மறவோம்

யுத்தகளத்தில், உக்கிரமாக ஒருவரையொருவர் கொன்று குவிக்கும் களத்தில் கவிதை எழுதக்கூடாதா என்ன? இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?” என்று உணர்ச்சிகள் அற்ற குரலில்தான் கேட்டார் ஆடம்.

எனக்கு சட்டென என்ன சொல்வது என்று தெரியவில்லை. சற்று தயக்கத்துடன், “இல்லை… தர்க்கத்துடன் பொருந்தவில்லையே…அதனால்தான்…” என்று இழுத்தேன்.

ஆடம் பேச ஆரம்பிக்கும் போது முகத்தில் கேலி இல்லை.

“கவிதை எழுதினார்கள், ஓவியங்கள் வரைந்தார்கள்…எல்லாம் செய்தார்கள்…யுத்தம் என்பது ஓர் மாபெரு புழுதிச் சூறாவளி…அதில் அத்தனையும் அடித்து பிடித்துக் கலந்து உருண்டு வரும்…பிரச்சார துறை எல்லா நாடுகளிலும் இருந்தது. பிரிட்டனுக்கு கேட்க வேண்டுமா என்ன? பிரமாதமாக வேலை செய்தார்கள்,” குரலில் இருந்தது.

வாசல் மணி அடித்தது. இருவருமே திரும்பி வாசல் கதவைப்பார்த்தோம்.

“நான் இப்போது யாரையும் எதிர்பார்க்கவில்லையே,” என்றவாறே ஆல்பத்தை மூடிவிட்டு முகத்தைச் சுருக்கி, மூக்கைச் சுருக்கி மூக்குக் கண்ணாடியை மேலே ஏற்றிக்கொண்டு நிதானமாக எழுந்து நின்றார். எழும் போதும் முதுகு சற்று முன் வளைந்தே இருந்தது.

“ஒரு நிமிடம்,”

மெல்ல வாசல் நோக்கி நடக்கும் போதெல்லாம் எண்பது வயதானவர் போல் தெரியவே இல்லை.

வாசல் கதவை நீக்கினார். யாரிடமோ பேசினார்.

நான் சற்றுத் தள்ளி நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு அறையைச் சுற்றிப் பார்த்தேன்.

இத்தனை உயரப் புத்தக அலமாரிகளைப் பள்ளி நூலகத்தில்தான் கண்டிருக்கிறேன். மிக உயரம். அரை வட்ட அறைக்கேற்ப வளைந்த அலமாரிகள். மூலையில் ஏணி சார்த்தி வைக்கப்பட்டிருந்தது. வளைந்த அலமாரிகள் அனைத்தும் சற்றே குனிந்து நடுவில் இருக்கும் படிப்பு மேசையைக் கவனித்துக் கொண்டிருந்தன என்று தோன்றியது. மேசையின் நடுவில் சற்றே பெரிய போட்டோ ப்ரேமினுள்

“They shall grow not old, as we that are left grow old:
Age shall not weary them, nor the years condemn.
At the going down of the sun and in the morning
We will remember them. “

என்ற வாசகங்கள் ஒளிர்ந்தன. கடைசி வாக்கியம் மட்டும் மற்ற வாக்கியங்களை விட பெரிய எழுத்துரு.

புன்னகைத்தேன். இந்த வாசகத்தைச் சென்ற ஜூலையில் வாய் விட்டு படித்தனால்தான் இன்று நானும் ஆடமும் உட்கார்ந்து அவரது சொந்த முதல் உலகப்போர்த் தொகுப்பைப் பிரித்து வைத்துக்கொண்டு கவிதைகளைப் படித்துக்கொண்டிருக்கிறோம்.

அந்த ஜூலை நாள் நன்கு நினைவிருக்கிறது. சாஜ், கார் லைசென்ஸ் எடுத்து ஒரு வருடம்தான் ஆகியிருக்கும். ஆறு வருடங்களுக்கு முன்னரே வாங்கிவிட்டது போன்றுதான் ஓட்டுவான்.  அன்றும் அப்படித்தான். கடுமையான மழையில், GoGo Pizza delivery காரின் வேகத்தைச் சற்றும் குறைக்காமல், நான் சொல்ல சொல்லக் கேட்காமல், செம்ஸ்ஃபோர்டிலிருந்து ஹார்லோ போகும் முக்கிய பாதையிலிருந்து ரோடிங் என்ற பெயர் பலகையை ஒட்டிச் சரெலன திருப்பினான்,

“இங்கிலாந்தில் மட்டும்தான் வேகக் கட்டுப்பாடு அளவு 60 மைல்கள் என்று  ஒற்றையடிப் பாதைக்கும் அறிவிப்புப் பலகை வைத்திருப்பார்கள்,” என்று சலித்துக்கொண்டே.

“ஓர் நினைவுச்சின்ன ஸ்தூபி இடது புறம் வரும், அதுதான் வாடிக்கையாளர் வீட்டு அடையாளம். கவனித்துக்கொண்டே வா,” என்று சொல்லியிருந்தும், அதைத் தாண்டி சற்று தூரம் செல்லும் வரை நான் கவனிக்கவில்லை. பின்னர் U திருப்பம் செய்து அதன் அருகில் வந்தும், ஆடமின் வீடு முதல் பார்வைக்குத் தென்படவில்லை.

வழக்கமான வாடிக்கையாளர்கள் போல் இல்லாமல் ஆடம், பணத்தை தயாராக எடுத்து வைத்திருக்க மறந்துவிட்டிருந்தார். இரு நிமிடங்களாகத் தன் முழுவதும் சுருங்கிய விரல்களைக் கொண்டு பணப்பையை துழாவிக்கொண்டிருந்தார். என் அண்ணன் சாஜ்ஜும் வழக்கமான பிட்சா விற்பனை ஆள் இல்லை; பல்கலைக்கழக மாணவன். எனவே இது போன்ற சந்தர்ப்பத்தில் எப்படி நடந்துகொள்வது என்று தெரியவில்லை.

ஆடம் வீட்டு வரவேற்பறையில், பணம் கொண்டு வரப்போகும் ஆடமின் பேத்தி சாராவிற்காக காத்திருந்தபோது, ஆடம் எங்களுக்காக டீ எடுத்துவர சமையலறைக்குப் போயிருந்தபோதுதான் இந்த வாசகத்தைக் கவனித்தேன்.

“யார் எழுதியது, தெரியுமா,” என்று மிக அருகில் கேட்டபோது வெடுக்கென திரும்பியதில் அவரது கையிலிருந்த டீ கோப்பையைத் தட்டி விடப்பார்த்தேன். அவர், “கவனம், கவனம்…உன்னைக் கலவரப்படுத்துவது என் நோக்கமில்லை, மன்னிக்கவும்,” என்றார்.

ஒரு காலத்தில் அவர் முகம் முழுவதும் சதைகள் உறுதியாக இருந்திருக்க வேண்டும். இப்போது பேச எத்தனிக்கும் போதெல்லாம் தனித்தனியாக ஆடின.

கழுத்துச் சதைகளில் பெரும் சிவப்புப் புள்ளிகள்.

“Laurence Binyon” என்றேன்.

அவர், “ஹக்! எப்போது GCSE முடித்தாய்?” என்று சிரித்துக்கொண்டே கேட்டார்.

“இந்த மார்ச்சில்தான்”

“இந்தக் கவிதை உனக்குப் பிடிக்குமா?” என்றபடியே படிப்பு மேசைக்கு நேர் எதிரிலிருக்கும் சோபாவில் அமர்ந்தார். அமரச்சொல்லி எனக்குக் கை காட்டினார்.

சற்று கூச்சத்துடன், “பின்ன, என்னுடைய விருப்பத்திற்குரிய கவிதைகளில் இதுவும் ஒன்று,” என்று முணுமுணுத்தேன்.

“அடேயப்பா! கவிதைப் பட்டியல் வைத்திருக்கிறாயா? கவிதை படிக்கும் பையனா நீ! மிக்க நன்று,” என்று உற்சாகக் குரலுடன் டீயை ஒரு உறிஞ்சு உறிஞ்சினார். முகத்தைச் சுருக்கி, மூக்கைச் சுருக்கி மூக்குக் கண்ணாடியை ஏற்றிக்கொண்டார்.

“அப்படியெல்லாம் நிறைய இல்லை, கொஞ்சம் படிப்பேன்,” என்றேன்.

“இந்தக் கவிதை ஏன் உனக்கு பிடித்தது என்று சொல்லமுடியுமா?”

“அய்யோ! இப்படித் திடீரெனக் கேட்டால் என்ன சொல்ல…நான் ஏதாவது உளறப்போகிறேன்…வேண்டாம்!” என்று சாஜ்ஜைப் பார்த்தேன். முகத்தில் சங்கடமும் எரிச்சலும் தென்பட்டது. வாசலைப் பார்த்தேன்.

“இதில் என்ன இருக்கிறது, இவை 1914ல் எழுதப்பட்ட வரிகள். இன்றும் பிடித்திருக்கிறது. ஏன்? பரவாயில்லை, யோசி,” என்றார்.

நான் தயங்கி, சற்று யோசித்து, மறுபடியும் தயங்கி…

“ஏனென்றால்…கவிதை படிக்கும் போது அந்த வரிகள் எனக்கு ஏதாவது ஒரு சித்திரத்தை தோற்றுவித்தால்  அது மனதில் தங்கிவிடுகிறது என்று நினைக்கிறேன். உதாரணமாக கீழ்க்கண்ட இந்த வரிகள்…

“அவர்களுக்கு என்றும் வயதாகப்போவதே இல்லை;

மிஞ்சி/எஞ்சி இருக்கும் நமக்குத்தான் வயதாகப் போகிறது.”

இந்த வரிகளைப் படிக்கும் போது போருக்கு உற்சாகமாகச் செல்லும் பையன்களின் சிரித்த முகங்கள் அப்படியே புகைப்படமாகச் சட்டமிட்டு தெரிகிறது. அப்படியே, என்றும் உற்சாகத்துடன், வயதாகாமல் உறைந்த படம் தோன்றுகிறது,” என்று நான் வேறு எங்கோ பார்த்துக்கொண்டு கூச்சத்துடன் சொன்னேன்.

சில கணங்களுக்குப் பின் அவரை நோக்கினேன். என்னை வெற்றுப் பார்வை பார்த்துக்கொண்டிருந்தார்.

பின், மெல்லிய குரலில், “ஆம்…சிறு பையன்கள்…உன் வயதுதான் இருக்கும்…எதை நோக்கிச் செல்கிறோம் என்று அறியாமல், எப்படி முடியப் போகிறோம் என்பதைப் பற்றித் தெரியாமல்…Bloody war…” என்றார்.

“ஆம், Great War!” என்றேன்.

“ஹூம்! The War to end all wars!”

“எப்படிப்பட்ட நகை முரண்,”

“அடுத்த வாரம் ஞாயிறு மாலை உனக்கு நேரம் இருக்குமா? வருகிறாயா? சற்று கவிதைகள் படிப்போமா,” என்று அவர் கேட்டபோது நிச்சயம் சிரித்துக்கொண்டே மறுத்திருப்பேன். ஆனால் அதற்குள் சாரா உள்ளே வந்துவிட்டாள். பாதி திறந்திருந்த கதவைத் தாண்டி வந்த மழையைப் போல் இலகுவாக, இயல்பாக வந்தாள். குதிரை வால் முடிந்திருந்தது.

“என் பேத்தி, சாரா. இதே கிராமத்தில்தான் இருக்கிறாள், செம்ஸ்ஃபோர்ட் கவுண்டி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில்தான் படிக்கிறாள்,”

“அப்படியா? பார்த்தது இல்லை. ஹலோ, நான் வருண்,” என்று கை கொடுத்தேன்.

அவள் சிரித்துக்கொண்டே கை கொடுத்த போது மனதில் A thing of beauty என்ற வரி ஆரம்பித்தது. அதை அவசரமாக நிறுத்திவிட்டு இன்னொரு முறை, அடுத்த வாரம் என்ன நாள், மணி என்று ஆடமிடம் கேட்டுக்கொண்டேன்.

===

ஆனால் எங்களது அடுத்த சந்திப்பு நிகழ மூன்று மாதங்கள் ஆனது.

இடையில் அவ்வப்போது நாங்கள் திட்டமிட்ட சந்திப்புகள் ரத்தானதற்கு காரணங்கள் ஒன்றும் பெரிதல்ல. ஓர் முறை அவர் குடும்பத்துடன் கவுண்டி கிரிக்கெட் மாட்ச் பார்க்க போய்விட்டார்; இன்னொரு முறை நான் கோடை விடுமுறைக்கு இந்தியா சென்றுவிட்டேன். அப்புறம் திட்டமிட்டிருந்த அக்டோபர் ஞாயிறில் அவருக்கு உடல்நலம் சரியில்லாமல் போனது.

இன்னொரு அக்டோபர் சனி இரவிலிருந்தே கடுமையான மழை – ரோடிங் கிராமத்திற்கு செல்லும் பாதை மழை நீரில் மூழ்கியிருந்தது.

அதன் பின், ரோடிங் கிராமத்திற்கு இப்போதுதான், இந்த நவம்பர் முதல்வாரத்தில்தான் வருகிறேன்.

இந்த முறையும் அந்த நினைவுச்சின்ன மேடை, அந்த S வடிவத் தெருவின் வளைவின் முடிவில் அல்லது ஆரம்பத்தில் திரும்பும் போது இடது பக்கத்தில் மறைந்திருந்து, திடுக்கென எதிரில் வந்து நின்றது போலிருந்தது.

எதிர்பார்த்துக் கொண்டேதான் திரும்பினேன். இருந்தும் ஒரு சின்ன திடுக்கிடல். சென்ற முறை பார்த்ததைவிட இப்போது வித்தியாசமாக இருந்தது. சிறியதாக இருக்கிறது அல்லது பெரியதாக?

…………

“நீ உண்மையிலேயே வித்தியாசமான பையன்தான்,” என்ற குரலை வெகு அருகில் கேட்டுவிட்டுச் சற்றே திடுக்கிட்டுவிட்டேன்.

“இந்தக் கால யுவன்கள் சற்று நேரம் கிடைத்தாலும் மொபைலை குனிந்து நோக்கிக்கொண்டிருப்பார்கள், நீயோ எங்கோ வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறாயே?”

அவரது நாற்காலியில் அமர்ந்தார். முடியில்லாத மண்டையில் பழுப்பு தேமல்கள் தெரிந்தன.

நான் முறுவலித்தவாறே, “யுவன்கள் மட்டுமா? எல்லா வயதினரும்தான். பஸ்ஸில் பார்த்தால் தெரியும். அனைவரும் கண்களைச் சுருக்கியவாறே மொபைலில் புதைந்திருக்கிறார்கள்!”

“காத்திருக்க வைத்ததற்கு மன்னிக்கவும். வரும் 11ம் தேதி சர்ச் சர்வீஸைப் பற்றி ஓர் விசாரிப்பு,”

ஆடம், இயல்பாக, “எங்கே விட்டோம்? ஆங்,” என்று நரை முடிகள் அடர்ந்த, பெரும் கைகளால் மேசையின் மேல் கிடந்த ஓர் பெரிய A3 நோட்டு புத்தகத்தின் மேல் விரல்களால் மெல்லத் தட்டினார்.

அதன் முன்னட்டையில் “For the Fallen” என்று பெரிய பெரிய எழுத்துகளால் எழுதியிருந்தது.

“இந்தப் பாடல் எப்போது, எந்த சூழ்நிலையில் எழுதப்பட்டது, தெரியுமல்லவா?” என்றார்.

“போர் ஆரம்பித்த சில வாரங்களிலேயே எழுதப்பட்டது இல்லையா?”

“ஆம், அதுவும் போர்க்களங்களில், சேற்று அகழிகளில் இல்லை. சவுகரியமாக, கார்னிஷ் கடற்கரையிலிருந்து எழுதப்பட்டது…”

நான் சற்று மவுனமாக இருந்தேன்.

“என்ன ஆயிற்று? எதிர்பார்க்கவில்லையா? கவிதை வரிகள் இப்போது சுரமிழந்துவிட்டனவா? arm chair poet என்பதாலா? ஹெக்க்!”

“இல்லை…எல்லா கவிதைகளும் இப்படி இல்லையல்லவா? உதாரணத்திற்கு “In Flanders Fields”?”

“ஆம், அதை களத்திலிருந்து எழுதியது ஓர் ராணுவ மருத்துவர்.”…

நான் சற்று உற்சாகமடைந்து, “திரும்ப என் கேள்விக்கு வருவோம்…போர்க் களத்தில், ஒருவரையொருவர் கொன்று குவிக்கும் இடங்களில் இருந்து கொண்டு, உயிர் எந்த கணமும் போகப்போகிற கணங்களில் கவிதை எழுத எப்படித் தோன்றும்?”

“உண்மைதான்…போர்க்களத்தில், அதிலும் இந்த முதல் உலகப் போர், பலவிதங்களில் முன்னோடியான ஓர் மாபெரும் போரில் கவிதை என்பது இன்று எண்ணுவதற்கு வினோதமாகத்தான் இருக்கும்…உலகம் வினோதமான ஓர் இடம், மனிதர்கள் அதிலும் வினோதம்!”

நான், “ஆம்…வினோதம்தான்…போர்க்களத்தில் கவிதை மட்டுமல்ல, கால்பந்தும் ஆடியிருக்கிறார்கள்.”

ஆடம், என்னைத் தொடர்ந்து புன்னகைக்காமல் நோட்டுப் புத்தகத்தைப் புரட்டலானார்.

“இந்த புத்தகம் Great war பற்றிய என் சொந்த தொகுப்பு.”

முதல் பக்கத்தில் ஓர் பழைய செய்தித்தாளின் ஒரு பக்கம் ஒட்டப்பட்டிருந்தது.

புத்தகத்தை அவருக்கு எதிரில் உட்கார்ந்திருந்த என் பக்கம் திருப்பிக்காட்டினார்.

அது ஓர் ஓவியம். முட்கம்பிகள் கொண்ட வேலிகள் பின்னணியில் சேற்றுப் பாதையில் குப்புறக் கிடந்த இரு போர் வீரர்களின் சடலங்கள், அவர்களின் தலைக் கவசங்கள் அருகில் இருந்தன.

Paths of Glory என்று கீழே எழுதப்பட்டிருந்தது.

“ஹூம்…இதுதான் நிஜம். இது மட்டும்தான் நிஜம்…”என்றார்.

நான் அந்த ஓவியத்தைக் கூர்ந்து நோக்கினேன்.

மெல்ல, புத்தகத்தைத் தன் பக்கம் திருப்பிக்கொண்டு, பக்கங்களைப் புரட்டலானார்.

“போர் அறிவித்த சமயத்தில் எத்தனை உற்சாகம், இங்கே பார்,” அந்தப் பக்கத்தில் இருந்த கருப்பு வெள்ளை புகைப்படத்தில் ட்ரஃபால்கர் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கானவர்….எண்ணற்ற தொப்பிகளும், சிரித்த முகங்களும்…

அடுத்த புகைப்படத்தில் Army Recruiting Office என்ற பலகைக்குக் கீழ் நீண்ட வரிசை, சிரித்த முகங்களும், கோட்டுகளும் தொப்பிகளும்… “ஆகஸ்ட்டில் இத்தனை கோட்டுகளா?” என்றேன், என்னையறியாமல்.

ஆடம், மெல்லச் சிரித்தார்.

“எல்லாரும் டிசம்பரில் எல்லாம் முடிந்துவிடும் என்று நம்பினார்கள், இல்லையா?”

ஆடம் சட்டென என்னைப் பார்த்தார்.

“அரசாங்கம் அப்படி நம்ப வைத்தது…எத்தனை பிரச்சாரம்?”

“அன்றிலிருந்து இன்று வரை அப்படித்தானே…ப்ளடி ப்ளேயர்.”

“போர் என்பது ஓர் சுவாரசியமான களம் என்று இந்தப் பையன்கள் நம்பினார்கள். அவர்களுக்குப் பள்ளியில் அப்படித்தான் போதிக்கப்பட்டிருந்தது. நாட்டிற்காகப் போரிடுவது,” இந்த இடத்தில் நிறுத்தி, “அதாவது பகைவர்களை அழித்தொழிப்பது, அதற்காகத் தன் இணையில்லா உயிரை விடுவது என்பது எத்தனை தீரமான செயல் என்று அப்படித்தானே போதிக்கப்பட்டிருந்தது, அவர்களுக்கு?”

நான், நிமிர்ந்து அவருடைய கண்ணைப் பார்க்க முயன்றேன். “வெல்…?” சற்றே தோள்களை விரித்து, குலுக்கிக் குவிப்பது போன்று செய்ய வந்து, “அது சரிதானே? பிரிட்டன் மட்டுமல்லவே, அனைத்து நாடுகளும் அப்படித்தானே செய்கின்றன?” என்றேன்.

ஆடம், என்னை நொடிப்பொழுது நோக்கி, அவரது வழக்கம் போல், மூக்கைச் சுருக்கி, மூக்குக் கண்ணாடியைச் சரி செய்து கொண்டு, கவனத்தைப் புத்தகத்தின் பேரில் திருப்பினார்.

“Battle of Verdun… கிட்டதட்ட ஒரு வருடம் இந்த போர் ஃப்ரெஞ்ச் படைகளுக்கும் ஜெர்மன் படைகளுக்கும்  நடந்தது. பல்லாயிரக்கணக்கானவர் உயிரை விட்டனர். இந்த போரின் முடிவில் யாருக்கு என்ன கிடைத்தது? எல்லைகள் சில நூறு அடிகள் மாற்றி அமைக்கப்பட்டன…இதற்காக எத்தனை உயிர்கள்…எத்தனை விரயம்…ம்,”

தனக்குள்ளே பேசிக்கொண்டு பக்கங்களை புரட்டினார்.

“Battle of Somme…பற்றி படித்திருப்பாய் தானே? எத்தனை ஆயிரம் உயிர்கள், ம்?”

“முதல் நாளிலேயே ஆயிரக்கணக்கானவர்…”

“முதல் நாள் மாலையின் போது கணக்கு இருபதினாயிரம் பேர்…The Times சின் முதல் செய்தி அறிக்கை என்ன தெரியுமா? இரு…என்னிடம் அந்த பேப்பர் கட்டிங் இருக்கிறது” என்று பக்கங்களை மெல்லப் புரட்டினார்.

“இதோ…

EVERYTHING HAS GONE WELL… Our troops have successfully carried out their missions…all counter-attacks have been repulsed and large numbers of prisoners taken.”

நிமிர்ந்து அவரைப் பார்த்தேன். சில கணங்களுக்கு பின்,

“இதில் எத்தனை இந்தியர்கள்?” என்றேன்.

ஆடம், ஆல்பத்தை புரட்டுவதை நிறுத்தவில்லை.

“ஆம், So many…countless men…fought for the Empire,” என்றார்.

“இணையத்தில் படித்தாயா?”

“ஆம்…” எனது சுரத்தே இல்லாப் பதிலைக் கேட்டோ என்னவோ நிமிர்ந்து பார்த்தார்.

“எதிர்பார்த்ததுதான்…இந்தியாவிலிருந்து மட்டுமல்ல, ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, கனடா, நியுசிலாந்த் என்று சாம்ராஜ்யத்தின் ஐந்து மூலைகளிலிருந்தும் வந்தார்கள்,” என்றார்.

நான், சற்றே அவசரமாக, “எண்ணிக்கையில்…” என்று ஆரம்பித்த போதே எதிர்பார்த்தது போல், “ஆம், எண்ணிக்கையில் பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்துதான் அதிகம்,” என்றார்.

“ம்…சரி…விஷயத்திற்கு வருவோம். பதினேழு வயதில் காதல் கவிதை எழுதலாம், இயல்பான விஷயம். லாஜிக் இருக்கிறது. ஆனால் போர்க் கவிதை? Charles Sorley படித்திருக்கிறாயா?”

“இந்தப் பையன் உன் வயதில் முதல் கவிதை எழுதினான். இருபதாவது வயதில் இறந்து போனான். Battle of Loos…”

“The Massacre” படிப்போமா?” என்றவாறே இரு பத்திகள் வாய்விட்டு வாசித்தார். “இந்தப் பையன் போர் துவங்குவதற்கு முந்தின வருடம் வரை ஜெர்மனியில்தான் படித்துக்கொண்டிருந்தான். ஜெர்மன் மக்களின் வாழ்க்கை முறை பிடித்துப்போயிருந்தது. யுத்தம் துவங்கப்பட்டபோதும் அங்குதான் இருந்தான். கைது செய்யப்பட்டு எட்டு மணி நேரங்கள் சிறையில் அடைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவுடன் பிரிட்டனுக்கு ஓடி வந்து ராணுவத்தில் சேர்ந்துவிட்டான்!”

கொஞ்சமாக சிரித்தாலும் முகச்சதைகள் ஆடின.

தொடர்ந்து “Such is Death,” நிதானமாக வாசித்தார். பல சொற்களுக்கான நேரடியான அர்த்தத்தையும் சொன்னார். அதன் பின் புலத்தையும் சொன்னார்.

“ ‘They shall grow not old’ இதன் பின்புலம் ஷேக்ஸ்பியரின் ஆண்டனி க்ளியோபாட்ரா தெரியுமோ?”

“அப்படியா?”

“Age cannot wither her, nor custom stale – க்ளியோபாட்ரா பற்றிய வர்ணணை”

“Melancholy – Edward Thomas…தலைப்பே ஏதோ ஓர் சோகமான தனிமையாக இருக்கிறது, இல்லையா?!”

நிதானமாக வாசித்தார். குக்கூ என்று உச்சரிக்கும் போது சற்று வேடிக்கையாக இருந்தது.

“எத்தனையோ கவிதைகள், நாட்குறிப்பேடுகள்…பனிக்காலம், வேனிர் காலம், கோடைக்காலம், இலையுதிர்காலம், காலை, மாலை, மதியம், நள்ளிரவு – எல்லா சூழ்நிலைகளிலும் எழுதினர். சில கவிதைகளைப் படித்தால் அசந்து போய்விடுவாய். எப்படியெல்லாம் குறித்திருக்கிறார்கள்…சிலவற்றைப் படிக்கலாமா?”

சில பக்கங்களை புரட்டி, “சரி, இப்போது ஓவனுக்கு வருவோம். The Sentry.”

பெரிய கவிதை, ஏற்றம் இறக்கம் இல்லாமல் வாசித்தார். வழக்கம் போல் இடையில் பல வார்த்தைகளுக்கு அர்த்தம் அல்லது அதன் பின்புலம் சொன்னார்.

“A listening post” படிக்கும் போதே askew என்ற சொல்லிற்கு அர்த்தம் தெரியுமா என்று கேட்டுவிட்டு அர்த்தம் சொன்னார்.

ஜெர்மானியர்களை ஏன் boche என்ற சொல்லால் அழைத்தார்கள் என்று காரணம் சொன்னார்.

நான் கவனித்துக்கொண்டிருந்தேன்.

அடுத்த பக்கத்தைப் புரட்டுவதற்கு முன் “என்ன நினைக்கிறாய்?” என்று கேட்டார்.

நான், தயங்காமல், “எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை…” என்றேன்.

“ம்ம்ம்…கவிதைகள் ஏதேனும் தொட்டிருக்கின்றனவா…அல்லது சலிப்பாக இருக்கிறதா?” அப்படி எனில் சொல்லிவிடு, நாம் இந்த விஷப் பரிட்சையை நிறுத்திவிடலாம்,” என்று சிறுநகைப்புடன் மூக்கைச் சுருக்கி கண்ணாடியை சரி செய்துகொண்டார்.

நான், “அப்படியெல்லாம் இல்லை…ம்ம்ம்…பெரும்பாலான கவிதைகள் நீண்ட உரைநடை போன்று இருக்கின்றன,” என்று இழுத்தேன்.

“ஆம், உரைநடைக் கவிதைகள்/பாடல்கள்தான். அப்படியான வகையும் உண்டுதானே?”

“சரிதான்…எனக்கு திரும்பத் திரும்ப இந்தக் கால நிலையைப் பற்றிய குறிப்புகள்தான் ஆச்சரியப்படுத்துகின்றன,” என்றேன்.

“ம்…உண்மைதான். என்னதான் வாழ்வா சாவா என்ற நிலையிலும், கொடும் மழையில், எதிர்த் தடுப்பு அரண்களில், முழங்காலளவு சேற்றில் வாழும் வாழ்க்கையிலும் காலநிலையை, இயற்கையைக் கவனிப்பது என்பது…”

“சரிதான். கவிஞர்கள் மட்டுமல்ல, சாதாரணமாகவே வீரர்களின் கடிதங்களிலேயே இவை நிறைய விரவி இருப்பதை உணரலாம்…மார்க்கின் சில கடிதங்களைப் படித்தால் அசந்துவிடுவாய்” என்றார்.

“மார்க்?”

“உன்னிடம் சொல்லவே இல்லை, இல்லையா?” என்றபடியே எழுந்தார்.

“வா, அவரை முதலில் அறிமுகப்படுத்துகிறேன். பின் அவர் கடிதங்களைப் படிப்போம்.”

வாசல் கதவின் அருகே சென்று கோட் ஸ்டாண்டில் தொங்கிக்கொண்டிருந்த குளிர் காலக் கோட்டை எடுத்து மாட்டிக்கொண்டார். பக்கத்தில் தொங்கிக்கொண்டிருந்த வீட்டுச் சாவியை எடுத்துக்கொண்டார்.

கதவிற்கு பக்கவாட்டில், ஆரம்பித்த மாடிப்படிகளில் சற்றே முனகிக்கொண்டே அமர்ந்து நிதானமாக பெரிய பூட்ஸை மாட்டிக்கொண்டார். நான் சட்டென என் ஷூக்களை மாட்டிக்கொண்டதைக் கண்டு முறுவலித்தார்.

கதவைத் திறந்து வெளியே இறங்கி, நானும் வெளியேறக் காத்திருந்து கதவைச் சாத்தினார். அவரது இன்னொரு கையில் ஐபேடை கவனித்தேன்.

நாங்கள் இருவரும் அவரது முன் தோட்டத்தைத் தாண்டி, முழங்காலிருந்து சற்றே உயரமான மரக்கதவைத் திறந்து கொண்டு தெருவை அடைந்தோம்.

வாசலின் இடது புறத்தில் நெற்றியை முழுவதுமாக மறைத்து தொங்கிக்கொண்டிருக்கும் முன் தலை மயிரைப் போன்று பெரிய தூங்குமூஞ்சி மரம். அசையாமல். அதில்தான் எனது சைக்கிளை சார்த்தியிருந்தேன்.

“இன்று நீ சைக்கிள் ஹெல்மெட்டை கழற்றாமல் வந்து வாசல் மணியை அடித்தபோது நிழலைக் கவனித்தாயா? முதல் உலகப்போர் வீரன் போலிருந்தாய்!”

இருவரும் ஒரு சேரச் சிரித்தோம்.

நவம்பர் காற்று சுத்தமாக இல்லை. மதியம் மூன்று மணிக்கு வானமெங்கும் அழுக்கான மேகமும், பளீரான நிசப்தமும் அங்கிருந்தன.

இந்த ரோடிங் கிராமத்திற்கு முதன் முதலில் வந்த போதே இந்த நிசப்தத்தை உணர்ந்தேன். பெரிய, கனத்த சன்னல் திரைகளுக்கு பின் இருக்கும் கனத்த அமைதி போன்று இருந்தது. இன்றும் அப்படித்தான்.

ஓர் குறுகிய S வடிவாக வளைந்து சென்ற தெருவின் இருபக்க விளிம்புகளிலும் அடர் மரங்களுக்கு நடுவில் அவ்வப்போது வீடுகள் பொதிந்திருந்தன.

நடைபாதை தெருவின் ஒரு பக்கத்தில் மட்டும்தான். இன்னும் குறுகியதாகச் சென்றது. ஒருவர் கால்களை நன்கு அகட்டிக் கூட நடக்க முடியாது. நடந்தால் ஒரு கால் தெருவில் வைக்க வேண்டியிருக்கும்.

அதனையொட்டிய பெரிய மரங்களின் கிளைகள் தாழ நீண்டு, தெருவின் எதிர் முனையை நன்கு அடைந்திருந்தன. சில அடிகள் சென்றதும் வளைவு இப்போது ஓர் கால்வாயின் மேலுள்ள பாலமாக மாறியது. “பழைய பாலம். மெதுவாகச் செல்லவும். கனரக ஊர்திகள் அனுமதி இல்லை” என்ற வாசகத்திற்குக் கீழ், பெரும்பாலும் அழிந்த எழுத்துகளில் “இப்பாலத்தில் ஏதேனும் வாகனங்கள் இடித்துச் சேதப்படுத்திருந்தால் இந்த எண்ணை அழைக்கவும்” என்ற செய்தி இருந்தது.

பாலத்தின் கீழ் பார்த்துக்கொண்டே சென்றேன். தாய் வாத்தின் பின், வெகு சீராக, குட்டி வாத்துகள் சென்றன. என் முன் சென்று கொண்டிருந்த ஆடமும் பார்த்துக்கொண்டு, தலையை ஆட்டிக் கொண்டே சென்றார். நாங்கள் பாலத்தின் முடிவை அடைந்த போது தாய் வாத்து செல்வதை நிறுத்தியது. குட்டி வாத்துகள் அதனைச் சூழ்ந்துகொண்டன.

பால முடிவில், தெருவாக ஆரம்பிக்கும் இடத்தில், அந்த நினைவுச்சின்ன ஸ்தூபி இருந்தது. ஓரடி உயர மேடை. அதில் செயற்கை செம் மலர் வளையங்கள். உயரமான, நான்கு பக்கங்கள் கொண்ட ஸ்தூபி. அதன் மேற்பாகம் கற்சிலுவையாக முடிந்திருந்தது. கீழ் பாகத்தில், நாங்கள் நோக்கிய பக்கத்தில், பெரிய எழுத்துகளில், “THE GLORIOUS DEAD” என்ற வாக்கியம் ஒன்றன் பின் ஒன்றாக, மூன்று சொற்களாக பொறிக்கப்பட்டிருந்தது.

அதன் கீழ்,

“TO THE MEMORY OF THE MEN OF THIS TOWN WHO FELL SERVING THEIR COUNTRY”

அதனைத் தொடர்ந்து, “1939-1945”

பின், கீழே மூன்று வரிசைகளாக பெயர்கள். வெறும் பெயர்கள்.

“நிறையப் பெயர்கள்” என்று முனகினேன்.

“த ரோடிங் என்பது சுற்றி இருக்கும் ஐந்து ரோடிங் கிராமங்களையும் சேர்த்தது” என்றார்.

தெருவில் இறங்கி இரு பக்கங்களையும் பார்த்துக்கொண்டே மெல்ல ஸ்தூபியின் நேர் எதிர் பக்கத்திற்குச் சென்றோம்.

அதே வாசகங்கள். வருடம் மட்டும் “1914-1918” மாறியிருந்தது.

கற் பெயர் பட்டியலை இரு கைகளாலும் வருடினார். கடுமையாகச் சுருங்கிய, பெரிய துணியைக் கொண்டு துடைப்பது போன்று இருந்தது. பின், ஒரு வரியை விரலைக்கொண்டு சுட்டினார்.

நான், சற்றுத் தயங்கி, பின்பு முன் சென்று வாசித்தேன்.

“மார்க் ஆஸ்பர்ன்.”

“லான்ஸ் கார்ப்பரல் மார்க் ஆஸ்பர்ன்…” என்றார்.

பின், மெல்ல, “மார்க், எனது தாயாரின் மூத்த சகோதரர்…”

“ஓ”…

ஆடம், இப்போது ஸ்தூபியை ஒட்டி, இறங்கிய போதுதான் அங்கு ஒரு பாதை இருப்பதைக் கவனித்தேன்.

கிட்டத்தட்ட, செடி கொடிகளை விலக்கிக்கொண்டு ரகசிய குகைக்குள் நுழைவது போல் இருந்தது. பச்சை வாசல் கொண்ட, பச்சைக் குகை.

பாதை முழுவதும் மஞ்சள், வெளிறிய இலைகள். மழை நீரில் ஊறி, நொசித்து ஒரு வித வாடையுடன் இருந்தன. பாதையை ஒட்டிக் கால்வாய் வந்து கொண்டிருந்தது. அல்லது கால்வாயை ஒட்டிப் பாதை.

இரு மருங்குகளிலும் நீண்ட பிர்ச் மரங்கள் குறைந்த இடைவெளியில் ஓக் மரங்களுடன் இறுகி நின்றன. அவ்வப்போது செர்ரி மரங்கள் அடர்த்தியாக, வெறும் முட்களுடன். கால்வாயில் மஞ்சள், வெளிறிய இலைகள் போர்வையாக ஒட்டி நிதானமாக சென்றன.

“இன்றும் சற்று நேரத்தில் இருட்டிவிடும்,” என்று சொல்லிக்கொண்டே நடந்தார்.

அண்ணாந்து பார்த்தேன். பிர்ச் மரங்களின் மேற்பாதி சூரிய ஒளியில் பொன்னிறமாக அசைந்தன. காற்று என்னுள் ஊடுருவி என் வேனிர்கால கோட்டை உப்பச் செய்தது.  ஜிப்பை கழுத்து உச்சி வரை இழுத்து காலரைக்கொண்டு பின் கழுத்து முழுவதையும் மூடிக்கொண்டேன்.

பக்கவாட்டில் என்னைப் பார்த்து முறுவலித்தார்.

“நீ முகத்தைச் சுருக்கி, மூக்கைச் சுருக்கி, தொடாமலேயே கண்ணாடியை மேலே சரி செய்துகொள்கிறாய் பார், எனக்கு அது என்னவோ பிடித்திருக்கிறது!” என்றார். நான் அவரை அசந்து நோக்கினேன்.

கால்வாய் அவ்வப்போது வளைந்து செல்ல, துணையாகப் பாதை வளைந்தும் சில இடங்களில் குறுகியும் சென்றது.

ஓர் வளைவில் பாதையின் கால்வாய் ஓரத்தில் சிறு மர பெஞ்ச். மஞ்சள் மற்றும் வெளிறிய இலைகளால் மூடி இருந்தது.

ஆடம் அதில் அமர்வார் என நான் எதிர்பார்க்கவில்லை.

“ஒன்றும் செய்யாது, சற்று நேரம் அமரலாம்,” என்றவாறே அமர்ந்து கொண்டார்.

பெஞ்சின் மேற் கட்டையில் ஏதோ வாசகம் பொறித்த தகடு பதிக்கப்பட்டிருப்பதை கவனித்தேன். ஆடமின் உடல் மெல்ல அதனை அடைந்து முழுமையாக மறைத்துக்கொண்டது.

தயக்கத்துடன் இடக்கையால் இலைகளை ஒதுக்கிவிட்டு, கை ஈரத்தை அனிச்சையாக பாண்ட்டின் பக்கவாட்டில் துடைத்துக்கொண்டு அமர்ந்து கொண்டேன்.

“ஆஸ்பர்ன், ஓர் அருமையான கிரிக்கெட் வீரர். பள்ளி ரக்பி அணியிலும் இருந்தார்”

சட்டெனத் திரும்பி, “உனக்கு கிரிக்கெட் நிச்சயம் பிடிக்குமே?” என்று கேட்டார்.

நான், அவசர அவசரமாக, “இல்லை, எனக்கு ஈடுபாடில்லை, சலிக்கும். என் அப்பா கிரிக்கெட் வெறியர். முடிந்த வரை இந்தியா ஆடும் மேட்சுகளுக்கு தபலா சகிதம் சென்று விடுவார்,” என்றேன்.

ஆடம், சிரித்தார்.

“எனக்கு கால்பந்துதான் உயிர்.”

“ம்ம்ம்…”

“மார்க், யுத்த சமயத்தில் நிறைய கடிதங்கள் எழுதியிருக்கிறார். அதில், பல சுவாரசிய கடிதங்கள் இருக்கின்றன. அவைகள் காட்டும் அந்த காலத்து சித்திரங்கள்…ம்…என்ன சொல்லலாம்…முக்கியமானவை.”

நான், சற்றுப் பரபரப்பாக “யுத்த முன்னணியில் இருந்து எழுதியவையா?”

“ஆம், முன்னணி அகழிகளில் ஓர் வாரம் என்றால், பின்னணி ஆதரவு அகழிகளில் ஓர் வாரம். பின்னர் ஓய்வு வாரம், சில சமயங்களில் விடுமுறை கூட…வீட்டுக்கு வருவார்கள்”…

“மார்க் என் அம்மா மற்றும் தாத்தாவிற்கு எழுதிய கடிதங்கள் முப்பதாவது இருக்கும். அவருக்கு இருந்த ஒரே வடிகால் அதுவாகத்தான் இருந்திருக்கக் கூடும்.

அவை அனைத்தையும் பத்திரமாக டிஜிடலைஸ் செய்துவிட்டேன். காலகாலத்திற்கும் இருக்கும்,” என்றவாறே திரையை தீற்றினார்.

பக்கத்தில் அமர்ந்து பார்க்கும் போது திரையில் அவர் கூட்டல் குறிகள் போடுவது போல் இருந்தது. சில சமயங்களில் இரு கழித்தல் குறிகளை ஒரே சமயத்தில்.

“என்ன சிரிக்கிறாய்?”

“ஒன்றும் இல்லை!”

“இதோ, இந்தக் கடிதம், Battle of Sommeல் எழுதியது.”

நான் பரபரப்பாகி, “உண்மையிலா? மார்க், அந்த போரில் பங்கேற்றாரா?”

“பின்ன…கிட்டதட்ட ஐந்து மாதங்கள் அவரால் போராட முடிந்தது…இந்த கடிதம் முன்னணி அகழியில் இருந்து அதிகாலை கண்காணிக்கும் பணியில் இருந்த போது எழுதியது…

“உனக்காக நான் இன்று சில கடிதங்களை தெரிவு செய்து வைத்து இருக்கிறேன். ஒரு நிமிடம் பொறு,” என்னிடம் ஐபேடை புறாவைத் தருவது போல் தந்தார்.

பின் என் தோளின் மேலிருந்து எட்டிப் பார்த்து,

“இதோ… இந்த கடிதம் மார்க் முன்னணி அகழிக்கு வந்த நாளின் மாலையில் எழுதியது.

இரு வாரங்கள் பின்னணி, உதவி அகழியில் இருந்த பின், முன்னணி அகழியில் ஒரு வாரம். இதுதான் நடைமுறை.  படிக்க முடிகிறதா என்று சொல்.”

ஜூம் செய்து பார்த்த போது ஓரளவிற்கு படிக்க முடிந்தது.

கருப்பு மசியால் சாய்வாக,நெருக்கமாக எழுதப்பட்ட எழுத்துகள்.

“புரிகிறதா?..”

“ம்ம்ம்.. ஓரளவிற்கு…என்னது பெரிய ஆரஞ்சு சூரியன்?…”

“ஹக்!…சரியாகத்தான் படித்திருக்கிறாய்!“என்றவாறே திரும்ப பெஞ்சின் மேல் சாய்ந்து கொண்டார்.

“அன்புள்ள மார்த்தா, முன்னணி அகழிக்கு வந்து ஒரு மணி நேரம் ஆகிறது. ஒரு வாரம் ஆனது போல் இருக்கிறது.  என்னுடைய கண்காணிப்பு முறை இன்று காலை மூன்று மணியிலிருந்து ஏழு மணி வரை.

ஜெர்மானியர்கள் என்னுடைய நிலையிலிருந்து நூறு அடிகளுக்கு முன்னால் இருக்கிறார்கள்,கவனித்துக்கொண்டு இருக்கின்றனர் என்ற எண்ணமே ஜில்லிடவைக்கிறது…இங்கு எத்தனை அமைதி தெரியுமா…ஒவ்வொரு முறையும்  எனது முறை வந்து இந்த நிலைக்கு வந்து பைனாகுலரில் பார்க்கும் போதெல்லாம் எனக்கு உதறும்…எத்தனை நாட்கள் இப்படியே போகின்றன…அவ்வப்போது நாங்கள் இங்கே இருக்கிறோம் என ஒரு 9mm வழியாக தெரிவிப்போம்.  சில நாட்கள், ஜெர்மானியர்கள் தெரிவிப்பார்கள்…

மற்ற சமயமெல்லாம் அசைவே இல்லாத அமைதி…

ஒரு முறை ஆஸ்பர்னை அவரது கடமையிலிருந்து ரிலீவ் செய்யப் போனபோது சொன்னதை நம்பவே முடியவில்லை. எதிரணியிலிருந்து பெரிய தும்மல் சத்தம் கேட்டதாம்!”

மெல்ல ஐபேட்டின் திரையை விரலால் உருட்டினேன்.

“இன்று காலை, நிச்சயம் ஆசீர்வாதம் செய்யப்பட்ட காலை. ஏன் என்று கேட்கிறாயா?

மேகங்கள் எங்குமே இல்லை. முந்தின நாள் நள்ளிரவு வரை பெய்த மழையின் தடயமே இல்லை. பக்கவாட்டில்…மெல்ல…மெல்ல, ஆரஞ்சு சூரியன்.. அட…எப்படிச் சொல்வது? நீ பார்த்திருக்கவேண்டும்…பார்த்துக்கொண்டே இருந்தேன்…ஆரஞ்சு பெரிதாகிக்கொண்டே போனது…வேனிர் மாலைக்காலங்களில் நம் தோட்டத்தில் அப்பாவும் அம்மாவும் பார்த்துக்கொண்டே இருப்பார்கள். அது போன்ற ஓர் சூரியன். மறையாமல் பல மணி நேரங்களுக்கு சூரியன் நின்றுகொண்டே இருக்கும். பள்ளி செல்ல மறுக்கும் பையன் போல!

இங்கோ, அதிகாலையில் எத்தனை வேகமாக வெளிவருகிறது…அடேயப்பா…நிச்சயம் இதை ஜெர்மானியர்களும் பார்த்துக்கொண்டு இருப்பார்கள் என நினைக்கிறேன்…”

ஒரு வேக விரல் உருட்டலில் அடுத்த கடிதம் வந்து விட்டது.

“அன்புள்ள மார்த்தா,

நான் நன்றாக இருக்கிறேன், நீயும் அப்பாவும் அப்படித்தான் என்று நம்புகிறேன்…

எனக்கு சமீபகாலமாக அளிக்கப்பட்ட பணி…என்ன சொல்வது? இரு படைகளுக்குமிடையே உள்ள நிலத்தில் (no man’s land), அவ்வப்போது போய் ஒற்றறிந்துகொண்டு வரவேண்டும்…எப்படி?!

இருட்டின பின், என் தலைமையில் ஐந்து அல்லது ஏழு சிப்பாய்கள் (men) ஊர்ந்து கொண்டு செல்வோம். அதற்கு முன்னால் வெளிச்ச வெடிகளை போடுவார்கள். வானில் பச்சை சிதறல்கள் கொஞ்சம் கொஞ்சம் நிலத்தைக் காண்பிக்கும். நாங்கள் ஊர்ந்து செல்ல ஆரம்பிப்போம். முதலில் கம்பி அரணை ஓர் சிப்பாய் வெட்டி வழி செய்து கொடுப்பார். பின், ஒவ்வொருவராக செல்வோம். இது வரை ஐந்து முறைகள் சென்றிருக்கிறேன். திரும்பியிருக்கிறேன். என் அதிர்ஷ்டத்தை என்னாலேயே நம்பமுடியவில்லை!

ஆனால், இந்த முறை, அதாவது சென்ற இரவு, மிக வித்தியாசமானது. எங்கள் முன்னணி அரண் ஐநூறு அடிகள் பின்னால் தள்ளிப்போய் ஒரு நாள் கூட ஆயிருக்கவில்லை…

கிளம்புவதற்கு முன் பரிசோதித்தபோது என் ப்ளாட்டூனிலிருந்து முன்பே தேர்வு செய்யப்பட்ட ஐந்து சிப்பாய்களில் மூன்று சிப்பாய்களுக்கு ஜலதோஷம் இருந்தது. பெரிதாய் செருமினார்கள். நிச்சயம் கூட்டிக்கொண்டு போகமுடியாது. எளிதில் காட்டிக்கொடுக்கப்படுவோம்.

ஆனால், இன்று போயே ஆகவேண்டும். நான் மட்டும்தான், முன்னேறிச் செல்வதற்கு.

என் பின்னால் ஒரு சில அடிகள் வரை இருவர் வந்தனர். எனக்காகக் காத்திருப்பர், அரை மணி நேரம்தான். அதன் பின் அவர்கள் திரும்பிவிடுவர்.

போகலாம் என்ற சமிக்ஞை கிடைத்ததும் சாரணப்படையினர் கம்பி அரணை வெட்டி வழி செய்து கொடுத்தனர்.  கசகசப்பான, வெக்கையான இரவு.  மெதுவாக ஊர்ந்து பாப்பி செடிகளை தேய்த்துக்கொண்டே சென்றேன். கொசுக்கள் படை படையாய் உடல் முழுவதும் படர்ந்தன.  எலிவளைகள் தட்டுப்படும்போதெல்லாம் சற்று விலகிப் போனேன். தலையை ஒவ்வொரு முறை மெல்ல தூக்கும் போதும் சீறி வரும் குண்டை எதிர்பார்த்துத்தான் போனேன்.

இந்த முறை எங்கும் கந்தக நாற்றம் சூழ்ந்திருந்தது. எங்களது ஒரு முன்னணி போஸ்ட்டை நோக்கித்தான் சென்றேன். இன்று காலை அங்கு குண்டு வீச்சு நிகழ்ந்த போது அங்கு ஐந்து வீரர்கள் இருந்தனர்…

இப்போது அவர்கள் யாரும் உயிரோடு இருப்பதற்கான சாத்தியங்கள் இல்லை. உடலை எடுத்து வருவதுதான் எனக்கு இட்ட பணி.

இதற்கு முன் இரு முறைகள் எனது அணியினர் இப்படி உடல்களை எடுத்து வந்திருக்கிறோம். காயம் பட்டவர்களை எடுக்கப் போவதாகத்தான் தலைமைக்கு அறிவிப்போம். உடல்களைத்தான் கொண்டு வருவோம்.

இந்த முறை எங்கள் போஸ்ட் இருந்த இடத்தில் பெரிய அகலமான குழி இருந்தது. மிக மெதுவாக ஊர்ந்து, கூர்மையாகக் கவனித்தேன். கண்களில் கூச்சம் அதிகமாகி, கண்ணீர் துளிர்க்கத் துளிர்க்கக் கவனித்தேன்.

பின் மெல்ல, குழியை அணுகினேன். எட்டிப் பார்த்தேன். இரு மோட்டார் கார்கள் உள்ளே இருக்கலாம் போல அகலம். அல்லது அதற்கும் மேலும் இருக்கலாம். உள்ளே இருட்டாகத் தெரிந்தது. மெல்ல, உள்ளே சரிந்தேன். ஆழமும் ஒரு கார் அளவிற்கு இருக்கலாம். தரை தட்டுப்படுவதற்கு முன்னரே ஹார்டி தட்டுப்பட்டார். முழங்கால் வரை புதைந்திருந்த, ஹெல்மெட் இல்லாத ஹார்ட்டியை அசைத்துப் பார்த்தேன். அசைவில்லை. இருட்டு இன்னும் கடுமையாக இருந்தது. கைகளால் ஹார்டியை தடவினேன். வயிற்றுப் பகுதிக்கு வந்ததும் புரிந்துவிட்டது. மொத்த குடலும் வெளியே கிடந்தது. கை தாராளமாக போகும் அளவிற்கு ஓட்டை. கைகளை அவன் மேலேயே தேய்த்தேன்.

அருகில் ஸ்டான் ஃபோர்ட் மல்லாந்து கிடந்தான். அவன் முனகல் எனக்குப் பயமளித்தது. நிச்சயம் ஜெர்மானியர்களுக்கு கேட்க சந்தர்ப்பம் இருக்கிறது…சற்று விரைந்து ஊர்ந்து அவன் வாயைப் பொத்தினேன். திடுக்கென அவன் கண்கள் திறந்தன. கத்தும் முன் அவசரமாக பொத்தின கையை அழுத்தினேன். அவன் முகத்தில் அடர்ந்து அப்பியிருந்த கொசு போர்வை சிதறி எழுந்து பின்னர் தயக்கமாக அமிழ்ந்தது.

இன்னொரு கையால் அவனைப் பரிசோதித்தேன். வயிற்றின் பக்கவாட்டாக குண்டு சிதறல் கிழித்துப்போயிருந்தது. ஆனால் பெரிய கிழிசல் இல்லை. குண்டு மிக அருகில் விழுந்த அதிர்ச்சியில் மயங்கியிருக்க வேண்டும்.

மெல்லப் பொத்தின கையை எடுத்து அவன் வாயருகில் என் காதைக் கொண்டு போனேன்…”கால்…என் கால்…”

அவன் காலைத் தடவிக்கொண்டே வந்தேன். இடது கால், முழங்காலில் சற்றே ஒட்டிக்கொண்டு இருந்தது. காலை சற்றே உதறினால் கூட தனியே வந்துவிடும்.

ஸ்டான் போர்டை இப்போது உடனே எடுத்துக்கொண்டு போனால், ஒரு வேளை உயிர் பிழைக்க வாய்ப்பிருக்கிறது…ஆனால் வேறு என்ன இடங்களில் பாதிப்பு என்று தெரியவில்லை. ஆனால் எடுத்துக்கொண்டு போகவேண்டும்…என் கடமை…

முதலில், இந்த குழியிலிருந்து வெளி வரவேண்டும்…மூச்சைப் பெரிதாக இழுத்துவிட்டேன். மர ஸ்ட் ரெச்சர் குழியின் வெளியில் இருக்கிறது. எப்படி ஸ்டான்ஃபோர்டை அதில் வைப்பேன், இழுத்துக்கொண்டு போவேன். நிறைய யோசிக்கவில்லை. யோசிக்க எதுவும் இல்லை

“என் தோளைக் கெட்டியாக பிடித்துக்கொள்” ஸ்டான் ஃபோர்டின் காதில் கிசுகிசுத்தேன். “சற்று தொலைவுதான். நீ உயிரோடுதான் இருக்கப்போகிறாய், என்னை நம்பு,”

வலியில் அனத்திவிடுவானோ என்ற பயத்தில் மெல்ல மெல்லத்தான், அவன் வாயைப் பொத்திய கையை எடுத்தேன். நல்லவேளை அவன் கத்தவில்லை.

நான் குப்புற படுத்துக்கொண்டேன். ஸ்டான் ஃபோர்ட் மெல்ல என் முதுகில் கவிழ்ந்தான். எப்படிக் கதறாமல் இருக்கிறான் என்று ஆச்சரியமாகத்த்தான் இருந்தது. இதை எழுதும் போதும் அப்படித்தான் இருக்கிறது. ஆனால், அப்போது வேறு எதுவுமே தோன்றவில்லை. அவனுடன் நமது நிலைக்கு திரும்ப வேண்டும். அது ஒன்றுதான்.

மெல்ல குழியிலிருந்து மேலே நோக்கி தவழ்ந்து முன்னேறினேன். முதுகில் சூடாகவும் ஈரமாகவும் இறுகிக்கொண்ட ஸ்டான்ஃபோர்டுடன் மேல் நோக்கிப் போவது யுகமாக இருந்தது. குழியின் வெளிப்பகுதிக்கு அருகில் வரவர, துண்டு வானம் தெரிந்தது. மேகங்கள் எல்லாம் விலகிப்போயிருக்க வேண்டும். நட்சத்திரங்கள் மின்னிக்கொண்டு குழியிலிருந்து வெளியில் வந்து கையை நீட்டினால் தொட்டுவிடக்கூடிய தூரத்தில்தான் இருந்தன.

இந்தச் சம்பவத்தை, இப்போது நினைவில் வைத்து எழுதும் போது எனக்கு இப்படித்தோன்றுகிறது. ஆனால், அப்போது எனக்குப் பயம் உச்சத்தில் இருந்தது. இத்தனை நட்சத்திரங்களை நான் எதிர்பார்க்கவில்லை. எத்தனை வெளிச்சம் தெரியுமா? நம்பவே மாட்டாய்.

குனிந்து ஒரு முறை பார்த்துக்கொண்டு மூச்சைப் பெரிதாக இழுத்து விட்டுக்கொண்டு தலையை உயர்த்தினேன்.

வானில் வேவு ராக்கெட்கள் வெடித்த பச்சை ஒளிச்சிதறல்கள் பின்னணியில் மேலே இருந்து பாம்பு போல் ஓர் துப்பாக்கி குழல் கிட்டதட்ட என் மூக்கை குறிபார்த்தது தெரிந்தது. அதனைத்  தொடர்ந்து  ஒரு கண்ணைச் சுருக்கிக் குறிபார்த்தபடி இன்னொரு பச்சைக்கண்ணுடன் ஜெர்மானியன் ஒருவன் எட்டிப் பார்த்தான்!

அந்தத் துப்பாக்கி மாடல் 1888 கமிஷன் ரைஃபிள்தான். நம்மிடம் நிறைய, சேகரித்தவை இருக்கின்றன.

முதுகில் காயம் பட்டவனை வைத்துக்கொண்டு கைகளால் உந்தி மேலே வருபவனால் தனக்கு எந்த ஆபத்தும் வராது என்று உறுதி செய்து கொள்ள அவனுக்கு ஓர் கணம் கூட ஆகியிருக்காது. ஆனால் எங்களிருவருக்குமே அது ஓர் மாபெரும் கணம்…நான் நிச்சயம் உயிரற்ற கண்களோடுதான் அவனை நோக்கியிருப்பேன்…

தரையில் தவழ்ந்திருந்தவன், ரைபிளிலிருந்து கண்களை எடுத்துவிட்டு சற்றே தலை தூக்கி என்னை நோக்கினான். என்ன பச்சை….உயர்நிலைப் பள்ளியிலிருந்து நேரே வந்திருக்க வேண்டும். வெண்ணிற புருவங்கள்.

இத்தனை காலம் சண்டையிட்டு இருந்தாலும் இத்தனை அருகில் எதிரியை அவனும் பார்த்திருக்க மாட்டான். மியூசியம் அல்லது மிருகக் காட்சி சாலையில் பார்ப்பது போல்தான் பார்த்தான்.

என் முதுகில் ஸ்டான் ஃபோர்ட் வலியில் நெளிந்ததை உணர்ந்தேன்.

ரைஃபிளை மெல்ல விலக்கிவிட்டு, “காயம் பட்டவனை நீ கொண்டு செல்லலாம்; நான் ஒன்றும் செய்யமாட்டேன்,” என்று கரடுமுரடான இங்கிலிஷில் சொன்னான். பின் மெல்ல ஊர்ந்தவாறே பின் வாங்கி என் பார்வையிலிருந்து மறைந்தான்.

நான் மெல்ல இயந்திரத் தனமாக குழியிலிருந்து வெளிவந்தேன். நம் திசையை நோக்கிச் செல்வதற்கு முன் ஜெர்மானிய திசையைப் பார்த்தேன். இருளில் ஒன்றும் தெரியவில்லை. இருந்தும் என்னை பல பச்சைக்கண்கள் நோக்கிக்கொண்டிருக்கின்றன என்பது உணர்வில் இருந்தது…”

கடிதம் முடிந்துவிட்டது. ஆடமை நிமிர்ந்து பார்த்தேன்.

பின், சற்று நேரம் கழித்து,

“அப்புறம் என்ன ஆயிற்று? வேறு ஏதாவது மார்க்கின் கடிதம்?” என்று இழுத்தேன்.

“மார்க்கிற்கு பிரிட்டிஷ் யுத்த பதக்கம் கிடைத்தது. ஸ்டான் ஃபோர்ட் மருத்துவமனையிலிருந்து வெளியேறியபின்  கெண்ட்டிற்கு திரும்பிவிட்டார். “அகழியில் வாழ்க்கை (Life at Trenches)” என்ற தலைப்பில் ராணுவத்தில் சேர்பவர்களுக்கு பயிற்சி அளித்துக்கொண்டிருந்தார், அடுத்த வருடம் முன்னணிக்கு திரும்பும் வரை”

“மார்க்கின் வேறு கடிதங்கள்?”

மடியிலிருந்த ஐபேடை இயக்கி நானே தேட தயக்கமாக இருந்தது.

ஆடமை நோக்கினேன்.

அவரோ கால்வாயின் ஓரங்களில் செறிந்து நின்ற நீண்ட புற்களையே பார்த்துக்கொண்டிருந்தார்.

“இந்த கடிதத்திற்குப் பின் குறைந்தது, பத்து கடிதங்களையாவது எழுதியிருப்பார்…போன வருடம்தான் எனக்கு ஓர் கடிதம் கிடைத்தது. பரணில், அம்மாவின் இன்னொரு டைரியில் செருகி இருந்தது”

“ஓ?”

“அதில் இந்த ஜெர்மானியனை மறுபடியும் சந்தித்தது பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்”

“என்னது? உண்மையிலா? அதைப் படிக்கலாமா?”

ஆடம் என் பரபரப்பிற்கு சம்பந்தமே இல்லாமல், கால்வாய் போக்கைப் போல் நிதானமாக வெறித்துக்கொண்டிருந்தார்.

தலைக்கு மேல் சடசடத்த ஆரவாரக் கூச்சல் கேட்டது. இருவரும் தலை நிமிர்த்தி மேலே நோக்கினோம்.  V வடிவத்தில் கொக்குகள் தாழப் பறந்து எங்களைத் தாண்டின. அவைகளுக்கு மேல் அதிக வெண்மையில்லாத, ஒழுங்கற்ற வடிவில், ஆனால் சூரியனை மறைக்குமளவு மேகம்.

“கடிதம், கிட்டதட்ட நைந்து, வெளிறி, விரல்களால் சற்று இறுக்கிப் பிடித்தால் கிழிந்து விடும் நிலையில் இருந்தது. இத்தனை வருடங்கள், இத்தனை குளிர்காலங்கள், மழைக்காலங்களுக்கு எப்படி தாக்குப் பிடித்தது என்பதே பெரிய மர்மம்.”

“இம்பீரியல் யுத்த அருங்காட்சியகத்தின் காப்பகத் துறையில் என் நண்பனின் மகள் வேலை செய்கிறாள். அவளிடம் விஷயத்தை சொன்னேன். ஒரு நாள் வந்து பதப்படுத்துவதற்காக வாங்கிச் சென்றாள். இன்று வரை திரும்பத் தரவே இல்லை” …

“ம்ம்ம்…ஆனால் அதற்கு முன் நீங்கள் அதை போட்டோ எடுத்துவிட்டீர்கள், அப்படித்தானே?”

ஆடம் பக்கவாட்டில் நன்கு திரும்பி என்னைப் பார்த்து முறுவலித்தார்.

“No man’s land ல் அவ்வப்போது ஊடுருவுவது, எதிர் போஸ்ட்டிலிருக்கும் அல்லது ஒற்று/வேவு வேலைக்காக ஊடுருவும் எதிரி வீரர்களை முடிந்தால் கடத்தி கொண்டு வருவதற்காகவும்தான். முக்கியமாக, எதிர் பக்கத்தில் நிறைய வாகனங்கள் வந்து செல்லும் ஓசை, நிறைய வீரர்களின் இருப்பு ஓசை, இந்தப்பக்கத்தில் உஷாராக்கிவிடும். ஏனெனில் ஓர் பெரிய எதிர் தாக்குதல் வரப்போகிறது என்று தெரியும். அவ்வப்போது ஓர் அலை வந்து அவரவர் எல்லையை நீட்டிக்கொள்வது அடிக்கடி நடக்கக்கூடிய விஷயம். அந்த அலை எப்போது என்பது மட்டும்தான் தெரியாது.

அந்த சமயங்களில், எதிர் அணி வீரர்கள் யாராவது பிடித்துக்கொண்டு வந்து விஷயத்தை வாங்குவது அடிக்கடி நடக்கக்கூடிய விஷயம். அப்படி ஓர் சந்தர்ப்பத்தில், ஓர் செப்டம்பர் மாலையில் பிடித்துவரப்பட்ட இரு ஜெர்மானியர்களில் இவரும் ஒருவர் என்று மார்க் எழுதியிருக்கிறார்.”

“உண்மையிலா? இந்த ஐபேட்டில் இருக்கிறதா? படிக்கலாமா?” என்று படபடத்தேன்.

“இந்த தொகுப்பில் அதை நான் சேர்க்கவில்லை. அதை இன்னொரு ஹார்ட் டிஸ்க்கில் சேமித்து வைத்திருக்கிறேன். வீட்டிற்கு போய் காட்டுகிறேன்.”

எனக்கு புரியவில்லை. என்பது அவருக்கு நிச்சயம் தெரியும்.

“என்னுடைய தொடர்ந்த அழைப்புகளுக்கு இம்பீரியல் யுத்த அருங்காட்சியகத்திலிருந்து  வரும் பதில்கள் சம்பிரதாயமாக இருந்த போதே நினைத்தேன். அவர்கள் எனக்கு அந்தக் கடிதத்தைத் திரும்ப அளிக்கப்போவதில்லை. சொல்லப்போனால், எப்படி, மார்க்கின் இந்தக் கடிதம் தணிக்கையில் சிக்காமல் வெளி வந்தது என்று வியந்து இருப்பார்கள்.”

“அப்படி என்ன அதில்…” இழுத்தேன்.

“இழுத்துவரப்பட்டவர்களின் தலைக் கவசத்தை கழற்றி, முகங்களின் அருகே விளக்கை செலுத்தினவுடனே அவனை, அவன் கண்களை அடையாளம் கண்டு கொண்டேன் என்று மார்க் உறுதியாகச் சொல்கிறார். இரு முறைகள் குறிப்பிட்டிருக்கிறார். அந்தப் பையன் இவரை அடையாளம் கண்டு கொண்டது போல் தெரியவில்லை. சொல்லப்போனால், அவன் எதையுமே சரியாகப் பார்க்கும் நிலையில் இல்லை.

பயத்தில் அவன் முகம் முழுவதுமாக வெளிறிவிட்டது. நடுங்கும் விரல்களால் தன் சட்டைப் பையை, துணிப்பையைக் காலி செய்து மேசையில் பரப்பி வைத்தான். அடையாள அட்டை, பென்சில், மண் ஒட்டிய தின்பண்டங்கள் என பலவும் இருந்தன – என்கிறார்.”

“அவனிடமிருந்து எதுவும் பெரிய விஷயம் கறக்கவில்லை, எதுவும் தெரியாது என சத்தியம் செய்கிறான். அவனது இங்கிலிஷ் ‘அவன்’தான் என்று மறுபடியும் உறுதி செய்கிறது என்கிறார். ஒரு கட்டத்தில் சுவரில் சாய்ந்து முகத்தை மூடி விசும்பும் போது முகம், விரல்கள் – நடுக்கங்கள் உண்மையாக இருந்தன என்கிறார். போர் மட்டும் இல்லையெனில் பள்ளி முடிந்து மாலை வீட்டுக்கு சீட்டியொலியோடு வரும் ஓர் பையன் அவ்வளவுதான்… உன்னைப் போல், மார்க்கைப் போல்…”

“அப்புறம்..”

மறுபடியும் ஆடம் மவுனமாக வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார்.

“கைதிகளை திரும்பப் பின்னணி அரணுக்கு அனுப்ப நேரம் இல்லை; அடுத்த நாள் அதிகாலையே எதிர்பார்த்த பெரிய ‘அலை’ தொடங்கிவிட்டது. அன்று நாள் முழுக்க நடந்த குண்டு வீச்சில் நேசப்படையினரின் அரண்கள் அரை மைல் அளவிற்கு பின்னோக்கித் தள்ளப்பட்டது. அந்த ஜெர்மன் பையனைப் பற்றிய விவரம் கிடைக்கவே இல்லை என்று முடித்திருக்கிறார்.”

“உண்மையிலா?…”

ஏன் உண்மையா என்று கேட்கிறாய்? அனேகமாகக் கடத்தி வந்தவர்களைக் கொன்று விட்டார்கள் எனச் சந்தேகப்படுகிறாயா?”

பெஞ்சில் நான் இப்போது நன்று சாய்ந்துவிட்டிருந்தேன். அவர் முகுகு பின் பலகையில் சற்று தொட்டுக்கொண்டிருந்தது. இப்போது நாங்கள் இருவருமே பேசவில்லை. கால்வாயை வெறித்துக்கொண்டிருந்தோம்.

“பல கடிதங்களில் சென்ஸார் செய்யப்பட்டிருப்பதை கண்டு கொள்ள முடியும். மார்க்கின் சில பாராக்களை மையால் தீட்டி மறைத்திருப்பார்கள்…” என்று முனகினார்.
வேறு என்ன என்னவோ சொல்ல விரும்பினார் என்று தோன்றியது.

குறைந்தது மூன்று நான்கு நிமிடங்களாவது கடந்திருக்கும்.

“The Great War!…Hmmm…A war to end all wars!”

“என்ன ஒரு நகை முரண்…”

“Dulce et decorum est pro patria mori…என்னவொரு நிரந்தர பொய்!” என்னையறியாமல் சொற்களை இறைத்துக்கொண்டே இருந்தேன்.

சற்று சமாதானக் குரலில், ஆடம், “இதை என்றும் மறக்கவே கூடாது, அதற்காகத்தான் இத்தனை நினைவுச்சின்னங்கள், சேகரிப்புகள்…NEVER, EVER.”

நான், உடனடியாக, ஆனால் நிதானமான குரலில், “கவலை வேண்டாம் ஆடம், மறவாது, இவை தொடர்ந்து கொண்டுதானே இருக்கின்றன,” என்றேன்.

முடிவதற்கு முன் கடைசியாக ஒரு முறை நின்று பிரகாசமாக எரிவது போல் பளீரென சூரிய வெளிச்சம் எங்கள் பின்னாலிருந்து மரங்களை ஊடுறுவி, எங்களையும் ஊடுருவி, கால்வாயைத் தாண்டி எதிர்ப் பக்க மரங்களையும் ஊடுருவி ஜொலிக்க வைத்துக்கொண்டிருந்தது. ஆரஞ்சு சூரியன் என்ற வார்த்தை மனதில் உதித்தது.

***

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.