குரங்கில் இருந்து பிறந்து…

ape:
வினைச்சொல்:
மற்றவரைப் போல் நடி; குறிப்பாக – சிந்திக்காமலோ பொருளற்ற நகைப்புக்கிடமான அறிவுகுறைந்த வகையில் நடத்தைகளை கண்மூடித்தனமாகப் பின்பற்று.
ஒத்தச்சொல்: கண்டுபாவித்தல், விகடன், ஒற்றிப் பிரதியெடுத்தல், கிளி, இன்னொருவரின் செய்கையை கண்டுசெய்தல், பகடி, பரிகசித்தல்

இது நம்முடைய அர்த்தம். ஒன்றைக் கண்டு பிரதிபலித்தலை ‘ஏப்’ (ape) என்கிறோம். அகரமுதலியில் ‘ஏப்’ எனத் தேடினால், பாவித்தல், பாசாங்கு செய்தல், கிளிப்பிள்ளை போல் யோசிக்காமல் பிரதிபலித்தல் என அர்த்தம் சொல்கிறார்கள்.

ஆனால், அறிவியல் ஆராய்ச்சியின் படி பார்த்தால் ஒரு விஷயத்தைக் காண்பித்தால் மனிதக் குரங்கு அதனை நினைவில் வைத்திருக்கிறது. வெறுமனே கண்ணாடியாக புத்தியில்லாமல் பிரதிபலிப்பதில்லை. அந்தச் செய்கையை வருங்காலத்தில் எதிர்பார்க்கிறது. ஒவ்வொரு செயலையும் நினைவுகூர்ந்து அதற்கேற்ப தன் கண்ணோட்டத்தைச் சொல்கிறது. சொல்லையும் அதற்கேற்ற செய்கையையும் அந்த செய்கையின் பின் விளைவுகளையும் நினைவில் நிறுத்திக் கொள்ளும் குரங்குகள், சிந்தித்த பின் செயல்படுகிறது. நான் கூட இவ்வளவு நிதானமாக என் தரப்பின் செய்கைகளுக்கு, யோசித்து நிதானமாகச் செயல்படுவதில்லை

செய்தி: Great Apes Make Anticipatory Looks Based on Long-Term Memory of Single Events: Current Biology

கொரில்லாக் குரங்கு மட்டுமல்ல… நாய் கூட ஆயிரக்கணக்கான வார்த்தைகளைக் கற்றுத் தேர்ந்திருக்கிறது. நாம் சொல்வதைப் புரிந்து கொள்கிறது. நம்மிடம் பதிலுக்கு பதில் உரையாடாமல், நாம் சொல்லும் வார்த்தையை வைத்து, அது ஒரு பொருளா அல்லது வினைச் சொல் கட்டளையா என பகுக்கத் தெரிந்திருக்கிறது. நாம் உரைப்பது – பந்தா, எந்த நிறப் பந்து, அல்லது எந்த பொம்மை என்று புரிந்து கொண்டு, அதற்கேற்ப ஈடு கொடுக்கிறது: What a Border Collie Taught a Linguist About Language | WIRED

மொழி எவ்வாறு உருவானது? கபிகள் பேசுமா? சைகை மொழியை சிம்பன்ஸிக்கு எப்படிக் கற்றுத் தருவது? மிருகங்களை சுதந்திரமாக வாழவிடாமல், நம் கண்காட்சிக்கென, விலங்கியல் பூங்காவில் அடைத்து வைப்பது தகுமா? அவற்றின் பரிணாம வளர்ச்சியைப் புரிந்து கொள்கிறேன் என்னும் சாக்கு சொல்லி, வீட்டிற்குக் கொண்டு வந்து தத்துவவியல் விஞ்ஞானியோ அறிவியல் ஆய்வாளரோ ஆராயலாமா?

இந்தக் கேள்விகளுக்கு பதிலாக அல்லது நீட்சியாக இந்த ஆராய்ச்சியை படிக்கலாம்: There is a moral argument for keeping great apes in zoos | Aeon Ideas

இதெல்லாம் மிருகங்களைப் பற்றின செய்திகள். மனிதனுக்கு ஆறறிவு இருக்கிறது. அவனுக்கும் இந்த மந்தைக் கூட்டத்துக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் உறுமுவது எனக்குக் கேட்கிறது. உங்களுக்கு ஒரு சம்பவத்தை நினைவு கூறுகிறேன்.

நடிகர் சூர்யாவின் உயரம் 5′ 7″
நடிகை அனுஷ்காவின் 5′ 10″
சிங்கம் படப்பிடிப்பில் ஸ்டூல் போட்டார்களா அல்லது சூர்யாவிற்கு ஹை- ஹீல்ஸ் செருப்பு கொடுத்தார்களா என்பதை பட்டிமன்றத் தலைப்பாக்கலாம். இது மிருகத்தின் சுபாவம். மண்டியிட வைப்பது மன்னனின் சுபாவம் என்றால், ஆண்மகனுடன் டூயட் பாடும் காதலி தாழ்தளத்தில் நின்று சிருங்கார ரசம் முகத்தில் கொணர வேண்டும் என்பது சினிமா சுபாவம்.

அது சினிமா. நிஜமல்ல. அதைக் கூட விட்டுவிடலாம். நீங்கள் தற்படம் (செல்ஃபீ) எடுப்பதையும் அது எவ்வாறு நம் முன்னோரின் குணநலனோடு ஒத்துப் போகிறது என்பதையும் எவ்வாறு ஒவ்வொரு சுய புகைப்படத்திலும் உங்களின் விலங்கு மனோபாவம் வெளிப்படுகிறது என்பதையும் இங்கே ஆராய்கிறார்கள்: The Psychology of Selfies | Psychology Today

இது தற்கால ஆராய்ச்சி. கொஞ்சம் சங்க காலத்திற்குச் செல்வோம். தமிழில் தோன்றிய முதல் சமயக் காப்பியம் மணிமேகலை ஆகும். இந்நூல் பவுத்த மத சார்புடைய நீதிகளை எடுத்துச் சொல்லும் பேரிலக்கியம் என்ற பெருமை கொண்டது. குமரி முனையிலிருநது இலங்கைக்குக் குரங்குப் படைகள் அணை அமைத்தன என்று மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் மணிமேகலையில் கூறுகின்றார். அதில், ஐந்தாவது மணிமேகலை உதயகுமரன்பால் உள்ளத்தாள் என மணிமேகலை தனக்கு மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய பாட்டில்:

பழ வினைப் பயத்தான் பிழை மணம் எய்திய
எற்கெடுத்து இரங்கி தன் தகவு உடைமையின்
குரங்கு செய் கடல் குமரி அம் பெருந் துறைப்
பரந்து செல் மாக்களொடு தேடினன்
– (மணிமேகலை 5133 – 38)

குரங்கு செய்கடல் குமரியம் பெருந்துறை-குரங்குகளாலே இயற்றப்பட்ட திருவணையையுடைய கடலின்கண் அமைந்த பெரிய புண்ணியத் துறையாகிய கன்னியாகுமரித் துறையில் ஆடுதற் பொருட்டு என்பது பொருள். குரங்கு செய்கடல் என்றது தென்கடலை அறிவிக்கிறது. குமரி என்பது கன்னியாகுமரியைக் குறிக்கிறது. குரங்கு செய் திருவணை என்பது ராமர் பாலம் எனப்படும் ஒரு அமைப்பைச் சொல்கிறது. சிலப்பதிகாரம், பழைய இராமாயணக் கதையைத் தொட்டு நிலப்பரப்பைச் சுட்டுகிறது. இது இயற்கையில் அமைந்த ஒன்றைச் சொல்வதை விட, புழக்கத்தில் பழங்கதையாக உள்ளதைச் சொல்வதன் மூலம் ஒரே நேரம் இலக்கியப் பாரம்பரியத்தையும், மக்கள் வழக்காறுகளையும் இணைத்துப் பேசும் செயல் என்றும் கொள்ளலாம். அது தென்கடலைச் சுட்டுவது என்பதை விட, தென்கடலில் குறிப்பிட்ட இடங்களைச் சுட்டுகிறது.

”நம் உலகத்தில் இரு வகை மனிதர்கள் இருக்கிறார்கள்: ஒருவர் ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்பவர்; இன்னொருவர் உலகை இரண்டாகப் பிரிப்பவர்கள்.” என்பதற்கேற்ப, 1968ல் முதன் முதலாக ‘பிளானெட் ஆஃப் தி ஏப்ஸ்’ படப்பிடிப்பு நடத்தியபோது அந்த சம்பவம் நடந்தது. திரைப்படத்தில் இரு தரப்பினருக்கு இடையே போர் நிகழுமாறு காட்சியைப் படமாக்கிக் கொண்டிருந்தார்கள். ஒரு தரப்பில் கொரில்லாக்கள். அவர்களுக்கு எதிராக குரங்குகளாக ஆயிரக்கணக்கான துணைநடிகர்கள் போர் புரிந்தார்கள். இடைவேளை வந்தது. கொரில்லாவாக வேஷம் கட்டியவர்கள் எல்லோரும் ஒரு பக்கம் சேர்ந்து உணவு உட்கொண்டார்கள். அதன் எதிர்ப்புறம் குரங்காக வேடம் தரித்தவர்கள் கொரில்லா வேஷதாரிகளிடம் இருந்து விலகி தனியே உணவு உண்டார்கள். நாம் எங்கே பார்த்தாலும் பேதம் பார்த்துக் கொண்டே இருக்கிறோம். இனம், மதம், பூர்விகம், நிறம், பிறப்பிடம், மொழி, உடலமைப்பு, பால், மொழி, வசிப்பிடம், வேலை, பணம், வயது… எண்ணற்ற வகைகளில் நம்மவர்களைத் தேர்ந்தெடுக்கிறோம்: Why Your Brain Hates Other People: And how to make it think differently – Overcoming Us vs. Them

’பிளானெட் ஆஃப் தி ஏப்ஸ்’ வரிசைப் படங்கள் இதையெல்லாம் சற்றே நீட்டித்து அறிவியல் புனைவாக, கற்பனை செய்து பார்க்கின்றன:

இந்த ஜூலை மாதம் ”வார் ஃபார் தி பிளானெட் ஆஃப் தி ஏப்ஸ்” வெளிவந்தது. சமீபத்தில் தூசி தட்டி மீண்டும் இந்த குரங்கு சாம்ராஜ்யத்தை படமாக்கத் துவங்கிய பிறகு, வரும் மூன்றாம் படம் இது. இந்தப் படத்திலும் குரங்குகள் பேசுகின்றன. மனிதர்கள் மெதுவாகப் பேச்சை இழந்து வருகிறார்கள். மனிதனின் அறிவியல் ஆற்றல் அவனின் அழிவிற்கு இட்டுச் சென்றிருக்கிறது. சண்டை ஆயுதங்களைக் கொண்டு ஒருவரையொருவர் கொன்று குவிக்க தொழிநுட்ப முன்னேற்றங்களைப் பயன்படுத்தும் வர்க்கமாக மானுடம் சித்தரிக்கப்படுகிறது. குடியுரிமைக்காகக் குரங்குகள் குரல் எழுப்புகின்றன. சம அந்தஸ்துடன் வாழாவிட்டாலும், தங்களின் காட்டில், ஒரு மூலையில் ஒதுக்குப்புறமாக, மனிதனின் நகரங்களுக்குள் வராமல் ஒளிந்து வாழப் போராடுகின்றன.

2011-ல் முதல் பகுதி வந்தது – ஏற்றம்: rise
2014-ல் இரண்டாம் பகுதி வெள்ளித்திரையில் வெளியானது – வைகறை: dawn
இந்த வருடம் இறுதி பாகம் – யுத்தம்: war

ஹாலிவுட் மசாலப் படங்களைப் பார்க்கும்போது மூளையைக் கழற்றிவைத்து விட்டு பார்ப்பது உங்களின் அறிவிற்கு குந்தகம் விளைவிக்காது. அதற்காகவே இந்தக் கட்டுரையின் துவக்கத்தில் இந்தப் படம் நிஜத்திலேயே நடக்கும் என்னும் தோற்றமயக்கத்தை ஏற்படுத்தும் உண்மைச் செய்திகளைப் பகிர்ந்து கொண்டேன். அந்தச் செய்திகளைப் போல் இந்தப் படமும் படு தீவிரமாக குரங்குகளின் ராஜாங்கத்தை விளக்குகிறது. வந்தியத்தேவனை குதிரையில் கற்பனை செய்த எனக்கு, ஒராங்குட்டான் அதே குதிரையை ஓட்டுவதை திரையில் பார்க்கும்போது மெல்லிய சிரிப்பு எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. எனினும், இந்தப் படமும் முந்தையப் படங்கள் போலவே வெறுமனே கேலி செய்து ஒதுக்க முடியாதபடி யோசிக்கவும் வைத்தன.

அது எப்படி சாத்தியமாகிறது?

முதலில் சீஸராக நடித்தது மனிதன். அவர் பெயர் ஆண்டி செர்கிஸ். கோச்சடையான் படத்தின் ரஜினி போல் நிழல் உருவமாக உயிர் கொடுக்கிறார்.

இரண்டாவதாக படத்தின் துவக்கக் காட்சியில் “விவேகம்” அஜீத் போல் சீஸர் அறிமுகம் செய்யப்படுகிறார். போரில் வெற்றியை அடைகிறார். அதன் பின் ஒவ்வொரு விதமான குரங்கும் அவர் வரும் வழிவிட்டு விலகி, வணக்கம் செலுத்தி, மரியாதையையும் தலைவன் என்னும் மதிப்பையும் உணர்த்துகின்றன. அதன்பின் வரும் இரண்டரை மணி நேரமும் சீஸரின் பார்வையிலேயே கதை சொல்லப்படுகிறது. சீஸர் எவ்வாறு தன் குடும்பத்தை இழக்கிறது என்பதில் துவங்கி, மனிதன் போல் கோபம் தலைக்கேறி பழிவாங்கும் வெறி தலைதூக்குவதிற்குச் சென்று, கடைசியில் சிறைபிடிக்கப்பட்டு, தப்பிக்க யோசிப்பது வரை எல்லாம் சீஸர். ”அபாயம் தவிர்த்துத் தடுத்தாட் கொண்டருள்வாய்; நிழல் வெயில் நீர் நெருப்பு மண் காற்று வானதிலும் பகைமையை அகற்றி அபயமளித்திடுவீர் உணர்விலே ஒன்றி என்னை நிர்மலமாக்கிடுவாய்; யான்/எனது அற்ற மெய்ஞ்ஞானமது அருள்வாய் நீ” என சீஸர் குரு கவசம் பாடாத குறையொன்றுதான் படத்தில் பாக்கி.

சக மனிதர்களைக் கொல்லத் துடிக்கும் கர்னல் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் தன் சக உயிர்களைக் காத்து பேண நினைக்கும் சீஸர். சாதாரண மாஸ் ஹீரோ படத்தில் கர்னலை வில்லன் என்று நிலைநிறுத்துவார்கள். இந்தப் பக்கம் சீஸரை தலைவராக, அதிநாயகராக உயர்வு நவிற்சியில் அமிழ்த்துவார்கள். கர்னலின் ஒரு கொடூரச் செய்கையைக் காட்டிவிட்டு; அதற்கு மாற்றாக சீஸரின் உன்னதமான பதிலை காட்சியாக நிறுத்துவார்கள். அப்படியெல்லாம் அல்பத்தனம் இந்தப் படத்தில் இல்லை. சீஸர் கம்பியெண்ணுகிறாரா… நாமும் கூண்டில் இருக்கிறோம். சீஸர் பிரம்படி வாங்குகிறாரா… நமக்கும் ரத்தம் வருகிறது. சீஸர் மண் சுமக்கிறாரா… நமக்கு பாரம் அழுத்துகிறது. கையாலாகவராக சீஸர் இருக்கிறாரா… நமக்கும் அடுத்து எப்படி அவரின் நண்பர்கள் யோசிப்பார்கள்; எவ்வாறு தைரியமாக செயலில் இறங்குவார்கள், அதில் எவ்வளவு வெற்றி பெறுவாரகள் என்பதெல்லாம் அவ்வப்போதுதான் தெரிகிறது.

படத்துவக்கத்தில் குரங்கிற்கு கோபம் வந்தால் மனிதத்தன்மையை இழக்குமா என்பது கேட்கப்படுகிறது. மனிதத்தன்மை என்பதை மன்னித்தருள்வது என்று பார்க்கிறேன். மனிதனே காருண்யத்தை விட்டுவிட்டு ஒரு கண்ணிற்கு இரண்டு கண் என்று பிடுங்கிக் கொண்டிருக்கும் காலகட்டம் இது. எனவே, ஆத்திரம் அட்டுமீறினால், மனிதன் குரங்காவானா? கொஞ்சம் நேரம் கழித்து சூதானம் திரும்பியவுடன் குரங்காக நடந்தவரை மனிதனாகக் கருதலாமா?

ஸ்காட் எஃப் ஃபிட்ஸ்ஜெரால்ட் மொழியில் சொல்வதனால்:

“முதல் தரமான புத்திசாலித்தனத்திற்கான சோதனை எதுவென்றால் – மண்டைக்குள் எதிரும் புதிருமான இரு கருத்துகளை மோதவிட்டுக் கொண்டிருந்தாலும், செயல்பாட்டில் எந்த சுகவீனமும் இல்லாமல் இருத்தல்”

நம் சிந்தனையை நாம் இழந்தால் அப்போதும் மனிதத் தன்மையோடு நடந்துகொள்வோமோ? மொழி என்னும் பேசும் சக்தியை ஏதோவொரு கொடிய வியாதி தாக்கி கொள்ளை போய்விட்டால், அப்போது எப்படி யோசிப்போம்? மனிதனோடு வளர்வதால் உரையாடும் சக்தி பெற்ற குரங்கு, தன் சொந்த பாஷையான ஊளை சத்தத்தை மறந்து விடுமா? ஆந்தை அலறும், யானை பிளிறும் என்பது போல் குரங்கு அலப்பும் என்பது மரபு. விலங்கியல் பூங்காவில் வளரும் குரங்கு சகமாந்தர் போல் பேசினால் மனிதர் எனக் கருதலாமா?

பாகுபலி போன்ற மெகா பட்ஜெட் இந்தியப் படங்களில் வரும் கிராஃபிக்ஸ் யானைகளைப் பார்த்தால் கேலிச் சித்திரங்கள் போல் விழுந்து விழுந்து விலா நோக சிரிக்கவைக்கின்றன. ஆங்கிலப் படங்களில் இந்தக் குறை கிடையாது. செய்வதை செவ்வனே சிறப்பாகச் செய்கிறார்கள். அரைகுறை வேலை கிடையவே கிடையாது. அந்தக் குரங்கு பேசினால் வாயசைப்பு முதல் உடல் மொழி வரை மனதில் நம்பவைக்கும்படி இருக்கிறது. அதன் கண்ணில் அப்படியொரு தீவிரம். அதன் முகத்தில் தலைமைப் பண்பு. தோள் அசைவில் ”முதல்வனே வனே வனே வனே வனே முதல்வனே வனே வனே வனே” என முழங்க வைக்கும் பாவம். குரங்குகள் அழுதால் நானும் கிட்டத்தட்ட பரிதாபம் கலந்த சோக மனநிலைக்குச் செல்கிறேன். அந்த ஜந்துக்கள் மனிதரைப் போல் தன்னைத் தானே ஆராய்ந்து அலசி சுய பகுப்பாய்வு செய்தால், அப்படித்தானே ஒருவர் தன் வாழ்வின் முடிவுகளை ஆராய்வார் என எண்ணுகிறேன்.

அதை சிறைப் பிடித்து குரங்கைக் கூண்டில் அடைத்தால், ஏதோ தப்பாக செய்வதாக உணரவைப்பதில் திரைக்கதாசிரியரும் மாயாஜால வடிவமைப்பாளரும் வாகை சூடுகிறார்கள். குரங்குகளும் மனிதர்கள்தானே என தோன்றவைப்பதில் இந்தத் திரைப்படம் வெற்றியைடைகிறது.

அடுத்த படத்தில் டிவிட்டரில் 140 எழுத்துகளுக்குள் தன் கருத்தை வெளிப்படுத்தி, “ஓவியா ஆர்மி”யை உருவாக்கும் என தோன்றவைப்பதில் பிக் பாஸ் யார் என்பதை தெளிவாக உணர்த்துகிறது. அப்போது நான் மரம் விட்டு மரம் தாவிக் கொண்டிருப்பேன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.