பருவகாலப் பரவலியலும் தொழில்நுட்பவியலும்

சுற்றுச்சூழல் செய்தியாளர் லிண்டா மேப்ஸ் மாஸசூஸட்ஸ் மாநிலத்தில் பீடர்ஷாமில் உள்ள ஹார்வர்ட் பல்கலை கழகத்தின் காட்டில் ஒரு வருஷம் வசித்து வந்தார். அங்கே, ஒரு தனிவகையான சிகப்பு ஓக் (குஎர்கஸ் ருப்ரா) மரம் அவருக்கு காட்டுவசிப்பை பற்றியும், நம் இயற்கை உலகத்தின் மேல்  தட்பவெப்பநிலை மாற்றத்தின் விளைவுகளை பற்றியும் அபாரமான நுண்ணறிவுகளை வழங்கியது. இந்த கட்டுரை சமீப காலத்தில் வெளிவந்த அவரது ‘சாட்சி மரம்: நூறு வயதான ஒரு சிகப்பு ஓக் மரத்தில் பருவகாலங்களின் மாறுதல்கள்’ என்ற புத்தகத்திலிருந்து தழுவியது. (முந்தைய பகுதி: சாட்சி மரம்: ஓர் ‘ஓக்’ மரம் தட்பவெப்பநிலை மாற்றத்தைப் பற்றி என்ன தெரிவிக்கிறது?)

~oOo~

பாகம்-2

ஆன்ட்ரூ ரிச்சர்ட்ஸனுக்கு ஜான் ஓகீஃபின் பதிவுகள் விலைமதிப்பில்லாத தரவுகளை அளிக்கின்றன. இவற்றை வைத்து அவரால் மரங்களின் உடலியல், காட்டின் மேற்புறக் கவிகை மற்றும் பருவகாலங்களின் நிகழ்வுகள் மீது தட்பவெப்பநிலை மாற்றத்தால் தோன்றியுள்ள விளைவுகளைப் பரீசீலிக்க முடிகிறது. காட்டை பலவிதமான அளவைகளை வைத்து ஆராய்வதே அவரது நோக்கம் என்பதால், தனி மரங்களிலிருந்து, காடு, வட்டாரம், மேலும் உயிரினச் சூழல் வரை எல்லா அளவுகளிலும் ஆராய்கிறார். ஜானின் வாராந்தர நடைப்பயிற்சிகள் மூலம் கிட்டும் தரவுகள், ஆன்ட்ரூவுக்கு பருவகாலப் பரவலியலை ஒரு குவி வில்லை (லென்ஸ்) போல,  புதிய முறையில் காட்டின் செயல்பாட்டு முறைகளின் மேல் பொருத்தி நோக்க உதவியதால், ஜானின் ஆராய்ச்சி மறுபடி இன்று பயன்படும் தன்மையைப் பெற்றிருக்கிறது.

இதெல்லாம் ஆன்ட்ரூ நியூ-ஹாம்ப்ஷையர் பல்கலைக் கழகத்தில் இருந்தபோது தொடங்கியது- அவரும், சக ஆய்வாளர்களும், மரங்களுக்கும் சூழலுக்கும் இடையே பரிமாறப்படும் கரியமிலவாயுவின் அன்றாட மற்றும் பருவகாலத்திற்குரிய இசைவு இயக்கங்களை – காட்டின் மூச்சு இயக்கத்தை – தினசரி அளவெடுத்தார்கள். நியூ ஹாம்ப்ஷையரின் ‘வெள்ளை மலை’களில் உள்ள பார்ட்லெட் சோதனைக் காட்டில் ஒரு தொண்ணூறு அடி உயரக்கூண்டின் மேல் அமர்த்திய கருவிகளை பயன்படுத்தி வந்தார். அப்பொழுது, சூழ்நிலை அமைப்பு எப்படி இயங்குகிறது எனப் புரிந்து கொள்வதற்கு மற்றும் பல வகையான உருப்படிகளையும் அளவெடுக்கலாம் என்ற ஊகமுடிவு அவருக்குத் தோன்றியது.  இதன் விளைவு -அவரது குழுப்பணிக் கூடத்தில் ஆன்ட்ரூவின் கூட்டாளிகளில் ஒருவருடன் ஒரு உரையாடல் நடந்தது. அக்கூண்டின் மேல் ஒரு ஒளிப்படக்கருவியைப் பொருத்தினால் என்ன – குறைந்த பட்சம், அறிவியல் விரிவுரைகளில் பயன்படுத்த, எல்லாப் பருவகாலங்களிலும் இருக்கும் காட்டின் மேல் விதானத்தின் அருமையான ஒளிப்படங்கள் கிடைக்குமே – என்று யோசித்தார்கள்.

இலைகள் எப்பொழுது துளிர்க்கின்றன, எப்பொழுது உதிர்கின்றன என்பவற்றின் சம்பவ வாய்ப்புகளைக் கூட கணிக்க முடியலாம் என்று ஊகித்தார்கள். காடு வளரும் காலத்தின் அளவு பற்றிய தகவல், காடுகள் எவ்வளவு கரிப்பொருளை சேமித்து வைக்கின்றன என்று ஆராயும் விஞ்ஞானிகளுக்கு மிகத்தேவையான ஒரு தகவல். சில வாரங்களிலேயே அவர்கள் அப்பொழுதிருந்த உயர்மட்டத் தொழில் நுட்பம்கொண்ட ஒளிப்படக் கருவியை அமர்த்தி, கம்பியில்லாத் தொடர்பு மூலம் பிம்பங்களை பல்கலைக் கழகத்தின் வழங்கிக் கணினிக்கு அலை-பரப்பினார்கள். முதல் பிம்பங்கள் இணையத்தின் மூலம் தமது கணினிகளுக்கு வந்து சேர்ந்த பொழுது, சிறப்பாக இல்லாவிட்டாலும்,  ஒளிப்படக் கருவி தாங்கள் எதிர்பார்த்த மாதிரியே வேலை செய்தது பற்றி மகிழ்ச்சி அடைந்தார்கள். சடுதியில், அலுவலக மேஜையிலிருந்து அவர்களது தொலைதூரத்து ஆய்வுக் களத்தைக் கண்காணிக்க முடிந்தது. இது ஆன்ட்ரூவை மேலும் யோசிக்க வைத்தது.

அடுத்த கோடைகாலத்தின் பொழுது, ஆன்ட்ரூ, முனைவர் பட்டப் பயிற்சியிலிருக்கும் மாணவர் ஒருவரான ஜூலியன் ஜென்கின்ஸிடம், கணினி பகுப்பாய்வு மூலம் இளவேனில் காலத்தில் மரங்கள் பச்சையாகும் தருணத்தை பிம்பங்களில் துப்பறிய முடியுமா என்று கேட்டார். சில நாட்களிலேயே ஜூலியன் ஒளிப்பட பிம்பங்களின் சிகப்பு, நீலம் மற்றுப் பச்சை நிறங்களின் படமூலங்களை (பிக்ஸெல்கள்) எண்பெறுமானமாக மாற்றுவதற்காகக் கணினி செயல்நிரல் ஒன்றை உருவாக்கினார். இதன் மூலம், பிம்பத்தில் எவ்வளவு பச்சை இருக்கிறது என்று அவரால் மதிப்பிட முடிந்தது. பலே!  இனி படமூலங்களின் கலவையிலிருந்து இளவேனில் துல்லியமாகச் சுட்டப்படலாம். இப்பொழுது, நாளுக்கு நாள் இலைகளில் அதிகரிக்கும் பச்சைப் படமூலங்களின் எண்ணிக்கைகளிலிருந்து, அந்த குழுவால் காட்டு இலை விதானத்தின் வளர்ச்சியை கோடைகாலம் வரைக்கும் கூர்ந்து கவனிக்க முடிந்தது. இலையுதிர்காலம் வரவும், ஒளிப்படக் கருவியின் படமூலங்களிலிருந்து இலைகளின் நிறம் மாறுதலும், உதிர்வும் தெளிவாக தெரிந்தது. துரித மாற்றமாக, விரிவான நிலப் பரப்புகளில் பருவகால வளர்ச்சி முறையைத் தொலைவிலிருந்து, இணையத்தின் மூலம், எந்த இடத்திலிருந்தும் கண்காணிக்க முடிந்தது.

இது ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு. முற்றிலும் புதுவிதமான கண்காணிப்பகம் ஒன்றை படைக்க ஒரு சந்தர்ப்பம்: நிலப்பரப்பை உருமாற்றும் பருவகாலங்களின் இசைவு மாறுதல்களை ஒளிப்படக் கருவிகளின் கூட்டமைப்பின் மூலம் கண்காணிக்க, தொலை எண்முறைக் கண்காணிப்பகம் (digital observatory) ஒன்று சாத்தியமாகிறது. இதன் வழி பெறப்படும் தகவல்களை,  மையமாக அமைக்கப்பட்ட வழங்கு கணினிக்கு தகவலோட்டமாக அனுப்பவும், தரவுகளை பகிரவும், காப்பதற்கும், பகுத்தாராயவும் முடியும். ஆன்ட்ரூ இத்ற்கு ‘ஃபீனோகாம் பிணையம்’ என்ற பெயர் சூட்டினார். இதைப் போல ஒன்று முன்பு எங்கேயும் இருந்ததில்லை.

ஒரு வருடத்திற்குள், நியூ இங்க்லண்ட் மற்றும் கானடாவின் காடுகளின் பருவகாலப் பரவலியலைக் கூர்ந்து கவனிக்க ஆன்ட்ரூ சின்னதாக ஒரு ‘ஃபீனோகாம் பிணைய’த்தை துவங்குவதற்கு வேண்டிய நிதியைப் பெற்றார். அது 2007ஆம் ஆண்டில். பிறகு 2011இல் தங்களது கண்காணிப்பு வலையமைப்பை மேலும் வளர்ப்பதற்கென அந்தக் குழுவுக்கு நேஷனல் சைன்ஸ் பௌண்டேஷன் (என். எஸ். எஃப்) நிதி வழங்கியது. அதற்குப் பிறகு, 2013ஆம் ஆண்டில் என். எஸ். எஃப் வழங்கிய  கூடுதலான மானியத்தை உபயோகித்து இந்த வலையமைப்புக்குள் வட அமெரிக்காவில் கிட்டதட்ட 250 இடங்களிலிருந்து வந்து சேரும் ஐம்பது லட்சத்திற்கும் அதிகமான பிம்பங்களை அலசி ஆராய்வதற்கு தன்னார்வலர்களை ஈடுபடுத்தினர். வாரத்தின் ஏழு நாட்களிலும், வெளிச்சமிருக்கும் நேரங்களில் குறைந்த பட்சம் ஒரு மணிக்கு ஒரு முறையாவது பிம்பங்கள் பதிவேற்றப்பட்டன. இந்த ஒளிப்படக்கருவிகள் எல்லா இடங்களிலும் இருந்தன – ஹார்வர்ட் காட்டில் உள்ளது போல் கருவிக்கூண்டுகளின் மேல், வானிலை நிலையங்களில், கட்டடங்களின் மேல், காடுகளில், துருவப் பாலைகளில் (டண்ட்ரா பகுதி), ஹவாயியின் புல் நிலங்களில் மற்றும் அமெரிக்காவின் தென்மேற்குப் பாலைவனத்தில் கூட. ராபர்ட் மார்ஷம், தாமஸ் ஜெஃபர்சன், ஹென்ரி டேவிட் தோரோ மற்றும் ஆல்டோ லியொபோல்டின் பருவகாலப் பரவலியல் துறை மரபுகளை டிஜிடல் காலத்திற்கு இந்த ‘ஃபீனோகாம் பிணையம்’ கொண்டுவந்து விட்டது.

மாண்டிசெல்லோவிடமிருந்து எது துளிர் விட்டிருக்கிறது, எது பூத்திருக்கிறது என்று கடிதங்கள் மூலம் தெரிந்துகொள்வதற்குப் பதிலாக தனது பேரன்பிற்குரிய தோட்டங்களில் ஒரு ஃபீனோகாம் பிணையத்தை அமர்த்துவதற்கு என்னதான் கொடுத்திருக்க மாட்டார் ஜெஃபர்சன்? இந்தப் பிணையத்துக்கான ஒரு ஒளிப்பதிவுக் கருவியை, என்னுடைய சிகப்பு ஓக் மரத்தின் கீழே கூட வைத்தோம். இதை http://harvardforest.fas.harvard.edu/webcams/witness-tree க்குப் போய் பார்வை இடுங்கள்.

இங்கே, ஜான் மாதிரி, காட்டை மரங்களவில் நெருக்கமாக மட்டுமல்லாமல், விரிவான, பெரிய அளவிலும் பார்க்க முடிகிறது. இப்பொழுது நடைப்பயணங்கள் மூலம் கிட்டும் படங்கள், அல்லது எப்போழுதாவதும், வெகுதொலைவிலிருந்துமே கிடைக்கும் செயற்கைக்கோள் படங்களால் மட்டுமே ஆராய்ச்சியாளர்கள் கட்டுப்படவில்லை. இவ்வளவு புதுமையான செயல்முறையை வைத்து என்னவெல்லாம் செய்யலாம் என்று ஆன்ட்ரூவும் அவரது சகஊழியர்களும் இன்னும் யோசித்திருப்பதில் ஆச்சரியமே இல்லை. அவர்களது ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகள் அடிக்கடி எதிர்பாராத வியப்புகள் கொண்டுள்ளன.

தட்பவெட்பநிலை மாற்றத்தில் புது உள்ளூகங்கள்

லாரன்ஸ் பெர்க்லி நேஷனல் லாபில் பணியாற்றும் ட்ரெவர் கீனனும், ஆன்ட்ரூவும் சேர்ந்து இளவேனிர்காலமும் இலைஉதிர்காலமும் துவங்கும் காலகட்டங்கள் தொடர்புள்ளவை, ஆனால் பரவலாகக் கருதப்படுகிற விதமாக அல்ல என்று ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையை 2015இல் வெளியிட்டார்கள். மரபு சிந்தனைப்படியும், மேலும் பல தட்பவெட்பநிலை மாதிரி அமைப்புகளின்படியும், அதிகரிக்கும் வெப்பநிலையால் இள்வேனிற்காலம் சீக்கிரமே பிறக்கும், மற்றும் இலையுதிர்காலமும் தாமதமாகப் பிறக்கும் – இதனால் வளர்பருவம் நீண்டுகொண்டே போகும் என்று கருதப்படுகிறது. ஆனால் ட்ரெவரும், ஆன்ட்ரூவும் என்ன கண்டுபிடித்தார்கள் என்றால், இலையுதிர்காலத்தின் கால அமைவு, வெப்ப நிலையையும், பகல் பொழுதின் நீளத்தையும் விட, இளவேனிற்காலத்தின் துவக்கத்துடன்தான் அதிகம் சம்பந்தப்பட்டது என்று. இளவேனிற்காலத்திற்கு இலையுதிர்காலத்தின் கால அமைப்பின் மீது வலிய தாக்கம் உள்ளது – அது ஓரளவுக்கு அதிகரிக்கும் வெப்ப நிலையின் விளைவை ஈடுசெய்கிறது. இந்த கண்டுபிடிப்புகளின் பொருள், தாவரங்கள் வளரும் பருவநேரம்  நிலையானது என்றில்லை – ஏனென்றால் இளவேனிர்காலத்தின் துவக்கத்துக்கும் இலையுதிர்காலத்தின் முடிவிற்கும் நேரடியாக ஒத்திசைந்த தொடர்பு இல்லை என்றும் கண்டுபிடித்தார்கள். மாறாக, அவர்களுடைய ஆராய்ச்சி என்ன அறிவுறுத்தியது என்றால் – தற்போதைய தோற்றமைப்புகள் (models) இலையுதிர்காலத்தின் மீது இளவேனிர்காலத்தின் விளைவுகளைச் சேர்ப்பதில்லை – இது எதிர்கால வெம்மை நிலை பற்றிய முன்னூகச் சித்திரிப்புகளில் , வளர்பருவத்தின் (growing season) கால அளவை ஐம்பது சதவிகிதம் அதிகமாக இருக்கும் என ஊகிக்கவைக்கிறது. “திடீரென்று ஓர் தெளிவு கிட்டிய தருணம் அது” (it was a eureka moment) என்று ட்ரெவர் சொன்னார். தங்களது முதல் கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவத்தைக் கருதி, தங்கள் ஆய்வுகளை மேலும் விஸ்திகரித்து, கிழக்குக் கடலோரப்பகுதி முழுவதிலும் பருவகாலங்களின் போக்குகளை அலசி ஆராய்ந்தார் ட்ரெவர். முன்பு கண்ட அதே பாணியே இதிலும் காணக் கிடைத்து முதல் முடிவுகளை உறுதி செய்தது.

இதற்குப் பல விளக்கங்கள் கொடுக்கப்படக் கூடியவை. ட்ரெவர் சொன்னார்,  “தமது முன்னோரிடமிருந்து தாவரங்களுக்கு தங்களது காலக்கெடு எவ்வளவு என்று தெரியும். அதனால் தாவரங்களுக்குள் சிறந்த செயற்பாட்டை அடைய  ஏதாவது ஒரு இயங்கமைப்பு கட்டமைக்கப்பட்டிருக்கும் என்பது நாம் எதிர்பார்க்கக் கூடியது. அதன் மூலம் முதிர்ச்சிக்கு ஒரு முன்னேற்பாடு கிட்டும்….இதில் என்ன கேள்வி என்றால், தாவரங்களால் எத்தனை சீக்கிரமாக தாமே மாறவும், மற்றும் சுற்றுசூழல் மாறியிருப்பதை அறியவும் முடியும் என்பதுதான்.” இன்னும் ஒரு கோட்பாடு என்னவென்றால் மரங்கள் தமது கரிப்பொருள் தேவையை நிரப்பிப் பூர்த்தி செய்து கொண்டவுடன், வானிலை நன்றாக இருந்தாலும் அந்த வருடத்திற்கு வேண்டிய வேலை முடிந்தது என்று இருந்துவிடுகின்றன.  “அந்த வருடத்திற்கு எவ்வளவு உழைக்க வேண்டுமோ அவ்வளவு அவை உழைத்தாயிற்று,” என்று கூறினார் ட்ரெவர். “அவற்றின் வேலை முடிந்து விட்டது.”

என்னைப் பொறுத்த வரையில், வளர்வதற்கான பருவகாலம் மரங்களில் இலைகள் இருக்க வேண்டிய காலம் தாண்டியும்  நீடிக்கும் என்ற எண்ணத்தை ஏற்றுக்கொள்வது எளிதாக இல்லை. இதில் ஏதோ செயற்கையாகத் தெரிகிறது – ஏனென்றால், ஐயத்திற்கு இடமின்றி இது செயற்கை தான். இது மானிட நடத்தை தட்ப வெப்ப நிலையின் அமைப்பைப் பாதித்து வலுக்கட்டாயமாக மாறுதலைக் கொணர்ந்து, தமக்கான கால மாறுதல்களைக் கொண்டு இயங்கும் இயற்கை உயிரினங்களின் உடலியக்கத்துச் சுழற்சி அமைப்பின் மீது,  மாறிய சீதோஷ்ண அமைப்பைச் சுமத்தியிருக்கிறது. இப்பொழுது இரண்டு பருவகாலங்கள் உள்ளன: ஒன்று, உயிருள்ளவையின் பருவகாலங்கள், இரண்டாவது, நம்மால் படைக்கப்பட்ட பருவகாலங்கள். வடபுலத்து மரங்களும்  தங்கள் இணங்கும் தன்மையால் (adaptability) மாறி விடும், விரைவிலேயே நீண்டுகொண்டிருக்கும் வளர்பருவத்தைத் தென்புலங்களில் உள்ள மரங்களைப் போலப் பயன்படுத்திக் கொள்ளும் என்று ட்ரெவர் எதிர்பார்க்கிறார். எவ்வள்வு சீக்கிரம் இது நடக்குமென்பது தான் கேள்வி.

ஹார்வர்ட் காட்டில் நீண்டகால தாவரக் கரிமச் சேமிப்பின் அளவெடுத்தல்கள் மூலம் காட்டிலுள்ள மரங்கள், மிகையாக உள்ள சிகப்பு ஓக் மரங்கள், 1990’ம் ஆண்டிலிருந்து விரைவாக வளர்ந்து வருகின்றன என்று வெளிப்படுகிறது. 1990லிருந்து தான் உலகளவில் வெப்ப நிலையும் கரியமிலவாயுவின் அளவும் அதிகரித்துக்கொண்டு வருகின்றன. இப்போழுது, சிகப்பு ஓக் மரங்கள், காட்டில் உள்ள மற்றெந்த மர இனத்தை விடவும் வேகமாகவும் அதிகமாகவும் கனமாகிக் கொண்டிருக்கின்றன. ஓரளவிற்கு இது சிகப்பு ஓக்கின் இயல்புதான். ஒப்பீட்டில், குறைவான வயதே ஆன இளங்காடு இது என்பதும், 19’ம் நூற்றாண்டின் காடழித்தலிலிருந்து தேறிக்கொண்டு வருவதும் கூட, இந்த வலுவான வளர்ச்சிக்கு காரணமாக இருக்கலாம். ஆனால் இந்த சிகப்பு ஓக்கின் எழுச்சி – கடந்த 20 வருடங்களாக பனிக் காலத்தில் பெருகிவரும் சராசரி வெப்ப நிலை, அதிகரித்துள்ள மழைப்பொழிவு மற்றும் வேறு எந்த கால கட்டத்தையும் விட நீண்டுள்ள, வளர்தலுக்கான பருவம் எல்லாம் – தட்பவெப்ப நிலையில் மாற்றத்தின் விளைவு தான் என்று வெளிப்படுத்துகிறது.

லட்சகணக்கான ‘ஸ்டொமாடா’ (க்ரேக்க மொழியில் ‘ஸ்டோமா’என்றால் ‘வாய்’) என கூறப்படும் இலைத்துளைகள் மூலம் மரங்கள் கூட, மாறும் சுற்றுசூழலின் விளைவுகளைப்பற்றி பல உண்மைகளைக் கூறுகின்றன. நீர் ஆவி, கரியமில வாயு, மேலும் பிராணவாயு ஆகிய எல்லாமே இந்தத் துளைகள் வழியே இலைகளுக்குள்ளும் வெளியேயும் செல்கின்றன, அதன் மூலம் பிழைத்திருப்பதை ஒரு சவாலாக ஆக்குகின்றன.  ஆனால் ஆன்ட்ரூவும் ட்ரெவரும், பரவலாகப் படிக்கப்பட்ட மற்றொரு கட்டுரையில், கரியமிலவாயு அதிகரித்துள்ள போது, ஹார்வர்ட் காட்டின் மரங்கள், சிகப்பு ஓக் உள்பட, கூடுதலான செயல் திறனுயுடன் செயல்படுகின்றன என்பதைப் பதிவு செய்திருக்கிறார்கள். வேண்டிய கரியமிலவாயுவை உட்கொள்ள தங்களது இலைத்துளைகளை அவ்வளவு விரிவாகவோ அல்லது அவ்வளவு அடிக்கடியோ அவை திறப்பதில்லை. அப்படியென்றால் மரங்களால் குறைந்த அளவு நீர் உபயோகித்து வேண்டிய அளவு அல்லது தேவைக்கு மேலான அளவு உணவு தயாரிக்கமுடிகிறது என்றாகிறது. இதிலிருந்து நாம் படிக்கக் கூடியது என்னவென்றால் மரங்களின் உயிரியலில் ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது, அதனால் எல்லாவற்றிற்கும் – நீர் மறுசுழற்சியிலிருந்து தட்ப வெப்ப நிலை வரை ஆழமான அர்த்தமுள்ள விளைவுகள் காத்திருக்கின்றன. வெப்ப நிலையும் கரியமிலவாயுவும் அதிகரித்து வருகையில், என்னுடைய சிகப்பு ஓக் மாதிரி, மரங்கள் குறைந்த அளவு நீரைச் செலவழித்து முன்னைவிட அதிகமாக வளர, தன்னுடைய உட்புற வேலைப்பாடுகளை மாற்றிக்கொண்டிருக்கின்றன.

வானிலிருந்து, சுற்றுச்சூழலிலிருந்து, பருவகால அமைப்பு, மரங்கள் வளரும் வீதம், மேலும் இலைகளின் ஒளிச்சேர்க்கை வரை, மானிட விரல் ரேகை இப்பொழுது நமது கிரகத்தின் பிரமாதமானவற்றிலிருந்து மிக நெருங்கிய அளவு வரை உள்ள எல்லா அம்சங்களிலும் பதிந்து இருக்கிறது. இதெல்லாவற்றையும் ஒரே மரத்திலேயே கூடப் பார்க்க முடிகிறது. அந்த பெரிய ஓக்கின் சாட்சியத்திலிருந்து தெளிவாக தெரிகிறது – நமது உலகம் ஏற்கனவே மாறிக் கொண்டிருக்கிறது.

~oOo~

(இங்கிலிஷ் மூலம்: லிண்டா வ. மேப்ஸ்.  தமிழாக்கம்: ஹரிதா )

ஒப்புதல்கள்: கட்டுரையாசிரியர் எம்.ஐ.டி பல்கலையின் அறிவியல் பிரசுரவியலுக்கான நைட் கட்டளையின் உதவிக்கு நன்றி தெரிவிக்கிறார். அதன் மூலம் ஹார்வர்ட் காட்டிலுள்ள சாட்சி மரத்தின் அடியில் ஒரு பீனோகாம் கருவியைப் பொருத்த முடிந்தது. இந்த ஆய்வுத் திட்டம் பற்றி அறியச் செல்ல வேண்டிய வலை முகவரி:

http://harvardforest.fas.harvard.edu/witness-tree

இந்தக் கட்டுரையை மொழிபெயர்க்கவும், பிரசுரிக்கவும் சொல்வனம் குழுவுக்கு அனுமதி வழங்கிய லிண்டா மேப்ஸ் அவர்களுக்கு சொல்வனம் பத்திரிகைக் குழுவினர் நன்றி தெரிவிக்கின்றனர்.

Solvanam magazine thanks Ms.Lynda V. Mapes for granting us her permission for translation and publication of her article from the magazine Arnoldia (Volume 74: Number 4: 2017). 

The article is titled: Witness Tree: What a Single, 100-Year-Old Oak Tells Us About Climate Change

~oOo~

சான்றாதாரங்கள்

  1. Keenan, T.F, G.Bohrer, D.Dragoni, J.W. Munger, H.P.Schmid, and A.D.Richardson. 2013. Increasing Forest water use efficiently as atmospheric carbon dioxide concentrations rise. Nature 499:324-327
  2. Keenan, T.F and A.D.Richardson. 2015. The timing of autumn senescence is affected by the timing of spring phenology:implications for predictive models. Global Change Biology 21: 2634-2641
  3. Morton, O. Eating the Sun: How Plants Power the Planet. 2008. New York: Harper Perennial
  4. Richardson, A.D., T.A.Black, P.Ciais, N.Delbart, M.A.Freiedl, N.Gobron, D.Y.Hollinger, et al. 2010. Influence of spring and autumn phenological transitions on forest ecosystem productivity. Philosophical Transactions of the Royal Society. Series B 365:3227-3246.

~oOo~

லிண்டா வி.மேப்ஸ் சியாட்டில் டைம்ஸ் என்கிற பத்திரிகையின் சுற்றுச் சூழல் பகுதிப் பத்திரிகையாளர். ‘Witness Tree’ என்கிற புத்தகத்தின் ஆசிரியர். அவருடைய செயல்பாடுகள் பற்றி மேலும் அறிய செல்க: http://lyndavmapes.com

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.