மசூதிக்குப் பின்புறமிருந்து நூற்றியிரண்டாவது வெயில்காலத்தை எதிர்கொள்ளும் அந்தப் பெரிய கட்டடத்தின் முன்பிருந்த அரசமரத்தினடியில் நின்றிருந்தவர்களிடம், நாற்காலியில் அமர்ந்திருந்த ப்ரியா, “பெயர், காலேஜ், என்ன போட்டிக்கு வந்திருக்கீங்கன்னு பதிவு பண்ணிட்டுப் போங்க,”என்றாள்.
“இல்லன்னா பரிசு குடுக்க மாட்டீங்களா?” என்றான் ஊதாச்சட்டையன்.
“எப்படி கரெக்ட்டா சொல்றீங்க?” என்றாள் ப்ரியா.
அவன் ஏதோ சொல்வதற்குள் படிகளில் நின்றிருந்த மனோ, “பாஸ்..இங்க வாங்க,” என்றழைத்தான்.
உள்ளே பாலு, “கவிதையா ?அங்க பாருங்க மென்சன் பண்ணியிருக்காங்க,”என்று சொன்னபடி நடந்து கொண்டிருந்தான். காரைத் தரை, மொத்தமான நீண்ட மரங்களிணைத்து காரை பூசப்பட்ட மேல்தளம். புதிதாய் உள்ளே நுழைந்தவர்களுக்கு வெண்ணிறக் கட்டிடத்தின் ஒலிஔிச் சூழலே எங்கோ வந்ததைப் போல மனதைச் சுழற்றியது .
வெளியில் மாவட்ட அளவிலான இலக்கியப் போட்டிகள் என்ற பதாகையைச் சரியாகக் கட்டும்படி தலைமையாசிரியர் மணியையும், அழகையும் அழைத்தார்.
அருகில் நாற்காலியில் வந்தமர்ந்த மதியிடம், “இங்க ட்ரெய்னியா வந்த இந்த நாலுநாளில், சத்தமில்லாத இந்த காலைநேரப் பள்ளிக்கூடம் நல்லாயிருக்குக்கா,” என்றாள் ப்ரியா.
“அப்படியா.. ஓரமா ஒக்காந்து தூங்கு,” என்றாள் மதி. ப்ரியா முறைத்தபடி வேறுபக்கம் பார்த்தாள்.
“அம்மா செத்ததுக்குப் பிறகு கூட்டத்தோட கூட்டமா இருந்தாத்தான் நல்லாருக்கு ப்ரியா. ஒருமாதிரி இப்படியிருந்தா அழுகை வராப்பில இருக்கு,” என்றாள் மதி.
“……..”தலைமையாசிரியரின் குரல் அமைதியைக் கலைத்தது.
“ஆசிரியப் பயிற்சிக்குன்னு வந்தா இந்த வேலையெல்லாம் சொல்றாங்கன்னு நினைக்காதீங்க. அடுத்த வருசம் எந்தப் பள்ளிக்கு ஆசிரியராப் போனாலும் ஆளில்லாதப்ப எடுத்துச் செய்துதான் ஆகணும் சார்,”என்றார் தலைமையாசிரியர்.
“நீங்க சொல்லுங்க சார் செய்யறோம். நாங்களும் அரசுப் பள்ளியில, கல்லூரியில படிச்சவங்க தான்,” என்றான் மணி. பங்கேற்பாளர்கள் ஒவ்வொருவராக வந்தபடியிருந்தார்கள். பள்ளிஆசிரியர்கள் வந்து சேர்ந்ததும் இவர்கள் அமைதியானார்கள்.
“தலைப்புகள முன்னயே அறிவிச்சாக் கூட்டம் வரும். இங்க வந்து போட்டிக்கு உட்கார்ந்ததும் தலைப்பு சொல்றாங்க. இந்தவருசம் ரொம்பக் குறைவான ஸ்டூடண்ட்ஸ் தான் வந்திருக்காங்க,” என்றார் கணினியாசிரியர்.
“மசமசன்னு இருக்கு சார்,” என்றார் இயற்பியல்ஆசிரியர்.
போட்டிகளுக்கான தலைப்புகளைத் தமிழாசிரியர் அறிவிக்க எழுந்த நேரத்தில் வெளியே சத்தம் கேட்கவும் வாயிலில் நின்ற ப்ரியா வெளியில் போனாள்.
அரசமரத்தடியில் தலையை குனிந்தபடி ஒருவன் நின்றிருந்தான். பசங்களை அழைக்கலாம் என்ற எண்ணத்தை உதறி அவனருகே சென்றாள். சட்டையில் அழுக்குத் தெரிந்தது. சரியாக டக் செய்யாமலிருந்தான். நிமிர்ந்தவனின் முகத்தைச் சிறிது நேரம் பார்த்தவுடன் மலர்ந்து, “சீனியர்!” என்றாள். நிமிர்ந்த அவன் கண்களில் போதையின் கலக்கமிருந்தது.
நாற்காலியைத் தள்ளிப் போட்டு அவனை உட்காரச் சொன்னாள். அவன் தலையாட்டியபடி, “உள்ள போகணும்,” என்றான்.
“சீனியர்..என்னைத் தெரியலயா?” என்றாள்.
உள்ளிருந்து வந்த விளையாட்டுஆசிரியர், “வெளியப் போ. இந்த மாதிரி ஸ்கூலுக்குள்ள வர்ரதுக்கு வெட்கமாயில்ல. படிச்சவன் தானே,” என்றார்.
அவர் குரல் உயர்த்த, இவன் குழறிப் பேச சத்தம் அதிகமானதும் ப்ரியா, “சார் நீங்க போங்க. நான் பாத்துக்கறேன்,” என்றாள்.
முகம் சுருக்கிப் பார்த்த அவரிடம், “இவர் எனக்கு சீனியர் சார்,” என்றதும் அவர், “சரி. இங்கயே நில்லுங்க. இவன் உள்ள வரக்கூடாது,” என்றபடி சென்றார்.
“ப்ரியா தானே நீ…புடவையில அடையாளம் தெரியல,“ என்ற கபிலனைப் பார்த்துப் புன்னகைத்து உள்ளே சென்றாள்.
இரண்டு கோப்பைத் தேநீருடன் வந்த ப்ரியா மரவேரில் அமர்ந்திருந்த கபிலனிடம் ஒரு கோப்பையை நீட்டியபடி அவன் எதிரே மரவேரில் அமர்ந்தாள். அவன் தெளியக் காத்திருந்தாள்.
வெயிலேறும் நேரம். இலைகளின் இடைவெளிவழி ஔிவில்லைகள் இறைந்துகிடந்தன. அதைப் பார்த்துக் கொண்டிருந்த ப்ரியா,
“சீனியர்..இந்த சூழலுக்கு ஒரு கவிதய சொல்லணுன்னா எப்படித் தொடங்கலாம்?” என்றாள்.
“ம்ம்…இறைந்து கிடப்பது ஔி மட்டுமல்ல,”
“அதான் சீனியர். நேரமெடுக்காம அடிக்கணும்,”என்று சிரித்தாள்.
“நீ இங்க வேல செய்யறியா?”
“ட்ரெய்னியா வந்திருக்கேன் சீனியர்.”
“இன்னும் அந்த சொம்பு காலேஜில தான் படிக்கிறியா?” என்று சிரித்தான்.
அவள் முறைத்தபடி, “ரெண்டு வருசம் முன்ன பாத்ததுக்கு தலமுடியல்லாம் கூட பாதியக் காணோம்?”என்றாள்.
“நல்லாப் பாரு. நரை தெரியும்,”என்றான்.
“இருபத்தேழு வயசிலயே அவ்வளவு கவலையா?”
மெளனத்திற்குப் பிறகு, “ஆனா.. இதேமாதிரி இங்க நடந்த போட்டியில, என்னோட கவிதய வாசிச்சுட்டுத் தர்றன்னு கேட்ட அதே சின்னப் பொண்ணுதான் நீ,” என்றான்.
“அதுக்குப் பிறகு நாலுவருசம் ஓடிப் போச்சுல்ல. எப்படி அப்படியே இருக்க முடியும்?”
“உன்ன ஐம்பதுவயசில பாத்தாலும் அப்படித்தான். தோற்றத்தில இல்ல மனுசங்க..”
எதோ சொல்ல வாயெடுத்தவள், “நீங்க சொன்னது சரிதான்,” என்றாள்.
“என்ன?”
“நான் கவிதப் போட்டியில தோத்துப் போன எல்லாமுறையும் நீங்க, உன்னால நல்ல கதைகள் எழுதமுடியுன்னு சொல்லுவீங்கல்ல?”
“ம். எழுதறியா?”
“இருபது ரெக்கார்டு, ஆய்வுக் கட்டுரைங்க, பாடத்திட்டன்னு எழுதவே நேரம் பத்தல..”
“காரணம் சொல்ற..சோம்பேறி.”
“நீங்க மட்டும் என்ன செய்யறீங்க? எந்தக்கூட்டத்தையும் கவனிக்கச் செய்யும் குரல், தடுமாறாமல் விவாதம் செய்யும் பொறுமை..மீண்டும் பார்க்கச் செய்யும் ஆளுமை தானே சீனியர். என் முன்னாடி ஒக்காந்திருக்கறது யார்?”
“அது வந்து என்னன்னா..”
“காரணம் சொல்றீங்க. இதுவும் ஒருவகையில சோம்பல் தான்.”
“ஆமாம்.”
உள்ளே போட்டிகள் நிறைவடைந்து கரவொலிகள் கேட்டுக் கொண்டிருந்தன. கபிலன் எழுந்து சென்று பக்கவாட்டுக் குழாயில் முகம் கழுவி வந்தான்.
“இங்க அடுத்தத் தெருவில்தான் எங்கவீடு..” என்றான் .
“அப்படியா?”
“முன்னாடி அறிவிப்பைப் பார்த்ததும் பழைய ஞாபகத்துல வந்துட்டேன்,” என்று வேறுபக்கம் திரும்பிக் கொண்டான்.
“பழைய நினைவெல்லாம் இருக்கா சீனியர்?” என்றாள்.
“……”
“இதே மரத்தடியில எல்லாப் போட்டியிலயும் கலந்துக்கிட்டவுங்களும் கூட்டமா தயிர்சாதப் பாக்கெட்டோட ஒக்காந்து இருக்கப்ப, நீங்க செய்யணுன்னு சொன்னதெல்லாம் முடிச்சிட்டீங்க இல்லயா? கனவைக் கம்பீரமா சொல்லிட்டாலே செஞ்சுட்டதா அர்த்தம் போல!” என்றாள்.
நிமிர்ந்த அவன்கண்கள் மினுமினுத்தன.
“உங்க உலகத்துல நிக்கமுடியல இல்லயா சீனியர்? அதனால இந்த உலகத்திலயும் தள்ளாடறீங்க..” சிதைந்த சுற்றுசுவரின் வழியே பூனை ஒன்று வந்து பதுங்கி ஓடியது.
மீண்டும் அவளே, “முடியலன்னா தூக்கிப் போட்டுட்டு… வாழ முயற்சி பண்ணுங்க,” என்றாள்.
“முடியாது.”
“ம்.”
“குடும்பமும், சமூகமும் ..வணிக நிறுவனங்களா ப்ரியா?”
“இல்லயாப் பின்ன? நிறுவனங்கள் தான்.”
“சரி தான். ஆனா மனுசனும், அவன் அன்பும் நுகர்பொருளா?”என்றான்.
“இருக்கலாம்,” என்றாள். மீண்டும், “படிக்கறப்ப உங்கள தெரிஞ்சவங்க உங்கள உயரத்தில வச்சிருந்திருக்கலாம். வீதியிலயும் அப்படியா?”
“ம். வேலை, குடும்பம் எதிலயும் ஒருஒட்டாத மனஅலைச்சல். எல்லாம் 0.000 கணக்கு. எனக்குப் பிடிபடல ப்ரியா. எப்பவுமே எல்லாத்துக்கும் தராசுமுள் உண்டுதான் இயற்கை உட்பட…ஆனா இந்த வெயிங் மெசின் வாழ்க்கை எனக்கு குகையில மாட்டிக்கிட்ட மாதிரி இருக்கு.”
“அதுல உருவமா இருக்கறது இதுல அருவமா இருக்கு. ..அவ்வளவுதான்,” என்றாள்.
“அதான் சொல்றேன். இங்க நிகர்மதிப்பே இல்லாத அருவத்துக்கும் மதிப்பில்ல.”
“ஆனா அது இருக்குல்ல சீனியர். அப்படின்னா நிகர் உண்டுல்ல. அந்த அருவத்துக்கு நிகர் வைக்காம இல்லன்னு சொன்னா எப்படி?”
“அது பாயிண்ட் காட்டனுன்னா.. எவ்வளவுதான் வைக்கிறது?”
“தன்னுடையதுன்னு இருக்கிறதெல்லாம் வைக்கலாம்.”
“கசப்புகள் நிகர்பொருள்.”
“இனிப்புகளும் தான்,”என்றாள்.
அவர்களின் கால்களுக்கு கீழே எறும்புகளின் சாரியைப் பார்த்தபடி, “இந்த எறும்புகளுக்கு வானம் தெரிய நியாயமில்ல சீனியர். வானத்தை இதுக்கு புரிய வச்சி என்ன பண்ணப்போறீங்க? இல்ல வாழ்நாள்பூராச் சொன்னாலும் புரியுமா?” என்றாள்.
“ஓடிக்கிட்டே இருக்கும். சேத்துக்கிட்டே இருக்கும்..மழைகாலத்துக்காக..,”என்று சிரித்தான்.
“மழைகாலத்துக்கு நாமளும்தான் சேக்கணும். ஆனா இப்ப இருக்கறதெல்லாம் சந்தை எறும்புகள் சீனியர்,” என்று சிரித்தாள்.
“தன் புத்துக்குள்ள உலகத்தை வைக்கப் புதுஉத்தி பாக்குது. தானில்லாத மழைக் காலத்துக்கும் சேக்க கூட்டமாப் போகுது,” என்றான்.
“அதனாலென்ன?” என்றாள்.
“ஆமா.. அதனால எனக்கென்ன?!”
ப்ரியா சிரித்தாள். அவனும் சேர்ந்து கொண்டான்.
வெளியே வந்த மணி, “எல்லாம் முடிஞ்சிருச்சு. நாமளும் போலாம் ப்ரியா,”என்று அவளின் பையைக் கொடுத்தான்.
பேசிக்கொண்டே அனைவரும் மைதானத்தைக் கடந்து வாயிலை நோக்கி நடந்தார்கள். மீண்டும் வேலையாக அவர்களைத் தலைமையாசிரியர் அழைத்தார். ப்ரியா பையிலிருந்து கனத்த புத்தகத்தை எடுத்து கபிலனிடம் கொடுத்தாள். விரித்துப் பார்த்த அவன் உள்ளிருந்த நூறுரூபாயை அவளிடம் தந்தான்.
ப்ரியா, “புத்தகம் வாங்கன்னு வச்சிருந்தேன்.உங்களுக்குன்னு வந்திருச்சு வச்சுக்கங்க,”என்றாள். புன்னகையுடன் அவன் வாயிலைக் கடந்தான்.
“என்ன பயாலஜி டீச்சர். அங்க என்ன கெமிஸ்ட்ரி?” என்றாள் மதிஅக்கா.
“இது மெக்கட்ரானிக்ஸ் க்கா,” என்றவுடன் அனைவரும் சிரித்தனர்.
“அப்படிப் போடு ப்ரியா. மனுசன் கிட்டப் பேசுனாப் போச்சு, ”என்றான் அழகு.
“முக்கியமான புத்தகம்ன்னு சொன்ன?” என்றான் மணி.
“அதனாலதான் குடுத்தேம்ப்பா,” என்றாள் ப்ரியா.
வேலைகளை முடித்துவிட்டு நண்பர்களோடு காந்தி சிலை கடந்து அமராவதி நிறுத்தம் நோக்கி நடந்தாள்.
மதி அக்கா இவளிடம் திரும்பி,”குடிகாரனுக்குக் காசுகொடுத்தா என்ன பண்ணுவான்?.அங்க பாரு,”என்றாள்.
கபிலன் மதுபானக்கடையிலிருந்து வெளியே தள்ளாடியபடி வந்தான். இடதுகையில் புத்தகத்தை பற்றியிருந்தான். பார்த்துக் கொண்டே கடந்தாள்.
பின்னாலிருந்து மனோ, “ஏய்..அறிவாளி. நீ பேசினா..அவன் மாறிடுவானா?” என்றான்.
ப்ரியா பேசாமல் இடதுகையால் முந்தானையைப் பற்றியபடி நடந்தாள்.
அவளின் இடபுறம் நடந்து கொண்டிருந்த பாலு, “ப்ரியா, இந்தப் பழக்கத்தை அவர் மாத்திக்கறது சிரமம்,”என்றான்.
“ம். ஆனா ஏன் இப்படி ஆகணும்? இப்படி ஆக அவ்வளவு அறிவு தேவையில்லயே!”
“நீ ஏன் இப்படி இருக்க? மணிக்கணக்கா பேசினாலும் மாறாததைப் பேசற?அதுமாதிரி தான்..”என்றான்.
“ம்ம்ம்.”
“என்ன ‘ம்ம்ம்’? நாளைக்குப் பாக்கலாம்,”என்றபடி பேருந்திற்காக ஓடினான்.
வானத்தைப் பார்த்தாள். மழைவராமல் மேகங்கள் போக்குக்காட்டிக் கொண்டிருந்தன. மதி, “நிக்காம நட.உனக்கு என்னதாண்டி பிரச்சனை?” என்றாள்.
“சீனியருக்கு ஒண்ணுமே செய்யமுடியாதாக்கா?”என்றவாறு வலது முதுகிலிருந்த பையைச் சரிசெய்தாள்.
“அதான் தண்ணியடிக்க நூறுரூபாய் மொய்யெழுதிட்டல்ல,”என்று சிரித்தாள் மதி.
“……”
“இங்க பாரு..யாருக்கும் யாரும் பொறுப்பில்ல. வேகமா நடடி,”என்று மதி பின்னாலிருந்து ப்ரியாவைத் தள்ளினாள். வாகனங்கள் நெருங்கிய சாலையைக் கடந்து கொண்டிருந்தார்கள்.
அடுத்தநாள் காலை ப்ரியா மைதானத்தில் பள்ளியிறுதி மாணவர்களின் வகுப்புத்தேர்வுத் தாள்களை வாங்கிவிட்டு, “கிளாஸ்ரூம் போய் ப்ரேயருக்கு மணியடிக்கற வரைக்கும் கத்திக்கிட்ருக்காம மெதுவாப் பேசுங்க,”என்றதும் பிள்ளைகள் ஓங்கிச் சிரிக்கவும், “போய்த் தொலைங்க,” என்று நடந்தாள்.
முன்பு வந்த பிள்ளைகள் வணங்கவும், பதிலுக்கு வணங்கிவிட்டு புன்னகையோடு வந்தவளிடம் அழகு, “இங்க வந்து ஒரு வாரமாச்சும்மா..இன்னும் வணக்கம் சொல்றதுக்கே பறந்துக்கிட்டிருக்காத…பயல்களுக்குத் தெரிஞ்சா நிமிசத்துக்கு ஒரு வணக்கம் போடுவானுங்க,” என்றான்.
வேகமாக வந்த பாலு, “அங்கபாரு யாரு நிக்கிறான்னு,”என்றான்.
வாயில்கதவருகே கபிலன் நின்றிருந்தான்.ப்ரியா கைக்குட்டையால் கழுத்து வியர்வையைத் துடைத்துக் கொண்டாள்.
“முன்னப்பின்ன யோசிக்காம பெரிய ஞானியாட்டம் பேசி எதாவது வம்பில மாட்டிக்கறது,” என்று குரலுயர்த்தினான் பாலு.
“ரொம்ப பேசாத.. நான் சீனியர்க்கிட்ட பேசிக்கறேன்.”
“என்ன நீ…,”என்று பாலு முடிப்பதற்குள், “பேசாதடா,”என்றாள்.
சட்டென்று பிள்ளைகளிருக்கிறார்களா என்று ஒருசுற்றுப் பார்த்துவிட்டு, வாயில் கை வைத்து அழகு சிரித்தபடி, “என்னத்த பண்ணிச் சமாளிக்கறதுன்னு அந்தப் பிள்ளை தடுமாறுது. நீ வேற கடுப்பேத்துனா?”என்றான்.
பாலு, “உண்மையில எனக்கும் பயம் தாண்டா,”என்றான்.
“நானும்கூட வரட்டா,” என்ற மலரைத்தடுத்த மனோ ப்ரியாவுடன் நடந்தான். அழகு அவள் இடதுகையில் ரூபாய்த்தாளைத் திணித்தான்.
உடன்வந்தவனிடம்,“வரவேணாம் மனோ,” என்றபடி வாயிலுக்கு வெளியே சென்றாள்.
“என்ன சீனியர்?”
“புத்தகம் வாங்கன்னு வச்சிருந்த காசு. வேறெதுக்கும் போக வேண்டாம்,” என்று நூறுரூபாய்த்தாளை நீட்டினான்.
“…….”
“நீ கொடுத்த புத்தகம் நல்லா போயிக்கிட்டிருக்கு,”
“ஆமா சீனியர். நல்லாயிருக்கும்.”
“பயந்துட்டல்ல,”என்று சிரித்தான்.
“………” இடது உள்ளங்கையோடு இருந்த தாள் நனைந்து கொண்டிருந்தது.
“இனிமே வரமாட்டேன்,” என்று திரும்பி நடந்து கூட்டத்தோடு கலந்தான். வேம்பிலிருந்த அணில் கிச்கிச் என்றது எங்கோ வெகுதூரத்திலெனக் கேட்டது.
“குட் மானிங் டீச்சர்,” என்ற குழந்தைக் குரலில் கலைந்து, “எத்தனாவது படிக்கிற?” என்று தோளில் கைபோட்டபடி ப்ரியா பள்ளியினுள் நுழைந்தாள்.
***