சருகுகள்

நடந்துகொண்டிருந்தான். ரொம்பநேரமாகவே நடந்து வந்துகொண்டிருக்கிறான். வீட்டிலிருந்து எப்போது புறப்பட்டான்? காலையா இது? இல்லை, மதியமெல்லாம் தாண்டி அந்தி நெருங்குகின்ற வேளையா? நினைவில்லை. டெல்லியின் ஜனவரிக் குளிரில், சூரியன் தலைகாட்ட மறுக்கும் இத்தகைய நாட்களில், பொழுதுக்கு அர்த்தமில்லை. மேலும்  நேரம், பொழுது போன்ற சாமானியர்களை விரட்டுகிற விஷயங்கள் அவனுடைய உலகைவிட்டு விலக ஆரம்பித்து நாட்கள் ஆகியிருந்தன. எதிரே, சாலை நீண்டு திரும்புகிற முக்கில் மங்கலாகத் தெரிந்தது ஒரு பெட்டிக்கடை. ஒருபக்கம் சிகரெட், சூயிங்கம், பிஸ்கெட், மட்ரி இத்தியாதிகளை விற்றுக்கொண்டு கடைக்காரன் ஒருவன். அதன் பக்கவாட்டு முகப்பில் ஓயாது எரிந்துகொண்டிருந்த ஸ்டவ்வில், விளிம்பில் நசுங்கியிருந்த அலுமினியப் பாத்திரத்தில் கொதித்து நுரையோடு மேலெழும்பிக்கொண்டிருந்தது டீ. சிறுகரண்டியை உள்ளேவிட்டு அதனைச் சுழற்றிக்கொண்டே  வாடிக்கையாளர்களை கவனித்திருந்தான் இன்னொருத்தன். கிளாசில் உஸ்..உஸ்ஸென்று ஊதி, டீயை உறிஞ்சியவாறு சில இளைஞர்கள் கடைக்குமுன் நின்றுகொண்டிருந்தார்கள். குளிர் தாங்காமல் அங்குமிங்குமாக நடந்துகொண்டு, பேண்ட் பாக்கெட்டில், ஜாக்கெட்டின் சைடுகளிடல் கைவிட்டுக்கொண்டு, கரம்ச்சாய்க்காக இரண்டொருவர் காத்திருந்தனர். நடைபாதையின் ஓரமாக நிறுத்தியிருந்த கருப்புநிறப் பழைய புல்லட்டின் அருகில் ஒரு பதின்மவயதுப் பஞ்சாபிப்பெண், சாய்கிளாசோடு நின்றிருந்த இளைஞனை இடித்துச் சீண்டியவாறு பிஸ்கட் கடித்துக்கொண்டிருந்தாள். பக்கவாட்டு இடுக்கில் நின்று தலையைக் கோதிக்கொண்டிருந்த ஒரு நோஞ்சான், சாய்க்கு சொல்லிவிட்டுக் கண்ணாடி ஜாடியிலிருந்து ஒரு மட்ரியை எடுத்துக் கடிக்க ஆரம்பித்தான்.

அங்கு வந்துசேர்ந்தவன், கடைக்காரனிடம் ஒரு கோல்ட் ஃப்ளேக் வாங்கி உதட்டில் பொருத்திக்கொண்டான். கடைக்கு முன்னால் தொங்கிக்கொண்டிருக்கும் லைட்டரை இழுத்துக் பற்றவைத்துக்கொண்டவன்  சாய்க்கும் சொன்னான். ’அதிரக் டால்தூம்?’ கேட்ட கடைக்காரனுக்கு அலட்சியமாகத் தலையாட்டினான். வரட்டும். தொண்டைக்கு இதமானதுதான் இஞ்சி டீ. பனிமூட்டத்தினூடே அவனது கண்கள் ஊடுருவின. நீலம்கலந்த சாம்பல் வெளியில் வளைந்து செல்லும் சாலையைத் தொடர்ந்து நகரும் ஒளிப்புள்ளிகள். அழுத்தமானப் பனிமூட்டம் அந்தப் பகல்நேரத்திலும் வாகனங்களில் ஹெட்லைட்டுகளை ஆன் செய்ய வைத்திருந்தது. தூரத்திலிருந்து உருவங்கள் நெருங்குவதும் வெளியேறுவதுமாய் ஒரு மாய உலகின் மயக்கமான தோற்றம்.  சிறிய க்ளாசில் கொதிப்பாக வந்தது டீ. வாங்கி மெல்ல உறிஞ்சினான். நன்றாகப் போட்டிருந்தான் கடைக்காரன். தொண்டைக்குத் தற்காலிக இதம். உட்சென்ற அதிரக் சாய் ஒரு கதகதப்பை உடம்பினுள் நிலவவிட்டதுபோல் ஒரு ப்ரமை. சீக்கிரமே தீர்ந்துவிட்டது சாய். க்ளாசை ஓரமாகக் கீழே ஜாக்ரதையாக வைத்தவனின் கண்ணில்,  சிறுவன் ஒருவன் கடையை ஒட்டியிருந்த சந்தில், வாளிநீரில் டம்ளர்களை முக்கி வேகவேகமாகக் கழுவிக்கொண்டிருந்த காட்சி பட்டது. சைல்ட் லேபர். ஒருகணம் அவன் கண்களை மூட, மனத்திரையில் தேசத்தின் மெலிந்த, அழுக்கான சிறுவர்கள் சாய்க்ளாஸ்களை அலம்பிக்கொண்டும், கார்களை, பைக்குகளைத் துடைத்துக்கொண்டும், இன்னும் ஏதேதோ எடுபிடிவேலைகளில் சிதறிச் சீரழியும் சித்திரம் ஓடியது. தலையைக் குலுக்கிக்கொண்டு கண்ணைத் திறந்தவன் சிறுவன் அணிந்திருந்த, ஓரத்தில் கிழிசலான பழைய ஸ்வெட்டரைக் கவனித்தான். நடுக்கும் இந்தக் குளிரில் இவனுக்குப் போதுமா இது என நினைத்தவன் இன்னொரு கோல்ட் ஃப்ளேக் வாங்கிப் பற்றவைத்துக்கொண்டு  நகர்ந்தான்.

இலக்கில்லா நெடும் நடை தொடர்ந்தது. புகையை ஆவேசமாய் இழுக்க, சாம்பல்நிற வெளியில் சிகரெட்டின் மூக்கு திடீரென சிவந்து ஒளிர்ந்தது. இன்னொருமுறை உள்ளிழுத்து சிணுங்கிய சிவப்பைப் பார்த்து சிரித்துக்கொண்டான். புகையை நெஞ்சுக்குழிவரை  இழுத்து விடுகையில் குளிருக்கு சுகமாக இருந்தது. உலர்ந்திருந்த அவனது உதடுகளின் வழியே வெளியேறிய புகை குளிர்ப்படத்தில் மிதந்து எழும்பி வேற்றுலகத்து பிம்பங்களைக் காட்டியது. எங்கே செல்கிறது இது? எதில் கலக்கிறது? கலந்து? ம்ஹ்ம்.. எதிலும் அர்த்தமில்லை. சும்மாதான் மிதந்துகொண்டிருக்கிறது எல்லாம் இந்தப் ப்ரபஞ்சத்தில்… மனசு சரியாக இல்லை. சரியாக ஆகிவிட்டால் அது மனதாகவே இருக்காதே. சோர்வில் தடுமாறினாலும் முன்னோக்கியே கால்கள் நகர, மனம் நிகழ்காலத்தில் நடந்துவர சண்டித்தனம் செய்தது. பின்னோக்கிப் பயணிப்பதில் ஜென்ம சாபல்யம் கண்டது.

’அன்றே நான் இறந்திருக்க வேண்டும். அந்த நாளைக் கடந்திருக்கக் கூடாது. கடந்தேன். ஏன்? ஏன் கடந்தேன்?’ குழம்பினான் அவன். அலைக்கழிக்கும் விதி அவ்வளவு எளிதாக விட்டுவிடுமா? இன்னும் அடிபட்டு, மிதிபட்டுத் துடிக்கவேண்டாமா? செய்வதறியாது திணறவேண்டாமா? நாலுபேர் வாயில் பட்டுத் தெறிக்கவேண்டாமா? பைத்தியம் பிடித்து அலையவேண்டாமா? உடனே சொகுசாக செத்துப்போய்விட்டால் எப்படி?  வதங்காமல், பொசுங்காமல், எரியாமல், கருகாமல் அவ்வளவு எளிதாகக் கடந்துவிட்டால் அப்புறம் என்னதான் இருக்கிறது இந்த வாழ்க்கையில்? கர்மா? அதற்கு ஒன்றும் வேலையில்லையா என்ன, மனிதனிடத்தில்?

பெருகிய நினைவு ஊற்றில், அவனது இளமைக்காலம் கழிந்த கிராமத்து வீடு மேலெழுந்து வந்தது. வேப்ப மரங்களுக்குக் கீழே, வாசலில் கோலம் போடும் இடத்திற்கு சிறிது முன்னால் என்று, வாசலில்தான் தத்தானி படுத்திருக்கும். கொல்லைப்புறம் அவ்வப்போது ஒரு சுற்றுசுற்றி வரும். இதுவும் எனது ஆட்சியில்தான் இருக்கிறது என்பதை உறுதி செய்துகொள்வதைப்போல். ஆனால் படுப்பது வாசலில்தான். குறிப்பாக இரவு நேரங்களில் சற்றுத் தள்ளிச் செல்லும் சாலையைப் பார்த்தவாறே படுத்திருக்கும். யாராவது பழக்கமில்லாத முகம் கடந்தால் போதும். ‘லொள்!’ ஒரு அதட்டு அதட்டும். அதன் குரைப்புக் கேட்டு நடந்துகொண்டிருப்பவன் திடுக்கிட்டு வேகம் எடுப்பதைக் கவனித்துத் திருப்திப்பட்டுக்கொள்ளும். அதன் திடீர் குரைப்பு, முன்னிரவில் திண்ணையில் தூக்கம் வராது உட்கார்ந்திருக்கும், அல்லது உறங்க முயற்சிக்கும் அவனுக்குத் தூக்கிவாரிப்போடும். தூங்க ஆரம்பித்திருக்கும்

அவனது அப்பா சிலசமயம் எழுந்து உட்கார்ந்து ‘சீ! போ, அந்தப் பக்கம்!’ என்று அதட்டுவார். திடுக்கிட்டு எழுந்து அங்கிருந்து சில அடிகள் நடந்துபோய், தரை கொஞ்சம் சமனாக இருக்கும் இடமாகப் பார்த்துப் படுத்துக்கொள்ளும். வீட்டில் மிச்சமிருக்கும் சாதமோ, பழைய இட்லியோ, உப்புமாவோ எதுவோ, போட்டதை சாப்பிடும் வழக்கமுடையது தத்தானி. அதற்கு சாப்பிட ஏதும் போட மறந்த நேரங்களில், அருகில் வந்து அவனை அல்லது சகோதரர்களை உற்றுப் பார்க்கும், கண்களில் ஒரு எதிர்பார்ப்போடு. சாப்பிட ஏதாவது போட்டால் சரி; போடாவிட்டாலும் சரி.

அவன் கவனித்தவரை வாழ்க்கையைப் பற்றிய பெரிய சிந்தனை எதுவும் அதற்கிருந்ததாகத் தெரியவில்லை. கிராமத்தில் அவனும், அவனது கூடப்பிறந்தவர்களும் எங்கு சென்றாலும் பின்னாலேயே வரும் வழக்கம் உண்டு அதற்கு. ரோட்டுக்கடைப்பக்கம் போனால், கொஞ்சம் அரட்டை அடிக்கலாம் என நண்பர்களைத் தேடிப்போனால் கூடவே ஆர்வமாய் நடந்து வரும். வீட்டின் வாளித் தண்ணீரில் குளித்து போரடித்துபோகையில், சில காலைகளில் நடந்து வெளியே எங்காவது குளம், குட்டைகளில் போய் குளிக்கலாமே என்று தோன்றும்.  அப்போது, பொதுவாக அவர்கள் தேர்ந்தெடுப்பது கிராமத்துக்கு வெளியே நெல்வயல்களினூடே, நீர்ப் பாசனத்துக்காக கட்டப்பட்டிருக்கும் சுற்றுச்சுவரில்லாக் கிணறுகளில் ஒன்று. கிட்டத்தட்ட 12-15 அடி விட்டத்தில் வாய் பிளந்து, ஆகாசத்தைப்பார்த்திருக்கும் அந்தக் கிணறு. தரைமட்டத்திலிருந்து நீர் பத்துப்பதினைந்து அடி உயரம்வரை ஏறி நிற்கும். கோடைகாலங்களில், தண்ணீர் அடிக்கடி பாசனத்துக்கு இரைக்கப்பட்டுவிடுவதால்,  புதியதாக ஊறிவந்திருக்கும் நீர் தெளிவாக, ஆழ்ந்த பச்சைநிறத்தில் இருக்கும். கிணற்றின் ஒரு ஓரத்தில் வரப்போரமாக கட்டப்பட்டிருக்கும் ஒரு மோட்டார் ரூம். தண்ணீர் இறைத்துப் பாய்ச்சுவதற்கான மின்சார மோட்டார் பம்ப் அதனுள்ளே பொருத்தப்பட்டிருக்கும். மோட்டார் ரூமின் கூரையின் மேலேறி கிணற்றுக்குள் அவனும் நண்பர்களும் குதிப்பார்கள். நீரில் நன்றாக அமுங்கி எழுவார்கள். கண்சிவக்கும்வரை குளித்துவிட்டு வெளியே வருவது வழக்கம்.  குளித்துவிட்டு கிணற்றுப் படிக்கட்டில் மேலேறி, தலை துவட்டுகையில் தத்தானி பக்கத்தில் வயல் வரப்பின்மீது  வாலாட்டி நின்றிருக்கும். அவர்களுடனேயே கிணற்றுக்கு அதுவும் வந்திருந்ததா? அவர்கள் வீட்டைவிட்டுக் கிளம்பிப்போனபின் மோப்பம் பிடித்துக்கொண்டு  சாவகாசமாக அங்கு வந்து சேர்ந்ததா?

இப்படி பாசமும் நேசமுமாய் கூடவே வளர்ந்த நாய், ஒரு பகலில் சோர்ந்து காணப்பட்டது. பார்வையில் ஆழ்ந்த சோகம் படர்ந்திருந்தது. தன்னிச்சையாக வாலாட்டுதல் நின்றுவிட்டிருந்தது அன்று. அங்கும் இங்கும் நிலைகொள்ளாது நடந்துகொண்டிருப்பதாய்த் தோன்றியது. ஏனிந்த மாற்றம்? மனிதனைப்போல் சிந்திக்கும் வியாதி இதற்கும் வந்துவிட்டதோ.  அந்த மாலையில் அதன் நடவடிக்கை மேற்கொண்டு விசித்திரம் காண்பித்தது. வீட்டுக்குப் பக்கவாட்டில் ஒரு ஓரத்தில் குப்பைக்குழி ஒன்று இருந்தது, பொதபொதவென்று மக்கிய குப்பையும் கரும்பழுப்பு மண்ணுமாக. அதில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில புல்பூண்டுகள் -கரிசாலங்கண்ணி, குப்பைமேனி, மணத்தக்காளி,  முடக்கித்தான் செடி என ஏதாவது செழிப்பாக வளர்ந்து காணப்படும். பகலில், அந்தக் குப்பைக்குழிப்பக்கம் அடிக்கடி போய் நின்றது அன்று. சாயந்திரப்பொழுதிலும், விளக்குவைத்துப் பின் இரவு வந்துவிட்டபின்னும்கூட, அது வீட்டின் முன்னோ, அக்கம்பக்கத்திலோ தென்பட்டதாய் நினைவில்லை.  எங்காவது வெளியில் சுற்றப்போயிருக்கும். சிலசமயங்களில் ஊரின் மற்ற வீதிகளில் ஒரு வட்டம் அடித்துவிட்டு வரும். ஆனால் அன்றிரவு திரும்பவில்லை. மறுநாள் இரவு விலகும் அதிகாலையில், வாசல்பக்கமிருந்து வழக்கம்போல் அதன் குரைப்புச்சத்தம் கேட்கவில்லை. திண்ணையில் உட்கார்ந்து காலை காஃபியெல்லாம் முடித்தபின், வெளியே வந்து பார்த்தவனுக்கு குப்பைக்குழிப்பக்கம் கவனம் ஏனோ சென்றது. அதனை நெருங்குகையில் தத்தானி குப்பைக்குழியின் பள்ளத்தில் படுத்திருப்பதாய்த் தெரிந்தது. அருகில் சென்று உற்றுப்பார்த்தவுடன்தான் புரிந்தது. தத்தானி இறந்து கிடந்தது.

அவனது நினைவில் பளிச்சிட்டது அந்தக் காட்சி. அதிர்ந்துபோனான் அவன். ஏன் இப்படி ஒதுக்குப்புறமாக் குப்பைக்குழிக்கு வந்து படுத்தது? தனக்கு உடம்பு சரியில்லை; தான் இறக்கப்போகிறோம். தன் இறப்புக்கூட இவர்களுக்கு இடைஞ்சலாக இருந்துவிடக்கூடாது என்றுதான், வீட்டின் ஒதுக்குப்புறமாக, அந்த குப்பைக்குழியைத் தேர்ந்தெடுத்ததோ தன் இறுதிப்படுக்கையாக? குப்பையோடு குப்பையாக தன்னையும் அள்ளிச் செல்லட்டும் என்று இறுதிச்சடங்கைத் தனக்குத் தானே செய்துகொண்டதோ ? குளிர்ந்தகாற்று முகத்தில் வீசியபோதும்,  அவன் கண்கள் சூடேறிக் கலங்கின. குறைந்துகொண்டே வந்துகொண்டிருந்த சிகரெட் அவனது விரலைச் சுட்டது. கையை வேகமாக உதறினான். சிகரெட் துண்டு தூரப்போய் விழுந்தது. மனதை இப்படி தூர வீசி விடமுடியுமா என்ன?

தத்தானியைப்போல்தான் நானும் முடியவேண்டும் என்று நினைத்துக்கொண்டான். யாரும் தனக்காக அல்லாடாமல், யாருக்கும் சிரமம் தராமல் போய்ச்சேர்ந்துவிடவேண்டும். இப்படியே நடந்துகொண்டிருக்கையில் ரோட்டோரத்தில் மயங்கி சரிந்துவிடவேண்டும். இந்தக் குப்பையையும் அகற்ற யாராவது நாலுபேர் வராமலா இருப்பார்கள்? அருகில் ஜுக்கி-ஜோம்ப்டிகளில் வசிக்கும் ஏழை ஜனங்களோ, எப்போதாவது வரும் முனிசிபல் வேலையாட்களோ யாரோ? அந்த நாலுபேருக்கு நன்றி. இறந்தபிறகு சொல்வதற்கில்லை. இப்போதே மானசீகமாக…

பனிப்படலத்தை ஊடுருவி நடக்கையில், சற்று தூரத்தில், எதிரில் சிறு கும்பல் ஒன்று வருவதுபோல் மங்கலாகத் தெரிந்தது. கூடவே உயர்ந்துவரும் கோரஸ்…’ராம் நாம் ஸத்ய ஹை! ராம் நாம் ஸத்ய ஹை!..’ ராம பக்தர்களா? ராம பிரானின் நிர்மலமான நீலமுகம் ஒரு கணம் அவன் மனதில் லேசாகத் தெரிந்து மறைந்தது. கோரஸ் ஒலி உயர, உயர நெருங்கியது சிறுகூட்டம். மேலோட்டமாக  ஜெவ்வந்தி மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட பாடையொன்றைத் தூக்கியவாறு, பூக்களை சாலையில் தூவியவாறு அவர்கள் கோஷமிட்டு வந்துகொண்டிருந்தனர். முன்னால் இருவர் போதையில் தள்ளாடி ஆடியபடி முன்னேறினர்.  ஊதுபத்தி வாடை அந்தக் குளிர்காற்றில் இழைந்திருந்தது. சிதைத்துச் சிரிக்கும் இந்த உலகத்திலிருந்து ஒருவழியாகக் விடைபெற்றுக் கிளம்பிவிட்டவனுக்காகச் சொல்கிறார்களோ ஒருவேளை, அந்த சிருஷ்டிகர்த்தாவின் பெயரை. அந்த உலகத்திற்குப் போகிறாய். இந்த உலகின் ஆதார் கார்டு, ஐடெண்ட்டிட்டி கார்டெல்லாம் அங்கே எடுபடாது. இந்த நாமத்தையாவது அடையாளமாக நினைவில் கொள்வாயா : ‘ராம் நாம் ஸத்ய ஹை ! ராம் நாம் ஸத்ய ஹை !’’….

வழிவிட்டு ஒதுங்கி, சீரான வேகத்தில் கடந்துசென்ற அந்த மெலிந்த கூட்டத்தை ப்ரக்ஞை ஏதுமின்றிப் பார்த்தவாறு சிலகணங்கள் நின்றான். தூரத்தில் தேய்ந்து, தேய்ந்து சாம்பல்நீலத்தில் கரைந்துவிட்டிருந்தது ராமநாமம்.

**

5 Replies to “சருகுகள்”

  1. தத்தானி. என்ன பெயர் இது! ஆனால் மனதில் நின்று விட்டது. ஒரு ஆச்சர்யம். தம்பட்டம் தளத்தில் எங்கள் மோதி பற்றி எழுதி விட்டு அது மறைந்த நாள் நினைவுக்கு வர, சற்று நேரம் அதன் நினைவுகளில் இருந்து விட்டு, கில்லர்ஜி தளம் சென்று தலைப்பு தந்த நினைவில் பாடல்(கள்) கேட்டு மனம் சற்று லேசாகி இங்கு வந்தால் தத்தானி! ‘அவனின்’ சோகம் என்னை பாதிக்கவில்லை. காட்சிகளின் வர்ணனை அருமை.

  2. ஏகாந்தன் சார் கதை அப்படியே காட்சிகளாய் மனதில் விரிகிறது!! தத்தானி மனதைக் கலங்க வைத்துவிட்டது. ஆம் பைரவர்கள் தாங்கள் இறுதிக்கட்ட நேரத்தில் நம்மிடமிருந்து ஒதுங்கி தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு இறக்கிறார்கள்….நீங்கள் சொல்லியிருக்கும் அந்தக் காரணம் தான் எனக்கும் தோன்றும். அவற்றின் அன்பே அலாதியானது. கண்களில் எப்போதும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும்…நம்மிடம் இவர்கள் அன்பு காட்ட மாட்டார்களா? ஏதேனும் தர மாட்டார்களா என்று. கதையில் வர்ணனைகள் சூப்பர்.

    மிகவும் ரசித்த வரிகள், //அந்த உலகத்திற்குப் போகிறாய். இந்த உலகின் ஆதார் கார்டு, ஐடெண்ட்டிட்டி கார்டெல்லாம் அங்கே எடுபடாது. இந்த நாமத்தையாவது அடையாளமாக நினைவில் கொள்வாயா : ‘ராம் நாம் ஸத்ய ஹை ! ராம் நாம் ஸத்ய ஹை !’’…// உண்மையும் இதுதானே ஸார்!!

  3. உங்களிடமிருந்து இம்மாதிரிக் கதைகளையே நான் எதிர்பார்த்திருந்தேன். எங்கள் ப்ளாகில் வெளியிட்டிருப்பதைப் போன்றும் நீங்கள் எழுதுவீர்கள் என்பதை அதைப் படிக்கையில் தெரிந்து கொண்டேன். இந்தக் கதையும் அருமையாக இருக்கிறது. உள்ளார்ந்த சோகத்தை வெளிப்படுத்தும் மனிதனின் சோகத்தின் காரணம் கடைசிவரை சொல்லப்படாததும், வாசகர்களின் யூகத்துக்கே விட்டதும் நன்றாகவே இருக்கிறது! சுட்டிக்கு நன்றி.

  4. அன்பர்கள் ஸ்ரீராம், கீதா, கீதா சாம்பசிவம்,

    வருகை, கருத்து, பாராட்டென அனைத்துக்கும் மனமார்ந்த நன்றி.

    @கீதா, @கீதா சாம்பசிவம்; உங்களது கருத்துக்கள் வந்தடைவதில் ஏனோ சுற்றுவழியை எடுத்துக்கொண்டிருக்கின்றன போலும்.

    -ஏகாந்தன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.