நான்கு கவிதைகள்

சாளரம்

சாளரம் என்று அழைக்கப்படும் அது ஜன்னல் என்றும் மொழியப்படுகிறது.
இடத்திற்கு இடம் மாறுபட்டிருந்தாலும் வாஸ்த்து படி சில இடங்களிலும் காட்சிக்காக சில இடங்களிலும் வெளிச்சத்துக்காக சில இடங்களிலும் வைக்கப்படுகிறது
கார் காலத்தில் வீட்டுக்குள் அடைபட்டிருக்கும் குழந்தைகளுக்கு நண்பனாக சாரலை அள்ளி தெறிக்கவும்
கோடை காலத்தில் வீசும் காற்றை அறைக்குள்ளே தரும் கருவியாகவும் பார்க்கப்படுகிறது
வீட்டுக்குள்ளே கொசுக்கள் வந்தாலும் அவை வெளியேற சிறு துளைகளும் தருகிறது
திறக்கப்படாத ஜன்னல்களில் தூசுகள் படிந்திருந்தாலும் ஒட்டடைகள் பிடிந்திருந்தாலும் கரையான்கள் கூடு கட்டியிருந்தாலும்
திறந்த ஜன்னல்களில் காட்சிகள் நிறைந்திருந்தாலும்
அவைகள் நிறத்தால் மரத்தால் அளவால் மாறியிருக்குமே தவிர பார்வையாளரின் சாட்சிகளில் மாற்றமலிப்பதில்லை

அ. ஜோதிமணி

~oOo~

பெயர்கள்

பெயர்களைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?
வெள்ளம் வடிந்த நதிக்கரையின்
பாசி பிடித்த கடைசிப்படியில்
மல்லாத்திக் கிடந்த தவளையின்
அடிவயிற்று வெண்தோல் தான்
என்னிடம் சொன்னது,
பெயர்கள் காலமற்றது என்று.
பின் கறிக்கடை பெஞ்சில் அடுக்கி வைத்திருந்த
கன்றின் தலைகளில்
விழிகளில்லாமலிருந்த ஒன்று
என்னை அழைத்து பற்கள் காட்டிய பொழுது தோன்றியது
பெயர்கள் மூலங்களுமற்றது என்று.
பின் சுடுகாட்டு சுடலையின் தலையில்
பேண்டு கொண்டிருந்த
கருஞ்சிறகு சேவல்
சிவந்த சிறகு கோழியின் மேல்
குந்தி உட்கார்ந்தவுடன்
பெயர்கள் இருப்பினைக் கடப்பதைப் பார்த்தேன்.
பின் தவிர்த்துவிடலாம் எதையும், என்ற நினைப்பில்
பாலம் கடந்து
எங்கோடி கண்டனை விளித்து
வம்பழந்து
ஊர்ப்பாடு புலம்பி
முதுகு காட்டிக் கொண்டே
வீடு திரும்பும் வழி முச்சந்தியில்
ரத்தம் சொட்டப்பிளந்து கிடந்த
பூசணிக்காய்தான்
இறுதியில் உண்மையைச் சொன்னது
பெயர்கள் பெயர்களாகவே இருக்க விரும்புவதில்லை என்பதை!

நந்தகுமார்

~oOo~

ஒரு கடவுளும் சில மீன்களும்

கொஞ்சம் நீர்
ஒரு தொட்டி
சில மீன்கள்…
ஒரு மீன்கடவுள்
மீனுலகை படைத்தார்

உணவிடுவதும்
நீர் மாற்றுவதுமாக
காத்துவந்தார்
மீன் கடவுளுக்கு மீன்களைத் தெரிந்திருந்தது
மீன்களுக்கு மீன்கடவுள் பற்றி
தெரியாதிருக்கலாம்
தெரியாதிருப்பதுதானே கடவுள்
என்று கர்வம் கொண்டார்

ஒரு முறை மீன் கடவுள்
தொட்டியை அதிரவைக்கக் கலங்கிய மீன்கள்
அவரை மீன் சாத்தானாக கருதியிருக்கலாம்

ஒரு சுபதினத்தின் காலையில் மீனொன்று
அவரின் அனுமதியின்றி
செத்து மிதக்க
அது ஒரு தற்கொலையென்று அறிவித்தார்
எதற்காகவோ மீனிரண்டு
சண்டையிட மீன்கடவுளின்
நடுவுநிலை
தடுமாறியது

மீன் மொழி மீன் வலி மீன் காமம்
எதுவும் புரியாமல் போக
பராமரித்துச் சலித்துப்போனார்
மீன் கடவுள்
விரக்தியில் மீனுலகை
கைவிடுவதாக அறிவித்தார்
மீனுலகின்
இறுதி நாளையும்
உறுதிசெய்தார்

விபத்தொன்றில் மீன் கடவுள்
மரித்துப்போக
இது குறித்த எந்தச் சலனமுமில்லாமல்
நீந்திக் கொண்டிருந்தன மீன்கள்.

நிலாரவி

~oOo~

அது குக்கர் கூவாத காலம்

மனதால் மநுவின் காலத்தில் வாழ்கிறாய்.
பெண்ணையொரு பொருளாய் நினைத்த காலம்.
பெண் ஆணுக்கு அடங்கியிருந்த காலம்.
அது குக்கர் கூவாத காலம்.
இறந்த காலம். மறந்துவிடவேண்டும்.
திரும்ப வராத கடனைப்போல.
நம் காலம் நூடுல்ஸ் காலம்.
மெழுகுவீடுகளில் வசிக்கிறோம். அதனால்
பாண்டியா பொறுமையில்லையேல் இல்லறமில்லை
அவள் உன் இல்லத்தரசி.
அவள் அவளாயில்லாத நாட்கள் ஒரு பெண்ணுக்கு
அவ்வப்போது வந்து போகும். அந்த நேரம்
அடுத்தவீட்டுக்காரி அதிருஷ்டக்காரியாய் தெரிவாள்.
தனக்கு எவ்வித அடையாளமுமில்லையெனத் தோன்றும்.
மெய்ப்படாத கனவுகள் விசுவரூபம் காட்டும்.
உலகுடன் குத்துச்சண்டை போடும் கோபம் வரும்.
உன்னிடம்தான் கோபத்தைக் கொட்டமுடியும்.
கொட்டுகிறாள்.
உன்னை மணந்து நான் கண்ட சுகமென்னவென்று
உன்னை உலுக்கியிருக்கிறாள். அந்த நேரத்தில்
பெண்டாட்டி புளியமரத்துப் பேயானாலும்
பொன்னே மணியே செல்லமே வெல்லமேயென
மென்மையாய் வேப்பிலை அடிக்கவேண்டும்.
உனக்கு மண்டையில் முடியுமில்லை. மூளையுமில்லை.
விவாகரத்து செய்வேனென்று குதிக்கிறாய்.
வாய்க்கு ருசியாய் வக்கணையாய் வேளைக்குணவு
வெளியில் கிடைக்காது. நாக்கு செத்துப் போகும்
துறவியாகப் போகிறேனென்று கொதிக்கிறாய்.
விரகம் பீரங்கியாய் வீறு கொண்டெழும்போது
கலவிசுகத்துக்கென்ன செய்வாய்?
அதனால் அகமுடையாள் அம்பு பாய்ச்சும்போது
கல்லாயிரு. அல்லது புல்லாயிரு. பிறகுபார்,
காபி ஆறிப்போகிறதென்று கரிசனம் கசியும்.
பிள்ளைவிடுதூது வரும். பிறிதொரு நாள்
முல்லைச்சரம் முகத்துக்கு நேரே வரும்.
முந்தானை நெகிழும்.
இல்லறம் இனிதே நடக்கும்.

லாவண்யா

One Reply to “நான்கு கவிதைகள்”

  1. கவிஞர் நிலாரவியின் கவிதை வீச்சு கணிப்புகளுக்குள் சிக்காமல் விஞ்சி நிற்கிறது. கவிதையின் கணபரிமானம் எண்ணி எண்ணி வியக்க வைக்கிறது. நன்றி சொல்வனம் & லாவன்யா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.