நீர் பிம்பத்துடன் ஓர் உரையாடல்

விட்டத்தின் மரச்சால்கள் குவிந்து கிடந்த அம்பாரத்துள்ளே சின்னதான ஒரு விரிசல் வழியே புது வெள்ளம் மெதுவாக உள்நுழைந்து ஊறியதில் நைந்துப் போன வர்ணக்குழை ஓவியம் நான். ஆயிரம் கதைகளை ஒரு ஓவியம் சொல்லிவிடுமாம். நானும் அப்படிப்பட்ட ஒரு ஓவியம் தான். முற்றிலும் அமைதியாக இருக்கும்போது கேட்கும் சின்னஞ் சிறு சத்தங்களுக்காக உன்னிப்பாகக் கவனித்தவாறு பல வருடங்களாக இருந்துவந்த ஓவியம்.

சிறுவனின்  நீலநிற காலணி முழு தீர்க்கத்தை இழந்து வெளிரும் தருவாயை அடைய அதிக நாட்கள் ஆகவில்லை. நானும் இன்னும் சில தினங்களில் வர்ணங்களில்லாமல் ஆகிவிடுவேன். முழுதும் காலியாகிக் கிடப்பதன் சுகம் என்னெவென்று அறியப்போகிறேன். வர்ணங்கள் இல்லாமலாவதால் நான் ஓவியம் இல்லை என்றாகிவிடுமா எனத் தெரியவில்லை. தெரியாததைப் பற்றி நமக்கு ஒன்றும் தெரியாமலிருப்பதும், தெரிந்ததை முழுவதுமாகத் தெரிந்ததாக நினைப்பதும் ஒன்றுதான். உண்மை என நாம் அறிவதின் மீதான விசாரம் அல்ல என் கதை.  படத்தில் இருப்பவர்கள் மட்டுமல்ல இல்லாதவர்களின் கதையும் இதில் உண்டு; சொல்லமுடியாமல் போனவைகளும். கரைந்துகொண்டிருக்கும் என் நினைவில் எஞ்சியிருக்கும் மேலோட்டமான உண்மைகள். அவற்றில் எது சரி? எது தவறு என்பது ஒரு ஆய்வாளனின் கேள்வியல்ல. ரத்தமும் சதையுமாக இதைப் பார்த்தவர்களால் கூடச் சொல்லமுடியாத தர்க்கங்கள் அடங்கியது எனும்போது இதை இப்போதைக்கு தத்துவத்தின் கேள்வி என விட்டுவிடலாம்.

 

நிர்மூலமாக்கும் சூறாவளியை சந்திப்பது இது எனக்கு நான்காம் முறை. புதுச்சேரி லே போர்த் வீதியின் மத்தியில் கிரேக்க நாட்டு அதீனாவின் முழு உருவச்சிலையை நிறுவி அவளது தலை, இடுப்பு மற்றும் கணுக்கால் பகுதியிலிருந்து அழகிய நீரூற்று வருமாறு வடிவமைத்த பிரெஞ்சு குதிரைப்படையின் முன்னாள் தலைவர் அலக்ஸான்றா தெப்போனேவின் முன்னறையில் கடற்காற்று கடுமையாக வீசினாலும் ஆடாது நிற்பதற்கான கனமான இரும்பு நாதங்கிகளையும் அதைவிட கனமான பர்மா தேக்கு மரச் சட்டகத்தையும் ராணுவ மெடல் போலத் தாங்கி கம்பீரமாக வீற்றிருந்தேன். அப்போது ராபர்ட் க்ளைவ் ஆட்டத்தைத் தாங்கமுடியாது வெர்சயி மாளிகையில் புதுச்சேரி மெத்ராஸ் பட்டிணங்களைக் கூறுபோட்டு பத்து ஆண்டுகள் கூட ஆகியிருக்கவில்லை. 1820ஆக இருக்கலாம். பிரெஞ்சுக்காரர்கள் சொல்வது தான் சட்டமாக ஆகியிருந்தது. நான் பெருமிதத்தின் உச்சியில் இருந்தேன். காரணமில்லாமல் இல்லை. கவர்னர் மாளிகை, ஆண்டனியட் ராணி கோபுர மாளிகை, துறைமுக சுங்கவரி காரியாலயம், பாகூர் அடைவைத் தாண்டி இருந்த கோடை வாசஸ்தலமாகிய பெத்தி மேசான் மாளிகை என எங்குமே என்னை விட அழகான ஓவியங்கள் கிடையாது. எனக்கெப்படி தெரியும்? என்னைத் தூரத்திலிருந்து பார்பவர்கள் காண்பவர்கள் நானென்னவோ பலாச்சுளை போல தங்கள் பெரிய விழிகளால் விழுங்குவது போலப் பார்க்கும்போது அவர்களது வாய் தன்னிச்சையாக சொல்வதைத்தான் நானும் உங்களிடம் திரும்பச் சொல்கிறேன்.

மத்தபடி நான் கண்ணாடியில் கூட என்னைப் பார்த்ததில்லை. இல்லை, இது முழுமையான உண்மையும் அல்ல. மிஸ்ஸே தெப்போனேவின் பெரிய மகள் சந்திரநாகூரின் சின்ன இளவரசரைத் திருமணம் செய்யப்போகும்போது நான் சென்ற நீண்ட வண்டியில் ஒரே ஒரு அரைவிநாடி, சின்னதாக என் தோற்றத்தை நான் ஜன்னல் பிம்பமாகக் கண்டேன். மிஸ்ஸே தெப்போனேவின் அம்மா மதாம் ரோஸ், மேடான வயிற்றில் சுற்றிய பட்டுத்துணியைக் கையில் சுருட்டியபடி சோகை படிந்த கண்களோடு கடலின் முடிவின்மையை உற்றுப்பார்க்கும் மதாம் விவிலியா, புறாவுக்கு தானியங்கள் ஊட்டும் செழுமையான விரல்களை உடைய இளைய பிரின்ஸ் ப்ரையன், பிரின்ஸின் உயரத்துக்கு ராணுவ வீரன் போல எட்டி நிற்கும் பளபளவென பழுப்பு நிறக் கண்களுடனான டாபர்மேன் லையான் என ஐந்தடிக்கு ஐந்தடி இருந்த என்னை நான்கு மலபாரிகள் ராஜாவின் தலைப்பாகையைக் கையாளும் சிரத்தையுடன் ரயிலுக்குள் ஏற்றினர். அந்த கணநொடி பார்த்துக்கொண்டதை இப்போதுவரை துல்லியமாக நினைவு கொள்ள என்னால் முடியும். ஹாங்காங், கைரோ, பிரித்தானி எனப் பல இடங்களுக்குக் கைமாறியிருந்தாலும் முதன்முதலாக என்னைப் பார்த்தது இன்னொரு புகைப்படம் போல என்னுள்ளே சிக்கியிருக்கிறது. கிட்டத்தட்ட பிரின்ஸ் ப்ரையனின் கொழுக்கென இருக்கும் கண்ணத்தைத் கன்னத்தைத் தொட்டுவிடும் தூரம்; லையானின் சூடான மூச்சுக்காற்றையும் வாயிலிருந்து வழிந்த உமிழ்நீரும் ஸ்பரிசித்துவிடும் தூரம்; மதாம் விவிலியாவின் விம்மும் மார்பகங்களில் அமிழ்ந்துவிடும் துயரத்தின் ஆழத்தை எட்டிவிடும் பாய்ச்சல்; ராஜா தெப்போனோவின் அகத்தில் தெரியும் நிலத்தை வென்றெடுக்கும் வெம்வெறியில் பெருவெறியில் பொசிங்கிவிடும் பொசுங்கிவிடும் தூரம்.

விளையாட்டாய் கடந்து சென்ற முப்பது வருடங்களில் சலனமேறிய கண்களுடன் என்முன்னே மதாம் விவிலியா நிற்காத நாளில்லை. புகைப்பட ஆரத்தின் வடிவங்களின் மீது தனது நீண்ட மெல்லிய விரல்களால் தடவும்போது என் கண்கள் விழிப்பதை அவள் கண்டுகொள்ளும் நாட்கள் அதிகம். அந்த ஒரு பரிவர்த்தனைக்காகவே அவள் வருவதாக உணர்ந்திருந்தேன். சந்திரநாகூர் செல்லும்வரை இந்த ஸ்பரிசத்துக்காகவே நான் ஜனித்திருந்தாகப்படும். பிரின்ஸ் ப்ரையனின் கண்களைத் தொட்டுத்தடவும் அவளது விரல்களில் விரல்கள் தன் வயிற்றின் மீது படரும்போது ஒரு நடுக்கத்தை உணரமுடியும். சூடிக்கொள்ள இயலாத புகைப்படப் பூக்களை அவள் நுகரும் தருணங்கள் அவளது மனதின் துடிப்புகள் பேரிறைச்சலோடு என் மீது பாயும். பேரன்பும் பெருங்கருணையும் உள்ள மக்தலீன், உந்தனக்கு என் உயிர் காணிக்கையாகிக் கொள்ளும்.

உப்புக்காரத் தெரு விருந்துக்கு வந்திருந்தபோது அவரோட கீறிப்பிள்ள மீசையைப் பார்த்து பயந்திருந்தாலும் அது மேல ஒரு பிடிப்பு வர மேசான் காவலாளி நயினாப்பிள்ளையும் ஒரு காரணம். அமாவாசை நிறம். மீசைக்கொத்தை முறுக்கிவிட்டால் புருவத்தோடு சேர்த்துக்கட்டிவிடும் கரிய கொத்து. அத்தனை இளகிய மனசுக்காரர். கையில் வாளோடு வாசலில் நின்றிருப்பவர் ராஜா வரும் நேரம் ராணுவ வீரர் போல கைகால்களை சேர்த்து விறைப்பாக சல்யூட் அடிப்பார். பாகூர், ஏனாம் கூட்டம் வேடிக்கைப் பார்க்க வரும். அதில் நயினாப்பிள்ளைக்குப் பெருமை என்றாலும் அதைவிட என்னைத் தினமும் ரெண்டு முறை தூசிதட்டவிட்டதில் அதிகப்பெருமை. அதைவிட அவருக்கு இந்த வாய்ப்பு வந்த நாளை அவர் ஒருவரிடமாவது சொல்லாமல் இல்லை.

எல்லைபிள்ளைச்சாவடியிலிருந்து சுருட்டும், தீவினங்களும் ஏற்றிவந்த குதிரை சாரட்டுகள் களைத்து ஓய்வெடுத்த நேரம். பட்ட இடத்தையெல்லாம் உருக்கி ஆவியாக்கிக் கொண்டிருந்தது அக்னி நட்சத்திர வெயில். உப்புக்காற்று பட்டு துருப் பிடித்த ஜன்னல் நாதாங்கிகள் ரகரசத்தம் போட்டபடி அனல்காற்றில் ஆடின. அந்த சத்தத்தை விட அதிக சத்தம் வாசலிலிருந்து எனக்குக் கேட்டது. சந்தை நேரம் கூட இல்லை. வாக்குவாதம் போல கூச்சல். பூமி பிளந்துபோனாலும் நயினாப்பிள்ளை அவரது இடத்திலிருந்து நகரமாட்டார். வேலையில் அத்தனை கணக்கு. கண்கள் மட்டும் பக்கவாட்டில் துடுப்பு போட்டபடி இருந்தது.

சந்தடி கேட்டு ராஜா மாடியிலிருந்து எட்டிப்பார்க்க கூச்சல் அடங்கியது. அடங்கிய குரலில் விண்ணப்பமும் அதிர்ந்த கர்ஜனையாக ராஜாவின் ஒற்றை வார்த்தை பதிலும் கேட்க நயினாப்பிள்ளை வழிவிட தலைப்பாய்த் தலைகளோடு ரெண்டு வியாபாரிகள் நுழைந்தனர். என்னைப் பார்த்து ஒருவன் கண்காட்ட மற்றொருவன் கண்கள் விரிந்தது. அப்போது என் தலைப் பதுக்கத்தில் தஞ்சாவூர் சிற்பத்தின் தோகை மயில் கண்களில் ரத்தினங்கள் பதிந்திருக்கும். ஆண்டு 1805.

மூன்றாவதாக ஜெசூயிஸ்ட் பாதிரி ஒருவரும் உள்ளே நுழைந்தார். நயினாப்பிள்ளையைக் கடக்கும்போது அவர் உணர்ந்த மருந்து நெடியை என் அருகில் வந்ததும் நானும் கண்டு கொண்டேன். நான் கண்டதும் கேட்டதையும் சொல்கிறேன் என்றாலும் ஜனங்களின் உடல்மொழி அனைத்தையும் அறிந்திருக்க மாட்டேன் என்பதையும் ஒத்துக்கொள்ளத்தான் வேணும். வியாபார நிமித்தமாக வந்திருந்தாலும் அவர்களது நடவடிக்கையில் கள்ளம் இருக்கக் கண்டேன். நான் தயாராக இருந்தாலும் என்னால் பெரியதாக என்ன செய்துவிட முடியும்? நயினாப்பிள்ளை ரெண்டு முறை முன்னறையைப் பார்க்கத் திரும்பியபோது என்னைப் பார்த்தார். அவரது பெரிய மீசை, கம்பளி புருவம் மத்தியிலிருந்து கண்கள் விரியப் பார்த்தார். அவரது கைவிரல்கள் ஈர்க்கம்பியை இறுகப்பற்றியிருக்கத்தான் செய்தது. தயாராக இருந்தார் என்றாலும் அவராலும் என்ன செய்துவிட முடியும்?

பத்து நிமிடங்கள் எவ்விதமான பேச்சுச் சத்தமும் இல்லாமல் கழிந்தன. மூவரும் சேதுபதி சிலை போல இறுகிய முகத்தோடு உட்கார்ந்திருந்தனர். வியர்வை வழிந்த கரிய கன்னங்களில் பதற்றம் ஒட்டியிருந்தது. அவர்களுக்கும் அறைக்கும் தொடர்பற்றவற்றவர்களாக இருந்தனர். காலடியில் இறக்கி வைத்திருந்த கூடையில் இறுகக் கட்டிய வெள்ளை மூட்டைகள் இருந்தன.

“மோன் அமீ, பியான் வெனியூ, பியான் வெனியூ”, எனப் பூரிப்பான முகத்தோடு ராஜா வரவேற்றார். மூவரும் எழுந்து நின்று தலை வணங்கி சல்யூட் அடித்தனர்.

“வகான்ஸ் நல்லா போச்சா ராஜா”, மூத்தவராகத் தெரிந்த பாதிரி அவரிடம் கேட்டார்.

“உய். கிராண்ட் ஃபேத் ஒண்ணு வெச்சிருக்கு”

“அதுக்கென்ன ராஜா, பாகூர் தென்னந்தோப்புக்கு கிழக்கால கிடக்கிற நிலத்தில் ஃபேத் செயலாம்.”

“போன்..செய்யலாம். சந்திரநாகூரிலிருந்து புது சரக்கு வந்திருப்பதாகச் செய்தி வந்ததே. கப்பல் வருவதே அன்னிவர்சேர் மாதிரி ஆகிப்போச்சு”, அவர் குரலில் உண்மையான வருத்தம் தெரிந்தது.

“ஆம் ராஜா, தேசிங்கு ராஜா இறந்ததும் நானூறு பகோடாக்களுக்கு வாங்கிய திந்திரியம் முட்காடுங்க முழுக்க இன்னிக்கு பீக்காடுகளா, பெரிய சகதிக் குளங்களா கிடக்கு. அதைச் சரிசெஞ்சா சந்திரநாகூரிலிருந்து கப்பல் வரக்காத்திருக்க வேண்டாம்னு விண்ணப்பஞ்செய்ய வந்திருக்கோம்.. ஏம்பலப்பள்ளத்தில் நாற்பது குடும்பங்க இத நம்பித்தான் இருக்கு.”

புகையிலைக்கட்டு, மலைச்சீனி, தேமாவுக்கு உப்புக்கண்டம் எனச் சிறு சுருளைகளை கூடையிலிருந்து எடுத்து வரிசையாக பச்சை சலவைக்கல் மேஜையில் வைத்தனர்.புகையிலைக்கட்டை முகத்துக்கு முன்னே ஆடவிட்டு வாசனையை முகர்ந்த ராஜா, “ஏம்பலப்பள்ளத்த செப்பனிடச்சொல்லி கும்பனிக்கு எழுதறேன்”, என மூச்சை இழுத்துவிட்டார். அவரது செய்கையில் மூவரும் பரவசமடைந்தனர்.

“சாமி புண்ணியம்”, என எழுந்த பாதிரி என் தலைக்கு மேலே இருந்த மரத்தாலான லூர்த்து மாதாவைப் பார்த்து காற்றில் சிலுவை இடுக்கோலம் போட்டார்.

அந்த நாளில் அடுத்து நிகழ்ந்தவற்றை வரிசைகரமாகச் வரிசைக்கிரமமாகச் சொல்ல முடியாது. அக்னி நட்சத்திர வெயிலின் தீவிரம் குறைந்தபோது நயினாப்பிள்ளை கணுக்கால் கடுக்க நின்ற நிலையை மாற்றி நின்றபோது தேக்கு மரங்களைத் தாண்டி ராஜாவின் அம்மா ஏறிப்போவதை நான் பார்த்தேன். அடுத்த நொடியில் ராஜாவும் ஃபதாமி பீவியும் கிட்டத்தட்ட சூறாவளி வேகத்தில் படிகளைத் தாண்டி வந்து என் முன்னே நின்றனர். அமிலக்கரைசலை ஊற்றியதுபோல என் பின்புறம் சில்லிட்டு நடுங்கியது.

“அந்த மூணு வியாபாரிங்களாத்தான் இருக்கணும்.. நயினாப்பிள்ள ஹேய் நயினாப்பிள்ள”, என ஃபதாமி பீவி உருதுவில் கத்தும்போது என்னை வேலையாட்கள் கீழே படுக்க வைத்திருந்தார்கள். இறக்க மாட்டாது கிடப்பவனைப் பார்ப்பது போல என் மீது அனைவர்களது பார்வையும் சுற்றிப்படிந்திருந்தது. சலவைக்கல் மேஜையை கஷ்டப்பட்டு நகர்த்தினார் நயினாப்பிள்ளை. அறையின் ஓரத்தில் நின்றிருந்த ஆளுயரக் கண்ணாடியை இருவராக அசைத்துத் தள்ளினர்.

நான் அடிபட்ட மிருகம் போல சுற்றி நடப்பது அறியாது கிடந்தேன். என் மீது கோபமும், வெறுப்பும், எரிச்சலும் கொண்ட பார்வைகள். திடுமென தனியாகக் கிடக்கவிடப்பட்டவன் போல அனைவரும் சிதறி மூலைக்கு ஒன்றாகப் பிரிந்துவிட்டு மீண்டும் கையைப் பிசைந்தபடி என்னைச் சுற்றி நிற்பர். இதற்குள் நான் நான்கு முறைக்கும் மேலாகத் திருப்பப்பட்டேன், எண்ணிக்கைத் தெரியாத முறை உலுக்கப்பட்டேன்.

“இல்லை மிஸ்ஸே. பாகூருக்குக் கிளம்பிப் பார்க்கிறோம். ஐந்து காவலாளிகளை அனுப்புங்கள்”, என்றார் ராஜாவின் ஆலோசகர்.

“மரகதம் பொருந்திய பெரிய கல், நம் காவலையும் மீறி எப்படி காணாமல் போயிருக்கும்? தில்லி சுல்தான் கொடுத்த பரிசைத் பிறர் தொடர்விடாமல் வைத்திருந்தோமே. கிழட்டு நயினாப்பிள்ளை. கண்ணைப்பிடுங்கி கடலில் எறியவேணும் உன்னை..”, எனக் கொதித்துக் கத்திய ராஜா குதிரை சவுக்கை எடுத்து நயினாப்பிள்ளையை விளாசினார்.

“மிஸ்ஸே, மிஸ்ஸே”, வேறேதும் பேசத்தெரியாது தரையில் விழுந்து கிடந்த நயினாப்பிள்ளை கண்கள் அதிர்ச்சியில் சிவந்திருந்தன. கண்ணீர் முகத்தை முழுவதுமாக நனைத்திருந்தது. மிஸ்ஸே, அய்யா எனும் வார்த்தைகளைத் தாண்டி அவரால் எதையும் சொல்ல முடியவில்லை. சிவப்புக் கோடுகள் காய்ச்சிய இரும்புக்கம்பித் தடம் போல சிவந்திருந்தது. வாயைப் பொத்தி இருந்தாலும் வலியில் முனகிக் கிடந்தார். சிங்கம் போல ராஜா உலாத்தும் இடங்களுக்கு ஈடுகொடுக்க நகர்ந்தவர் என் மீது கால்பட்டதும் பதறி உடல் உதற நகர்ந்தார்.

“திருட்டு நாய்ங்க..”, எனக் கத்தியபடி பித்து பிடித்தவர் போலச் சுற்றிய ராஜா நாலு குதிரை வண்டிகளைப் பூட்டி லெபோத்தனே மாளிகையில் இருந்த வேலையாட்கள், காவலாளிகள் அனைவரோடும் பாகூர் பள்ளத்துக்கு விரைந்தார்.

பிறகு நடந்ததை நயினாப்பிள்ளையும் குதிரை மேய்ப்பாளனும் பேசும்போது அறிந்ததுதான் நான். புழுதி பறக்க இருளைப் பாராது குதிரைகள் பாகூர்பள்ளத்துக்குள் நுழைந்தபோது ஊர்ஜனங்கள் ராத்தூக்கத்தில் இருந்தன. பள்ளம் முழுவதும் சேர்த்தால் ஐம்பது குடிசைகளும், செஞ்சி சந்தையைப் பார்க்க வந்திருந்த பாகூர்க் காரக்கூட்டமும் நிரம்பியிருந்தது. அடுத்த ரெண்டு மணி நேரத்தில் அங்கிருந்த ஆம்பிளைகள் அனைவரும் பனைமரத்தொப்புக்கு இழுத்து வரப்பட்டனர்.

பாதிக்கும் மேற்பட்டோருக்குத் தூக்கம் களையவில்லை. வெளியே வர மறுத்த இளைஞர்களது குடும்பங்களின் பெண்களது கலைந்த கூந்தலைப் பிடித்து இழுத்து வந்தனர். விடாப்பிடியாகப் போராடிய பெண்களின் குழந்தைகளது ஒற்றைக் கால்களைப் பிடித்து தலைகீழாகத் தூக்கி வந்தனர். சில குழந்தைகள் அப்போதும் தூக்கம் கலையாது அம்மாவின் முலையைக் காற்றில் துழாவ எக்கின. திடுமென எழுப்பப்பட்ட குழந்தைகள் அப்பாவின் காலென நினைத்து காவலாளிகளின் உடுப்பைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டன.

பனைமரத்தோப்பில் கதறலும் அழுகையும் எதிரொலித்தன.

முரண்டுபிடித்த இளைஞர்களின் கைகள் கசைகளால் கட்டப்பட்டு பனைமரத்தோடு பிணைத்தனர். வயதானவர்கள் செய்வதறியாது ராஜா மற்றும் அவர்களது சேவகர்களின் கால்களைக் கட்டிக் கதறினர்.

இத்தனையும் நடக்கும்போது ராஜாவிடம் அடிவாங்கிய நயினாப்பிள்ளையும் கூட்டத்தின் ஓரத்தில் காவலாளிகளோடு நின்றிருந்தான். முதுகுத்தோல் விரிசல் விட்டு ரத்தம் வழிய நின்றிருந்தவன் பெரிய நெய்ச்சட்டியைக் கையிலெடுத்தான்.

அடுத்த ரெண்டு மணிநேரத்தில் விடிந்தது போல பள்ளத்தில் வெளிச்சம் பாகூர் முழுவதையும் நிரப்பியது. முதல்முறையாக பள்ளத்தின் வெளிச்சம் மேட்டுக்கூரைகளின் மீது படுவதைப் பார்த்ததாக நயினாப்பிள்ளை சொன்னதை நினைத்துப் பார்க்கிறேன். எப்பேர்ப்பட்ட காட்சியாக இருந்திருக்கும்?

மடமடவென காரியங்கள் நடந்தன.

மூன்று வியாபாரிகளையும் கண்டுபிடிக்காவிட்டாலும் விடியுமுன் ஏம்பலத்தில் கும்பனி ஆட்கள் பாகூர் வாசலைக் கடக்கும் இரு வியாபாரிகளைப் பிடித்து அடித்து விசாரித்ததில் ஒருவர் வைத்திருந்த புகையிலை மூட்டைக்கு நடுவே நகை கிடைத்தது. கூடவே மயிலின் கண்ணில் பதித்த ரத்தினங்கள்.

அதற்குள் பள்ளத்தில் வாழ்ந்த எழுபதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கொல்லப்பட்டனர். தூக்கம் முழுவதுமாகக் கலைந்து தகப்பன்கள் இறந்ததைப் பார்த்த அதிர்ச்சியோடு முப்பது குழந்தைகளின் கைகளும் அறுபட்டன. நவாபின் காவலாளிகளைக் கொண்டிருந்த ராஜாவுக்கு தினவு அடங்காது குடிசைகளைத் தீ வைப்பதோடு தோட்டங்களையும் வெட்டிச் சாய்த்தனர். அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகத் திரண்டிருந்த கூட்டம் இன்று ஆங்காங்கே ரத்தத்தில் சிதறிக் கிடந்தது.

விடிந்தது.

பள்ளன்குளத்தின் பீக்காடுகள் மண்டிக் கிடந்த தாழ்ந்த பகுதி அடுத்த இரு நாட்கள் முழுவதும் பிணக்காடாக மாறியது. நூற்றுக்கும் மேற்பட்ட ஆடு மாடுகளை ஓட்டிக்கொண்டு சென்ற கும்பனியர் அடுத்த ஒரு வாரத்துக்கு உப்பளம் கும்பனி அலுவலுகத்தில் கறி விருந்து நடத்தினர். லா போனியாதே கப்பலில் வந்த சாராய மொந்தைகளில் பாதிக்கும் மேல் உப்பளத்துக்கு அனுப்பிவிட்டன. ராஜாவின் மேற்பார்வையில் கும்பனியரின் ஒரு வாரக் கொண்டாட்டம் நடந்ததால் துரைத்தனத்தாரின் காதுகளுக்குப் போகாமல் இருக்கும் பொறுப்பு தமிழ் துபாஷிகளிடம் விடப்பட்டிருந்தது. உள்ளூர் துபாஷி வெங்கடசாமி நாடாருக்குத் தனி கவனிப்பும் உண்டு என நயினாப்பிள்ளை சொன்னபோது அவரது கண்கள் தழுதழுத்து வார்த்தை வெளிவராமல் தவித்தார்.

“சுண்ணாம்பு கரைசலை ஊத்திவிட்டு அடுத்த நாளே வந்துட்டேன்”, நயினாப்பிள்ளை தயிர்க்காரியிடம் சொன்னார்.

என்னை சந்திரநாகூருக்குக் கொண்டுசெல்லும்வரை நயினாப்பிள்ளை முதுகில் தெரிந்த ‘ய’ வடிவ பாளமான விரிசலை பார்த்தபடி இருந்தேன். இறுகக்கட்டிய சணல் முடிச்சு போல முதுகில் அவரது பிளவு சுருங்கி விரியும்போதும் உச்சி வெயிலில் வியர்வைக் குளமாக கழுத்திலிருந்து வழிந்து நின்று நிதானமாக குளம் கட்டி பின்னர் போதுமான அளவு சேர்ந்ததும் தனது கீழ் நோக்கிய பாதையில் செல்லும்போதும் அசையாமல் நின்றிருக்கும் அவரது முதுகு சிலிர்த்து அடங்கும்.

ராஜாவின் மேசன் அடுத்த நாளே சகஜ நிலைக்கு வந்தது. பீவி பிரசவத்துக்கு குயவப்பாளையம் ஷாகாவுக்குச் செல்ல, ராஜாவின் மூத்த ராணி வந்தார். பாதி வயிற்றோடு போனவள்  வெறுங்கையோடு திரும்பியிருந்தாள். சந்திரநாகூரிலிருந்து வந்ததும் ராஜாவுடன் ஆக்ரோஷமான சண்டை தொடங்கியது. “இதோடு சரி, பியூ மா பியூ”, என மன்றாடிய ராஜாவை அவள் மன்னிப்பதாகத் தெரியவில்லை. மீனின் சிறு வாயைக் கொண்டவள் நிலம் அதிரக் கத்துவாள் என நான் நினைத்திருக்கவில்லை. மேலும் கீழும் மரப்பலகைகளின் கிறீச்சிடல் கேட்டன. பாகூர் சாவுகளின் பாவம் தன் குழந்தையைப் பாதித்துவிட்டது எனத் திடமாக நம்பினாள். நயினாப்பிள்ளை முதுகை மறைத்து வாசலில்  நின்று கடலைப் பார்த்து நின்றாள். அவளது மெல்லிய முதுகை மறைத்திருந்தும், இளம் வளைவுகளைக் காட்டி நின்றது உடுப்பு. உள்ளொடுங்கிப்போன முதுகும், ஜடாமுடி வடிவத்தில் எழும்பியிருந்த வடிவமும் அவளை உயரமாகக் காட்டின. மூச்சு வாங்க நின்று கொண்டிருந்தாள். நயினாப்பிள்ளையின் முதுகைப் பார்த்து விம்மினாள் போலிருந்தாள்.

“மருத்துவச்சியக் கூப்பிடவா?”, என அமுங்கிய குரலில் அவள் பேசியது கேட்டது. என்ன சொல்வதென்று தெரியாது நின்ற நயினாப்பிள்ளை, ராஜாவைப் பற்றி நினைத்தாரோ என்னவோ, “வேணாம் மதாம் வேணாம்”, என வேகமாக மறுத்தார்.

“ஒண்ணா சாப்பிட்ட சமையக்காரங்க கூட என்னை சந்தேகப்பட்டு விலக்கி வெச்சாங்க மதாம். எம்மேல சந்தேகம் வராத வரைக்கும் உங்க விசுவாசத்துக்கும் ராஜாவின் பெரிய மனசுக்கும் என் குடும்பமே கடன்பட்டிருக்கு மதாம்”, எனக் கண்ணீர் வகுத்தார்உகுத்தார்.

அப்போதுதான் அவள் சொன்னாள், “சாப்பாட்டுக்கான விசுவாசமும் நேர்மையும் உனக்கிருக்கு நயினாப்பிள்ள. இனி நீ உள்ள வந்து இந்த அறை முழுக்க எதையும் தொட்டு தொடைக்கலாம். யாராவது கத்தினா நான் சொன்னேன்னு சொல்லு, அதுக்கு முன்ன அவங்க சொல்றதைக் கேக்காத, என்ன?”, ராணியை வரவேற்கும் பாணியில் வழிவிட்டு அவரை உள்வரச்சொன்னாள்.

என் மீது பட்டும் படாமல் துடைக்கத் தொடங்கும்போதே அவரது கண்ணில் நீர்த்தாரைகள் மறைக்கத் தொடங்கின. முழுவதும் தூசி தட்டுவதற்குள் அவரது அழுகை கேவலாக மாறி, மண்டியிட்டார். மண்ணில் தலை வைத்து குலுங்கி அழுத எழுபது வயதான நயினாப்பிள்ளையின் தோளைத் தொட்டு ஆதூரமாகத் தடவி நின்ற பத்தொன்பது வயது ராணியின் சித்திரம் நேற்று நடந்ததுபோல பளிச்சென நினைப்பிருக்கு.

ஒவ்வொரு நிறமா அழிந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில் அந்த சித்திரம் மட்டுமே நான் வாழ்ந்த நூறு வருடங்களின் முக்கியமான தருணமாக இருக்கிறது. சில நொடிகள் மட்டுமே. அன்றிலிருந்து ராணியைத் தவிர நயினாபிள்ளையும் என்னில் இருந்த மனிதர்களோடு உறவாடத் தொடங்கிவிட்டார்.

**

சந்திரநாகூரில் ராணியின் வீட்டில் வைத்து என்னை வரைந்தனர். ராணியின் முகத்தில் அன்று தெரிந்த சிரிப்பை வேறெப்போதும் பார்க்கவில்லை. அன்று பூத்த ரோஜா நிறத்தில் நீளமான கீழுடுப்பும், மஞ்சள் சரிகையில் வங்க பருத்தியில் நெய்த மேலாடையும் அணிந்திருந்தாள். அப்போது உரித்த இளம் மாதுளையின் வாளிப்பில் அவளது கன்னம் பளபளத்தது. காலங்காலமாக காற்றும், மழையும், மணலும், உக்கிர வெயிலும் நடமாடிய நிலத்தில் அமிர்தவர்த்தமாக அவள் வந்ததாக சந்திரநாகூர் மக்கள் நினைத்தனர். அவள் புது நெற்கதிர்களைத் தொட்டுத் தர வேதம் ஓதும் பிராமணர்கள் சூழ முதல் நாற்றை நட்டனர். வங்கப் புயல் ஓய்ந்த மாதத்தில் மீன்வலைகளை அவள் எடுத்துத்தந்தப்பின் மீனவர்கள் கடலுக்குள் சென்றனர். அவளது எதிரொலி கடைசி சொல்லாக இருந்தது.

நடு நெற்றியில் நரம்பு புடைத்துக் கிளை பிரிந்து கத்தியபடி வர்த்தகமும் அதிகாரமும் செய்துவந்த அவளது அப்பா அதுவரை இல்லாத அமைதி ஆதரவு அடைந்தார். இதன் காரணம் நானும் விசேஷ அந்தஸ்து பெற்றேன். வெனீஸ் நகரத்தின் பூக்கோலம் கொண்ட ரியால்டோ பாலம், நீள் விசைப்படகுகளின் ஓட்டம் என வெண் நீல வானத்தின் நிழலில் கனவுலகம் விரிந்து கிடந்த ஓவியம் மேலறையில் ஏதோ ஒரு மூலைக்கு நகர்ந்தது. கோல்கொண்டா தங்கத்தை உருக்கிச் செய்த படர்கொடி வடிவ சட்டகம் என்னை அரவணைத்தது. தங்கத்தின் ஜொலிப்பையும் மீறி ராணியின் பூரிப்பு முகத்தோடு நான் வரவேற்பறையில் வீற்றிருந்தேன். பத்து வருடங்களுக்கு முன்னர் ராபர்ட் க்ளைவ் நடந்து சென்ற கல்கத்தா ரஸ்தாவைப் நோக்கி சந்திரநாகூர் கூண்டு வளைய கூட்டுரோடை நோக்கி கம்பீரமாக வைக்கப்பட்டிருந்தேன். கூட்டுரோட்டைக் கடந்து செல்பவர்கள் எவரும் தூரத்திலிருந்து என்னை எட்டிப்பாராமல் செல்வார்களில்லை.

அதிகாலைப் பனியில் நனைந்து கம்பீரமாக வீற்றிருக்கும் ரோஜாவைப் போல மேசானுக்கு நான் க்ரீடமானேன். ராஜாவைப் பார்க்க வருபவர்கள் தயக்கத்தை வென்று பேசத்தொடங்கும் முதல் வரியானேன். வெற்றி ஒப்பந்தங்களின் தொடக்கமாக நான் ஆனதால் ராஜாவின் நம்பிக்கை நாளடைவில் பெருத்தது. அப்படியே என் உருவம் பெரிதாகி, தமக்கையின் திருமணத்துக்காகச் செயிண்ட் பால் ஆலயத்தை அடையும்போது புதுச்சேரிக்கு மறுவீட்டுக்கு என்னை எடுத்துச் சென்றுவிடுவேன் என ராணி கட்டளையாகச் சொன்னபோது பெண் என்றும் பாராது ஒரு நொடி ராஜாவுக்கு கோபம் வந்தது. துடிப்பும் கலகலப்புமாகப் பேசிச்சிரித்து வந்தவர் திருமணம் முடியும்வரை எதுவும் பேசாமல் இருந்தார்.

நான் புதுச்சேரிக்கு வந்தபோது புது மேசானின் சமையக்காரரின் சிறுபெண் வாசலில் கோலமிட்டுக் கொண்டிருந்தாள். நான் பார்த்திராத அலங்காரமாக தெருவை அடைத்து நின்றிருந்தது. ஒவ்வொரு நாளும் அவள் தண்ணீர் தெளித்து ஒரு புள்ளியை ஓரத்தில் வைத்தபின், நடுவிலிருந்து புள்ளிகள் வைத்து சேர்க்கத் தொடங்கிய அழகிலிருந்து நான் நெடு நாள் மீளவில்லை. பிள்ளையார் புள்ளி என முதலில் வைத்ததை எதனோடும் இணைக்காது அலங்காரத்துக்கு அலங்காரமாக வைத்துவிடுவாள். ஆச்சர்யமாக இருக்கிறது. சந்தோஷத்தின் ஊற்றாக அமைந்திருந்த வடிவம் நாள்பட துக்கத்தின் வழிக்கோலமாக மாறியதை நான் கண்டேன்.

சாவகாசமாக வரும் யானைக் கூட்டம் போலல்லாது, பிரான்ஸின் சின்ன கோட்டை, பெரிய கோட்டை இரண்டிலும் நடந்த நாசம் மதம் பிடித்த யானை போல சடுதியில் புதுச்சேரியையும் பாதித்தது. புரட்சி என்றும் அரசகுலங்களுக்கு பேராபத்து என்றும் காலனி முழுவதும் பரபரப்பு பரவியது. பாதுகாப்பான தூரத்தில் இருப்பதாக நினைத்திருந்த பிரெஞ்சு பிரபுக்களும், குவர்னர்களும் தங்களது முதலீடுகளும் வர்த்தகக் கொள்முதல் வியாபாரிகளும் நொடிந்து போய் குடும்பத்தோடு ஊர் அகன்றனர் எனும் செய்தியைக் கேட்டு புதுச்சேரி வியாபாரங்களிலும் வர்த்தக நிர்வாகத்திலும் குரல்வளையைப் பிடித்து நெரிக்கத் தொடங்கினர்.

இங்கு நம்மாட்களைப் போல ஊதாரிக் கூட்டங்கள் கிடையாது, மேலும் ஹிந்துக்களுக்கு புரட்சிக்கெல்லாம் தைரியம் கிடையாது என ராஜா சொல்லிச் சிரித்ததை கேட்டிருந்தேன் என்றாலும் வேலை நேரத்தில் கண்டிப்பு அதிகமாக்கச் சொல்லும்படியான உத்தரவை கங்காணிகளுக்குக் கொடுப்பதிலிருந்து ராஜா தவறவில்லை. மதிய நேரம் போக குதிரை லாயத்தில் சமையக்காரனின் விகடங்களும் அரட்டைகளும் நிறைந்த காவல் அரங்கு முடிவுக்கு வந்தது. சிறு கூட்டமாக ஒன்றாக நின்றுப் பேசுவதைத் தடுக்கவே சில காவலாளிகள் அதிகம் சேர்க்கப்பட்டிருந்தனர்.

என்னை மதாம் மட்டுமே கண்டுகொள்ளத்தொடங்கியதும் அக்காலகட்டத்தில் தான். விருந்தாளிகள் சூடாக விவாதம் செய்து ராஜாவின் பதற்றத்தை அதிகரிக்கும்போதெல்லாம் என்னை எரிச்சலோடு பார்க்கத் தொடங்கினார். அல்லது அவரது பார்வை என்னையும் துளைத்து வேறெங்கோ குத்தி நிற்கும். கிட்டத்தட்ட காணாமல் போனவன் ஆனேன். புதிதாக வரும் விருந்தாளிகளும் என்னைப் பற்றிக் கேள்விப்பட்டு ஆவல் மிகுந்த கண்களோடு புகழ்வதறியா வார்த்தைகள் சொல்வார்கள் என எதிர்பார்த்து ஏமாந்திருந்தேன். கடனைத் திருப்பிக் கேட்க வருபவர்களிடம் கொடுக்க ஒன்றுமில்லை இதோ இந்த படம் மட்டுமே எனக் கைகாட்டியதில் வலுக்காட்டாயமாகப் பெயர்த்தெடுத்து சாணம் மிகுந்த குதிரை வண்டியில் கரியடுப்புக்கான மரச்சாமான்களோடு என்னை ஏற்றிவிடுவதாக ஒரு முறை கனவு கண்டு திடுக்கிட்டேன். பார்த்திராத ஊரான பிரான்ஸ் மீது அளவில்லாத ஆத்திரம் வந்தது.

உஷத் காலை ஒன்றில் முன்னூறு குண்டடி தூரத்திலிருந்து புறப்பட்டு மூவாயிரம் வீரர்களுடன் வந்து மச்சிலிப்பட்டிணத்தை முற்றுகையிடும் உத்வேகத்தில் எதிர்படும் கிராமங்களை அழித்து, கிடங்குகளுக்குத் தீயிட்டு, மாடுகளைக் கொன்றும் நாய்களைக் கொண்டு ஆடுகளை விரட்டிப் பிடித்தும் துப்பாக்கி, குண்டுகளோடு வெறிகொண்டு வந்த முசாஃபர்பூர் குறுநில குழு நவாப் அன்வருத்தீனின் தூண்டுதலின் பேரில் செஞ்சியிலிருந்து புதுச்சேரியைத் தாக்க வருவதாக ஒற்றன் வந்து சொன்ன அடுத்த சில மணி நேரங்களில், நாற்பத்து எட்டு திரி அகல்விளக்கு, ரெண்டுபேர் உறங்கும் அளவுக்கு இருந்த ஈயத்தாம்பாளங்களோடு என்னையும் சேர்த்துக்கட்டி குதிரை வண்டியில் ஏற்றி நாகப்பட்டினம் துறைமுகத்துக்கு விரைந்தனர். எங்களையும் சேர்த்து இருபது குதிரை வண்டிகள் நள்ளிரவின் குளிரையும், இருளையும் பொருட்படுத்தாது சிறு அரிக்கன் விளக்கின் துணையோடு கற்பாதையில் கவனமாகக் கடந்து சென்றோம். ஏதோ ஒரு வண்டியில் ராஜாவின் குடும்பம் இருப்பது தெரிந்தாலும் அது எல்லாரும் அறிந்த ரகசியமாகப் பாதுகாக்கப்பட்டது. துலுக்கப்படைக்கு அஞ்சும் அதே நேரத்தில் ஓடி ஒளியவேண்டிய அவசியத்தை கும்பனியார் அறிந்திருந்தனர். துய்ப்ப்ளே தலைமையிலான சென்னைப்பட்டிண போருக்குத் தயாராக தங்களிடமிருந்த பிரெஞ்சு வீரர்களைத் தயார் செய்துவிட்டவர்கள், இந்த புதிய தலைவலிக்கான தயார் நிலையில் இல்லை.

நாகப்பட்டினம் செல்ல அனுமதி பெற்ற கையோடு கரையிலிருந்து தொலையில் நங்கூரமிட்டிருந்த லா கபிசரே கப்பலில் அடைக்களம் புகுந்தோம். கப்பலுக்குள் நான் முதல் முறை ஏறியதும் அப்போதுதான்.

இருபது நாட்களுக்கும் மேலாக பாதுகாப்பான அறையில் சாமான்களோடு உராய்ந்தபடி முடை நாற்றத்தைச் சகித்துக்கொண்டு கழித்தேன். கடும் கசப்பை விழுங்குயவன் போல புதுச்சேரியின் பல வர்த்தக முதலாளிகள் இருபது நாட்கள் ஒளிந்திருந்தனர். இடையில் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்து மதராஸ் லிகிதங்கள் நங்கூரமிட்ட கப்பல் சோதனைக்கு வந்தன. வெளுத்த கிர்ணிப்பழம் போன்ற சருமத்தினர் நால்வர் சாமான்களோடு சேர்ந்து என்னையும் உருட்டிப் பிரித்துப்பார்த்தனர். சுங்கத்துறையிலிருந்து வந்திருந்த ஆங்கிலேயப் படையினர் வர்த்தக ஒப்பந்தத்தை மீறி இருபது நாட்கள் நங்கூரம் இட்ட பிரெஞ்சுக் கப்பலுக்கு அடுத்த இருபத்து நான்கு மணி நேரத்தில் நகர்ந்து புதுச்சேரி கரைபக்கம் செல்ல கட்டளை இட்டதில் மீண்டும் குதிரைவழிப் பயணம் தொடர்ந்தது.

அதிசூய புயல் கடந்ததுபோல பாகூர் எல்லை கிராமங்கள் பலவும் தீக்கிரையாக்கப்பட்டிருந்தன. காற்றில் கந்தக மணமும், சாம்பல் துகல்களும் கலந்திருந்தன. எங்கள் குதிரையில் வந்த பெண்களுக்கு தும்மல் அதிகமானது. சிலர் சுவாசிக்கத் திணறி மூர்ச்சையாயினர். இருபதே நாட்களில் பயிர்களும், தென்னந்தோப்புகளும் கரிந்த பள்ளங்களாக மாறியிருந்தன. இடுகாடுகளைப் பிரித்துக் காண முடியாதபடி அழுகிய பிணங்கள் கிராமம் முழுவதும் நிரம்பியிருந்தன. துவராடை அணிந்த சாமியார்களைச் சுற்றி கூட்டம் நின்றுகொண்டிருந்தன. துவாரகையிலிருந்து ராமேஸ்வரம் சென்றுகொண்டிருந்த பெரும் பைராகிக்கூட்டம் ஔஷதக்கூடங்கள் அமைத்திருந்தன. நிலபுலன்கள் வீடுகளை இழந்த ஹிந்துக்கள் கூட்டங்கூட்டமாக கூடங்களைச் சுற்றி அமர்ந்திருந்தனர். ஆடு மாடுகளின் பிணக்குவியல்களுக்கு நடுவே வைக்கோல் குவியல்களிட்டு இடுகாரியங்கள் நடந்தன.  குதிரைகளைப் பார்த்து கும்பனியாரின் ஆட்கள் என நினைத்து கூட்டம் எங்களை நோக்கி ஓடி வந்தது.  விரட்டிப்பிடிக்க முடியாத வகையில் வேகம் எடுக்கத் தொடங்கிய எங்கள் குதிரைகள் ஏதோ ஒரு சக்திக்குக் கட்டுப்பட்டு சட்டென நின்றன. உள்ளிருந்து தனியாளாக மதாம் இறங்கினாள். அவளது நீலநிற பட்டுத்துணி அந்தப் பிரதேசத்திலேயே தீயில் கரியாத பட்டுத்துணியாக இருக்க வேண்டும் எனத் தோன்றியது. ராஜா உட்பட மதாமை யாராலும் நிறுத்த முடியவில்லை.

ஏதோ ஒரு உத்வேகத்தில் செல்பவள் போலிருந்தாலும் வெளியே பஞ்சக்கூட்டத்தைப் பார்த்து அவளது வேகம் கூடியதே தவிர குறையவில்லை. கூடாரத்தைத் தாண்டி கும்பனியார் நின்றிருந்த கூட்டத்தினரிடம் சென்று, “பிரெஞ்சு பிராந்திய காவலர்களுக்கு வணக்கம், முருங்கப்பாக்கம் துபாஷி வந்திருக்கிறாரா? இவர்களது சாப்பாட்டுக்கு ஏதேனும் வழி அமைந்திருக்கா?”, என ஹிந்துக்கள் கூட்டத்தை காட்டிக் கேட்டாள்.

காவலாளிகள் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியும் கலக்கமும் எங்களுக்குத் தூரத்திலிருந்து தெரிந்தது. ராஜா குதிரையிலிருந்து இறங்கி மதாமை நோக்கி சென்றார்.

“மதாம், கம்பனியார் தங்களாலான உதவியைச் செய்துகொண்டிருக்கிறார்கள்..”

“உங்கள் உதவியின் லட்சணம் தெரிகிறதே. எங்கிருந்தோ பாஷை தெரியாத சாமியார்க்கூட்டம் கஞ்சி சமைப்பதற்கு காவல் நிற்கிறீர்களா? அல்லது முதல் பானை நிறைந்ததும் எடுத்துச் செல்வதற்காகக் காத்திருக்கிறீர்களா?”

கையை ஆட்டி அவள் பேசிய வேகத்தில் கூட்டம் அவளைச் சுற்றிச் சற்று தள்ளி நின்று வேடிக்கைப் பார்த்தது. கூட்டம் வழிவிட்டு ராஜா அருகில் வந்ததை அறியாதவளாக அவள் சத்தம் போட்டுக் கொண்டிருந்தாள். குதிரையிலிருந்த பிரெஞ்சு காவலாளிகள் ஒரு பிரெஞ்சுப் பெண் பேய் பிடித்தவள் போல ஹிந்துக்கள் இடையே நின்று கத்துவதை நம்ப முடியாது பார்த்திருந்தனர்.

“மதாம். நீங்கள் உங்க வண்டிக்குத் திரும்புவது நல்லது. எங்களைக் கட்டாயப்படுத்தி அப்புறப்படுத்த வைக்காதீர்கள்”

மதாம் தோளைத் தொட்டுத் திருப்பப் பார்த்த ராஜாவைப் பார்த்த பார்வையில் அவர் பின்வாங்கினார்.

“முடியாது. இந்த பிரஜைகளை ஆள்பவர்களாக பாகூர், தேவனாம்பட்டினம் கிராமங்களின் நலன்களுக்கு நீங்கள் என்ன செய்கிறீர்கள்? துலுக்கப் படைக்கு பயந்து அவர்களோடு ஒப்பந்தம் போட்டு தம்மக்களையே இரையாக்கிக்கொண்டிருக்கிறாரே கவர்னர். அவர் இங்கே வர வேண்டும். “ராஜா தனது கண்களை நம்ப முடியாதவராக செய்வதறியாது கையைப் பிசைந்து நின்றிருந்தார். மதாமின் முகம் ஜ்வாலையில் கனன்றது. வெறித்த கோலத்தில் அவளது நெற்று நரம்புகள் விம்மித் தெறிக்கும் தறுவாயில் இருந்தன. ஏதோ ஒரு உக்கிர சாமி இறங்கிவந்துவிட்டாளென ஊரார் அவளை அன்னாந்து பார்த்து நின்றனர்.

கடுமையான வெயிலில் பாதி உயிரை வைத்திருந்த ஜனக்கூட்டத்துக்கு மதாமின் ஆதரவானப் பேச்சுக்கு மெத்தனமாக பதில் சொன்ன கும்பனியாரின் அலட்சியம் உச்சகட்ட கோபத்தை வெளிக்காட்டியது. அடுப்புக்குப் போட வைத்திருந்த காய்ந்த சாணி உருளைகளைத் திரட்டி அடிக்கத் தொடங்கினர். முதலில் குதிரை மீது பட்டு தெரித்து தெறித்து விழுந்த கட்டிகள் பின்னர் காவலாளிகளின் மீது ஆக்ரோஷமாகத் திரும்பியது. பாதி உயிருள்ள குழந்தைகளை மடியில் போட்டு ஓலமிட்டிருந்த பெண்களின் கும்பல் ஒன்று விறகுக்கட்டைகளையும், உடைந்த பானைகளையும் ஒரு கையில் ஏந்தியபடி ஆவேசமாக அவர்களை நோக்கி வந்தனர். நாங்கள் வண்டியிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த அரை விநாடியில் கூத்தாடியை வேடிக்கைப் பார்ப்பவர்கள் போல பள்ளத்தின் கூட்டம் மொத்தமும் காவலாளிகளின் குதிரைகளைச் சூழ்ந்துகொண்டன. வெளிறிப்போன முகத்தோடு முன்னங்கால்களை எக்கித்தள்ளி தவிப்போடு கூட்டத்திலிருந்து குதிரைகள் மீளப்பார்த்தன. பக்கவாட்டிலும் பின்னாலும் நகரத்தொடங்கிய குதிரைகள் நகரமுடியாதபடி எல்லோரும் எட்டித்தள்ளத்தொடங்கினர்.

கையிலிருந்து உருளைக்கட்டைகளால், “சே, சாவுங்க”, என பலத்த அடிபோடத்தொடங்கிய காவலர்களால் அதிக நேரம் தாக்கு பிடிக்க முடியவில்லை. வேய்கூரை காற்றில் சரிவது போல தள்ளுமுள்ளை சமாளிக்க முடியாது குதிரைகள் கூச்சலோடு சரிந்தன. ஒவ்வொரு காவலாளி மீதும் ஐம்பதுக்கும் மேற்பட்ட பள்ளக்கூட்டம் விழுந்தது. பக்கவாட்டில் படுத்தபடி காற்றில் காலை எட்டி உதைத்த குதிரைகள் பெண்களின் மார்பகங்களில் கொடுத்த அடியில் பலரும் நைந்த துணி போல சுருண்டு விழுந்தனர். மதாமை வலுக்கட்டாயமாகத் தூக்கி வெளிவந்து போட்ட ராஜாவுக்கு எங்கள் குதிரைகளிலிருந்து வேலையாட்கள் ஓடிச்சென்று உதவினர். செய்வதறியாது பார்த்து நின்ற வீட்டுப்பெண்களும் வண்டியிலிருந்து இறங்கி மதாமை நோக்கி ஓடினர். இவர்களுக்கெல்லாம் முன்னர் ஓடிய நாய் ப்ரெளனி மதாம் எழுந்துகொள்ளவிடாதபடி அவள் முகத்தைத் தொடர்ந்து நக்கியது. கால்கள் இருந்தால் நானும் மதாமிடம் ஓடியிருப்பேன். கும்பிட்டிருப்பேன்.

குதிரைகளின் ஓலம் காற்றைக் கிழித்து மரக்காடுகளில் எதிரொலித்தது. கும்பனியாரின் வீரர்கள் வந்து சேர்வதற்குள் குதிரைகளும் வீரர்களும் அடங்கியிருந்தனர். ஈட்டியால் வயிறு கிழிக்கப்பட்டுக் கிடந்த ஒரு குதிரை ஈனசுவரத்தில் முனகியபடி தன்னிச்சையாகக் கால்களை காற்றில் உதைத்துக்கிடந்தது. முகம் கிழிக்கப்பட்டுக் கிடந்த காவலாளிகள் சிறு மூட்டைப் போல சுருண்டுக் கிடந்தனர். கூட்டத்தின் ஆக்ரோஷம் அடங்கியதாகத் தெரியவில்லை. பைராகிகளின் கத்தலைப் பொருட்படுத்தாது தமிழர் கூட்டம் சண்டை நடந்த இடத்துக்கு ஓடிப்போய் எட்டிப்பார்த்தபடி இருந்தனர். அடுப்புகளின் நாக்கு பெரிய ஜ்வாலைகளாகி மேலிருந்த பாத்திரங்களின் வாய்வரை எட்டிப்பிடிக்க முயன்றன.

மதாம் நினைவு மீண்டபோது நடந்ததை நம்ப முடியாதவளாக பிரமை பிடித்தவள் போல அமர்ந்திருந்தாள். கும்பனி ஆட்கள் குவர்னர் ரெனால்டுடன் வந்துவிட்டதால் ராஜாவால் அங்கிருந்து உடனடியாகக் கிளம்ப முடியவில்லை. வண்டியிலிருந்த சிறு வெண்பஞ்சு படுக்கையை வெளியே எடுத்துப்போட்டு மதாமை அதில் கிடத்தியிருந்தார்கள். படுக்கையைச் சுற்றி சிறு கூடாரத்தைச் அமைத்திருந்த வேலையாட்கள் மருத்துவச்சிக்காகக் காத்திருக்கத் தொடங்கினர்.

என் வண்டியிலிருந்த திரைச்சீலை இடைவெளி வழியாக மதாமைப் பார்க்க முடிந்தது. நீர் ஊறிய பாதாம் நிறமாக முகம் வீங்கிப்போயிருந்தது. நெற்றியில் வைத்திருந்த ஈரத்துணியிலிருந்து வழிந்த நீரை துடைத்தபடி மரகதம் நின்றிருந்தாள். அவள் தன்னிச்சையாக அழுதுகொண்டிருந்தாள். உயிர்சக்தி முழுவதும் இழந்தவளாய் கிடந்தவளது கண்கள் மட்டும் அசைந்தன. அதிர்ச்சியில் உறைந்த கண்களில் சூல்கொண்ட வானம் கலங்களாகத் தெரிந்தது.

அடுத்த பத்து நாட்களில் நடந்த டிரிபியூனல் வழக்கில் மதாமும் நடைபிணமாக ஒரு சாட்சியாகச் சென்றார். சொல்லவேண்டியவற்றைச் சொன்னதும் குதிரை வண்டியில் ஏறி அமர்ந்துகொண்டார். அவரது நரம்பு மண்டலத்தில் நிரந்திரமான முடிச்சுகள் குடிகொண்டுவிட்டதாகவும் குட்டிபோடாத பாம்பின் விஷத்தைக் கொண்டு முடிச்சை முறியடிக்கலாம் என்றும் நாகப்பட்டினத்திலிருந்து எண்பது வயதான மருத்துவச்சியைக் கொண்டு வைத்தியம் பார்த்தனர். நாட்கணக்கில் பத்தியம் இருந்து பாம்பு விஷத்தை நரம்பியில் பழுக்கக்காய்ச்சிய கம்பியால் ஏற்றியவளின் நரம்பு அடிப்படையான செயல்களையும் செய்ய மறுத்தது. பின்பொரு நாள் நள்ளிரவில் தூக்கம் வராது கொல்லைபுறத்துக்குப் போன சமையக்காரி மதாம் ஒற்றைக்காலைத்தூக்கி மாடிப்படியில் தொங்க வைத்திருந்ததைப் பார்த்து அலறியதில் நாட்டுவைத்தியச்சியை ராஜா நிறுத்தினார். நாளடைவில் பீவி மேசானுக்கு வருவதையும் நிறுத்தினாள். என்னைத்தொட்டுத் துடைப்பதை நயினாப்பிள்ளை மட்டுமே செய்துவந்தார்.

பிரெஞ்சு கும்பனிக்குத் தரவேண்டிய வரிப்பணம் ராஜாவின் புகையிலை மற்றும் அபின் விளைச்சலின் லாபத்தின் பெரும்பங்கை விழுங்கியது. பள்ளக்குடியிலிருந்த தமிழர்கள் விரட்டப்பட்டு, பெரும்பாலான இளைஞர்கள் காணாமல் போனதற்கு மதாமும் ராஜாவும் காரணம் எனப் பொதுவாகப் பேசப்பட்டதில் வர்த்தக சம்பந்தமும் குறைந்தது. நகர்வுகள் அற்று அறைக்குள் முடங்கிப்போன நிலையில் மதாமின் தேவை முழுவதும் ராஜாவும் அவருடன் இருந்த சில விசுவாசிகளும் செய்ய வேண்டியதாகியிருந்தது. நயினாப்பிள்ளை கூட முதல் முறையாக மதாமின் அறைக்குள் சுத்தம் செய்ய நுழைத்தார். அறைக்குள் அடித்த நெடி எவ்விதமான மருந்திலும் வர முடியாது எனத் திடமாக நம்பிய மருத்துவர் நயினாப்பிள்ளையிடம் அறையை கண்காணிக்கச் சொன்னார்.  மேசானின் ரகசியத்தை அறியத்துவங்கியவரின் குதூகலம் சுதந்திரமாக உலவத்தொடங்கிய நயினாப்பிள்ளையின் உடம்பில் குடிகொண்டது. அபின் இலைகளை பதம்பிரித்து குழாய்க்கு ஏற்ற நெருப்பு அகில்கட்டைகளை அளிக்கும் பொருட்டு தினமும் ராஜாவுக்குச் சேவகம் செய்யத்தொடங்கினார்.

ஒரே ஒரு முறை சந்திரநாகூரிலிருந்து மதாமின் பெண் வந்தபோது கீழே வந்த ராஜாவை என்னால் அடையாளம் காண முடியவில்லை. பொந்துக்குள்ளிருந்து எட்டிப்பார்க்கும் ஆந்தையைப் போல கரியகண்கள், கொக்கின் நீண்ட கழுத்தைப் போல உள்ளடங்கிப்போய் தன்னிசையாக மேலும் கீழும் ஆடிய கழுத்துச்சங்கு, வற்றிப்போன உடல் என பேய்த்தோற்றத்தோடு இருந்தார். மாறாக நயினாப்பிள்ளை வீட்டு எஜமானன் போல மதாமின் பெண்ணுக்கு உரிமையாகப் பரிவிடை செய்தார். அவர் என்னைத் தொட்டுத் துடைப்பதும் அரிதாகியது எனச் சொல்லத்தேவையில்லை.

மதாமின் மகள் வழிப்பெண்ணின் கண்களில் நான் பட்டது என் அதிர்ஷடம் என்றே சொல்லவேண்டும். மூச்சுமுட்டு அளவு நீரில் அழுத்தப்பட்டுக் கிடந்தது போல தாங்கமுடியாதிருந்த எனது வாழ்வு மாற்றத்தை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டது. சந்திரநாகூரின் சின்ன மேசானுக்கு மாற்றலாகி, வீட்டின் ரெண்டாவது தளத்தில் வங்க ரஸ்தாவில் நீளும் காட்டை நோக்கியிருந்தாலும் மூச்சு முட்டும் அபின் வாசனை இல்லாதது நிறைவாக இருந்தது.

சந்திரநாகூர் இருமுறை பிரிட்டீஷரின் கைகளுக்குச் சென்றதில் சின்ன ராஜாவின் மேசான் ஆங்கிலேயரின் எல்லைக்குள் வந்தது. ஆங்கிலேய மருத்துவரின் வாடகை அறையாக மாறி மகளின் சொத்து அழிந்ததும் மதாமின் கெட்ட நேரம்தான்.  வங்க ரஸ்தா மேசான் என்றழைக்கப்பட்ட அந்த வீட்டை ரங்கூன் மருத்துவமனையிலிருந்து வந்த மருத்துவர்கள் இருவரின் குடும்பம் வாடகைக்கு எடுத்துக்கொண்டது. அன்றிலிருந்து அது மேசான் மருத்துவமனைக்கடை என்றானது.

**

 

நாய்க்குட்டியின் வண்ணக்கரைகல் வழிந்து புகழ்பெற்ற சட்டகத்தை நனைத்துவிட்டது. இன்னும் சில மணிநேரத்தில் முழுவதுமாகக் கரைந்துவிடுவேன். தன்னை முழுவதுமாக அழித்துக்கொள்வதற்கு முதற்படி அறிந்துகொள்வது. அழிவதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. என்னை ஏகாந்தமாகப் பார்த்து உரிமைகொண்டாடி வைத்திருந்து அழகு பார்க்க நினைத்தவர்களில் எல்லாரும் இன்று அழிந்துபோய்விட்டனர். அவர்களது கனவுகளும், ஏக்கங்களும், கொடுதுக்கங்களும் விடுதலை கொடுத்து புது கனவுகள், சஞ்சலங்களும் வழிவகுத்துக் கொடுக்கும் வாழ்வு. உரிமைப்போராட்டத்துக்காக எத்தனையோ ரத்தத்தைப் பார்த்துவிட்டேன். நான் உருவான நிலத்தின் சாபம் போலும். காணாமல் போனவர்களை மட்டும் கணக்கில் கொண்டால் இன்னொரு வங்கத்தை உருவாக்கிவிடலாம். சந்திரநாகூரிலிருந்து மதாம் மறுவீட்டுப் பயணப்பட்டு புதுச்சேரி வந்தபோது புது சாபத்தைப் பரப்ப பழைய விதைகளோடு வந்திருக்கிறேன் எனத் தெரியாது. அப்படியும் இருந்திருக்கலாம். தொப்புள் கொடி உறவு போல ஏதோ ஒரு பந்தம் சாபத்தோடு என்னைப் பிணைத்திருக்கிறது. பள்ளத்தின் அழிவு நடந்திராமல் இருந்தால் என் சாபத்தை மதாமின் பரிவு வென்றிருக்க முடியும். தாயுமானவப் பரிவு சாத்தியம் என்பதை ஒவ்வொரு நாளும் உணர்ந்திருந்தேன்.

நான் இன்று நனைந்து கிடக்கும் இடத்தைக் கைப்பற்ற பிரெஞ்சு சிப்பாய்களும், ஆங்கிலேயர்க் கூட்டங்களும் நடத்திய போர்கள் எத்தனை இருக்கும்? நான் பார்த்தது மட்டுமே பத்துக்கும் மேற்பட்டது. இன்று பிரெஞ்சுப்படைகளைத் துரத்திவிட்டு ஐம்பது வருடங்கள் ஆனபின்னும் மொழியையும், உணர்வையும், வாசனையையும் அவர்களால் அகற்ற முடியவில்லை என்றால் எத்தனை அற்பத்தனமான சண்டைகள்! மட்கிப்போகும் உடலின் மிச்சங்களைக் கொண்டு மற்றொரு மொரீசியஸ் தீவை செய்துவிடலாம்! உலகம் மிகப் பெரியது எனக் கேள்விப்படுகிறேன். மலபாரிகளைப் போல மறுஜென்மத்தில் ஆசையிருந்தால் யுத்தமற்ற நிலத்தில் தூரிகைகொண்ட கலைஞர் போலத் தீட்ட வேண்டும். ஏனோ மதாமின் மூச்சுக்காற்றும், ரத்தமும் என்னுள் புகுந்ததுபோலிருந்தாலும், நவதுர்கை அவளை மாற்றிவிட்டதாக மேசானின் தமிழர்கள் பேசிக்கொள்வார்கள். காளி, துர்கை, மாகாளி, துஷ்டர்களை கொன்று குவிக்கும் துன்மயரூபினி. காளி பூஜை ராத்திரிகளில் மதாம் உக்கிரம் கொண்டு அடைபட்டுக்கிடந்த அறையில் ஆக்ரோஷமான கர்ஜனைகள் கேட்பதாகக் கதைகள் சொல்லப்படுவதுண்டு. உலகம்இருள் மயமானது. ஆர்ப்பரிக்கும் கடலலைகள் பனைமர உயரத்துக்கு சன்னதம் கொண்டு எழுந்து நிற்கும். சீறிப்பாயும் பாம்பைப்போல நரம்புகள் புடைக்க மதாம் பள்ளத்தில் சன்னதம் கொண்டதைப் பற்றி பேசாத பிரெஞ்சுக்காரர்கள் இல்லை. முழுமையாகப் பைத்தியம் பிடித்துவிட்டதாக நினைத்து ராஜ வைத்தியர்களை ஆலோசிக்கும்படி பார்க்கும்தோறும் ராஜாவுக்கு குவர்னர் அறிவுறுத்தினார். சூல் கொண்ட மேகத்தைப் பார்த்து பயப்படும் நிலையிலிருந்தவர்கள். உக்கிரம் கொண்ட காளி துர்கை அவதாரமாக பாதகர்களைக் கொல்லும் அம்சவர்த்தினியாக மதாமை கடவுளாகப் பார்த்த புதுச்சேரி மக்கள் ‘வெர்லிதாய்’ எனப் பெயர் சூட்டும்படியான காலமும் வந்தது.

நான் இதையெல்லாம் பார்க்க நெடு நாட்கள் புதுச்சேரியில் இல்லாவிட்டாலும் சந்திரநாகூர் மருத்துவர்கள் சந்திப்பில் புதுச்சேரிக்குச் சென்று திரும்பியவர்கள் சொல்வதைக் கேட்டு ஒரு கணம் என் மனம் விம்மும். கால்கள் இருந்தால் மனம் சொல்லும் இடத்துக்கெல்லாம் சடுதியில் சென்றுவிடலாம். மருந்துகளின் வாடையிலிருந்து விடுதலை கிடைக்கும். சந்திரநாகூரில் நான் இருந்த வீட்டில் தங்கியிருந்த தீர்க்கேஷ்வர மாவலி ரெட்டியைத் தெரியாத வங்காளிகள் இருக்க முடியாது. அதை ஒரு வசை என்றும் கொள்ளலாம். தீர்க்கேஷ்வரர் ஆங்கில மருத்துவம் படிப்பதற்காக இங்கிலாந்து சென்று திரும்பியபின் மகப்பேறு மருத்துவச்சியிடம் பயின்றவர் போல வீட்டுஸ்திரிகளுக்கு பிரசவம் பார்க்கத் தொடங்கினார். அவரே முதல் மகப்பேறு மருத்துவர் என்பதில் மரியாதையும் கேலியும் சந்திரநாகூர் முழுவதும் பரவியிருந்தது. முதலில் நாலுமாடித் தெருக்களிலிருந்த ஆங்கிலேய குடும்பங்களுக்கும், படித்த மேல்தட்டு கும்பனி அதிகாரிகளின் ஸ்திரிகளுக்கு பிரசவம் பார்த்துக்கொண்டிருந்தவர் எந்த கட்சிக்காக தன் ஆதரவைத் தெரிவிக்கிறார் என்பதில் தொழில்நிமித்தம் குழப்பம் ஏற்பட்டது. அந்தளவு சாதாரண பிரசவங்களைத் தனது சூச்சும மருத்துவத் தேர்ச்சியின்மூலம் கடினமாக மாற்றினார். ஊருக்குள் திடீரெனப் பிரசன்னம் காட்டும் வடக்கத்தி சாமியார் போல சின்ன மரப்பெட்டி மற்றும் சிவபெருமான் போல பாம்புக் குழாயைத் தோளில் மாட்டிக்கொண்டு அவர் உள்ளே நுழையும் காட்சி பெரும்பாலான குடும்பங்களுக்கு அஸ்தியில் புளியைக் கரைக்கும் விஷயமாக இருந்தது. சாதாரண இந்திய மருத்துவச்சியைக் கொண்டு பிரசவம் பார்ப்பது வசிய மருந்தும் சூனிய வகைகளை பரப்பும் தீவிரவாதிகளின் பீதியால் பெரும்பாலான ஆங்கில குடும்பங்களில் தடை செய்யப்பட்டிருந்தது. வழுக்கைத் தலை குட்டையான வடிவத்தோடு தீர்க்கேஷ்வரர் வருவதைப் பார்த்து குழந்தைகளும் பதறத்தொடங்கின என்றாலும் வயிற்றில் இருக்கும் சிசுவும் வாசனை பிடித்துவிட்டு கூடுதலாக உதைத்து பெண்களுக்கு சுகப்பிரசவத்தின் சந்தோஷங்களை பறித்துவிடும் எனும் கட்டுக்கதைகளும் உலவத் தொடங்கின. ஆட்சியாரின் நலனுக்காக அவரைக் கொண்டு மட்டுமே மருத்துவம் செய்யவேண்டும் எனும் வங்க தேச கும்பனியாட்களுக்கு ரகசிய கட்டளை உண்டு.

மாடுகளைத் தொழுவிலேற்றிவிட்டு அந்தி சாய அவர் வீட்டுக்குள் வந்தால் அடுத்த ஒரு மணிநேரத்திற்குள் ஆகாரம் முடித்துவிட்டு இங்கிலாந்திலிருந்து வாங்கிவந்த பிடிலை வாசிக்கத்தொடங்கிவிடுவார். இருளின் பயங்களை மீறி அவரது மனைவியும் குழந்தைகளும் தோட்டத்தில் கீரைபறிக்க விரைந்து செல்லும் நேரமும் அதுதான். வீட்டு எஜமானோடு விளையாட எத்தனித்து அடைத்துக்கிடக்கும் உள்வாசல் கதவைப்பார்த்தபடி மெல்ல முணகும் லாப்ரடார் ஸ்கைலார்க் காலுக்குக்கீழியிருந்த மரப்பலகைகளிலுக்கிடையே மெல்ல மூத்திரம் விடத்தொடங்கும்.  நான் பார்க்கும்போது மரப்பலகை வழியே வழிந்து என் முன் குளமாகத் தேங்கத்தொடங்கும். தாங்க முடியாத நெடி உடனடியாகப் பரவி மருந்துவாடையைத் துரத்தும்.

இத்தனை இருந்தும் மருத்துவருக்குச் சொத்து குவியத்தொடங்கியது. சிற்சில வெற்றிகளின் மகத்துவத்தில் ஹிந்து ராஜ குடும்பங்களில் ஆங்கில மருத்துவரைக் கொண்டு பிரசவம் பார்ப்பது மதிப்பளிக்கக்கூடிய ஒன்றானது. தீர்க்கேஷ்வரர் பிரசவத்தில் பிழைத்த குழந்தைகள் அதிபுத்திக்கூர்மையோடு பிறப்பதாக கசியத்தொடங்கிய செய்தியின் பலன் தெரியத்தொடங்கியது. பல வருடங்கள் கத்தினால் கழுதை குரலும் மெருகேறும் எனும்படி தீர்க்கேஷ்வரருக்கும் மருத்துவம் கைகூடத்தொடங்கியது. ராஜ குடும்பங்களுக்கான சேவை அதிகரித்ததில் வீட்டில் இருக்கும் நேரம் குறைந்ததில் ஸ்கைலார்க் மூத்திரமும் ஒரு கட்டுப்பாட்டுக்கு வந்தது. ஆனால் மீண்டும் ஒரு ஓட்டத்துக்கு நான் தயார் செய்யப்பட்டேன்.

கண்ணாடியுடன் விவாதிப்பது போன்று மூடர் நிலமாக மாறிப்போன சந்திரநாகூர் இங்கிலாந்து துரைகளின் பேச்சுக்கு அடிமையானபோது பிற நாடுகளில் படித்த காலனிவாசிகளின் தேவை அதிகரித்தது. வங்க நிலம் மிகப் பழையனதாக மாறியதில் அவரவரர் தங்களது வேலைகளில் நிலை கொள்ள ஆரம்பித்து உரிமை கொண்டாடத் தொடங்கினர். படிப்பு முடித்த ஆங்கிலேய இளைஞர்களுக்கு கிழக்கிந்திய கும்பனியார் வேலை தருவதில் பல சிக்கல்கள் உண்டானதாக தீர்க்கேஷ்வரின் நண்பர் பேசியதைக் கேட்டேன். இது புதுச்சேரியில் பல காலம் முன்னரே தொடங்கிவிட்டதே?

கிழக்கிந்திய கம்பனியின் ஏற்றுமதித்துறையில் நடந்த வேலைவாய்ப்புகள் முறையீட்டை எதிர்த்து போடப்பட்ட வழக்கு பிக்பென் பார்லியமெண்டில் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து அத்துறையின் தலைவர் துறைமுக சாராயக்கூடத்திலிருந்து திரும்பும் நேரம் கொடூரமாகக் கொல்லப்பட்ட செய்தி பரபரப்பாக இருந்தது. மொத்தம் இருபது இடத்தில் வெட்டப்பட்டுக் கிடந்தார். ஏற்றுமதி அலுவலகத்து வளாகத்தில் கத்திகலாட்டா செய்த ரெண்டு ஆங்கிலேய இளைஞர்கள் அன்றிரவே கைது செய்யப்பட்டனர். அவர்களும் காணாமல் போயிருக்கக்கூடும். ஆனால், தீவிரவாத வங்க ஹிந்துக்களிடம் ஏற்பட்ட அதே உணர்வு புதிதாக வந்திறங்கும் ஆங்கிலேய இளைஞர்கள் மீதும் ஏற்பட்டது. தங்கள் இனத்துக்கு தாங்களே எதிரியாகும் ஹிந்துக்களின் வியாதி வெள்ளையனிடமும் தொற்றிக்கொண்டது.

“அழுகின முட்டை தன்னால வெளிப்பட்டுத்தானே ஆகணும் வைத்தியரே”, நாற்காலி போதாது உட்கார்ந்திருந்த நண்பரின் வார்த்தைகளைக் கேட்டபடி தீர்க்கேஷ்வர் அன்றைய நாளின் கடைசி வெற்றிலைப்பாக்கை மென்றார்.

“இனி புது வரவுகளுக்கு கஷ்டம்தான்”

“அப்படி உடனே கத்தியைத் தூக்க நம்ம ஜாதியாட்களால் முடியாது இல்லையா?”

“இங்கயே தொடர்ந்து இருந்தால் முப்பாட்டனைக்கூட நம்மால் ஒட்டுறவோடு பார்க்க முடியாது. பறங்கியரைக் கேக்கணுமா? பணமும் சொத்தும் படுத்தும் பாடு தான் என்ன?”

“ஏற்கனவே மதராஸிக்காரனுக்கு இங்க என்ன வேலைனு கேட்கத்தொடங்கிவிட்டார்கள்..”, வருந்தும் குரலில் தீர்க்கேஷ்வரர் பேசினார்.

“உமக்கு என்ன, ஜான் ஏறினா முழம் சறுக்கின கதையெல்லாம் முடிஞ்சுதே. உங்க தேதிய கேட்டில்லையா பிரசவ வலி வர்றது?”

“அது என்னமோ சரிதான். ஆனா ரொம்ப நாட்கள் நீடிக்காது”, உண்மையான வருத்தம் தானா என நண்பருக்கு சந்தேகம் வரத்தான் செய்தது. பொதுவாக ஊரார் பேச்சுக்கு மதிப்பளித்து வருந்தும் ஜாதியல்ல அவர் என்பது நண்பரின் பார்வையில் தெரிந்தது. எனக்கும் அவரது பேச்சு புதிதாக இருந்ததால் உற்றுக்கேட்கத்தொடங்கினேன்.

“இங்கில்லன்னா உமக்கு ரங்கூன் இருக்கே?”, என நண்பர் பேசுவதற்குள், “அங்க மட்டும் யாரு ஆளறா? தாத்தனா?”

“அதுக்காக?”

“மொர்ரீஸியஸ் தீவில் நம்ம ஜாதி ஹிந்துக்கள் கொத்து கொத்தாக காலராவில் மடிகிறார்களாம். கடந்த வாரம் வக்கீல் ஜோஷியின் ரெண்டாவது மனைவிக்குப் பிரசவம் பார்க்கச் சென்றபோது ஜோஷியைப் பார்த்து அயர்ந்துவிட்டேன். பூரி ஜெகன்னாத கோபுரத் தூணில் பாதி இருப்பவர் கோரப்புல்லைப்போலாகிவிட்டார். இத்தனை தூரம் உயிரைப் பணயம் வைத்து கடல் பயணம் செய்வது எதற்காகப் பாரும்?.. அங்க தன்வந்தரி பெயரில் ஒரு மருத்துவமனை சேவைமையம் தொடங்கும்படி ஜோஷிக்கு கும்பனியார் உத்தரவு போட்டிருக்கிறார்கள். என்னையும் அங்கு வரும்படி அழைக்கிறார்..”

“நீரும் ஈருக்குச்சியைப் போல வரப்போறீரா?”

“நாம் சுகவாசி ஐயா. ஒரு வருட காலம் இருப்போம். அடிப்படை நிர்வாகம் ஒழுங்குமுறைக்கு வந்ததும் ஓடிவந்திடுவோமே. ரஸ்தூரித்தெரு ஜீரா உருண்டை சாப்பிடாமல் நமக்குச் சுகக்கேடு வந்திடுமல்லவா?”, எனச் சிரித்தார்.

இப்படியாக வைகாசி மாதம் 1840களின் தொடக்கத்தில் மொரீஸியஸ் வந்த ஹச் எம் எஸ் லிவர்பூல் கப்பலில் பத்தாயிரம் மூட்டை அரிசி, பருப்பு, கோதுமை வகைகள், இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட சாராயக்குடுவைகள், பருத்தி வகைகள், நானூற்றுக்கும் மேற்பட்ட ராஜபாளையம் நாய்கள், மதுரை ஜல்லிகட்டு மாடுகள், ஆயிரம் கம்மம் மிளகு மூட்டைகள் எல்லாவற்றோடு வர்த்தகத்தை எதிர்பார்த்து வங்காளத்து ஜமீன்கள் புது நிலத்தை எதிர்நோக்கிக் கிளம்பினர். லண்டனில் ஆக்ஸ்போர்ட் வீதியில் வாங்கியிருந்த ரஷ்ய நீள்தொப்பியும், கழுத்தைப் பிடிக்கும் யாக்‌ஷையர் டையும் அணிந்த தீர்க்கேஷ்வரர் கூட என்னையும் சேர்த்து மூன்று அறை முழுக்க சரக்குகளும் நான்கு வேலையாட்களுமாகப் புறப்பட்டோம்.

நான்கு நாட்கள் தள்ளாட்டத்துக்குப் பிறகு எனக்கு தலைசுற்றல் நின்றது. ரெண்டு நாட்களில் கடும் சூறாவளியில் நிலைகொள்ளாது தவித்த கப்பல் கல்கத்தாவுக்குத் திரும்பிவிட எண்ணியதுபோல வட்டம் அடித்தது. ஜன்னலுக்கு அருகே இருந்த நான் காற்று புகமுடியாத அறையில் தலைசுற்ற அமர்ந்திருந்தேன். சந்திரநாகூரிலிருந்து கல்கத்தா துறைமுகப் பகுதிக்கு கல்பாவித்த ரஸ்தாவில் குண்டும்குழியுமாக வந்த குதிரை வண்டிப்பயணம் சுகமாகப்பட்டது. இப்படியாக பதினான்கு நாட்கள் பயணம் செய்து போர்ட் லூயி துறைமுகத்தை அடைந்தபோது முதலில் கேட்டது கூச்சலும் குழப்பமும்தான். கல்கத்தா துறைமுகத்தின் அளவில் சிறு துண்டை உதறிப்போட்டது போல இருந்தது. பெயர் மொர்ரீஸியஸ் தீவாம். மேசான்களின் படுக்கை அறையின் ஓரத்தில் மூத்திரக்குடுவையிலிருந்து வரும் போல உலகில் எங்கும் இருக்காது என நினைத்திருந்தாலும் போர்ட் லூயி துறைமுகத்தின் வாடையில் மேலும் சில திரவியங்கள் கலந்திருப்பதை நுகர முடிந்தது. உலர்ந்த புல் போலிருந்த கறுப்பின அடிமைகளின் தலையிலிருந்து வியர்வை வழிந்து உடம்பு முழுவதும் ஒட்டியிருந்தது. ஒவ்வொரு அடிமையும் எறும்பைப் போல தன்னைவிட மூணு மடங்கு பாரமான மூட்டைகளை சுலபமாகத் தலையில் ஏற்றிவைத்திருந்தான். சீன பெண் ஒருத்தி தலையிலிருந்து கட்டிய கயிறில் ரெண்டு குடுவைகளைச் சுமந்தபடி மீன் விற்றபடி நடந்தது ஏதோ புதுச்சேரி துறைமுகத்தில் நடப்பது போலிருந்தது. கடலோரப்பகுதிகளுக்கும் புத்துலக வாசிகளுக்கும் அப்படி என்னதான் பிணைப்போ? ஏதேனும் ஒரு வகையில் பிழைக்க வழி கிடைத்துவிடுவது மட்டுமல்லாது பலவிதமான மனிதர்களின் சுகமும், துக்கமும் கூடும் இடமாக இருந்துவிடுகிறது. கடல் தெய்வங்களும், ஆழ்கடல் பூதங்களும், மூத்தகுல மூதாதைகளின் எதிரொலியும் பிறந்து நிலத்தடி ஊற்று வெளிச்சத்தைப் பார்ப்பது போல பாழ்நிலத்தில் மக்களின் கதைகளாக மாறும் தனிச்சிறப்புதான். தூரத்தில் சாட்டையால் அடிவாங்கும் க்றேயோல் கிழவர்கள் இருவரின் சத்தம் கேட்டது. இத்தனை கதைகளும், வாழ்த்துகளும், சாபங்களும், இடர்களும், அவலங்களும், துக்கங்களும் சொல்லிக்கொடுத்ததுதான் என்ன? என் சாபத்தின் விளைவில் இங்கு வந்தது இந்த நிலத்தின் தீயூழாக அமைந்திடுமோ? நயினாப்பிள்ளை சொல்லிக்கேட்ட மாதவி கதை கூட கடலோரம் நடப்பது தானே? பூதங்களும், கடவுள்களும் இடையிடை வராத கதையில் சீதை யார்? கழுகுகளும், குரங்குகளும் பூதங்களுக்கும், கடவுளர்களுக்கும் இணையாக உதவும் பொருட்டு வரும் கதைகள் சொல்வதென்ன? ஆழிப்புள் கூட்டம் ஒன்று அடித்தொண்டையிலிருந்து கரைந்தபடி வானில் வரிசையாகச் சென்று மக்கள் புழங்காத பகுதியிலிருந்த பாறைகளின் சரிந்து இறங்கின. இன்று இவை சீனக்கிழவர்களுக்கு உதவ முடியுமா? கடலிலிருந்து புறப்படும் பூதகணம் கப்பலின் சவுக்குகளைப் பிடுங்கிக்கொள்ளுமா? கடவுளரின் கால்பட்டு அகவிடுதலை பெறும் கணங்களும் சாத்தியமா? இத்தனை கதைகள், சொல்ல உணர்த்தும் செய்திகளின் பெறுமானம் என்ன? நானும் பல்லாயிரக்கணக்கான கதைகளையும் நிகழ்வுகளையும் இந்த எழுபத்தைந்து வருடங்களில் பார்த்துவிட்டிருந்தாலும் அவற்றின் சாரம் புரியாது குழம்பித்தான் போகிறேன். இதோ, கிட்டத்தட்ட முழுவதுமாக மூழ்கிக்கொண்டிருக்கும் நிலையில் என் படத்திலிருந்த மதாமின் ஈர விழிகளில் தண்ணீர் தளும்பி நிற்கிறது. அவரது தங்க நிற கீழுடுப்பு அலையில் அளைந்து கரைந்தபடி நீரின் ஆழத்துக்குச் செல்கிறது. என்னுடைய ஆசையெல்லாம் இந்த நொடியில் தெரியும் மதாமின் கண்களை நான் மறவக்கூடாது. தாயும் மகனும் போல. அக்கண்கள் மூழ்கினாலும் மறையக்கூடாது. அதன் வலிகளை நான் பார்த்தபடி மிதக்கவேண்டும்.

காயங்களின் பிளவுகள் மீது

ஒரு சிறு உயிர்ப்பு மிச்சம் இருக்கும்

மதாம், உன் காலடியில் எஞ்சியிருக்கும்

எருக்கஞ்செடிகளிலும்

முதலில் சுருங்கும்

பின்னர் உயிர்ப்பு தளிர்க்கும்

காயங்களைப் போல

காய்ந்த நிணங்களே

ரணத்தின் வடுக்கள்.

ஆம், மதாம்

உங்கள் ரணங்களின் ஸ்பரிசம்

என்றென்றும் என் மீது அமைவதாக.

**

நாங்கள் வந்து சேர்ந்த ஒரு வாரத்தில் எகிப்திலிருந்து வந்த புது பன்னிரெண்டு பேர் அடங்கிய அரசுக்குழு போர்ட் லூயி டவுன்ஹாலில் கூடி கும்பனியாருடன் எடுத்த தீர்மானத்தின்படி எகிப்து கடல்வணிகத்துக்காக புது கால்வாய் கட்டும் பணிகளுக்கான கூலிகளை மொரீஸியஸ் தீவிலிருந்து பெறப்போகும் ஒப்பந்தம் கையெழுத்தானது. தீர்க்கேஷ்வரர் மேற்பார்வையில் கட்டப்படப்போகும் மருத்துவமனை பணிகள் தற்காலிகமாகத் தள்ளிவைக்க வேண்டும். அல்லது தீர்மானம் செய்த பணத்தை விட ஒன்றரை மடங்கு அதிகமாகும் எனவும் கும்பனியார் தெரிவித்ததில் தீர்க்கேஷ்வரர் மிகுந்த வருத்தம் அடைந்தார். ஒன்பது மாதத்தில் ஒரு தளத்தில் மலேரியாவுக்கான மருத்துவ அறைகள் கட்டிவிடமுடிந்தால் ரெண்டு வருடங்களில் ரங்கூனைவிட ஐந்து மடங்கு பணம் சம்பாதித்துவிடலாம் என எண்ணியிருந்த அவரது திட்டத்தில் விழுந்தது அடி. ரெண்டு மடங்கு கூலிகொடுத்து கட்டிடத்தைக் கட்டி முடிக்க கிழக்கிந்திய கம்பனி முதலாளிகள் தயாராக இல்லாததோடு கால்வாயைக் கட்டும் பணி இன்னும் அதிக அரசியல் வாய்ப்புகள் நிறைந்தது. இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் எகிப்து ராஜா மூவருக்கும் ஆதாயம் வரும் கால்வாயாக இருக்கும் என்பதால் வர்த்தகமும், வாணிபமும் மும்மடங்கு பெருகிவிடும். கிழக்கிந்திய கம்பனியின் அடுத்தடுத்த செயல்திட்டங்களின் மூலம் இந்தியா நிலப்பகுதி ஐரோப்பாவுக்கு அண்டைவீடாக மாறிவிடும். ஐநூற்றுக்கும் மேற்பட்ட குறுநாடுகளைக் கொண்ட இந்தியாவை ஆள்வதற்கு இதை விடப்பெரிய சந்தர்ப்பம் ஐரோப்பிய நடுத்தரவர்க்கத்தினருக்கு வராது. பள்ளிப்படிப்பை முடித்த சிறார்கள் மெட்ரிக் எடுத்து விட்டகுறையாக தேறிவிட்டாலே சிறு மன்னனின் அதிகாரத்தோரணைவிட அதிகக் கனவை ஏற்படுத்திக்கொண்டனர்.

தீர்க்கேஷ்வரர் இரு தலைக்கொல்லி எறும்பானார். மலபாரிப் பகுதிகளுக்கு மருத்துவம் செய்ய வந்திருந்த திருச்சபை பாதிரியார்கள் முழு நன்னம்பிக்கை மக்களிடையே உருவாக்க முடியவில்லை. சுகாதாரமற்ற நிலப்பகுதியாக போர்ட்லூயி துறைமுகத்தை நெருக்கியிருந்த கரும்புத்தோட்டங்களும், புகையிலை வரப்புகளும் மலேரியா பரவ புதுவிதமான மக்கள் கூட்டத்தை அளித்தபடி இருந்தது. புதிதாக இந்தியாவிலிருந்து வரும் மலபாரிகளும்,கிழக்கு சீன மக்கள் உடலும் வியாதி விதைநிலமானது. கொத்து கொத்தாக மடிந்த கூட்டத்தைப் புதைத்த வாசம் போவதற்கு முன்னரே கப்பலில் புது கூலிக்கூட்டம் எவ்விதமான தடுப்புமற்று ஊருக்குள் நுழைந்துவிடுகிறது.

ஜெசூயிஸ்ட் பாதிரிகளின் அச்சுறுத்தல்களும், மன்றாடல்களும் ஏதோ ஒன்றிரண்டு நபர்களை வசியம் செய்தாலும் பிற தெய்வங்களிடம் மன்றாடச் செய்யுமளவு அவர்களது வாய்ஜாலத்தில் சக்தி இல்லை. மலபாரிகளுக்கு காட்டுமிராண்டிக் கடவுகள்களும், பிடாரிகளும், ரத்த பலி கேட்கும் உக்கிர காளிகளையும் தவிர எவ்விதமான கடவுள்களும் புரியாது எனும் முடிவுக்கு அவர்களும் வந்திருந்தனர். கிடைத்த ஒன்றிரண்டு க்றேயோல் மக்கள் கூட்டத்தினரை மயக்கி தங்கள் ஐரோப்பிய மருத்துவத்தை சோதித்தனர்.

தீர்க்கேஷ்வரர் சில ஜெசூயிஸ்ட் மருத்துவர்களை வீட்டுக்குக் கூப்பிட்டு விருந்துகொடுத்தார். ஐரோப்பிய கலைஞர்களின் அறிமுகம் தெரிந்தவர்கள். சிப்பியைத் திறந்து பார்த்து பழுதில்லாத முத்து கிடைத்தவர்கள் போல அவர்களது பேச்சில் என்னைப் பார்த்த பெரு மகிழ்ச்சி தெரிந்தது. அதுவும் சந்திரநாகூர் குறுநில மன்னனின் படம் எனத் தெரிந்ததும் கனவு வாழ்வு எங்கிருக்கிறது என்பதை அறிந்தனர். தீர்க்கேஷ்வரர் வழியாக சந்திரநாகூர் போன்ற சிறு ஊரில் ஊதியம் செய்ய வாய்ப்பு கிடைத்தால் இந்த கந்தக மண்ணிலிருந்து எப்பேர்ப்பட்ட விடுதலை எனும் கனவு அவர்களுள் விரிந்தது. “யானை கூட பல உண்டு இல்லையா”, எனக் கேட்ட இளைய பாதிரியின் விழிகள் என்னை விழுங்கிவிட்டிருக்கும்.

இயல்பிலேயே கரப்பான்பூச்சியைவிட பிழைக்க அதிக வழி தெரிந்த தீர்க்கேஷ்வரர் கும்பனியாரின் பாதிரிக்குழுவைக் கொண்டு தனது மருத்துவமனையின் அடுத்த கட்டத்திடங்களை நகர்த்தத் தொடங்கினார். காரியங்கள் மலேரியா பரவும் வேகத்தைவிட அதி வேகத்தில் நடந்து முடிந்தன. எகிப்து கால்வாய் கட்டும் பணியும் எகிப்திய மன்னரின் பிரான்ஸ் நாட்டுனுடைய நட்பின் காரணமாகச் சிறு தடையை சந்தித்தது. இங்கிலாந்து கம்பனியார் கொடுத்த திட்டத்தைக் கொண்டு கால்வாய் கட்டத்தொடங்கினாலும், மாவீரன் நெப்போலியனின் ஆரம்பகாலத்திட்டமே இதற்கு அச்சாணி எனவும் பிரெஞ்சு தேசம் எகிப்தை ஆண்டு வந்த போது பாதியில் கைவிடப்பட்ட திட்டங்களைத் தொடங்க வேண்டும் எனவும் இரு நாடுகளுக்கும் சண்டை மூண்டது. தற்போது எகிப்தை ஆண்டு வந்த இங்கிலாந்து ராணியுடைய கும்பனியாரின் கொள்ளையைத் தடுக்க பிரெஞ்சு அரசோடு கூட்டு சேரத்துடித்த எகிப்திய மன்னனின் மிகச் சமயோஜிதமானத் திட்டம் என டவுன்ஹாலில் பேசிக்கொண்டனர். அந்தக் கால்வாய் கட்டாமல் போவதே மொர்ரீஸீயஸ் துறைமுகத்துக்கு இந்தியா செல்லும் கப்பல்கள் வரக்கரணம். கால்வாய் கட்டினால் வளம் குன்றிய பிரதேசமாக மொர்ரீஸியஸ் மாறிவிடும் எனும் பேச்சும் பரவலானது. இந்த உலகலாவிய அரசியல் சூழ்ச்சியில் அதிகம் நன்மை பெற்றது தீர்க்கேஷ்வரர் தான் எனத் தோன்றுகிறது. மளமளவென மருத்துவமனையின் அடுத்த திட்டங்களை பாதிரிக்குழு கம்பனியாரிடம் பேசிமுடித்தும் தீர்க்கேஷ்வரின் கனவு புது வடிவம் கொள்ளத் தொடங்கியது. இரு நாடுகளுக்கான அரசியல் குழப்பதை எதிர்பாராதவர் வைகுண்டத்தைப் பார்த்தவர் போல, “வெங்கடரமணா, தயாநிதியே”, என உருகி மருகினார். மலபாரிகள் இருந்த பகுதியில் மருத்துவமனைக்கு அருகே குண்டூர் சிற்பி செய்த விஷ்ணு சிலையை தறுவித்து சிறு ஆலயம் கட்டினார். கலசவிழாவுக்கு வந்திருந்த மலபாரிகளுக்கு இரு நாட்கள் அன்னதானம் உட்பட கறிச்சோறும் பரிமாறப்பட்டன. நான்கு மாதங்களாகக் கொள்ளை நோய் மலபாரிகளில் ஒரு சாராரைக் காணாமல் ஆக்கியிருந்த சோகத்திலிருந்து மீளும் விதமாக கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நெடு நாட்களுக்குப் பிறகு பலரும் வயிறு நிறையும்படி கறிசோறும் மீனும் உண்டனர். அள்ளி போடப்பட்ட வாழை இலைகளையும் மிச்ச சொச்சங்களையும் சுத்தம் செய்ய ஒரு வாரம் ஆனது. அடுத்த வாரமே கட்டணம் போட்ட மருத்துவ சேவையைத் தொடங்கிய தீர்க்கேஷ்வரர், கீத்துக்கொட்டாய் அமைத்து கூலித்தொழிலாளிகளின் வருடாந்திர ஐந்து ரூபாய் வருமானத்தில் ஒன்றரை ரூபாய் மருந்து செலவுக்கு எனும் நூதன திட்டத்தையும் அறிமுகப்படுத்தினார். டவுன் ஹாலிலிருந்து வந்த ஜெசூயிஸ்ட் பாதிரிகள் கிழக்கிந்திய கம்பனியுடனான ஒப்பந்தத்தில் தீர்க்கேஷ்வரர் மருத்துவ சேவைக்கான பகுதி ஒப்பந்தத்தையும் சேர்த்தனர். அதன்படி கூலிகளுக்கு மூன்றரை ரூபாய் கொடுத்தால் போதும் என்பதில் பல ஆயிரம் க்ரெளன்கள் சேமித்ததோடு மட்டுமல்லாது, ஒன்றைரை ரூபாய் வீதம் கொடுக்கவேண்டிய தொகையில் ஒரு கூலிக்கு ஒரு ரூபாய் வீதம் மருத்துமனை கட்டும் பணிக்கானது என தீர்க்கேஷ்வருடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டனர். எப்படியும் ரங்கூனிலும், சந்திரநாகூரிலும் ஊதியம் செய்ததை விட இரு மடங்கு பணம் சேர்ந்துவிடுவதில் தீர்க்கேஷ்வரருக்கு பரம சந்தோஷம். தினமும் அரைமணிநேரம் பிடில் வாசிக்கப்பழகியவர் ஒன்றரை மணிநேரமாக மாற்றினார். என் புகழைப்பாடிய ஜெசூயிஸ் பாதிரிகளின் ஆசைக்கிணங்க என்னை வரவேற்பறையிலிருந்து நீக்கி டவுன் ஹாலின் முக மண்டபத்தில் தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் பார்வையில் படும்படி வைத்தார். ராபர்ட் கிளைவின் ஆளுயர ராணுவ வீரர் உடுப்பிலிருக்கும் ஓவியம் என் முன்னே கம்பீரமாக வீற்றிருந்தது. அருகே பளபளப்பான மேனியில் தேஜஸுடன் அவரது கறுப்பு நிற குதிரை ராணுவ மரியாதைக்கான உடுப்புகளைப் போர்த்தியபடி நின்றிருந்தது.

என் படத்துக்குக் கீழே “French Officer’s family in Inde” என அழகாகப் பொரித்திருந்தார்கள்.

தீர்க்கேஷ்வரரின் மருத்துவமனை சேவை பல்கிப்பெருகியது. மலேரியா ஆட்கொண்டவர்கள் சொன்ன கதைகளைவிட தீர்க்கேஷ்வரரால் பிழைத்தவர்களது கதைகள் வேகமாகப் பரவின. என் கண் முன்னாலேயே அவரது மருத்துவமனை சேவை வெகுவாகப் பரவியது. இதுவும் நான் கொண்டுவந்த சாபத்தின் பலனாக இருக்கலாமோ? பலர் உயிர்பிழைக்கும் மருத்துவம் சாபமா? ஏன் இருக்ககூடாதா? வர்த்தகத்தின் பிழைப்பவர்களை மிருகமாக்குவது சாபமில்லாமல் என்னவாம்? அப்போதே நான் நிறமிழந்து போய்விட்டேன். இப்போது இந்த நீர் என்னைச் சூழ்ந்து அழிப்பது என்பது வெளிப்புற சீர்கேடு மட்டுமே.

பிரெஞ்சு ராணுவத்தை கடலில் தோற்கடித்து விரட்டிவிட்டு ராணியின் ஆட்சியை நியமித்திருந்தாலும் நில மக்கள் மனதில் இன்னும் அவர்கள் விரட்டப்படவில்லை. மக்கள் மனதில் தங்களை பிரெஞ்சுப் பிரஜைகளாகவே இன்னும் கருதும் போக்கை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த நினைத்த இங்கிலாந்து அரசின் தந்திரம் இரு ஆட்சியினரின் வீடுகளிலும் இருந்த எனக்குப் புரிந்த அளவுக்கு என்னைப் பார்க்க வந்த சாமானிய ஹிந்துக்குப் புரியவில்லை எனும் வருத்தம் இன்றுவரை என்னைத் துரத்தும் கனவாக இருக்கிறது. ஒரு வேளை நான் நம்புவது பிசகாக இருக்குமோ? அதிகாரத்துக்கும் சாமானிய வாழ்வுக்கும் இடையே இருக்கும் இடைவெளி அதிகம் மட்டுமல்லாது எதிரெதிர் துருவங்களாகவும் இருப்பதைப் பார்க்கிறேன். ஆனாலும் விட்டில் பூச்சிகளாக அதிகாரத்தின் கோரப்பிடிகளில் தங்களது விடுதலை இருப்பதுபோல சாமானிய மக்கள் விழுவதையும் பார்க்கிறேன். நயினாப்பிள்ளையைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் பூமிப்பிளவுபோல முதுகைக் கூறுபோட்டிருந்த வடுவின் நினைப்பு வராமல் இருப்பதில்லை. அவரது வாழ்க்கையை இருபகுதிகளாக வகுந்த நிகழ்வாகவும் அதைக் கொள்ளலாம். ஆனால் நான் எதிர்பாராத விதத்தில் அவர் மாறியதை இன்றும் நம்ப முடியவில்லை. மனித மனதில் அதிகார வேட்கை, களிப்புக்கான தேவை இத்தனை உச்சகட்டமான அலைகழிப்புக்கு ஆளாக்கும் விசை இத்தனை வீரியம் கொண்டதா? உயர்தர ஆடையுடன் மேலே பூணூல் போலப்போர்த்திய பட்டு அங்கவஸ்திரத்தோடு தாம்பீரமாக இறங்கி வந்த நயினாப்பிள்ளை இன்று டவுன் ஹால் வந்தால் சாஷ்டாங்கமாக என்னைப் பார்த்து கும்பிடுவாரா? இல்லை, நான் என்றால் என்னுள்ளே இருக்கும் ராஜா, மதாம் மீதான மரியாதை மனதுக்குள் இருக்கும். ஆனால் இன்று அவர்கள் வாழ்ந்து கெட்ட குடும்பம். அவர்களை ஆட்டிப்படைத்த கடைசி நாட்கள் நாயினும் கடையேனின் வாழ்வை விட மோசமானது. நான் கேள்விப்பட்டவையே இப்படி இருக்கும்போது தீர்க்கேஷ்வரின் வீட்டின் ஓரத்தில் யாருமற்ற தனிமையில் கழித்ததை என் பாக்கியம் என்றே நினைக்கிறேன். மதாமை என்னால் எந்த நிலையிலும் பார்த்திருக்க முடியாது. நயினாப்பிள்ளையும் இப்படி யோசிப்பாரா? மதாமின் பிரத்யேகப் பிரேமையைப் பெற்றவர் நிச்சயம் அதன் சிறு துளியையேனும் தன்னுள் வைத்திருக்கக்கூடும். எல்லாம் கைவிட்டுப்போகும் வேளையில் அவர் ஒளிகூடிய மதாமின் விழிகளைப் பார்த்து தாள் வணங்கி குப்புற விழுந்துகிடக்கலாம்.

*

உண்மைக்கும் ஞாபகத்துக்கும் இருக்கும் தொடர்பு எப்படிப்பட்டதாக இருக்கும்? எனது ஞாபகங்கள் எல்லாம் நாட்பட துல்லியமாகிக்கொண்டே போவது போன்ற கடுந்துயரம் எதுவும் இருக்க முடியாது. புதுச்சேரியில் கடைசி நாட்களில் ராஜா சாப்பிடக்கூட மறந்து, மலஜலம் எல்லாம் படுக்கையில் கழித்திடும் துன்பத்தை ஒப்பிட்டுப்பார்க்க முடியாது என்றாலும் என் ஞாபகத்தின் அப்பழுக்கற்ற தருணங்கள் அலைபோல ஒன்றை விஞ்சி மற்றொன்றாக எழும்பியபடி இருக்கின்றன. என்னைப்போல எல்லா புகைப்படங்களுக்கும் இப்படி ஒரு தன்னுணர்வு இருக்கும் எனச் சொல்லிவிடமுடியாது என்றாலும் எல்லாமே உண்மையாகவும் இருக்க முடியாது என்பதை இப்போது உணர்கிறேன். நினைவிலிருந்து துல்லியமாகச் சொல்வதாக இருக்கும் சம்பவம் உண்மை என நான் நினைத்ததற்கு மாறாக இருக்கக்கண்டு திகைத்திருக்கிறேன். தொல்பொருள் ஆய்வாளர் ஒரு முறை தீர்க்கேஷ்வரரைப் பார்க்க வந்திருந்தபோது இதையே குறிப்பிட்டார். “எகிப்திய ஃபாரோ மன்னனின் பொருட்களைத் தொட்டுப்பார்க்கும்போது காலத்தில் உறைந்துபோன கனவொன்றை மீட்டுவேன் என எதிர்பார்த்து இங்கிலாந்திலிருந்து பயணம் செய்தேன், ஆனால் நான் தொட்டது என்னவோ குளிர்ந்த சிறு உலோக வஸ்து. எவ்விதமான ஞாபகங்களும் காலக்கணக்கும் இல்லாத ஒரு பொருள். ரெண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஃபாரோ மன்னனுடைய சயன அறை வாசனைக்குழாய் என எப்படி நம்ப முடியும்? மண்ணின் ஆழத்தில் கிடைத்ததாலா?அல்லது தாழியினுள் அழுகாமல் தோல்பதனப்படுத்தப்பட்ட பிணத்தோடு அடைக்கப்பட்டதாலா? ” – என்னை அலைக்கழித்த உணர்வை அவரும் பேசுவதைக் கண்டபோது என் குரலாகவே அது ஒலித்தது. எனக்கென ஒரு ஒலியை அல்லது குரலை இதுவரை நான் யோசித்து வைத்ததில்லை. ஊமைக்கு குரலின் மீதிருக்கும் வசீகரம் ஏனோ என்னைத் தீண்டவில்லை. ஆனால் அன்று அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் என்னுடையதாகவே உணர்ந்தேன்.

எது காலாதீத உணர்வினை பொருட்களுக்கு ஊட்டுகிறது? ஞாபகங்கள் அரித்த வெறும் படக்கூண்டாக நான் இருக்கையில் எது என் நினைவுகளை சிப்பியாக மாற்றியது? நினைத்துப்பார்த்திராத அளவுக்கு இடங்கள் மாறியதில் ஏற்பட்ட நிலக்குழப்பங்கள் வரிய சிந்தனையால் வந்ததல்ல மாறாக மூச்சிலும், வாசத்திலும், உணர்விலும் ஏதோ ஒரு தெளிவு கூடியதால் உண்டான அபிரிதமான துல்லிய நினைவுகளின் தொகுப்பால் வந்த குழப்பங்கள். இத்தனையும் நடந்ததா அல்லது என் கற்பனையில் பிண்ணியிருந்து நம்பும்படியான நிகழ்வுக்கோவை வலையாக மாறியதா? இத்தனையும் கற்பனையில் உருவாகியிருந்தால் இத்தனை ஆழமான இணைப்புகள் மிகக்கச்சிதமாக பொருந்திக்கொள்ளும் வாய்ப்பு உள்ளதா?

*

மொர்ரீஸியஸ் தலைநகரான போர்ட் லூயி டவுன் ஹாலுக்கு வந்தபின் என் வாழ்க்கை மாறிவிட்டது. போலி டாம்பீரத்தின் நிழலில் சம்பிரதாயமான வார்த்தைகளைக் கேட்டுப் பழகிய என் காதுகள் நாளாவட்டத்தில் கேட்கத்தேவையற்று இருந்தன. அதை ஒரு பிரத்யேகமான பயிற்சி மூலம் நான் செய்திருந்தேன். என் முன்னே வந்து நிற்பவர்களது உதடுகளின் அசைவைக்கொண்டு அவர்கள் சொன்னவற்றை நான் கேட்டேன். ஆங்கிலேய அதிகாரிகளும், கும்பனி ஆட்களும், ஹிந்து வணிகர்களும், மலபாரி மாலுமிகளும் வந்துபோகும் டவுன் ஹாலில் போட்டி பொறாமைகளும், ஆடம்பர செலவுகளும், கணக்குகள் போட்டு கவிழ்கும் வாணிபங்களும், பொய் புரட்டல்களும் நீராவியைப் போல மிதந்தன. அதிகார வேட்கை மிகுந்த கொடூரமான பொய் உலகுக்குள் நானும் ஒருவன் எனும் எண்ணம் வலுக்கும்போது என் அழகு மீது பெரும் அசூசையும் வெறுப்பும் உண்டானது. புதுச்சேரியிலும் சந்திரநாகூரிலும் அரசகுடும்பங்களின் மதிப்பீடுகளின் அடையாளமாக இருந்ததிலிருந்து எப்பேற்ப்பட்ட இறக்கம் இது? அரசராளும் யுகத்தில் நடந்த அவலங்களுக்கு நான் சாட்சியாக இருப்பதில் குறைந்தபட்சம் ஒருபக்க விசுவாச தோரணை இருந்தது. ராஜகுடும்பம் மீதான விசுவாசம், மக்கள் மீதான கருணை கொண்ட ஒருசிலரேனும் இருந்தார்கள். என் மதாம் போல, பாகூர் மக்களைப் போல. டவுன் ஹால் மத்தியில் வீற்றிருந்தாலும் என் அவமானகரமான நிலையை அழிக்க என் தீயூழ் உதவாதா.

கலங்கலாக எழும் சூரியனின் சிறு கீற்று என் மீதும் பட்டுத்தெளிப்பதை நான் முகச்சுளிப்போடு ஏற்றுக்கொண்டேன். என் மீது நேராக விழுந்ததில் சூரியனின் நிர்தாச்சன்யமற்றதன்மை ஒரு மாற்று குறைந்துதான் போயிருக்கும். ஒரு வாளின் கூர்மையோடு கிழித்து இறங்கும் சூரியனின் வெளிச்சக்கீற்றுகள் ஒரு நாள் என்னைச் சுட்டு எரித்துவிடும் எனத் தலைவணங்கிக் காத்திருந்தேன். ஏதோ சிரங்கு உள்ளவனைத் தொடுகிறானே ராமன் என தன்னை  அணைத்தபோது குகன் கூசினான் எனப் பாட்டு கேட்டிருக்கிறேன். அந்தத் தீமைகளை சூரியனின் தினக்கதிர்கள் என்னைத் தீண்டி இந்த கசடுகளை நீக்கிவிடும் எனக் காத்திருந்தேன்.

அந்த வேலையைச் செய்ய அது தன் மறுவடிவான நீரைத் தேர்ந்தெடுத்திருந்தது.

அப்போதுதான் நான்காம் முறை நான் சூறாவளியைப் பார்த்தேன்.

அடக்கமுடியாத அழுகையைப் பீரிட்டுத் துடிக்கும் உதடுகள் நடுங்க பசியில் உடைந்து துடிக்கும் ஒரு குழந்தையின் கதறலுடன் அன்று அதிகாலை விடிந்தது. சன்னமான துளிகளாக ஈரம் படர்ந்து என்னை அழிக்கும் நீரின் வேகமல்ல, அனைத்தையும் பொடியாக்கி தனதாக்கிக்கொள்ளும் கொடுமழையின் தீவிரம். கப்பல்கள் நங்கூரமிட்ட திசைகள் தெரியவில்லை. கப்பல் உயர ராட்ஸச அலைகள் பெரும் சுவரென 1878ஆம் ஆண்டு ஐப்பசி மாதத்தை கடைசி நாட்களாக ஆக்கும் உக்கிரத்துடன் போர்ட் லூயி துறைமுகத்தை மோதியது. சூறாவளிக்காற்றில் தோப்பில் சடசடவென கரும்பும் புன்னையும் பெரும்கிளை முறிய சரிந்தன. காட்சிகள் எதுவும் தெளிவாக இல்லை. உக்கிரமாகச் சீறியபடி உள் நுழைந்த கடலுக்கு எவ்விதத்திலும் குறைவில்லாது சூறாவளி சுழன்றுத் தாக்கியது. மக்கள் கூட்டம் கூட்டமாகத் தங்களது ஆடுகளையும் கோழிகளையும் தோளிலும் தலையிலும் தூக்கிக்கொண்டு மேட்டை நோக்கி ஓடினர். மேட்டின் மீதிருந்தவர்கள் வானை மூடிப் பரவிய ஒரு பெரும் நீர்ச்சுவர் கடலிலிருந்து கிளம்பி கரை நோக்கி வருவதைக் கண்டனர்.

டவுன்ஹாலின் டாம்பீர தூண்கள் முழுகக்கப் பிளவுபட்டு முறிந்தன. காற்றும் நீருமாக உருமாறிய கதிரவனுக்கு அன்று விடுமுறை. குடிசைகளும், தோட்டத்து மண்டிகளின் காப்புச்சுவர்களும் தூக்கி வீசப்பட்டன. சுற்றிலும் நீரின்றி வேறில்லை. நீருள் ஒளிபரவுவது போல ஒரு மெல்லிய வெளிச்சம் ஊரைச்சூழ்ந்திருந்தது. நீரோட்டங்கள் பரவிப்பரவி மூக்கையன் மலைச் சிகரத்தை அடைந்துவிட்டது. டவுன்ஹாலின் இடைவெளிகள் மொத்தமும் நீர்ப்பரப்பில் மிதந்தன. என் மீது கூரை விதானங்களின் மரத்தூண்கள் கவிந்தன. வானும் மண்ணும் என் மீது பரவியிருந்தது.  வீதிகளிலும் வெளித்தோட்டத்திலும் பிரமாண்டமான காட்டாறு ஓடியது. கோயில்கள் சரிந்தன. வீடுகள் சுவரில்லாத எல்லையற்ற உலகில் இணைந்தன. சாதாரண மழை கொண்டுவரும் வானல்ல இது. மண்ணையும் விண்ணையும் இணைத்து பேருருவாக நிற்கும் நீர்த்திரை. மதாமின் ஆவேசம் போல. நயினாப்பிள்ளையின் சிரிப்புபோல. ராஜாவின் ஆந்தைப்பார்வையைப் போல. தீர்க்கேஷ்வரரின் பிடில் சத்தமும் இணைந்துகொண்டதுபோல.

நான் பார்த்தவரை எந்நிலமும் ஒரு மாபெரும் குடலே. எதையும் உண்டு செரித்து வேண்டாவதற்று உமிழ்ந்து கடந்து நிற்கும். அலைகளற்ற நீர்த்தாரைகள் ஒரு பெரும் பாறை நகர்வது போல உறுமலோடு ஊரை அணைத்துச் சென்றது. அது தொட்ட அணைத்தும் ஆர்ப்பரித்து அதிரத்தொடங்கியது. மாபெரும் சங்கமித்திரையாக ஆன நிலமே ஒரு பெரிய தியானவளியாகவும் மாறிய தருணம். நான் வெறித்த பார்வையுடன் இது அனைத்தையும் நீர்பிம்பத்தில் பார்த்திருந்தேன். என் முன்னே சிறு அசைவும் அப்பெரிய நீர்ப்பாறையின் பிம்பமே என உணரத் தொடங்கியபோது நான் அமைதியடைந்தேன். மிகவும் பாதுகாக்கப்பட்ட ரகசியம் ஒன்று ஒரே கணத்தில் எல்லாரும் அறியும் ஒன்றாக மாறிவிட்டதாகத் தோன்றியது. மொத்த நினைவுகளையும் கசடுகளையும் கீழ்மைகளையும் அள்ளிச்செல் என அந்த நீர்த்தாரையின் அணைப்புக்காக புலன் அனைத்தையும் திறந்து காத்திருந்தேன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.