பருவம், படம், பீஷ்மர் & போப்

மொத்தக் கட்டுரையைப் படித்தால் பைரப்பா ஒரு விடையல்ல, பல விடைகளைத் தருகிறார் என்று தெரிகிறது.

துரியோதனன் கேள்வி ரொம்பவே விசித்திரமானது. அவனுடைய அப்பாவே குரு வம்சம் இல்லையே? திருதராஷ்ட்ரனே விசித்திர வீர்யனின் பிள்ளை இல்லை. வேத வியாசரும் அம்பிகாவும் கூடித்தான் திருதராஷ்ட்ரன் பிறக்கிறான். வேத வியாசர் குரு வம்சத்தினரா என்ன? அம்பிகாவுமே குரு வம்சம் இல்லை. பின் பாண்டவர்களை அவன் கேள்வி கேட்பதில் என்ன நியாயம் இருக்கும்? இதை பைரப்பா கவனிக்கவில்லையா?

பைரப்பா பொதுவானதோர் விடையை/ விடைகளைக் கொடுத்தாலும், துரியோதனன் இப்படிக் கேட்பதாக எழுதுகிறவர் வேறு பாத்திரங்கள் அவனுக்கு என்ன விடை கொடுத்தன என்று எழுதுகிறார் எனத் தெரிந்துகொள்ள கேட்கிறேன். இதே துரியோதனன், சுதன் வளர்த்த கர்ணனுக்கு ராஜ்யத்தைத் தத்தம் செய்கிறான் ஆனால் தன்னுடன் வளர்ந்தவர்களுக்கு ஐந்து கிராமம் கூடக் கொடுக்க மாட்டேனென்று பிடிவாதம் பிடித்தான். அந்தத் தர்க்கத்தை அவர் என்ன செய்தார் என்று யோசித்தேன்.

யூரோப்பில் நெடுங்காலத்துக்கு, பல அரச குலத்தவர் பல நாடுகளில் தம்மிடையே பெண் எடுத்து, கொடுத்து கலந்த அரச குலமாக இருந்தனர். ஸ்பெயினும், பிரிட்டனும் நெடுங்காலம் யுத்தம் புரிந்த நாடுகள், ஆனால் அந்த நாடுகளின் அரசர், ராணிகள் இப்படிக் கலப்புத் திருமணத்தில் இணைந்தவர்கள். சிறு குழந்தைகளைக் கூடத் திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்கள், இப்படி அரசுரிமையைப் பெறுவதற்காக. சமீபத்தில் இப்படி ஒரு கட்டுரையைப் படித்தேன். இஸபெல்லா ஆஃப் காஸ்டைல் என்ற ராணி ஸ்பெயினை நவீனகாலத்துக்கு இட்டு வந்த ஒரு முக்கியப் புள்ளி. இவளும், ஃபெர்டினாண்ட் என்கிற இவளது கணவரும் இணைந்து ஆட்சி நடத்தியதாகக் கதை. ஆனால் இவளுக்குத்தான் ஸ்பெயினின் அரசுக்கு உரிமை உண்டு. பெர்டினாண்ட் ஒரு ராஜதந்திர காய் நகர்த்தலில் உதவிக்குக் கொடுக்கப்பட்ட நபர். இவள் ஸ்பெயினின் ஆட்சியில் இருந்த பெரும் ஊழல்களை ஒழித்து, அதன் நாணயத்தை நேர்ப்படுத்தி, அதன் எல்லையை விஸ்திகரித்து, கடல் கடந்து ஸ்பெயினின் சாம்ராஜ்யம் வளரக் காரணமான கடற்படையை உருவாக்கி, கொலம்பஸ் போன்ற கடலோடிகளுக்கு அங்கீகாரம் கொடுத்து என்னென்னவோ சாதித்திருக்கிறாள். ஆனால் கன்சர்வேடிவ் – சமூக உறவுகளைப் பொறுத்தவரை.

இவளுடைய வாழ்க்கை வரலாற்றைப் பார்த்தால் நான் சொல்லப்போவது விளங்கும்.

இவளுடைய வரலாறு குறித்து ஹிஸ்டரி டுடே பத்திரிகையின் வலைத்தளத்தில் ஒரு கட்டுரையைப் படித்தேன், அதன் பிறகு சிறிது தேடிக் கண்டுபிடித்தவை மேலே சொன்னவை. அவள் இருந்த நூறாண்டுகளிலும், அதற்கு முந்தைய பல நூறாண்டுகளிலும் யூரோப்பிய அரசர்களுக்கு பதவி போப்பின் அங்கீகாரம் இருந்தால்தான் உறுதியாகும். [இதே மனோபாவத்தை, இந்தியாவுக்குக் கொணர்ந்து, கிருஸ்தவப் பாதிரிகள், பார்ப்பான் அங்கீகரித்தால்தான் எந்த ஜாதியினருக்கும் அரச பதவி கிடைக்கும் என்பதே பார்ப்பான் தான் ஆள்கிறான் என்று நிரூபிக்கும் என்று முழங்கிக் கொண்டிருந்தனர். பார்ப்பனன் அரசனின், அரசகுலத்தவரின் ஊழியன் என்பதோ, காட்டில் வாழும் பிராம்மணர்களில் ரிஷிகள் என்று சொல்லப்படுவோருக்கு சமூக அந்தஸ்து கிடையாது, ஆனால் அவர்களின் ஏதோ வினோத அறிவுச் சேமிப்பையும், காடுகளைப் படிப்படியாக விவசாய நிலங்களாகவோ, அல்லது பாதைகளாகவோ மாற்ற இந்த ரிஷிகள் உதவி இருக்கக் கூடும் என்ற காரணத்தையும் முன்னிட்டு அவர்களுக்கு அரசர்களிடம் ஒரு ஸ்தானம் இருக்கக் கூடும். ஆனால் அவர்கள் அரசர்களை அங்கீகரித்ததால்தான் அரசர்கள் பதவி பெற்றனர் என்று எந்த காப்பியமும் சொல்வதில்லை. அவர்கள் வந்து ஆசி வழங்குவதற்கும், அரச பதவியையே அவர்கள் கொடுப்பதற்கும் வேறுபாடு நிறைய உண்டு. ]

ஆக போப்புகள் யார் அரச பதவியைப் பெறுவது என்பதை அடிக்கடி வரலாற்றில் தீர்மானித்திருக்கிறார்கள். இங்கிலாந்தின் குரூரமான வரலாற்றுக்கு ஒரு காரணம் அது ரோம சாம்ராஜ்யத்தில் முற்றிலுமாக இணைக்கப்படாததும், தொடர்ந்து அங்கு ஜெர்மானிய மேற்கு யூரோப்பிய வம்சாவளிக்கும், கிழக்கு யூரோப்பிய வம்சாவளிகளுக்கும் இடையே நடந்த இழுபறி அரசியலும் காரணங்கள். சில இங்கிலிஷ் அரசர்கள் போப்புகளின் அதிகாரத்தை மீறத் துவங்கியதும் ஆங்கிலிகன் சர்ச் என்ற ஒரு சர்ச் நிறுவப்படக் காரணம். இன்று இது ப்ரொடஸ்டண்ட் சர்ச்சா,கதோலிக்க சர்ச்சா என்று கேட்டால் இரண்டும் இல்லை என்றுதான் பதில் சொல்ல முடியும். Quoraவில் ஒரு பதில் எனக்குச் சிரிப்பூட்டியது. ஆனால் இதுதான் நானும் ஊகித்த பதில். (காரணம் ஹென்ரி அரசனுக்கும், அவனுடைய இரண்டு மந்திரிகளுக்கும் இடையே இருந்த பிரச்சினை. தாமஸ் மோர் கதோலிக்கர் என்பதால் அவர் கொல்லப்படுகிறார். பெக்கெட் அரசனின் விருப்பத்துக்கு மண உறவுகளை ஏற்கத் தயாராக இல்லாததால் அவரும் கொல்லப்படுகிறார்.]

இந்தக் குழப்பங்களை எங்கே போய்ச் சொல்லி முட்டிக் கொள்ள? ஆனால் எல்லாரும் கிருஸ்தவர்கள். இந்தியாவில் கிருஸ்தவர்கள் இந்து மதத்தை இழிவு செய்ய ஒரு வாதம் எத்தனை கடவுள்கள் உங்களுக்கு, எத்தனை விதமான சடங்குகள் என்பது. கிருஸ்தவத்தில் எத்தனை விதமான நம்பிக்கைகள் உண்டு என்பதை அவர்கள் விளக்குவதும் இல்லை, நம் ‘பகுத்தறிவுத் திலகங்கள்’ அதைக் கேள்வி கேட்பதும் இல்லை.

மோர் பற்றி. இந்த மோர் இன்று இந்தியாவில் ஒரு பெரும் சூபர் மார்க்கெட் செயின் கடைகளின் பெயர். ஆனால் நாம் மோரை அன்றாட உணவாகவும் வைத்திருக்கிறோம். ஒரு பெயருக்கு எத்தனை கொடும் விளைவுகளும், நல் விளைவுகளும் இருக்கின்றன! அந்த மோர் உடோபியா என்று ஒரு கருத்தை உருவாக்கிக் கொடுத்து பல லட்சம் பேர்களின் தலை வெட்டல்களுக்கு இட்டுச் சென்றார். நாம் குடலில் நல்ல பாக்டீரியா வளர உதவியாக மோரைக் குடிக்கிறோம். 🙂 அதே மோர் ஜாதி வேறுபாடுகளைக் காட்டவும், அதைத் தாண்டி வரவும் உதவியாக உள்ள ஒரு கருவியாகவும் உள்ளது என்பது இன்னொரு விசித்திரம்.

மோர் பற்றி

Thomas More is known for his 1516 book Utopia and for his untimely death in 1535, after refusing to acknowledge King Henry VIII as head of the Church of England. He was canonized by the Catholic Church as a saint in 1935.

இதற்கெல்லாம் முன்னர் 12 ஆம் நூற்றாண்டிலேயே இந்த சர்ச் எதிர் அரசு என்ற வாதம் எழுந்திருக்கிறது. அப்போதே சர்ச் ஆஃப் இங்கிலாந்து என்ற ஒரு உரு இருந்திருக்கிறது. அப்போது நடந்த உள் குழுப் போர் தாமஸ் பெக்கெட் என்ற அரச ஊழியர், இரண்டாம் ஹென்ரியின் ஆர்ப்பாட்டங்களுக்கு சர்ச்சை அடங்கிப் போகச் செய்ய ஆர்ச் பிஷப் ஆஃப் காண்டெர்பெர்ரியாக நியமிக்கப்படுகிறார். இவருக்கு முந்தைய ஆர்ச் பிஷப்பின் கீழ் ஒரு சர்ச்சியப் பதவி இருந்தது. டீகனாக இருந்தவர். பிறகு சில வருடங்கள் அரசனுக்கு சான்ஸலெராக இருந்து அரசனின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஆடம்பரப் பேர்வழியாக வாழ்ந்தவர். திடீரென்று சர்ச்சின் தலையாக ஆக்கப்பட்ட போது மாறிப் போய் ஒரேயடியாக சர்ச்சியப் பிதாவாக மாறுகிறார். ஹென்ரிக்குத் தலைவலி. இறுதியில் பெக்கெட்டைக் கொல்ல ஒரு மாஃபியாவின் தலைவனைப் போல ஹென்ரி, இவனை ஒழித்துக் கட்ட நாட்டில் யாருமில்லையா என்று கேட்க, கீழே இருக்கும் சில படைத் தளபதிகள் (நைட் எனப்படுவோர்) பெக்கெட்டைச் சர்ச்சிலேயே கொல்கின்றனர். பெக்கெட் இன்று கதோலிக்கச் சர்ச்சாலும் ஒரு martyr என்று கருதப்பட்டு வணங்கப்படுகிறார், ஆங்கிலிகன் சர்ச்சாலும் அப்படியே கருதப்படுகிறார்.

ஆனால் இவரை விட மோர் காலத்து வரலாறு மேலும் கடுமையான ஒரு போருக்கு வழி வகுக்கிறது.

இந்தத் தாமஸ் மோரைக் கொடுமைப்படுத்தியவர்களில் ஒருவர் ஓல்ஸி என்னும் ஒரு பாதிரியார். கார்டினல் ஓல்ஸி எட்டாம் ஹென்ரிக்கு உதவியவர்களில் ஒருவர், ஆனால் கதோலிக்கப் பாதிரியார். இவர் அரசவைச் சூதுகளில் பங்கெடுத்த நபர். இவரிடம் க்ராம்வெல் உதவியாளராக இருந்ததாக ஷேக்ஸ்பியரே சித்திரித்திருக்கிறார். ராபர்ட் போல்ட் தன் எ மான் ஃபார் ஆல் ஸீஸன்ஸ் நாடகத்தில் க்ராம்வெல்லை, தாமஸ் மோரைக் கொடுமைப்படுத்தியவர்களில் ஒருவராகச் சித்திரித்திருக்கிறார் என்று கார்டியனின் புத்தக மதிப்புரை சொல்கிறது. [ஹிலரி மாண்டெல் புத்தகத்தின் மதிப்புரையில் உள்ளது இது. ]

க்ராம்வெல்லும், மோரும் சமகாலத்தவராக இருந்தனர் என்பதை ஹிலரி மாண்டெல் எப்படிக் கையாண்டார் என்று இனிமேல்தான் பார்க்க வேண்டும். அந்த நாவலை இன்னும் படிக்கவில்லை.

தாமஸ் மோர் கொல்லப்பட்டு அரை நூற்றாண்டு தாண்டி எழுந்த ப்ரொடஸ்டண்டியம், இங்கிலிஷ் அரச பதவிக்காக எழுந்த பல இழுபறிகளில் தலையிட்டு ஒரு அரை நூற்றாண்டில் பெரும் கொலைவெறியோடு இங்கிலாந்தில் தாண்டவமாடியது. இதன் தளகர்த்தராக ஆலிவர் க்ராம்வெல் இருந்தார். அவர் பற்றிய விக்கி, ஓரளவு நிதானமான எடை போடலைக் கொடுக்கிறது. இவர் பற்றி ஹிலரி மாண்டெல் எழுதிய ஊல்ஃப் ஹால் (Wolf Hall) என்ற நாவல் 2009 இல் பரிசுகள் வாங்கி, ஏராளமான பிரதிகள் விற்றது. க்ராம்வெல்லைச் சுத்திகரித்து கிட்டத்தட்ட ரொமாண்டிக் நாவல் நாயகர் போல, சூபர் ஹீரோ போல எழுதி இருந்தார் என்று நியுயார்க் டைம்ஸின் விமர்சனம் நமக்குத் தெரிவிக்கிறது.

விக்கிபீடியா பதிவு கொடுக்கும் வரலாறு இது: Oliver Cromwell – Wikipedia

இவரைப் பற்றிய கார்டியன் மதிப்புரையில் ஒரு புதுத்தகவலைக் கண்டு பிடித்தேன். நான் மோர் பற்றி எழுதியதில் சில விவரங்கள் ராபர்ட் போல்ட் எழுதிய, ‘எ மான் ஃபார் ஆல் ஸீஸன்ஸ்’ என்கிற களேபரமான ஒரு நாடகத்திலிருந்து நான் 60களில் பெற்ற தகவல்கள் அடங்கும். அதுவே ஒரு ஆடம்பரமான நாடகச் சினிமாவாக ராபர்ட் போல்ட்டாலேயே எழுதப்பட்டிருந்தது. இதை நான் இரண்டு மூன்று தடவைகள் சினிமாவாகப் பார்த்திருந்தேன். ஒரு முறை தெருக்கோடி ராஜகுமாரி/ சாஹ்னிஸ் தியேட்டரில் பார்த்தேன். அதற்கு முன் ஆனந்திலோ, காஸினோவிலோ பார்த்தேன் என்று நினைவு. ஆனந்த் இல்லை, காஸினோதான் இருக்க வேண்டும். ஏனெனில் அது ஒரு கொலம்பியா பிக்சர்ஸின் படம். கொலம்பியாவின் படங்கள் அப்போது காஸினோவில்தான் முதல் தடவை வெளியாகும். மெட்ரோ கோல்ட்வின் படங்கள் ஆனந்தில் வெளியாகும். ஆனால் …. இதை அத்தனை உறுதியாகச் சொல்ல முடியுமா என்று யோசிக்கிறேன். தொலையட்டும்.

இந்தப் படத்தை ஃப்ரெட் ஜின்னமான் இயக்கினார். இவர் நாடகத்தனமாக சினிமாவைக் கட்டமைப்பதில் வல்ல இயக்குநர். 90 வயது வரை இருந்திருக்கிறார். 24 வயதிலேயே திரைப்படங்களை இயக்கியவர். ஆஸ்திரியர். என்னென்னவோ வியப்பான தகவல்களெல்லாம் கிட்டுகின்றன, இப்படித் தோண்டத் துவங்கினால். க்ரிகரி பெக், ஆந்தனி க்வின், ஓமார் ஷரீஃப் நடித்த ஒரு படத்தை 64 இல் எடுத்திருக்கிறார். அது இந்தியாவுக்கு வந்த நினைவே எனக்கு இல்லை. ஆனால் 64 இல் நான் இன்னும் முழு அளவில் இங்கிலிஷ் படங்களைப் பார்க்கத் துவங்கி இருக்கவில்லை. அப்போதுதான் உயர்நிலைப் பள்ளிப் படிப்பில் கடைசி வருடம் என்று நினைவு -[64-65 இல் இந்தப் படம் இந்தியா வந்திருந்தால்.]

ராபர்ட் போல்ட், பின்னாளில் டேவிட் லீனுடன் சேர்ந்து சில படங்களுக்குக் காரணமாக இருந்தார். ஆனால் என்ன மாதிரிப் படங்கள்!!

லாரன்ஸ் ஆஃப் அரேபியா, டாக்டர் ஷிவாகோ! பிறகு 1970 இல் லீனோடு சேர்ந்து ‘ரயன்ஸ் டாட்டர்’ என்ற ஒரு ‘ரொமாண்டிக்’ படமெடுத்தார். இந்த மூன்றையும் பார்த்திருக்கிறேன். எனக்கு ரயன்ஸ் டாட்டர் படம் கட்டோடு பிடிக்கவில்லை. சாரா மைல்ஸ் பற்றி எனக்கு முன்னதாக நல்ல அபிப்பிராயம் இருந்தது. இந்தப் படம் பார்த்ததும் ஐயோ என்றாகி விட்டது. சாரா மைல்ஸ் அப்போது போல்ட்டின் மனைவி. லீனுடைய தண்டப் படங்களில் இது ஒன்று. இது பிடிக்காததற்கு ஒரு காரணம், தாமஸ் ஹார்டிய வகைச் சித்திரிப்பு இந்தப் படத்தில். ஆனால் ஹார்டியின் ஒரு நாவலுடைய சிறப்பான ஒரு படத்தை 67 இல் நான் பார்த்திருந்தேன். Far from the madding crowd அந்தப் படம். 67 இல் நான் அப்போதுதான் நல்ல சினிமா/ கெட்ட சினிமா பிரிவைக் கண்டறியத் துவங்கி இருந்தேன். வருடத்துக்கு 130 படங்கள் பார்த்த 66 இலிருந்து மாறி வருடத்தில் 30 படங்கள் பார்த்தது 67 இல். இது பிற்பாடு வருடத்துக்கு 15/20 ஆகி அதுவும் இல்லாமல் போகச் சில வருடங்கள் பிடித்தன.

67 இல் பார்த்த அந்தப் படம் வழக்கமான குப்பைகளோடு ஒப்பிட்டால் நல்ல படமாகத் தெரிய அதன் அருமையான படப்பிடிப்பும், ஏதோ காரணத்தால் எனக்கு ஆலன் பேட்ஸின் நாடகத்தனமான நடிப்பு பிடித்திருந்ததும், ஜூலி க்ரிஸ்டி என்ற நடிகைக்கு நான் விசிறியாக இருந்ததும் காரணங்கள். ஜான் ஷ்லைஸிங்கரின் படங்களையும் (இயக்குநர்) அன்று நான் தொடர்ந்து பார்க்கத் துவங்கி இருந்தேன். அந்தப் படம் சில விதங்களில் போதாத படம் என்பது எனக்குமே தெரிந்திருந்தது. ஏனெனில் நான் அதற்குள் தாமஸ் ஹார்டியின் அனேக நாவல்களையும் படித்து முடித்திருந்தேன். அந்தப் படத்தைப் பற்றி ராஜர் எக்பெர்ட் அன்று எழுதிய விமர்சனம் காட்டமாக இருக்கிறது. இப்போது பார்த்தேன்.

அன்று இங்கிலிஷ் படங்களுக்கான விமர்சனங்களை, நியுயார்க்கர், சைட் அண்ட் சௌண்ட், நியுயார்க் டைம்ஸ் போன்ற பத்திரிகைகளில் படித்து விட்டுத் தீர்மானிப்போம் – எது நிச்சயம் பார்க்கப்பட வேண்டிய படம் என்று. ஆமாம், அப்போதே சிறந்த விமர்சகர்கள் என்று நாங்கள் தீர்மானித்திருந்த, ரெனாடா ஆட்லர், ஸ்டான்லி காஃப்மான், பௌலின் கேயெல், பெனலோபி ஜிலியட், ஆண்ட்ரூ சாரிஸ், ரிச்சர்ட் ஷிக்கெல், தவிர ஆண்ட்ரூ ராபின்ஸன் போன்றாரும் இன்ன பிறரும் தொடர்ந்து படிக்கப்பட்ட விமர்சகர்கள். சிலருடைய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு புத்தகங்களாக, பிரிட்டிஷ் கௌன்ஸிலிலும், அமெரிக்கத் தகவல் மையத்திலும் நூலகங்களில் கிட்டி அப்படி ஒரு கிளர்ச்சியைக் கொடுத்தன. சென்னையில் இரண்டறை இடுக்கு வீட்டில் இருக்கும் மீசை கூட இன்னும் வளராத ஒரு இளைஞனுக்கு இப்படி பௌலீன் கேயெல்லும், ஆண்ட்ரூ சாரிஸும், காஃப்மானும் உலகத்துக்குக் கதவு திறந்து விட்டவர்களாக இருந்தார்கள் என்று சொன்னால் அதை எப்படி நம்புவது? இவர்கள் யாரையும் யாரும் எனக்கு அடையாளம் காட்டித் தரவில்லை. நானே கண்டு பிடித்த விமர்சகர்கள் இவர்கள்- எழுத்து வன்மை, வசீகரம், தவிர இவர்களின் தீர்ப்புடைய நியாயம் அதே படங்களை நான் முன்னரோ, பின்னரோ பார்த்திருந்ததன் மூலம் புலப்பட்டமை எல்லாம்தான் இவர்களை நம்பகமானவர்களாகக் காட்டின.

அந்த ஹார்டியின் நாவலுடைய படம் பின்னாளில் லீன் எடுத்த ரயன்ஸ் டாட்டர் படத்தை நீர்த்த காஃபியாகக் காட்டியது. அதற்குப் பிறகு லீன் படங்கள் எதையும் பார்க்கக் கூடாது என்று தீர்மானித்திருந்தேன். ஏற்கனவே டாக்டர் ஷிவாகோ மீதே எனக்கு அதிருப்தி இருந்தது. அது ரஷ்யப் புரட்சியை ஒரு ரொமான்ஸ் கதையாகக் குறுக்கி இருந்ததாக நான் முடிவு கட்டி இருந்தேன். அப்போது ரஷ்யப் புரட்சி, மார்க்சியம் மீதெல்லாம் ஏதும் பெரும் அபிமானம் இல்லை, ஆனால் அடிப்படை நியாயம் என்று ஒன்று இருந்தால் அது ரஷ்யாவில் நடந்த பெரும் சமூகப் போராட்டத்தைச் சரிவரக் காட்டி இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அப்போது பாஸ்டர்நாக்கின் நாவலைப் படித்திருக்கவில்லை.

[ஹார்டியின் ஒரு நாவல் – டெஸ் ஆஃப் த ஊபர்வில் என்பது- இதை மைகெல் விண்டர்பாட்டம் என்பவர் இந்தியக் கதையாக மாற்றி ஒரு படம் எடுத்திருக்கிறாராம். அட ராவணா என்று நினைத்தேன். ஃப்ரீடா பிண்டோ நாயகியாக நடித்த படம். படத்தின் தலைப்பு ட்ரிஷ்னா. சுமாராக இருக்கிறது என்று ராஜர் ஈபர்ட் தளம் சொல்கிறது. ]

திரும்பிப் போனால் இந்தக் க்ராம்வெல்லை இங்கிலிஷ்காரர்கள் இன்னமும் குழப்படியாகத்தான் அணுகுகிறார்கள். ஹிலரி மாண்டெல்லின் நாவல் இவரை அநியாயத்துக்கு ரொமாண்டிஸைஸ் செய்திருக்கிறது என்று ஒரு கடும் வாத விமர்சனத்தை ஹிஸ்டரி டுடே பத்திரிகையில் படித்திருந்தேன். அது நினைவு வருகிறது.

சரி துவக்கத்துக்கு வருவோம். போப் இப்படிப் பல அரசவைப் பிரச்சினைகளுக்கும், அரசர்களின் திருமண உறவுகளின் சிக்கல்களுக்கும், பல நாட்டு உள்குழு இழுபறிகளுக்கும், தீர்ப்பு சொல்லும் இறுதி ஆளுமையாக இருந்தவர். இப்படி இந்தியாவில் எந்தப் புரோகிதரோ, மடாதிபதியோ இருந்ததில்லை.

மஹா பாரதத்துப் பீஷ்மரும் கூட இப்படி ஒரு போப்பிய ஆகிருதி கொண்டவர் இல்லை. பல குரு வம்சத் தலைகளில் அவர் ஒருவர். போப் போல இவரும் வாரிசுகளைக் கொடுக்காதவர், திருமணம் செய்யாதவர். அங்கே ஒற்றுமை நின்று போகிறது. போப் முடிவுகளைச் சொல்வதில் நியாய அநியாயம் ஏதும் பார்க்காமல் சர்ச்சின் அதிகாரம் நீடிக்க என்ன வழியோ அதையே செய்து, தன் முடிவுகளுக்கு நியாயம் கற்பிக்க விவிலிய நூலிற்கு இஷ்டத்திற்கு விளக்கம் கொடுத்து கிருஸ்தவத்தை ஊழலாக்கத் தம் பங்கைச் செய்து போனார்கள். பீஷ்மர் தர்மத்தைக் குலைக்க துரியோதனாதிகளுக்கும், இதரருக்கும் வழி விட்டு, பாரத சமுதாயத்தின் பாதை நிரந்தரமாகக் குலைந்து போக ஏதுவான பலரில் ஒருவர்.

இந்த வகையில் இவரும் போப்பும் ஒருப்போல என்று தோன்றியது. இதை வைத்து ஒரு கதை எழுதலாமோ என்னவோ!?

ஒரே நேரம் இந்துத் தீவிரர்களையும், கிருஸ்தவத் தீவிரர்களையும் தார்க்குச்சியால் குத்த இப்படி ஒரு கற்பனை உதவும். கூடுவிட்டுக் கூடு பாய்ந்து பீஷ்மர் போப்பாக மறுபிறவி எடுப்பதாகக் கதை எழுதலாம். 🙂

சிகண்டியால் கொல்லப்படுவதற்குப் பழி வாங்க பல நூறாண்டுகள் போப்பாக இருந்து பெண்களுக்கெதிராக கதோலிக்க சர்ச்சை நிரந்தரமாக வைத்திருப்பதும் பீஷ்மரின் ஆவிதான் என்று எழுதினால் கொல்லவே வந்து விடுவார்கள்.

But it seems to be a cute idea, in my opinion. தமிழில் இதை யார் எழுதுவார்கள் என்று யோசித்தால் யாரையும் தெரியவில்லை.

தொடர்புள்ள பதிவு:  பருவம் – சகாப்தத்தின் குரல்கள்

One Reply to “பருவம், படம், பீஷ்மர் & போப்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.