ஆரோக்கியத்திலும் நோயிலும் குடல் நுண்ணுயிர் சமூகத்தின் பங்கு

Intestinal Bacteria in Health & Disase:

வெகு காலமாக நுண்ணுயிர்களை நுண்ணோக்கியின் மூலமும், ஒவ்வொரு வகையையும் தனித்தனியாக ஊட்டத்தட்டுகளில் வளர்ப்பதின் மூலமுமே ஆயவும் அறியவும் முடிந்தது. ஆனால், சமீபத்தியத் தொழில் நுட்ப முன்னேற்றங்களால், நம் குடலினுள்ளே குடி கொண்டுள்ள நுண்ணுயிர்களின் மரபணுக்களையும், அவற்றின் வடிவமைப்புகளையும், செயல் வேறுபாடுகளையும் எளிதாக அறிய முடிந்துள்ளது. இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட சுற்றுச்சுழலில் சேர்ந்து வசிக்கும் நுண்ணுயிர்களையும் (மைக்ரோபயோட்டா) அவைகளின் மரபணு அமைப்புகளையும் (மைக்ரோபயோம்) ஆய்வது சுலபமாகியுள்ளது. இவை தனித்து வாழ்வதில்லை. நுண்ணுயிர் சமூகங்கள், மனித சமூகத்தைப் போலவே மிகவும் சிக்கலான உறவோடு ஊடாடும் சமூகக் கூட்டங்களாகவே அனைத்து உயிர்களிலும் இயங்குகின்றன.

மனிதர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. மனித உடலில் 9 பாகம் நுண்ணுயிர் உயிரணுக்களும், மனித உயிரணுக்கள் ஒரு பாகமாகவும் உள்ளது என்று 1970லிருந்து 2014 வரை சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் போன வருடம் நுண்ணுயிர்களின் உயிரணுக்கள் 40 ட்ரில்லியன் மனித உயிரணுக்கள் 30 ட்ரில்லியன் என்று இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த வெய்ஸ்மேன் கல்வி நிறுவனம் கணித்துள்ளது. அதாவது 10:1 என்ற விகிதம் தவறு, 1.3:1 என்ற விகிதமே சரி என்று கூறுகிறது இந்த ஆய்வு.

பில்லியன் வருடங்களுக்கு மேல் உள்ள நெருங்கிய தொடர்பினால் நம் குடலில் உள்ள நுண்ணுயிர்கள் நோய்களைத் தடுக்கும் உபகரணங்களை வளப்படுத்துவதிலும், புதிய முறைகளைக் கற்பிப்பதிலும் முக்கிய பங்கேற்கின்றன. அது மட்டுமல்லாமல், நோய்க்கிருமிகளை அண்ட விடாமல் தடுத்தல், குடலின் நாளமில்லாச் சுரப்பி வேலைகள், நரம்புகளிருந்து செல்லும் சமிக்கைகள், எலும்பின் வலு, நம் உடல் சக்தித் தேவையில் பத்து சதவிகிதம், வைட்டமின் மற்றும் நரம்புகளிருந்து செயதிகளை எடுத்துச்செல்லும் பொருட்களின் உற்பத்தி, பித்த உப்பை சிதைத்தல், உண்ணும் மருந்துகளை மாற்றுதல், வெளியிலிருந்து வரும் நச்சுகளை முறியடித்தல் போன்ற பல முக்கிய காரியங்களில் பெரும் பங்கு கொள்கின்றன.

சமீப காலம் வரை கர்ப்பப்பை கிருமியற்றதாகக் கருதப்பட்டது. ஆனால் சமீபத்திய மரபணு ஆய்வுகள் மூலம் நஞ்சுக் கொடியிலும்(ப்ளசெண்டா), கருசூழ் திரவம் (அம்னியாட்டிக் ஃப்ளுயிட்) சிசுவின் முதற் மலக்கழிவு (மீகோனியம்) ஆகிய அனைத்திலும் நுண்ணுயிர்   கிருமிச் சமூகங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் இயற்கைப் பிரசவக் குழந்தைகளின் நுண்ணுயிர் சமூகம் 12 மாதங்கள் வரை அவர்களது தாய்மார்களின் குடலிலும், யோனியிலும் உள்ள நுண்ணுயிர் சமூகத்தையே ஒத்திருக்கிறது.

தாய்ப்பாலின் வழியாகவும் முதற் சொட்டிலிருந்தே இந்த நுண்ணுயிர்க் கிருமிகள் குழந்தையின் குடலில் அடைக்கலமாகின்றன. எவ்வாறு இந்த நுண்ணுயிர்க் கிருமிகள் தாய்ப்பாலை வந்தடைகின்றன என்பது இன்னும் தெளிவாகவில்லை. இத்தாய்ப்பாலில் இன்னொரு முக்கியமான அம்சம் என்னெவென்றால் இதில் கலந்துள்ள ஆலிகோசாக்கரைட் எனும் நம்மால் செரிக்க முடியாத சர்க்கரையாகும். வெகு நாட்கள் வரை குழந்தைக்கு தேவையில்லாத இச்சர்க்கரை தாய்ப்பாலில்எதற்காக உள்ளது என்ற கேள்விக்குச் சமீபத்தில்தான் சரியான விடை கிடைத்தது. இதுதான் குழந்தையின் குடலைச் சேரும் நுண்ணுயிர்களுக்கு முக்கிய உணவாகும். தாய்ப்பாலில் குழந்தை வளர்ப்புக்கு வேண்டிய எல்லா பொருட்களும் அடங்கியுள்ளதோடு மட்டுமல்லாமல் நோயின்றி வளர்வதற்கு வேண்டிய நுண்ணுயிர்க் கிருமிகளும் (ப்ரோபயாட்டிக்ஸ்) அவற்றுக்குத் தேவையான உணவும் (ப்ரீபயாட்டிக்ஸ்) அடங்கியுள்ளது என்பதை நினைத்தால் இயற்கை அன்னைக்குத் தலை வணங்காமல் இருக்க இயலவில்லை. ஒரு பெரியவர் சொன்ன தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை விளக்கும் சமஸ்க்ருத வசனம் “இத்தாய்ப்பாலை உனக்கு புகட்டுவதின் மூலம் நம் வம்சம் தொடரட்டும்” என்பதின் முழுப் பொருள் இப்போதுதான் நன்கு விளங்குகிறது. பொடிப்பால் (பவுடர் பால்) அல்லது வேதி அமைப்புப் பால் ((Formula milk) கொடுக்கப்படும் குழந்தைகளின் நுண்ணுயிர் சேர்க்கை வேறுபட்டதாகவும் நோய்க்கிருமிகளை எதிர்க்கும் சக்தி குறைந்ததாகவும் உள்ளது.   சரியான நுண்ணுயிர்க் கிருமிகளை இப்பாலில் சேர்த்தாலும் தாய்ப்பாலிலுள்ள சத்துக்கள் இல்லாததினால் அதற்கிணையாவதில்லை.

தாய்ப்பால் அருந்துவது நின்றவுடன் நுண்ணுயிர்க் கிருமி வகைகளும் மாறுகின்றன. இந்த மாற்றம் சீராக நேரா விட்டாலோ, அல்லது கோளாறுகள் ஏற்பட்டாலோ, நோயெதிர் அமைப்பு (இம்யூன் சிஸ்டம்) பாதிக்கப்பட்டு பிற்காலத்தில் இவ்வமைப்பே விளைவிக்கும் நோய்கள்  (ஆட்டோ இம்யூன் வியாதிகள்) உண்டாவதற்குக் காரணமாகிறது.  குழந்தையின் உடல் நலனைப் பாதுகாக்கும் இயற்கையாகக் குடலில் வாழும் இந்த நுண்ணுயிர்களுக்கு இடையூறுகளாவன:  வயிற்றைக் கீறி சிசுவை எடுத்தல் (சிசேரியன் செக்க்ஷன்), வேதி அமைப்புப் பால், கிருமிக் கொல்லிகள் (ஆன்ட்டிபயாட்டிக்ஸ்) ஆகிய மூன்றேயாகும். கர்ப்பப் பையிலிருந்து நேராக வெளியே எடுக்கப்படும் குழந்தைகளின் குடற்கிருமிகள் தோலின் மேல் உள்ள கிருமிகளாயிருப்பதால் ஆஸ்த்மா, உடற் கனம் போன்ற பிற்கால விளைவுகள் இக்குழந்தைகளிடம் அதிகமாகக் காணப்படுகிறது.  இக்குழந்தைகளிடம் இதைத் தவிர்க்கத் தற்போதைய சிறந்த நிவாரணம் தாய்ப்பாலைத் தவிர வேறெதையும் 6 முதல் 12 மாதங்கள் வரை உபயோகிக்காமலிருப்பதுதான்.

குழந்தைகளை விடுத்து, பெரியவர்களை பார்ப்போம். நம்முடைய உணவுப் பழக்கங்கள்தான் நம் குடற் நுண்ணுயிர்களின் சமூகக் கூட்டங்களை நிர்ணயிக்கின்றன. இறைச்சியுணவு உண்பவர்களின் குடலில் பித்த நீரைச் சீரணிக்கும் சக்தி படைத்த கிருமி சமூகங்களின் அளவு அதிகரிப்பதால், குடல் வீக்க நோய்கள் ஏற்படும் வாய்ப்புஅதிகரிக்கிறது. மேலும், உணவு வகைகளினால் ஏற்படும் ரத்த மாற்றங்கள், குடல் நுண்ணுயிர் சமூகங்களைப் பொறுத்தே உள்ளன. உதாரணமாக, தித்திப்பு பண்டங்களை உண்பதினால் ரத்தத்தில் அதிகரிக்கும் சர்க்கரையின் அளவு நம் குடல் நுண்ணுயிர் சமூகங்களை பொறுத்தே உள்ளது. ஆகவே சர்க்கரையை அதிகரிக்காத தித்திப்புப் பண்டங்கள் எவையென்று அறிந்து அவ்வகைகளை உணவில் சேர்க்க இயலும்.  வீட்டுப் புழுதியினால் இருமல், தும்மல், சளி போன்ற தொல்லைகளால் அவதிப்படும் குடும்பத்தினருடைய வீட்டுப் புழுதியில் உள்ள நுண்ணுயிர்க் கிருமிகள் புழுதியினால் பாதிக்கப்படாத வீட்டினரின் நுண்ணுயிர்க் கிருமிகளிருந்து வேறுபட்டதாக உள்ளது. இந்த நற்கிருமிகள் புழுதியினால் ஏற்படும் தொல்லைகளிருந்து காப்பாற்றும் சக்தியை கொண்டுள்ளன என்பது சுண்டெலிகளின் மீது நடத்திய பரிசோதனைகளின் மூலம் தெரிய வந்துள்ளது. வாரம் ஒரு முறை தடுப்பூசி (அல்ர்ஜி ஷாட்ஸ்) போடுவது நின்று இந்த நுண்ணுயிர்களை உறை மாத்திரைகளாக (காப்சூல்ஸ்) விழுங்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்றே தோன்றுகிறது.

ஆட்டிஸம், ஆஸ்த்மா, ரத்தக்குழாய் கொழுப்படைப்பு (அத்தரோஸ்க்லரோசிஸ்) போன்ற நீடித்த நோயுடையோரின் குடல் நுண்ணுயிர்கள் வேறுபட்டதாக (டிஸ்பயோசிஸ்) இருந்தாலும் இது காரணமா அல்லது வெறும் தொடர்பா என்பது இன்னும் தெளிவாகவில்லை. உடற்கொழுப்பு (ஒபீசிட்டி), குழந்தைப் பருவ ஆஸ்த்மா, உடல் எடையைக் குறைப்பதற்காகச் செய்யப்படும் அறுவை சிகிச்சைக்குப் (பெரியாட்ரிக் சர்ஜரி) பின்னர் ஏற்படும் அதிகப்படியான எடைக் குறைவு, பிரசவத்திற்கு முன் ஏற்படும் இன்சுலினின் செயற் தடுப்பு (ரெசிஸ்டன்ஸ்) முதலானவைகளுக்கு நுண்ணுயிர்ச் சமூக மாற்றம் காரணமாகச் சொல்லப்படுகிறது.

வியாதிகளுக்கு இலக்காக்கும் மரபணு (ஜெனெடிக் ஸஸ்ஸப்டிபிலிட்டி) உடையவர்களின் தவறான உணவுப் பழக்கம் போன்ற காரணங்களினால் குடலில் ஏற்படும் நுண்ணுயிர் சமூக மாற்றங்கள் நீடித்த வியாதிகளை உண்டு பண்ணுகின்றன என்பது ஆராய்ச்சியாளர்களின் பொதுவான கருத்து.  மெலிந்த உடம்புடையவரிடமிருந்து கனத்த உடம்பையும் இன்சுலின் வீர்ய வீக்கமும் உள்ளவர்களுக்கு மலமாற்றம் (fecal transplant) செய்வதின் மூலம் இன்சுலின் வீர்யத்தை உயர்வுபடுத்த முடிந்துள்ளது

சரியான குடல் நுண்ணுயிர்க் கிருமிகளை உட்கொள்ளுவதின் மூலம் நோய்களைக் குணப்படுத்தவும், தடுப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளன. கிருமிக் கொல்லிகளை உட்கொள்ளுவதினால் ஏற்படும் முக்கியப் பக்க விளைவு க்ளாஸ்ட்ரீடியம் டிஃபி ஸில் எனும் கிருமியினால் ஏற்படும் வயிற்று போக்காகும். இதை மருந்தினால் கட்டுப்படுத்த முடியாதபோது மலமாற்றத்தினால் நல்ல நுண்ணுயிர்களைக் குடலில் செலுத்துவதின் மூலம் 90 சதவிகிதத்திற்கும் மேலானவர்கள் குணமடைகிறார்கள். இந்தச் சிகிச்சை தான் தீய குடல் நுண்ணுயிர் மாற்றங்களினால் ஏற்படும் வியாதிகளை நற்-நுண்ணுயிர்க் கிருமிகளால் குணப்படுத்த முடியும் என்பதற்கு முக்கிய சான்றாகும். ஆனால் மற்ற குடல் வீக்க நோய்களில், இந்த சிகிச்சையினால் கிடைக்கும் பயன்கள் சுமாராகத்தான் உள்ளது.  மலமாற்றத்தை அநேக நோயாளிகள் விரும்புவதில்லை. நற்கிருமிகளோடு தீய கிருமிகளும் நோயாளிகளின் குடலை அடைய வாய்ப்பு இருப்பதால் நோயாளிகள் இந்த சிகிச்சையை ஏற்றுக் கொள்ளத் தயங்குகிறார்கள். இதனால் நூதன முறைகளை மருத்துவம் செயல்படுத்த ஆரம்பித்துள்ளது.  செயற்கையாக தயாரிக்கப்படும் மருந்துகளை விடக் குடல் நுண்ணுயிர்களை ஒட்டித் தயாரிக்கப்படும் மருந்துகள் சிறந்த வைத்தியமாக மட்டுமன்றி குறைந்த அளவு பக்க விளைவுகளுடையதாக இருக்கும் என்பது மருத்துவப் பரிசோதனைகளில் தெரிய வந்துள்ளது. இப்பரிசோதனைகளில் சிலவற்றைக் கவனிப்போம்.

சிவப்பு இறைச்சி, முட்டை, பால் ஆகியவைகளில் உள்ள கோலின் எனும் பொருளிலிருந்தும், சிவப்பிறைச்சியிலும், ஊக்க பானங்களிலும் (எனர்ஜி ட்ரிங்க்ஸ்) உள்ள எல் கார்னிட்டின் எனும் பொருளிலிருந்தும் குடல் நுண்ணுயிர்கள் ட்ரை- மீதைலைமீன் (TMA) எனும் பொருளை உற்பத்தி செய்கின்றன. இது கல்லீரலால் ட்ரை மீதைலமின்-என்-ஆக்ஸைட் (TMAO) ஆக மாற்றப்படுகிறது. இப்பொருள் அதிகமானால் ரத்தக் கொழுப்படைப்பிற்கு முக்கிய காரணமாகிறது. மேலும், மாரடைப்பு வியாதி உள்ளவர்களின் அகால மரணமும், 5 வருடங்களுக்குள் எக்காரணத்தாலும் இறப்பவர்களின் தொகை நான்கு மடங்காகவும் உள்ளது அண்மையில் தெரிய வந்துள்ளது. மரக்கறி உண்பவர்களிடையேயும், பால் வகை உணவுகளை அறவே ஒதுக்குவர்களிடையேயும் இதன் அளவு மிகக் குறைவாகவே உள்ளது.  கோலினை தவிர்த்து அதே ரசாயன அமைப்பை உள்ள இன்னொரு பொருளை சுண்டெலிகளின் உணவில் சேர்த்ததில் TMAOவின் அளவு கணிசமாக குறைந்ததோடு மட்டுமல்லாமல் கொழுப்படைப்பை அதிகரிக்கும் உணவை கொடுத்தபோதிலும் கொழுப்படைப்பு காணவில்லை.  சிவப்பு திராட்சை ரசத்திலும், ஆலிவ் எண்ணெயிலும் உள்ள டி.எம்.பி எனும் பொருளைச் சுண்டெலிகளுக்கு தண்ணீரில் கலந்து கொடுத்ததில் TMAO வின் அளவு குறைந்ததோடு கொழுப்படைப்பும் குறைந்தது தெரிய வந்துள்ளது. குடல் நுண்ணுயிர்களில் 13 வகைகள், பேக்டீரியோஸின் எனும் கிருமிக் கொல்லியை உற்பத்தி செயகின்றன.  இக்கிருமிகளை உறை மாத்திரைகளாக எடுத்து கொள்வதின் மூலம் துர்கிருமிகளால் ஏற்படும் வியாதிகளை தடுக்கவும் குணப்படுத்தவும் வாய்ப்பு உள்ளது.

எம்.ஐ. ஏ எனும் சுண்டெலி வகையின் குட்டிகளின் நடத்தை, ஆட்டிசம் உள்ள குழந்தைகளின் நடத்தையை ஒட்டியுள்ளதோடு மட்டுமல்லாமல், குடல் நுண்ணுயிர்கள் வேறுபட்டிருப்பதும், 4EPS எனும் நரம்புகளை தாக்கும் நச்சு பொருள் ரத்தத்தில் சாதாரண சுண்டெலிகளை விட 46 மடங்கு அதிகமாக உள்ளதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த நச்சுப் பொருளை ஆரோக்கியமான   சுண்டெலிகளின் ரத்தத்தில் செலுத்தியபோது அவை மிகவும் பதட்டமுடைய சுண்டெலிகளாக மாறின. இந்த சுண்டெலிகளுக்கு பாக்டீரியாயிடிஸ் ஃபிராஜிலிஸ் (Bacteriodes Fragilis) எனும் குடற் கிருமிகளை உணவிற் கலந்து கொடுத்த போது, குடல் நுண்ணுயிர் சமூக மாற்றமும், நச்சுப் பொருளின் அளவுக்குறைவும் நடத்தை சீர்படுதலும் தெரிய வந்தன. சரியான உணவு ஆட்டிசத்தை கட்டுப்படுத்துவதற்கு இன்றியமையாதது என்று கருதுவோர்க்கு இந்த சுண்டெலிப் பரிசோதனை உற்சாகமளிப்பதோடு ப்ரோபயாட்டிக்ஸ் தயாரிப்பாளர்களுக்கும் ஊக்கமளிக்கும் என நினைக்கிறேன்.

புற்று நோய் சிகிச்சையில் இரசாயனக் கலவை மருந்துகள் (கீமோதெரபி) முக்கிய இடத்தை பெற்றுள்ளன. இம்மருந்துக் கலவை எல்லா உயிரணுக்களையும் பாதிப்பதால், இச்சிகிச்சை பல சமயங்களில் நோயை விட மோசமாக உள்ளது. புற்று நோய் பரவுவதற்கு முக்கிய காரணம், இந்த உயிரணுக்கள் நோயெதிர் உயிரணுக்களிடமிருந்து தங்களை மறைத்துக்கொள்ளும் திறனுடையதால்தான். புற்று நோய் நிவாரணத்தில் நவீன கண்டு பிடிப்புகள் இத்திரையை அகற்றுவதின் மூலம் புற்று நோய் உயிரணுக்களை நோயெதிர் உயிரணுக்களுக்கு காட்டி கொடுத்து அவ்வணுக்களைக் கொல்வதைச் சுலபமாக்குகின்றன. இதனால் மற்ற உயிரணுக்கள் பாதிக்கப்படாததால் இச்சிகிச்சை சுலபமானதாகவும் நீண்ட ஆயுளைத் தருவதாகவும் அமைந்துள்ளது. சுண்டெலிகளிடம் நடத்திய பரிசோதனைகளில் பிஃபிடோபாக்டீரியம் (Bifidobacterium) எனும் குடற் நற்கிருமி, டென்ட்ரிடிக் உயிரணுக்கள் எனும் நோயெதிர் உயிரணுக்களை தூண்டி விட, அவ்வணுக்கள் ஸீடி 8+ டீ (CD8+ T cells) எனும் புற்று நோய் உயிரணுக்களை அழிக்கவல்ல நோயெதிர் உயிரணுக்களை மேலும் வலுப்படுத்துகிறது. இந்த நற்கிருமி, விலங்குப் பரிசோதனைகளில் நவீனப் புற்று நோய் மருந்தளவிற்கு கட்டிகளை கட்டுப்படுத்தும் சக்தி படைத்துள்ளது என்பதும், புற்று நோய் மருந்தோடு சேர்த்தளித்தால் கட்டிகளை முழுவதுமாக கரைத்து விடுவதும் தெரிய வந்துள்ளது. மனிதர்களை தின்று கொண்டிருக்கும் புற்று நோய்களைக் கொன்றொழிக்கும் புதிய நற்கிருமிகளை விஞ்ஞானம் வெகு விரைவில் கண்டறியும் என்பது திண்ணம்.

பரிசோதனைக் கூடங்களில் குடற் உயிரணுக்களை கையாண்டு புதிய மருந்துகளை உற்பத்தி செய்வதிலும் விஞ்ஞானம் வெற்றி கண்டுள்ளது. மரபணுக்களை மாற்றியமைக்கப்பட்ட இ.கோலை எனும் குடற் கிருமிகளை வைத்து பசியைப் போக்கும் பொருளை தயாரிக்க முடிந்துள்ளது. இக்கிருமியைக் கொழுத்த சுண்டெலிகளுக்கு கொடுத்தபோது, உண்ணும் அளவு குறைந்து உடல் எடையும் குறைந்தது மட்டுமல்லாமல், நான்கு வாரங்கள் உடல் எடை குறைவது தொடர்ந்தது. இவ்வாறே, சர்க்கரை வியாதி உள்ள எலிகளின் இன்சுலின் சுரப்பை அதிகரித்து சர்க்கரை அளவை குறைக்க முடிந்துள்ளது.

வாசகர்களுக்கு ஓர் எச்சரிக்கை!

மேற் சொன்ன மருத்துவ அதிசயங்களெல்லாம் பரிசோதனைக் கூடங்களில் சுண்டெலிகளிடமும் எலிகளிடமும் கண்டறிந்தவை. இதே விதமான முடிவுகளை மனிதரிடையேயும் எதிர்பார்ப்பது உசிதமில்லை. நற்நுண்ணுயிர்க் கிருமிகள்(புரோபயாட்டிக்ஸ்) மனிதப் பரிசோதனைகளில் சுமாரான அளவு வெற்றியையே அடைந்துள்ளன. ஆனால் நற்நுண்ணுயிர்க் கிருமிகளை குழந்தை பிறந்த தினத்திலிருந்து 27 நாட்கள் வரை கொடுப்பதினால் நோயெதிர் அமைப்பினால் விளையும் நோய்களை (ஆட்டோ இம்யூன் டிசீசஸ்) 60 சதவீதம் குறைக்க முடிந்துள்ளது எனும் ஆய்வு, இப்பரிசோதனைகள் மேலும் மேலும் தொடரவேண்டும் எனும் அவாவை உந்துகிறது.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் எனும் பழமொழிக்கேற்ப நோயற்ற வாழ்விற்கு வேண்டிய நுண்ணுயிர்க் கிருமிச் செல்வத்தையும் நம் குடலிலேயே இயற்கை தங்க வைக்கிறது. ஆனாலும் நாம் நம்முடைய வேண்டாத உணவுப் பழக்கங்களால் இச்செல்வத்தை விரயமாக்கி, நோய்களுக்கு ஆட்படுகிறோம் என்பது உண்மையே. நம் வாழ்வின் முதற் பாதியில் உடம்பின் ஆரோக்கியத்தை வீணடித்துச் சேர்க்கும் செல்வத்தை, பிற்பாதியில் அதே ஆரோக்கியத்தை திரும்பப் பெறுவதற்காகச் செலவழிப்பது  மனிதத்தன்மையா அல்லது மடத்தன்மையா என்று தெரியவில்லை.

***

ஆதாரங்கள்:

Susan V. Lynch et al; The Human Intestinal Microbiome in Health & Disease; N Engl J Med 375;24; Dec 15 2016

Noel T Mueller et al; The Infant Microbiome Development: Mom Matters; Trends Mol Med 2015 Feb 21(2) 109-117

The Gut, Heart and the TMAO: Cleveland Heart Lab August 1, 2016

 

One Reply to “ஆரோக்கியத்திலும் நோயிலும் குடல் நுண்ணுயிர் சமூகத்தின் பங்கு”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.