(பதிப்பாசிரியர் குறிப்பு: சார்லஸ் டைலர் கனடாவைச் சேர்ந்த தத்துவவியலாளர். இவரது ‘எ செக்யூலர் ஏஜ்‘ என்ற புத்தகம், சமயம் மற்றும் சமயசார்பின்மை பற்றி பேசுகிறது. சமய நம்பிக்கை வலுவிழப்பதால் சமயசார்பின்மை வளர்வதில்லை, மாறாய் தன்னைத் தவிர பிறிதொன்றுக்கு இடமளிக்காத மானுட நேயமே அதன் வளர்ச்சியின் அடிப்படையாய் இருக்கிறது, என்றார் அவர். இக்கருத்து, கட்டுரையில் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது.
டைலர் மேலுமொன்று கூறுகிறார். நவீனத்துக்கு முற்பட்ட, சமய நம்பிக்கை ஆதிக்கம் செலுத்திய உலகில், அகம் சவ்வூட்டுத் தன்மை கொண்டது. மாயங்கள் நிறைந்த அந்த உலகில், பொருட்களுக்கும் ஆன்மாக்களுக்கும் வினையாற்றும் ஆற்றல் உண்டு, அவற்றை முழுமையாய் புரிந்து கொள்ள முடியாது, அர்த்தத்தை வெளியிலிருந்து உணர்த்தவோ திணிக்கவோ கூடிய ஆற்றல் அவற்றுக்கு உண்டு. அகத்தின் தன்மை அப்படிப்பட்டது. மாறாய், நவீன உலகில் மாயங்கள் இல்லை. அங்கு அகம், உறையிடப்பட்ட தன்மை கொண்டது. தன்னிறைவு கொண்ட இந்த அகம் தன்னைக் கொண்டே உலகை அர்த்தப்படுத்திக் கொள்கிறது, தன்னிச்சைக்கேற்ப வினையாற்றுகிறது, புறம் அதன் ஆட்சிக்குட்பட்டது. மனித மனம் தவிர வேறொரு மனம் இல்லை. எந்த விசாரணைக்கும் உட்படுத்தப்படாமல் இயல்பாய் ஏற்றுக்கொள்ளப்படும் தொழில்நுட்ப அனுபவம் அடிப்படையில் நம் மனதை மாய உணர்வால் நிறைக்கின்றது.
தொழில்நுட்பம் நம்மால் முழுமையாய் புரிந்து கொள்ள முடியாததாய் இருக்கிறது, அது நம் மீது ஆதிக்கம் செலுத்துகிறது, அது நம்மை அதிசய உணர்வால் நிறைக்கிறது என்கையில் நாம் நவீனத்துக்கு முற்பட்ட, சவ்வூட்டு அக நிலைக்குத் திரும்புகிறோம் என்கிறார், “தொழில்நுட்ப மயக்கங்களும் நவீனத்துவத்தின் முடிவும்“, என்ற கட்டுரையில் மைக்கேல் சகசாஸ். இது நம்மை மீண்டும் வசியத்தில் ஆழ்த்துகிறது. தொழில்நுட்பம் ஒரு பொன்னுலகுக்கு நம்மைக் கொண்டு செல்வதற்கு மாறாய், நம் பேதைமையை நாம் பேதைமை என்று அறியாத ஒரு இயல்பு நிலைக்கு நம்மைக் கொண்டு சென்று, நவீனத்துக்கு முற்பட்ட ஒரு இருண்ட உலகில் நம்மைச் சிறைப்படுத்தலாம் – “முந்தைய மாய காலம் போல் நம் காலமும் அதற்கேயுரிய வடிவங்களில் ஆண்டான் அடிமை அமைப்புகளுக்கு இடம் கொடுக்கும், இங்கு ஒரு பூசாரி வர்க்கமும் தோன்றும், அதன் மறைஞானத்தில் நம்பிக்கை வைத்தே மயக்கத்தின் வரங்களையும் சாபங்களையும் நாம் தேற முடியும், தனக்கேயுரித்தான வகையில் இறுதி கதிநிலை குறித்த நம்பிக்கையையும் இது அளிப்பதாக இருக்கும்,’ என்று இக்கட்டுரை முடிகிறது.
தொழில்நுட்ப முன்னேற்றங்கள் குறித்து எழுதப்பட்ட இரு நூல்கள் குறித்து “Silicon Valley’s Bonfire of the Vainglorious” என்ற தலைப்பில் W. Patrick McCray, LARB தளத்தில் ஒரு அறிமுகம் அளித்திருக்கிறார். அதனை இக்கட்டுரையுடன் இணைத்துப் படிக்கலாம்.)
சார்லஸ் டைலர், சமயசார்பின்மை குறித்து நிலவிய கோட்பாடுகளில் அதிருப்தி கொண்டிருந்தார். அது பற்றிய தன் பார்வையை அவர் ‘எ செக்யூலர் ஏஜ்‘ என்ற புத்தகத்தில் முன்வைத்தார். 2007ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட அந்த நூல் மிகவும் விவாதிக்கப்பட்ட ஒன்று. சமயசார்பின்மை குறித்த மரபார்ந்த கதைகள் எவ்வளவு உயர்வாக இருந்தபோதிலும் போதாமை கொண்டிருந்தன என்று அவர் வாதிட்டார். “கழித்தல் கதைகள்” என்று அவர் அழைத்த விஷயங்களே இந்தப் போதாமைக்கு காரணமாக இருந்தன. இப்படிப்பட்ட கதைகளில் கடவுள் நம்பிக்கை இல்லாதபோது மதச்சார்பின்மை தோன்றுகிறது. அல்லது, சர்ச் தன் கலாசார அதிகாரத்தை இழப்பது, அல்லது, சமயத்தின் மொழி பொதுவெளியில் இருந்து அப்புறப்படுத்தப்படுவது, இது போன்ற நிலைகளில் சமயசார்பின்மை தோன்றுகிறது. ஆனால் சமய நம்பிக்கைகள் மற்றும் சமய அமைப்புகளை அகற்றியபின் எது மிச்சம் இருக்கிறதோ அதுதான் சமயசார்பற்ற சமூகம் என்ற அந்த எளிய நம்பிக்கை டைலருக்கு இருக்கவில்லை. அதைவிட, அப்போது புதிதான ஒன்று தோன்றுகிறது என்று வாதிட்டார் அவர். இந்த “பிறிதற்ற மானுட நேயம்” (exclusive humanism), முன்னொரு காலத்தில் மக்கள் வாழ்வில் “முழுமை” அளித்த சமய அனுபவத்தின் இடத்தில் தற்போது இயங்குகிறது என்றார். இது போக, சமயசார்பின்மையை அவர் புரிந்து கொண்ட அளவில், அது ஒரு சமூகத்தில் உள்ள நாத்திகர்களுக்கு மட்டுமே பொருந்துவது அல்ல என்றும் கூறினார். அதுவே நம்பிக்கையின் சூழமைவையும் நம்பிக்கையின் நியாயத்தையும் தீர்மானிக்கிறது. எனவே யாரும் ‘பிறிதற்ற மானுட நேயத்தின்” பின்விளைவுகளிலிருந்து தப்ப முடியாது.
டைலரின் ஆக்கம் ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் புரிதல்களை அளிப்பதாகவும் உள்ளது. என்றாலும், பல பரிமாணங்களும் நுட்பங்களும் கொண்ட அவரது வாதத்தின் ஒரு சிறு பகுதியை இங்கு பயன்படுத்திக் கொள்ளவே அவர் எழுதிய ‘எ செக்யூலர் ஏஜ்’ நூலைச் சுட்டுகிறேன். வசீகரமிழத்தல் (disenchantment) குறித்த அவரது புரிதல் முக்கியமானது.
நவீனத்துக்கு முற்பட்ட சமூக இயல்புகளில் மாயங்கள் நிறைந்த உலகம் (enchanted world) என்ற பார்வையும் ஒன்று. அதைக் கடந்த பின்னரே, டைலரின் பொருளில் சமயச்சார்பற்ற உலகம் ஒன்று தோன்ற முடியும். அவர் விவரிக்கும் மாயங்கள் நிறைந்த உலகம் ஒரு குறிப்பிட்ட வகை அக அனுபவம் கொண்டது. அந்த அகத்தை அவர் “சவ்வூட்டு அகம்” என்று அழைக்கிறார். அதுவே பின்னர் நவீன “உறையிட்ட அகம்” தோன்ற வழி செய்கிறது.
சவ்வூட்டு அகம் என்று எதைச் சொல்கிறார் டைலர்? இதை விவரிக்கும் முன் ஒரு விஷயத்தை அடிக்கோடிட வேண்டும். நவீனத்துக்கு முற்பட்ட மக்கள் அகம் எப்படிப்பட்டது என்று குறிப்பிட்ட ஒரு கருத்து கொண்டிருக்கலாம், கொள்ளாதிருக்கலாம். அது என்னவென்பதை அறிய டைலர் முற்படுவதில்லை. அதைவிட அகவயப்பட்ட ஒன்றை அவர் தேடுகிறார். எது ஒன்று பேதைமையில் இயல்பு நிலையென்று எடுத்துக் கொள்ளப்பட்டதோ, எது ஒன்று வாழ்வனுபவத்தின் பின்னணியாக இருந்ததோ, அதை அறிய விரும்புகிறார் அவர். “ஆக்கப்பட்டது. அதில் நாம் வாழ்கிறோம். ஆனால் அதை ஆக்கப்பட்டதாய் அறிவதில்லை. அல்லது, நம்மில் பலர், அது இன்னதென்று வகுத்துக்கொள்வதே இல்லை”- தான் எதை அறிய விரும்பினாரோ, அதை இவ்வாறே விவரிக்கிறார் டைலர்.
இந்த விஷயங்களை அணுக இது ஒரு பயனுள்ள வழியாக இருக்கும். ஏனென்றால் நம் நம்பிக்கைகளையும் செயல்களையும் விளக்கமாய் வெளிப்படுத்தும் அளவு முழுமையாய் வளர்ந்த கோட்பாடு எதையும் நாம் நம்மோடு வைத்திருப்பதில்லை. நாம் சொல்வது, செய்வது இவற்றில் பலவும் இந்த உலகம் இப்படிப்பட்டது, அதில் நம் இடம் இதுவென்று நாம் உள்ளூர கொண்டிருக்கும் புரிதலில் தோன்றுகின்றன. இந்தப் புரிதலை சொற்களில் வெளிப்படுத்தச் சொன்னால் நாம் மிகவும் தடுமாறக்கூடும்.
தொழில்நுட்பம் நம்மை மீண்டும் வசியத்தில் ஆழ்த்துவது பற்றி பேச (technological re-enchantment) இது எனக்கு உதவியாக இருக்கிறது. தொழில்நுட்ப வசியம் என்று சொல்லும்போது இன்றுள்ள உலகில் யாரும் ஐபோனில் ஆவிகள் இருக்கின்றன என்று நம்புவதாய் பொருள் கொள்ள முடியாது. அப்படிப்பட்ட ஒரு நம்பிக்கை மத்தியகால கிராமங்களில் இருந்த விவசாயிகள், காட்டில் தேவதைகள் இருந்ததாக நம்பியதற்கு இணையானது. அந்த அர்த்தத்தில் நான் தொழில்நுட்ப வசியத்தைப் பேசவில்லை. இருந்தாலும்கூட, நவீனத்துக்கு முந்தைய மாய அனுபவத்துக்கு இணையாகவோ அல்லது ஒப்பானதாகவோ நம் சமகால தொழில்நுட்ப அனுபவம் இருக்கலாம். அந்த அனுபவத்தில் ஒரு பேதைமையும் இருக்கலாம் – அதாவது நாம் அது குறித்து யோசிக்காமல் இயல்பான ஒன்றாக எடுத்துக் கொண்டிருப்போம்.
மாயம் குறித்த டைலரின் விவாதம் அகக் கோட்பாடாய் விரிகிறது. அவர் அர்த்தம் குறித்த கேள்வியில்தான் மாயம் குறித்த புரிதலைத் துவங்குகிறார். நம் நவீன வசீகரமற்ற உலகில், அர்த்தம் என்பது மனதில் மட்டுமே தோன்றுவது. உலகில் மனம் என்று ஒன்று இருக்குமானால் அது மனித மனம் மட்டும்தான். மனித மனத்துக்கு வெளியே உள்ள எதுவும் தன்னளவில் அர்த்தமுள்ளதல்ல. மேலும், மனிதனைத் தவிர புருஷன் அல்லது பிரகிருதி என்று கர்த்தா நிலையில் வேறெதுவும் இல்லை.
இதற்கு மாறாக மாயங்கள் நிறைந்த உலகில் பொருட்களுக்கும் ஆன்மாக்களுக்கும் “அர்த்தத்தை வெளியிலிருந்து உணர்த்தவோ திணிக்கவோ கூடிய ஆற்றல்” உண்டு. காண்பான் நிலை எவ்வாறாயினும் இந்த அர்த்தம் அவனின்று சுதந்திரமானது. விருப்பமிருக்கிறதோ இல்லையோ, இந்த அர்த்தத்தை எதிர்கொள்ள மனிதன் கட்டாயப்படுத்தப்படுகிறான் என்று சொல்லலாம். இது தவிர மாயங்கள் நிறைந்த உலகில் பொருட்களுக்கு வினையாற்றும் ஆற்றல் உண்டு. “ஆற்றல் ஊட்டப்பட்ட” பொருட்கள், “நாம் பொதுவாய் ‘மந்திர’ சக்தி என்று அழைக்கக்கூடிய” ஆற்றல் கொண்டவை என்று விளக்கம் அளிக்கிறார் டைலர். மிக முக்கியமாக, இந்த ஆற்றல் நல்லவையாகவோ தீயவையாகவோ இருக்கலாம். குறிப்பிட்ட ஒரு பொருள் நமக்கு ஒரு வரமாகலாம், அல்லது வாதையாகலாம், நம்மை குணப்படுத்தலாம் அல்லது பிணிக்கலாம், நம்மை மீட்கலாம் அல்லது ஆபத்துக்குட்படுத்தலாம்.
“இவ்வாறாகவே மாய உலகில், ஆற்றலூட்டப்பட்ட பொருட்கள் அர்த்தத்தை நிர்பந்திக்கலாம், அவற்றின் அர்த்தங்களுக்கு ஏற்ற அளவில் பௌதீக உலகில் வினையாற்றலாம்” என்று முடிக்கிறார் டைலர். இவற்றை முறையே, “தாக்கங்கள்” என்றும் “வினையாற்று ஆற்றல்,” என்றும் அவர் அழைக்கிறார்.
இந்நிலைகளின் காரணமாய் தோன்றும் அக அனுபவம் நான் சொல்ல வரும் விஷயத்துக்கு முக்கியமானது. மாய உலகின் எல்லைகள் தெளிவற்றவை என்பது உறுதி. மாய உலகு குறித்து எழுதும்போது டைலர் அங்கு, “நமக்கு முக்கியமாய் உள்ள குறிப்பிட்ட வகை எல்லைகள் இல்லாத குழப்ப நிலை நிலவுகிறது”, என்கிறார். குறிப்பாக, “மனதுக்கும் உலகுக்கும் இடையே உள்ள எல்லை சவ்வூட்டுத்தன்மை கொண்டது”. மாய உலகுக்குப் பொருந்தும் சவ்வூட்டு அகம், “ஆவிகளுக்கும், பேய்களுக்கும், உலகளாவிய சக்திகளுக்கும் எதிராய் பாதுகாப்பற்றது. குறிப்பிட்ட சில சூழ்நிலைகளில் அதைப் பீடிக்கக்கூடிய குறிப்பிட்ட சில அச்சங்களும் இதனோடு இயல்பாய் இயைபவை”.
இதற்கு மாறாய், வசீகரமற்ற உலகின் இயல்பாய் உள்ள உறையிட்ட அகம், “தகர்க்க முடியாதது”, “தனக்குரிய பொருட்களின் அர்த்தங்களை ஆட்சி செய்வது”. சவ்வூட்டு அகத்தைப் பீடிக்கும் அச்சங்கள் இதற்கு இல்லை. இது உலகின் தாக்கத்திலிருந்து துண்டிக்கப்பட்டது, அதன் எல்லைகளில் தெளிவின்மை சிறிதும் இல்லை, அதன் மனதினுள் கச்சிதமாக அர்த்தம் உறைகிறது, அது சட உலகை ஆக்கிரமித்திருக்கிறது. அது சுதந்திரமானது, தன்னிறைவு கொண்டது. சுருக்கமாய்ச் சொன்னால், முழுக்க முழுக்க நவீன மனிதன்.
இந்த இடத்தில் நியாயமான ஒரு கேள்வி எழுகிறது. இதற்கெல்லாம் தொழில்நுட்பத்துடன் என்ன தொடர்பு? செயல்முறை ஊகம் ஒன்றை நான் முன்வைப்பதானால் அது இப்படி இருக்கும்: டைலர் விவரிக்கும் மாய உலகின் “ஆற்றலூட்டப்பட்ட” பொருட்களுக்கு இணையான வகையில் சமகால தொழில்நுட்பங்கள் இயங்குகின்றன. சமகால தொழில்நுட்பங்கள் தமக்கென சில தன்மைகள் கொண்டுள்ளன. இத்தன்மைகள் காரணமாய் நமது உலக வாழ்வனுபவத்தில் அவற்றின் இருப்பு மாய உலகின் “ஆற்றலூட்டப்பட்ட” பொருட்களைப் போல் உள்ளது.
இங்கு இரு விஷயங்களைத் தெளிவுபடுத்த வேண்டும். முதலாவதாக, எந்த வகையிலும் உண்மையாகவே சமகால தொழில்நுட்பம் மந்திரத்தன்மை கொண்டது என்று நான் சொல்லவில்லை. மத்தியகால சமய வழிபாட்டுப் பொருட்களை “மந்திரிக்கப்பட்டவை” என்று இக்கால வரலாற்றாசிரியை ஒருவர் சொல்லும்போது அவர் அவற்றுக்கு அத்தகைய ஆற்றல் உண்மையாகவே இருக்கிறது என்று சொல்வதில்லை. அது போலவே இதுவும்.
இரண்டாவதாக, ஒவ்வொரு சமகால தொழில்நுட்பத்தையும் மனதில் வைத்துக் கொண்டு நான் இதைச் சொல்லவில்லை. முக்கியமாக இயங்குதன்மை கொண்ட தொழில்நுட்பம் மற்றும் பொருட்களை, செயற்கை அறிவு, இயந்திரச் செயல்பாடு, அல்கோரிதம்கள், பிக் டேட்டா போன்ற மெய்ம்மை அல்லது இலக்கணத்தன்மை கொண்ட செயல்முறைகளையே நான் இவ்வாறு சொல்கிறேன் (இது குறித்து வேறோரிடத்தில் எழுதியிருக்கிறேன்). பெரும்பாலும் புரிந்து கொள்ள முடியாத, அபௌதீக வெளி போன்ற ஒன்றினுள் நாம் வாழ்கிறோம் என்று நம்மை நினைக்கச் செய்யும் கட்டமைப்பு இவற்றால் உருவான ஒன்று.
அப்படியானால், நாம் தொழில்நுட்ப மயக்கத்தில் உள்ள உலகில் வாழ்கிறோம். இங்கு நாம் எதிர்கொள்ளும் பொருட்களும் விசைகளும், டைலரின் மொழியில், நம் மீது தாக்கம் செலுத்துகின்றன, நம் விவகாரங்களில் வினையாற்றும் ஆற்றல் கொண்டிருக்கின்றன. இவற்றில் சில பொருட்களும் விசைகளும் மனித இயற்றுதலுக்கு அப்பாற்பட்ட சுயேச்சை கொண்ட கர்த்துருத்துவம் கொண்டிருக்கும் தோற்றம் அளிக்கின்றன. தொழில்நுட்பம் எப்போதும் மானுட கர்த்துருத்துவத்துக்கு அப்பாற்பட்ட முழு சுதந்திரம் கொண்டிருக்க முடியாது என்பது உண்மையாக இருக்கலாம். இந்த வாதத்தை நான் உட்பட பிறரும் முன்வைக்க விரும்பலாம். ஆனால் அதைப் பற்றி நான் இங்கு பேசவில்லை என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். அதைவிட, டைலர் போல் நானும், எந்த விசாரணையும் இல்லாத அனுபவ உலகம் எப்படிப்பட்ட உணர்வு கொண்டது என்பதை அறியவே விரும்புகிறேன்.
தொழில்நுட்பத்தால் மந்திரிக்கப்பட்ட பொருட்கள் அர்த்தம் பொதிந்தவை. அவற்றின் அர்த்தங்கள் நம்மை ஆக்கிரமிக்கின்றன. நாம் அவற்றை எதிர்கொண்டாக வேண்டியுள்ளது. நாம் உதவி வேண்டி நம் தொழில்நுட்பங்களைக் நாடுகிறோம். அவற்றின் ஆற்றலில் நாம் நம்பிக்கை வைக்கிறோம். நம் தொழில்நுட்பங்களை நாம் அஞ்சவும் செய்கிறோம். நம் பிரச்சினைகளுக்கு அவற்றைக் காரணமாகவும் காண்கிறோம். நாம் எதிர்கொள்ளும் தொழில்நுட்ப விசைகள் சில சமயம் நற்சக்திகளாக உள்ளன. ஆனால் அதே அளவு அவை தீயசக்திகளாகவும் இருந்து நம் முயற்சிகளை மோசம் செய்கின்றன, நம் திட்டங்களை தோற்கடிக்கின்றன.
தொழில்நுட்ப சாதனங்கள் சில சமயம் நம்மை அதிசய உணர்வால் நிறைக்கின்றன. தொழில்நுட்ப பொருட்கள் நமக்கு ஆற்றல் அளிக்கும் சாத்தியம் கொண்டவை என்பது மட்டுமல்ல. நம் வாழ்வையும் தாழ்வையும் தீர்மானிக்கும் முக்கியமான சக்திகளாக இப்பொருட்களும் ஆற்றல்களும் இருக்கின்றன என்பதே நம் அனுபவ உணர்வு. இவை நம் கட்டுப்பாடும், புரிதலும் இல்லாமல், சுயேச்சையாய் நம் மீது தாக்கம் செலுத்துகின்றன. வேறு சொற்களில் சொன்னால், நாம் பாதுகாப்பற்றவர்களாய் நிற்கிறோம். பரவலாக்கப்பட்ட தொழில்நுட்ப கர்த்துருத்துவத்தின் ரேகைகள் நம் சித்தத்திலும் விருப்பங்களிலும் குறுக்கிட்டு நம் சுதந்திரத்தை மோசம் செய்கின்றன.
அப்படியானால் இந்த தொழில்நுட்ப மயக்கத்தின் வயப்பட்ட பண்பாட்டுச் சூழலில் தோன்றும் அக அனுபவம் முன்னொரு காலத்தில் மாயங்கள் நிறைந்த உலகின் நிலவிய சவ்வூட்டு அகம் போன்ற ஒன்று என்றாகிறது. வசீகரமற்ற நவீனத்துவத்துக்குப் பொருந்தும் உறையிட்ட அகமல்ல இது. இப்படியே யோசித்துக் கொண்டு போனால் நாம் இந்த ஒரு முக்கியமான இடத்துக்குதான் வந்து சேர்ந்தாக வேண்டும்: தொழில்நுட்ப மயக்கத்தின் வயப்பட்ட உலகம் நவீன அகம் வாழ்வதற்கேற்ற உலகல்ல. அப்படியானால் பின்நவீனத்துவம், அல்லது, நவீனம் கடந்த அக அனுபவம், நம் தொழில்நுட்ப பண்பாட்டுச் சூழமைவின் விளைவு என்று புரிந்து கொள்ளப்படலாம்.
“நாம் தெய்வத்தை ஒத்தவர்கள்,” என்று ஸ்டீவர்ட் பிராண்ட் ஒரு முறை பிரகடனப்படுத்தியது பிரபலம், “அதில் நாம் தேர்ச்சியடைய வேண்டியதுதான்”. தொழில்நுட்பத்தால் மயக்கப்பட்ட உலகம் அப்படிப்பட்ட சாத்தியத்தைக் காட்டி நம்மை வசீகரிக்கலாம். ஆனால் நம்மில் பலரும் ஜீவத்துவ நிலையில், எனவே பாதுகாப்பற்ற தளத்தில்தான் அதன் அனுபவ உலகை எதிர்கொள்வார்கள் என்று சந்தேகிக்கிறேன். முந்தைய மாயகாலம் போல் நம் காலமும் அதற்கேயுரிய வடிவங்களில் ஆண்டான் அடிமை அமைப்புகளுக்கு இடம் கொடுக்கும், இங்கு ஒரு பூசாரி வர்க்கமும் தோன்றும், அதன் மறைஞானத்தில் நம்பிக்கை வைத்தே மயக்கத்தின் வரங்களையும் சாபங்களையும் நாம் தேற முடியும், தனக்கேயுரித்தான வகையில் இறுதி கதிநிலை குறித்த நம்பிக்கையையும் இது அளிப்பதாக இருக்கும்.
நன்றி –Technological Enchantments and the End of Modernity, L.M. Sacasas