லிண்டா மேப்ஸ்
சுற்றுச்சூழல் செய்தியாளர் லிண்டா மேப்ஸ், மாஸச்சூஸட்ஸ் மாநிலத்தில் பீடர்ஷாம் நகரில் உள்ள ஹார்வர்ட் காட்டில் ஒரு வருஷம் வசித்திருக்கிறார். இது ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் காடு. அங்கே, தனிவகையான ஒரு சிவப்பு ஓக் மரம் (க்வெர்கஸ் ருப்ரா- என்பது தாவரவியல் பெயர்) அவருக்குக் காடுடைய வாழ்க்கையைப் பற்றியும், நம் இயற்கை உலகத்தின் தட்பவெப்பநிலை மாற்றத்தின் விளைவுகளை பற்றியும் அபாரமான நுண் தெளிவுகளை வழங்கியது. இந்த கட்டுரை சமீபத்தில் வெளிவந்த அவரது ‘சாட்சி மரம்: நூறாண்டு கால சிவப்பு ஓக் மரம் ஒன்றில் பருவகாலங்களின் மாறுதல்கள்’ என்ற புத்தகத்தைத் தழுவி எழுதப்பட்டது.
நான் 2013ஆம் ஆண்டின் இலைஉதிர்காலத்தில், ஜான் ஓ’கீஃப் எனும் உயிரியலாளருடன், ஹார்வர்ட் காட்டில் நடமாடும் போது அந்த ஓக் மரத்தை முதன் முதலில் சந்தித்தேன். பனிக்காலம் முழுதும் – மாஸசூஸட்ஸில் அது நிறைய நாட்கள் நீடிப்பது – அதே இரண்டு கம்பளிச்சட்டைகளையும், தொய்வான, முரட்டுக் கம்பளி குல்லாவையும் அணிந்து கொண்டு, ஜான் ஓ’கீஃப் கடந்த 25 வருடங்களாக, 50 மரங்கள் கொண்ட இதே சுற்றுவழியில் நடந்து வருகிறார்.
வாரத்தில் ஒரு நாளாவது வெளியே செல்லும் வாய்ப்பை நாடி, காட்டில் பருவகாலங்கள் துவங்கிக் கழியும் விதத்தைப் பற்றிய சுற்று நோட்டத்தை (survey) ஒரு முறை தான் தொடங்கியதாகவும், பிறகு அதை விடாமல் பற்றிக் கொண்டதாகவும் ஜான் சொல்கிறார். மரங்களில் அரும்பு விடுதல், இலை துளிர்த்தல், இலை நிறம் மாறுதல் மற்றும் இலை விழுதல் மூலம் பருவகாலங்களை பற்றிய விவரங்கள் இச்சுற்று நோட்டத்தில் கிட்டுகின்றன. இதுவரை, அவர் மிக மதிப்புள்ளதும், தனித்தன்மை கொண்டதுமான ஆவணப் பத்திரத்தைத் தொகுத்திருக்கிறார். மாறிவரும் தட்பவெப்பநிலையால் உயிரினங்களுக்கு உண்டாகும் பாதிப்புகள் குறித்த, உடனடியாக கவனிக்கத்தக்க அறிகுறிகள், இயற்கையின் பருவகால மாறுதல்களில் தான் முதலில் தோன்றும், ஏனெனில் வெப்பநிலை அதிகரிப்பது, பருவங்களின் காலச் சுழற்சியை மாற்றி அமைக்கிறது. காடுகளில், நீர்ப் பயன்பாடு, மரங்களின் வளர்ச்சி வீதம், வளரும் பருவத்தின் நீளம் மற்றும் வெப்பநிலை ஆகியன எல்லாம் இணைக்கப்பட்டவை. ஆகவே காடுகளின் பருவகாலத்திற்குரிய சுழற்சியை ஆவணப்படுத்திய ஜானின் பணி, நமது மாறும் உலகத்தை இலைகளின் மொழியின் வழியாகப் பார்த்த ஒரு நோட்டமாக இருந்தது.
இம்மரங்களின் ஒவ்வொரு அசைவையும், தலைக்கு மேல் 120 அடி உயரத்திலிருந்து, பகல் ஒளி இருந்த நேரங்களில் கேமராக்கள் மூலம் இடைவிடா கண்காணிப்பில் எடுக்கப்பட்ட இம்மர விதானங்களின் பிம்பங்கள் இணையத்தில் விநியோகிக்கப்படுகின்றனவே, அவற்றுக்கு நிலத்தில் நடந்து ஜான் நோட்டமிட்டவை, நிலத்தளவு நிரூபணங்களாக நிற்கின்றன. ஒவ்வொரு மரமாகக் கவனித்து ஜான் எடுத்த குறிப்புகளையும், கேமராக்களும், கண்காணிப்புக் கோபுரங்களில் இருந்த மற்றசாதனங்களும், ஒழுங்கு முறையாகப் புகைப்படங்களை எடுக்கும் பணிக்காகப் பறந்த தானியங்கி ட்ரோன்களும் எல்லாம் சேர்ந்து மொத்தக் காடுகளை நோக்கிக் கொணர்ந்தவற்றையும் சேர்த்துப் பார்த்தால், உலகத்திலேயே இந்த மரங்கள் தான் மிக உன்னிப்பாக கண்காணிக்கப்பட்ட மரங்கள் என்று தோன்றுகிறது.
ஹார்வர்ட் காடு இயற்கையான காடாக இருந்தாலும் இந்த காடு ஒரு வெளிப்புற ஆய்வுக்கூடமும் வகுப்பறையும் கூட என்பதை நினைவுபடுத்தும் சின்னங்களைக் கவனிக்காமல் அதிக தூரம் போக முடியாது. 1907’ல் நிறுவப்பட்ட ஹார்வர்ட் காடு, கிட்டதட்ட 4000 ஏக்கர்கள் நிலபரப்புள்ளது, 100 வருடத்திற்கு மேற்பட்ட ஆராய்ச்சியின் ஆவணங்களைத் தன் காப்பகத்தில் கொண்ட இங்கு, சில வகையான தரவுகளுக்கு வேறெந்த இடங்களையும் விட மிக நீண்ட காலத்துக்கான பதிவுகள் உள்ளன.
அடையாள ஒட்டுகளும், சங்கேதக் கொடிகளும் மரங்களில் முள்முடிகள் போலச் சிலிர்க்கின்றன, மற்றும் வனதளத்தில் நிறைய சாதனங்கள் சிதறிக் கிடந்தன. ஒளி உணரிகள் மற்றும் இலைக்குப்பையைச் சேகரிக்கும் சலவைக் கூடைகளும் உள்ளன. அடிக்கடி, பறவைகளின் பாட்டுக்கு மத்தியில், புகைப்படமெடுக்க தலைக்கு மேலே ரீங்காரத்துடன் பறக்கும் வலவனிலா வானூர்தியிலிருந்து, எந்திரங்கள் மற்றும் மின்விசிறிகளின் சுரும்பொலி வரை, அறிவியலின் சப்தங்கள் கேட்கும். யதார்த்தம் என்னவென்றால் இந்த காடு நுண்ணோக்கியால் ஆராயப்படும் பொருள் போல உள்ளது. இதுவே 45 – 60 லட்ச டாலர் செலவுக் கணக்கு கொண்ட ஹார்வர்ட் காட்டில், சுமார் 40 முதல் 45 உயிரியலாளர்கள், ஊக வடிவு புனைவாளர்கள், நிலப் பரப்புத் தகவல் அமைப்பு நிபுணர்கள் (GIS), வரலாற்றாளர்கள், சூழலியல் நிபுணர்கள், மரவியலாளர்களும், தொல் சூழலியலாளர்களும், தகவலியல் மற்றும் தொடர்பியல் நிபுணர்கள், கொள்கை நிபுணர்கள், வளிமண்டல வேதியியல் நிபுணர்கள், ஆராய்ச்சி உதவியாளர்கள், நிர்வாகிகள் மற்றும் உலகம் முழுவதிலிருந்தும் வருகை தரும் ஆராய்ச்சியாளர்களின் முழுநேரப் பணி யாகும்.
தன்னுடைய வாராந்தர சுற்று நோட்டங்களில் ஜான் எப்போதாவதுதான் அளவு ஏதேனும் எடுப்பதுண்டு – பனியின் ஆழத்தையோ அல்லது விரியும் இலையின் நீளத்தையோ. ஆனால் நிச்சயமாகச் செய்வது என்னவென்றால் ஒரு குறிப்பிட்ட தொகுப்பில் அடங்கும் மரங்களைத் தொடர்ந்து நோட்டமிடுவது. இந்தத் தொகுப்பில் அடங்கும் மரங்கள், வெவ்வேறு இனங்கள், மேலுள்ள விதானத்தில் உயரங்கள், மற்றும் காட்டின் சுற்றுச்சூழல் – வற்றலான, ஈரமான, நிழலில்லாத மற்றும் நிழல்கொண்டது என்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டன. வாரா வாரம், வருடா வருடம் அவர் தனது நோக்கீடுகளை முறைப்படியாக தரவுத் தாளில் குறித்துக்கொண்டு வருகிறார்.
ஜானின் பதிவுகளை உபயோகித்த பல ஆராய்ச்சியாளர்களில், முதன் முதலாக ஹார்வர்ட் பல்கலைப் பேராசிரியர் ஆன்ட்ரூ ரிசர்ட்ஸன், காடுகளில் தட்பவெப்பநிலை மாற்றத்தினால் உண்டான விளைவுகளைப் பற்றிப் பல முக்கியமான ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் பிரசுரித்தார். நான் ஆன்ட்ரூவை முதன் முதலில் கேம்ப்ரிட்ஜில் உள்ள எம ஐ டியில், அறிவியல் இதழியலில் ‘நைட் ’ (என்பார் பெயரில் ஏற்பட்ட கட்டளையின்) சிறப்பாய்வாளராக வந்த பொழுது, 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சந்தித்தேன். நமது மாறும் தட்பவெப்பநிலையின் வரலாற்றைப் புது முறையில் எப்படி விவரிப்பது என்று ஆராய்ந்துவந்தேன் – ஒப்பந்தங்களைப் பற்றி உணர்ச்சியற்ற வாதமாகவோ, மோதிக்கொள்ளும் அரசியலாகவோ அல்லது பேரழிவு நாள் வந்து விட்டது எனும் காட்சியாகவோ கொடுத்தால் பலருக்கு கொட்டாவி வரும். தட்பவெப்பநிலை மாறுதலின் விளைவால் ஏற்படப் போகும் நஷ்டமோ மிக அதிகம்: உயிரினங்கள் அழிதல், இயற்கையின் செயற்பாடு மற்றும் வாழ்விடங்களின் நலமான நிலை குறித்த விளக்கங்கள் மக்களின் கவனத்தை ஈர்க்க முடியவில்லை என்றால் உண்மைகளையே சொன்னாலும் யாரும் பொருட்படுத்தமாட்டார்கள்.
நான் உயிருள்ள பொருட்களின் வசீகரம், நம்மை ஈர்க்கும் ஆனால் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போகும் பருவகாலத்திற்கேற்ற நுட்பமான மாற்றங்களைக் கொள்ளும் இயற்கையின் நாடகம், மேலும் அந்த மாற்றம் எப்படி குலைக்கப்படுகிறது என்று கதையை சொல்லலாம் என்று நினைத்தேன். அதனால் நான் ஆன்ட்ரூவுடைய ஆராய்ச்சியாளர்களுடன் பார்வையாளராகச் சேர விரும்பியபோது அதற்கு அவர் ஒத்துக் கொண்டார், மேலும் ஜான் வாரந்தோறும் நடத்தும் சுற்று நோட்டத்தின்போது நானும் கூட வரலாம் என்று ஒத்துக்கொண்டதும், நான் இந்த விஷயத்தை ஆழமாக ஆராயலாம் என்று முடிவு செய்தேன். ஜானுடன் முதல் முதலாக சுற்று நோட்ட நடைக்கு சென்று வந்த பின் சில நாட்களிலேயே, ஒரு மின்னஞ்சலில், ‘ஜான், எனக்கு ஒரு மரம் வேண்டும்’ என்று எழுதினேன்.
அதற்கு பின் சீக்கிரமே ஒரு மரத்தைத் தேர்ந்தெடுத்தோம் – அவரது சுற்று நோட்டத்தில் இருந்த ஒரு ஒற்றை, உன்னதமான, கிட்டத்தட்ட நூறு வயதாகிய சிகப்பு ஓக் மரம். ரிச்சர்ட்ஸனின் ஆய்வுக்கூடத்தின் ஆராய்ச்சியை அணுக இந்த மரத்தை என்னுடைய கதைக் கட்டமைப்புக்காக நான் பயன்படுத்த கூடும். அவர்கள் என்ன கற்றுக் கொண்டிருக்கிறார்கள்? தட்பவெப்பநிலை மாற்றத்தை இந்த காட்டில் என்னால் பார்க்க இயலுமா? அதுவும் இந்த ஒரே மரத்தில்? குடியேறிகள் குறிப்பிடத்தக்க மரங்களை, சாட்சி மரங்கள் என சொல்லப்படும் மரங்களை எல்லைகளையும், மாறும் நிலப்பரப்புகளையும் குறிப்பதற்காகப் பயன்படுத்துவது மாதிரி, இந்த பெரிய ஓக் மாறும் தட்பவெப்பநிலையை பற்றி அறிவிக்குமா?
ஜானுடன் போன நடைப்பயிற்சிகள் வசீகரமாக இருந்தன. அவர் எல்லாவற்றையும் ஐந்து இயலுணர்வுகளுடனும் கவனித்து, சிறு புள்ளிகளால் வரையப்படும் ஓவியம் போல, தன்னுடைய களக் குறிப்புகளால் காட்டின் உருவப்படம் ஒன்றைப் படைத்தார்: மரங்களின் மொட்டுகள் எவ்வளவு கெட்டியாக இருந்தன, அல்லது தணிந்து, வெடித்துத் துளிராய் விரியும் தருணத்தில் உள்ளனவா என்று கவனித்திருந்தார். மரத்தவளைகளின் முதல் கரகரப்பொலி, நிலத்திலிருந்த பனி உருகும் தருணத்தில் மண்ணிலிருந்து எழும் தாதுப்பொருட்களின் வாசனை. முதல் இலைகள் துளிர் விடும் காட்சி, குட்டைகளில் நீர் வடிவதும் மறுபடியும் நிரம்புவதும், ஓடைகளின் பாய்வு மற்றும் காட்டுப்பூக்களின் முதல் மலர்தல். இலையுதிர் காலத்தில் நிறம் மாறும் இலைகள், கருவாலிக்கொட்டை கீழே விழும் போது கேட்கும் ‘மொத்’ என்ற சத்தம், பூக்கள் போலத் தோன்றும் உறைபனி மற்றும் குட்டைகளில் மிதக்கும் பனிக்கட்டிகள், பூர்ச்ச மரப்பட்டையின் அலாதியான கோலக்காய் போன்ற ருசி. இதோ இந்த நிலம்,சேற்றிலிருந்து அங்குள்ள கருப்பு ஈக்கள் வரை விவரச் செழுமையோடும், உன்னிப்பாகவும் கவனிக்கப்பட்டிருக்கிறது. ஒரு தொலை நோக்குக் கருவி, ஆறு அங்குல வரைகோல் மற்றும் காகிதங்களைப் பொருந்திய ஒரு பலகையுடன் மட்டுமே, ஜான், காட்டினில் விடாமல் மறுபடி மறுபடி நடந்து திரிந்து பருவகாலங்களால் ஆன ஆண்டுகளைப் பற்றி விரிவான நாட்குறிப்பைச் சேகரித்து, எண். 2.5 பென்ஸிலால் தன்னுடைய சிறு கையெழுத்தில் நம் கிரகத்திற்கே தாக்கமுள்ள உள்ளூர் நிகழ்வுகளை பதிவு செய்திருக்கிறார். பல பத்தாண்டு காலமாக அவர் சேகரித்த அவதானிப்புகளில் தெளிவாகத் தெரிகிறது – சராசரியாக, வசந்த காலம் சீக்கிரமாக வருகிறது, இலையுதிர் காலம் தாமதமாக வருகிறது. மற்றும் பனிக்காலம் இரண்டு பக்கத்திலிருந்தும் குறுக்கப்பட்டிருக்கிறது.
கானகத்தில் உள்ள எல்லாவற்றிலும் – இளவேனில் காலத்துத் தற்காலிகக் குட்டைகளிலும் நீரூற்றுகளிலும் இருக்கும் நீரின் மட்டத்திலிருந்து, கருப்பு ஈக்கள் கடிக்க ஆரம்பிக்கும் தருணமும், நிலத்தளம் உறைந்து போகும் நேரமும், மேலும் இலைகள் துளிரும் அல்லது உதிரும் நேரம் வரையும்- இந்த மாறுதல்கள் பிரதிபலித்தன. இது ஊகத்திற்கான அல்லது அரசியல் சர்ச்சைக்கான விஷயம் அல்ல; யார் யார் தட்பவெப்பநிலை மாற்றங்களில் ‘நம்பிக்கை’ கொண்டவர்களுக்கும், அது இல்லை என்பாருக்குமிடையே நடக்கும் கருத்தாடல்களாக வெளிப்படும் தலையங்கங்கள் மற்றும் செய்தியறிக்கைகள், மேலும் இந்த தலைப்பை பற்றிய சட்டசபை அறிக்கைகள் போன்றன எல்லாமே தவறாகக் கட்டமைக்கப்படுகின்றன. பருவநிலை, மரங்கள், ஊற்றுக்கள், குட்டைகள், பறவைகள், பூச்சிகள் மற்றும் தவளைகள் சான்றாக நின்று சுட்டும் மாறுதல்கள் எல்லாம் தனிநபர்களின் கருத்துகளை அல்லது நம்பிக்கைகளைச் சார்ந்தவை இல்லை. இது கவனிக்கதக்க மெய்மை. இலைகள் பொய் சொல்வதில்லை, உறைபனி தேர்தலில் நிற்கவில்லை, தவளைகள் நிதி திரட்ட முயல்வதில்லை, மகரந்த சேர்க்கைக்கு உதவும் ஜீவன்கள் பத்திரிகைகளுக்குச் செய்தி அறிக்கை கொடுப்பதில்லை. ஜான் தனது உலாவல்களின் பொழுது சேகரிக்கும் தகவல்கள் தூய்மையான ஒரு சாட்சியின் வாக்குமூலம் – (அந்த சாட்சி) நமது இயற்கை உலகம்.
பருவகாலப் பரவலியல் படிப்புதுறை
பருவகால மாறுதல்களுக்கான நேரக்கணிப்பு மூலம் இயற்கை உலகத்தின் இயக்க நியதிகளைப் புரிந்துகொள்ளுதலுக்கு நீண்ட வரலாறு உண்டு. ‘Phenology’ என்ற ஆங்கில வார்தையின் மூலம் கிரேக்க மொழியில் ‘phaino’, அதாவது ‘தோன்றுதல்’ அல்லது காட்டுதல். இன்னொரு பகுதிக்கான மூலச் சொல் ‘Logos’ என்பதற்குப் ‘பயிலுவது’ என்பது அர்த்தமாகும். Phaino என்ற சொல்லிலிருந்து நாம் ‘Phenomenon’ என்ற அர்த்தத்தையும் பெறுகிறோம். பாரம்பரியமாக ‘phenology’ அதாவது பருவகாலப் பரவலியல் என்றால் இயற்கையில் உயிரியல் நிகழ்வுகள் நேரும் காலங்களின் அமைப்பை ஆராய்வது, மற்றும் இந்த நிகழ்வுகளுக்கும் புவிக்கும், குறிப்பாக பருவகாலத்துடன், உள்ள உறவுமுறையை ஆராய்வது. வானிலை, தாவரவியல், விலங்கியல், உடலியல் மற்றும் மானுடவியல் போல பருவகாலப் பரவலியலும் அறிவியல் சார்ந்த ஒரு தனி படிப்புத் துறை வகை என்று பெல்ஜிய தாவரவியலர் சார்ல்ஸ் மோரன் வாதிட்டார். இவர் தான் முதன் முதலில் ‘phenology’ எனும் சொல்லை 1849’ம் ஆண்டில் பெல்ஜிய ராயல் அகாடமி ஆப் சைன்ஸஸில் ஒரு பொது விரிவுரை ஆற்றுகையில் உபயோகித்தார்.
பருவகாலப் பரவலியல் என்ற சொல் பிறப்பதற்கு வெகு காலம் முன்னரே, ஜான் செய்வது போல, நேரடி பங்கேற்பின் மூலம் விவரச் சேகரிப்பை அடைவது என்பதே வழிமுறையாக இருந்தது, அதுதான் பருவகாலப் பரவலியலின் வேர் ஆதாரம். மிக நீண்ட காலம் தொடர்ந்த பருவகாலப் பரவலியல் பதிவு என்பது, அனேகமாக பொது வருடம் 705ஆம் ஆண்டில், ஜப்பானின் க்யோடோ நகரத்தில், அரசவை வளாகத்தில் செர்ரி மரங்களின் முதல் பூக்களின் மலர்தல் தான். யூரோப்பில் திராட்சை அறுவடைகளைப் பற்றி, பர்கண்டி பகுதியில் ஃப்ரெஞ்சுப் பதிவேடுகள் 1370 ஆம் ஆண்டிலிருந்தே கிட்டுகின்றன, இந்தப் பதிவேடுகளைப் பயன்படுத்தித்தான் விஞ்ஞானிகள், மத்திய காலத்தின் இளவேனில்-கோடைக்காலங்களின் வெப்பநிலையைப் பின் நோக்கிக் கணித்திருக்கின்றனர்.
இங்கிலாந்தில் 1736’ம் ஆண்டில் ராபர்ட் மார்ஷம் தனது ‘இளவேனில் காலத்திற்கான இருபத்தியொரு சான்றுகள்’ என அவர் பெயரிட்டிருந்த ஒரு பதிவுத் தொகுப்பை, நார்ஃபோக்கில் இருக்கும் தன்னுடைய கிராமப்புறப் பண்ணையில் தொடங்கினார். பருவகாலத்திற்குரிய விலங்குகளின் அலைப்புகளைக் கவனித்து வந்தார்: கரகரக்கும் தவளை மற்றும் தேரைகள், பாடும் இறவுப் பருந்துகள், புறாக்கள் மற்றும் வானம்பாடிகள், வருகை தரும் தூக்கணாங்குருவிகள் மற்றும் குயில்கள், மர உச்சியில் கூடு கட்டும் வகைக் காகங்கள். அதே போலப் பலவகைத் தாவரங்களின் நடவடிக்கைகள்- ‘பனித்துளி’ மலர், விண்மீன் வடிவில் மர அனிமோனிக்கள், ‘ஹாதார்ன்’ ஆகியன மலர்வதிலிருந்து, பூச்ச மரம், எல்ம், ஓக், புங்கம் மற்றும் ‘கான்கர்’ மரங்களின் எல்லா வகையான இயக்கங்களையும் கவனித்துப் பதிவு செய்து வந்தார். இந்தப் பதிவு செய்யும் பணியை மார்ஷம் குடும்பத்தின் சந்ததியினர் ஒருவர் பின் ஒருவராக, 1958ஆம் ஆண்டில் மேரி மார்ஷமின் மறைவு வரை, பின்பற்றி வந்தனர்.
பருவகாலப் பரவலியலை, வெகு நாட்கள் முன்பே மைய அறிவியல் கைவிட்டு விட்டது. ஆனால் ஆராய்ச்சியாளர்கள் தட்பவெப்பநிலை மாற்றத்திற்கான அத்தாட்சியை உயிரினங்களின் பருவகாலச் சுழலியக்கத்தில் தேடத்தேட, இப்பொழுது இத்துறை மறுபடி கண்டெடுக்கப்படுகிறது. பழங்காலத்து ஒளிப்படங்கள், பறவைகளைக் கவனிப்பதில் நாட்டமுள்ளோர் குழுமங்கள், மற்றும் தோட்டக்கலைச் சங்கங்களின் பதிவுகள், தவிர, ஓவியம் மற்றும் இலக்கிய வெளிப்பாடுகள் கூட, அவை நடக்கும்போது நுட்பமாக இருக்கும் மாறுதல்கள், காலப்போக்கில் தெளிவாகத் தென்படத் துவங்குவதைக் காட்டுகின்றன.
ஷேக்ஸ்பியர் எழுதிய ஒரு கவிதையில் வருணிக்கப்படும் டாஃபடில் எனும் மலரின், மலரும் தருணம் வியத்தகு வகையில் தள்ளிப் போயிருப்பதால் கவிதையின் இலக்கியச் சட்டகமே இன்று செல்லுபடியாகாது : “தூக்கணாங் குருவி வரத் துணியுமுன் வரும் டாஃபடில், மார்ச் மாதக் காற்றை எதிர்கொள்ளும் எழில்” என்று ஷேக்ஸ்பியர் ‘பனிக்காலத்தின் கதை’ என்ற கவிதையில் எழுதினார். மார்ச். ஜான்யுவரியில் அல்ல. 2015 ஆம் ஆண்டில் சென்ற 50 வருடங்களிலேயே வெப்பம் மிக்க டிஸம்பரை இங்கிலாந்து அனுபவித்ததே, அந்தக் க்ரிஸ்மஸ்ஸின் போதும் அல்ல. ஆனால் த கார்டியன் பத்திரிகை அப்படி டாஃபடில் மலர்ந்ததாகச் செய்தி வெளியிட்டது. இந்த வேகத்தில், ப்ரிட்டனுக்கே உரிய மலரான க்ரிஸ்தவ நோன்புக்கால அல்லி (narcissus pseudonarcissus) என பெயரிடப்பட்ட டாஃபடிலுக்கு – பெப்ருவரி-மார்ச் காலதருணத்தில் மலரும் என எதிர்பார்க்கப்படும் மலருக்கு – வேறு ஒரு புது பெயர் தான் வேண்டும். இயல்பாக, இயற்கை அமைப்பில் தோன்றுகிற விரிசல்களைத் தம் அனுபவத்தாலேயே உணரும் தோட்டக்காரர்கள், நடைப்பயணத்தில் நெடுந்தொலைவு கடப்பவர்கள், எல்லா வகையான திறந்த வெளிப் பொழுதுபோக்களிலும் ஈடுபடும் நபர்கள் ஆகியோருக்கு இது ஏற்கனவே தெரிந்தது தான். இயற்கையின் அழகு வடிவங்களின் காலவரிசை நம்பகத்தன்மையை இழந்து கொண்டு வருகிறது.
இந்தக் கட்டுரையை மொழி பெயர்க்க அனுமதி கொடுத்த லிண்டா மேப்ஸ் அவர்களுக்கு ஹரிதாவின் நன்றி. படங்களைப் பிரசுரிக்க அனுமதி கொடுத்ததற்கு சொல்வனம் நன்றி தெரிவிக்கிறது.
Our thanks to Ms.Linda Mapes for her permission to translate and publish this article which is an excerpt from her book, Witness Tree, published by Bloomsbury in 2017. ISBN 978-1-63286-253-2.
(தொடரும்)