ஹகீம் ஸனாய் – பாரசீக மெய்ஞானி

பதினோறாம் நூற்றாண்டின் Persia என ஆங்கிலத்தில் அழைக்கப்பட்ட பாரசீகம். தற்போதைய ஆஃப்கானிஸ்தானின் தென்மேற்கில் உள்ள கஸ்னா (Ghazna) பிராந்தியத்தின் சுல்தானாக ஆட்சி செய்துவருகிறான் பஹ்ரம்ஷா (Bahramshah). ஆட்சிக்கு எந்த எதிர்ப்பும் தடையுமில்லை. எல்லாம் சுபம் என்றிருந்த வேளையில் பஹ்ரம்ஷாவின் காதில் எந்த தூரதேச யாத்ரீகனோ எதையோ போட்டுவிட்டுச் சென்றுவிட்டான். தலையில் பூச்சி ஊர ஆரம்பித்தது. தீராத அரிப்பை உண்டுபண்ணியது. தொலைதூரத்தில் இருக்கும் விசித்திரமான கலாச்சாரமுடைய, செல்வ வளமிகுந்த ஒரு பெரும் பிரதேசம். ஹிந்தூஸ்தான்! சிறுசிறு பகுதிகளாக வெவ்வேறு குறுநில மன்னர்களால் ஆளப்பட்டுவந்தது. ஹிந்தூஸ்தானின் செல்வச்செழிப்பு, இயற்கைக்கொழிப்பு, பொக்கிஷங்கள்பற்றிக் கேள்விப்பட்டதெல்லாம் அவனது ஆசையை வளர்த்து, கற்பனைக் குதிரையை வெகுவாக ஓடவிட்டிருந்தது. உயரத்துத் திராட்சைக் குலையைக் கண்ட நரியின் வாய் போலானது அவன் மனம். இரவு பகலாய் இதே சிந்தனை. அந்த நாட்டின்மீது படையெடுக்கவேண்டும் . கொள்ளையடித்து முத்தும் மணிகளுமாய் அள்ளிவரவேண்டும். இன்னும் என்னென்ன பொதிந்துகிடக்கிறதோ யார் கண்டது!

பஹ்ரம்ஷாவின் தர்பாரில் ஒரு முக்கியமான அங்கமாக இருக்கிறார் ஹகீம் ஸனாய். அறிஞர், நாடு புகழும் கவி. கஸ்னா சுல்தானின் வீரதீரச்செயல்களை, நிர்வாகத்தை, சாதுர்யத்தைப் புகழ்ந்து கவிபுனைந்து பாடி அவனை வெகுவாக மகிழ்வித்துவந்தார். ஸனாய் மீது அன்பும் மதிப்பும் கொண்டிருந்தான் சுல்தான். ஹிந்தூஸ்தான் மீதான படையெடுப்பின்போது தனக்கு ஒரு ஆத்மநண்பனாக, ஆலோசகனாக ஹகீம் ஸனாயை அழைத்துசெல்ல முடிவெடுத்தான். படையெடுப்பிற்கான நாள் குறிக்கப்பட்டு, அந்த நாளில் பஹ்ரம்ஷா, தன் வீரர்கள் புடைசூழ, ஹகீம் ஸனாயுடன் ஹிந்தூஸ்தான் நோக்கிக் குஷியாகப் புறப்பட்டான். நகரிலிருந்து வெளிப்பட்டு தொடர்ந்து பயணித்தபோதுதான் அது நிகழ்ந்தது.

சுற்றுச்சுவரினால் மூடப்பட்ட நந்தவனம் போன்ற பெரிய தோட்டமொன்றினை சுல்தானும் படையும் கடக்க நேரிட்டது. தோட்டத்திலிருந்து காற்றில் மேலெழுந்து வந்த கீதம் – ஆட்டமும் பாட்டமுமாய் ஒரே நாதமயமாய் சுல்தானைப் பெரிதும் வசீகரித்தது. அவனோ ஒரு சங்கீதப்ரியன். ஆட்டபாட்டங்களில் மனமிழப்பவன். ஆனால் இதுபோன்ற ஒரு தெய்வீக இசை! அவன் இதற்குமுன் கேட்டதில்லை. நின்றான். சைன்யமும் நின்றது. மேலும் கேட்டான். கிறங்கவைத்தது சங்கீதம். தன் தளபதிகள் மற்றும் ஹகீம் ஸனாய் பின்தொடர தோட்டத்தினுள்ளே நுழைந்தான். சங்கீத மயக்கத்தில் இருந்த அவனை, உள்ளே கண்ட காட்சி திணறவைத்தது. ஒரு குடிகாரன். அவனைச் சுற்றிலும் தடதடக்கும் இன்னிசை; நாட்டியம். யாரது என உற்றுப்பார்த்ததில் தெரிந்தது. லாய்-குர் (Lai-Khur) ! அறிந்த சிலருக்குமட்டும் ஞானி. அறியாத பலருக்கு அசடன்; நித்யக் குடிகாரன் ; போக்கற்றவன். சுல்தானின் வருகையை அலட்சியம் செய்ததோடல்லாமல் மதுவை வழங்கிக்கொண்டிருக்கும் பெண்ணிடம் கோப்பையை நீட்டினார் லாய்-குர். கூடவே குழறலாக ஒலித்தது அவர் குரல்: ’நிரப்பு கோப்பையை.. சுல்தான் ஒரு குருடன் எனக் கூவியே குடிக்கின்றேன்!’ என்று சொல்லி கோப்பையை நிரப்பிக்கொண்டார்.

வேறொரு சமயமாக இருந்து, வேறொருவனாக இருந்திருந்தால், தலை அப்போதே அங்கு உருண்டிருக்கும். ஏற்கனவே இசையின் போதையில் இருந்த சுல்தான் கோபத்தை அடக்கிக்கொண்டான். லாய்-குர்ரைப்பற்றி மக்கள் பேசுவதை அவன் கேட்டிருக்கிறான். அவனது தளபதிகள் லாய்-குர்-ரின் கூற்றை வேகமாக மறுத்தனர். ’ ஏய்! சுல்தானைப்பற்றி அவதூறாகச் சொல்லாதே!’ என எச்சரித்தனர். போதையின் உச்சத்தில் இருந்த லாய்-குர் மசிவதாயில்லை. மேலும் தொடர்ந்தார்: ’இத்தனை அழகும் செழிப்புமாய் கஸ்னா இருக்க, எங்கோ தொலைவில் இருக்கும் ஹிந்தூஸ்தான் நோக்கிப் படையெடுக்கப் பாய்பவன் மூளையில்லாதவன் மட்டுமல்ல; குருடனும்தான் !’ என்று கோப்பையை உறிஞ்சி அலட்சியமாகச் சிரித்தார். இந்த நாடகத்தைப் பார்த்துப் பதறியவராய் ஹகீம் ஸனாய் முன்வந்து ’உமக்கு ஒன்றும் தெரியாது. உடன் நிறுத்தும் இந்த அசட்டுப்பேச்சை!’ எனக் கோபப்பட, மெலிதான ஒளியில் அவரைப் பார்த்த லாய்-குர் அடக்கமுடியாமல் சிரித்தார். சுல்தானின் குழாமின் குழப்பம் மேலெழும்ப, ’ஓ! ஹகீம் ஸனாய்! சுல்தானை விடவும் பெருங்குருடன் நீதான்! உனக்காகவும் சேர்த்துத்தான் நான் குடிக்கிறேன்!’ என்றார். சுல்தானும், ஸனாயும், தளபதிகளும் பெரும் அதிர்ச்சிக்குள்ளானார்கள். ஏனெனில், நாட்டில் ஒழுக்கம், நேர்மைக்குப் பேர்போனவர் ஹகீம் ஸனாய். கூடவே அறிவாளி என அறியப்படுபவர், அவரைப் பார்த்துமா இப்படிச் சொல்கிறான் இந்தக் குடிகாரன்! என்கிற அதிர்ச்சியில் அவர்கள் தடுமாற, விளக்குவதுபோல் வந்தன வார்த்தைகள்.

‘எப்பேர்ப்பட்ட கவி நீ! எத்தனை பெரிய பரிசாக உனக்கு அல்லாவால் அது வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், நீயோ சுல்தானைப் போன்றவர்களை அண்டி, அவர்களின் புகழ்பாடி புலமையை வீணடிக்கிறாய். இதற்கா உன்னை அவன் மெனக்கெட்டுப் படைத்தது? கண்ணிருந்தும் குருடுதானே நீயும் ஹகீம்!’ என்று படபடத்து, இன்னுமொரு மிடறு மதுவை விழுங்கித் தடுமாறி ஆடினார் லாய்-குர். அந்தக்கணமே தனக்குள்ளே ஏதோ எரிந்து விழுந்ததை உணர்ந்தார் ஹகீம் ஸனாய். ஸடோரி! (Satori –sudden realization) – சத்தியத்தின் திடீர் தாக்குதல். போதையில் சொன்னாலும் மேதை இவர் எனப் புரிந்துகொண்டார் ஹகீம் ஸனாய். நிலைகுலைந்தும் சமாளித்துக்கொண்டு, லாய்-குர்ரின் முன் வந்து தலைதாழ்த்தி வணங்கினார். சுல்தானிடம் பேசினார். தன்னால் இந்தப் பயணத்தில் பங்குகொள்ளமுடியாதென்றார். சுல்தான் மிரண்டான். அவரை எவ்வளவோ வற்புறுத்திப்பார்த்தான். ராஜ்யத்தின் ஒரு பகுதியைக் கொடுப்பதோடு தன் தங்கையையும் அவருக்கு மணம் செய்விப்பதாக ஆசை காட்டினான் பஹ்ரம்ஷா. கேட்கும் மனநிலையிலில்லை ஸனாய். மாறிவிட்டிருந்தார் மனிதர். யூசுஃப் ஹம்தனி என்கிற குருவிடம் சென்று உபதேசம் கேட்டார் ஹகீம் ஸனாய். அவருடைய அறிவுரையின்படி மன அமைதி வேண்டி மெக்கா பயணம் மேற்கொள்ள விரும்புவதாக சுல்தானிடம் தெரிவித்தார். சுல்தான் வேறுவழியின்றி அவரைப் போகவிட்டான்.

நீண்ட நெடும்பயணத்திற்குப்பின் மெக்கா போய்ச்சேர்ந்த ஸனாய், அங்கு தனிமையில் அமர்ந்து ஆழ்ந்த பிரார்த்தனையில் லயித்தார். பிறகு கஸ்னா திரும்பியவர், ஞானம் ததும்பும் கவிதைகளை இயற்றினார். ‘புதிர்’(The Puzzle), ‘ஞானிகளின் வழி’(The Way of the Holy Ones) என்கிற கவிதைத் தொகுப்புகளும் இவற்றில் உள்ளன. இதில் முக்கியமாக குறிப்பிடப்படுவது ‘உண்மையின் சுவர்மறைத்த தோட்டம்’(The Walled Garden of Truth) எனும் நூல். இது இறுதிஉண்மையை நோக்கிய பயணத்தில், மனம், தர்க்கம், அன்பு என்று தேடுபவனின் தடைகளை, சிந்தனைச் சிக்கல்களை, எளிய கவிதை மொழியில் ஆராய்கிறது. இந்த நூல் லாய்-குர்ருடனான ஸனாயின் சந்திப்புபற்றியும் குறிப்பிடுகிறது. அரபி மொழியில் ’சுவரால் மறைக்கப்பட்ட தோட்டம்’ என்பது சொர்க்கத்தைக் குறிக்கும் என்பதை நாம் கவனிக்கவேண்டும். இந்த நூல்தான் பிற்காலத்தில் சுஃபி ஞானிகளின் ஞானக்கருவூலமாக மதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. தன் அகத்தின் உள்கதவைத் திறந்துவிட்ட சுஃபி மெய்ஞானியான லாய்-குர்ருக்கு இந்தக் கவிதைத் தொகுப்பை அர்ப்பணம் செய்தார் ஸனாய். லாய்-குர்ரைப்பற்றி தன்னுடைய பிரசங்கத் தொடரில் வெகுவாகப் புகழ்ந்து உரைத்துள்ளார் ஓஷோ.

பாரசீக மொழிக்கு கஸீதா(Qasida)(Ode), கஸல் (Ghazal), குறுங்கவிதைகள் (couplets) ஆகிய கவிதை வகைமைகளை அறிமுகப்படுத்தியவர் ஹகீம் ஸனாய். மேலைநாடுகளில் தற்போது வெகுவாகப் புரட்டப்படும் பாரசீகக் கவிஞர் ஜலாலுதீன் ரூமியின் முன்னோடி. ஹகீம் ஸனாயின் கவிதைகளில் மெய்ஞானத் தெறிப்புகளைக் கொஞ்சம் பார்க்கலாம்:

எனைக் கேட்டால்

வாழ்வின் உலகத்தை நோக்கி
உனைத் திருப்பிக்கொள்
அந்தஸ்து செல்வாக்கு
போன்றவற்றிற்கெல்லாம்
காட்டு உன் முதுகை
செல்வச்செழிப்பைத் தவிர்த்து
சேவையில் உனை நிறுத்து
வார்த்தை வியாபாரிகளிடமிருந்து விலகு
அனைத்தையும் கடந்த ஒன்றின்முன்
நிறுவிக்கொள் உன் இடத்தை
எது வழி என்றெல்லாம்
எனைக் கேட்டால் நண்பனே,
இப்படியெல்லாம்தான் சொல்வேன்

~oOo~

தேடி அலைகையில்

அவனை அறிய முயல்வதாய்
அனைத்தின்
காரண காரியங்களை ஆராய்ந்தோம்
தர்க்கித்துக் களைத்தோம்
வேலைக்காகவில்லை ஒன்றும்
நம்மால் முடியாது என
விட்டுவிட்டபொழுதில்
தடையெல்லாம் விலகியிருந்தது

~oOo~

அவனுடைய வாசலில்

அவனுடைய வாசலில்
முஸல்மானென்றும்
கிறிஸ்துவனென்றும்
குணவான் என்றும்
குற்றவாளி என்றும்
பேதம் ஏதுமில்லை
வாசலில் நிற்கும் அனைவரும்
தேடிவந்தவர்கள்
தேடப்பட்டவன் அவனே

~oOo~

முழுமையான நீ

நீ முழுமையாகி
நதியைக் கடக்கவென
ஒரு பாலம் உருவாக்கப்பட்டுள்ளது
ஆனால் ஒன்று ..
நீ முழுமையானபிறகு
நதி பாலம் என்பதன்
அர்த்தம்தான் என்ன?

~oOo~

உன் மனந்தான். . .

உன் மனமே
நம்பிக்கை என்றும்
நம்பிக்கையின்மையென்றும்
சதா உனை அலைக்கழிக்கிறது
வாழ்வின் மீதான அவதானிப்பையும்
தெளிவற்றதாக்கிவிடுகிறது
இறுதி உண்மை என்பது
இவற்றையெல்லாம் அறியாதது
பரிசுத்த இருத்தலான அதற்கு ஒரு
பொருட்டல்ல இவையெல்லாம்

~oOo~

உனக்கானது

வாழ்க்கை என்பது ஒரு புழுதிமண்டலம்
நெருப்பு நீராகத் தெரியும் மாயத்தோற்றம்
பிறப்பு அழிவு என விரியும் இந்தப்
புதைகுழியிலிருந்து வெளியேறு
உனக்கான வீடை நோக்கி முன்னேறு

~oOo~

எப்படி?

தேடி அடைவதற்காக நீ
உருவாக்கப்பட்டுள்ளாய்
உனக்கான சால்வை காத்திருக்கிறது
கந்தல் கிழிசல்களில்
எப்படி நீ திருப்திப்பட்டுவிடுகிறாய்
நாளெல்லாம் சோம்பித் திரிந்தால்
செல்வந்தனாவதெப்படி !

~oOo~

அன்பெனும்..

அன்பிருப்பதோ அவனின் ஆதிக்கத்தில்
அவனின் இருப்பும் அன்பினிற்குள்தான்
அவனுக்கான அரிய தேடலில்
இழந்துவிடு முழுதுமாய் உன்னை
இன்னொன்றையும் கவனி
சமுத்திரத்தைக் கண்டடைந்தவுடன்
ஓடையைப்பற்றிப் பேசிக்கொண்டிராதே

~oOo~

இழப்பில் பெறுவது

சுயநலமெனும் கடிவாளமில்லாக்
குதிரையில் ஏறி
சுற்றிச் சுற்றி வருகிறாய் நாளெல்லாம்
நண்பனே! இருப்பன எல்லாம்
அவனுக்குள்தான் இருக்கின்றன
உன் தனிப்பட்ட இருத்தலென்பது
ஒரு நடிப்பு நாடகம்
போதும் உன் அசட்டுத்தனங்கள்
இழந்திடு உனை நீ இப்போதே
எதனையும் அடையலாம்
நரகமென இயங்கும் மனமும்
நலம் தரும் சொர்க்கமாகிவிடலாம்

~oOo~

பாக்யம்

வாயினால் சொல்லமுடியாததை
தன்னால் கேட்கமுடிந்திருக்கிறது என்பதே
காதுகள் செய்த பாக்கியம்
எந்த வாயாலும் சொல்லமுடியாது
உன் ரகசியத்தை
வார்த்தை வீச்சென்பது
உனை மறைக்குமே ஒழிய
காட்டிவிடமுடியாது

~oOo~

எல்லோருக்குமா வாய்க்கிறது?

தன் கையையும் காலையும் மட்டுமே அறிந்தவன்
கடவுளை எப்படி அறிவான்
துறவியின் அறிதலையும் தாண்டியது இது
அறிந்துவிட்டேன் என நினைத்தால்
நீ ஒரு முட்டாளாகத்தான் இருக்கவேண்டும்
இதனை நீ புரிந்துகொள்ளமுடிந்தால்
ஆழ்ந்த நம்பிக்கையின் சாரத்தை
அறிந்தவனாகிறாய்
அதுவரை உனக்கும் நம்பிக்கைக்கும்
என்ன தொடர்பிருக்கமுடியும்
தேர்ந்த அறிவைப்போலவே
ஆழ்ந்த இறைநம்பிக்கை என்பது
அனைவருக்கும் வாய்ப்பதில்லை
உளறி அலையாமல்
உன் வாயை மூடியேயிரு

~oOo~

உன் பாதை . .

நீ பயணிக்கும் பாதை என்பது
உன் மனதைத் தேய்த்து தேய்த்து
மெருகூட்டுவதிலிருக்கிறது
உள்ளொன்றுவைத்துப்
புறமொன்று பேசும் கயமை
இறைநம்பிக்கையின்மை எனும்
நீங்காத பிசுபிசுப்புகளிலிருந்து
வெட்டி எதிர்ப்பும்
வெறும் மறுப்பும்
மனதை விடுவித்துவிடமுடியுமா?
ஆழ்ந்த மெய்யறிவும்
மாளாத நம்பிக்கையின்
மாசற்ற தூய்மையுமே
மனக்கண்ணாடியைப்
பளபளவென மின்னவைக்கும்

~oOo~

உன்னை அறிந்தால்..

உனை நீ அறியாதவரை
அவனை அறிவதென்பது எப்படி
அவனோடு ஒன்றியபின்பு
கூட்டலில்லை
கழித்தலில்லை
ஒருமை என்பது உன்னதம்
இருமையே பெரும்பாதகம்

~oOo~

இடமில்லாதவன் !

இடத்திற்கு இடமில்லை
வெளி அனைத்தையும் செய்தவனுக்கு
இடம் எப்படி இடம் கொடுக்கமுடியும்?

அவன் சொன்னான்:
இடமில்லாத புதையல் நான்
நின்றுகொண்டு எனை பார்ப்பதற்காகத்தான்
இந்த உலகமே உருவாக்கப்பட்டுள்ளது

நீ தேடும் ஒருவனே
இருக்க இடமில்லாதவனாயிருக்கையில்
எங்கே செல்ல எனக்
காலணி அணிந்து தயாராகிறாய் ?
இதயத்தை மேலும் மேலும்
தேய்த்துத் துடைத்து மெருகூட்டுவதுதான்
இங்கு வரும் ஒரே வழி

~oOo~

அனைத்தையும் விலக்கியே

எல்லாவற்றையும்
என்னிடமிருந்து அகற்றிவிட்டு
எனை உன்னோடு இருக்கவிடு
உனைக் காட்டும்
கதவைமட்டும் திறந்துவிட்டு
மற்றெல்லாவற்றையும் மூடிவிடு

~oOo~

வாசல்வரை

தனிப் பெருங்கருணையினால்
தன்னைக் காண்பித்தான் அவன்
இல்லாவிடில் அவனைக் காண்பதெப்படி
தளராத நம்பிக்கை நம்மை
கொண்டுவந்து சேர்த்தது அவனிடம்
ஆனால் வாசல்வரைதான்
அன்பினால் நெகிழ்ந்த அவன்
நம்மை உள்ளே இழுத்துக்கொண்டான்

~oOo~

அந்தப் பாதை

உனை நோக்கிய பாதை
என் இதயத்தில்தான் ஆரம்பிக்கிறது
மனதினால் அதைப் பார்க்கவோ
தெரிந்துகொள்ளவோ முடியாது
வார்த்தைகள் மறைந்து
நான் அமைதியானபோது
உன் இனிமை
சூழ்ந்துகொள்கிறது என்னை

~oOo~

உனது நெருப்பு

மனதை உருக்கிப்போட்ட உனது நெருப்பானது
ஒரு ரோஜாவாக எனை மலரவைத்துவிட்டது
உனது சரணத்தில் இறந்தேன்
உண்மையான வாழ்விற்குத் திரும்பினேன்
என்னுள் உறையும் சுதந்திரம்
தனையன்றி வேறெதையும் காட்டவில்லை
முக்தி பெற்றேன் நான்
முழுதாய் உன் அடிமையானபின்னே

~oOo~

எதிர்ப்பட்ட கிழவன்

இருண்மையின் ஆழத்திலிருந்து
திடீரென எதிர்ப்பட்டான் ஒரு கிழவன்
முகத்தில் என்ன ஒரு தேஜஸ்!
நீதான் நிலா!
எங்கிருந்து வருகிறாய் என்றேன்
சொன்னான் அவன்
உலகென்றும் வெளியென்றும்
ஓங்கி நிற்கும் அனைத்தையும்
தாண்டி நிற்பவன் நான்
சிருஷ்டியின் காரணன்
உனை உன் வீட்டுக்கு திரும்பவும்
அழைத்துப்போக வந்திருக்கிறேன்
அருகில் வா!
என் கையை இருக்கப் பிடித்துக்கொள்
தகிக்கும் என் நெருப்பு உனை விழுங்கட்டும்
உன் சக்தியெல்லாம் அழிந்துவிடுமே
என அச்சம் கொள்ளாதே
இந்த நெருப்பின் கரு
ஜீவ நீரூற்றைத் தனக்குள் கொண்டது
உனது ஜீவாத்மா மரிக்கையில்
நீ புத்தம்புது ஆன்மாவாக ஜனிப்பாய்
தன்னடக்கத்தோடு வாழ் என்னோடு
இன்பத்தின் உச்சத்திற்கே
கொண்டு செல்வேன் உன்னை

சொல்லைத் தள்ளிவைத்து
மௌனமே மொழியாய்
ஏதேதோ சொன்னான் அவன்
அன்பைத் தந்தான்
ஒளியைத் தந்தான்
கண்களையும் கூடவே தந்தான்
சேர்ந்தே நடந்தோம் இருவரும்

~oOo~

மேலே குறிப்பிட்ட சில சம்பவங்கள் தவிர்த்து இந்த மெய்ஞானியின் வாழ்க்கைபற்றி வேறெந்தக் குறிப்பும் அகப்பட்டதாகத் தெரியவில்லை.1080-ஆம் ஆண்டு ஆஃப்கானிஸ்தானின் கஸ்னாவில் பிறந்ததாகக் கணிக்கப்படும் ஹகீம் ஸனாய், தன் முதிய வயதில் தன் சொந்த ஊரிலேயே இயற்கை எய்தினார். மறைந்த வருடம் 1131-லிருந்து 1150 வரைப் பலவாறாக யூகிக்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.