விஞ்ஞான வளர்ச்சியினால் உங்கள் வேலை போகுமா?

2030 –ல் தனிநபர் (நப) ஒருவருக்கும், தானோட்டிக் கார் தயாரிப்பாளருக்கும் (தயா) நடக்கும் கற்பனை உரையாடல்.

நப: ஒரு வாரம் முன்னதான் உங்க கம்பெனியின் தானோட்டிக் காரை வங்கினேன்

தயா: ரொம்ப சந்தோஷம்

நப: உங்கள பாராட்ட நான் அழைக்கவில்லை. இன்று என்னுடைய கார் நான் சொல்லும் இடத்திற்குப் போக மறுக்கிறது.

தயா: புரியும்படி சொல்லுங்க. இதுக்கு முன்னாடி உங்க கட்டளையைப் பின்பற்றியதா?

நப: போன வாரம் முழுவதும் எல்லாம் பின்பற்றியது. இன்னிக்கு அதுக்கு என்னவோ மூடு சரியில்லைன்னு நெனைக்கிறேன்.

தயா: அது எந்திரம் சார். மூடு எல்லாம் அதுக்குக் கிடையாது

நப: எனக்குத் தெரியாது சார். நீங்க தான் உங்க விளம்பரத்துல அதுக்கு மூளையெல்லாம் இருக்குன்னு சொல்றீங்க. அத எப்படி குஷி படுத்தறதுன்னு உங்க கார் கையேடுல ஒன்னுமே சொல்லலை

தயா: மூட விடுங்க. ஆரம்பத்திலேயிருந்து என்ன நடந்துதுன்னு விவரமா சொல்லுங்க

நப: வழக்கமா நான் மீன் பிடிக்கறதுக்கு வாரக் கடைசில பக்கத்துல 120 கி,மீ. தொலைவுல இருக்குற ஏரிக்கு போகிற வழக்கம். இன்னிக்கு புதுசு தானோட்டிக் காரோட போகலாம்னு கிளம்பலாம்னா கார் இப்படி அடம் பிடிக்கிறது.

தயா: சரி, காருல ஜி.பி.எஸ். –ல ஏரிக்கான ஆயங்களை (coordinates) கொடுத்தீர்களா?

நப: ஊம்

தயா: சீட் பெல்ட் போட்டீங்களா?

நப: செஞ்சேன் சார். என்னுடைய மீன் பிடிக்கும் படகை கூடக் கட்டினேன் சார்

தயா: எங்க கட்டினீங்க?

நப: வழக்கம் போல, காருக்கு மேலதான்.

தயா: சார், நீங்க ஓட்டின பழைய காருல அதெல்லாம். சரி. நாங்க அங்க ஒரு ரேடார் வச்சிருக்கோம். அதை மூடிட்டீங்கன்னா எப்படி சார் கார் நகரும்? கண்ணைக் கட்டிட்டா, தானோட்டிக் கார் எப்படி சார் ஓட்டும்? அதை முதலில் கழட்டுங்க சார். எல்லாம் சரியாயிரும்…

~oOo~

ஓட்டுனர்கள்

என்னதான் கார்களும் அதன் பின் விளைவுகளையும் நாம் சாடினாலும், உலகெங்கிலும் பல கோடி மனிதர்கள்,  தங்கள் வாழ்வாதாரத்திற்காக வாகனம் ஓட்டுகிறார்கள். உதாரணத்திற்கு, வட அமெரிக்காவின் ஜனத்தொகை 350 மில்லியன் (கனடா, அமெரிக்கா). இதில் 3.4 மில்லியன் லாரி ஓட்டுனர்கள் உள்ளனர். சரியான புள்ளிவிவரம் இல்லாவிட்டாலும், ஏறக்குறைய, 750,000 டாக்ஸி ஓட்டுனர்கள் உள்ளனர். இதைத் தவிர, உள்ளூருக்குள் சின்ன வண்டிகளில் டெலிவரி செய்பவர்கள், பஸ் ஓட்டுனர்கள், ஊபர் காரோட்டிகள் என்று மொத்தம் குறைந்தது 6 மில்லியன் மனிதர்கள் வட அமெரிக்காவில் வாகனம் ஓட்டுவதைத் தொழிலாகக் கொண்டவர்கள்.

கடைசியாக எனக்குத் தெரிந்து, டைப் செய்யும் எந்திரங்களை நம்பிப் பல கோடி மனிதர்கள் ஒரு 60 ஆண்டு காலம் முன்னர்வரை இருந்தனர். இன்று, நீதிமன்றம்/அரசாங்கம் போன்ற துறைகளில் பணிபுரியும் சில லட்சம் மனிதர்களைத் தவிர, மற்றவர்கள் இந்தத் துறையில் இல்லை. கணினிகள் மற்றும் அச்சு எந்திரங்கள், டைப் செய்யும் எந்திரத்தைப் பயனற்றவையாக்கி விட்டன. படிப்படியாக நிகழ்ந்த இந்தச் சமுதாய/தொழில்நுட்ப மாற்றம், இன்று ஏறக்குறைய முழுமை அடைந்துவிட்டது.

வட அமெரிக்கச் சாலைகள் மிகவும் நீண்டவை. ஒரு கோடியிலிருந்து மறு கோடி செல்ல பல நாட்கள் ஆகும். 5 முதல் 8 நாட்கள் ஒரு பயணத்திற்கு என்பது மிகவும் சாதாரண விஷயம். இதில் பெரும்பாலும் சரக்குகளை லாரிகள், கப்பல் துறைமுகத்திற்கும், பெரிய கடைகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் எடுத்துச் செல்லும். 24 மணி நேரத்தில், பல லாரி ஓட்டுனர்கள், 16 மணி நேரம் வரை லாரி ஓட்டுகிறார்கள்.

அதைப் போலவே, பல நகரங்களிலும், விதவிதமான  டாக்ஸி அமைப்புகள் உள்ளன. விமான நிலையம் செல்லும் பிரத்யேக டாக்ஸிகள், நகர மையத்தில் மட்டுமே பயணிக்கும் டாக்ஸிகள் மற்றும் ஊபர், ஓலா போன்ற புதிய இணைய டாக்ஸிச் சேவைகள் இவற்றில் அடங்கும். இவைப் பெரும்பாலும் கார்களை ஓட்டுவதை வாழ்வாதாரமாகக் கொண்ட அமைப்புகள்.

என் பார்வையில், முதலில் நடக்கக்கூடிய சமுதாய மாற்றம், தானோட்டிக் கார்களால், வாகனம் ஓட்டுபவர்களின் வாழ்வாதாரம். ஆண்டு முழுவதும் எளிதாகப் பயணிக்கவல்ல பகுதிகளில் (உதாரணம் கலிஃபோர்னியா, நிவேடா, அரிஸோனா, டெக்ஸஸ் போன்ற மாநிலங்கள்) இவ்வகைச் சரக்குப் போக்குவரத்து தானோட்டி லாரிகளுக்கு மாறும் வாய்ப்புள்ளது, இதே பகுதிகளில், ஊபர் மற்றும் சில டாக்ஸிச் சேவைகளும் தானோட்டிக் கார்களுக்கு மாறலாம். அரசாங்கங்கள், தொழிற்சங்க அமைப்புகள் என்று மிகவும் சிக்கலானப் பிரச்னையாக, இது மாறலாம். லாரி நிறுவனங்கள் மற்றும் ஊபர் போன்ற அமைப்புகளுக்கு, வாகனங்களை அதிக நேரம் பயன்படுத்துவது மிகவும் முக்கியம். சரியான மேலாண்மையுடன், ஒவ்வொரு மணி நேரமும் காசு பண்ணலாம். தொழிலாளர்க் கொந்தளிப்பு இதனால், பல வருடங்கள் நீடிக்கும் வாய்ப்பும் உள்ளது. தானோட்டி வாகனங்களால், நிறைய லாபம் இருப்பதால், இவ்வகை நிறுவனங்கள் ரிஸ்க் எடுக்க அவசியம் முற்படும்.

இவ்வகைத் தானோட்டி லாரிகள், நெடுஞ்சாலையில் பயணித்தால், தானியங்கிப் பெட்ரோல் பம்புகளும் தேவை. இவ்வகைத் தானியங்கி பம்புகள் உருவாக்கப்பட வேண்டும். இல்லையேல், இவ்வகை லாரிகள், 5 முதல் 8 மணி நேரம் வரைதான் பயணம் செய்ய முடியும். இன்று சோதிக்கப்படும் தானோட்டி லாரிகள் லாஸ் ஏஞ்சலஸ் மற்றும் சான் ஃப்ரான்ஸிஸ்கோ நகரங்களுக்கு இடையில், அதாவது 5 மணி நேரப் பயண இடைவேளையில் சோதிக்கப்படுகின்றன.

நிறுத்துமிடம்

தானோட்டிக் கார்களுக்கு, அதாவது டாக்ஸிகளுக்கு நிறுத்துவதற்காக,  நகருக்கு வெளியே பெரிய இடங்கள் தேவைப்படும். இவ்வகை நிலங்களை ஒதுக்குவதில் உள்ள ரியல் எஸ்டேட் பிரச்னைகளை, நகர அரசாங்கங்கள் சந்திக்க வேண்டி வரும். இதனால், பல அரசியல் நெருக்கடிகளும் உருவாகலாம்.

தானோட்டிக் கார்களுக்கான வாடகையும் மிகவும் சர்ச்சைக்குள்ளாகும். இவற்றின் கட்டணம் மனித டாக்ஸியைவிடக் குறைவாக இருக்குமா? ஊபரைப் போல, நெருக்கடிக் காலங்களில் கட்டணத்தைக் கூட்டிக் கடுப்படிப்பார்களா? இவை எல்லாம் பொருத்திருந்து பார்க்க வேண்டும்.

காவல்துறை சிந்தனை

சமீபத்தில், தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்ட ஒரு போலீஸ் வல்லுனரிடம் தானோட்டிக் கார் ஆர்வலர்கள் கனடாவில் ஒரு பேட்டி எடுத்தார்கள், பல புதிய காவல்துறை சார்ந்த சமூக விஷயங்களை இந்த வல்லுனர் முன்வைத்தார். சாலைகளில், இவ்வகை வாகனங்கள் வந்த பிறகே இதன் முழுச் சமுதாயத் தாக்கத்தை நாம் அறிய முடியும். இவை வெறும் இன்றைய நம் ஊகம் என்றுதான் சொல்ல வேண்டும்.

  1. முதல் விஷயமாக, காவல் துறைக்கு, மிக முக்கியமான விஷயம், ஒரு காரின் சொந்தக்காரர் யாரென்று தெரிய வேண்டும். எந்த ஒரு கார் சம்பந்தப்பட்ட குற்றம் நடந்தாலும், சம்பவத்தில் இடம்பெற்ற காரின் சொந்தக்காரரைப் பொறுத்தே தண்டனை வழங்கப்படுகிறது. இதனால், தானோட்டிக் கார்கள் ஒரு நகருக்குள் வந்தால், அதன் உண்மையான சொந்தக்காரரின் பெயர்களை ஒரு பட்டியலிட வேண்டும். ஏதாவது ஒரு விபத்தில் தானோட்டிக் கார் ஈடுபட்டிருந்தால், அந்தக் கார் எவரது பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது காவல் துறை மற்றும் நீதித் துறைக்கு மிகவும் முக்கியம். இன்று நகரில் உள்ள டாக்ஸிகள் ஒவ்வொன்றும் ஒரு தனிநபர் பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்கும். ஊபர் கார்களும் அதன் சொந்தக்காரரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்கும். தானோட்டிக் கார்களும் இப்படியே பதிவு செய்யப்பட வேண்டும் என்பது காவலர்களின் எண்ணம்.
  2. இரண்டாவது விஷயம், தானோட்டிக் கார்கள் சட்டப்புறம்பான பொருட்களைக் கடத்தப் பயன்படுத்தப்படலாம். ஒரு தானோட்டிக் கார்களில் ஏராளமான துப்பாக்கிகளைக் கடத்தி, மாட்டிக் கொண்டால், யார் இதைக் கடத்துகிறார்கள் என்று எப்படிச் சொல்வது? இதனாலேயே காவல் துறையினர், அனைத்து வாகனங்களும் ஒரு தனி நபர் பெயரில் பதிவு செய்வது அவசியமென்று சொல்லி வருகிறார்கள்.
  3. மூன்றாவது விஷயம், தானோட்டிக் கார்களுக்குத் தனியான வரைபாதை சில நகரங்களில் தேவைப்படலாம். இதற்குக் காரணம், பெரும்பாலும் மனிதர்கள் ஓட்டும் கார்களே. மனிதர்கள் கார்களைச் சீராக ஓட்டுவதில்லை. ஆரம்பத்தில் பெரும்பாலும் மனிதர்கள் ஓட்டும் வாகனங்களுடன், இவை பயணம் மேற்கொள்ள வேண்டும். இன்றைய சோதனைக் கார்கள் இந்த விஷயத்தில் நன்றாகவே இயங்கியுள்ளன. ஆனாலும், இவை கோடியில் ஒரு வாகனம் என்று இருக்கும் பொழுது ஏற்படும் வெற்றி, கோடியில் பல லட்சம் வாகனங்களாக மாறும் பொழுது உருவாகும் பிரச்னைகள் வேறுபட்டவை. பெரும்பாலும், இவ்வகைத் தானோட்டி வாகனங்கள், வேக எல்லைக்குள் பயணிக்கும். மனிதக் காரோட்டிகளுக்கு இது எரிச்சலூட்டலாம்! குறுக்கே வெட்டிப் பயணம் செய்யும் மனித கார்களுடன் இவை சமாளிக்கத் திண்டாடலாம். இதனால், தானோட்டி வாகனங்களுக்குத் தனியான வரைபாதைகள் அமைக்க வேண்டி வரலாம். இப்படித் தனி வரைபாதை அமைத்தால், அதற்கான செலவு மற்றும் பராமரிப்புச் செலவை யார் ஏற்றுக் கொள்வார்கள்?  ஊபர் போன்ற பயனடையும் நிறுவனங்கள் இதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது ஒரு வாதம். நகரப் போக்குவரத்து நெருக்கடி குறைவதால், பொது மக்கள் இந்தச் செலவை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது இன்னொரு வாதம். போக்குவரத்து செரிசல் உண்மையிலேயே குறையுமா என்பது திட்டவட்டமாகச் சொல்ல இயலாத நிலையில், இது ஒரு சர்ச்சையான விஷயம் என்பதில் ஐயமில்லை.
  4. நான்காவது, சாலையில் பழுதடைந்து தானோட்டிக் கார் நின்றுவிட்டால், அதனை அப்புறப்படுத்துவது ஒரு பிரச்னை. இது நகரத்தின் பொறுப்பு என்றாலும், பழுதடைந்த கார் எப்படி அப்புறப்படுத்தும் நிறுவனத்திற்குத் தெரியப்படுத்தும்? இதற்காகச் சரியான ஒரு கட்டுப்பாடு அமைப்பு ஊபர் போன்ற நிறுவனங்களிடம் இருக்க வேண்டும். அப்புறப்படுத்துவதற்கும் தகுந்த கட்டணத்தை நிறுவனம் கட்ட வேண்டும்.
  5. ஐந்தாவது, ஒரு வேடிக்கையான போலீஸ் சிந்தனை – ஆனால், சாத்தியமான ஒன்று. ஒரு ஊபர் தானோட்டிக் கார் ஒரு சாலையில் பயணம் செய்கிறது என்று வைத்துக் கொள்வோம். நகரில் உள்ள இளைஞர்கள் இக்காரின் முன் வேகமாகச் சென்று திடீரென்று ப்ரேக்கைப் போடுவது, அல்லது அதன் வெகு அருகாமையில் காரைச் செலுத்துவது என்றுக் காரை குழப்ப முயற்சிக்கலாம். இதனால், இவ்வகை stunting செயல்களால் பல பிரச்னைகளை உருவாக்கலாம். இவ்வகை சூழலில் தவறு யாருடையது என்று துல்லியமாக சொல்வது கடினம். விமானங்கள் போல, கருப்புப் பெட்டிகளைத் (black box) தானோட்டிக் கார்களில் இருக்க வேண்டும் என்று காவல் துறையினர் சொல்லி வருகின்றனர். பல வகை சூழல்களில் ஏற்படும் விபத்துக்களுக்கு இது ஒன்றே வழி.
  6. ஆறாவது, விபத்துக்களில் சேதம் நேரிட்டால், யார் கட்டணம் கட்ட வேண்டும் என்பது. இதைப் பற்றி விவரமாகக் காப்பீடுப் பகுதியில் பார்ப்போம்.

அருகாமை விமானப் பயணங்கள்

இவ்வகைத் தானோட்டிக் கார்களின் வெற்றியைப் பொறுத்து, அரை/முக்கால் மணி நேர விமானப் பயணம் பெரிதும் பாதிக்கப்படும். அரை/முக்கால் மணி நேரத்தில், சிறு விமானங்கள், 300 முதல் 600 கி.மீ. வரையே பயணம் செய்கின்றன. விமானப் பாதுகாப்பு நேர விரயம், விமான நிலையப் பயண நேரம் என்று விமானப் பயணம் இன்று 4 முதல் 5 மணி நேரம் வரை ஆகிறது. அத்துடன், விமானம் சில குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே நமக்கு வேண்டிய ஊருக்குப் பறக்கிறது. தானோட்டிக் கார்கள், இதே தூரத்தை, 3 முதல் 6 மணி நேரத்திற்குள் எந்த நேரத்திற்கு வேண்டுமானாலும் பயணம் செய்ய வசதியாக இருக்கும். இதனால், சின்ன விமான நிறுவனங்கள் நஷ்டப் படலாம். பலருக்கு வேலையும் போகலாம். விமானத் தயாரிப்பாளர்களும் பாதிக்கப்படலாம்.

தனியார் தானோட்டிக் கார்களினால், ஏற்படும் சமூக மாற்றங்கள் நாம் நினைத்து கூடப் பார்க்க முடியாதவை. என் பார்வையில், இது குறைந்தபட்சம், ஒரு 25 ஆண்டுகளுக்கு அப்பால் உள்ள விஷயம் என்பதால், இதைப் பற்றி எழுதவில்லை.

இங்கு சொல்லப்பட்ட மாற்றங்கள் இன்றைய ஊகங்கள். நாம் நினைத்துப் பார்க்காத பல மாற்றங்களும் நமது அரசியல், சமூக, சட்டங்களில் ஏற்படும் என்பது நிச்சயமாகச் சொல்லலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.