எம். எல். – அத்தியாயம் 4 & 5

அத்தியாயம் 4

லாசரும், வசந்தாவும் இன்னும் எழுந்திருக்கவில்லை. ரெபேக்காள் மன்றாடி ஜெபம் செய்து கொண்டிருந்தாள். பீட்டருக்கு ஜெபத்தில் மனமே லயிக்கவில்லை. ஒரு வழியாக ஜெபம் முடிவுக்கு வந்துவிட்டது. பீட்டர் ஆபீஸுக்குப் போய் மூன்று நாட்களாகி விட்டன. ஊரிலிருந்து ரெபேக்காளுடைய அண்ணன் ஜோஸப் வந்திருந்தான். அவனோடு ஆரப்பாளையம் கல்யாணத்துப் போவதும், கடைகண்ணிகளுக்குப் போவதுமாக மூன்று நாளும் ஓடிவிட்டது. எஸ்.பி. காச்மூச்சென்று சத்தம் போடுவார், சி.ஐ.டி. போலீஸ்காரன் பிழைப்பு நாறப்பிழைப்பு என்று நினைத்தான் பீட்டர்.

மேலதிகாரிக்குத் தாளம் போட்டால் நங்கையார், சீனிவாசன் மாதிரி உள்ளூர் டூட்டியாகக் கிடைக்கும். அஸைன்மெண்டும் அலைச்சல் இல்லாததாக இருக்கும். பீட்டருக்கு பொலிட்டிகல் அஸைன்மெண்டுதான் எப்போதும் போடுகிறார்கள். பொதுக்கூட்டத்துக்குப் போகவேண்டும், கட்சி ஆட்களின் நடவடிக்கைகளைப் பற்றி ரிப்போர்ட் செய்ய வேண்டும். எந்த கட்சிக்காரன் உள்ளதைச் சொல்லுகிறான்.

திடீர் நகரில் தமிழ்மறவன் எனும் ஒருத்தன் எதிர்க்கட்சிக் கூட்டங்களில் பேசுகிறான். அந்த ஏரியாவில் யாரைக் கைது செய்தாலும் உடனே ஸ்டேஷனுக்கு வந்து தகராறு பண்ணுகிறான். அவனுடைய மாமா வீரன், சாராய வியாபாரி, அவனுடைய மகளைத்தான் இந்தத் தமிழ்மாறன் கட்டியிருக்கிறான். இன்றாவது அவனைப் பற்றிய ரிப்போர்ட்டைத் தயார் செய்து ஆபீஸில் கொடுக்க வேண்டும்.

ரெபேக்காள் சமையல் கட்டுக்குள் நுழைந்துவிட்டாள். சேரை இழுத்துப் போட்டுக்கொண்டு காலைப் பேப்பர்களை எடுத்து வைத்துக்கொண்டான். அடுப்பங்கரையிலிருந்து கடுங்காப்பியின் மணம் வந்தது. அவனுக்காகத்தான் இரண்டாவது காபியைத் தயார் செய்கிறாள். அவளுக்கும் வேலை சரியாகத்தான் இருக்கிறது; எக்ஸ்பிரஸை எடுத்துப் பிரித்தான். ‘ஹிந்து’ வரக் கொஞ்சம் லேட்டாகும். திருப்பரங்குன்றம் தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகியிருந்தது. காலேஜ் ஹாஸ்டல் மாணவர்கள் சாப்பாடு சரியில்லை என்று ஆர்ப்பாட்டம்.

காலேஜ் விவகாரம் என்றதும் கே. டி. சுந்தர் பேர் இருக்கிறதா என்று பார்த்தான். எந்தப் போராட்டமாக இருந்தாலும் அவன்தான் தூண்டிவிடுவான். அவன் தலையீடு இல்லாமல் அந்தக் காலேஜ் மாணவர்க்களுக்குத் துணிச்சல் வராது. காலேஜுக்குப் பக்கத்தில் கடை போட்டிருக்கிற சசிவர்ணத்தைப் போனவாரம் கூடப் பார்த்தான். அப்போது கூட அவர் ஹாஸ்டல் பையன்களைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே? காலேஜ் பையன்களுக்கெல்லாம் அவர் கடையில்தான் கணக்கு. அவருக்குத் தெரியாமல் அங்கே எதுவும் நடக்காது, நேற்று ஸ்டிரைக் நடக்கும்போதும் போகவில்லை. சூப்பிரெண்டுக்கு என்ன பதில் சொல்வது? ‘செறைக்கவா போயிருந்தே’ என்று திட்டுவார்.

“பள்ளிக்கூடம் லீவு விட்டாலும் விட்டுது, இதுக்கால நேரமில்லாமக் கெடந்து தூங்குதுக…” என்று சொல்லிகொண்டே ரெபேக்காள் கடுங்காப்பித் தம்ளரை அவன் கையில் கொடுத்தாள். அவள் மோதிர விரலில் போட்டிருந்த நெளிவு மோதிரத்தைப் பார்த்தான். அவள் உடம்பிலிருந்து சந்தன சோப் வாசனையடித்தது.

“பின்னாளே இந்த அடி பம்புல எவ்வளவு அடிச்சாலும் தண்ணி விழ மாட்டேங்குது, அதுல வாசரு போயிட்டுது, அத மாத்தணும்னு நானும் சொல்லிக்கிட்டேதான் இருக்கேன். உங்க காதுல விழ மாட்டேங்குதுங்குது…”

‘சரி…சரி… இன்னைக்கு ஆபிஸுக்கு போயிட்டு வாரயில வாங்கிட்டு வாரேன்” என்றான் காபியை உறிஞ்சிக்கொண்டே.

“தண்ணியில்லாமே என்ன கழியும்?…”

“அதான் வாங்கிட்டு வாரேன்னு சொல்லுதேம்லா?…”

“மறந்துராதீய?…”

“சரி…மறக்கல…”

பின் வாசல் வழியாக காற்று வீசியது. மேய்ந்து கொண்டிருந்த சேவல், “கெக், கெக்”என்று சத்தம் போட்டுக் கொண்டிருந்தது. டெலிபோன் மணி அடித்தது. தினசரியை மடித்து வைத்துவிட்டு டெலிபோன் ரிஸீவரை எடுத்துக் காதில் வைத்தான். ரிஸீவரை லோஷன் போட்டுத் துடைக்கவேண்டும். வாய் பகுதியிலிருந்து நாற்றமடித்தது. “ஹலோ” என்றான்.

“யாரு?… பீட்டரா?”

“ஆமா…நீங்க?…”எதிர் முனையில் பேசிய குரல் பழகிய குரலைப் போலிருந்தது.

“நான் பழனி பேசறேன்…”

“சொல்லுங்க…சார்!”

“சாரு மஜும்தார் கோயமுத்தூர்லே இருந்து மதுரை பஸ்லே ஏறி வாராறாம்…”

“எந்த பஸ்லே?… பிரைவேட் பஸ்ஸா, ஸ்டேட் பஸ்ஸா?…”

“பிரைவேட் பஸ்தான். திருமுருகன் ட்ரான்ஸ்போர்ட் பஸ்ல வாராரு. இந்நேரம் பஸ் வந்திருக்கும்… உடனே அங்க போய் அவரை ஃபாலோ அப் பண்ணுங்க…”

“சரி…”

பீட்டர் மணியைப் பார்த்தான். ஏழே கால். சட்டையை அவசர அவசரமாகப் போட்டுக்கொண்டு ரெபேக்காளிடம் சொல்லிவிட்டுப் புறப்பட்டான். திண்டுக்கல் ரோட்டுப் பக்கம்தான் பிரைவேட் பஸ் கம்பெனிகள். சில பஸ்கள் கூடலழகப் பெருமாள் கோவிலுக்கு முன்பக்கமும் நிற்கும். வேகமாக நடந்தான். தேவி டாக்கிஸ் முன்னால் ரிக்‌ஷா பிடித்தான். “பஸ் ஸ்டாண்ட் பக்கம் போப்பா…” ரிக்‌ஷாக்காரன் ஹேண்டில் பாரைப் பிடித்து நின்றுகொண்டே பெடலை உன்னி உன்னி மிதித்தான்.

காற்று பலமாக வீசியது. ரிக்‌ஷாக்காரனுக்கு மூச்சு வாங்கியது. தெரு திரும்பியதும்தான் சட்டைப்பையில் பணமிருக்கிறதா என்று பார்த்தான். நல்லவேளையாக பணமிருந்தது. ஒருவேளை அவரைக் கண்டுபிடித்துவிட்டால் அவர் பின்னால்தான் அலைய வேண்டியிருக்கும். அவர் பஸ்ஸில் எங்காவது போனால் சமாளித்துவிடலாம், டாக்ஸி ஏதாவது பிடித்தால்தான் பணம் போதாது. சமாளிக்க வேண்டியதுதான். ரெபேக்காளிடம்  வீட்டுச்செலவுக்குப் பணம் இருக்கும். குழாய் பதிப்பதற்கோ எதற்கோ தெருவோரத்தில் நீளமாகத் தோண்டிக் கிடந்தது. பாதித் தெருவை தோண்டப்பட்ட மண் குவியல் தெரு முனை வரை அடைத்துக் கிடந்தது. இரண்டு பக்கமும் போக்குவரத்து ஊர்ந்து கொண்டிருந்தது. ரிக்‌ஷா தூக்கித் தூக்கிப் போட்டது.

அத்தியாயம் 5

சீதா பவனத்தில் சுப்பிரமணியப்பிள்ளை குளித்து விட்டுத் திருநீறு பூசிக் கொண்டிருந்தார். அவருடைய மூத்த மகன் செண்பகக் குற்றாலம் காலியாக இருந்த குளியலறைக்குத் துண்டைத் தோளில் போட்டுக்கொண்டு போனான். அடுப்பங்கரையைத் தாண்டிப் பின்னால் போனால்தான் குளியலறை. அதற்குப் பின்னால் சென்டரல் டாக்கீஸின் பின்புறச் சுவர் நீளமாக ஓடியது. குற்றாலம் அடுப்பங்கரையைத் தாண்டிப் போகும்போது இட்லி அவிகிற வாசனை வந்தது. சீதை அடுப்பின் முன்னால் உட்கார்ந்து ரப்பர் மர விறகைத் தள்ளிவிட்டுக்கொண்டிருந்தாள். பெரிய மருமகள் ராஜேஸ்வரி அம்மியில் சட்னிக்கு அரைத்துக் கொண்டிருந்தாள். சின்ன மருமகள் மீனாட்சி அடுப்பங்கரை நடையில் உட்கார்ந்து காபி குடித்துக் கொண்டிருந்தாள்.

மதுரையிலுள்ள ஒண்டுக்குடித்தன வீடுகளுடன் ஒப்பிடும்போது, அந்த அடுப்பங்கரையே, ஒரு குடும்பம் வசிக்குமளவுக்கு அவ்வளவு பெரியது. அதற்கு அடுத்து செவ்வகமான, பலசரக்குச் சாமான்கள், காய்கறி எல்லாம் போட்டு வைக்கும் அறைவீடு. அதையடுத்து இரண்டு பெரிய சதுரமான அறைகள். அதைத் தாண்டி நீளமான நடைகூடம். நடைகூடத்திலிருந்து மாடிக்குச் செல்லும் படிக்கட்டு அதன் வலது ஓரத்திலிருந்தது , நீளமான முற்றம். தெற்கு மூலையில் அடிபம்ப். முற்றத்தின் இரண்டு புறத்திலும் இரண்டிரண்டாக நான்கு போர்ஷன்கள். அவற்றை சுப்பிரமணிய பிள்ளை வாடகைக்கு விட்டிருந்தார். அந்த வாடகைப் பணத்தை சீதைதான் வாங்கிக் கொள்வாள்.

திருநீற்று மரவையை குத்துவிளக்கின் முன்னால் வைத்தார் சுப்பிரமணிய பிள்ளை. வலதுபுறமிருந்த ஷெல்ஃபிலிருந்து தேவாரப் புஸ்தகத்தை எடுத்தார். அவர் வழக்கமான உட்காரும் மனைப் பலகையைத் தேடினார். எப்போதும் அந்த அறையில்தான் சுவரோரமாகச் சாத்தியிருக்கும்.

“சீதை… உட்கார்ற பலகையை எங்க?”

“ஏங்கிட்ட கேட்டா?… நான் என்ன பலகைய இடுப்புலயா முடிஞ்சு வச்சிருக்கேன்?…” என்று இட்லியைத் தட்டில் தட்டிக்கொண்டே சொன்னாள். ராஜேஸ்வரி குழவியை அம்மியின் மீது நிறுத்திவிட்டுப் பின்னால் திரும்பி மீனாட்சியிடம், “மீனா!… மாமா பலகயத் தேடுதாஹள்ளா… அங்கதான் எங்கயாவது கெடக்கும்… எடுத்துக்குடு..” என்றாள். மீனாட்சி சட்டென்று எழுந்து தேடினாள். கதவோரமாகக் கிடந்தது. அதை எடுத்துக் கொண்டு போய் மாமாவிடம் கொடுத்தாள்.

அவருக்கு, எல்லாம் அந்தந்த இடத்தில் இருக்க வேண்டும். கடையிலும் அப்படித்தான். கவுண்டரில் நிற்கிற வேலையாட்கள்கூட இடம் மாறி நிற்கக் கூடாது. கட்டம் போட்ட சர்ட்டிங் துணிகளுக்கு அப்புறம்தான் ப்ளெய்ன் கலர்கள் இருக்க வேண்டும். மாறிவிடக்கூடாது. ஜமக்காளம், கொசு வலையை எல்லாம் மேலே அட்டத்தில்தான் வைக்க வேண்டும். குற்றாலம் குளித்து உடைமாற்றி விட்டு வரும்வரை தேவாரம் படிப்பார். பிறகு, அவரும் குற்றாலமுமாகச் சேர்ந்து விளக்குச் சரத்தை நறுக்கித் துண்டு போட்டு, குத்து விளக்குக்கும், சாமி படங்களுக்கும் போடுவார்கள். எட்டரைக்கு பூஜை செய்வார். சாப்பிட்டுவிட்டு அப்பாவும் மகனுமாக கடைச் சாவியை எடுத்துக்கொண்டு புறப்படுவார்கள். கடைக்குப் புறப்படும்போது சின்ன மகன் சோமுவைக் கண்டிப்பார். கடைக்கு வரச்சொல்லிவிட்டுத்தான் போவார். ஆனால், அவனாக இஷ்டப்பட்டுக் கடைக்குப் போனால்தான் உண்டு.

குற்றாலம் அப்பாவை அப்படியே நம்புகிறவன். அவர் சொன்னால் அதுதான் வேதவாக்கு. ஆனால், சோமு ரொம்பத் தன்னிச்சையானவன், நிறையப் படிப்பான். அவனுக்குத் திருமணமாகி மூன்று வருஷங்கள் ஓடிவிட்டன. ஆனால் குடும்ப வாழ்க்கை என்றால் என்னவென்றே அவனுக்குத் தெரியவில்லை என்றுதான் சுப்பிரமணிய பிள்ளையும், சீதையும் அபிப்பிராயப்பட்டார்கள். மீனாவும் விளையாட்டுத்தனமாகத்தான் இருந்தாள். இத்தனைக்கும், அந்தக் கல்யாணத்தை அவர்தான் விரும்பி முடித்து வைத்தார்.

கூத்தியார் குண்டுப்பிள்ளைக்கும் அவருக்குமான ஸ்நேகம் இன்று நேற்று ஏற்பட்டதல்ல. கூத்தியார் குண்டுப் பிள்ளையின் குடும்பத்துக்கும் ஸ்ரீ முருகன் டெக்ஸ்டைல்ஸ் சுப்பிரமணிய பிள்ளையின் குடும்பத்துக்கும் முப்பது முப்பத்தைந்து வருஷத்து உறவு. கூத்தியார் குண்டில் லெட்சுமண பிள்ளைக்கு வீடு நிலபுலன்கள் எல்லாம் வேண்டுகிற அளவுக்கு இருந்தன. வாரத்துக்கு ஒரு தடவையாவது லெட்சுமணபிள்ளைக்கு கூத்தியார் குண்டிலிருந்து மதுரைக்கு வந்து, சுப்பிரமணிய பிள்ளை கடையில் வெளியே ஸ்டூலைப் போட்டுப் பேசிக் கொண்டிருக்க வேண்டும். திருமங்கலம் போகிற கடைசி பஸ்ஸைத் தவறவிட்டுவிட்டால் சீதாபவனத்திலேயே தங்குகிறதும் உண்டு. ரொம்பப் பழகின இடம் என்றுதான் அவருடைய மூத்த மகள் மீனா என்ற மீனாட்சியை சோமுவுக்குக் கட்டி வைத்தார்.

எப்போதும் புஸ்தகமும் கையுமாக இருக்கிறவனை மீனா மாற்றிவிடுவாள் என்று அவர் நம்பினார். ஆனால், சோமுவின் புஸ்கப் பைத்தியம் மீனாவையும் பிடித்துக்கொண்டது. காலப்போக்கில், “சரி, இப்படியொரு மகனும் மருமகளும் இருக்கட்டுமே”, என்றுதான் சுப்பிரமணிய பிள்ளையும் சீதையும் முடிவு செய்ய வேண்டியதாயிற்று. கோபால் பிள்ளை தாத்தா வீட்டிலிருந்த மார்க்ஸிய நூல்களை எல்லாம் படித்து முடித்துவிட்டான். மாதம் தவறினாலும் அவன் புஸ்தகம் வாங்குகிறது தவறாது . போதும் போதாததற்கு அவனைப் போலவே புஸ்தகப் பைத்தியங்களான புரொபஸர் பாலகிருஷ்ணன், சபாபதி வீட்டிலிருந்தும் புஸ்தகங்களை வாங்கி வந்து படித்துத் தீர்த்தான்.

பெரிய மருமகள் ராஜேஸ்வரியை ‘ராஜி’ என்றுதான் சீதாபவனத்தில் எல்லாரும் கூப்பிடுவார்கள். அவள், மீனாவுக்கு நேரெதிர். அவளுக்கு வீட்டை விட்டால் வேறு எதுவுமே தெரியாது. எப்படி குற்றாலத்துக்கு கடையை விட்டால் வேறு உலகமே தெரியாதோ, அந்த மாதிரித்தான்.  அதிகபட்சம் அத்தையோடு கோவிலுக்கோ, சினிமாவுக்கோ போவாள். அத்தை, மாமா, புருஷன் மூவரும் கிழித்த கோட்டைத் தாண்ட மாட்டாள். அவளுடைய இயல்பே அப்படி.

அப்பாவும், மகனும் சாப்பிட உட்கார்ந்தார்கள். ராஜிதான் பரிமாறினாள். மீனாவும் ஒத்தாசை செய்வது போல் கதவருகே நின்று கொண்டாள். அந்த சாமர்த்தியமெல்லாம் மூத்த மருமகளுக்குச் சுட்டுப் போட்டாலும் வராது.

“சோமு என்ன பண்ணிக்கிட்டு இருக்கான்?…” என்று மீனாவிடம் கேட்டார்.

“யாரையோ பாத்துட்டு வாரேன்னு வெளியில போயிருக்காஹ…”

“அதுக்குள்ள இவ்வளவு காலையில எங்க போறான்?”

“அவுஹ சமாச்சாரமெல்லாம் யாருக்குத் தெரியும்?…” என்றாள் மீனா.

“சரி.. சரி.. வந்தான்னா குளிச்சு சாப்புட்டுட்டு கடைக்கு வரச் சொல்லு… அவன் கடைக்கி வந்து நாலஞ்சு நாளாயிட்டுது… ஏண்டா குத்தாலம், அவன் என்னைக்கிடா கடைக்கி வந்தான்?…” என்று பக்கத்திலிருந்த பெரிய மகனிடம் கேட்டுக்கொண்டே இட்லியைப் பிட்டு வாயில் போட்டார்.

“மூணு நாள் இருக்கும்ப்பா” என்றான் குற்றாலம். அவர்கள் சாப்பிட்டு முடிக்கப் போகிற நேரத்துக்கு, சீதையும் அடுப்பங்கரையிலிருந்து முகத்தைச் சேலை முந்தானையால் துடைத்துக் கொண்டே வந்து நின்று கொண்டாள். சிடி சினிமாவில் சபரிமலை ஐயப்பன் போட்டிருக்கிறான். மேட்னிக்குப் போக வேண்டுமென்பது சீதைக்கு ஆசை. அதை அவரிடம் கேட்கத் தயக்கமாக இருந்தது. அவரும் குற்றாலமும் சீக்கிரமாக வந்து மத்தியானம் சாப்பிட்டுவிட்டுப் போய் விட்டால் இரண்டரை மணி ஆட்டத்துக்கு மருமகள்களோடு போய் வரலாம்.

மீனாவைக் கணக்கில் சேர்க்க முடியாது. சில சமயம் வந்தாலும் வருவாள், “நான் வரலை அத்தை,” என்று சொன்னாலும் சொல்வாள். சித்தம் போக்கு சிவன் போக்கு. மனைவி நிற்பதை வைத்தே அவள் ஏதோ சொல்ல வருகிறாள் என்று புரிந்து கொண்டார சுப்பிரமணிய பிள்ளை. சாப்பிட்டு எழுந்து கை கழுவப் போகும்போது, “என்ன… என்னமோ யோசிக்கிறே?…” என்று சீதையைப் பார்த்துக் கேட்டாள்.

“இல்ல மத்தியானம் படத்துக்குப் போலாம்னு…”

“அவ்வளவுதானே?… போயிட்டு வாயேன்… நாங்க மத்தியானச் சாப்பாட்டுக்குச் சீக்கிரம் வரணுமா?…” என்று கேட்டுவிட்டு, குற்றாலத்திடம், “குத்தாலம்… நீ மொதல்ல சீக்கிரமா வந்து சாப்புட்டுருடா… அப்பன்னாத்தான் நீ சாப்புட்டுட்டு வந்தப்பறம், நான் வரச் சவுகரியமா இருக்கும்…” என்றார்.

அப்பாவும் மகனும் கடைச் சாவியை எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள். சீதை நினைத்தது போலவே மீனாவுக்கு அந்தப் படத்துக்குப் போகப் பிடிக்கவில்லை. தங்கம் தியேட்டரில் சாம்ஸன் அன்ட் டிலைலா போட்டிருக்கிறான். சோமுவிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்தாள்.

அப்பா குளிக்கப் போகும்போதே சோமு சட்டையை எடுத்துப் போட்டுக் கொண்டு கோபால் பிள்ளை தாத்தா வீட்டுக்குப் புறப்பட்டு விட்டான். காலை தினமணியில் ‘மேற்கு வங்காளத்தில் நக்ஸலைட் இயக்கம் வேகமாகப் பரவுகிறது’ என்ற செய்தியைப் படித்தான். போன வாரம் ஹிந்துவிலும் ஒரு செய்தி வந்திருந்தது. அதைப் பற்றி தாத்தாவிடம் கேட்க வேண்டும் என்று தோன்றியது. சௌராஷ்டிரா சந்துக்கும் தாத்தாவுடைய மேலமாசி வீதி வீட்டுக்கும் ஒன்றும் அதிகத் தூரமில்லை. போகிற வழியில் டவுன் ஹால் ரோட்டுக்கு எதிரே பாலு கடையில் ஒரு நல்ல காப்பி குடிக்க வேண்டும். வீட்டுக் காப்பி முன்பு போல் இல்லை. அம்மா காபித்தூளை மாற்றிவிட்டாளோ என்னவோ?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.