அதிர்ஷ்டசாலிகள்

விரைவுச் சாலையில் மழையில் மாட்டிக் கொண்ட போது
நேரம் மாலை ஆறு பதினைந்து
நில், முதல் கியருக்கு மாறு, மீண்டும் நில்
நாங்கள் எல்லாம் அதிர்ஷ்டசாலிகள், பணியிலிருப்பவர்கள்
வேறெதைப் பற்றியும் சிந்திக்க விரும்பாதவர்களாய்
வானொலியை எவ்வளவு முடியுமோ
அவ்வளவு சத்தமாக அலற விட்டிருந்தோம்
சிகரெட்டைப் பற்ற வைத்தபடி.

நாகரீக உலகின் பெரும்பாலான மக்கள்
ஒரு காலத்தில் மரத்திலும் குகைகளிலும் வாழ்ந்த மனிதர்கள்
இப்போது வாகனங்களில் அதுவும் சாலைகளில் வாழ்கிறார்கள்.

உலகச் செய்திகள் திரும்பத் திரும்பக் கேட்கப்படுகின்றன
பிரபலப் பாடல்கள், ராக் பாடல்கள், காதல் பாடல்கள்,
எல்லா வகைப் பாடல்களும்!
குறிப்பாகக் காதல் பாடல்கள், காதல் காதல் காதல்
நாங்கள் முதலாவது கியரிலிருந்து ந்யூட்டரலுக்கும்
மீண்டும் முதலாவதற்கும் மாறியபடி இருக்கையில்.

முன்னிருந்த சாலை வரிசையின் வேலியோரத்தில்
பரிதாபத்துக்குரிய ஒருவன் ஒதுங்கியிருந்தான்
தொப்பி தூக்கி நிற்க, செய்தித்தாள் ஒன்றை
மழைக்காகத் தலைக்கு மேல் பிடித்தபடி

மற்ற வாகனங்கள்
வலிந்து அவனது வாகனத்தை சுற்றிச் சென்று
அடுத்த வரிசையில் முண்டியடித்தன
அவர்களை நிறுத்த நினைக்கும்
மற்றவர்களின் வாகனங்களுக்கு முன்னால்.

எனக்கு வலப்பக்கம் இருந்த வரிசையில் ஒரு வாகன ஓட்டுநர்
ஒளிரும் சிகப்பு நீல விளக்குகள் கொண்ட காவலர் வாகனத்தால்
துரத்தப் பட்டுக் கொண்டிருந்தார்-
அவர் வேகமாகச் சென்றிருக்க வாய்ப்பேயில்லை

திடுமென பெருமழை ஆக்ரோஷமாக அலசிச் சென்றதில்
அத்தனை வண்டிகளும் நின்று போயின
சன்னலின் கதவுகள் மூடியிருந்த நிலையிலும்
எவருடைய க்ளட்சோ எரிவதை நுகர முடிந்தது

அநேகமாக அது என்னுடையதாக இருக்காது

சுவர் போலெழும்பிச் சுழன்றடித்த நீர் வடியவும்
நாங்கள் முதல் கியருக்கு மாறினோம்;
இன்னும் நாங்கள் எல்லோரும் வீட்டிலிருந்து வெகுதூரத்தில் இருக்கிறோம்
எனக்கு முன்னிருக்கும் வண்டியின் வடிவம் ஒரு நிழலாக என்னுள் பதிகிறது
கூடவே அதன் ஓட்டுநரின் தலையின் வடிவமும்.
மேலும் என்னால் பார்க்க முடிந்தது,
எஸ்.டி.கே 405, அவரது லைஸன்ஸ் எண்ணையும்,
அவரது வண்டி பம்பரில் ஒட்டப்பட்டிருந்த வாசகத்தையும்:
“இன்று நீ உன் குழந்தையை அரவணைத்தாயா?”

திடுமென சிறுநீர் கழிக்க வேண்டுமென்கிற உந்துதல் எழுகிறது,
நான் வசிக்குமிடத்திலிருந்து பதினேழு மைல்கள் தூரத்தில் இருக்கையில்.
வாய்விட்டு அலறத் தோன்றியது அடுத்து சுழன்றடித்து வந்த நீரைப் பார்த்து.
வானொலியில் இருந்த மனிதர் அறிவித்துக் கொண்டிருந்தார்
நாளை இரவு மீண்டும் மழை பொழிய எழுபது சதவிகித வாய்ப்புகள் இருப்பதாக.

~oOo~

மூலம்: the lucky ones by Charles Bukowski

சென்ற நூற்றாண்டின் மிகச் சிறந்த அமெரிக்கக் கவிஞர் எனக் கொண்டாடப்படும் ஹென்ரி சார்லஸ் புக்கோவ்ஸ்கி (1920 – 1994) , நாவலாசரியரும் சிறுகதை எழுத்தாளரும் கூட. ஜெர்மனியில் பிறந்தவர். தந்தை அமெரிக்கர். தாய் ஜெர்மனியைச் சேர்ந்தவர். இவரது சிறுவயதில் பெற்றோர் அமெரிக்காவில் குடி புகவும், அமெரிக்கராகவே வளர்ந்தார். கூடப்பிறந்தவர்கள் கிடையாது. குடித்து விட்டுத் தாயையும் தன்னையும் அடிக்கும் வழக்கம் கொண்ட தந்தையை எதிர்க்க, சோகத்தை மறக்க தானும் அதே பழக்கத்தில் விழுந்தவர். லாஸ் ஏஞ்சல்ஸ் சிட்டி கல்லூரியில் பத்திரிகைத் துறையில் பட்டம் பெற்றிருந்தாலும் பெரும்பாலும் விளிம்பு நிலை வேலைகளையேத் தொடர்ந்து பார்த்திருக்கிறார். இவரது எழுத்துக்களும் இவர் வாழ்ந்த லாஸ் ஏஞ்சல்ஸின் சமூக, கலாச்சார, பொருளாதார நிலைமைகளைப் பிரதிபலிப்பதாகவே உள்ளன. ஆறு நாவல்கள், ஆயிரக்கணக்கான கவிதைகள், நூற்றுக்கணக்கான சிறுகதைகள் யாவும் சுமார் அறுபதுக்கு மேலான புத்தகங்களாக வெளியாகியுள்ளன. அனைத்தும் அமெரிக்க விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கைப் போராட்டங்களை மையமாகக் கொண்டவை.

தமிழாக்கம்: ராமலக்ஷ்மி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.