உடல் மிகு தடிப்பு – காரணங்கள், விளைவுகள்

மரணத்திற்கும் வலுவிழப்பிற்கும் காரணமாயுள்ள முதல் பத்து நோய்களில் ஏழு நோய்கள் நீண்ட கால நோய்கள். அந்த ஏழுநோய்களில் பலவற்றிற்கும் காரணமாயுள்ளது பல மருத்துவ அமைப்புகளால் ஒரு நோயாகவே கருதப்படும் உடற்கனமும், உடற் தடிப்புமேயாகும். இவற்றை அளக்க, பி. எம். ஐ. (பாடி மாஸ் இண்டெக்ஸ்) என்ற அளவை முறை பயன்படுகிறது.

ஒருவருடைய பி. எம். ஐ யை எவ்வாறு கணிப்பது?  ஒருவரின் எடையை (கிலோகிராம்கள்) அவருடைய உயர அளவின் (மீட்டர்கள்) சதுரத்தால் வகுத்தால் பி. எம். ஐ. எண் கிடைக்கும் (Weight in kilograms divided by height in meters squared). சிறந்த பி. எம். ஐ.  20-25 வரையாகும்.

பில்-மெலிண்டா அறக்கட்டளை நிதியுதவியினால், 195 தேசங்களில் சேகரித்த புள்ளிவிவரங்களின் வழியாக 1990லிருந்து 2015 வரை குழந்தைகள் – பெரியவர்களின் உடற்கனம் (பி. எம்.ஐ. 25-29), தடிப்பு (பி. எம். ஐ. 30- ற்கு மேல்) நிலைகளையும், வியாதி விவரங்களையும் பரிசீலித்ததில் கீழ்க்கண்ட முடிவுகள் வெளிப்பட்டுள்ளன:

2015ல் 107.7 மில்லியன் குழந்தைகளும் (5%), 603.7 மில்லியன் பெரியவர்களும் (12%) உடல் தடிப்புடையவர்களாய் இருக்கின்றனர்.

இந்த 25 வருடங்களில் உடல் தடிப்புள்ளவரின் எண்ணிக்கை 73 தேசங்களில் இரண்டு மடங்காகியுள்ளது

உலக வியாதிச் சுமையை அதிகரிக்கும் முக்கியமான இடர்களில், உடற்பருமன்தான் இந்த 25 வருடங்களில் மிக வேகமாக அதிகரித்துள்ளது.

குழந்தைகளிடையே உடற்தடிப்பு, பெரியவர்களை விட மிக வேகமாக அதிகரித்து வருகிறது.

ஆண்களை விட, பெண்களிடையேதான் உடற்கனமும், தடிப்பும் அதிகமாயுள்ளது.

ஆண்களிடையே 50-55 வயதினரும் பெண்களிடையே 60-65 வயதினரும்தான் அதிக அளவில் பருமனாயுள்ளனர். ஆனால், இளம்பிராயத்தினரிடம்தான் இந்த எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்துக் கொண்டு போகிறது. குறைவான அல்லது நடுத்தர வருவாயுள்ள நாடுகளில், சீனா, பிரேசில், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் இளைஞர்களிடையே உடற் பருமன் கடந்த 25 வருடங்களில் மூன்று மடங்காகியுள்ளது.

உடல் தடித்த குழந்தைகளின் எண்ணிக்கையில், சீனாவும் இந்தியாவும்தான் முதலிடத்தை வகிக்கின்றன.

சீனாவிலும் அமெரிக்காவிலும்தான் உடல் தடித்த பெரியவர்களின் எண்ணிக்கை அதிகமாயுள்ளது.

 

உடற்கனமும், தடிப்பும் 40 லட்சம் (4 மில்லியன்) மரணங்களுக்குக் காரணமாயுள்ளன. இதில் சுமார் 40 சதவிகிதம் உடல் கனத்தவர்கள், தடித்தவர்களல்ல.  65 சதவிகிதத்திற்கும் மேலானவர்கள், இதயம் மற்றும் இதர ரத்தக்குழாய் அடைப்பினால் மரணமெய்துகின்றனர். இவ்வடைப்புக்கு முக்கிய காரணங்களாகிய ரத்தக் கொதிப்பு, ரத்தக் கொழுப்பு, மற்றும் சர்க்கரை வியாதி ஆகிய மூன்றும்  உடற்பருமனாயுள்ளவர்களாலும் தவிர்க்கக்கூடிய அல்லது கட்டுப்படுத்தக்கூடிய காரணங்களாதலால், இவ்வியாதியினால் சம்பவிக்கும் மரணங்கள்  சமீப காலமாகக்  குறைந்து வந்தாலும் உடற் பருமனாவதைத் தவிர்த்தால்தான்  முழு நிவாரணம் சாத்தியமாகும்.

சர்க்கரை வியாதி, சிறுநீரக வியாதி, புற்று நோய் (குடல், கல்லீரல், பித்தப்பை, பித்தக்குழாய், கணையம், மார்பகம், கர்ப்பப்பை,கருப்பை,சிறுநீரகம், தைராய்ட்,வெள்ளணுக்கள் என எங்கு வருவதும்),ஆகிய மூன்றும், இதய, ரத்தக்குழாய் அடைப்பிற்கு பின், உடற்பருமனாயுள்ளவர்களின் மரணத்திற்கும், வலுவிழப்பிற்கும் (டிசெபிலிட்டி) முக்கியகாரணங்களாயுள்ளன. பெரியவர்களைத் தாக்கும் டைப் 2 எனும் சர்க்கரை நோய் பருமனாயுள்ளவர்களை இள வயதிலேயே தாக்குவதால் அதனால் ஏற்படும் மாரடைப்பு போன்ற  கோளாறுகளும் இள வயதினரையும் நடு வயதினரையும் அதிகளவில் பாதிக்க ஆரம்பித்துள்ளன.

உடற் பருமன் சம்பந்தப்பட்ட வியாதிகளால் ஏற்படும் உடல் வலுவிழப்பினால் இந்த 25 வருடங்களில் 120 மில்லியன் மனித வருடங்கள் சேதமாகியுள்ளது.

(120 மில்லியன்= 1200 லட்சம் பேர், 12 கோடி பேர்கள்.)

காரணங்கள்

சூழ்நிலை: நான் சென்னையில் வளர்ந்த சமயம், குளிர் சாதனப் பெட்டி உள்ள வீடுகள் மிகக் குறைவே. அதனால், நினைத்தபோது எல்லாம்- பசித்தபோது அல்ல-  உணவோ சிற்றுண்டி வகைகளோ கிடைக்காது. சுகாதாரம் பற்றாததால், வெளியுணவுகளைப் பெரும்பான்மையோர் தவிர்த்தனர்.  பெரிய உணவகங்களில் உண்ணும் பழக்கம் பணப்புழக்கம் அதிகமாக உள்ள ஒரு சிலரிடமே இருந்தது. உடல் வீக்கமும் பண வீக்கமும் சேர்ந்தே இருந்தாலும், அவ்வாறு இருந்தவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. இன்றைய சூழ்நிலையைப் பற்றி நான் சொல்லவே வேண்டாம். எங்கு திரும்பினாலும் வீட்டினுள்ளேயும், வெளியேயும் உணவு பண்டங்கள் இல்லாத இடமே இல்லை. ஒரு காலத்தில் ஈ மொய்த்த பண்டங்களை மனிதர்கள் மொய்த்துக் கொண்டிருக்கின்றனர். எல்லா உணவு வகைகளிலும் சர்க்கரையின் அளவு அபரிமிதமாக உள்ளது.  உணவின் அளவும், வகைகளும் பன்மடங்காக அதிகரித்துள்ளன. சமீபத்தில் நான் கலந்து கொண்ட ஒரு கல்யாண வரவேற்பு விழா விருந்தில் நாற்பதுக்கும் மேலான உணவு வகைகள் இடம் பெற்றிருந்தன.  உணவில் நமக்குள்ள ஈடுபாட்டிற்கு எதிர் விதமாக உள்ளது நாம் தேகப்பயிற்சிக்குக் கொடுக்கும் முக்கியத்துவம்.

மேலும், தொலைக்காட்சி மற்றும் இதர மின்னணுச் சாதனங்களுடன் நாம் உறவாடும் நேரமும் பல மடங்காக விரிந்துள்ளது.  மேலை நாடுகளில் பல வருடங்களாக நடந்து கொண்டிருப்பதை இந்தியர்களும் தற்பொழுது கண்மூடித்தனமாக பின்பற்றுவதுதான் குழந்தைகள் சிறுவர்களிடையே மிக வேகமாக பரவிக்கொண்டிருக்கும் உடற் பருமனுக்குக்  காரணமாகும். .

மரபணுக்கள்: உடற் பருமனாவதற்குச் சூழ்நிலையை மட்டும் குற்றம் சாட்டுவது தவறு. ஒரே விதமான உணவை உண்பவரெல்லோரையும் உடற்பருமன் பாதிப்பதில்லை. மரபணுக்களுக்கும் இதில் பங்குண்டு. உடற் தடிமன் பற்றிய குடும்பங்களில், இரட்டையர்கள் பற்றிய ஆய்வுகளில் 40-70சதவீதம் மரபு சம்பந்தம் இருப்பது தெரிய வருகிறது. உடற் பருமனுக்குக் காரணமாக 11 ஒற்றை மரபணுக்கள் கண்டறியப்பட்டுள்ளன. மரபணுவின் உருவில் மாற்றமில்லாமலே

சூழ்நிலையின் தொடர்பினால், அவை செய்யும் வேலைகளை மாற்றியமைத்துக் கொள்ளுவதும் (எபிஜெனெடிக்  எஃபெக்ட்ஸ் ) தனிநபர்களிடையே காணப்படும் எடை வித்தியாசங்களுக்கு ஒரு காரணமாக காட்டப்படுகிறது. சூழ்நிலையும் மரபணுக்களும் ஒன்று கூடி, ஹைப்போதலாமஸ் எனும் மூளைப்பகுதியில் ஆர்குவேட் அணுக்கருவினுள்ள (நியூக்ளியஸ்) நரம்பணுக்களை (நியூரான்ஸ்)

நரம்பியக்கு நீர்களை விட்டுத் தூண்டச்செய்தோ, தடைசெய்தோ நாம் உண்ணும் உணவின் அளவையும், செலவாகும் சக்தியையும் சீரமைக்கின்றன.

உணவைக் குறைத்தாலோ தேகப் பயிற்சியை அதிகரித்தாலோ சக்தி விரயம், உணவை பற்றிய நினைப்பு, உடல் மனம் சம்பந்தப்பட்ட செயலோட்டம் ஆகியன எல்லாமே கால அளவுக்கேற்றவாறு குறையும். அதே சமயம், இப்புதிய மாற்றங்களை தடுக்கும் சமிக்ஞைகளும் வெளிவருவதால் பசியும் உண்ணும் உணவளவும் அதிகரிக்கும். இதனால் எதிர்பார்க்கும் அளவு எடை குறைவதில்லை. மேலும் எடை நன்கு குறைந்தபின்னும் இதன் வேகம் முழுவதும் அடங்காததால் வெகு விரைவில் உடற்பருமனாகும் வாய்ப்புகள் மிக அதிகம். அதிக அளவு எடையிழந்தவர்கள் கூட ஓரிரண்டு வருடங்களில் உடற்தடித்து விடுகின்றனர்,

உடல் விளைவுகள்

உடல் எடை அதிகரிப்பு நீண்ட கால விளைவாகும்.  பொதுவாக, தோலுக்கு கீழுள்ள பகுதியில்தான் அதிக கொழுப்புச் சத்து சேர்கிறது. அதே சமயம் சதை, இதயம், கல்லீரல் போன்ற முக்கியயமான உறுப்புகளில் சேர்ந்து அவ்வுறுப்புகளையும் கனமாக்குகிறது. இதனால், ஓய்விலிருக்கும் சமயத்திலும் சக்திச் செலவும், இதயத்திலிருந்து வெளியேறும் ரத்த ஓட்டமும், ரத்த அழுத்தமும், இன்சுலின் சுரப்பும் அதிகரிக்கின்றன. வயிற்றுறுப்புகளில் சேரும் கொழுப்பின் அளவு சிறிதாயிருந்தாலும் அதனால் ஏற்படும் விளைவுகள் தீவிரமானவையாகும். சிறுநீரகங்களை சுற்றி சேமிக்கப்படும் கொழுப்பு, சிறுநீரகங்களை இறுக்குவதால் ரத்தக் கொதிப்பு அதிகரிக்கிறது.

குடலுக்கிடையே உள்ள பகுதிகளில் சேரும் கொழுப்பு சர்க்கரை வியாதிக்கு காரணமாகிறது. தொண்டையைச் சுற்றி சேரும் கொழுப்பு உறங்கும் சமயம் சுவாசக்குழாயை அடைத்து மூச்சோட்டத்தை நிறுத்துகிறது (அப்ஸ்ட்ரக்ட்டிவ் ஸ்லீப் அப்னியா).  சுமை தாங்கும் மூட்டுகள் மூட்டு வாதத்தால் பாதிக்கப்படுகின்றன. கொழுப்பு கல்லீரல் உயிரணுக்களினுள் சேர்ந்து அவ்வுயிரணுக்களைப் பெரியதாக்கி கல்லீரலையும் பெரிதாக்குகிறது. இது தொடர்ந்தால் கல்லீரலின் வேலை பாதிக்கப்பட்டு முழுவதும் சேதமடையும் வாய்ப்பும் உள்ளது.

இன்சுலின் அதிக அளவில் சுரந்தாலும் உயிரணுக்களுக்குள்ளே சர்க்கரையை செலுத்தும் திறன் குறைவதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு கொழுப்பளவு ஆகியவை அதிகமாகி சர்க்கரை வியாதி, மாரடைப்பு இரத்தக்குழாயடைப்பு ஆகிய வியாதிகள் அதிக அளவில் உடல் பருத்தவர்களிடையே காணப்படுகிறது. உடல் பருத்தவர்களிடையே பதற்றம், சோர்வு போன்ற மனோ வியாதிகளும் அதிகம். இவ்வியாதிகளுக்காகக் கொடுக்கப்படும் மருந்துகள் உடலெடையை மேலும் அதிகரிப்பதாக உள்ளன.

[உடல் தடிப்பைத் தவிர்ப்பதையும் நிவர்த்திப்பதையும் அடுத்த இதழில் பார்க்கலாம்.]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.