[stextbox id=”warning” caption=”மூன்று கவிதைகள்”]
சிறந்த கவிஞர்களின் தொடர்ந்த பங்கேற்பால், சொல்வனத்தின் இப் பகுதி ஒவ்வொரு இதழின் மிகச் சிறந்த பகுதியாகி மிளிர்கிறது. பங்கேற்கும் கவிஞர்களுக்கும்,கவிதைகளைத் தேர்வு செய்யும் குழுவினருக்கும் நன்றி. தொகுப்பாக வெளியிட்டால் பலரும் பயனடைவர்
– கோரா
[/stextbox]
[stextbox id=”alert” caption=”புத்தக அறிமுகம்”]
சுந்தர் வேதாந்தம் எழுதி சொல்வனம் வலைதளத்தில் பல்வேறு காலங்களில் தனித்தனி கட்டுரைகளாக வெளிவந்த சிந்தனை சோதனைகள் தற்போது மின்நூல் வடிவில் விற்பனைக்கு வந்துள்ளது. மின்நூல் என்கிற நூல் வடிவம் பெறுவதற்காக சில புதிய பகுதிகள் சேர்க்கப்பட்டிருப்பது தொகுப்பின் சிறப்பு.. இதனை படித்துவிட்டு தற்போது எழுதப்போகும் எனது மதிப்பாய்விற்கு முன்னதாக நான் சில உண்மைகளை போட்டு உடைத்துவிடுவது சரியாக இருக்கும்.
சுந்தர் 30 ஆண்டுகளுக்கு முன்பாக ONGC நிறுவனத்தில் கடலில் அமைக்கப்பட்டிருக்கும் எண்ணைத்தளத்தில் பணிபுரிந்த போது சந்தித்த அனுபவங்களை முன்னதாக எண்ணையும் தண்ணீரும் என தொடராக சொல்வனத்தில் எழுதி வந்த போது, அந்த தமிழ் எழுத்தின் வசீகரத்தால், அந்த அனுபவ பகிர்வு உருவாக்கிய வியப்பினால் ஈர்க்கப்பட்டு உடனுக்குடன் படித்து வந்தேன். அறிவியல் சார்ந்து பல விபரங்களையும் புதிய சொற்களையும் தமிழில் தெரிந்து கொள்ள பேருதவியாக இருந்தது. எனது உறவினர்கள், நண்பர்கள் பலருக்கு எண்ணை கிணறுகள் பற்றி, அதன் பணிகள் பற்றி அறிந்து கொள்ள பேருதவியாக இருக்கும் கட்டுரைகள், எனவே அவசியம் படியுங்கள் என பரிந்துரையும் செய்திருக்கிறேன்.
அதே ஆர்வத்துடன் சிந்தனை சோதனைகளைப் படிக்கத் துவங்கியவுடன் எனக்கான சோதனையும் ஆரம்பமானது. நான் பொது நிர்வாகவியல் சார்ந்து முதுகலை பட்டத்திற்காக அஞ்சல்வழியில் பாடங்கள் படிக்கும் போது ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தது 3 சிந்தனையாளர்கள், ஆய்வாளர்கள் ஒரே பொருள் சார்ந்து எப்படியெல்லாம் வெவ்வேறு விதமாக சிந்தித்தார்கள் என 4 வரி மேற்கோள்கள் (Quotes) இருப்பதை மனதில் நினைவில் கொள்வதையே சிரமமாக கருதியிருக்கிறேன். அப்படியான ஆய்வாளர்கள், குறிப்புகள் என்பது சற்று கடினமான விதத்தில் புரிதலுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்கிற pre concluded மனநிலையில் இருந்துதான் இந்த மின்நூலை படிக்கத் துவங்கினேன்.
ஆனால் அனுபவ புரிதல் என்பது பல்வேறு கால கட்டங்களில் பல விஷயங்களை எளிதாக புரிந்து கொள்ள உதவியிருக்கிறது. உதாரணமாக இன்று மிகக் குறைவான கல்வித் தேர்ச்சியுடன் முறை சாரா பணிகளில் இருக்கும் தொழிலாளர்கள் பலர் தமது கைபேசியில் எளிதாக தமக்கு வேண்டிய செயலிகளை நிறுவிக் கொள்ளவும், அதனை பயன்படுத்தவும் காலம் கற்றுவித்திருக்கிறது. மற்றொரு உதாரணம் கல்வியறிவு மிகக் குறைந்த கூலித் தொழிலாளர்கள் கூட தமது மகன், மகள் நன்று கற்று கல்லூரிக்கு செல்லும் நிலை வரும் போது கல்லூரிகளின் தரங்கள் பற்றி, கவுன்சிலிங் பற்றி சிறிதளவாவது விவாதித்து அறிந்து கொள்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். இத்தகைய புரிதல் இப்புத்தகத்தை படித்துப் புரிந்து கொள்ளவும் உதவலாம்.
இனி புத்தக விமர்சனத்திற்கு வருவோம். நான் இதிலு்ள்ள அத்தியாயங்கள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக விவரிக்க போவதில்லை. மாறாக இந்த புத்தக வாசிப்பு என்பது நிச்சயமாக முகப்பில் குறிப்பிட்டிருப்பது போல் பணச்செலவில்லா பிரபஞ்ச சுற்றுலா என்கிற அனுபவத்தை நிச்சயமாக அளித்திருக்கிறது என்பதை மட்டும் குறிப்பாக பதிவிட விரும்புகிறேன்.
பாரபட்சம் (discrimination) , கோடல்கள் (bias), நுட்பக் கோடல்கள் (micro bias) ஆகியவை நாம் பல நூறு ஆண்டுகளாக சந்தித்து வருபவை. வேற்றுக் கிரகத்தில் ஒரு ஆண், ஒரு பெண்ணை சென்றடையச் செய்து அவர்களைப் போல் குளோனிங் முறையில் பலரை உருவாக்கினாலும், அதிலும் பாகுபாட்டை முதலில் சுட்டிக்காட்டும் மனநிலை உள்ளுர ஓடிக்கொண்டிருப்பதை உணரமுடிகிற வகையில் ஒரு அத்யாயத்தில் விவாதிக்கப்பட்டிருக்கிறது. ஒரு சாராருக்கு இருக்கிற advantage அவர்களால் உணரப்படுவதில்லை என்பனவற்றை விவாதித்த பின் இன்றும் சாதிய மோதல்கள், பாகுபாடு மோதல்கள் ஏன் தொடர்கிறது என்பது பற்றி ஒரு புரிதல் ஏற்படுகிறது. மனிதன் சிந்திக்க சிந்திக்க பல்வேறு வளர்ச்சிகளும், சாதனைகளும் சாத்தியமாயிருக்கிறது.
கணணி பயன்பாட்டில் மிகுந்த தூரம் கடந்து வந்து இயந்திர கற்றல் என்பது தற்போது மிகவும் விவாதிக்கப்படும் பொருளாக உள்ளது. அதைப்பற்றி எளிதாக புரிந்து கொள்ள ஓட்டுனரில்லா கார் இயக்கம், உள்ளாட்சி அமைப்புகள் தாங்கள் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு சார்ந்த பணிகளை எவ்வாறு திட்டமிட்டுக் கொள்வது, மருத்துவத் துறையில் இயந்திர கற்றல் பயன்பாட்டின்போது சந்திக்கும் இடர்கள் எவை என்பது பற்றியெல்லாம் நன்றாக ஆசிரியர் விளக்கியுள்ளார்.
உடலுறுப்புகள் தானம் என்பது தற்போது மக்களிடைய பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. அதன் அடுத்த கட்ட வளர்ச்சியாக மனித மூளையை மட்டும் தனியாக எடுத்து வைத்து அதிலிருந்து கட்டளைகள் பிறப்பிக்க வைக்க முடியுமா? என்கிற கேள்வி சிந்தனை சோதனையாக விவாதிக்கப்பட்டிருப்பது இன்று வியப்பாக தோன்றினாலும் சாத்தியமானால் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
கணிதம் சார்ந்த சிந்தனையில் எண்களை தொடர்ச்சியாக எழுதிக் கொண்டே சென்றால் முடிவிலி (infinite) என்பது ஏற்கக் கூடியது என்றாலும், அதனை தொடர்ந்து ஹில்பர்ட்டின் தங்கும் விடுதியில் எத்தனை பேர் வந்தாலும் தங்க வைக்கும் வகையில் முடிவிலி அறைகள் என விவாதித்திருப்பதன் வழியாக என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 1896ல் ஒளிக்கற்றையின் மீது அமர்ந்து பயணித்தால் எவ்வாறிருக்கும் என சிந்தித்ததன் விளைவு இன்று தகவல் தொடர்பில் செயற்கை கோள்களிலிருந்து பூமியில் ஒவ்வொரு தெருவிற்கும் வழிகாட்ட, கடக்க ஆகும் நேரத்தை துல்லியமாக கணித்துச் சொல்வது போன்றவையெல்லாம் சாத்தியப் பட்டிருக்கிறது என்பதை அருமையாக புரிந்து கொள்ள முடிகிறது.
இந்த மின்நூலில் விவாதிக்கப்பட்டுள்ள பல்வேறு சிந்தனைகளிலிருந்து ஒவ்வொரு விவாதத்திலும் எத்தனை வகையான சாத்தியக் கூறுகள் இருக்கிறது என சிந்திப்பது வளர்ச்சியை கொடுத்துக் கொண்டே யிருக்கும் என்பதை புரிய வைக்கிறது. ஒவ்வொரு பெரிய நிறுவனங்களிலும் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு தேவையான மாற்றம் (R & D) நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. விளம்பரங்கள், மாற்றங்களின் வாயிலாக கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒருவரை ஒருவர் விழுங்குவது என்பதும் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது.
மொத்தத்தில் சுந்தரின் சிந்தனை சோதனைகள் படித்தது ஒரு வித்தியாசமான அனுபவத்தை தந்தது. நான் நிச்சயம் என் பெண்களுடன் இதை விவாதிப்பேன். ஆய்வாளர்களின் மேற்கோள்கள் (Quotes) என்பனவற்றை பார்க்கும் போதே இவையெல்லாம் சற்று ரம்பம் என்கிற எண்ணப்போக்கு இந்த புத்தகத்தை படித்த பிறகு மாறியிருக்கிறது, இனிமேல் அவற்றையெல்லாம் படிக்கிறபோது சற்று ஆழந்து கவனிக்க வேண்டும் என்கிற ஆவலை உண்டாக்கியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
பொறுமையாக இந்நூலை ஒன்றிரண்டு முறை படித்துவிடுவது நிச்சயமாக நமது சிந்தையை மேம்படுத்தும் என்பதில் ஐயமில்லை. வளமான தமிழில் சொல்லாடிய சுந்தருக்கு வாழ்த்துக்கள்.
அன்புடன்
– ஸம்பத் ஸ்ரீனிவாசன், மதுரை
[/stextbox]
[stextbox id=”info” caption=”இந்தியர்களுக்கு மாரடைப்பு அதிகம் வருகிறதா?”]
“இந்த அறுவை சிகிச்சையும் எல்லா நாடுகளிலும் சர்வ சகஜமாகி விட்டது” – நெருடலான வரிகள். “இதுவே சராசரி நிலைமை” எனும் நிலைப்பாடு வெகு சாதாரணமாக
கையாளப்பட்டிருப்பது வேதனை. விளக்க கட்டுரையே ஆயினும் இந்தியர்களிடம் அதிகமாக வருவதற்கு வலுவான காரணங்களையும் தவிர்ப்பதற்கான வழிகளையும் தந்திருக்கலாம்.
வாழ்த்துக்கள்.
– வாசு
[/stextbox]