிலிருந்து மேலும் கிளைகள் பிரிந்து செல்வது. அந்த இருட்குகைக்குள் மலைச்சிகரங்கள், பள்ளத்தாக்குகள், பாலைவனங்கள், வனாந்தரம். அங்கு நறுமணங்கள், துர்நாற்றங்கள், கடுங்குளிர், பொறிபறக்கும் வெப்பம், எண்ணற்ற ரகசிய அறைகள், இந்தப் பாதாள உலகத்தில் கைவிளக்கு ஒன்றை ஏந்தி தாஸ்தாயெவ்ஸ்கி முன்செல்ல நாம் பின் தொடர்கிறோம்.’ என்று மொழியில் தாஸ்தாயெவ்ஸ்கி  ஆழத்தை நோக்கி அழைத்துச் செல்லும் பாதைகள் எத்தகையது என்பதைக் காட்டுகிறார்.

கட்டுரையைத் துவங்கும் இடத்திலேயே அதன் உயிர் நாடியான இடத்தைத் தொட்டுவிடும் சொல்பக்குவம் அவரிடம் உண்டு. ஜீவாவைப் பற்றிய கட்டுரையை “ ‘ஜீவா மறைந்து விட்டார்’ நண்பர் சொல்ல, கேட்ட நண்பர் ‘ஆ’ கூட்டத்தில் பேசிக் கொண்டிருக்கும் போதா?’ என்று ஸ்தம்பித்துவிட்டார்” என்று தொடங்கிய இடத்திலேயே ஜீவா வாழ்நாள் முழுக்க உழைத்த உழைப்பின் திரட்சி வாசகர்களிடம் வெளிப்பட்ட விதத்திலிருந்து காட்டுகிறார். அப்படிக் கட்டுரையைத் தொடங்கி, “சிறு பிராயத்திலிருந்தே நெஞ்சோடு வளர்த்த ஒரு கனவு அவருக்கு இருக்கத்தான் வேண்டும் என்று தோன்றுகிறது. மனித வெள்ளத்தை அவர்களில் ஒருவனாய் முன்னின்று தலைமை தாங்கி இட்டுச்சென்று, அதில் உன்னதமான ஓர் எதிர்காலத்துக்கு அழைத்துச்செல்லவேண்டும் என்பதே அது.” என்று ஜீவா இயங்கிய விதம் எத்தன்மையது என்று காட்டுகிறார்.

சுந்தர ராமசாமி தன் இலக்கிய முன்னோடிகள் பற்றி, தன் சக எழுத்தாளர்களைப் பற்றி, தன்னோடு இணைந்திருந்து- பிரிந்திருந்து இயங்கியவர்களைப் பற்றி அவர்களின் குணநலன்களைப் பற்றி, சரிவுகளைப்பற்றி அவர்களது ஆளுமை பற்றி, அவர்களது செயல்பாடுகள் பற்றி, கோபதாபங்கள் பற்றி, இலக்கிய நோக்கங்கள், அர்ப்பணிப்புகள் பற்றியெல்லாம் விரிவாக எழுதியிருக்கிறார். இதில் அனைவரையும் விமர்சன கண்ணோட்டத்துடன்தான் அணுகி இருக்கிறார். க.நா.சு.வுக்கும் சு.ரா.விற்குமான உறவு குரு-சிஷ்யன் உறவுபோலத்தான். ஆனால் எந்த இடத்திலும் அவரை மிகையாகத் தூக்கவோ, வக்கிரமாகத் தாழ்த்தவோ செய்ததில்லை.

க.நா.சு.வின் மனநிலை பற்றி – எல்லாம் முக்கியமானது தான். எதுவும் அவ்வளவு முக்கியமில்லை’ என்பது போல ஒருவித இரட்டை மனநிலையில் இயங்கக்கூடியவர் என்கிறார். அவரது எழுத்தின் உள்ளோட்டம் குறித்து இப்படிச் சொல்கிறார். ‘சமூகத்தில் மாற்றங்கள் ஏற்படவேண்டுமா என்று கேட்டால் அவர் வேண்டும் என்றுதான் சொல்வார். ஆனால் எழுத்தில் என்ன மனோபாவம் வெளிப்படும் என்றால் ஒரு Statues-quoவைத் தக்கவைத்துக்கொண்டு போவதுதான் நல்லது; பெரிய மாற்றங்கள் எதுவும் வேண்டாம் என்ற மனநிலையில்தான் அவர் இருக்கிறாரோ என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டிருக்கிறது’ என்கிறார்.

க.நா.சு.வின் விமர்சன எல்லை குறித்து “க.நா.சு. பண்டிதத்தை முக்கியமான எதிரியாகக் கண்டார். பண்டிதத்தை ஆராயப் புகுத்தவர். அம் முகங்களில் ஆபாசமாய்ப் பிதுங்கிய ஜாதி அரசியலையும் கண்டிருப்பாரெனில் அவருடைய விசாரணை இலக்கியத்திலிருந்து விரிந்து அரசியல், பொருளாதார நிலைகள், சமூக இயல் ஆகியவற்றைக் கவனிக்கும் வீச்சில் முழு வாழ்வுக்குமே அவரைத் தள்ளிக்கொண்டு போயிருக்கும்.” அவர் அவ்வாறு இலக்கியத்தின் வழி, வாழ்வின் ஆழங்களுக்குள் செல்லவில்லை என்று மதிப்பிடுகிறார். க.நா.சு.வை, ஒரு இலக்கிய சிபாரிசுகாரர் என்றே குறிப்பிடுகிறார்.

இந்தவகையில் சி.சு.செல்லப்பா, கிருஷ்ணன் நம்பி, ஜீவா, மௌனி, பிரமிள், ஜி.நாகராஜன் என அவரோடு பழகிய இலக்கிய நண்பர்களின் பலம் பலவீனம் குறித்த விரிவாகவே எழுதியிருக்கிறார்.

பிரமிளிடம் ஒருவித பிடிவாத குணம் மேலோங்கி இருந்ததை இப்படிச் சொல்கிறார். “சிவராமூ, அவராகச் சில சமயம் தன்னை மறுபரிசீலனை செய்து பல சறுக்கல்களையும் அபூர்வமாக ஒத்துக்கொண்டு இருக்கிறார். மிகவும் பெருந்தன்மை கொண்ட காரியமாக அவை அந்நேரங்களில் பட்டிருக்கின்றன. ஆனால் அவர் ஒரு விமர்சனத்தை எதிர்கொள்ளும் போது தன்னைச் சுய பரிசோதனை செய்து கொள்ளக்கூடியவர் அல்ல. தன் முழு மூளையையும் தன்னை நியாயப்படுத்தவே வீணாக்கிக் கொண்டிருப்பார். வெற்றிபெற வேண்டும் என்ற ஆத்திரம்தான் அவருக்கு முன்னுக்கு நிற்கும். தளையசிங்கத்திடம் விமர்சனங்களுக்கு மேலாக ஒரு தார்மீகமான குரல் இருக்கும்.”

பிரமிளை, ‘அவர் ஒரு மைனர் பொயட்தான்; மேஜர் பொயட் இல்லை. இவரை மேஜர் பொயட் என்றால் கம்பனை என்னவென்று சொல்வது’ என்று கேட்கிறார். எனக்கு பிரமிள், கவிதையை ஒவ்வொரு வார்த்தைச் செங்கல்லாக எடுத்துப் பொருத்துகிறாரோ என்றுபடுகிறது. அவ்விதம் சொற்களை எடுத்து அடுக்க அடுக்க உணர்வின் தளம் கழன்று போய்விடுகிறது. அப்புறம் படிமம்தான் கவிதை என்று அவர் மிதமிஞ்சி நினைந்துச் செயல்பட்டது இன்று சிவுக்கென்று படுகிறது. படிமம் ஒரு உத்திதானே தவிர வாழ்வின் கொந்தளிப்பல்ல என்று எனக்குப் படுகிறது.

பிரமிளின் இலக்கிய உரையாடல் எப்படி இருக்கும் என்பதை “சாதாரண வாசகர்களுக்குப் புரியாமல் இருக்கும். வரிகளை (கவிதை) மனதிற்குள் தெளிவுபடுத்தி வைத்துக்கொண்டு சந்தர்ப்பம் ஏற்படும்போது ஒரு  Casual தன்மையுடன் விளக்கம் தந்து பிறரை ஆச்சரியப்படுத்தும் சுபாவம் அவருக்கு உண்டு’ என்று அவரது நடத்தையை வெளிப்படுத்துகிறார்.

ஜி.நாகராஜன் குறித்தான சு.ரா.வின் நினைவோடையைப் படிக்கிறபோது ஈவு இரக்கமற்ற கெட்டித்தட்டிப்போன இதயம் படைத்தவர்போல ஒரு தோற்றம் உருவாகிறது. ஆனால் ஜி.நாகராஜனின் நண்பரான கர்ணன், அவரது வீட்டுத் திண்ணையில் அமர்ந்து கண்ணீர் மல்க இரவு நேரங்களில் பாடும்போது ரொம்ப துக்கமாக இருக்கும் என்று என்னிடம் சொன்னார். ஒருவேளை ஜி.நாகராஜன் இவ்விருவரிடமும் இருவேறு விதமாக வெளிப்படுத்திக் கொண்டாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது. அல்லது சு.ரா. அந்தப் பக்கத்தைப் பார்க்க முடியவில்லையோ என்று தோன்றுகிறது.

க.நா.சு.வை ஒருவித இதத்ததுடன் அணுகியிருக்கும் சு.ரா., செல்லப்பாவைக் கறாரான பார்வையில் பார்த்திருக்கிறார். பிரேமிளுக்கும் சு.ரா.விற்குமான உறவின் விரிசல்கள் செல்லப்பாவைக் கடுமையாகப் பார்க்கவைத்திருக்கும் என்று நம்புகிறேன். செல்லப்பாவின் இலட்சிய வேட்கையை உயர்வாகப் போற்றினாலும் க.நா.சு.விடம் காட்டிய இதம் இல்லை.

செல்லப்பாவின் பார்வையில் ஒருவிதப் பழமையின் களிம்பு இருப்பதாகச் சொல்கிறார்; இருக்கலாம். அவரது சிறுகதைகள் வடிவச் செம்மை – சிறுகதையின் தொனிப்பொருள் லட்சியம் நோக்கியோ, அல்லது லட்சியங்களின் சரிவை நோக்கியோ அமைந்தவை என்றும் சொல்லி இருக்கிறார். என்றாலும் செல்லப்பா சிறுகதைகளில் வெளிப்படுத்திய வண்ணங்கள் முக்கியமானவை. அந்தத் தேர்வுகளும் அதன் அடியில் ஓடும் நாதங்களும் நம்மை ஈர்க்கச் செய்கின்றன. சு.ரா. அவரது படைப்புகளை முழுமையாகப் பார்க்கவில்லையோ என்று படுகிறது. முக்கியமாக சிறுகதைகளில், ஒன்றிரண்டைப் போகிறபோக்கில் சொல்லியிருக்கிறார். அவ்வளவுதான்.

‘மணிக்கொடி எழுத்தாளர்கள் தங்களை காந்தியவாதிகளாகக் காட்டிக்கொண்டார்களே தவிர, ஒருவருக்குக்கூட காந்தி அளவுக்கு முற்போக்கான சிந்தனை கிடையாது. புதுமைப்பித்தனைத் தவிர.’ என்ற விமர்சனம் ஒருவகையில் சரியானதுதான்.

க.நா.சு.விற்கு ஜானகிராமனின் எழுத்து மீது நல்ல மதிப்புண்டு. ‘மோகமுள்’ குறித்து இந்திய நாவல்களிலேயே தனித்துவமானது என்பது போன்ற ஒரு மதிப்பீட்டைச் சொல்லியிருக்கிறார். அவர் கதைகள் பற்றியும் உயர்வாகச் சொல்லியிருக்கிறார். தி.ஜானகிராமன் குறித்த ஒரு உரையாடலில், “ஜானகிராமன் ரசானுபாவத்துக்கு ரொம்ப முக்கியத்துவம் தருகிறார். அவ்வளவு முக்கியத்துவம் அதுக்குத் தரக்கூடாது. வாசகன் ரசித்துத்தான் ஆகணும் என்ற கட்டாயம் இல்லை. அவனை ரசிக்க வைத்துத்தான் ஆகணும்ங்கறதுக்காக விஷயங்களைக் கதைக்குள் கொண்டுவரக் கூடாது. வடமொழியில் இருக்கக்கூடிய ஒரு மரபு இது. வடமொழிக் காப்பியங்களில் அது அதிகமாக இருக்கேயொழிய தமிழில் செய்யவேண்டிய செய்யக்கூடிய விஷயமே அல்ல என்றார்… கு.ப.ரா. வோட க்ராஃப்டை எடுத்துக் கொண்டு அதுக்குள் தேனைவிடறது மாதிரி செய்கிறார் ஜானகிராமன்” என்று சொன்னதாக சு.ரா. குறிப்பிடுகிறார். ஜானகிராமன் இயல்பாக எழுதிச் செல்வதிலேயே மொழியின் அழகிய லயம் கூடிவந்துவிடுவதாகத்தான் நினைக்கிறேன். வேண்டுமென்றே அதில் தேனை ஊற்றுவதாகத் தெரியவில்லை. இந்த க.நா.சு.வின் விமர்சனத்தில் சு.ரா.வின் விமர்சனமும் கலந்து வெளிப்பட்டிருப்பதாக நான் நினைக்கிறேன்.

காலமெல்லாம் உயர்ந்த இலக்கியம் குறித்துப் பேசிவந்த க.நா.சு. ‘குருதிப்புனல்’ போன்ற இரண்டாம்தர நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தது அவரது பயணத்தில் விழுந்த சரிவாகக் காண்கிறார். சிறுகதையில் ஏதும் சாதனை நிகழ்த்தாத தருமு சிவராமுவின் ஒரு கதையைச் சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்காக (ஆங்கிலத்தில்) தேர்ந்தெடுக்கும் அவரது பொறுப்பற்றத் தன்மையைத்தான் காட்டுகிறது என்கிறார். சிவராமுவின் அந்தக் கதையை எழுத்து  பௌண்ட் வால்யூமில் படித்தேன். அது முழுக்க முழுக்க மௌனியின் பாதிப்பில் எழுதப்பட்டிருந்தது. பெரிய பார்வை வீச்சை வெளிப்படுத்தவில்லை என்றுதான் நினைக்கிறேன்.

மௌனியைப் பற்றிய கட்டுரையைப் படிக்கும்போது அவர் சவடால் பேர்வழியாக இருந்திருக்கிறார் என்று படுகிறது. ‘உலகத்தைப் பார்க்காமல், வாழ்க்கையிலிருந்து எந்த எதிர்வினையும் பெறாமல் தன்னைக்கூடப் பார்த்துக் கொள்ளாமல், தன் பிரதாபத்தின் போதையில் கரைந்து நிற்க விரும்பியவராகவே அவர் எனக்குத் தென்பட்டார்,’ என்று அடையாளப்படுத்துகிறார்.

மௌனி சில தனித்தன்மையான கதைகளை எழுதியிருக்கிறார். மௌனி தொடர்ந்து எழுதிவந்த அந்த நாளில் புதுமைப்பித்தன் அவரை ‘தமிழ்ச் சிறுகதையின் திருமூலர்’ என்று சொன்னதும் சரியாகப்பட்டிருக்கும். நான் மௌனியைப் படித்தபோது ‘திருமூலர்’ என்ற வார்த்தை அவரை கொம்பு சீவிவிட்டதோ என்றுபட்டது. அவரது எழுத்தின் பரப்பு மிகச் சுருங்கியது. மனஅவஸ்தை பாற்பட்டது. பகற்கனவால் வளர்வது. இலக்கிய உலகில் மௌனி நடந்துகொண்டவிதம் சண்டியர் தனமான சுயமோகம் சார்ந்ததாக இருந்ததை சு.ரா. வாயிலாக அறியமுடிகிறது.

விரிவாகவோ மிகச்சுருக்கமாகவோ முக்கியமான நவீனத் தமிழ் இலக்கிய ஆளுமைகள், முன்னோடிகள் பற்றி தனது மதிப்பீட்டை, விமர்சனத்தை சு.ரா. முன்வைத்தபடியே வந்திருக்கிறார்.

இதில் ஒரு மகத்தான கலைஞனாக புதுமைப்பித்தனை இனங்கண்டு கொண்டாடுகிறார். புதுமைப்பித்தன் குறித்த கட்டுரைகளில் மட்டுமல்ல. உதாரணத்திற்குப் பெயரை மட்டும் சொல்லநேரும் இடங்களில்கூட புதுமைப்பித்தனின் மேதமையைச் சொல்லாமல் விட்டதில்லை. சுவிடீஸ் எழுத்தாளர் சொல்மா லாகெலொவ்வை க.நா.சு. போல உலகில் காதலித்தவன் எவனும் இருக்கமுடியாது. இப்படி தன் எழுத்து மீது தீராக் காதல் கொண்ட தமிழ் வாசகன் இருந்திருக்கிறான் என்று லாகெலொவ்விற்கும் தெரியாது என்று சுந்தர ராமசாமி எங்கோ குறிப்பிட்டிருந்தார். அதையே புதுமைப்பித்தன் விசயத்தில் சுந்தர ராமசாமிக்கும் சொல்லலாம். புதுமைப்பித்தனின் எழுத்தை வெறித்தனமாகக் காதலித்தவர் சுந்தர ராமசாமி. அவரை உலகின் ஆகச்சிறந்த வரிசையில் வைத்து போற்றியிருப்பவர் ராமசாமி.

“மேதாவிலாசம், அந்தரங்க சுத்தி, சுதந்திரம் இம்மூன்று குணங்களிலிருந்து புத்தியின் தணிக்கைக்குக் காத்திராத அவருடைய கலை உணர்ச்சி செழுமையை உறிஞ்சி அவருடைய கதைகளில் எத்தனையோ சோபைகளை ஏற்றியிருக்கிறது.”

“அனுபவங்களை சிதைக்காமல், தன் பார்வையில் முழுமையாகத் தரும் சுய அபிமானமற்ற தன்மை, தன்னிலிருந்து விடுதலை பெற்று நிற்றல், புற உலகத்தையும் விலகி நின்று விமர்சிக்கும் குணம் புதுமைப்பித்தனைப் போல இவர்கள் எவரிடத்திலும் இல்லை.”

“பாரதிக்கு மனிதன் – காலத்தின் சோதனையால் அவன் எவ்வளவு தாழ்வுற்றிருப்பினும் – ஒரு தெய்வீகச்சுடர், அந்தச் சுடரைத் தூண்டினால் மனிதனை மேல்நிலைப்படுத்தி விடலாம். இதுதான் பாரதியின் ஆதாரமான கனவு. புதுமைப்பித்தனுக்கோ மனிதன் மிகச் சிக்கலான ஒரு பிராணி. இந்தச் சிக்கலைப் புரிந்துகொள்ளாத வரையிலும் மனிதனை மேல்நிலைப்படுத்தவோ அவன் மூலம் வாழ்வைச் செழுமைபடுத்தவோ இயலாது. இந்தப் பார்வைதான் இரண்டாயிரம் வருட மரபு கொண்ட தமிழ் இலக்கியத்தின் பிடரியைப் பற்றி அதை நவீனத்திற்குள் தள்ளுகிறது.”

இப்படி புதுமைப்பித்தன் குறித்து 100 மேற்கோள்களையேனும் சுந்தர ராமசாமியின் கட்டுரைகளிலிருந்து எளிதாக எடுத்துவைக்க முடியும்.

ஒரு வகையில் புதுமைப்பித்தனின் நேர் வாரிசு சுந்தர ராமசாமிதான். ரகுநாதனைவிட இலக்கியத்தில் சு.ரா. வெளிப்படுத்தியிருக்கும் போர்க்குணம் கடைசி வரை வற்றிவிடவில்லை. முக்கியமாக அவரது கட்டுரைகளில்.

புதுமைப்பித்தனின் சுடர்மிக்க உலகை மிச்சம் மீதி வைக்காமல் எல்லா கோணங்களில் இருந்தும் எல்லா குறுக்குச் சந்துகளின் வழியாகச் சென்றும், நின்றும் எடுத்துக்காட்டியவர் சு.ரா., தவிர தமிழில் வேறொருவர் இல்லை. என்றாலும் இருவரின் எழுத்தின் வெளிப்பாட்டிலும் வேறுபாட்டைத்தான் காணமுடிகிறது.

புதுமையின் மீது புதுமைப்பித்தனுக்கு இருந்த மோகம் உணர்வுப்  பூர்வமானது. சு.ரா.விற்கு அந்த மோகம் அறிவார்ந்த தளத்தில் நிகழ்கிறது. புதுமைப்பித்தன் வாழ்க்கையைத் தன் புதிய கண்கொண்டு பார்த்தார். சுந்தர ராமசாமி இலக்கிய வடிவத்தில்தான் அதிகமும் புதுமைகளைக் காண முற்பட்டார். புதுமைப்பித்தன் படைப்பில் அடங்காமல் வெளிப்பட்டதற்கும் சு.ரா. அடங்கி வெளிப்பட்டதற்கும் உணர்ச்சி வேறுபாடுகளே காரணம். இருவரும் வாழ்க்கையை அணுகிய விதம் வேறு. பண்பாட்டைப் பார்த்த விதமும் வேறு. தமிழ்ப் பண்பாட்டை உணர்ச்சிப்பூர்வமாக அணுகினார் புதுமைப்பித்தன். சு.ரா. முக்கியமாகப் படைப்பில் அறிவுபூர்வமாக அணுகினார்.

புதுமைப்பித்தனின் ‘பிரம்ம ராக்ஷஸ்’ கதையின் சிக்கலை ஒரு விமர்சன மேதைதான் வந்து விடுவிக்கவேண்டும் என்கிறார். அதுவரை ‘வார்த்தைகளை வைத்துக்கொண்டு ஜனங்களைப் பயங்காட்டுவது ரொம்ப லேசு’ என்ற புதுமைப்பித்தனின் வார்த்தைகளையே அக்கதைக்கு மேல் போட்டுவிட்டது பொறுத்திருப்பதுதான் நல்லது என்கிறார்.

நாட்டுப்புற மரபில் சித்து விளையாட்டு பிரபலமானது. ரஸவாதம் குறித்த நம்பிக்கையும் நமக்குண்டு. பெண்களைத் தொடரும் பிரமராக்ஷஸ் என்ற படிமமும் உண்டு. இந்த நம்பிக்கை சார்ந்த மரபிற்கு ஒரு கதை வடிவம் தந்திருக்கிறார் புதுமைப் பித்தன், அதில் மானுட அகச்சிக்கலை வெளிப்படுத்தியிருக்கிறார் என்பது எனது எண்ணம். இந்த அகம் சித்து மரபை நம்பும் உலகைச் சார்ந்தது. ‘காஞ்சனை’ போல.

சுந்தர ராமசாமியிடம் நான் விரும்பிக் கற்றுக்கொண்டது அவர் இலக்கியம் என்பது என்ன, கலை என்பது என்ன என்று திடீரென வெளிப்படுத்திய இடங்களில்தான். கடந்த கால இலக்கியத்துடனான ஒரு வாசகன் உறவு எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதற்கு, ‘நினைவின் துணைகொண்டு இயன்ற வரையிலும் சத்தியத்தை உருவி எடுப்பது’ ‘இலக்கியத்தில் சொல்கிறவனின் சத்தியமே முக்கியமானது’ என்று சொல்லியிருப்பார். ஓரிடத்தில் ‘தூய்மையான வெள்ளங்கி போட்ட பாதிரியாரால் மிகச்சிறந்த படைப்பைத் தரமுடியாது. ஒரு திருடனால் மிகச்சிறந்த நாவலை எழுதிவிடமுடியும்.’ என்று எழுதியிருப்பார். இந்த வாசகம்தான், அனுபவம் இலக்கியத்தின் ஆகப்பெரிய பலம் என்பது எனக்கு விளங்கிற்று. சின்ன வயதில் இந்த வரி தந்த மிதமிஞ்சிய உற்சாகம் இன்னும் நினைவில் இருக்கிறது. “சொல்லப்படாத ஒன்று சொல்லப்பட்டதற்கு நிகராகக் காரியம் ஆற்றுமா என்ற சந்தேகத்திற்கு, சில சந்தர்ப்பங்களில் சொல்லப்படாத நிலையிலேயே சொல்லப்பட்டதற்கும் மேலாகக் காரியம் ஆற்றும் என்பதுதான் பதில்’ என் இளம் பிராயத்திலேயே மனனமாகிவிட்ட தொடர் இது.

“அனுபவங்கள் கலைஞனைப் பாதிப்பது போலவே, கலை ஆளுமையில் அனுபவங்களும் பாதிக்கப்பட்டே கலை வெளிப்பாடு நிகழ்கிறது. கலைப்பார்வைக்கு அனுபவம் உள்ளாவதே கலை. கலைஞன் கண்ணாடி அல்ல எனில் கலை இல்லை. கண்ணாடி மட்டும்தான் எனில் அப்போதும் கலை இல்லை. அனுபவங்கள் கலைஞனின் ஆளுமையால் பாதிக்கப்படும்போது அந்த ஆளுமையின் தன்மைக்கேற்பத் தளமாற்றங்கள் நிகழ்கின்றன.”

“அளவு கோல்களை மீறி எழுந்த ஒரு கலை ஆவேசம், தன்னை இலக்கியமாக ஸ்தாபித்துக் கொண்டும் விடுகிறது. இந்நிகழ்ச்சிகளே இலக்கியத்தின் உன்னதப் பயணம்.

“படைப்பின் விதை கலைஞன் வாழ்க்கையின் மீது கொள்ளும் விமர்சனத்திலிருந்து முளைவிடுகிறது.”

“காலத்தின் சாராம்சங்களைப் பற்றிய தன் கணிப்புகளைக் கலைஞன் பதிவு செய்யவேண்டும். அவன் பதிவுகளில் ஆழமும் அர்த்தமும் இருந்தால் நிகழ்காலம் அவனை மறுத்தாலும் எதிர்காலம் அவனை அணைத்துக்கொள்ளும்.”

“கலை எப்போதும் சிக்கலின் சூட்சுமங்கள் பற்றிய கவலை கொண்டது. சூட்சுமங்களின் சிக்கலைப் புரிந்துகொள்ள உதவக்கூடியது. கடினங்களைக் கடினங்களாகக் கண்டு மொழியால் அவற்றைத் தாக்கி வசப்படுத்த முன்னுவது, மனிதனை ஆதாரமாக வைத்தே இந்த வாழ்க்கையை மாற்ற முடியும் என்பதால் மனித மனங்களின் உள்ளறைகளைப் பற்றி ஆழ்ந்த கவலை கொண்டது. மனிதனுக்கும் மிருகத்திற்குமான வேற்றுமைகளை, அதாவது இருப்புக்கும் வாழ்க்கைக்குமான வேற்றுமைகளைப் பதிவு செய்வதில் மிகுந்த கவனம் கொண்டது…”

“தன்னை அளக்கக் கருவிகளை வார்க்கும் மனிதன் மறுநிமிஷத்திலிருந்து அந்தக் கருவிகளை உருக்க முன்னும் சூட்சுமத்தில்தான் மனித முன்னேற்றத்தின் ரகசியங்கள் அடங்கிக்கிடப்பதாக நினைக்க ஆரம்பித்தான்.”

“சுய அனுபவத்தின் மெய்த்தன்மை படைப்பில் ஊடாடி நின்று வாசகனின் நம்பிக்கையைப் பெற்று அவனைப் பாதிக்கிறது. இப்பாதிப்புதான் இலக்கியத்துக்கும் சமூகத்துக்கும் உள்ள உறவின் அடிப்படை.”

“பார்வை சுருங்கிய விமர்சனங்கள் மழுங்கிக் கிடக்கும் நிலையில் மேலான படைப்புகள் தோன்றவும் வாய்ப்பில்லை. வாழ்க்கை, உருவாகி வருவது என்ற கற்பனையிலிருந்து வாழ்க்கை உருவாக்கப்படுவது என்ற நிலைதான், வாழ்வு சார்ந்த கூரான விமர்சனங்களுக்கே அடிப்படையாக இருந்திருக்கிறது. படைப்பு நிலையிலேனும் இந்த உத்வேகத்தை உணராத கலைஞன் எவனும் உன்னதப்படைப்புகளை உருவாக்கித் தந்ததற்கு இலக்கியச் சரித்திரத்தில் சாட்சியம் இல்லை.”

“தன் பின்னணியைச் சார்ந்து இயங்குவது படைப்பாளருக்கு இயற்கையாக இருப்பது போலவே தன் பின்னணியைத் தாண்டும் சவாலை மேற்கொள்வதும் படைப்பாளிக்குரிய இயற்கைகளில் ஒன்றாக இருக்கிறது… தன்னுடைய அனுபவத்தைப் பிறருடைய அனுபவமாக மாற்றும் ஆற்றலையே வெற்றி என்கிறேன்.”

“ஒரு கவிஞன், அவன், உன்னதக் கலைஞன் எனில் சுதந்திரத்திலிருந்து ஜீவசக்தியை உறிஞ்சிக்கொண்டிருப்பவன்.’

“தன்னிடமே பேசிக்கொள்வதைத் தாண்டி தன் அயலானிடம் பேசிக்கொள்வதைத் தாண்டி, மனிதகுலத்துடன் அவன் பேசியாக வேண்டும். அப்போது மட்டுமே அவன் கலைஞன். தன் துக்கம், தன் ஜாதியின் துக்கங்கள், தன் மதத்தினரின் துக்கங்கள், தன் இழிவுகளின் அவலங்கள் இவை எந்தப் பின்னணியில் இருந்து கிளம்பினாலும் சரி, என்னென்ன கோலங்கள் கொண்டாலும் சரி மனித துக்கம் என்ற பெரிய தடாகத்தில் ஒற்றுமைகளின் அழகுகளுக்கு அவை வந்தாக வேண்டும்.

“இளம் படைப்பாளி புதிய தளத்திற்குப் போக வேண்டுமென்றால் அவன் புதிய ஆழம்கொண்ட விமர்சகனாக மலர வேண்டும். வாழ்க்கையை மயக்கங்களின்றி எதிர்கொள்வதன் மூலமே புதிய ஆழத்தை அவன் பெறமுடியும். இன்று வரையிலும் உருவாக்கப்பட்டிருக்கும் சகல கற்பனைச் சுவர்களையும் தாண்டி மனிதன் அடிப்படையில் சமமானவன் என்ற பேருண்மைதான் படைப்பாளிக்கு முடிவற்ற பயணத்தைச் சாத்தியமாக்கிக் கொண்டிருக்கிறது.”

கடைசியாக சொல்லப்பட்ட ஒன்று, இரண்டு வாசகங்களைத் தவிர பிற அனைத்து வாசகங்களும் என் மனதில் எப்படியோ ஊறிப்போய்விட்டன. சுந்தர ராமசாமியின் மேற்கோளாக இல்லாமல் அதன் சாரங்களாக என்னுள் கரைந்து போய்விட்டன. அல்லது சில வாசகங்கள் அப்படியே அதே வடிவில் கூட மேலெழுந்து வரும். இவற்றை நான் பலமுறை அசைபோட்டிருக்கிறேன். நான் எழுத வருவதற்கு முன்பே சுந்தர ராமசாமியின் இந்த கலைப்பார்வையைப் படிக்க நேர்ந்தது என் அதிர்ஷ்டம். நான் படைப்பாளியாக மாறியது பிறருக்கு துரதிர்ஷ்டம்.

கலைப்பார்வை குறித்த சு.ரா.வின் சிந்தனைகள் என்னை வளப்படுத்தின. அதிலிருந்து எனக்கானப் பாதையை நான் உருவாக்கிக்கொண்டேன் என்றுதான் நினைக்கிறேன். சுந்தர ராமசாமியின் கட்டுரைகள் மகத்தான குறுநாவலைவிட வீச்சானவை. கட்டுரையாக அல்லாமல் அவை ஒவ்வொன்றும் இலக்கியப் பூர்வமான அனுபவத்தைத் தருவன. முக்கியமாக இலக்கிய ஆளுமைகள் குறித்து எழுதிய கட்டுரைகள் அபாரமானவை. அசத்தலானவை, மேலான நாவலில் வென்றெடுக்க முடியாத விசயங்களை சு.ரா. தனது கட்டுரைகளின் வாயிலாக வென்றெடுத்திருக்கிறார். ஒரு சிறுகதையைப் படைக்க முன்னும் கனவைவிட மேலான கனவுகளோடு இக்கட்டுரைகளை எழுதியிருக்கிறார்; செதுக்கியிருக்கிறார் என்றுகூட சொல்லலாம். இலக்கிய கட்டுரைகளைப் பலர் எழுதியிருக்கின்றனர். இலக்கியமாகும் அந்தஸ்து சுந்தர ராமசாமி கட்டுரைகளுக்குத்தான் உண்டு. ஜெயமோகன் கட்டுரைகளில் அவ்விதமான கவித்துவ பத்திகள் இறைந்து கிடக்கின்றன.

சுந்தர ராமசாமி தன்னை முன்நிறுத்தி தமிழ்ப் படைப்பாளிகளின் நிலைகுறித்து சொன்ன வாசகங்கள், இப்படித்தானே இருக்கிறோம் இதனை நமக்கு எழுதத் தோன்றவில்லையே என்று தோன்றும். ஒவ்வொரு தமிழ் எழுத்தாளனும் தன் நிலையைக் கண்டதாகப்படும். இவற்றை சு.ரா. முந்தி சொல்லிவிட்டாரே என்று நினைத்ததுண்டு. இந்த அவலமும் ஒரு வசீகரமாக இருந்தது. இருக்கிறது.

“பொருளாதாரத் தன்னிறைவு கூடிவிட்ட காரணத்தினாலேயே மனிதன் நிம்மதியாக வாழ்வான் என்பதற்கு ஆதாரம் இல்லை என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது.”

“பலவற்றை இழந்துதான் சிலவற்றைப் பெறமுடியும்.”

“சாகசம், உழைப்பு, கற்பனையைக் காரியமாகப் பரிணமிக்கும் ஆனந்தம் ஆகிய இந்த முக்கூட்டில் கோடானு கோடி வருடங்கள் திளைத்துக்கொண்டு வந்தவன் மனிதன். அப்போது உழைப்பில் சுதந்திரம் கொப்பளித்துக் கொண்டிருந்தது. இன்று உழைப்பு என்பது சுதந்திரத்தைப் பறிகொடுத்த பிழைப்பு என்றாகிவிட்டது. இந்தப் பிழைப்பை இன்று வரையிலும் மனிதனால் இயற்கையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் வேலையின் நிர்பந்தம் அளிக்கும் வெறுமையிலிருந்து தப்பித்துக்கொள்ளத் துடிக்கிறான்.”

எழுத வருவதற்கு முன்பாகவே கவனமாக இரு என்று என்னை உசார்படுத்திய வாக்கியங்கள் இவை. உள்ளூர இதில் வாழ்ந்து பார்க்கவேண்டும் என்று ஆசை இருந்ததோ என்னவோ. நானும் இந்தச் சுழலில் விழுந்தேன். இனி ஒருபோதும் மீளமுடியாதபடி சிக்கிக்கொண்டேன். சு.ரா. சொல்லியிருந்தும் கேட்காமல் போய்விட்டோமே என்று இன்றுபடுகிறது.

“… வாழ்க்கைக்கு இல்லாத பூச்சை இலக்கியத்துக்குத் தந்து அதை நேசிப்பது வாழ்க்கையை நேசிப்பது ஆகுமா? குணங்களுடனும் குறைகளுடனும் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. உயர்வின் மிகப்பெரிய வீச்சும், தாழ்வின் மிக மோசமான குறுகலும் ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரிக்க முடியாதவாறு வாழ்வில் விரவிக்கிடக்கின்றன.”

வாழ்க்கை முக்கியமா இலக்கியம் முக்கியமா என்று ந.பிச்சமூர்த்தியிடமோ, அசோகமித்திரனிடமோ கேட்டால் வாழ்க்கைதான் முக்கியம் என்பார்கள். புதுமைப்பித்தனும் அப்படியே சொல்வார். சுந்தர ராமசாமி வாழ்க்கை முக்கியம் தான் அதைவிட எனக்கு இலக்கியம்தான் முக்கியம் என்று பெரும் கனவுகளோடு வாழ்ந்தார். சு.ரா.வின் இந்த வாசகர்கள் படைப்பாளியாக மலர்ந்து இந்த வாசகங்கள் தந்த உத்வேகத்தில் மோசம் போனார்கள். இலக்கியத்தில் சில வெற்றிகளைக் கண்டார்கள். சு.ரா. மட்டுமே இதில் தனித்து நின்றார். இந்தவகையில் சு.ரா.விடம் பயின்று வந்து வெற்றியடைந்த படைப்பாளி என ஒருவரை சொல்லக் கூடுமானால் அவர் ஜெயமோகனாக மட்டுமே இருப்பார். பின்வரும் வாசகத்தைக் கூட ஜெயமோகன் தன்னுடைய கனவாக ஏற்றுக்கொண்டு பயணப்பட்டதாலே இது நிகழ்ந்தது என்று சொல்லலாம். நான் தடுக்கி விழுந்தபடியும் எழுந்து நடந்தபடியும் இருக்கிறேன்.

“காலத்தின் போக்கில் ஒன்றைக் கற்றுக்கொண்டேன். சவால் முன் ஒரே ஒரு தேர்வுதான் எப்போதும் இருக்கிறது. அதை நேரடியாக எதிர்கொள்வது, கூச்சமின்றி எதிர்கொள்வது, படைப்புக் கலையில் தேர்ச்சிபெறவோ, குறுக்குவழிகள் என்று எதுவும் இல்லை. பின்னகர்ந்தால் சவால் மூர்க்கம் கொள்ளும். முன்னகர்ந்தால் விட்டுத்தரும்.”

“வெகுஜனத்தின் நம்பிக்கைகளைப் பிரதிபலிப்பதோ புதிய நம்பிக்கைகளை ஏற்றுக்கொள்ளும்படி அவர்களைத் தூண்டுவதோ என்னுடைய வேலை அல்ல. அவர்களுடைய பொது நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்ட விதிவிலக்கான உண்மைகளைச் சொல்லி, அந்த சந்தர்ப்பங்களில் அவர்களுடைய விரோதியாகவும் காலத்தின் நண்பனாகவும் இருப்பதே என் வேலை என்று எண்ணுகிறேன்.”

புதுமைப்பித்தனைத் தனது முன்னோடியாக, ஆசானாக சுந்தர ராமசாமி வரித்துக்கொண்ட இடம் இதுதான். சு.ரா.வின் இந்தச் சுடரிலிருந்தே தனது சுடரை ஏற்று அவரவர் பாதையில் பயணப்பட்டார்கள் சிலர்.

சுந்தர ராமசாமி தேர்வு செய்து படைத்த களங்களில் நின்று அதுமாதிரியான படைப்புகளை நாமும் தரவேண்டும் என்று எனக்குத் தோன்றியதில்லை. என்னுடைய உலகிலிருந்து சில ஸ்பெசல்களை எழுதவேண்டும் என்றுதான் வெளிச்சத்தைப் பெற்றேன். அதை எப்படிச் சொல்லவேண்டும் என்பதை சு.ரா.விடம் கற்றேன். சுருக்கமாக, வாழ்க்கையில் நான் சொல்ல வருவது நடந்ததா, கற்பனையா, பகற்கனவா, எல்லாம் கலந்ததா என்பதற்கு அப்பால் இது நடந்தே இருக்கிறது என்றும் வாசகன் நம்பியே தீரவேண்டும் என்றும் ஒரு படைப்பு எண்ணத்தை உருவாக்கிக்கொண்டேன். அப்படி இல்லாத சிலவற்றை எழுதி இவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று கேட்கும்படி செய்திருக்கிறேன். இப்படிக் கேட்கிறவர்களிடம் அவர்கள் கற்பனையானவர்கள் என்று சொன்னால் உண்மையில் ஏமாந்துவிடுவார்கள் என்பதால் எங்கோ இருக்கிறார்கள் என்று மட்டும் சொல்லித் தப்பித்துவிடுகிறேன். பல விமர்சகர்களை, எழுத்தாளர்களை இப்படி ஏமாற்றி இருக்கிறேன். இது புனைவே அல்ல என்று ஏமாறும் அளவு செய்திருக்கிறேன். அவர்களும் அப்படித்தான் சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். இப்படி ஏமாந்து கேட்டவர்களில் சுந்தரராமசாமியும் ஒருவர். இதுதான் வேடிக்கை. இதுதான் என் கலைநுட்பம். இதனை நான் எப்படி கற்றிருக்க முடியும்? “படைப்பின் மிகப்பெரிய ஆற்றல் உணர்வுகளில் கலந்து நிற்பது. இந்த அதிசயம் நிகழும்போதுதான் படைப்பின் நோக்கம் நிறைவேறுகிறது. மனத்திலிருந்து வழிந்து வரும் படைப்பு எப்படி அந்த மனத்தை அசைக்கும்? மனஅசைவு கூடவில்லை என்றால் சமூகப் பாதிப்பு எப்படி நிகழும்? அனுபவம் படைப்பாளியின் உணர்வுகளில் கலந்து நிற்கும்போது படைப்பு மனித மனத்தைத் தாக்கும் வீரியம் கொள்கிறது. தன்னையே பாதிக்காத அனுபவத்தை வைத்துப் படைப்பாளியால் பிறரைப் பாதிக்கச் செய்யும் படைப்பை எப்படி உருவாக்க முடியும்?” இப்படியான சுந்தர ராமசாமியின் வாசகங்களில் இருந்தும், “நெருப்பு என்று எழுதினால் தீயின் பொசுங்கல்வாடை வரவேண்டும்” என்று எழுதி லா.ச.ரா.வின் வாசகங்களிலிருந்தும் கற்றேன்.

தமிழ்ப் பண்பாட்டைப் பழமையான மரபு பக்கம் திருப்பாமல் நவீனத்துவத்தின் பக்கம் தொடர்ந்து திருப்புவதிலேயே முனைந்தவர். மரபின் சில உன்னதங்கள் இதனால் கழன்று போனாலும் பரவாயில்லை. இன்றைய நவீன வாழ்க்கையில் தமிழனும், தமிழ்ச் சிந்தனையும், தமிழர் நாகரிகமும், தமிழ் மொழியும் முன் நகரவேண்டும் என்று விரும்பினார். இந்த விருப்பத்தைப் பேராவலுடன் முன்வைத்தார். பணியும் ஆற்றினார். இந்தத் திசையில் தமிழ்ப் படைப்புலகம் சிறப்பான பாதையில் செல்வதற்கு க.நா.சு.விற்கு அடுத்தபடி சுந்தர ராமசாமி முக்கியமானவராக இருந்திருக்கிறார்.

“தத்துவ அறிவு புலமையைச் சார்ந்தது எனில் தத்துவத்திலிருந்து பெறும் விடுதலை படைப்பு மனத்தைச் சார்ந்தது. படைப்பு மனமற்ற புலமை இன்றைய பிரச்சினைகளைப் பற்றிச் சிந்திப்பதான பாவனையில் நேற்றைய சரித்தரத்தைக் கிளறிக்கொண்டிருக்கிறது. படைப்பு மனங்களோ அவை எத்தளத்தைச் சார்ந்து இருப்பினும் பிரச்சினைகளின் முதல் பதிவுகளை நிகழ்த்துவதற்குக் காரணம் அவை நேற்றையச் சுமையிலிருந்து விடுதலை பெற்று நிற்பதாகும்” என்று நமது புலமை மரபின் மடத்தனத்தைச் சொல்லி இருக்கிறார். நானும் அப்படியே நினைக்கிறேன். மரபு இலக்கியத்தை இன்றைய படைப்புச் சக்தியாக இனங்காணும் வாசகர்கள் மற்றொரு பக்கம் உண்டு என்பதை தவிர்த்துவிடுகிறார்.

பண்டிதத்தை விட்டொழிப்பதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. மரபின் செழுமையான பகுதிகளையும் நாம் எட்டி உதைக்கவேண்டுமா என்பதுதான் பிரச்சனை. துவக்க காலத்தில் மரபை மூர்க்கமாக சு.ரா. எதிர்த்திருக்கிறார். பிற்காலத்தில் மரபின் செழுமை குறித்து சில பெயர்களை உதிர்த்திருக்கிறார். காலத்தை எதிர்த்து எதிர்நீச்சல் போடும் அப்படைப்புக்களின் வீச்சு குறித்து எங்கும் சொன்னதில்லை. அமுதசுரபி என்ற படிமம் உலக இலக்கியத்திலே இல்லாதது. மனிதன் உயிர் வாழ்வதற்கான அடிப்படைத் தேவை உணவு. மனிதனின் பசியைப் போக்குவதுதான் உன்னதத்திலும் உன்னதம். இதை சீத்தலைச் சாத்தனார் பரத்தமை வழியில் வந்த, துறவை ஏற்றுக்கொண்ட, ஆணுக்கு மாற்றான மணிமேகலை என்ற ஒரு எளிய பெண்ணின் வழியாக இந்தக் கனவைத் தன் படைப்பில் படைத்துக் காட்டினார். கலைத்துவத்தில் சிலப்பதிகாரத்தைவிட தாழ்வானது என்றாலும் படைப்பாளி உண்டாக்கிய அமுதசுரபி என்ற கனவுப்படிவம் மகத்தானது. அதேபோல அரச உலகத்தின் மேட்டிமைத் தனத்தை, நீதியற்ற ஆட்சியை, பொறுப்பற்றத் தன்மையை கண்ணகி என்ற எளிய பெண்ணின் வழியாக இளங்கோ வீழ்த்துகிறார். அதற்கு கற்பு என்ற ஒரு கற்பனையை – தமிழ்ச்சமூகம் உருவாக்கிவந்த கருத்தை கண்ணகிமேல் ஏற்றி வீழ்த்துகிறார். இந்தப் பார்வையுடன் சுந்தர ராமசாமி கம்பராமாயணத்தையோ, புறநானூற்றையோ அணுகவில்லை. குறைந்தபட்சம் புறநானூற்றைப் படிந்திருந்தாலே தமிழர்களிடம் உருவாகி இருந்த அறம் சார்ந்த மதிப்புகளை, வாழ்வின் கோலங்களை, வாழ்க்கையை எதிர்கொண்ட விதங்களை உணர்ந்திருப்பார். சு.ரா. அந்த உலகத்திற்குள்ளேயே போகவில்லை. ‘திருவள்ளுவர் எனது நண்பர்’ என்ற கட்டுரைகூட, திராவிடக் கட்சிகள் வள்ளுவனைப் புனிதப்படுத்தும் தோரணைகளுக்கு எதிராக அவரைச் சக படைப்பாளியாக, நண்பனாகப் பார்க்கிறேன் என்பதற்காக எழுதப்பட்ட மேலோட்டமான கட்டுரையே தவிர, இந்த நவீனயுகத்தில் வள்ளுவன் ஆற்றும் காத்திரமான எதிர்வினைகள் அடிப்படையில் அல்ல.

மரபு இலக்கியத்தைப் படிப்பதில் ஒருவருக்கு சிரமம் இருக்கலாம். ஆனால் அவை இன்றைய வாழ்விற்கு ஆழத்தையும் அர்த்தத்தையும் தராதவை என ஒருவித நவீன பொதுப் புத்தியில் தள்ளுவது அறியாமை ஆகும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட ‘அற்றைத் திங்கள் அவ்வெண்நிலவில்’ என்ற கபிலரின் பாடல் ஈழத்து மக்களின் அவலக்குரலாக மாறியது இவ்விதம்தானே. இன்று சிரியாவின் மக்களின் துயரத்தையும் ஒலிக்கிறதே அந்தப்பாடல். இவ்விதமாகத்தான் பழந்தமிழ் இலக்கியத்தை நான் அர்த்தப்படுத்திக் கொள்கிறேன்.

லா.ச.ரா., தி.ஜானகிராமன் போன்ற பலரும் பழமையில் ஆறுதலைத் தேடியவர்கள் என்கிறார் சு.ரா. ஒருவகையில் உண்மைதான். இன்னொருவகையில் அந்தப் பழமையிலிருந்தே இந்த நவீன வாழ்க்கைக்கு நல்ல அர்த்தங்களையும் மீட்டுத் தந்திருக்கிறார்கள் என்பதும் உண்மையல்லவா! லா.ச.ரா.வின் ‘பாற்கடல்’ மரபை மட்டுமா போற்றுகிறது. மானிட துக்கத்தை அது அரவணைக்கிற இடம் எவ்வளவு மகத்தானது. ஜானகிராமன் ‘அம்மா வந்தாள்’ நாவலில் பழமையையா வற்புறுத்துகிறார். வேதக்கல்விக்கு மாற்றாக ஆங்கிலக் கல்விதான் இனி சோறுபோடும் என்றுதானே சொல்கிறார். அவரது ‘கங்கா ஸ்நானம்’, ‘பரதேசி வந்தான்’, ‘பாஷாங்கராகம்’, ‘ஒரு இசைப் பயிற்சி’ போன்ற எத்தனை கதைகள் மரபில் நின்றபடியே நவீன வாழ்க்கைக்குள் புகுகின்றன. அவரது காவிய மனம் இலக்கியத்திற்கு எதிரானது இல்லையே. ஜெயகாந்தன் ‘விழுதுகள்’ நாவல் வழியாகத்தானே தனது உச்சபட்சச் சாதனையை அடைந்தார்.

சுந்தரராமசாமி பாணியில் ஒன்று சொல்லத் தோன்றுகிறது. மரபின் கரங்களில் சிக்கிக் கிடக்கும் படைப்பாளிகள் திடுக்கென மகத்தான படைப்புகளைத் தந்திருக்கின்றனர். அக்கருத்தியலிருந்து விடுபட்டு எழுதிய முற்போக்கான படைப்பாளிகள் பலர் பொக்கான எழுத்துக்களைத் தந்திருக்கின்றனர்.

உண்மையில் ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ நாவலில் பிராமணப் பண்பாட்டின் பின்னலில், அதன் சிதைவுளில், அதன் மாற்றங்களில், அதன் போலித்தனங்களில் இருந்து சொல்லப்பட்டிருந்தால் ஒரிஜினாலிட்டி இயைந்து புதிய பரிமாணத்தைத் தந்திருக்கும். சுந்தர ராமசாமி அவராகவே இட்டுக்கொண்ட இந்த நவீனத்துவ வேலி அவருக்கு சிறையானது என்றுதான், போலி பாசாங்கு வாசகனாக அல்ல அவரது உண்மையான வாசகனாக சொல்லுகிறேன்.

சு.ரா. நாட்டார் மரபின் வழி படைப்புகள் உருவாவதையும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதிலும் அவரது நவீனத்து கண்தான் மறைத்தது. நாட்டார் மரபு என்பது ஒரு உத்தி. அதில் சொல்லப்பட்டதெல்லாம் வாய்மொழிக் கதைகள் மட்டுமல்ல, படைப்பாளியின் பார்வையிலிருந்தும் உருவாகி வந்தவைதான். என்னளவில் மிக உறுதியாகச் சொல்கிறேன். கி.ராஜநாராயணனின் ‘கோபல்ல கிராமம்’, நீல.பத்மநாபனின் ‘தலைமுறைகள்’ பற்றியெல்லாம் சு.ரா.மௌனம் சாதித்ததற்கு, இந்த நவீனத்துவ அழகியலே படைப்பின் ஆகப்பெரிய பாதை என்று நம்பியதுதான்.

ப.சிங்காரம் ‘புயலிலே ஒரு தோணி’யில் தமிழ்ச் சமூகத்தின் பழம் பெருமைகளை ரொம்ப ரொம்ப நுட்பமாக எள்ளி நகையாடுவதை எப்படி இவரால் கண்டடைய முடியாமல் போனது என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

இந்த இடத்தில்தான் ஜெயமோகன் தன் பார்வையிலிருந்து விலகுகிறார். அல்லது மாற்றுப்பாதையில் காணக்கிடைத்த  சில அபூர்வ இலக்கிய நிகழ்வுகளைக் கண்டடைகிறார். புதுமைப்பித்தனின் ‘கபாடபுரம்’ சிறுகதையை சு.ரா. ஒரு முக்கியமான கதையாக எங்கும் குறிப்பிட்டதில்லை. ஏனெனில் அவரது பார்வையில் அது பழம்பெருமை பேசுகிறது. ஜெயமோகன் தமிழின் நேர்நிலை உச்சங்கள் பண்பாட்டின் – மரபு செழுமையின் வேர்களிலிருந்து விளைந்தவையாகக் கண்டடைகிறார். புதுமைப்பித்தனின் ‘கபாடபுரம்’, ‘கயிற்றரவு’ ந.பிச்சமூர்த்தியின் ‘தாய்’, கு.அழகிரிசாமியின் ‘ராஜா வந்திருக்கிறார்’, தி.ஜானகிராமனின் ‘பரதேசி வந்தான்’, கி.ராஜநாராயணனின் ‘பேதை’, ஜெயகாந்தனின் ‘விழுதுகள்’ முதலிய படைப்புகளைத் தமிழ்ப் பண்பாட்டின் உச்ச விளைச்சலாக முன்வைக்கிறார்.

‘தலைமுறைகள்’ நாவலைப் பேசாமல் விட்டதற்கு இனக்குழு கதைக்கூறு நாவலில் இயைந்து வருவது காரணமாக இருக்கலாம். ஆனால் ‘பள்ளிகொண்டபுரம்’? அது நவீன வாழ்வின் குடும்பச் சிதைவைத்தான் முன்வைக்கிறது. என்னிடம் நேர் பேச்சில் ‘பள்ளி கொண்டபுரம்’ முக்கியமான நாவல் என்று சொல்லியிருக்கிறார். நாஞ்சில் நாடனின் ‘தலைகீழ் விகிதங்கள்’ பற்றிய விமர்சனத்தில் நீல. பத்மநாபனைப் போல நாஞ்சில்நாடனும் பெரிய வாயாடி என்று சொல்லியிருக்கிறார். இங்கு நான் சொல்ல வருவது நாட்டார் மரபை ஒரு உத்தியாக ஏற்ற படைப்பாளிகளை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதைத்தான். பின் நவீனத்துவத்தின் வருகைக்குப் பின்தான் இவ்வகையான படைப்புகள் முக்கியத்துவம் பெற்றன. இருப்பின் ஒரு கேள்வி, சினுவா அச்செபேயின் ‘சிதைவுகள்’ நாவல் இவரைக் கவர்ந்திருக்கிறது என்பது ஒரு விநோதமாக இருக்கிறது.

மார்க்சியத்தை சு.ரா., இலக்கியத்தை முடக்கவந்த ஒரு நோய்க்கூறாகப் பார்க்கத் துணிகிறார். இது போகப்போக வேகமும் கோவமுமாக வெளிப்படுகிறது. ஆட்சி அதிகாரத்தைக் கையிலெடுத்த பொதுவுடைமைவாதிகள் மனித இயல்பைக் கொடூரமாக அழித்து ஒழித்தது உண்மைதான் என்றாலும் மார்க்சியம் என்ற தத்துவம் அதைச் செய்யவில்லை. அதை கையிலெடுத்த மனிதர் செய்தார். முதலாளித்துவத்தை வரவேற்ற இட்லர் செய்யவில்லையா? தனிமனிதனின் அகத்தின் போக்கும் ஆட்சியதிகாரத்தில் கோலோச்சுகிறது. லெனினுக்கும் – ஸ்டாலினுக்கும் ஆட்சி செய்வதில் வித்தியாசம் இருக்கிறது. எம்.ஜி.ஆருக்கும்- ஜெயலலிதாவிற்கும் வித்தியாசம் இருக்கிறது. நேருவுக்கும் – இந்திராகாந்திக்கும் வித்தியாசம் இருக்கிறது. மார்க்ஸியம் என்ற தத்துவம் மானிடத் துக்கத்தைப் புரிந்துகொண்டு களைய முற்பட்ட சிறந்த முன்னெடுப்பு. அதில் சிற்சில குறைகள் இருக்கலாம். இன்றைய நாள்வரையிலும் இந்த மார்க்சிய சித்தாந்தத்தை விஞ்சிய ஒரு நல்ல மானுட தத்துவநோக்கு ஒன்றும் வந்துவிடவில்லை. சு.ரா. இதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. அவரது பார்வை இலக்கியம், அந்த இலக்கிய வெளிப்பாட்டின் ஆழ அகலங்களுக்கு குந்தகம் விளைவிக்கும் எந்தக் கோட்பாடும் விமர்சனத்திற்குரியதே என்பதில் உறுதியாக நின்றிருக்கிறார்.

இந்தச் சந்தர்ப்பத்தில் நான் படித்த முற்போக்கு படைப்புகள் ஒன்றிரண்டைச் சொல்லலாம் என்று இந்த நிமிடம் தோன்றுகிறது. பொன்னீலனின் ‘கொள்ளைக்காரர்கள்’, ராஜம் கிருஷ்ணனின் ‘அலைவாய் கரையினிலே’, ‘கறுப்பு மணிகள்’, ‘கூட்டுக்குஞ்சுகள்’, டி.செல்வராஜின் ‘மலரும் சருகும்’, சு.சமுத்திரத்தின் ‘ஒரு கோட்டுக்கு வெளியே’, ‘ஊருக்குள் ஒரு புரட்சி’ இப்படி என்னென்னவோ படித்தேன். பிரச்சனை சார்ந்து இவை முக்கியமான நாவல்கள்தான். கலைசார்ந்து மிகவும் பலகீனமானவை. செல்வராஜின் ‘மலரும் சருகும்’ இவற்றில் கொஞ்சம் மேலான படைப்பு என்று சொல்லத் தோன்றுகிறது. அவரது சாகித்திய அகாதமி பரிசுபெற்ற ‘தோல்’ ஒரு நாவலாக மலரவில்லை. தகவல்களைத் தொகுத்து அடுக்கியிருக்கிறார். மானிட உயிரோட்டம் போகப்போக இல்லாமலேயே போய்விட்டது.

மார்க்சியத்தின் அடிப்படையிலிருந்து உன்னதமான படைப்புகள் தமிழில் கூடிவரவில்லை. காலச்சுவடு, மார்க்சியத்தின் மீதான – அப்படைப்புகள் மீதான விமர்சன கண்ணோட்டத்துடன் (குறைகாணும் நோக்கில்) எழுதப்படும் கட்டுரைகளுக்கே இடம் கொடுத்தது. மறுதலையாக அந்த தத்துவ தளத்திலிருந்தோ அதன் சாரத்திலிருந்தோ மேலான படைப்புகள் உருவாவது குறித்து அக்கறை கொள்ளவில்லை. அதுசார்ந்த உரையாடலை நிகழ்த்தவில்லை. மார்க்சிய சார்பு இதழ்களும் இப்படியான முன்னெடுப்பு பற்றி நினைக்கவே இல்லை. ஒருவகையில் கோவை ஞானி மட்டுமே தொடர்ந்து செய்தார்.

சுந்தரராமசாமி இப்படைப்புகளின் கலைபெறுமானம் குறித்து விரிவாக பேசவில்லை என்றாலும், இதன் தோல்வி எங்கு எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து க.நா.சு., கைலாசபதி இருவரது அணுகுமுறையிலிருந்து சொல்லியிருக்கிறார். “படைப்புக்கும் சமூகத்துக்குமான உறவு முதன்முதலாகத் தமிழ் மொழியில் கைலாசபதியால்தான் அழுத்தம் பெற்றது. க.நா.சு. கணக்கில் எடுத்துக்கொள்ளத் தொடர்ந்து மறுத்துக் கொண்டிருந்த ஒரு இடைவெளியைக் கைலாசபதிதான் பூர்த்தி செய்தார். ஆனால் படைப்பாளியின் தரம் சார்ந்து கைலாசபதி வந்திருக்கும் அநேக முடிவுகள் அபத்தமானவை. க.நா.சு., மனம்போன போக்கில் வந்த முடிவுகள் சரியானவை. ஆத்மார்த்தமானவை, சிறு பகுதி நடைமுறைத் தந்திரங்கள் சார்ந்தவை. கைலாசபதியின் கூற்றுக்கள் முற்றிலும் ஆத்மார்த்தமானவை. ஆனால் ஒரு படைப்பை எடைபோடுவதற்கு அவசியமான ருசி அவரிடம் இல்லை. தனக்கு உடன்பாடான கருத்துக்களை எழுத்தில் முன்வைத்தவர்களை அவர் போற்றிக் கொண்டிருந்தார். கலையெழுச்சியற்ற அவை இன்று அதிகமும் விழுந்துவிட்டன. க.நா.சு.வின் முடிவுகளோ உறுதியாகி நின்று கொண்டிருக்கின்றன.” என்று மதிப்பிட்டிருக்கிறார்.

எப்படியாயினும் சுந்தர ராமசாமிக்கு முற்போக்குவாதிகளிடம் (மார்க்சியர்கள்) ஏற்பட்ட ஆரம்பகாலத் தொடர்பு இலக்கியம் குறித்தான ஒரு வலுவான பார்வையை உருவாக்கித் தந்திருக்கிறது. இலக்கியத்தின் புதிய வடிவங்கள் முக்கியம்தான். ஆனால் அது உருவாக்கும் பார்வையின் ஆழம்தான் இலக்கியமே தவிர வடிவம் மட்டுமே இலக்கியம் ஆகாது என்பதை உரத்துச் சொல்லவும் செய்தார். சு.ரா. அதிகமும் நேசித்த க.நா.சு. தரமற்ற கதைகளை எழுதித் தள்ளியபோது தரமான கதைகளை எழுதியதற்கு இந்த முற்போக்கு உறவு அவருக்கு ஏதோ ஒரு விதத்தில் உதவிக்கொண்டே இருந்திருக்கிறது. அது இந்த சமூகம் குறித்தான பார்வை, விமர்சனம் என்று கொள்ளலாம்.

சுந்தரராமசாமி முதன்மையாக படைப்பாளி. அடுத்து விமர்சகராகவும் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டிருக்கிறார். அவர் உருவாக்கிக்கொண்ட கறார் தன்மைக்கு தமிழ் இலக்கிய உலகில் கூடுதல் மதிப்பும் கவர்ச்சியும் இருந்தது. அதனாலேயே க.நா.சு.விடம் நிகழ்ந்த சில சரிவுகள் போல நிகழ்ந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார். அவரது கோணத்தில் வைக்கப்பட்டிருக்கும் விமர்சனங்களும் சரி, மதிப்பீடுகளும் சரி ஆத்மார்த்தமானவை. சாய்வற்றவை. மிக முக்கியமாக படைப்பாக்கத்திற்குச் செழுமை தரத்தக்கவை. எவற்றைத் தவிர்க்க வேண்டும். எவற்றை மேலெடுக்கவேண்டும் என்பதை சு.ரா. விடம் நிறையவே கற்றுக்கொள்ளலாம். கற்றிருக்கிறேன். இந்த வகையில் வேறொரு தமிழ் எழுத்தாளர் நமக்கு இல்லை. ஜெயகாந்தன் ஒரு எழுத்தாளனின் கம்பீரத்தோடு வாழ்ந்தார். பன்முகத்தோடு திகழ்ந்தார். தமிழ் இலக்கியப் போக்கை வளர்த்தெடுப்பதில் ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போட்டது கிடையாது. க.நா.சு.விற்கு அடுத்தபடி சு.ரா. இதை தீவிரத்தோடு செய்தார். அத்தோடு சுந்தரராமசாமி கலைஞனின் மேதமையைச் சதா காலமும் தேடினார். சளக்காமல் ஓடினார். அவரது ஓட்டம் மாரத்தான் ஓட்டம் போன்றது.

நூறு தமிழ் எழுத்தாளர்களையேனும் மதிப்பீடு செய்திருப்பார் என்று தோன்றுகிறது. நினைத்துப் பார்க்கிறபோது இது மிகப்பெரிய வேலையாகப்படுகிறது. மிக விரிவாக 30 எழுத்தாளர்களையும், அளவான எல்லையில் 30 எழுத்தாளர்களையும், 40 எழுத்தாளர்களைச் சுருக்கமாகவோ, மிகச்சுருக்கமாகவோ, நான்கைந்து வாக்கியங்களிலும், ஆனால் செறிவான விதத்தில் சொல்லியிருக்கிறார். எழுதவந்து இரண்டு மூன்று ஆண்டுகளில் கவனத்திற்கு வந்த இளம் எழுத்தாளர்களைப் பற்றி எழுதினார். ஒருமுறை சு.ரா.வை சந்திக்கச் சென்றிருந்தபோது, கோபிகிருஷ்ணனின் ‘உள்ளே இருந்து சில குரல்கள்’ நாவலைத் தபாலில் வரவழைத்திருக்கிறேன். அந்த உலகம் புதிது. நன்றாக வந்திருக்கும் என்று நம்புகிறேன் என்றார். அதே நேரத்தில் ஊருக்கு வந்து நானும் வாங்கிப் படித்தேன்; எதிர்பார்த்த அளவு அந்த நாவல் இல்லை. சு.ரா.விற்கும் அப்படியே தோன்றியிருக்கும். பின் அவர் எங்கும் அந்த நாவல் பற்றி எழுதவில்லை. கோணங்கியின் ‘மதினிமார்கள் கதை’ தொகுப்பை ஏன் நீங்கள் பேசவில்லை என்று கேட்டேன். அத்தொகுப்பு என் கைக்குக் கிட்டவில்லை என்றார். பின் 1997வாக்கில் முக்கியமான தொகுப்பு என்று குறிப்பிட்டிருக்கிறார்.  இவ்வளவு செய்திருப்பவரிடம் மேலும் எதிர்பார்க்க முடியுமா என்று தோன்றவும் செய்கிறது. ஆனால் சிலவற்றை அவர் தவிர்த்திருக்கிறார் என்பது தெரிகிறது. இதுபற்றிச் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

தலித் இலக்கியம் எழுச்சி பெற்றதும் அவ்வகை இலக்கியம் எதிர்கொள்ள வேண்டிய இலக்கியச் சவால் குறித்து தைரியமாக எழுதினார். சு.ரா.வின் மீது விமர்சனக் கற்கள் எறியப்பட்டன. அதுபற்றி அவர் சோர்ந்துவிடவில்லை. சிலேட் இதழில் அக்கட்டுரை அச்சமயம் வந்ததும் நல்லது.

எழுபதுகளின் இறுதியில் வந்த பூமணியின் ‘பிறகு’ நாவல், கோவேறு கழுதைகள்’ நாவலைவிட மிகச்சிறப்பானது. பூமணியின் ‘வெக்கை’ நாவலையும் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் ‘கோவேறு கழுதைகள்’ நாவலை அவர் காப்பாற்றி வந்த இலக்கிய மதிப்பீட்டிற்கு மேலாகத் தூக்கினார். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்வந்த ‘பிறகு’ பற்றி எதுவும் சொல்லாமல் இருந்தார்.

முற்போக்கு எழுத்துக்களில் கலைப்பெறுமானம் கூடிவரவில்லை என்று தொடர்ந்து சொல்லிவந்த சு.ரா., தமிழ்ச்செல்வனின் எழுத்தைக் கண்டதும் முக்கியமான வரவாக முன்வைத்தார். தமிழ்ச்செல்வனின் எழுத்திற்கு நிகரான, இன்னும் கூடுதலான  விமர்சனப் பார்வையோடு எழுதிக்கொண்டுவந்த கந்தர்வன் எழுத்துக்களைத் தவிர்த்தார். கந்தர்வன் தொழிற்சங்கத்தில் தீவிரமாக இயங்கியவர்.

சாகித்திய அகாதமியின் நடவடிக்கைகள் குறித்துப் பேசும்போது தி.ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’ பெற்றிருக்க வேண்டிய பரிசை தரம் தாழ்ந்த வேறொரு நூல் பெறுவதை சுட்டிக்காட்டுகிறார். ‘அம்மா வந்தாள்’ அளவு இலக்கியத் தரம் வாய்ந்த நீல.பத்மநாபனின் ‘பள்ளிகொண்டபுரம்’ நாவலைப் பேச மறுக்கிறார். பொதுவாகவே நீல.பத்மநாபன் எழுத்துக்களைத் தவிர்க்கிறார்.

உமாபதி, ந.பிச்சமூர்த்தி, யுவன் போன்றோரின் கவிதைகளைவிட தேவதேவனின் கவிதை உலகம் மேலானது என்று எனக்குத் தோன்றுகிறது. இயற்கையான சாரத்திலிருந்து அவை உருவாகி வருகின்றன. அவரை சு.ரா. தவிர்க்க தேவதேவனுக்கும் பிரமிளுக்கும் நேரடி நட்பு இருந்தது காரணமாக இருக்கலாம். தேவதச்சன், பிரம்மராஜன் போன்ற பெயர்ச்சொற்கள் சுந்தர ராமசாமிக்குப் பிடிக்காமல் இருக்கலாம். கவிதை பிடிக்காமல் போவதற்கு பெயரை ஒரு காரணமாகச் சொல்ல முடியாது. இப்படிச் சில படைப்பாளிகளைத் தவிர்த்தார். ஆனால் அவர்கள் சுயம்புவாக மேலேறி வந்தார்கள். அதை அவரால் தடுக்கமுடியாதுதானே.

அவர் நடுத்தரமான படைப்பாளிகளின் படைப்புகளை விரிவாக எழுதியிருக்கிறார். தன் கண்முன் பிரம்மாண்டமாக எழுந்துவரும் ஜெயமோகனை உரிய விதத்தில் மதிப்பிடவில்லை. தன்னை விஞ்சி எழும் படைப்பாளிகளைப் பற்றி பேசுவதைத் தவிர்த்தார். ஜெயமோகன் குறித்து அங்கங்கே சொல்லியிருக்கிறார் என்றாலும் பத்தோடு பதினொன்றுதான். மிகமுக்கியமாக காலச்சுவடு மேடை, அதன் அதிகாரக்கரம் ஜெயமோகனை மறுத்தது. அதேசமயம காணான் கூனான் எழுத்தாளர்களுக் கெல்லாம் இடமளித்தது. இதற்கெல்லாம் நான் பொறுப்பல்ல என்று சுந்தர ராமசாமி சொல்லக்கூடும். அதெல்லாம் சமாளிப்புத்தான். காலச்சுவடு அப்படி படைப்பாளிக்குச் செய்ததும் மறுதலையாக நன்றாக விளைந்தது. ஜெயமோகன் இன்னும் உயரத்திற்குப் போனார். காலத்தின் முன் நிறுவி இருக்கிறார். ஜெயமோகனின் எல்லா படைப்புகளின் மீதும் எனக்கு உடன்பாடில்லை. விமர்சனங்களும் உண்டு. ஆனால் படைப்பிலக்கியத் துறையில் புதுமைப்பித்தனைப் போல பாரதியைப் போல அவர் ஒரு நிகழ்வு. இதனை சு.ரா.வால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதைவிட காலச்சுவடு ஒரு தில்லாலங்கடி ஆட்டம்தான் ஆடியது. அந்த ஆட்டம் ஜெயமோகன் இலக்கியவாழ்வில் நன்மையாக விளைந்தது என்று மட்டும் இவ்விடத்தில் சொல்லிக்கொள்கிறேன். தமிழ் இனி 2000 மாநாட்டை காலச்சுவடு முன்நின்று நடத்தியது. நாலுவரி கவிதை எழுதி பக்கத்தை நிரப்பிய கவிஞனை எல்லாம் அங்கீகரித்தது. ஜெயமோகனை நிராகரித்தது. ஸ்டாலினின் அதிகார வெறி எழுத்தாளர்களை அடக்கி அழித்தொழித்தது. இந்த மனோபாவம் குறித்து அதற்கு எதிராக மிகத் தீவிரமாக சுந்தர ராமசாமி தொடர்ந்து எழுதினார். முற்போக்கு இலக்கிய வட்டத்திலிருந்து தான் விலகிவர அதுதான் முக்கியமான காரணம் என்று அழுத்தமாகச் சொல்லி இருக்கிறார். இங்கும் அதுபோலத்தான் நிகழ்ந்தது. ஜெயகாந்தனைக் கூட அங்கீகரிக்கவில்லை என்று நினைக்கிறேன். குருவை மிஞ்சும் சிஷ்யனை எந்த குருவுக்குத்தான் பிடிக்கும்?

சென்றமாத அம்ருதாவில் லட்சுமி மணிவண்ணன் எழுதிய தொடர் பத்தியைப் பிடிக்க நேர்ந்தது. அதில் கமலா அம்மா, ‘நீங்கள் எல்லாம் அவரிடமிருந்து விலகிப்போகாமல் இருந்திருந்தால் இன்னும் சிலகாலம் வாழ்ந்திருப்பார்’ என்று சொன்னதாக எழுதியிருந்தார். என் மனம் கலங்கிவிட்டது. அப்படிப் பிரிய நேர்ந்ததும் இயல்பானதுதான் என்றும் எழுதியிருந்தார். கமலா அம்மாவிற்கு என்னை நினைவிருக்குமானால் – எனக்கு அச்சு அசலாக நினைவிருக்கிறது. அந்த அன்னமிட்ட இதயத்தை நோக்கி ஒன்றை சொல்லிவிடு வேணு என்று என் அந்தராத்மா துடிக்கிறது. அம்மா, சுந்தர ராமசாமி போல இலக்கியக் களத்தில் நான் தனித்துவமாக வளர்ந்திருக்கிறேன். அப்படி வளர்வதைத் தான் அவரின் கட்டுரைகளும், படைப்புகளும் உணர்த்தின என்று மட்டும் இவ்விடத்தில் சொல்லிக்கொள்கிறேன். இந்தத் தமிழ்நாட்டில்தான் தன் சக படைப்பாளிகளை, இளம் படைப்பாளிகளை ரொம்ப கண்ணியத்துடன் வரவேற்றார். நிரம்ப அக்கறையுடன் அவர்களிடம் உரையாடினார். காது கொடுத்துக் கேட்டார். தன் தரப்புப் பார்வையைத் தெளிவாக முன்வைத்தார். கடிதங்கள் எழுதினார். அதற்கெல்லாம் மேலாக மிகுந்த அன்புடன் உபசரித்தார். இது தமிழ்ச்சூழலில் அபூர்வமானது. ஆனந்தமானது. இந்த இலக்கிய ஆனந்தத்தைத் தந்ததில் கமலா அம்மாவிற்கு அதிகப் பங்குண்டு. அவர் புன்னகையுடன் விலகிநின்று செய்தார். சு.ரா.விற்கு இருந்த பிடிவாதத்தைப் போன்றே அவரிடம் இலக்கியம் கற்று எழுதவந்த இளம் படைப்பாளிகளுக்கும் சில நியாயமான பிடிவாதங்கள் ஏற்பட்டன. எப்படியாயினும் சுந்தர ராமசாமி தமிழ் இலக்கியச் சூழலில் ஜென்டில்மேன்தான். அந்தப் பேறு இன்னொருவருக்கு இப்போதைக்கு இல்லை.

எல்லா புரட்சிகரமான இலக்கிய நிகழ்வுகள் இம்மண்ணில் நிகழட்டும் என்றுதான் சு.ரா. சொன்னார். சொன்னாலும் நவீனத்துவ இலக்கிய அழகியல்தான் அவரிடம் மேலோங்கி இருந்தது. இலக்கியத்தில் தூய்மையை அதிகம் எதிர்பார்த்தார் என்பது என் எண்ணம். உதாரணமாக ‘குசு’ என்ற வார்த்தை கூட அவருக்கு அசூசையானது. அப்படி எழுதிவிட்டாலே படைப்பாகிவிடும் என்ற அறியாமை எனக்கில்லை. இந்த வார்த்தைகளை வைத்துத்தான் பலர் ஜாலம் காட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்பது வேறுவிசயம். சு.ரா. ஒருவகையில் தூய்மைவாதி என்று சொல்ல மட்டும்தான். என்னவகை இலக்கியமாக இருக்கட்டும். படைப்பின் சவால் என்பது மானுட துக்கத்தை வென்றெடுப்பதுதான் என்ற அவரின் குரல் மணியோசைபோல ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

சுந்தர ராமசாமியின் கட்டுரைகள் பல நல்ல விளைவுகளை தமிழ்ச்சூழலில் உண்டாக்கி இருக்கின்றன. ஒன்றிரண்டு விசயத்தை மட்டும் சொல்லலாம். மற்றவற்றை சுந்தர ராமசாமியின் கட்டுரை வழியாக நண்பர்கள் அறிந்து கொள்ளலாம். வண்ணதாசனின் கதைத் தொகுப்பிற்கு முன்னுரை எழுதிய சுந்தர ராமசாமி. ‘தி.ஜானகிராமன் போல கனவுகளில் சல்லாத் துணி நெய்பவன்’ என்றும், கலைகள், கதைகள், சிறுகதைகள் கட்டுரையில் ‘அசோகமித்திரன் தனது இறகுகளைக் கோதிக்கொண்டு இலக்குகளை வெகுசீக்கிரத்தில் அடைந்து விடுகிறபோது. வண்ணதாசன் தன் இறகுகளைக் கோதிக்கொண்டிருப்பதிலேயே பொழுது கழிந்து விடுகிறது’ என்று விமர்சித்திருப்பார். இந்த விமர்சனத்திற்கு வேறு கோணத்தில் வண்ணதாசனின் சிறப்புகளைச் சொல்ல முடியும் என்றாலும், இது ஒரு நல்ல விமர்சனம்தான். இந்த விமர்சனத்திற்குப் பின் வண்ணதாசனிடம் என்ன விளைந்தது என்று யாரும் பார்க்கவில்லை. சுந்தர ராமசாமியும் பார்க்கவில்லை. இந்த விமர்சனத்தால் பட்ட சூடு வண்ணதாசனிடமிருந்து நுட்பமான, ஆழமான கதைகளைத் தரும்படி ஆக்கி இருக்கிறது என்பதுதான் அது. ‘தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள்’ தொகுப்பிற்குப் பின் வந்த ‘சமவெளி’, ‘பெயர் தெரியாமல் ஒரு பறவை’ தொகுப்புகளிலேயே காணமுடியும். ‘நிலை’, ‘வருகை’, ‘சில பழைய பாடல்கள்’, ‘கூறல்’, ‘விசாலம்’, ‘பெயர் தெரியாமல் ஒரு பறவை’, ‘வேறு வேறு அணில்கள்’, ‘நிறை’, ‘போய்க் கொண்டிருப்பவள்’, ‘தற்காத்தல்’, ‘மனுஷா மனுஷா’, ‘சிறுகச் சிறுக’, ‘சிறிது வெளிச்சம்’ இந்தக் கதைகளில் ஒரு தீவிரத்தன்மை கூடி வந்திருப்பதை அறியமுடியும். அதாவது வண்ணதாசனுக்கு இயல்பிலேயே அமைந்த புறஉலகம் மீதான கவனத்தையும், மானிட அசைவுகளையும், உதறாமலே அதாவது வரித்துக்கொண்டே மனிதர்களின் சொல்லமுடியாத துயரைச் சொல்லியிருக்கிறார்.

வெகுஜன இதழ்களின் மேனாமினுக்கித்தனத்தை, பாலியல் சுரண்டலை இலக்கியம் எனப் போற்றிவந்த கூத்தைக் கடுமையாகத் தாக்கி சுமார் நாற்பது ஆண்டுகள் எழுதி வந்திருக்கிறார். வெகுஜன இதழாளர்களின் பக்கமிருந்தே இலக்கிய இதழ்கள் கொண்டு வரும்படி நிகழ்ந்திருக்கிறது. இன்று சிற்றிதழ்களில் லேசாக உருண்டு புரண்டு எழுந்தவர்கள்தான் வெகுஜன இதழ்களில் கோலோச்சுகின்றனர். இதற்கு க.நா.சு.வும், சு.ரா.வும் முக்கியக் காரணம் என்று சொல்லலாம்.

முற்போக்கு என்ற எழுத்துப் பட்டாளம் தொண்ணூறுவரை தீவிரமாக இயங்கியது. படைப்புகளைக் கொடுத்தது. முற்போக்குத் தளத்தில் இன்று அந்தத் தீவிரப்போக்கு இல்லையோ என்று படுகிறது. அதில் கலாப்பூர்வமான வெற்றியை வென்றெடுத்த புதிய பட்டாளமாக மாறி இருந்தால் மிகச் சிறப்பாக இருக்கும். இனியேனும் அப்படி நிகழ்ந்தால்கூட நல்லதுதான். சுந்தர ராமசாமியின் எதிர்வினைக்கு நல்ல பதிலாக அமையும். இப்படி வளப்படுத்தியவர் கோவை ஞானி. ஆழமாகவே செய்திருக்கிறார். ஆனால் சுந்தர ராமசாமியின் எழுத்துபோல பரவலாக வாசகர்களைச் சென்றடையவில்லை. சுந்தர ராமசாமியின் கலை கோட்பாட்டிற்கு புதுமைப்பித்தன், க.நா.சு. போன்ற முன்னோடிகள் உண்டு. வெங்கட்சாமிநாதன், பிரமிள் போன்ற சக படைப்பாளிகள் உண்டு. ஜெயமோகன் போல பின்னவரும் உண்டு. முற்போக்கு தளத்தில் ஞானிக்கு முன் முன்னோடி இல்லை. அவருக்குப் பின் ஒருவரும் கண்ணுக்குத் தென்படவில்லை. இனி இது சாத்தியமா என்று சொல்ல முடியாத நிலைதான் இன்று எனக்குத் தோன்றுகிறது. நாளை எப்படியோ.

இந்த மாற்றங்களைத் தான் சுந்தர ராமசாமி விரும்பினார். படைப்பாளிகள் பற்றிய கட்டுரைகள் விளக்க உரைகளாக, வம்பளப்புகளாக, அறிமுகங்களாக, இன்னபிற பாராட்டுதல்களாக, தகவல்களாக எழுதப்பட்டுக் கொண்டிருந்தபோது கட்டுரைகளை இவ்விதம் இலக்கிய ஸ்தானத்திற்கும் மேலான இடத்திற்குக் கொண்டு சென்றார் சுந்தர ராமசாமி.

சுந்தர ராமசாமியை இப்போது திரும்பப் படிக்கிறபோது இரு ஆளுமைகள் பற்றிய தன் பிடிவாதமான கருத்தில் நின்றது தெரிகிறது. கோவம் வரவில்லை. மகிழ்வான ஒரு மனநிலையில் புன்னகை தோன்றியது. பெரியாரைப் பற்றி “தனது இயக்கத்தின் குறிக்கோளுக்கும் உலகம் தழுவிய மனித விடுதலைக்குமான தொடர்பைத் தன் காலத்தைச் சார்ந்தும் அல்லது வரலாறு சார்ந்தும் இணைத்துப் பார்க்கவில்லை” என்கிறார். இப்போது அவர் இடைப்பட்ட சாதியாருக்கு இடஒதுக்கீடு வாங்கித் தந்த அளவில்தான் அவரது பணி இருக்கிறது என்ற கண்டுபிடிப்புக்கு வந்துவிட்டார்கள். பெரியார், மார்க்ஸ் போன்று ஒரு தத்துவ வாதியல்ல. அவரிடம் சு.ரா. அதை எதிர்பார்த்து – ஒரு சாக்காகச் சொல்லி ஒன்றுமில்லை என்பதாகச் சொல்கிறார். இறுக்கமான சாதிய சமூகத்தின் மீது மிகப்பெரிய உடைசலை ஏற்படுத்தியவர் அவர்தான். பெண் அடிமைத்தனத்திற்கு எதிராக போரைத் தொடுத்தவர் அவர்தான். இந்தச் சமூக கருத்தியல் மீது கலகம் செய்து உடைத்தார். இந்தக் காரியத்தை வேறு யார் அவ்வளவு தீவிரமாக செய்தார்கள் தமிழ்நாட்டில்? கேரளப் புரட்சிவாதி அய்யன்காளி, நாரயண குரு, எம்.கோவிந்தன் பற்றியெல்லாம் எவ்வளவு பிரியத்தோடு எழுதியிருக்கிறார். அந்தப் பிரியம் பெரியார் மீது சு.ரா.விற்கு இல்லை என்பதால் புன்னகை தோன்றிற்று.

சிவாஜியைவிட என்.எஸ்.கிருஷ்ணன், டி.எஸ்.பாலையா தேர்ந்த நடிகர்கள் என்கிறார். இருக்கலாம். சிவாஜி மிகையான நடிகன் என்கிறார். உண்மைதான். இருந்தால் என்ன! அவன் மகத்தான கலைஞன் என்று சொல்லக்கூடாது என்று நினைக்கிறார். சிவாஜியைக் கொண்டாடுகிறவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பற்றி நான் ஒன்றும் சொல்லவில்லை. என் பார்வையில் டி.எஸ்.பாலையா சிவாஜியைவிட நல்ல நடிகர் என்கிறார். உண்மையிலேயே கொஞ்சம் வாய்விட்டு சிரித்தேன். வாயசைப்பில் ‘அம்மம்மா தம்பி என்று நம்பி’ என்ற பாடலைப் பாடிக்கூடப் பார்த்தேன். அந்த வாயசைப்பில் மிகையான நடிப்பு உண்டுதான். ஆனால் இதுமட்டுத்தானா சிவாஜி? அவர் திரைப்பட பள்ளியிலிருந்து வந்தவர் அல்ல. நாடகப்பள்ளியிலிருந்து வந்தவர்.

அவர் இயல்பாக வெளிப்படுத்திக்கொண்ட இடங்கள் எத்தனை, ‘சவாலே சமாளி’, ‘செல்வம்’, ‘பாசமலர்’ என்று இப்படியே எத்தனைபடங்கள் சொல்ல! ‘வசந்தமாளிகை’ என்ற திரைப்படம் தெலுங்கு, இந்தி மொழிகளில் வந்திருக்கிறது. ‘வசந்தமாளிகை’ சிவாஜி முன் அவை இரண்டும் குப்பை என்று சொல்லமுடியும். அதாவது நடிப்பில். அதுதான் சிவாஜி, அவர் ஏற்றுக்கொண்ட பாத்திரத்தை உணர்ச்சிகரமாக்கினார். உள்ளத்தைத் தொட அதை ஒரு கலையாகக் கொண்டார். சுந்தர ராமசாமிக்குப் பிடிக்காத சிவாஜி. எனக்கு ரொம்பப்பிடிக்கும். நான் எம்.ஜி.ஆர். ரசிகனாக இருந்திருந்தால் எம்.எல்.ஏ. ஆகியிருப்பேன். சிவாஜி ரசிகனாக மலர்ந்ததால் எழுத்தாளன் ஆனேன்.

என் இதயத்தைப் பாதித்த எழுத்தாளர்கள் புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, தி.ஜானகிராமன், கி.ராஜநாராயணன், சுந்தர ராமசாமி என்பதான வரிசையில் போகிறது.

நவீனத் தமிழ் இலக்கியத்தின் சரிவுகள், ஜனரஞ்சக இதழ்களின் இலக்கியக் கூத்துகள், மேலான படைப்புகள் குறித்த கனவற்றத்தன்மை, பொய்ஜோடனைகளை இலக்கியம் என நம்பிய மடமை என எண்ணற்ற போலிகள் மீது தார்மீக ஆவேசத்துடன், கிட்டத்தட்ட (க.நா.சு.விற்கும் மேலாக) தனிமனிதனாக நின்று இலக்கியப் போரை கட்டுரை எழுதவந்த நாளிலிருந்து தொடுத்து வந்துள்ளார். இந்தத் தார்மீகத்தின் இலக்கிய வடிவம்தான் ‘ஜே.ஜே.சில குறிப்புகள்’. அதன் விசயத் தேர்வு சார்ந்த விமர்சனங்கள் எனக்கு இருப்பினும், சுந்தர ராமசாமியின் கனவு சார்ந்த மூர்க்கமான இலக்கிய வெளிப்பாடு அது. முக்கியமாக அந்நாவல் நம் வாழ்வின் பொருளியல் நெருக்கடிக்குள் புகவில்லை. சிக்கிச் சீரழியவில்லை. வாழ்க்கை சின்னாபின்னமாகும் கோலங்களிலிருந்து (பாரதி, புதுமைப்பித்தன், செல்லப்பா) உருவாகி வரவில்லை. கருத்தியல் தளத்தில் ஓங்கி ஒலிக்கிற நாவலாக மேலெழுந்து விட்டது. இந்நாவலின் ஆதார சுருதி அவரின் ஆரம்பகால கட்டுரையிலேயே பொக்குளிப்பதைக் காணலாம். அந்தக் கனவு கட்டுரைகளில் மெல்ல பிரவாகம் கொள்ள ஆரம்பித்த காலத்தில் நாவலாக உருமாற்றம் கொண்டு வெளிப்பட்டிருக்கிறது.

சிற்றிதழ் வழிவந்த மகத்தான இலக்கிய வீரன் சுந்தர ராமசாமி. வெகுஜன ரசனைக்கு எதிராக எழுந்த சிற்றிதழ்களின் தீவிரமான இலக்கிய செயல்பாடுகளின் வழி எழுத வந்தவர். இந்த இலக்கியக் கடலில் நீந்தி நீந்தி தன்னை தனித்துவம் மிக்கவராக உருவாக்கிக்கொண்டார். ஜனரஞ்சக இதழ்களின் வழி தன்னைச் சிங்கமென வடிவமைத்துக்கொண்டார் ஜெயகாந்தன். சிற்றிதழ்களின் வழி வேகம் மிக்க சிறுத்தையாகச் சுழன்றாடினார் சுந்தர ராமசாமி. சிற்றிதழ்களின் தோற்றமும் அதன் உச்சபட்சமான வெளிப்பாட்டு காலமும் அவரது எழுத்து வாழ்வின் இணை கோடுகளாக அமைந்துவிட்டன. எனவே சிற்றிதழ்களின் தனித்த வீரனாக எழுந்து வாள் சுழற்றி தனது இலக்கியப் பணியைச் சிறப்பான முறையில் வெளிப்படுத்திக் கொண்டார். இந்தப் புகழார்ந்த இடத்தை அடைய அவர் எவ்வளவோ இழந்திருக்கிறார். அந்த இடத்தின் மீது சக எழுத்தாளர்களுக்கு எரிச்சல் பொறாமை கூட இருந்தது. சுஜாதா, அசோகமித்திரன், மாலன் போன்றோர்கள் தங்கள் கோவத்தைக் காட்டியிருக்கின்றனர். க.நா.சு. சிற்றிதழ்களின் இலக்கிய வெளிப்பாட்டை வெளிப்படுத்தியபோது சு.ரா. அவ்வெளியின் தனித்துவம் குறித்து அக்கறை கொண்டார். ஒன்றே ஒன்று, ஜெயகாந்தனிடம் டம்பம் இருந்தது. சுந்தர ராமசாமியிடம் அர்ப்பணிப்பு இருந்தது. அதாவது தமிழ் இலக்கியச்சூழலை மேலெடுப்பதில்.

தான் வரித்துக்கொண்ட இலக்கிய பாத்திரத்தைக் காந்தியைப் போல கடைசி மணித்துளி வரையிலும் கடைப்பிடித்தார். இது நம் கண்முன் நிகழ்ந்த ஒரு அபூர்வ இலக்கிய நிகழ்வு. காந்தியைவிட அவரது சீடர் ஜே.சி. குமாரப்பா தீவிரமாக காந்திய கொள்கையைச் செயல்படுத்துவதில் முனைந்தார் என்பார்கள். க.நா.சு.வையும் சுந்தர ராமசாமியையும் அப்படிப் பார்க்கத் தோன்றுகிறது.

தமிழ் இலக்கியப் பரப்பின் மையங்களாக பாரதி, புதுமைப்பித்தன் இன்று மாறிவிட்டனர். அவர்களின் படைப்பாளுமைகள் இந்த இடத்தை வென்றெடுத்தன. சுந்தர ராமசாமி தன் கட்டுரைகளின் வழி வெளிப்படுத்திய இலக்கியக் கனவு தமிழ்ப்பரப்பில் மற்றுமொரு மையமாக – வீச்சான சுடராக நிலைத்து நிற்கும் என்றே எனக்குத் தோன்றுகிறது. அந்த இலக்கியக் கனவு அவருக்குப்பின் வந்த படைப்பாளிகளிடம் அதே தீவிரத்தோடு இல்லை என்பதால் சுந்தர ராமசாமியின் இடம் இன்று துலக்கமாக நின்று ஜொலிக்கிறது. இந்த இடத்தில் ஜெயமோகனைச் சொல்லலாம்தான். அவரது வீச்சு பெரிதானதுதான். உன்னத இலக்கியத்தை அல்லது அவ்விதமான இலக்கியக் களத்தை தமிழ்ச்சூழலில் வென்றெடுக்க சுந்தர ராமசாமி அதிக அளவில் பாடுபட்டார் என்று சொல்வதில் மிகை இல்லை என்றே தோன்றுகிறது இப்போதைக்கு.

தனித்துவமான ஓர் இலக்கிய ஆளுமையாக சுந்தர ராமசாமி ஓங்கி நிற்கிறார். அர்ப்பணிப்பு என்றால் என்ன என்பதை அவரது கட்டுரைகளும் படைப்புகளும் சாட்சி, அவரது காலத்தில் அவர் தனித்துத் தெரியும் பனைமரம். உண்மையில் அவர் ஓர் ஆலமரம். சுந்தர ராமசாமியால் பாதிக்கப்பட்டு இறங்கிய படைப்பு விழுதுகள் நிறைய. தமிழில் ஒரு School of Thought-ஐ உருவாக்கியவர். நேர் வழியில் அல்லாது குறுக்குவழிகளில் சென்று புகழை நாடாதவர். விமர்சனத்துறையை இலக்கியத் தகுதிக்குரியதாக மாற்றியவர். நாவல் துறை, சிறுகதைத் துறை, கவிதைத்துறை எதிலும் சிறந்தவற்றையே தரவேண்டும் என்ற பெருவிருப்போடு இயங்கியவர். புத்தம் புதிய உத்திகளில் சொல்லப்படுவதினாலே இலக்கியமாகிவிடாது; வாழ்வின் சிடுக்குகளை விமர்சனக் கண்கொண்டு புதியவடிவில் தருவதே இலக்கியக்கலை என்பதில் இம்மியும் பிசகாதவர். அவருக்கு இலக்கியம் உணர்வுப் பூர்வமானது; பக்திப்பூர்வமானது; காதல் பூர்வமானது; கனவுகளால் நிரம்பியது. இந்த மண்ணில் உன்னதங்களைத் தோற்றுவிப்பதே எனது வேலை என்று ஈடுபட்டவர். அவரிடம் வாசகர்களாகச் சென்றவர்கள் எழுத்தாளர்களாகத் திரும்பி வந்தார்கள். சுந்தரவிலாஸ் ஒரு இலக்கியப் பள்ளிக்கூடம். இந்தத் தமிழ்ச் சமூகம் என்றேனும் தனது பணியைக் கண்டுபிடித்து அங்கீகரிக்கும் என்றே நம்பியவர். அந்த நம்பிக்கையை தமிழக அரசும் சரி இந்திய அரசும் சரி கடைசிவரை பொய்யாக்கி வெற்றிகண்டது. ஒருவேளை ஞானபீட பரிசு வழங்கப்பட்டிருந்தால் அந்த நிறுவனத்திற்குக் கூடுதல் மரியாதை ஏற்பட்டிருக்கும். அவர் தமிழ்ச்சூழலில் மேலான வாசகர் கூட்டத்தை உருவாக்கினார். அவரை விமர்சிப்பவர்களும், மதிப்பவர்களும், கோபப்படுபவர்களும் பிரியத்துடன் இருந்தவர்களும், விலகிச் சென்றவர்களும், விலகி நின்று அந்தக் காலத்தை ஒரு பொன்னான நிகழ்வாக நினைப்பவர்களும் அவரது வாசகர்களே. இந்த செல்வாக்கை அவரது காலத்தில் வேறொரு எழுத்தாளர் அடையவில்லை. இது சுந்தர ராமசாமிக்கு கிட்டிய மிகப்பெரிய அங்கீகாரம். இதுவே அவர்பெற்ற நோபல் பரிசு. வேறொன்றுமில்லை. கம்பீரமாக எழுதவந்தார். தன் பணியை செவ்வனே முடிந்து வெறுங்கையோடு கம்பீரமாக விடைபெற்றுச் சென்றார். எனக்கு இப்போதைக்கு வேறொன்றும் சொல்லத் தோன்றவில்லை என்றாலும் அவர் கடைசி தினம் வரைக்கும் எப்படி இருந்தார் என்பதற்கு அவரது கவிதை ஒன்று ஞாபகம் வருகிறது.

‘வாளுண்டு என் கையில்’

என்று எழுதவந்த சுந்தரராமசாமி.

‘வேட்டையாடத்தான் வந்தேன்
வேட்டைக்கலையின் சாகச நுட்பங்களை
தாய்ப்பாலில் உறிஞ்சத் தொடங்கினேன்
பின் வில்வித்தை
பின் வாள்வீச்சு
பின் குதிரைஏற்றம்
பின் மற்போர்
நாளை நாளை என வேட்டை பின்னகர
ஆயத்தங்களில் கழிகிறது என் காலம்
திறந்த வைத்த கற்பூரம்போல்
ஆயுளின் கடைசித் தேசல் இப்போது
இனி ஆயத்தங்களை தின்று சாகும் என்முதுமை
பின்னும் உயிர்வாழும் கானல்’

அவர் எழுதிய இக்கவிதைக்கு எதிராகத்தான் அவர் வாழ்ந்தார். தமிழ்ச்சூழல் இக்கவிதையையே அவருக்கு வெகுமதியாக்கியது. சுந்தர ராமசாமி என்ற ஒரு அசலான அழகிய காவியம் இப்படி துயரத்தில் முடிந்தது.

06.07.2017

Series Navigation<< அசோகமித்திரன் தந்த கதைப் புத்தங்களின் கதைபோகிற போக்கில் மகத்துவங்களை உண்டாக்கியவர்- தி. ஜானகிராமன் >>

2 Replies to “துயரத்தில் முடிந்த சுந்தரராமசாமியின் காவியம்”

  1. ஒரு மிக நீண்ட கட்டுரையின் மூலம் சு.ரா.வை கண்முன் நிறுத்தியிருக்கிறீர்கள். தமிழ்ச்சமூகம் இவரது பணியை அங்கீகரிக்கவில்லை என்பதும், இவர் ஒரு school of thought என்பதும் மறுக்கமுடியாத உண்மை. எம்.வி.வி.யைப் பற்றி அவரது பார்வையையோ இலக்கியப்பங்களிப்பைத் தாங்கள் குறிப்பிடாததற்கு என்ன காரணம் எனப் புரியவில்லை. இப்படிப் பல முக்கிய படைப்பாளிகள் பலர் விடுபட்டிருக்கலாம். ஆனாலும், சு.ரா. குறித்த முழுமையான தெளிவான பார்வையைக் கொடுத்ததற்கு நன்றி, அன்புடன், இளவல் ஹரிஹரன், மதுரை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.