கென்யா…இனக்குழு அரசியல் சூழலில் இன்னுமொரு ஜனாதிபதி தேர்தல்

கென்யாவின் ஜனாதிபதி தேர்தல் நாளான 2017 ஆகஸ்ட் எட்டு, எவ்வித அசம்பாவிதங்களின்றி அமைதியாகவே கடந்தது. ஆனால் பெரும்பாலும் வன்முறைகள் துவங்குவது முடிவுகள் அறிவிக்கப்பட ஆரம்பிக்கும்போதுதான். மக்கள் பதட்டத்துடனேதான் இருந்தார்கள். முதல் சுற்று எண்ணிக்கையில் உகுரு முன்னிலை என்ற செய்தி வந்ததுமே, ரய்லா செய்தியாளர்களைக் கூட்டி “இது ஆளும் கட்சியின் மோசடி; அவர்கள் நாட்டின் எலக்டோரல் கமிஸனின் கம்ப்யூட்டர்களை ஹேக் செய்துவிட்டார்கள்” என்று பேட்டி கொடுத்தார். அவரின் இனக்குழுவான லூவோக்கள் அதிகம் வசிக்கும் கிஸி பகுதியில் 9ம் தேதி காலை டயர்களைக் கொளுத்துவதையும், கடைகளைச் சூறையாடுவதையும் ஆரம்பித்தார்கள் சில வன்முறை ஆசாமிகள். வாட்ஸப்பில் புகையும் போட்டோக்கள் வர ஆரம்பித்தன.

கென்யா முழுதும் வானிலை மெல்லிய பதட்டம் கொண்டிருந்தது கடந்த நாலைந்து மாதங்களாகவே. ஆகஸ்ட் 8ம் தேதி ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே இருதரப்புகளும் தங்கள் தயாரிப்புகளை முடுக்கிவிடத் தொடங்கின. 2013 தேர்தல் எதுவும் கலவரங்கள் இன்றி அமைதியாகவே முடிந்தது. எதிர்தரப்பின் ரய்லா அமைதியாக இருந்ததே காரணம். ஆனால் இம்முறை அப்படி இருக்கவில்லை. ஆளும் உகுரு கென்யாட்டா இரண்டாம் முறை பதவியை தக்கவைத்துக்கொள்ள பிரயத்தனம் மேற்கொண்டார். ரய்லா இம்முறை விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்று முடிவு செய்திருந்தார். ஒருவருடம் முன்பிருந்தே அவர் பேசத்தொடங்கி விட்டார். பாவம் மக்கள்தான் பதட்டம் கொள்ளத் தொடங்கினர். 2007 தேர்தல் முடிவின் பின்னான வன்முறையும், கலவரங்களும், உயிரிழப்புகளும் ஏற்படுத்திய வடுக்கள் இன்னும் அவர்கள் மனங்களில் பதிந்திருந்தன. (இவ்வழக்கு இன்னும் சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்தில் (ICC) நிலுவையில் உள்ளது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ஆறு முக்கியக் குற்றவாளிகளில் இருவர் இப்போதைய ஜனாதிபதி உகுரு (2007-ல் உதவி பிரதம் மந்திரி மற்றும் நிதியமைச்சர்) மற்றும் ரூடோ (2007-ல் உயர்கல்வி மற்றும் அறிவியல் தொழில்நுட்ப துறை அமைச்சர்)).

ஆகஸ்ட் 8-க்கு முந்தைய​ இரண்டு வாரங்களுக்கு பண்ணையை விட்டு வெளியில் செல்வதில்லை என்று முடிவெடுத்திருந்தேன்.​ போனில் பாலாவும் அதையே சொன்னார். உணவிற்குத் தேவையான அனைத்தும் வாங்கி வைத்திருந்தேன்​. பேலியோவில் இருப்பதால் மிகச் சுலபமாயிருந்தது; அதிகம் ஒன்றும் தேவைப்படவில்லை. அப்படியே அவசர உணவுத் தேவையென்றாலும், உள்ளேயே கோழிப் பண்ணை இருக்கிறது; முட்டைகளை வைத்தே பலநாட்கள் சமாளிக்கலாம் என்று பாலாவிடம் சொல்லியிருந்தேன்​.

இங்கு மலர்ப் பண்ணைகள் இரண்டு மாதங்கள் முன்பே ஆகஸ்ட் மாதத்தை எப்படி சமாளிக்கலாம் என்று திட்டங்கள் தீட்டத் தொடங்கியிருந்தன​. ஏனெனில் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வந்து தங்கி வேலைசெய்யும் வேறு இனக்குழுக்கள் தேர்தலின்போது அவரவர்கள் பகுதிகளுக்கு சென்றுவிடுவார்கள். பணியாளர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறையும். ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே அவர்களின் சொந்தப் பகுதிக்கு நகர்வு தொடங்கிவிட்டது. தேர்தலை ஒட்டிய கடைசி​ நான்கு நாட்களுக்கு நகர்வு அதிகமிருந்தது​. பயணத்திற்கு மடாடுக்களில் (சிறு பேருந்து) இடம் கிடைப்பது கடினம். அவர்கள் நிர்ணயிக்கும் அதிக பயணக்கட்டணத்தில்தான் பயணப்பட வேண்டும்.

நகுருவும், நைவாஷாவும் 2007 கலவரத்தில் பாதிக்கப்பட்ட இடங்கள். தற்போது என் கீழ் பணிபுரியும் ஜார்ஜ் 2007 வன்முறையில் தன் முதல் மனைவியையும், தங்கையையும் பறிகொடுத்தவர். மலர்ப் பண்ணைகளில் வேலை செய்யும் இந்திய மேலாளர்கள் கணிசமானோர் விடுப்பு எடுத்துக்கொண்டு இந்தியா சென்றுவிட்டனர். கடைகள் நடத்தும் குஜராத்திகள் ஒரு வாரம் ​கடைகளை மூடிவிட்டார்கள்​. நகுருவில் 70 வருடங்களாக ஆயில் பிஸினஸூம், டிம்பர் பிஸினஸூம் செய்யும் மோடி சந்த்திடம் (அவர்கள் வீட்டின் பின் போர்ஷனில்தான் மல்லிகாவும், இயலும் இங்கிருக்கும்போது தங்கியிருந்தார்கள்) மூன்று ​வாரங்கள் முன்னால் பேசிக்கொண்டிருந்தபோது, தேர்தல் சமயத்தின்போது எல்லாவற்றையும் மூடிவிட்டு நைரோபி உறவினர்கள் வீட்டிற்கு சென்றுவிடப் போவதாக சொல்லியிருந்தார்​.

பெரும்பாலான மலர்ப் பன்ணைகள் இருக்கும் பகுதி கிகுயு இனக் குழுப்பகுதி. இங்கு ஒரு இனக்குழு அதிகமிருக்கும் பகுதியில், மற்றொரு இனக் குழுவின் யாரும் வந்து கடையோ தொழிலோ சொந்தமாக நடத்திவிட முடியாது. இந்தியர்கள் நடத்தும் பண்ணைகளில் வேலைசெய்து கொள்ளலாம். ஆனால் அப்பண்ணைகளிலும், அந்நிலப் பகுதிக்கான இனக்குழுவிடம் கவனமாக தகராறில்லாமல் இருந்துகொள்ளவேண்டும். அதிலும் கிகுயுக்கள் என்றால், மற்ற இனக் குழுக்களிடம் கொஞ்சம் பயம் இருக்கிறது.

​பதவியிலிருக்கும்​ ஜனாதிபதி உகுரு ஒரு கிகுயு. உகுருவின் அப்பா ஜோமோதான் கென்யாவின் முதல் ஜனாதிபதி. கிகுயுக்கள் இங்கு சதவிகிதத்தில் அதிகம். மற்ற இனக்குழுக்கள் கிகுயுக்களைப் பற்றிச் சொல்லும்பொழுது “சர்வ சாதாரணமாக தலை கொய்வதில் தயக்கமில்லாதவர்கள்” என்பார்கள். உண்மைதான். இங்கு முதலில் நான் பணிபுரிந்த பண்ணையில், நான் சேருவதற்கு முன் நடந்த ஒரு சம்பவத்தை சொன்னார்கள். ஒரு பசுங்குடிலின் சூப்பர்வைசர் வேறு இனக்குழு. அப்பெண்ணின் கீழ் அக்குடிலில் வேலை செய்யும் மற்றொரு பணிப்பெண் கிகுயு. வேலை விஷயமாக கிகுயு பெண்ணிற்கு அழுத்தம் கொடுத்திருக்கிறார் அந்த வேற்றின சூப்பர்வைஸர். அக் கிகுயு பெண்ணின் ஆண் நண்பனிடத்திலிருந்து அந்த சூப்பர்வைஸருக்கு மிரட்டல் வந்திருக்கிறது. ஆனாலும் பணியிடத்தில், அந்த கிகுயு பெண்ணிற்கு சூப்பர்வைஸரிடமிருந்து தொந்தரவு தொடரவே, ஓரிரவில் அந்த சூப்பர்வைஸரின் கழுத்தை அறுத்து பண்ணைக்கு வெளியில் ஓடும் கால்வாயில் வீசிவிட்டார்கள்!

இப்போது இரண்டாம் முறையாக பதவிக்கு போட்டியி​ட்டார்​ கிகுயு இனத்தின் உகுரு. களஞ்சியன் இனத்தின் ரூடோவின் ஆதரவைக் கோரியிருந்தார்​. எதிரில் லூவோ இனத்தைச் சேர்ந்த ரய்லா. ரய்லா, கம்பா இனத்தின் முஸ்யோகாவோடு கூட்டு சேர்ந்திருந்தார்​. தேர்தல் முன் கணிப்புகள் ரய்லா வெற்றி பெறுவதற்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்தன​. இதுதான் சூழலை பரபரப்புள்ளாக்கியிருந்தது​. 2007-ன் அதே சூழல். 2007-ல் தேர்தல் முடிவுகளில் எதிர்தரப்பு வெற்றிபெற்றவுடன் ஆளும் தரப்பு தாங்கமுடியாமல், எல்லாவிதமான சாம பேத தண்டங்களை உபயோகித்து தாங்கள்தான் வெற்றி பெற்றதாக அறிவிக்க வைத்தார்கள். கிகுயு இனத்தின் கிபாகி பதவியேற்றதும் கோபமடைந்த ரய்லா இனக்குழு ஒரு கிராம சர்ச்சில் கிகுயு இனத்தின் பெண்கள், குழந்தைகள் உட்பட 50 பேரை உள்ளே வைத்து பூட்டி உயிரோடு தீ வைத்தார்கள். அதன்பின் நடந்ததெல்லாம் கென்யாவின் ரத்த சரித்திரம். எல்லா பெரும் நகரங்களிலும், கிராமங்களிலும் மக்கள் கொத்து கொத்தாக கொலை செய்யப்பட்டார்கள். ஐ.நா.வின் கோஃபி அன்னன் வந்ததும்தான், இரு தரப்புகளுமே பேச்சு வார்த்தைக்கு சம்மதித்தன.

இந்த ஆண்டும்​ உயிர்க் கொலைகள் ​ஜூலையில் ​துவங்கியிருந்தன​. ஜூலை இறுதியில், ரூடோவின் வீட்டினுள் துப்பாக்கியுடன் நுழைந்திருக்கிறான் ஒருவன். நல்லவேளை வீட்டில் ரூடோவும் அவர் குடும்பமும் இல்லை. அங்கிருக்கும் காவலாளியை பிணைக் கைதியாக பிடித்துக்கொண்டு மிரட்டிக்கொண்டிருந்தான். கடைசியில் அவனை சுட்டுக் கொன்றார்கள். பிணைக் கைதியை அவன் கொன்றுவிட்டான்.

ஒருமாதம் முன்பு, ஜனாதிபதியின் முதன்மை பாதுகாப்பு அதிகாரியாய் இருந்தவர், முதல்நாள் ஜனாதிபதியின் ஒரு நிகழ்வில் பங்கெடுத்துவிட்டு வீட்டிற்கு சென்றவர், மறுநாள் காலையில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். ஜூலை 27-ல், “இண்டிபெண்டண்ட் எலக்டோரல் அண்ட் பவுண்டரீஸ் கமிஸன்”-ன் (IEBC) இன்ஃபர்மேஷன், கம்யூனிகேஷன் அண்ட் டெக்னாலஜி பிரிவின் தலைவர் ம்சாண்டோ ஒரு பெண்ணுடன் சேர்த்து கொல்லப்பட்டார். கொன்றது ஆளும் தரப்பு என்றது எதிர்தரப்பு. இருக்கலாம்; தோல்வி பயத்தில் எதைச் செய்யவும் தயாராகிக் கொண்டிருந்தது​ ஆளும் உகுருவின் கட்சி.

​தேர்தலுக்கு முந்தைய நாள் ​எங்கள் பண்ணையின் ஏரியா சீஃப்பை அழைத்து, எங்களின் பணியாளர்களிடம் பேசச் செய்தோம். இரண்டு/மூன்று நாட்களுக்கு பண்ணையின் காவலாளர்களை அதிகப்படுத்தியிருந்தோம்​. பண்ணை வெளி எல்லையைச் சுற்றி ரோந்தையும் அதிகமாக்கியிருந்தோம். தேவையென்றால் இரண்டு/மூன்று லோக்கல் போலீஸை அனுப்பி வைப்பதாய் சொல்லியிருந்தார் ஏரியா சீஃப். அவசியம் ஏற்படவில்லை. பண்ணை பசுங்குடில்களில் கொய்மலர்களை அறுவடை செய்யாமல் ஒருநாள் கூட விடமுடியாதென்பதால், அறுவடைக்கு மட்டும் குறைந்த அளவு பணியாளர்களை அழைத்து வேலை முடித்து பதினோரு மணிக்கு அனுப்பி வைத்தோம்.

இங்கு ஓட்டளிக்கும் நேரம் காலை ஆறிலிருந்து மாலை ஐந்துவரை.​ ஐந்துமணிக்குப் பிறகும், ஓட்டளிக்கும் இடங்களில் மக்கள் அதிகமிருந்தால், நேரம் நீட்டிக்கப்படும். அப்படியும் சில இடங்களில் ஓட்டளிக்க முடியவில்லை என்று மக்கள் புகார் செய்ததாக செய்தி வந்தது. கென்யாவின் மொத்த பதிவுசெய்த வாக்காளர்கள் கிட்டத்தட்ட 19.7 மில்லியன் (2016 சட்டமன்ற தேர்தலில் நம் தமிழ்நாட்டில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கையே 42 மில்லியனுக்கும் அதிகம்) . வெற்றி பெறுவதற்கு தேசிய அளவில் 50%-ற்கும் அதிகமான ஓட்டுக்களும், கவுண்டிகளில் (மொத்தம் 24 கவுண்டிகள்) ஒவ்வொன்றிலும் குறைந்தபட்சம் 25% ஓட்டுக்களும் பெறவேண்டும்.

இருபக்கமும் ஒருவரைப் பற்றி மற்றொருவர் “அவர்கள் இனக்குழு அரசியல் செய்கிறார்கள்; நாங்கள் விரும்புவதும் அளிக்கப் போவதும் அமைதியான கென்யாவை!” என்று சொல்லிக்கொண்டதுதான் நகைச்சுவை.

இருதரப்புமே கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை தங்கள் தேர்தல் அறிக்கையில் அளித்திருந்தது. ரய்லா வாக்குரிமை கொண்ட இந்திய சமூகத்தை குறிவைத்து அவர்கள் ஆட்சி அமைந்தால், தீபாவளிக்கு அரசு விடுமுறை அறிவிப்பதாக சொல்லியிருந்தார். இந்திய வாக்குகள் இருதரப்புக்கும் பிளந்தே காணப்பட்டது. இந்திய தொழில் சமூகம் (பெரும்பாலும் குஜராத்திகள்) கடந்த மூன்று ஆண்டுகளாகவே, கென்ய அரசின் அதீத சீன ஆதரவு நிலை கண்டு முகச் சுளிப்புடன்தான் இருந்தது. ஆனால் புதிய எதிர்தரப்பையும் முழுதுமாக நம்ப முடியவில்லை.

ஒருவழியாக ஆகஸ்ட் 11 மாலை IEBC தேர்தல் முடிவுகளை அறிவித்தது. முடிவுகளை அறிவித்த IEBC-ன் அலுவலர் பயத்துடனேயே முடிவுகளை வாசித்தார்; பதட்டத்துடனேயே இருந்தார்; முடிப்பதற்குள் மூன்று/நான்கு முறை தண்ணீர் குடித்தார். நான், எங்கே அவர் மயக்கம் போட்டு விழுந்துவிடுவாரோ என்று நினைத்தேன்.

பத்து விழுக்காடு வித்தியாசத்தில் உகுருவின் ஜூபிலி பார்ட்டி வெற்றிபெற்றது. உகுரு ஜனாதிபதியாக இரண்டாம் முறை பதவியேற்கப்போகிறார். முடிவுகள் அறிவிக்கப்பட்டதும், உகுரு, தொலைக்காட்சி ஊடகத்தில், மக்களுக்காக ஐந்து நிமிடங்கள் சிறந்த பேச்சொன்றை நிகழ்த்தினார்.

எதிர்தரப்பு இன்னும் முழுமையாய் தன் தோல்வியை ஒப்புக் கொள்ளவில்லை. ஆகஸ்ட் எட்டு மாலையிலிருந்தே, ரய்லா “தேர்தல் முடிவுகளில் முறைகேடுகள் நடந்துள்ளன” என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார். அவரின் ஆதரவாளர்கள் சில இடங்களில் வன்முறையிலும் ஈடுபட்டனர். காமன்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பிலிருந்து வந்திருந்த தேர்தல் கண்காணிப்பு குழுவின் தலைவர் மகாமா, ஐரோப்பிய கூட்டமைப்பின் தேர்தல் கண்காணிப்பு குழு, கிழக்கு ஆப்பிரிக்க சமூகத்திலிருந்து வந்திருந்த குழுவின் தலைவர் ருகுமாயோ, ஆப்பிரிக்க யூனியன் குழுவிற்கு தலைமை வகித்த தபோ ம்பேகி, கார்ட்டர் செண்டர் குழுவின் தலைவர் கெர்ரி அனைவரும் தேர்தல் நியாயமாகவே நடந்ததென்றும், தோல்வியை பெருந்தன்மையாக ஒப்புக்கொள்ளுமாரும் ரய்லா தரப்பிடம் தொடர்ந்து கடந்த நான்கைந்து நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தினர். கெர்ரி, தேர்தல் தொடர்பாக ஏதேனும் முறைகேடுகள் நடந்திருந்தால் அவை நீதிமன்றத்தின் மூலம் விசாரிக்கப்படும் என்றார்.

2007 பொதுத் தேர்தலை ஒப்புநோக்கும்பொழுது, 2017 தேர்தல் சூழல் எவ்வளவோ ஆரோக்யமடைந்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். எதிர்காலத்தில் இனக்குழு அடையாளங்களை உதறித் தள்ளிய, முற்போக்கு அரசியல் தலைமைகள் உருவாகி எழுந்து வரவேண்டும். வளங்களும், எண்ணற்ற மனித ஆற்றலும், சக்தியும், வலிமையான பெண்மை சமூகமும் கொண்ட இந்நாடு இன்னும் முன்னேறிய இடத்திற்கு தகுதியானது.

One Reply to “கென்யா…இனக்குழு அரசியல் சூழலில் இன்னுமொரு ஜனாதிபதி தேர்தல்”

  1. தேர்தல் முடிவை எதிர்த்து, எதிர்தரப்பின் ரய்லா கென்ய சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். நேற்று காலை பதினோரு மணிக்கு தீர்ப்பு வெளியானது; ரய்லாவுக்கு சாதகமாக!. ஜனாதிபதி பதவிக்கு மட்டும் மறுபடியும் 60 நாட்களுக்குள் மறுதேர்தல் நடத்த கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரய்லாவின் ஆதரவாளர்கள், அவர்கள் அதிக எண்ணிக்கையுள்ள பகுதிகளில், மெல்லிய(?) வன்முறையோடு தீர்ப்பை கொண்டாடினார்கள்.

    நமக்குத்தான் “மறுபடியும் ஆரம்பத்திலிருந்தா?” என்றிருக்கிறது.

    -வெங்கி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.