எம். எல். – அத்தியாயம் 1

அத்தியாயம் 1

அவர் பதறிக்கொண்டே இருந்தார். மதுரைக்குச் செல்ல அவசரப்பட்டார். மதுரையில் கோபால் பிள்ளை அண்ணாச்சியைச் சந்தித்ததுமே எல்லாம் கைகூடி விடும் என்று சொல்ல முடியாது. அதன்பின் எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. தளம் அமைப்பதென்றால் அது சாமான்யமான காரியமா? அதற்கு முன்னாள் இளைஞர்களைத் திரட்டி ஸ்டடி சர்க்கிள் அமைக்க வேண்டும். ஸ்டடி சர்க்கிளில் எத்தனை பேர் ஸ்திரமாக நிற்பார்கள் என்று சொல்ல முடியாது.

“நான் இன்று மாலையே மதுரைக்குப் புறப்படட்டுமா?” என்று ஆங்கிலத்தில் கேட்டார் மஜூம்தார். தோழர் அப்புவுக்கு கொஞ்சம் எரிச்சலாகக்கூட இருந்தது. இருந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை. சாரு மஜூம்தார் மீது அவருக்கு அவ்வளவு மரியாதை இருந்தது. கோபால் பிள்ளை மீது மஜூம்தாருக்கு இருந்த அளவு நம்பிக்கை அப்புவுக்கு இல்லை. கோபால் பிள்ளை கட்சிச் செயல்பாடுகளைவிட்டு விலகி எவ்வளவோ காலமாகி விட்டது. இப்போது அவருக்கு எந்தளவுக்குத் தொண்டர்க்ளுடனும் மக்களுடனும் தொடர்பிருக்கும் என்று சொல்ல முடியாது.

ஆனால், தோழர் மஜூம்தார் அவரைப் பெரிதும் நம்புகிறார். 1953-ல் மதுரை பிளினத்துக்கு அவர் வந்திருந்தபோது, கோபால் பிள்ளைக்கு இருந்த செல்வாக்கைப் பார்த்து அவர் ஆச்சரியப்பட்டிருக்கலாம். இது 1953 அல்ல, 1968.

“ஏன் தோழர் அவசரப்படுகிறீர்கள்?” என்று கேட்டார் அப்பு. குளிர்ந்த காற்று வீசியது. ஜன்னலை மூடிவிட்டால் என்ன என்று தோன்றியது மஜூம்தாருக்கு. இருமினார். நெஞ்சில் அடைத்துக் கொண்டிருந்த சளி வெளியே வந்து விட்டால் நன்றாக இருக்கும். ஆனால் அது அவ்வளவு எளிதில் நடந்துவிடுமா? அவரைப் பாடாய்ப் படுத்தாமல் அது அகலுமா?

“தண்ணீர் குடிக்கிறீர்களா, தோழர்?”, என்று கேட்டார் அப்பு.

“சூடாக ஏதாவது குடித்தால் நல்லது. வென்னீர் அல்லது டீ”, என்றார் மஜூம்தார். கிட்டனைத் தேடினார் அப்பு. எழுந்து போய் உள்ளறைக்குச் சென்று பார்த்தார். பாய்களும், தலையணைகளும் அலங்கோலமாகத் தரையில் கிடந்தன. ஒரே பீடி நாற்றம். அப்புவுக்குப் பீடி குடிக்க வேண்டும் போலிருந்தது. ஆனால், பீடி இல்லை. மஜூம்தாரும் பீடி குடித்து நேரமாகி விட்டது. எங்கோ தண்ணீர் சொட்டுகிற சத்தம் இடைவிடாமல் கேட்டது. இந்தக் கிட்டன் எங்கே போனான். அவன் இப்படித்தான். இருந்து கொண்டே இருப்பான். திடீரென்று காணாமல் போய் விடுவான்.

அப்பு முன் வராந்தாவுக்கு வந்து ஜன்னல் கம்பிகளின் வழியே தெருவைப் பார்த்தார். எப்போதும் போல் தெரு ஆளரவமற்றுக் கிடந்தது. எதிர்ச்சாரியிலிருந்த டெய்லர் கடையில், வாசலருகே ஒருவன் ஸ்டூலில் உட்கார்ந்திருந்தான். அவன் குனிந்து எதையோ படித்துக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்தல் கடைச் சேர்ந்த ஆள் மாதிரித் தெரியவில்லை. உள்ளே மஜூம்தார் மீண்டும் இருமுவது கேட்டது. கிட்டன் கையில் ஒரு வாளியுடன் படியேறி வந்து கொண்டிருந்தான்.

“எங்கே போயிட்டு வரே?”

“ரிப்பேர் பண்ணக் கொடுத்திருந்த வாளியை வாங்கி வைன்னு துரை சொல்லிட்டுப் போனான்”.

“போறதுன்னா சொல்லிட்டுப் போக வேண்டாமா?”

கிட்டன் பதிலே சொல்லாமல், சிரித்துக் கொண்டே அவரைத் தாண்டி உள்ளே போனான். அவன் போகும்போது சாராய வாடையடித்தது. அவரால் அவனை எதுவும் கேட்க முடியாது. துரைசாமி குடித்துவிட்டுவந்தால்கூட அவரால் எதுவும் கேட்க முடியாது. புகலிடத்தில் இதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள முடியாது. கிட்டனை மஜூம்தாருடன் மதுரைக்கு அனுப்பி வைப்பதைப் பற்றி யோசிக்க வேண்டியதுதான்.

மஜூம்தார் கிட்டனைப் பார்த்து புன்முறுவல் செய்தார். கிட்டன் வாளியை குளியலறையில் கொண்டு போய் வைத்துவிட்டு வந்தான். தொண்டையைக் காறிக்கொண்டே திரும்பவும் குளியலறைப் பக்கம் போனான். அப்புவுக்கு, மஜூம்தாரை அன்றே மதுரைக்கு அனுபி வைத்துவிடலாம் என்று தோன்றியது. கிட்டனை மாதிரி ஆட்களை நம்பி எதுவும் செய்ய முடியாது.

“தோழருக்கு ஒரு டீ வாங்கிட்டு வா,” என்று சொல்லிக்கொண்டே தன் சட்டைப்பையிலிருந்து சில்லறையை எடுத்துக் கொடுத்தார் அப்பு.

“உங்களுக்கு?” என்றான் கிட்டன்.

“சரி, இந்தா ஒரு ரூபா… நீயும் ஒரு டீ குடிச்சுட்டு, எங்களுக்கும் டீ வாங்கிட்டு வா… மீதத்துக்கு பீடி வாங்கிக்கோ… சீக்கிரமா வா…”. அவன் பின்னாலேயே அப்பு போனார். வராந்தாவில் நின்று டெய்லர் கடையைப் பார்த்தார். அந்த ஆல் இங்கேதான் உட்கார்ந்திருந்தான். தோழரை பத்திரமாக அனுப்பி வைக்க முடியுமா? மஜூம்தார் மதுரைக்குப் போகக்கூட வேண்டியதில்லை. கோபால் பிள்ளை அண்ணாச்சியை அவரேகூட ஒரு நாள் சென்று பார்த்து விடுவார். அவர் பேசாமல் கல்கத்தா சென்றால் போதுமென்றிருந்தது. மஜூம்தார் அவரருகே வந்தார்.

“தோழர்… இங்கே வர வேண்டாம். உள்ளே போவோம்…” என்று வரை அழைத்துக் கொண்டு உள்ளே போனார் அப்பு. மஜூம்தார் அப்புவை விசித்திரமாகப் பார்த்தார். இருவரும் நாற்காலிகளில் அமர்ந்தனர்.

“கட்சியிலேருந்து உங்களுடன் நீக்கப்பட்டவர்களுடன் உங்களுக்குத் தொடர்பு இருக்கிறதா தோழர்…” என்று கேட்டார் மஜூம்தார். கேட்டுவிட்டு இருமினார்.

“நேற்று பார்த்தோமே, ஆதி, அவரும் விலக்கப்பட்டவர்தான். மாவட்ட அளவிலே ஆறு பேரை மேலிடம் கட்சியைவிட்டு நீக்கியிருக்கிறது,” என்றார் அப்பு. அதைச் சொல்லும்போது ஆசுவாசமாக இருந்தது. மஜூம்தார் லேசாகச் சிரித்தார். “ரிவிஷனிஸ்ட்ஸ்,” என்றார். “அவர்களையும் நாம் இணைத்துக் கொள்ள வேண்டும்,” என்று சொன்னார். “பார்ப்போம்… ஆதி நம்முடன் வந்து விடுவார். மற்றவர்களுடன் பேசிப் பார்க்க வேண்டும்…” என்றார் அப்பு. அவருக்கு தும்மல் வந்தது.

திடீரென்று மஜூம்தாரை உற்சாகம் தொற்றிக்கொண்டது. தமிழ்நாட்டில் தனக்கு நல்ல ஆதரவு பெருகுவது போல் நினைத்தார். ஆந்திரா, கேரளம் அளவுக்கு இல்லாவிட்டாலும் தமிழ்நாட்டில் ஏதாவது செய்துவிட முடியும் என்று தோன்றியது. லீலாவுடைய ஞாபகம் வந்தது. சிலிகுரியில் லீலா எப்படியிருக்கிறாளோ? ஊரை விட்டுக் கிளம்பும்போதே அப்பா மிக மோசமாக இருந்தார், அப்பாவை கல்கத்தாவுக்கு அழைத்துச் சென்று காண்பிக்க வேண்டும். கோபால் பிள்ளையைப் பார்த்துவிட்டு அப்படியே சிலிகுரிக்கும் கிளம்பிவிட வேண்டியதுதான். அதற்குள் இந்த உடம்பு ரொம்ப படுத்தாமலிருக்க வேண்டும். சேர்மன் மாவோவெல்லாம் எப்படித்தான் எல்லாவற்றையும் சமாளித்தாரோ?

ஜன்னல் வழியே வெளியே பார்த்துக் கொண்டிருந்தார். தூரத்தில் ஏதோவொரு கோவில் கோபுரம் தெரிந்தது. மக்கள் மதத்தை எளிதில் விட்டுவிட மாட்டார்கள். மதம் ஒரு அபின் என்று அவர் சொன்னது எவ்வளவு தீர்க்கதரிசனமானது. அந்த போதையிலிருந்து அவர்களைப் படிப்படியாகத்தான் மாற்ற வேண்டும். அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். முதலில் ஆயுதப்புரட்சி. பிறகுதான் மற்றவை. இந்தக் கனு ஸன்யால் என்ன செய்வாரோ தெரியவில்லை. செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது.

அப்பு அறையைப் பெருக்கிக் கொண்டிருந்தார். அவ்வளவு குப்பை. அந்தப் பையன் துரைசாமி, கல்லூரிக்குப் போகிறான், வருகிறான். ஆனால் அறையை கவனிப்பதில்லை. எல்லாம் போட்டது போட்டபடியே கிடக்கின்றன. பூர்ஷுவாதான் அவன்.

கிட்டன் டீயுடன் வந்தான். மஜூம்தாரிடமும் அப்புவிடமும் டீ கிளாஸ்களைக் கொடுத்தான். சட்டைப் பையிலிருந்து பீடிகளை எடுத்து மேஜை மீது வைத்தான். தலையைச் சொறிந்தான்.

“அந்த டைலர் கடையிலே இருக்கற ஆள் உன்னைப் பார்த்தானா?” என்று அப்பு கேட்டார்.

“எதுக்குக் கேக்கறீங்க? நான் கவனிக்கலையே…” என்று அசிரத்தையாகச் சொன்னான். அவனுக்கு அப்பு கேட்டது புதிராகப் பட்டது. என்னென்னவோ கேட்கிறாரே.மஜூம்தார் அருகே தரையில் உட்கார்ந்தான் கிட்டன்.

~oOo~

கிட்டனுக்கு அப்புவை வெகு நாட்களாகவே தெரியும். அவன் தீர்த்தகிரி மில்லில் வேலை பார்த்த காலத்திலிருந்தே தெரியும். சங்கத்திற்கு அடிக்கடி வந்து போவார். மில் கேட்டில் நடக்கிற கூட்டங்களிலும் அவர் பேசியிருக்கிறார். அப்போது கிட்டன் கோன் செக்சனில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். துரை, காமய்ய நாயக்கன்புதூர் தவசி, பெருமாள், எல்லாரும் அவனுடன்தான் வேலை பார்த்தார்கள். நைட் டூட்டி பார்த்தால் தவசியிடம்தான் கிட்டன் பொடி வாங்கிப் போடுவான். தவசிக்கு கோவில்பட்டி பக்கம். அவன் பொஞ்சாதி, பிள்ளைகளெல்லாம் ரொம்ப நல்ல மாதிரி.

கிட்டனுக்கு வர வர கண் பார்வை குறைந்து கொண்டு வந்தது. ஏதோ சத்துக் குறைச்சல் என்றார்கள். சங்கத்துக்குத் தேவர் கடையிலிருந்து டீ வாங்கி வந்தபோது, டீ கிளாசை மேஜை மீது வைப்பதாக நினைத்துக் கொண்டு கீழே போட்டுவிட்டான். எல்லோரும் ஆளாளுக்குச் சத்தம் போட்டார்கள். தற்செயலாக அங்கே வந்திருந்த அப்புதான் அவனிடம் விசாரித்து, அவனுகுக் கண் பார்வை மங்கி வருகிறதென்று கண்டுபிடித்தார். டாக்டரிடம் கூட்டிக் கொண்டு போய் காண்பித்து சொட்டு மருந்து வாங்கிக் கொடுத்தார். அவன் பொஞ்சாதி சொர்ணம் சொன்னதால், இரண்டாவது பையனுக்கு அப்பு என்றே பேர் விட்டார்கள்.

ஸ்டிரைக் நடந்து மில் வேலை எல்லாம் போன பிறகும்கூட அப்புவுக்கும் அவனுக்கும் பழக்கம் இருந்தது. பெருமாநல்லூருக்கு எப்போது வந்தாலும் அப்பு அவனுக்குச் சொல்லி விடுவார். ஊரில் எத்தனை நாள் இருந்தாலும், அவருடனேதான் கிட்டன் அலைவான். ராசாத்தி வீட்டுப் போன் நம்பரைத்தான் அப்புவிடம் கொடுத்திருந்தான். அவனை உடனே புறப்பட்டு கோயமுத்தூர் வரும்படி அப்பு சொல்லப்போய்தான் கிட்டன் அங்கே வந்தான்.

“குடியை விட்டிருந்தியே… மறுபடி குடிக்க ஆரம்பிச்சிட்டயா?” என்று கேட்டார் அப்பு. கிட்டன் அசட்டுத்தனமாகச் சிரித்தான். மஜூம்தாருக்கு அப்பு கேட்டது புரிந்ததோ என்னவோ? டீயை உறிஞ்சிக் கொண்டே சிரித்தார். கிட்டன் ஜன்னலோரமாகச் சென்று சுவரோடு சுவராகச் சாய்ந்து நின்று கொண்டான்.

சாரு மஜூம்தார் ஆங்கிலத்தில், “டீ நன்றாக இருக்கிறது,” என்று அப்புவிடம் சொன்னார். அப்புவின் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. ஏதோ யோசனையிலிருந்தார். கிட்டன், மஜூம்தாரிடம் பீடியையும் தீப்பெட்டியையும் எடுத்து நீட்டினான். அவர் சிரித்துகொண்டே பீடியைப் பற்ற வைத்தார். எரிந்து கொண்டிருந்த தீக்குச்சியை அவர் கீழே போடப் போகும்போது அவசர அவசரமாகக் கிட்டன் அந்த நெருப்பில் அவனும் ஒரு பீடியைப் பற்ற வைத்துக் கொண்டான்.

சிறிது நேரம் அரை வாசலையே பார்த்தவாறு நின்று கொண்டிருந்த அப்பு, சட்டைப் பையிலிருந்த ரூபாயை எண்ணிப் பார்த்தார். அறுநூறு ரூபாய் இருந்தது. அது மஜூம்தாருக்கும், கிட்டனுக்கும் மதுரைக்குப் போகவும், மஜூம்தார் அங்கிருந்து கல்கத்தா போகவும் போதும்.

“எட்டு மணிக்கு மேலே நீங்களும் கிட்டனும் மதுரைக்குப் பொறப்படுங்க… அங்கே இருந்து நீங்க கல்கத்தா போறதுக்குக்கூட இந்தப் பணம் போதும்… ஏதும் பணம் தேவைன்னா மதுரையிலே கோபால் பிள்ளை கிட்டேபணம் வாங்கிக் கொள்ளுங்க,” என்று சொல்லிக்கொண்டே அவரிடம் ரூபாயைக் கொடுத்தார் அப்பு.

(தொடரும்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.