மறைந்து கொண்டிருக்கிறாய், நீ…

தமிழில்: எம். நரேந்திரன்

இன்று காலை படியிறங்கி கீழே வந்தபோது குக்கீ மாயமாக மறைந்து விட்டதை உணர்ந்தேன். அடுத்து என்ன செய்யவேண்டும் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். அவசரக்கால அதிகாரப்பூர்வ விதிகளின்படி கண்ணுக்கு தெரியாமல் மறைந்து போனவைகளுக்கான பிரத்தியேக துறைக்கு போன் செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட குரலைப் பின்தொடர்ந்து என்னுடைய சமூக பாதுகாப்பு எண்ணையும் அஞ்சல் குறியீட்டு எண்ணையும் அழுத்த வேண்டும். விலங்குகள் திடீரென காணாமல் மறைந்து போனதை பதிவு செய்ய எண் இரண்டை அழுத்தவேண்டும். வீட்டு விலங்குகளுக்கு எண் மூன்று. பின்பு வரும் ஒரு சிறிய ஒலியைத் தொடர்ந்து தெளிவாகவும் சத்தமாகவும் ‘பூனை’ என்று தொலைப்பேசியில் சொல்ல வேண்டும். பெண் குரலில் ஒரு பூனைக்கான அளவுரு வரையறைகள் எனக்கு விவரிக்கப்படும். அது காணாமல் போன என் பூனையை ஒத்து இருந்தால் # பட்டணை அழுத்தி 15 நொடிகளில் விபரங்களைப் பதிவு செய்யலாம். சிறு இசையொலி என் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதை உறுதி செய்யும். அதைத் தொடர்ந்து தொடக்கத்தில் ஒலித்த அதே அழகான குரலில் பிற்பாடு என் கோரிக்கையை ரத்து செய்யவோ அல்ல மேலதிக தகவல்களை சேர்க்கவோ வழிமுறைகள் சொல்லப்படும்.

ஆனால் நான் போனை எடுத்து உன்னுடைய எண்ணை அழுத்தினேன். உன்னால் தீர்க்க முடியாத பிரச்சினைகளையே எப்போதும் உன்னிடம் சொல்லிக்கொண்டிருக்கிறேன். ஏதோ இப்படி பேசிப் பெருக்கியே வருத்தங்களைக் கரைத்துவிட முடியும் என்பதைப் போல.

“குக்கீ போயிடுச்சு” என்று சொல்லி உன் பதிலுக்காக காத்திருந்தேன்.

என் மறுமுனை சப்தமில்லாமல் நின்றது.

“போன் பண்ணி புகார் கொடுத்திட்டியா?” என்று கேட்டாய். உன்னுடைய குரல் யாரோ ஒருவரின் செல்லப் பிராணி அதுவும் நாம் இதுவரை சந்தித்திராத தூர தேசத்து மனிதரொருவரின் பூனை அது என்பதைப் போல சகஜமாய் இருந்தது.

“நான் பண்ணலை” என்றேன். “மனம் சோர்வாய் இருக்கு” சேர்த்துக் கொண்டேன். நான் அடிக்கடி மன அழுத்தத்தில் சோர்ந்து போவேன். ஆனால் அதற்கு ஒரு நல்ல காரணம் எல்லோருக்குமே இப்போது இருக்கிறது.

“ஐயம் ஸாரி” என்றாய் பதிலுக்கு.

“வயர்களையெல்லாம் கடித்து வைக்க குக்கீக்கு ரொம்ப பிடிக்கும்” என்றேன்.

“தெரியும்” என்றாய். இத்தருணத்தில் என்னோடு துணையிருக்க பிரியப்படுவதாய் நீ சொல்லவேயில்லை. நானும்தான்.

அதற்கு மேல் சொல்வதற்கு என்னிடம் ஏதுமில்லை. போனை வைத்துவிட்டேன். சில நேரங்களில் உன்னை உடனே திரும்ப அழைத்திருக்கிறேன் நீ ரிஸீவரை கையில் எடுக்கும் சப்தம் கேட்பதற்காகவே. நம் இருவருக்குமான அந்த சமப் பொழுதில், ஒரு முனையிலிருந்து மிக நேர்த்தியாகத் திரிக்கப்பட்ட வயர் கம்பிகளாய் பல நூறு மைல் தாண்டி என்னை வந்தடையும் ஒரு பிளாஸ்டிக் துண்டை உன்னுடைய கைகள் ஏந்தியிருப்பதை உணர்வதற்காகவே. உன் குரல் மறைந்து போனாலும் நீ இன்னும் இருக்கிறாய் என்று தெரிந்துகொள்ளவே. ஆனால் சமீபமாக நான் அப்படிச் செய்வதில்லை. நீ போனை எடுக்காமல் போகும் அந்த ஒரு நாளின் மீது பயம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

~oOo~

உலகப் பேரழிவு மிக அமைதியாக நிகழ்ந்து கொண்டிருந்தது. அது தனக்கென தனித்துவமான ஒரு முறைமையை அழகியலைக் கைக்கொண்டிருந்தது. தெய்வீக அழகு என்றே அதைச் சொல்லலாம். மிக நீண்ட காலமாய் நீடித்தது.

ஆயுதங்களோடு பதுங்கு குழிகளில் அடைந்து கொண்டே இந்தப் பேரழிவை எதிர்கொண்டுவிடலாம் என்பதைப் போல மக்கள் தயாராயினர். சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர், கேன்களில் பாதுகாக்கப்பட்ட சோளம், பால் பவுடர், பேட்டெரிக்களைத் தங்களோடு பதுக்கிக் கொண்டனர். “அழிவிற்கு பிறகான புது உலகில் வாழச் செய்யவேண்டியவை இவைதான்” என்ற தலைப்பில் புத்தகங்கள் கூட எழுதி வெளியிட்டனர். அத்தியாவசியமான ஏதாவது ஒன்றிரண்டு பூமியில் இல்லாமல் போயிருந்தாலும் புது உலகு கிட்டத்தட்ட தற்போதையதைப் போலவே இருக்கும் என்பது அவர்களின் கற்பனை. உதாரணமாக அவர்கள் இப்படி யோசித்திருக்கக் கூடும். தப்பிப் பிழைத்தவர்கள் திரும்ப நுழைகையில் பூமியிலிருந்து செடி, காய் கனிகளின் வாழ்வு முற்றாக நீங்கியிருக்கும். முதலில் விலங்குகளெல்லாம் பித்தாகி திரிந்து பின் பட்டினியில் சாகும். முடிந்தளவு அவைகளை உப்புக்கண்டம் போட்டு பத்திரமாக வைக்க வேண்டியது அவசியம். நீங்கள் பாதுகாப்பான ஓரிடத்தில் வளர்ப்பதற்கென அத்தியாவசியமான சில செடி விதைகளை வைத்திருக்க வேண்டும். நீங்கள் எடுத்துப் பதுக்கி வைத்திருக்கும், எந்த நோய் நொடியும் அண்டியிராத தரமான மண்ணை இதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். அடுத்து நீங்கள் ஒரு குழுவை உருவாக்க வேண்டும். தங்கமான மனதுடைய ஒரு பலசாலி, ஒரு விஞ்ஞானி வகையறா, ஒரு பொறியாளன், ஒரு குழந்தை மற்றும் நீங்கள் காதல் செய்யக்கூடிய சாத்தியமுள்ள ஒரு நபர், காதல் முளைக்கும் வரை நீங்கள் எஞ்சியிருந்தால் உதவும்

இப்பூமியின் முடிவு இப்படி நிதானமாகவும் இவ்வளவு விநோதமாகவும் இருக்கும் என்று யாருமே நினைத்துப் பார்க்கவில்லை. எல்லாம் தன்னிருப்பிலிருந்து அப்படியே மாயமாகி வெளியேறியது, தம்மையே முழுமையாக மறந்துவிட்டவை போல. இந்நிலையில் சாவியை தொலைத்தால் தேடிக்கொண்டிருக்க வேண்டியதில்லை. வீட்டு ஓனரிடம் உபரியாக இருக்கும் சாவியை கேட்டு வாங்கி இம்முறை இரண்டு நகல்களாக போட்டு எடுத்துக் கொள்ளலாம்தான். இப்படி சாவி மறைந்துபோகும் போக்கு தொடருமென்றால் இந்த இரண்டாவது நகல் உதவியிருக்கும். அல்லது, இதையே ஒரு குறிப்பாக புரிந்து கொண்டு திசையற்று தனக்கான மறையும் புள்ளியை தேடி அனைத்தையும் அப்படியே விட்டுவிட்டு உலக வெளியில் நடந்தும் போய்விடலாம். அதாவது இதை சிகாகோவில் இருக்கும் என் சகோதரர் வீட்டிற்குப் நான் போய்விடுவது என்றும் எடுத்துக்கொள்ளலாம். என்னிடம் கொடுப்பதற்கென்று அவர் வீட்டு சாவி கூடுதலாக ஒன்று வைத்திருப்பாராக இருக்கும்.

இந்தப் பேரழிவு இருப்பிலிருந்து ஒவ்வொன்றையும் பிடுங்கி வெளியே எறிந்துகொண்டிருப்பது ஒரு விதத்தில் அழகாய்த்தான் இருந்தது. ஓரத்தில் ஒரு சிறிய பெட்டியை அழுத்தியவுடன் இணைய வலைப்பக்கம் விரித்திருந்த உலகம் மூடிக்கொள்வதைப் போல அவ்வளவு சுலபம்; அவ்வளவு சுத்தம். அதில் வேடிக்கையும் கலந்திருந்தது; ஒரு குண்டு மனிதன் கைவிடப்பட்ட கடைகளிருந்த வீதியில் நடந்து போகும்போது கீழே குனிந்து பார்ப்பான். அவன் காற்சட்டை காணாமல் போய் என்றோ வாங்கிய ஹாலோவீன் பேய் பொம்மைகள் போட்ட ஜட்டி வெளியே தெரியும்படி நடந்துக்கொண்டிருக்கிறோம் என்பது தெரியவரும். இந்த மாதிரியான நகைச்சுவைகள்தான்.
இதைப்போலப் பல காணொளி காட்சிகள் இணையத்தில் எப்போதும் தென்படும்; ஒருநாள் இணையமும் இல்லாமல் போனது.

~oOo~

மிச்சிகன் ஏரிக்குள் தண்ணீரின் மேல் நீளும் நடை பாலத்தின் மீதிருந்த ரங்கராட்டின பெர்ரிஸ் சக்கரத்தைப் பார்த்துவிட வேண்டுமென்று நினைத்தேன். அது எப்போது மாயமாக மறையுமென்று தெரியவில்லை. எப்படியாவது முயற்சி செய்து அதைப் பார்க்கும் கடைசி ஆள் நானாக இருக்க வேண்டுமென்ற எண்ணம் இருந்தது. அதற்கு நிறையக் காத்திருப்பும் கண்காணிப்பும் மேலதிக உழைப்பும் தேவைப்படும். காலம் முடியும் இத்தருவாயிலும் செய்வதற்கென்று வேறு விஷயங்களும் இருக்கத்தான் செய்தன. ஒரு பிளாஸ்டிக் பையில் இரண்டு ஆப்பிள்களைப் போட்டு எடுத்துக்கொண்டு, சுலபமாக செய்யக்கூடிய காரியமாயிருந்தும், வீட்டை பூட்டாமலேயே வெளியேறி நடந்தேன். லிஃப்டில் தரை தளத்திற்கு வந்து கிழக்கு ஜாக்சன் டிரைவில் தண்ணீர் தெரியும் விளிம்பை நோக்கி நடந்தேன். பின்பு அங்கிருந்து நெடுஞ்சாலையோரம் இருந்த கைப்பிடி கம்பியை என் ஒற்றைக் கையுறை அணிந்த கையால் பிடித்தபடி தொடர்ந்தேன். வாலிபர்கள் நிரம்பியிருந்த ஒரு சொகுசுக் கார் என்னைக் கடந்தபோது அதிலிருந்த ஒருவன் என்னை நோக்கி ஏதோ புரியாத வார்த்தைகளில் கத்தினான். முன்னெப்போதோ அவை வசவு வார்த்தைகளாக இருந்திருக்கக் கூடும். அது ஒரு பனிக்காலம் ஆனால் அவ்வளவு குளிர் இல்லை. வானிலையில் மாற்றங்களே அனேகமாக இல்லாமல் போனது மற்ற எவற்றையும் போலவே. இன்றைய நாள் நேற்றையதைப் போலவே இருந்தது: தூங்கி வழியும் காற்றும் வெளிறிய நீல வானும், மேகங்கள் இல்லாத ஆனால் துல்லியமற்ற மூடுபனி கவிந்ததை போன்ற ஒரு வெள்ளை; மெலிந்து கொண்டிருக்கும் காற்று மண்டலமாக இருக்க கூடும் அது.

மேம்பாலத்தின் நடைபாதையில் சீகல் பறவைகள் தன் அழுக்கான வெண் உடம்பை ஒன்றின்மீது ஒன்று நெருக்கமாய் அழுத்தி அண்டி உட்கார்ந்திருந்தன. அவை எதைக் கண்டாலும் தின்றுவிடும் போல – ரொட்டி துண்டுகள், மரப் பட்டைகள், துடைத்தெறிந்த காகிதங்கள். நாம் கழிவுகளை கொட்டி நிரப்புவதைக் காட்டிலும் வேகமாக சிந்திக்கும் திறனையே இழந்து வரும் இந்த மங்கும் உலகில், பிழைத்திருப்பதற்கென்றே படைக்கப்பட்டவை இந்தப் பறவைகள். ஒரு சின்ன பிளாஸ்டிக் சிங்க பொம்மையை விழுங்கும் முயற்சியில் சீகல் பறவையொன்று அதீத பொறுமையுடன் தன் அலகால் சிடு சிடுவென கொத்திக் கொண்டிருந்தது. அவைகளுக்குப் பின்னால் பாலத்தின் ஒரு ஓரத்தில் பூதாகரமாக உயர்ந்து நின்றது பெர்ரிஸ் சக்கரம். இத்தனைக்கும் நான் முதல்முறை பார்த்தபோது தோன்றியதைப் போல அது அவ்வளவு பெரியதல்ல. சக்கரத்தின் ஆரை கம்பிகள் பல காணாமல் போயிருந்தன. சுழலும் சிகப்பு இருக்கை வண்டிகளும் தொலைந்திருந்தன. பார்ப்பதற்குத் தொடர்ந்து ஒரே இடத்தில் குத்து வாங்கிய ஒருவரின் முகவாய் போல இருந்தது.

அதனருகே வெட்டவெளியில் நடந்து சென்றேன் ஆனால் என்னை யாருமே பார்க்கவில்லை. அடிப்பாகத்தை நெருங்கிப் பார்த்தபோது அதன் செயலியக்க கருவிகள் பூட்டு போட்டிருந்தன. கார்ட்டூன் படங்களில் வருவதைப் போல பொருத்தமேயில்லாத பெரிய நெம்புகோல் ஒன்று சக்கரத்தின் வேகத்தை மாற்றியமைக்க இருந்தது. வழி மறித்துப் போட்டிருந்த சங்கிலியின் அடியில் நுழைந்து தரை நெருங்கி ஆரம்ப நிலையிலிருந்த முதல் இருக்கை பெட்டியில் ஏறி ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்கு அசைத்து ஊஞ்சலாட்ட முயற்சி செய்தேன்; பலனில்லை. பாதுகாப்பு கம்பியை விலக்கிவிட்டு தண்ணீரை பார்த்தவாறு திரும்பி அமர்ந்தேன். எப்பவும் போல அலைகள் கரையை நக்கி ஈரமாக்கிக் கொண்டிருந்தது. தண்ணீர் பின்னிழுத்து மறைந்தால் உடனே அடுத்த அலை அதன் இடத்தைப் பிடித்துக்கொள்ளும். அதிலிருந்து தவறுவதோ இடைவெளியோ இருப்பதேயில்லை. பிளாஸ்டிக் பையில் கை நுழைத்துப் பார்த்தபோது என்னிடம் ஒரேயொரு ஆப்பிள் மட்டுமே இருந்தது.

இந்தப் பேரழிவு எல்லா விதமான பொருட்களையும் காணாமல் செய்துவிடுகிறது. நினைவுகளைக் கூட முழுதாக விழுங்கிவிடுகிறது. உன் ஞாபகங்களிலிருந்து நான் மறைந்து போகும்போது உன்னருகில் இருக்க விரும்பவில்லை. உன் நினைவிலிருந்து அவ்வளவு சுலபமாக நான் தவறி விழுவதைப் பார்க்க விரும்பவில்லை, உனக்கு முன்னரே நான் உன்னை மறந்து போவேன் என்று நம்பிக்கொண்டிருந்தேன். ஆனால் அந்த நம்பிக்கை பொய்த்து போகும் என்று தோன்றும்போதெல்லாம் உன்னை அழைத்து உன்மேல் பொய்க் கோபத்தில் எரிந்து விழுந்திருக்கிறேன். ஏதோ மறக்கப்படுவோம் என்ற பயத்தில் நீதான் முதலில் வீட்டை விட்டு, ஊரையே விட்டு, தொடர்வதற்கோ தொலைப்பதற்கோ எந்த அறிமுகமுமற்ற ஊருக்குக் குடிபெயர்ந்துவிட்டாய் என்பதைப் போல. உண்மையில் இதை யாருக்கு யார் செய்தார்கள் என்பதை நீ மறந்திருப்பாய் என்று நினைத்தேன். இன்னும் மறக்கவில்லை நீ.

~oOo~

முதலில் பொருட்களெல்லாம் மறையத் தொடங்கியபோது வேடிக்கையாக இருந்தது, மோசமான ஒரு திரைப்படத்தின் தொடர்ச்சி அறுபடல்கள் போல. ஒருமுறை பூக்கள் சில கண்முன்னே காணாமல் போனபோது “ப்பூஃப் “, “போய்ங்க்” எனப் பின்னணியில் ஒலி கொடுத்து உரக்கச் சிரித்து விளையாடினோம். வேகமாக காலியாகிக்கொண்டிருந்த உலகம் கூட அந்நாட்களில் முழுமையானதாகத் தோன்றியது. தொடர்ந்து சப்தமெழுப்பி விளையாட முடியாதபடி நிறையப் பொருட்கள் மறையத் தொடங்கின. உலகில் உள்ள எதுவும் திரும்ப வரமுடியாமல் போய்விடக்கூடும் என்பது வருந்தச்செய்தது. வீட்டு வேலைகள் அதிகம் செய்யும் தேவை இனி இருக்காது, நம் வாழ்வு தன்னைத் தானே சுத்தம் செய்யத் தொடங்கியிருக்கிறது என்று சொல்லி சிரிப்பாய். ஆனால் நீதான் பாத்திரங்களை கழுவி, நாற்காலி மேஜைகளுக்கடியில் மூலை முடுக்கெல்லாம் கூட்டிப் பெருக்கி, தினமும் சுத்தமான ஆடை உடுத்தி, படுக்கையை திருத்தி வீட்டு வேலைகளையெல்லாம் இழுத்துப் போட்டு செய்வாய். கண்ணாடி டம்ளர்கள் போய்விட்டபோது பேப்பர் தாள்களை மடித்து குடுவைகள் செய்தாய். பேப்பர்களும் போனவுடன் துண்டு துணிகளை கொண்டு செய்து பார்த்தாய். தண்ணீரை துணியால் எப்படிக் கொள்வது. எந்தத் தடங்களையும் இயல்பாய் கடப்பவன் நீ. நான் அதற்கு நேரெதிர்.

மறைந்து போவது தொடங்கிய முதலிரண்டு வாரங்களில் செய்தி நிலையங்கள் இதற்கு ‘மறை பேரழிவு’ எனப் பெயரிட்ட போதுதான் இது என்னவென்று தெளிவு கிடைத்தது. இதிலிருந்து திரும்ப மீள முடியாது என அறிவிக்கப்பட்ட நாளில் நான் அலுவலகத்திலிருந்து மதிய இடைவேளையில் வெளியேறி நடந்தேன். எங்கு போகிறேன் என்று யாரிடமும் சொல்லவும் இல்லை காப்பீடு மற்றும் ஓய்வூதிய திட்டங்களையெல்லாம் ரத்து செய்துவிடலாமா என்று கேட்டு வந்த மின்னஞ்சல்களுக்கும் பதில் அனுப்பவில்லை. இந்த இடத்திற்கு இனி திரும்பப்போவதில்லை என்பதை உணர்ந்தே வெளியேறினேன். சுரங்க நடைபாதையை அடைத்து விட்டதினால் ப்ரூக்ளின் பிரிட்ஜை கடந்து மைர்டெல் அவென்யூவில் இருந்த நம்முடைய அபார்ட்மெண்டுக்கு நடந்தே வந்தேன். அந்நாளில் உலகம் அப்போதும் நெரிசலுற்றிருப்பதாகத்தான் பட்டது. காற்றுமண்டலத்திற்கு அப்பாலுள்ள வெறுமையை மூடிமறைக்க ஏதுவாக மேலே வானம் சாயம்போகாத தீவிர நீலமாக இருந்தது. கார்கள் வரிசையாக மேம்பாலத்தின் மீது முட்டி மோதிக்கொண்டு நின்றிருந்தன. இடம்பெயர உயர்ந்து பறக்கும் பறவைகளின் சத்தம் போல ஓட்டுநர்கள் சண்டையிட உத்தேசமில்லாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஹார்ன் அடித்துக் கொண்டிருந்தார்கள்.

வீடு வந்து சேர்ந்தபோது மதியம் தாண்டியிருந்தது. நீ ஆறரை மணிக்குத்தான் வருவாய். செய்தித்தாள் எடுத்துப் படிக்க முயன்று முடிந்த மட்டும் எல்லா மாய மறைவு செய்திகளையும் படித்து முடித்தேன். மற்ற செய்திகளெல்லாம் குறைந்து கொண்டே வருகிறது. சில இடங்களில் தாளின் சாம்பல் நிறம் தெரியுமளவிற்கு வெற்றிடமாகவே இருந்ததைப் பற்றி யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. ஏழரை தாண்டி எட்டு ஆன பின்னும் நீ வீடு வந்து சேரவில்லை. குக்கீக்கு உணவு வைத்துவிட்டு அவள் குடிக்க தண்ணீரும் நிரப்பி வைத்தேன். அழ ஆரம்பித்து கட்டுப்படுத்தி மீண்டும் நிறுத்தினேன். அழிந்த கண் மையை சரிசெய்து முகத்தை பழையபடி வைத்துக்கொண்டேன். நீ வந்தபோது மணி ஒன்பதை நெருங்கியிருந்தது. உன்னிடமிருந்து வித்தியாசமான வாசம் எதுவும் வெளிவரவில்லை. வியர்வையோ சிகரெட்டோ மது வாசமோ எதுவும் வெளிவரவில்லை. எங்குதான் இருந்தாய் இவ்வளவு நேரம்? நீ வேலையிலிருந்து வருவதற்கே தாமதமாகிக் கொண்டிருந்தது. நீ கேள்விப்படவில்லையா? “நிச்சயமானது”, “மீளமுடியாதது”, “இறுதி நாட்கள்”. இந்த வார்த்தைகள்தான் திரும்பத் திரும்ப பேசப்படுகிறது.

நீ என்னை அணைத்தபோது என் கண்ணீர் துளிகளின் ஈரத்தடம் உன் சட்டையில் படிந்தது. உன் நெஞ்சருகிலிருந்து விலகியபோது அவை மங்கிய இரு சிறுகண்களென என்னைத் திரும்பி நோக்கியது.

“ஏன் இப்படிச் செய்தாய்” எனக் கேட்டேன். “எங்கே போயிருந்தாய் இவ்வளவு நேரம்?”

“வேலையிலிருந்தேன்” என்றாய். “நிறைய பேர் விட்டுச் சென்றுவிட்டார்கள், உனக்கு தெரியும்தானே? டோபி, மேரியான் மற்றும் புதிதாக சேர்ந்த பயிற்சி ஊழியர்கள் அனைவரும். தேவைக்கு இப்போது வேலையாட்களே இல்லை எங்களிடம். இரண்டு புதிய கட்டுமான உத்தரவுகள் வேறு என் கைவசம்.”
என் உள்ளங்கைகளில் உன் முதுகு கதகதப்பாகவும் திடமாகவும் அழுந்தியிருந்தது.

“கட்டியெழுப்புவதற்கு இனி எதுவும் இல்லை. உலகம் நழுவிக்கொண்டிருக்கிறது.” என்றேன்.

“எனக்குத் தெரியும்” என்று பதில் சொன்னாய். “அதைத் தடுக்க நம்மால் செய்யக்கூடியது எதுவும் இல்லை”.

“அதையேதான் நானும் சொல்கிறேன்”

நீ என்னையே பார்த்துக் கொண்டிருப்பதை நான் பார்த்தேன். நாமிருவரும் ஒரே விஷயத்தை சொல்வது போலத்தான் எனக்கு கேட்டது இருந்தாலும் முற்றிலும் அது எப்படி வேறு வேறு அர்த்தம் கொண்டதாக இருக்கமுடியுமென்றுதான் எனக்கு விளங்கவில்லை. அன்றே பின்னிரவில் உன்னுடைய வேலையை விட்டுவிட்டு மிச்சமிருக்கும் பகற்பொழுதுகளிலும் என்னுடனேயே இருக்கும்படி கேட்டேன். பிழைத்திருப்பதற்கான தயாரிப்புகளில் ஈடுபடலாம். தோட்டம் ஒன்றை அமைக்கும் வசதி கொண்ட வீட்டை வாடகைக்கு எடுக்கலாம். திறந்து மூடுவதற்கு ஏதுவான ஜன்னல்கள் கொண்ட வீடு. பகலெல்லாம் சுற்றி நடந்தலைந்து இன்னும் இங்கு வெகுகாலம் தங்காமல் போகப் போகின்றவற்றை பற்றியெல்லாம் அறிந்து கொள்வோம். ஆனால் நீ மாட்டாய். உனக்கு கட்டிட கலைஞனாக இருக்கவே விருப்பம். முற்றான அழிதலை நோக்கி ஒவ்வொன்றாக கழியத் தொடங்கியிருக்கும் இவ்வுலகில் புதிதாக ஒன்றையேனும் சேர்த்துவிடுவதுதான் உனக்குச் சந்தோஷத்தை கொடுக்கும் என்று சொன்னாய்.

~oOo~

நெடுஞ்சாலையை ஒட்டியிருந்த நடைபாதையொன்று பாலத்திற்கு அடியில் போனது. அதன் குளிர்ந்த இருட்டிலிருந்த ஒரு பெஞ்ச் நோக்கியிருந்த வெற்றிடம் யார் யாரோ தூக்கியெறிந்த கண்ணாடி துண்டுகளால் நிரம்பியிருந்தது. இக்கண்ணாடி ஓடுகளில் சூரிய ஒளி பட்டதும் தரையிலிருந்து மேலுயரும் சரவிளக்கொன்றை ஏற்றியதைப் போல பச்சையும் வெள்ளையாக நிலத்துண்டுகள் ஜொலித்தன. ஒவ்வொருமுறையும் அவ்விடத்தைக் கடக்கும்போது அவை குறைந்துகொண்டே வருகிறது. அந்த பெஞ்சும் இல்லை இப்போது. கண்ணாடி துண்டுகளை பார்த்தவாறு என் கடைசி ஆப்பிளைக் கடித்தேன். முடிவற்று வாழ்க்கை முழுதும் உன்னோடே இருக்கப்போவதாக நினைத்த காலங்கள் உண்டு. ஆனால் நமக்கான நேரம் கணக்கிடப்பட்டுவிட்டது, அதன் எல்லையை நம்மால் காணக்கூடிய அளவிற்கு எனும்போது அவ்வளவு உறுதி நிலைக்கவில்லை. ஒரு செஸ் விளையாட்டிற்கோ அல்லது சினிமா பார்ப்பதற்கோ தேவைப்படுவதைவிடவும் நீண்ட நேரம், ஆனால் நமக்கென கற்பனை செய்ததைவிடவும் மிக மிகக் குறைந்ததெனும் அளவில் நேரத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வதென தெரியவில்லை. முன் சிலநாட்களில் காலையுணவின் நேரம் கடந்த பின் தான் தூக்கத்திலிருந்தே விழிப்போம். மதிய உணவின் நேரமும் தாண்டும் வரை படுக்கையிலேயே கிடப்போம். அப்படியான நாட்களைப் போல இப்போது உணர்கிறேன். அந்நாட்கள் என்னை நடுங்கச் செய்யும். நம் நேரத்தை எப்படி உருப்படியாகக் கழிப்பது என்பதில் நமக்குள் சண்டை வரும். நேரம் தீர்ந்துவிடப் போகிற மாதிரியும் நாட்கள் காலியாகிவிடுவது மாதிரியும் வாழ்க்கையைக் கட்டுக்குள் வைத்திருக்க நீ விரும்பவில்லை. “எனக்கு எந்த நோயுமில்லை” என்றாய். “நமக்கு கேன்சர் இல்லை, நாம் செத்துக் கொண்டு இல்லை” என்றாய். “அதனால் நாம் வாழ்வதைப் போல் வாழ எனக்கு விருப்பம் இல்லை” என்றாய். இரண்டு விதமான மக்கள் உண்டு. அதில் ஒருவர் எப்போதுமே முதலில் விட்டுக்கொடுப்பவர்கள்.

நாம் சண்டையிட்டபோதெல்லாம் அதை முதலில் கடந்து போனது நீதான். சமையலறை சுவரிலிருந்த நீள்சதுர சந்தின் வழியே செய்தித்தாளில் புகைப்படங்களின் அடியில் உள்ள சிறு சிறு குறிப்புகளையும் நீ தலையைக் கவிழ்த்து குனிந்து உற்று பார்ப்பது தெரியும். அதிலிருந்து சுற்றத்தின் பிரக்ஞையற்று நிமிர்ந்து பின்னால் சாய்ந்தவாறே செய்திக்கட்டுரைகளுக்கு திரும்பிப் போவதைப் பார்ப்பேன். அப்பொழுதே எனக்குத் தெரியும் நான் உன்னை விட்டு விலகினால் ஏற்படும் வெற்றிடம் அடித்துச் செல்லும் பெருவெள்ளப் பாதையின் பள்ளம் நிரம்பும் வேகத்தில், காயம் ஆறுவது போல ஆறிவிடுமென்று.

நீர்ப்பாலத்திலிருந்து இவ்வளவு தூரத்திலும் சீகல் பறவைகள் ஒன்றோடொன்று குப்பைகளுக்கிடையில் சண்டையிட்டு கடுங்குரலில் கத்தும் சத்தம் கேட்க முடிகிறது. இந்நாட்களில் இச்சப்தங்கள் கடலை நோக்கி பலம் கொண்டு எறியப்பட்ட கல்லைப் போல மெலிந்த காற்றை கிழித்துக்கொண்டு வெகு தூரம் பயணிக்கிறது. பாதி கடித்திருந்த ஆப்பிளின் உட்பகுதி என் வலது கையுறையை நனைத்திருந்தது. இன்னொரு கை கண்ணீரை நிறுத்தி மூக்கின் மேல் அழுந்தியிருந்தது. இரண்டு வகையான மக்கள் உண்டு. அதில் ஒருவர் யாருக்காவது கேட்கும் சிறிது சாத்தியமாவது இருந்தால் முட்டுமே அழுவர். ஆப்பிளை தரையில் வைத்து அதை நோக்கி “பூஃப்ப்” என்று சத்தம் எழுப்பினேன். ஏதாவது நடக்குமெனக் காத்திருந்தேன். வந்த பாதையிலேயே திரும்பி நடக்க ஆரம்பித்தேன்.

வீட்டை அடைந்ததும் குக்கீயின் எல்லா விளையாட்டு பொருட்கள், உணவு தண்ணீர் குவளை, மணி தொங்கும் சிறிய ஊதா நிற பந்து, ஆளுயர கத்தும் வாத்து பொம்மை என எல்லாவற்றையும் சேகரித்து கூடத்தில் மெல்லிய போர்வை விரித்து அதன் மீது ஒவ்வொன்றாக மறைந்து போவதை வசதியாகப் பார்க்குமாறு கிடத்தி வைத்தேன்.

~oOo~

இந்த மறைதல்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறதா? இல்லை. கிழக்கிலிருந்து மேற்காகவோ மேற்கிலிருந்து கிழக்கிற்கோ இந்த நிகழ்வுகள் நகர்ந்தபடியிருக்கிறதா? ஒருவேளை அகரவரிசைப்படியோ தோன்றிய காலவரிசையிலோ வகை மாதிரி பிரித்துக்கொண்டோ மறைந்து வருகின்றனவா? அதுவும் இல்லை. பிரயத்தனப்பட்டு இதைப் புரிந்துகொள்ள முயலுகையில் இதன் ஒழுங்கின்மைதான் அதிகம் வெளிப்படும். ஒரு வாரம் அதது வைத்த இடத்தில் வைத்தபடி இருக்கும். திடீரென வாரப் பத்திரிக்கைகள் என்ற ஒன்றே இல்லாமல் போகும். உங்கள் வீட்டில் மட்டுமல்ல யார் வீட்டிலும். புதிதாக ஒன்றைத் தயாரித்து வெளியிடவும் யாரும் தயாராக இல்லை. பெரியதிலிருந்து சிறியதிற்கென இது நகர்ந்து வருகிறதா? இதற்கென ஏதாவது திட்டமாவது இருக்கிறதா? எதைப் பற்றியும் யோசிப்பதற்கு களைப்புற்றிருக்கும் ஒரு மனநிலையில் இது அழகாகவே இருக்கிறது – எதிர் வீட்டின் அறை விளக்குகளை ஒவ்வொன்றாக ஒருவர் அணைத்துக்கொண்டே வருவதைப் பார்ப்பதை போல.

காலியாக கிடந்த என் தம்பியின் அறையில் தரையில் அமர்ந்து வரிசையாக நான்கு சாக்லேட் பார்களை உண்டேன். உன்னை ஏற்கனவே ஒருமுறை அழைத்திருந்தேன். மீண்டுமொருமுறை அழைப்பதற்கான காரணத்தை உருவாக்கிக் கொண்டிருந்தேன். தொட்டுணர முடியாத பொருண்மையற்றவையே காணாமல் போகும் என்று வல்லுநர்கள் கூறத் தொடங்கினர். கருத்துகள், ஞாபகங்கள், நினைவோட்டங்கள் சீக்கிரம் அழியக்கூடியவை என்றனர். தெளிவான உதாரணங்கள் எதுவும் அவர்களிடம் இருக்கவில்லை. குக்கீ காணாமல் போனது உனக்கு இன்னும் நினைவிலிருக்கிறதா என தெரிந்து கொள்ள அழைப்பது சரியாக இருக்குமென்று எண்ணினேன்.

எண்களை அழுத்தினேன். இரண்டு முறை மணி அடித்ததும் உன் குரல் கேட்டது.

“ஹலோ” என்றாய்.

“நான்தான்” என்றேன்.

“நீயேதான்” என்று பதில் சொன்னாய்.

” குக்கீயை உனக்கு இன்னும் நினைவிருக்கிறதா எனத் தெரிந்து கொள்ளத்தான் அழைத்தேன்” என்றேன்.

“ஆஃப் கோர்ஸ். எனக்கு இன்னும் குக்கீயின் ஞாபகம் இருக்கிறது”. நம் தொடர்பு அசைவற்று போனதுபோல இருமுனைகளிலும் அமைதி.

“என்ன ஞாபகம் வைத்திருக்கிறாய்?” என்று கேட்டேன்.

“நீ குக்கீ யை வளர்க்கத் தேர்ந்தெடுக்க காரணமே அது உன்னைக் கடித்து வைத்ததுதான் என்பது ஞாபகம் இருக்கிறது.” என்று சொன்னாய். “இந்த பிராணியை வெற்றி கொள்வது உனக்கு முக்கியம் என்று முடிவெடுத்தாய். பூனையை எப்படி பிடித்துத் தூக்குவது என்று தெரியாமல் கிடைத்த இடத்திலெல்லாம் பிடித்து தூக்க முயன்றது ஞாபகத்தில் இருக்கிறது. நடுவில் பிடித்து வயிற்றை அழுத்தி தூக்கியபோதெல்லாம் நீ கடி பட்டாய்.”

“உன் எண்ணை மனப்பாடம் செய்து வைத்திருக்கிறேன்” என்றேன்.

“நல்லது” என்றாய்.

சரி உன்னைப் போகவிடுகிறேன் என்று சொன்னதற்கு குட் நைட் என்றாய். இருவரும் இணைப்பைத் துண்டித்தோம்.

இந்நாட்களில் தான் உன் இழப்பை அதிகம் உணர்ந்தேன் நீ தொலைந்து போனதற்கு பிறகான நாட்களை விடவும். உன்னுடன் பேசுவது குறையக் குறைய உன் மீதான காதல் தீவிரமடைவதைப் போன்ற வேகத்தில் நல்ல நினைவுகளை மறப்பதைக் காட்டிலும் கசப்பான விஷயங்கள் அனைத்தையும் வேகமாக மறந்து கொண்டிருந்தேன். நான் ஒரு விளையாட்டு விளையாடுவேன். ” நாம் சிறந்த ஜோடியா இல்லையா?” என்று அதற்கு நானே பெயர் சூட்டிக்கொண்டேன். தெரிந்தோ தெரியாமலோ நீயும் என்னோடு சேர்ந்தே இதை விளையாடினாய். இதுதான் அந்த விளையாட்டு. நாம் சேர்ந்து சினிமாவுக்குப் போக திட்டமிட்டதை மறந்துவிட்டு நீ தனியாகவோ அல்ல உன் நண்பரோடோ சினிமா பார்க்கப் போய்விடுவாய். நான் வீட்டில் தனியாக காத்துக்கொண்டிருப்பேன். சிலசமயம் உன் செல்போனை சார்ஜ் பண்ணுவதையும் மறந்து விட்டு உன் அலுவலுக வேலையிலேயே அதிகாலை நான்கு மணி வரை இருந்துவிடுவாய். உனக்காகவே காத்திருந்து சோபாவிலேயே தூங்கிக் கொண்டிருக்கும் என்னை வந்து எழுப்புவாய். அப்போது என்னை நானே கேட்டுக்கொள்வேன். – “நாம் சிறந்த ஜோடியா இல்லையா?”. அதற்கடுத்து நீ செய்வது எதுவாக இருந்தாலும் அதுவே விடையாகவும் அமையும். பின்பு நீ ஏன் இப்படிச் செய்கிறாய் என்பதைப் பற்றியே சோர்ந்து போகும்வரை யோசித்துக் கொண்டிருப்பேன்.

இந்த மறைதல்களெல்லாம் கிட்டத்தட்ட தோற்ற மயக்கங்களைப் போல ஒருவிதமான இருத்தலியல் மாயங்களாக இருக்கலாம் என்ற கோட்பாட்டின் மூலம் அரிஸோனாவில் வாழ்ந்து வரும் எச்சார்புமற்ற சுயேச்சை இயற்பியல்வாதி ஒருவர் புகழடைந்திருந்தார். நம்மிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டவைகளை நாம் இன்னும் நினைவில் வைத்திருந்து நம்மால் அவற்றை நம் மனக்கண்ணில் மீட்டு நிறுவமுடிகிறது என்பதே அவை இங்கேயே இன்னும் இருப்பதற்கான சாட்சி என்றார் அவர். கல்லைக் கண்டார் கடவுளைக் காணார். இது எல்லாமே பார்க்கும் பார்வையைப் பொறுத்தது என்றார் அவர். நிலை மாறும் பார்வை கோணம்: கார் எடுத்துக் கொண்டு கிளம்பும்போது உங்கள் பார்வையிலிருந்து விலகும் வீடு, அருகில் ஒரு குன்றின் மீதிருந்து பார்த்தால் தெரிவதைப் போல. வீடு தொலைந்து போனது என்று நினைப்பது முட்டாள்தனம். மறைந்து போனவையெல்லாம் நம்மோடு இன்றும் ஒருங்கியிருப்பவைதான் ஆனால் காலத்தால் பொருளிழந்தவை என புரிந்துகொள்ளவேண்டும். இதுதான் அவரின் ‘கால-இட தடை’ கோட்பாடு. இதை நம்பியவர்களெல்லாம் தங்களுக்கு சிறப்பு தகுதிகள் அளிக்கும் ஒரு இடம் உண்டு என்றும் நம்பினார்கள். புறா வண்ண மென்முகடுகளை கொண்ட நார்மண்டி கடற்கரையில் சமீபத்தில் தொலைந்து போனவையெல்லாம் கொஞ்சம் மிருதுவாக முப்பது நாற்பது வருடப் பழமையானவையாக மீண்டும் தோன்றுவதாக பரவிய வதந்தியின் பேரில் அவர்கள் அங்குப் புனிதயாத்திரை சென்றனர். 1759ல் பன்னிரண்டு வயது சிறுமி ஒரு கிழவனோடு நடக்கவிருந்த திருமணத்திலிருந்து தப்பிக்க இங்கு மூழ்கி இறந்ததாகச் சொல்லப்படுவதுண்டு.

நான் தரையில் அமர்ந்து க்ரானோலா பார் கவர்களை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டேன். அந்தப் பையை இன்னுமொரு பிளாஸ்டிக் பையில் போட்டுவைத்தேன். பிளாஸ்டிக் பைகளும் மறைந்துக் கொண்டிருந்தனதான். ஆனாலும் என் தம்பி நிறைய பிளாஸ்டிக் பைகளை வைத்திருந்தான். உன்னை மீண்டும் அழைப்பதற்காக போனை எடுத்தேன். என் நினைவில் இருந்தே உன் நம்பர்களை அழுத்தினேன்.

உனக்கு பதிலாக பதியப்பட்ட குரல் ஒன்று, அழைப்பை தற்போது ஏற்க இயலாது என்று கூறியது.

மறைந்து போனவைகளுக்கான பிரத்தியேக துறைக்கு போன் செய்தேன். “மனிதர்களுக்கு” எண் ‘1’ அழுத்தி மீண்டும் “ஆண்களுக்கு” எண் ‘1’ அழுத்தினேன். வயது “21லிருந்து 31க்குள்” என்பதைக் குறிக்க எண் ‘3’ஐ அழுத்தினேன். அடுத்து “நண்பர்கள்” எண் ‘3’ ஆனால் நான் அதற்கு மாறாக எண் ‘2’ அழுத்தினேன். அது “காதலர் அல்லது இணைந்து வாழும் முக்கியஸ்தர்களுக்குரியது”. இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளமாட்டாய் என்று நினைக்கிறேன். அழகிய பெண்குரல் பதிவை உறுதி செய்ய “ஆண் காதலர் வயது 21லிருந்து 31க்குள்” என்று சொல்லி தகவலை உறுதி செய்ய சொல்லி கேட்டது. நான் # பட்டனை அழுத்தி உன்னை விவரிக்கத் தொடங்கினேன்.

~oOo~

ஒரு இலையுதிர் காலத்து பிரகாசமான காலைப் பொழுதில் என் முகத்தை உற்று நோக்கியிருந்த உன் முகத்தில் விழித்தது நினைவிலிருக்கிறது. சில விடியல்களில் நாம் ஒன்றாக தூக்கம் களையும்போது ஒருவரை ஒருவர் மறந்துவிட்டதைப் போல் பாவனை செய்வோம். நம்மில் ஒருவருக்கு அம்னீஷியா வந்துவிட்டது. அந்த ஒருவர், “நான் யார்? எங்கிருக்கிறேன்” எனக் கேட்க, தகுந்தாற்போல் ஒரு புது கதையை புனைவது மற்றவர் பொறுப்பு. நல்ல கதைகள் கொஞ்சம் நீளமாகவும் மிகச் சிறந்த கதைகள் மொத்தமாக புது வாழ்க்கையே போனஸாக கிடைத்துவிட்டதைப் போல தோன்றச் செய்யும். கவலைப் படாதே என்று என்னை நீ ஆற்றுப்படுத்திக்கொண்டிருந்தபோது ஜன்னலுக்கு வெளியே மஞ்சள் இலைகள் பொன்னிற ஒளியை பரப்பிக் கொண்டிருந்தது. நான் பாதுகாப்பாக இருந்தேன், உன்னோடு இருந்தேன். கல்லூரி காலங்களிலிருந்தே நாம் ஒன்றாகவே இருந்தோம். அந்த வருடத்தின் மிக வெம்மையான நாளொன்றில் பூங்காவின் மையத்தில் சந்தித்தோம். குளத்தை நோக்கியிருந்த பெஞ்சில் அமர்ந்து வான்கோழி, சுவிஸ் வெண்ணெய் கொண்டு ஸ்பினாச் தழைகளால் சுற்றியிருந்த சாண்ட் விச்சை உண்டோம். இருவர் கையிலும் அதே சாண்ட்விச்.

இலையுதிர் மதியங்களில் இலைகள் கணக்கில்லாமல் தான்தோன்றியாக எப்பொழுதுமே விழுந்து கொண்டிருந்தது. இலைகள் வண்ணம், எடை, காற்றின் வேகம் என எதன் பொருட்டுமில்லாமல் தரையில் சொட்டிக்கொண்டிருந்தது.

மிக நுட்பமாக எல்லா இடங்களிலும் நிகழ ஆரம்பித்த இந்த மறைதல்கள் நாட்களின் மீது கனமாக அழுத்திக் கொண்டிருந்தது, இந்தப் பொழுது எப்போது கடந்து போகும் என்று சில நேரம் நம்மை காத்துக் கொண்டிருக்க வைப்பதைப் போல. இந்த உணர்வே, நீ இல்லாமல் என்ன செய்யப்போகிறேன் என்று யோசிக்கும் முன்னரே உன்னை விட்டு விலகுவதற்கு வசதியாக இருந்தது. நம்முடைய வீட்டின் வெளியே சாவி இல்லாமல் நின்று கொண்டு உன்னை திரும்பத் திரும்ப செல்போனில் அழைத்தேன், நீ வேலையில் இருக்கிறாய் என்று தெரிந்தும் கூட. ஒவ்வொரு முறையும் என் அழைப்பை எடுக்காமல் போனபோது நீ மறைந்துவிட்டாய் என்றே கற்பனை செய்து கொண்டேன், அப்படியொரு கற்பனை என்னை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்பதை உணரத் தொடங்கியதுவரை. நான் மறைந்து விட்டதைப் போல தோன்றியது. நான் இல்லாமலும் எல்லாம் தொடர்ந்து செயல்படுவதைப் பார்த்தேன். அதைக் கண்டுகொள்ளவில்லை. தெரு முனையிலிருந்த ஏடிஎம் சென்று என் வங்கி கணக்கிலிருந்த அத்தனை பணத்தையும் எடுத்தேன். வங்கி கணக்குகள் அப்போது இருந்தது. ஆனால் எங்கேயோ யார் கண்களுக்கும் தட்டுப்படாதபடி. அவை இப்போதும் இருக்கக் கூடும், வங்கிகளே காணாமல் போய் விட்ட பின்னரும். நான் பணத்தையும் நம்முடைய காரையும் எடுத்துக் கொண்டு மேற்கே சிகாகோவை நோக்கி ஓட்டத் தொடங்கினேன். இவை இறுதி நாட்களாக இல்லாமலிருந்திருந்தால் நாம் இப்போதும் ஒன்றாகத்தான் வாழ்ந்திருப்போமா? நான் உன்னைவிட்டுப் பிரிந்ததிலேயே மிகக் கடினமானது எதுவென்றால் என் வாழ்க்கையை நான் மட்டுமே வாழ்ந்து கொண்டிருப்பதை நானே பார்த்துக்கொண்டு, எந்நேரமும் என்னருகிலேயே இருந்துகொண்டு, என்னை கேள்விகளால் துளைத்துக் கொண்டு, என் உடம்பிற்குள்ளேயே உட்கார்ந்து கொண்டு, நீ வீடு திரும்பியதும் எனக்குப் போன் மேல் போன் போட்டு அழைப்பதை அமைதியாக பார்த்துக் கொண்டும் இருந்ததுதான்.

அறிவிப்பிற்குப் பிறகு மக்கள் இரண்டு விதமாக இருந்தனர். இரண்டில் ஒன்றைச் செய்தார்கள். இந்த அழிவிலிருந்து தப்பிக்க அதிக அக்கறை கொண்டு செயல்பட்டார்கள். அல்ல இதை அப்படியே விட்டேத்தியாக கண்டுக்கொள்ளாமல் இருப்பது. எப்படியாவது வாழ்ந்து பார்ப்பது என்று சேகரித்த பொருட்களைப் பதுக்கி பாதுகாப்பது. அல்லது மிச்சமிருக்கும் நேரம் அதன் போக்கிலேயே தன் வாழ்க்கையைத் தீர்மானிக்கட்டும் என விட்டுவிடுவது. புழங்கக்கடையில் காய் கனி செடிகளை வளர்க்கத் தொடங்குவது. அல்லது வீட்டுத் தோட்டங்களை புதர் மண்ட விட்டுவிட்டு முழுக்குடியில் மதிய நேரத்தில் கஞ்சா புகை சூழ தோட்ட நாற்காலியிலேயே தூங்கிக்கொண்டிருப்பது.
கொஞ்சக் காலத்திற்கு எதைச் செய்வதாக இருந்தாலும் அதை முழு அர்ப்பணிப்புடன் செய்தோம். ஆனால் சில வாரங்களிலேயே அதைத் தொடர்வது கடினமாகிப் போனது. கொஞ்சம் கொஞ்சமாக தீவிரம் குறைந்து எதைப் பற்றியுமான அக்கறை வலுவிழந்து உதிரி உதிரியாகவே செயல் தீவிரம் மிஞ்சியது. செய்வதென்று தொடங்கி பிறகு செய்ய நிறைய இருக்கிறதென்ற சோர்விலேயோ அளவுக்கு மிஞ்சி அதிகம் செய்துவிட்டோம் என்ற அயற்சியிலேயோ தூங்கப் போய்விடுவோம். இறுதியில் இரண்டில் ஒருவித மக்கள் மட்டுமே இருந்தனர்.

~oOo~

பிரதான படுக்கை அறையில் மெத்தை மீதிருந்த உறைகளைக் களைந்தேன். என் தம்பி திரும்ப வரப்போவதில்லை. ஆனாலும் படுக்கையை சீர் செய்து ஒரு நல்ல விருந்தாளியாக நடந்துக் கொண்டேன். நட்சத்திர விடுதிகளில் செய்வதைப் போல உறைகளைச் சுருக்கமில்லாமல் நகர்ந்து நழுவி விட முடியாதபடி அவற்றின் முனைகளை மெத்தைக்கு அடியில் இறுக்கமாக மடித்து படுக்கையை சுத்தமாகத் தயார் செய்து வைப்பேன். அதில் படுப்பதற்கு நானே பாடுபட வேண்டும். தலையணைகளை மெத்தை உரைகளுக்கு அடியிலிருந்து பலம் கொண்டு வெளியே எடுத்து போர்வைகளை மெத்தையிலிருந்து கிழிப்பதைப் போல பிய்த்து பின் அதற்குள் உறங்கச் செல்வேன்.

இன்னமும் வேலை செய்யும் மிகச் சில போன்களில் என்னோடதும் ஒன்று. சத்தம் போட்டு சொன்னேன்.

விளக்குகளை எரிய விட்டு தூங்கத் தொடங்கியிருந்தேன். எனக்கு ‘பார்க்கும்’ நேரங்கள் அதிகம் வேண்டும். எவ்வளவு முடியுமோ அவ்வளவையும் கண் முழிக்கும்போதெல்லாம் பார்க்க வேண்டும். வெளியே ஜன்னலில் பனி விழுந்து கொண்டிருந்தது. சினிமாக்களில் வரும் பனிப்பொழிவு போல கனவுலக பஞ்சு இழைகளெனத் தனித்த விளக்கு கம்பத்தை சுற்றி சொரிந்து கொண்டிருந்தது. காணாமல் போனவர்களுக்கான தொடர்பு எண்ணில் ஒலித்த குரலுக்கு சொந்தமான பெண்ணை நான் காதலித்திருக்கலாம். நான் விரும்பியபோதெல்லாம் அழைத்து அவள் குரல் கேட்டு இப்போது சற்றும் இல்லாமல் போனது போல் தோன்றும் ஒரு உணர்வை மீட்டெடுத்திருக்கலாம். அவளைக் காதலித்தது யாராக இருந்தாலும் அவர்கள் இன்றும் இங்கே இருப்பார்களெனில் அதிர்ஷ்டசாலிகள்தான். பனிப்பொழிவு வேகம் குறைந்து கொஞ்சம் கொஞ்சமாக மெலிந்துக் கொண்டிருந்தது. பின்பு இரண்டோ மூன்றோ பஞ்சுத் துளிகள்தான் எங்குபோவதெனத் தெரியாதவை போல் மேலும் கீழுமாக அலைந்துக் கொண்டிருந்தது.

என் அறையில் விளக்கு சிறிது நேரம் எரிந்து கொண்டிருந்தது. கண்ணாடி ஜன்னலில் என் நிழற்பிம்பத்தைப் பார்த்தேன். தலைமேல் இருந்த விளக்கு சடாரென இருளடைந்தது. பல்பு தொங்கிக்கொண்டிருந்த வயர் வெறுமையாக ஆடும் சத்தம் மட்டும் கேட்டது. கண்களுக்குத் தெரியவில்லை. கூடிக்கொண்டே போகும் அமைதி மற்ற பொருட்களும் மறைந்து கொண்டிருக்கின்றன என உணர்த்தியது. உலகிலுள்ள அத்தனையும் தனக்கேயுரிய ஒரு லயத்தில் அதிர்வுறும், ஒரு சிறுதுளி சத்தம் வெளியிடும் என்று சொல்வார்கள். உண்மையில் எதுவும், எதுவுமே அதிர்வலைகளை வெளியிடாமல் இருப்பதில்லை. என் உடம்பிலிருந்து வெப்பம் வெளியேறிப் போகும் இடமில்லாமல் அதிர்ந்து கொண்டிருப்பதை உணர முடிந்தது. இருள் திட்டு திட்டாய் கரும்புள்ளிகளின் மாயத் தோற்றத்தில் என் கண்களை கடந்து பின்னால் மிதந்து சென்று கொண்டிருந்தது. என்னைச் சுற்றி என்னைப் பார்த்துக்கொண்டு எவருமே இல்லையென்றால் நான் மறைந்து கொண்டிருக்கிறேன் என்பது எனக்கு எப்படித் தெரியும்? இது வெறும் தூக்கமில்லை என்பதை எது எனக்குச் சொல்லும்? இந்த இருட்டில் மறைந்து போவதையெல்லாம் என்னால் பார்க்க முடியவில்லை ஆனால் எல்லாமும் தூரம், வெகு தூரம் போய்க்கொண்டிருக்கிறதென்பது மட்டும் எனக்குத் தெரிந்தது. ஒரு கட்டத்தில் எதுவுமே தெரிந்து கொள்ள முடியாமல் போனது.

நெப்ராஸ்கா மாகாணத்தில் லிங்கன் நகரில் உள்ள ஒரு பெண் தன்னால் மறைந்து போனவர்களோடு உரையாட முடியுமென்று கோரினாள். அவளை அழைத்து டெலிபோனில் யாரைத் தேடிக்கொண்டிருக்கிறோம் அவர்களின் முழுப் பெயர், வயது, உயரம், எடை என்ன என்பதைச் சொல்ல வேண்டும். அவள் தன் வீட்டின் பின்னாலுள்ள பல தசமங்களுக்கு முன் தன் தாத்தா தோண்டி வைத்த கிணற்றருகே சென்று இத்தகவல்களைக் கிணற்றுக்குள் சத்தம் போட்டு அடியாழத்துக்குப் போகும்படி கத்துவாள். திரும்ப வரும் எதிரொலியில் அந்தப் பக்கம் போய்ச் சேர்ந்த மாயமான உங்கள் விருப்பத்திற்குரியவர்கள் அவ்வார்த்தைகளைக் கலைத்து போட்டு பதில்களாக கோர்த்து தாங்கள் தெரிவிக்க வேண்டியதை கிசுகிசுப்பான குரலில் அனுப்பி வைப்பார்கள் என்று சொன்னார்கள். இதற்கு நன்கொடையாக அவளுக்குச் சுத்த தங்கமோ நகைகளோ வெள்ளிப் பாத்திரங்களோ கொடுத்து விட வேண்டும். அவளுக்குக் கேட்பதை போல அவர்களின் குரல் மற்றவர்களுக்கும் கேட்டு அவர்கள் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறார்கள் எவ்வளவு நாம் உடனில்லாத குறை கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளவேண்டும் என்பதே அவளின் விருப்பம் என்றும் சொல்லிக்கொண்டாள். இங்கிருந்து மறைந்தவையெல்லாம் அந்தப் பக்கம் சென்று சேர்ந்துவிட்டதெனவும் அங்கிருப்பவர்கள் இயல்பான வாழ்க்கை வாழ்ந்துகொண்டு மற்றனவும் அவர்கள் பக்கம் வந்து சேர்ந்து புதியதோர் உலகை முழுதாக மீண்டும் உருவாக்க காத்துக் கொண்டிருப்பதாகவும் அவள் சொன்னாள்.

மூலம் – You, Disappearing By Alexandra Kleeman – Guernica

2 Replies to “மறைந்து கொண்டிருக்கிறாய், நீ…”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.