மத்தியஸ் எனார் : வரலாற்றின் நிழலுலகில் பயணிக்கும் நில்லாத் தொடர்வண்டி

பால்கன்ஸில் பவுண்ட்: ஒரு ரயில் காண்டோ – நம்பி கிருஷ்ணன்

தேவதையே, பாடு! அலை முறியும் கரை தேடிச் செல்லும் நாவாய்ப் பயணங்களையல்ல, மிலன் துவங்கி ரோம் செல்லும் ரயில் பயணத்தை (மீலன், லோடி, பார்மா, ரெஜ்ஜோ எமீலியா, மொடியானோ, பொலோன்யா, ப்ராடோ, பிளாரன்ஸ் மற்றும் ரோமில் நிறுத்தங்கள்), இத்தாலிய கிராமங்களின் ஊடே விரைந்தோடும் 517 கிமீ பயணத்தை, மூச்சிரைக்க விரையும் 517 பக்க காவியமாக நமக்கேயுரிய பின் நவீனத்துவ இலியாத்துக்கு இணை செய்: ரயில் பயண அட்டவணைகளின் ஹோமரிய தேவதையே, எங்களுக்கேயுரிய ரயில் அட்டவணைக் கையேட்டையும் வருகை புறப்பாடுகளை அறிவிக்கும் எங்களுக்கேயுரிய தீர்க்கதரிசினங்களையும் அளி, சொல், பிற்காலத்தைய அகிலீஸின் (Achilles) சகாப்தத்தை முன்னே கண்டு- பிரான்சிஸ் செர்வான் மிர்கொவிச் (Francis Servain Mikovic), முன்னாள் பால்கன் பாசிஸ்டு, “வீரன், உளவாளி, பித்தேறிய நிலைகளின் அகழ்வாய்வாளன்”, இன்று மிலனுக்கும் ரோமுக்கும் இடையில் ஒரு புனைப்பெயருள் மறைந்து விட்டவன், வாழும் ஆவிகள் துணையாய் இருப்பவன், வாட்டிகன் விலை கொடுத்து வாங்கும் என்ற நம்பிக்கையில் ரகசியங்களும் சிறுமை நிறைந்த வரலாறுகளும் நிறைந்த கைப்பெட்டியை கொண்டு செல்பவன், இவ்வாறான வர்த்தகத்தில், பாம்பு தன் சட்டையை உரிப்பது போல் தன் முந்தைய அகத்தை முற்றிலும் துறக்கவிருப்பவன், சுயவாதையின் போதைவயப்பட்ட நம்மை மகிழ்விக்க தன்னையே மீளுருவாக்கம் செய்யும் அகம் கொண்டவன், ரத்தம் நிறைந்த பால்கன்களின் வரலாற்றை மீண்டும் நிகழ்த்திக் காட்டும் மீளுருவாக்கம் அவனது அகம், அக்கொடூர வரலாற்றின் கைப்பாவையாய் அவனும் அதீனாவால் (Athena) உந்திச் செலுத்தப்பட்டு சித்திரவதைகளும் கற்பழிப்புகளும் சிரச்சேதங்களும் செய்யச் செல்பவன், தன் நண்பன் ஆண்ட்ரீயாவின் (Andrija)வெஞ்சினம் அறுப்பவன், ஆன்டி- மலம் கழித்துக் கொண்டிருக்கும் கையறு நிலையில் எதிரிகளால் எதிர்பாராதவிதமாய் சுட்டுக் கொல்லப்பட்ட பாட்ரோகிளஸைப் போன்று உன்னதமானவனும்,மோய்ராக்களால் அம்மண மரணத்தில் கேலி செய்யப்படும் ஆன்டி-இவான் தெர்வா (Ivan Deroy) என்கிற பிரான்சிஸ் செர்வான், தன் சரிதையை வரலாறாய் நினைவுகூர்பவன், வெளியினூடு ஓர் உடலாய், காலத்தினூடு ஒரு மனமாய் விரைபவன் வெனிஸ்சுக்கும் பரீயிற்கும் டாஞ்சியர்ஸுக்கும் ட்ரியெஸ்டேவுக்கும் அல்ஜியர்சுக்கும் ஜெருசலத்துக்கும் பார்சிலோனாவுக்கும் பெய்ரூட்டுக்கும் இன்னும் பல இடங்களுக்கும் பயணிப்பதும் , மீலனிலிருந்து ரோம் பயணிப்பதும் ஒன்றென்பது போல் பூகோள வம்புகளாய் வரலாற்றைப் பேசுபவன்…

பிரான்சிஸ் செர்வான் என்ற மனிதனின் புனைகதையைக் கேட்பது என்பது வரலாற்றில் வாழ்ந்து மறைந்த மில்யான்-ஆஸ்ட்ரேக்கள், அலோயிஸ் ப்ரூன்னர்களின் உண்மைக் கதைகளையும் கேட்பது என்பது போல்… மத்தியஸ் எனார் (Mathias Enard) என்ற ஒரு நிஜ நாவலாசிரியனின் ஜோன் (Zone) என்ற நிஜ நாவலை வாசிப்பது புனையப்பட்ட நாவலாசிரியன் ரஃபேல் காஹ்லா புனைந்த நாவலை பிரான்சிஸ் வாசிக்க, நாமும் வாசிப்பது என்பது போல், இந்த நாவலில் மரியான், ஸ்டெபானி, சாஷ்காக்களோடு பிரான்சிஸ் கொண்ட காதல் விவகாரங்களின் பரிதாபகர கண்ணீர்க்கதைகளில் மனதை இழப்பது என்பது மற்றைய நாவலின் இரு மடங்கு அந்நியப்படுத்தப்பட்ட நாயகர்களான இன்டிஸார் மற்றும் மார்வானின் தேய்வழக்குத்தன்மை கொண்ட மகோன்னதத்துக்கு எதிர்ப்பாட்டாய் ஆவது போல், பெய்ரூட்டை விடுவிக்கப் போராடி தன் சகா அஹமதால் காட்டிக் கொடுக்கப்படும் மார்வான் ஏதோ ஒரு வகையில் க்ரோயேஷியாவின் விடுதலைக்குப் போராடி முடிவில் ஒரு அரைக்கிறுக்கனைச் சிரச்சேதம் செய்து தன் சகா ஆன்டியின் மரணத்துக்குப் பழி தீர்த்துக் கொள்ளும் பிரான்சிஸின் வடிகால் போல்; போல், போல், போலும்… இன்னும் இன்னும் மேலும் மேலும்… வரலாறு, நினைவு மற்றும் பூகோளத்தின் பட்டகத்தினூடே முடிவற்றுச் சிதறும் ஒளிக்குழல்களாய் எங்கெங்கும் எல்லாருக்கும் எப்போதும் காலமின்மையில் தொடர்ந்து நிகழும் கதையாய்,ஜோனின் கதையே மெடிட்டரேனியனின் கதையாகவும் ஆக்டேணிஜின் (Akdeniz) கதையே உலகின் கதைபோலவும்: திரும்பத் திரும்ப பழிக்குப் பழியாய்த் தொடரும் இனப்படுகொலைகளின் அணிவகுப்பு, ரஷ்யர்களும் கிரேக்கர்களும் செர்ப்கள், அரேபியர்கள், துருக்கியர்களுக்கு அடுத்து முஸ்லிம்கள் கத்தோலிக்கர்கள் ஐரோப்பியர்களுக்கு அடுத்து மேற்கின் க்ரோவாட் கோட்டைகளுக்கு அடுத்து, மத்திய கிழக்கின் கொடுங்கனவுகளை தமக்கேவுரிய தனிக் கேளிக்கைகளாக நிகழ்த்தும் யூதர்களோ எல்லாருக்கும் அடுத்து…என்றொரு ஒழுங்கற்ற வரிசையில் மீண்டும் மீண்டும் கலைத்துத் தொகுக்கப்படும் பயங்கர அறைகள், முட்கம்பி வெளிகள், எரியூட்டு அடுப்புகள், முகாம்கள், மவுட்ஹவ்சன், பொல்ஜானோ, யாசனோவாட்சுகளின் அணிவகுப்பையும்… நாஜிக்கள், பாசிஸ்டுகள், பலாஞ்சிஸ்டுகள், உஸ்டாஷேக்களின் அணிவகுப்பையும்… பவுண்ட், பரோஸ், ஜாய்ஸ், பௌல்ஸ், கரவாஜ்ஜோ, முகமது ஷுக்ரி என்று நேசத்துக்குரிய கலைஞர்களின் அணிவகுப்பையும்… அணிவகுப்பின் முடிவில் அபோலினேரிய “தொல்லுலகக் களைப்பும்” சிரச்சேதம் செய்யப்பட்ட அதன் சூரியன்களையும் பாடுகையில், “நேர்மையை இழக்காமல் பிழைச்சாட்சியம்” சொன்னபின் “சிறிது ஒளி, விரைவொளி” காணும் பவுண்டிய நம்பிக்கையையில் உயிரற்ற காற்று, தசைமுறுக்கு கொண்டு பிரான்சிஸின் டால்பின்களாகி பவுண்டின் சிறுத்தைகளைப் போன்ற ஒரு பூனைத்தன்மை கொண்ட ஒழிவுடன் உல்லாசக் கொண்டாட்டம் காணும் “ஜ்வலிப்புகளுக்குத் திரும்பும்” வழியையும் பாடு, தேவதையே!, நில்லாது பாடு, அகிலீஸின் கொலைகார ஆங்காரம் கழிந்து ஒழிவில் ஒடுங்க குதிரைகளை அடக்குவோன் ஹெக்டரின் இறுதிச் சடங்கன்று கீழ்வானில் பூக்கும் ரோஜாக்களாய் ஒளி மலரட்டும் என்று பாடு, தேவதையே, நில்லாது பாடு, காலவெளியில் ஓர் இடைவெளியாய் விழும் முற்று முத்திரைகளுக்கு இடம்கொடாது பாடு, பாடு, ஆகட்டும் உன் பாடலின் முடிவில் :

oOo

இனி வருவது ஜோன் நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த சார்லட் மாண்டலுடன் ஸ்காட் எஸ்பசிடோ நிகழ்த்திய நேர்காணலின் மொழிபெயர்ப்பு: 

மத்தியஸ் எனாரின் ‘ஜோன்’ நாவலை ஓப்பன் லெட்டர் பதிப்பித்திருக்கிறது. இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருப்பவர் சார்லட் மாண்டெல் (Charlotte Mandell). கனபரிமாணங்களிலும் சரி, உள்ளடக்கத்திலும் சரி, கடந்த சில ஆண்டுகளில் பிரெஞ்சு மொழியில் வெளிவந்த காத்திரமான நாவல்களில் ஜோனும் ஒன்று. பின்சன், வோல்மன், காடிஸ் முதலானவர்களை பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்த புகழ் பெற்ற நாவலாசிரியரும் மொழிபெயர்ப்பாளருமான க்லாரோ, கடந்த பத்தாண்டுகளில் வெளிவந்த முக்கியமான நூல்களில் ஒன்று என்று ஜோனைக் குறிப்பிட்டிருக்கிறார். அடிப்படையில் இது கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக கிழக்கு ஐரோப்பாவுக்கும் மேற்கு ஐரோப்பாவுக்கும் இடையில் நிகழ்ந்து வரும் மோதல் குறித்த வரலாறு மனவோட்டமாய் வெளிப்படும் 517 பக்க அளவு கொண்ட, ஒற்றை வாக்கிய நாவல். பிரெஞ்சு மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்பவர்களில் முக்கியமான ஒருவர் மாண்டெல். கனபரிமாணங்களிலும் சரி, உள்ளடக்கத்திலும் சரி, மிகப்பெரிய புத்தகமான ‘தி கைண்ட்லி ஒன்ஸ்’, Proustன் ‘தி லெம்வான் அஃபேர்’ (The Lemoine Affair), Maurice Blanchotன் ஏராளமான படைப்புகள் மற்றும் Pierre Bayardன், ‘ஷெர்லாக் ஹோம்ஸ் வாஸ் ராங் ஹியர்’ உட்பட அவர் முப்பது புத்தகங்களுக்கும் மேல் மொழிபெயர்த்திருக்கிறார். இங்கு நாம் அவருடன் ஜோன் பற்றி பேசுகிறோம்.

ஸ்காட் எஸ்பசிடோ : உங்கள் தளத்தில் உள்ள தகவல்களின்படி நீங்க 2001ஆம் ஆண்டுக்குப்பின் இதுவரை 28 புத்தகங்களை மொழியாக்கம் செய்திருக்கிறீர்கள். கிட்டத்தட்ட ஆயிரம் பக்கம் கொண்ட ‘தி கைண்ட்லி ஒன்ஸ்’ இவற்றில் அடக்கம். நீங்கள் ஜோன் நாவலை மொழிபெயர்க்க எவ்வளவு காலம் எடுத்துக் கொண்டீர்கள்? மொழிபெயர்க்கக் கடினமானது என்று பார்த்தால் நீங்கள் வேறு எந்தப் புத்தகங்களுடன் அதை ஒப்பிட முடியும்?

சார்லட் மாண்டெல்: அடக்கடவுளே! இதைப் படித்ததும் ஏதோ தப்பு நடந்திருக்கிறது என்று நினைத்தேன்- பத்து ஆண்டுகளில் இருபத்து எட்டு புத்தகங்கள் மிக அதிகமாய்த் தெரிகிறது… ஜோன் நாவலை மொழிபெயர்க்க எனக்குஆறு மாதம் போல் ஆனது. அதன் பின் திருத்தி எழுத சில மாதங்கள். நான் ஏறத்தாழ எப்போதுமே கடும் நேர நெருக்கடியில்தான் வேலை செய்திருக்கிறேன். எனவே எனக்கு வேகமாக வேலை செய்வது பழக்கமாகி விட்டது. இருந்தாலும்கூட உண்மையைச் சொன்னால், ஜோனை மொழிபெயர்க்க ஆரம்பித்தபின் அதை நிறுத்துவதுதான் மிகக் கடினமாக இருந்தது. இதில், ஒரு விஷயம் சொல்ல வேண்டும், நிறுத்தி ஓய்வெடுப்பதற்கான இடம் எதுவும் கிடையாது, நாவலில்தான் முற்றுப்புள்ளியே இல்லையே! எனவே ஒவ்வொரு நாளும் அன்று எது வரை செய்ய வேண்டும் என்பதை முன்கூட்டியே குறித்து கொள்ள வேண்டியதாயிற்று, அப்போதுதான் மிதமிஞ்சிய உழைப்பைத் தவிர்க்க முடியும். உண்மையில் ஜோனை மொழிபெயர்ப்பது ஒரு ஆனந்தமான அனுபவமாக இருந்தது. அது ஒரு நீண்ட உரைநடை கவிதை போன்றது, எனவே மனதளவில் எனக்கு மிக அதிக அளவு சுதந்திரம் இருந்தது.

எஸ்பசிடோ: இதை நீங்கள் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. என்னாலும் படிப்பதை நிறுத்த முடியவில்லை (மற்றவர்களுக்கும் அப்படித்தான் இருந்தது என்று சொன்னார்கள்), மொழிபெயர்ப்பதும் அப்படித்தான் இருந்திருக்கிறது போல. உங்களைப் போலவே நானும் என்னை நிதானித்துக் கொள்ள வேண்டியிருந்தது. இந்தப் புத்தகத்தில் உள்ள சுட்டுதல்களில் ஒரு சிறிதளவு மட்டுமே தேடிப் படிப்பது என்று வைத்துக் கொள்வது அதற்கு ஒரு வழியாய் இருந்தது. ஏராளமான புறத்தகவல்கள்! முடிவில் பார்த்தால், தகவல் செறிவுள்ள ஒரு பின்நவீனத்துவ நாவலும் நனவோடை பாணியில் எழுதப்பட்ட ஒரு நவீனத்துவ நாவலும் சேர்ந்த கலவையாக இது தோன்றுகிறது. ஒரு வேளை William Gaddis இது போல் ஒன்று எழுதியிருக்கலாம். இதை நீங்கள் எப்படி வகைமைப்படுத்துகிறீர்கள்? இது போலவோ, அல்லது இதை அதற்குரிய சூழமைவில் பொருத்தும் வகையிலோ பிற நாவல்கள் பிரஞ்சு இலக்கியப்பரப்பில் இருப்பதாகத் தோன்றுகிறதா?

மாண்டெல்: இதற்கு முன்னோடி என்று யோசித்தால் மனதில் தோன்றும் முதல் நாவல் Michel Butorன் ‘La Modification‘. இது ஆங்கிலத்தில் ‘செகண்ட் தாட்ஸ்’ என்று பதிப்பிக்கப்பட்டிருக்கிறது) அதுவும் ரயில் பயணம் செய்து கொண்டிருக்கும் ஒருவனைப் பற்றியதுதான், அது செகண்ட் பர்சனில் மட்டுமே சொல்லப்பட்டிருக்கிறது. கதை முழுதுமே கதைசொல்லியின் எண்ணங்கள் மற்றும் நினைவுகளைச் சுற்றி வருகிறது. கதையின் முடிவில் கதைசொல்லியின் மனம் மாறுகிறது என்பதைத் தவிர உண்மையில் நாவலில் எதுவும் ‘நடப்பதில்லை’ (அதனால்தான் புத்தகத்தின் பெயர் அப்படி இருக்கிறது).

நீங்கள் சொல்வது சரிதான். நாவலில் புறச்சுட்டுதல்கள் ஏராளமாக இருக்கின்றன. ஜோனில் குறிப்பிடப்பட்டுள்ள அதனை புத்தகங்களும் எனார்டின் கதைசொல்லலில் நுட்பமான, ஆனால் அர்த்தமுள்ள வகையில் தாக்கம் செலுத்தியிருக்கின்றன என்று நினைக்கிறேன். Tsirkas’ன் ‘Drifting Cities‘; William Burroughs’ன் ‘Naked Lunch‘; Pound’ன் ‘Cantos‘; ‘Finnegans Wake‘; Apollinaire’ன் ‘Zone‘; Céline’ன் ‘Journey to the End of the Night‘; இவை போக, குறிப்பாக, Malaparte’ன் மகத்தான ‘Kaputt,’- எனக்குத் தெரிந்து, மிகச் சிறப்பாக எழுதப்பட்ட போர் நாவல் அது, தோல்வியடைந்த தரப்பின் பார்வையில் சொல்லப்பட்டிருக்கிறது, மிகக் குறைவான கவனம் பெற்ற நாவல்களில் ஒன்று.

சமகால பிரெஞ்சு இலக்கியச் சூழ்நிலம் என்று பார்த்தால், ‘ஜோன்’ பல வகைகளில் ‘தி கைண்ட்லி ஒன்ஸ்’ உடன் ஒப்புமைகள் கொண்டதாக இருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது. Bardèche, Brasillach, Burroughs இவர்களை எல்லாம் பேசும் வேறெந்த பிரெஞ்சு நாவலும் இன்று இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் தி கைண்ட்லி ஒன்ஸ்சில் Edgar Rice Burroughs பேசப்படுகிறார் என்று நினைக்கிறேன்… இந்த இரண்டு நாவல்களின் கதைசொல்லிகளும் பாசிஸ்டுகள் (ஜோன் நாவலின் கதைசொல்லி பாசிஸ்டாய் இருந்து மீண்டு கொண்டிருப்பவன், இருந்தாலும் அவன் பாசிஸ்ட்தான்), இருவருமே தத்தம் போர்களையே நினைத்துக் கொண்டிருப்பவர்கள். மேலும், ‘தி கைண்ட்லி ஒன்ஸ்’, ‘ஜோன்’ இரண்டும் கனவுகள், மிகுகற்பனைகள், நினைவுகளை கதைகூறலில் சுவையான வகைகளில் சேர்த்துக் கொள்கின்றன – யதார்த்தத்துக்கும் கற்பனைக்கும் இடையிலுள்ள எல்லைகள் அவ்வப்போது மறைந்து விடுகின்றன.

Enardக்கும் Claroவுக்கும் சில விஷயங்கள் பொதுவாக இருக்கின்றன என்றும் நினைக்கிறேன். கதைகூறலிலும் கதைமொழியிலும் துணிந்து சில சோதனைகள் செய்து பார்க்கிறார்கள். எதற்காக இல்லையென்றாலும் கதைகூறலில் காணப்படும் புதுமைக்காகவும், ஜோனின் கதைசொல்லி ஒரு சூட்கேஸின் நினைவாகவே இருப்பது போல் இதன் கதைசொல்லி ஒரு புத்தகத்தின் நினைவால் புசிக்கப்படுவதைச் சித்தரித்திருக்கும் விதம் என்ற வகைகளில் Claroவின் அண்மைக்கால நாவலான ‘Madman Bovary‘ நினைவுக்கு வருகிறது. ஒரு முறை enardம் Claroவும் யூரோப்பில் தந்திர நிகழ்ச்சிகள் நடத்தியபடி பயணம் செய்தார்கள் நேரு கேள்விப்பட்டிருக்கிறேன்- ஒரு வேளை நான் இதைக் கனவு கண்டிருக்கலாம், ஆனால் அதுவும் மிகப் பொருத்தமாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது!

எஸ்பசிடோ: ஜோன் பற்றி ஒரு விஷயத்தை நீங்கள் தெரிந்து கொள்கிறீர்கள் என்றால் அது தொடர்ந்து நீண்டும் செல்லும் ஒற்றை வாக்கியத்தால் அமைந்த ஐநூறு பக்க புத்தகம் என்பதுதான். இதைக் கேட்கும்போது படிக்கவே முடியாது என்று நினைக்க வைத்தாலும், படிக்க ஆரம்பித்ததும்தான் இது மிக வேகமாக படிக்கக்கூடிய புத்தகமாக இருப்பது தெரிந்தது- முற்றுப்புள்ளிகள் இல்லை என்பது அவ்வப்போது கவனத்தில் வந்து கொண்டுதான் இருந்தது, ஆனால் அடிப்படையில் காற்புள்ளிகளால் வழிநடத்தப்பட்ட பிரதியைப் படிப்பது எனக்குப் பழகிப் போனது. இந்தப் புத்தகம் இது போன்ற ஒரு பாவனையை மேற்கொண்டிருப்பது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், ஒரு மொழிபெயர்ப்பாளராக உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயம் இருந்ததா?

மாண்டெல்: ஆமாம், நீங்கள் சொல்வது சரிதான். முற்றுப்புள்ளிகளின் இடத்தை காற்புள்ளிகள் எடுத்துக் கொள்கின்றன. முழுக்க முழுக்க ரயிலிலேயே நடந்ததாகக் கொள்ளப்படும் கதைகூறலுக்குப் பொருத்தமான, தத்ரூபமான புனைதல் இது என்று நினைக்கிறேன்- நிறுத்த முடியாமல் ஒரு சந்தத்துடன் தொடரும் பயணம் போல் இருக்கிறது- வாக்கியங்கள் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கின்றன, ஒரு ரயிலைப் போலவே, அது சேருமிடத்தை அடையும்வரை நிற்கப் போவதில்லை. இந்தப் புத்தகத்தில் சரியாக 517 பக்கங்கள் இருக்கின்றன என்பது எனக்குப் பிடித்திருக்கிறது. மிலனிலிருந்து ரோம் வரையுள்ள தொலைவு இதே கணக்குதான், கிலோமீட்டர்களில். எனவே இதிலுள்ள கதைகூறல் மிக நெருக்கமாக ரயில் பயணத்துடன் இணைந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக, உள்ளடக்கப் பட்டியலின் அத்தியாயங்கள், ஒரு அத்தியாயம் முடிந்து மற்றொரு அத்தியாயம் துவங்கும் இடத்தைக் குறிப்பதில்லை- மாறாய், அப்போது புத்தகத்தில் ரயில் எந்த ஊர்களில் பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதைக் குறிப்பிடுவதாய் உள்ளன. காலமும் வெளியும் மிக நெருக்கமாக தொடர்புபடுத்தப்பட்டிருக்கிறது, கதைகூறல் மற்றும் பக்கம் இரண்டிலுமே. ஜோனில் வரலாறு மிகவும் தனித்துவமான, தனிநபர் சார்ந்த ஒன்று. இந்தப் புத்தகம் பற்றிய விமரிசனத்தில் Stephen Mitchelmore சுட்டியிருப்பது போல், வரலாறு என்பது காலம் சார்ந்ததல்ல, வெளி சார்ந்தது என்பதை கதைசொல்லி கண்டுகொள்கிறான்.

அவன் இத்தாலியில் பயணம் செய்யும்போது வரலாறு அவனைச் சூழ்ந்து தொடர்கிறது, பழிவாங்கத் துடிக்கும் பேய்கள் போல் அவனை நெருக்குகிறது. அதே போல், கதைசொல்லி வாசித்துக் கொண்டிருக்கும் புத்தகத்தில் உள்ள சொற்கள் வார்த்தைக்கு வார்த்தை கதைகூறலின் உள்ளும் இடம்பெறுகிறது என்ற பாவனையையும் நான் மிகவும் விரும்புகிறேன்- இது மிகவுமே Tristram shandyத்தனமாய் இருக்கிறது. அதற்கு மேல் பார்த்தால் எந்தப் புத்தகம் திரும்பப் பேசப்படுகிறதோ அது மட்டும்தான் பெண் பார்வையில் பேசப்படுகிறது, மற்றபடி ஜோனில் உள்ள பிற கதைகூறல்கள் அனைத்தும் மிகவும் ஆண்-மையம் கொண்டவையாய் இருக்கின்றன. மேலும்முற்றுப்புள்ளிகள் கண்களுக்கு ஓய்வு தருகின்றன, இல்லையா? ஆனால் நான் எப்போதும் வாக்கியத்துக்கு திரும்பவே விரும்புகிறேன்- முற்றுப்புள்ளிகள் நம் சுதந்திரத்தை மிகவும் கட்டுப்படுத்துகின்றன.

எஸ்பசிடோ: ஆமாம், முற்றுப்புள்ளியை நீக்கிவிட்டால் இந்தப் புத்தகத்தில் உள்ள நிறுத்தற்குறிகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படுகிறது. இதில் நீங்கள் கிட்டத்தட்ட Mathias Enardஐப் பின்பற்றினீர்களா, அல்லது பிரஞ்சு மொழியில் அவர் செய்ததற்கு மாறாக முக்கியமான மாற்றங்கள் எதுவும் செய்தீர்களா? பிரெஞ்சு புத்தகத்தில் கதைசொல்லியின் மனநிலையிலும் அவரது கதைகூறு மொழியிலும் அடிக்கடி ஏற்படும் மாற்றங்களை நீங்கள் ஆங்கிலத்தில் மீளுருவாக்கம் செய்யும்போது நிறுத்தற்குறிகள் எந்த வகையில் பயன்பட்டன?

மாண்டெல்: உண்மையில் நான் நிறுத்தற்குறிகளில் அதிக அளவில் மாற்றங்கள் செய்யவில்லை என்று நினைக்கிறேன். ஒரே வாக்கியமாக தொடர்ந்து சொல்லிக்கொண்டே செல்வது ஆங்கிலத்தில் ஏதோ ஒரு வகையில் சுலபமாக நகர்ந்தது, கிட்டத்தட்ட எந்த பிரயத்தனமும் இல்லாமலேயே- அது கதைசொல்லி William Burroughsஐயும் Ezra Poundஐயும் நேசிப்பதாலா என்று தோன்றுகிறது. நான் மொழிபெயர்த்த புத்தகங்களில் மிகக் குறைந்த உழைப்பைக் கோரிய புத்தகங்களில் ஜோனும் ஒன்று. அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கத் துவங்கி, கதைசொல்லியின் குரலை எடுத்துக் கொள்ள ஆரம்பித்தவுடன் எல்லாம் சுலபமாய்ப் போய் விட்டது. எந்த ஒரு புத்தகத்திலும் மிகவும் முன்னோக்கிச் செல்லக்கூடாது என்று ஒரு கொள்கையே வைத்திருக்கிறேன்.

புத்தகத்தை மொழிபெயர்க்கும்போது அதன் படைப்பூக்க இயக்கத்தில் எனக்கும் ஒரு பங்கிருப்பதாக நான் உணர விரும்புகிறேன்- அதை எழுதுவதற்கான நேரம் வருவதற்கு முன்னமே கதாசிரியர் தன் புத்தகத்தை வாசித்திருக்க முடியாது என்று நினைத்துக் கொள்கிறேன், நான் மட்டும் ஏன் புத்தகத்தை முழுமையாக அறிந்திருக்க வேண்டும்? அடுத்தது என்ன நடக்கப் போகிறது என்பதை அறியாமல் இருப்பதும் எனக்குப் பிடித்திருக்கிறது, எனவே என் மொழிபெயர்ப்பு மூலத்தைப் போலவே புதுசாக இருக்க முடியும். ஆனால் முதல் முறை எழுதி முடித்தவுடன் நான் என் மொழிபெயர்ப்பை திரும்பவும் எடுத்து மீண்டும் மீண்டும் திருத்தி எழுதுகிறேன்- பொதுவாக நான் ஒரு புத்தகத்தை மூன்று அல்லது நான்கு முறை திருத்தி எழுதுகிறேன். அதன் பின்தான் அதன் இறுதி வடிவம் எனக்கு திருப்தியாக இருக்கிறது. ஜோன் விஷயத்தில் முதலிலேயே எல்லாவற்றையும் படித்துவிடக் கூடாது என்ற கொள்கை எனக்கு உதவியாக இருந்தது. ஏனென்றால், புத்தகம் போகப் போக அதன் கதைசொல்லியின் குரலில் ஒரு சுவாரசியமான மாற்றம் ஏற்படுகிறது.

எழுதி முடித்தபின் இறுதி வடிவை Mathias Enardக்கு அனுப்பி வைத்தேன், அவர் மிகக் குறைவான மாற்றங்களே செய்தது ஆச்சரியமாக இருந்தது. அவர் எழுதியது ஆங்கிலத்தில் எப்படி வந்திருக்கிறது என்பது அவருக்கு மகிழ்ச்சி அளித்திருக்க வேண்டும், அது எனக்கு மிகப்பெரிய ஆசுவாசத்தை அளித்தது.

உண்மையில் Enard என் மொழிபெயர்ப்பில் மாற்ற விரும்பியதில் ஒன்று என்று சொன்னால், அது முதல் வாக்கியத்தில் – சரி, வாக்கியம் என்று சொல்ல முடியாது, முதல் வரியில்- உள்ள “tout est plus difficile à l’âge d’homme,”என்ற சொற்களை நான் முதலில், “everything is more difficult when you’re an adult,” என்று மாற்றியிருந்தேன். “l’âge d’homme” என்பது பிரெஞ்சு மொழியில் பிரச்சினைக்குரியது என்பதை enard சுட்டிக் காட்டினார், அது தாந்தேயின், “midway through life’s journey” என்பதை நினைவுக்குக் கொண்டு வருகிறது- அவர் தாந்தேயை உணர்த்த விரும்பினார், அதே சமயம் கதைசொல்லி அப்போது அனுபவித்துக் கொண்டிருக்கும் மத்திய-வயதுச் சிக்கலையும் உணர்த்த விரும்பினார். எனவே என் ராபர்ட் (என் கணவர், கவிஞர் ராபர்ட் கெல்லி) “Twelfth Night” நாடகத்தில் இடம்பெறும் விதூஷகனின் பாடலை நினைவுபடுத்தினார்:

When that I was and a little tiny boy
With hey, ho, the wind and the rain,
A foolish thing was but a toy,
For the rain it raineth every day.
But when I came to man’s estate,
With hey, ho, the wind and the rain,
‘Gainst knaves and thieves men shut their gate,
For the rain it raineth every day.

அதன்பின் Mathiasம் நானும் “adulthood” அல்லது “manhood” என்பதைவிட “Man’s estate” என்பது சரியான சொற்றொடராக இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டோம்.

எஸ்பசிடோ: மொழிபெயர்க்கும்போது அடுத்து வரப்போகும் பக்கங்களை வாசிப்பதில்லை என்று நீங்கள் சொல்வது எனக்குப் பிடித்திருக்கிறது – Cesar Aira’வின் “தொடர்ந்து முன்னோக்கிப் பறத்தல்” அல்லது தான் எழுதிக்கொண்டிருக்கும்போது தன் பிரதான பாத்திரங்கள் அறிந்திருப்பதற்கு மேலதிகம் “அறிந்திருக்க” கூடாது என்று Javier Marias வலியுறுத்துவதன் மொழிபெயர்ப்பு வடிவம் போல் இது இருக்கிறது. அதிலும் குறிப்பாக, ஜோன் போன்ற ஒரு புத்தகத்துக்கு இது பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது. அதிலும், “ரயில்வே கிங்கரன்” குறித்து பிரான்சிஸ் கனவு காணும் பகுதி இங்கு குறிப்பாக நினைவுக்கு வருகிறது- இந்தச் சாதாரணன் ஒரு ரயில்வே அட்டவணை வைத்திருப்பான், இல்லையா, பிரான்சிஸ் எங்கு இருந்திருந்தான் என்பதை வைத்துக் கொண்டு அவன் எங்கே இருக்கப் போகிறான் என்பதை அவனால் சொல்லிவிடமுடியும். தன் விதி என்னவென்று அவன் அறிந்தவரையில் அது எவ்வளவு தீர்மானிக்கப்பட்டதாக இருக்கிறது என்று பிரான்சிஸ் நினைப்பதை இது உணர்த்துகிறது, அவன் மனதை அத்தனை பயங்கரமான நினைவுகளும் வரலாற்றுத் தகவல்களும் எந்த அளவுக்கு ஆக்கிரமித்திருக்கின்றன என்பதை இது உணர்த்துகிறது. கதைப்போக்கில் அவனிடம் ஏற்படும் மாற்றங்களை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

மாண்டெல்: “ரயில்வே கிங்கரன்” பகுதி எனக்கு மிகவும் பிடித்தமான இடம். உண்மையில், கதைக்கரு முழுவதுமே அங்கே இருக்கிறது, நிகழ்வுகள், பக்க எண்கள், எல்லாமே அதில் இருக்கிறது. பிரான்சிஸ் தன் கடந்த காலத்தில் சிறைப்பட்டிருப்பதாய் உணர்வது குறித்து நீங்கள் கூறியது முக்கியமான கருத்து, அவனது கைப்பெட்டி சாமான்கள் வைக்கும் பட்டியில் பூட்டப்பட்டிருப்பது போல் அவனது விதி கடந்த காலத்துடன் பிணைக்கப்பட்டிருக்கிறது. இதைச் சொற்களில் சொல்வது எனக்கு கடினமாக இருக்கிறது. ஆனால் பிரான்சிஸ் கதை துவக்கத்தில் அந்த சிறைப்படுத்தப்பட்ட, சிக்கிக்கொண்ட உணர்வு அவனுக்கு இருக்கிறது, அதிலிருந்து மனம் திறந்திருக்கும் உணர்வு, தீர்மானமின்மையை நோக்கி கதை வளர்கிறது என்று நினைக்கிறேன். வளர்ந்த நாள் முதல் அவன் எப்போதும் பிறரை உளவு பார்த்துக் கொண்டிருந்தவன், ஒரு வகையில் பார்த்தால் அவன் தன் கைப்பெட்டியைக் கொண்டு, அதில் உள்ள ஆவணங்களைக் கொண்டு, பிறரின் வாழ்வையும் விதியையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவன்.. இந்தக் கதையில் உள்ள திருப்புமுனைத் தருணம், புத்தகத்தின் முடிவுக்கு முன், ஜூலை பதினான்காம் தேதி கொண்டாட்டங்களுக்குப் பின் இன்னும் போதை தெளியாத பிரான்சிஸ் ஸ்டெஃபானியின் அறைக்கதவைத் தட்டியபின், அவனைக் கண்டதும் அவள் முகத்தில் தோன்றும் பீதியில் தான் பிரதிபலிக்கக் காணும்போது நேர்கிறது. அவனுக்கு தான் உண்மையில் எப்படிப்பட்டவன் என்ற உணர்வு அப்போதுதான் முதல் முறையாகத் தெரியத் துவங்குகிறது என்று நினைக்கிறேன், தன் வீழ்ச்சியின் கீழ்மையை அவன் ஒருவாறு உணர்ந்து கொள்கிறான். அதன்பின் கதைகூறலில் இறுக்கம் குறைகிறது, இனி எல்லாவற்றையும் கட்டுப்படுத்திக் கொண்டிருக்க வேண்டாம், அதனதன் போக்கில் போகட்டும் என்று விட்டுவிடலாம் என்பது போன்ற ஒரு ஆசை எழுகிறது, எகிப்தில் மெடிட்டரேனியன் கடலில் யாருமற்ற கடற்கரையில் டால்பின்களைத் தொடர்ந்து அவன் நீந்திச் சென்றது நினைவுக்கு வருவது போன்ற விஷயங்கள். புத்தகத்தின் மத்திய பகுதி வரை பிரான்சிஸின் முழுப்பெயர் நமக்குத் தெரிவதில்லை என்பது ஒரு சுவாரசியமான விஷயம், அப்போதுதான் அதுவரை புற விஷயங்களில் கவனம் செலுத்திய கதைகூறல்- பிரான்சிஸ் எதையெல்லாம் உளவு பார்க்கிறான் என்பதை விவரித்துக் கொண்டிருந்த கதைகூறல்- சிறிது உள்முகமாய்த் திரும்புகிறது, நாம் பிரான்சிஸ் பற்றி இன்னும் சிறிது அறிந்து கொள்ளத் துவங்குகிறோம்.

எஸ்பசிடோ: நம் உரையாடலை முடித்துக் கொள்வதற்கு ஏற்ற அழகிய உணர்வு இது, ஆனால் இன்னும் ஒரே ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். ஸ்டெஃபானியின் கண்களில் தன் பிரதிபிம்பத்தை பிரான்சிஸ் காணும் காட்சியை நீங்கள் அவனுக்கு ஒரு திருப்புமுனைத் தருணம் என்று கவனப்படுத்துவது நன்றாக இருக்கிறது, ஏனென்றால் நாவல் முழுவதும் நான் வலுவான ஒரு “அந்நிய” உணர்வு இருப்பதை உணர்ந்தேன். (இந்தக் கதை முழு உண்மையாய் இல்லாத ஒரு தொன்மமாய் இருக்கலாம்- பல பிரச்சினைகளில் சிக்குண்டு தவிக்கும் Malcolm Lowry குடிபோதையில் தன் மனைவியின் கழுத்தை நெரித்துக் கொன்று விடும் நிலைக்கு வெகு அருகில் வந்தபின் அவளை நோக்கித் தன் அகம் திறந்து கொள்வதை உணர்ந்து பின்வாங்கும் கதையை பிரான்சிஸ் நினைத்துப் பார்க்கும் அந்த அசாத்திய காட்சிதான் இந்தக் கதையில் எனக்குத் தனிப்பட்ட முறையில் நான் விரும்பும் திருப்புமுனைத் தருணமாக இருக்கிறது. அது அப்பட்டமானதாகவும்நம்பிக்கையூட்டுவதாகவும் இருக்கிறது, அதே சமயம் ஏதோ ஒரு வினோத வகையில் உன்னதமாகவும் உள்ளது, சிறிதளவு மறைஞானத்தன்மை கொண்டதாகவும் நம் சிறுமையை உணரச் செய்வதாகவும்கூட உள்ளது என்று சொல்லலாம்). அதே போல், புனைவுத்தன்மை என்று பார்த்தால் பெரிய ஒரு உளவாளி எல்லாவற்றையும் உற்று நோக்கும் உந்துதலை விட்டு, தன்னைப் பிறர் பார்க்கும் சாத்தியத்தை அனுமதித்து புத்துயிர்ப்பு பெறுகிறான் என்ற கதையை நான் விரும்புகிறேன். இது அனைத்தையும் நான் மொழிக்குத் திரும்பக் கொண்டு செல்ல நினைக்கிறேன், பிரான்சிஸ் பற்றி நமக்கு இருப்பது எல்லாம் சொற்களாலானச் சிடுக்குப் பாதையும் வரலாறே அனைத்தையும் ஆக்கிரமித்திருக்கிறது என்ற கருத்தும் இதனுள் சிக்கிக்கொள்வது மனிதனின் விதியாக இருக்கலாம் என்பதும்தான். பிறரை நோக்கிச் செல்லும் உந்துதலை நீங்கள் மொழி/ வரலாற்றின் சிறைச்சாலையிலிருந்து பிரான்சிஸ் விடுதலையடைவதாக காண்கிறீர்களா, இது பிரெஞ்சு கோட்பாட்டாளர்களின் விருப்பச் சிந்தனையாகவும் இருந்திருக்கிறது, இல்லையா?

மாண்டெல்: ம்ம்ம்., இது ஒரு சுவாரசியமான சுட்டுதல். ‘தி பிரிசன்-ஹவுஸ் ஆஃப் லாங்குவேஜ்’, Jemesonன் கிளாசிக் புத்தகம். ஜோன் விஷயத்தில் வரலாற்றின் சிறைக்கூடத்தில் இருந்துதான் பிரான்சிஸ் தப்பிக்கிறான் என்று நினைக்கிறேன் – உண்மையைச் சொன்னால், அவன் மொழியைப் பயன்படுத்திக் கொள்வதுதான் அவனை விடுவிக்கிறது, அல்லது கிட்டத்தட்ட விடுவிக்கிறது- ஏனென்றால் மொழியின் சிடுக்குப் பாதையின் வழியாகவே அவன் தான் சுதந்திரமடையும் வழியைக் கண்டடையத் துவங்குகிறான்.

ஒரே ஒரு மொழி கொண்டு மட்டுமே அனைத்தையும் புரிந்து கொள்பவர்களுக்குதான் பெருமளவில் மொழி ஒரு சிறைக்கூடமாய் இருக்கிறது. ஆனால் பிரான்சிஸ் இரு மொழிகள் அறிந்தவன், பன்மொழிகள் அறிந்தவன் என்றுகூடச் சொல்லலாம் (Burroughs, Lowry ஆகிய இருவரையும் அவன் ஆங்கிலத்தில் வாசிப்பதாகத் தெரிகிறது, துவக்கத்திலும் முடிவிலும் வரும் பவுண்ட் மேற்கோள்களும் ஆங்கிலத்தில் உள்ளன). அவன் பன்னாட்டுக்குரியவன் (ஒரு பைத்தியக்காரனின்) பிரெஞ்சு அடையாளத்தை எடுத்துக் கொள்ளும் பிரெஞ்சு மொழி பேசும் க்ரோவட். ஆக, குறைந்தபட்சம் பிரான்சிஸ் பிரெஞ்சு மற்றும் குரோவேஷிய மொழிகள் பேசுபவன், ஒரு வேளை இதுவே அவனுக்கு மீட்சியளிக்கும் விஷயங்களில் ஒன்றாக இருக்கலாம்: மொழியை அவன் சிறையாய்க் காண்பதில்லை, தப்பிக்க உதவும் சுவையான வடிவமாகக் காண்கிறான். ஆனால் அவன் வரலாற்றின் சிறைக்கூடத்திலிருந்து தப்பித்துக் கொண்டிருப்பவன்- இதுகூட இந்தப் புத்தகத்துக்கு ஒரு சிறந்த உப தலைப்பாக இருக்கலாம்: ஜோன், அல்லது, வரலாற்றின் சிறைக்கூடம்! ஒருவேளை நாம் ஒரு புதிய சொற்றொடரை உருவாக்கக்கூடும்…

“வரலாறு ஒரு கொடுங்கனவு, அதிலிருந்து விழித்தெழ நான் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்,” என்று ஜாய்ஸ் எழுதியது பிரசித்தம். ஜோன் அந்தக் கொடுங்கனவின் உருவகம். வரலாறு எனும் அந்த நீண்ட பயணத்திலிருந்து விழித்துக் கொள்ள புத்தகம் முழுதும் பிரான்சிஸ் போராடிக் கொண்டிருப்பது போல் தெரிகிறது.

***

நன்றி : Six Questions for Charlotte Mandell, Translator of Zone by Mathias Enard, Scott Esposito, Conversational Reading 

Image credit: Sine Termino, Conversational Reading

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.