மகரந்தம்


[stextbox id=”info” caption=”ஈ ஓட்டும் வேலை”]

ஒரு வேலையும் செய்யாமல் சும்மா இருப்பவர்களை உலகுக்குப் பிடிக்காது. ஒரு புறம் சும்மா இருப்பதே சுகம் என்று தத்துவமெல்லாம் பேசுவார்கள், ஆனால் சும்மா இருப்பவர்களைப் பார்த்தால் சூழ இருப்பவர்கள் எல்லாருக்கும் கண்கள் பொங்கிக் கொண்டு வரும். ஏதாவது செய்து, அல்லது சொல்லி அல்லது ஒரு பிரச்சினையைக் கிளப்பி அந்தச் சும்மா இருக்கும் மனிதரைக் கிளப்பி விட்டு எழுந்து நிற்கவாவது வைக்க முடியுமா என்று பார்ப்பது பலரின் குறிக்கோளாக இருக்கும். சும்மா மட்டும் இருக்காது, பலரையோ, சிலரையோ கெடுப்பது, அவர்களுக்குத் தடைகளைப் போடுவது, அவருக்கு என்ன உபாதை கொடுக்க முடியுமோ அதைக் கொடுப்பது, ஒன்றும் இல்லை என்றால் தொண தொணவென்று பேசியாவது புத்தியைச் சிதற அடிப்பது என்று சும்மா இருப்பதையே இல்லாமல் ஆக்கப் பலர் உண்டு. தானும் சும்மா இல்லாமல், பிறரையும் அப்படி இருக்க விடாமல் வேறொரு திசையில் திருப்பி உலகை அலப்புறச் செய்வோரே அதிகம்.

சிலரால் சும்மா இருக்க முடியாது. கையிலிருக்கும் வெற்று நேரத்தை சந்தோஷமாக அமைதியாகவோ, ஒதுங்கி இருந்தோ செலவழிக்காமல், கிறுக்குத் தனமாக உலகம் பூரா மோட்டர் சைகிளில் பயணம் போகிறேன் என்று வாழ்வில் ஒரு நான்கைந்து வருடங்களைத் தொலைப்பார்கள். அப்படிப் பயணம் போவதை வருடம் பூரா செலவழித்துத் திட்டம் போடுவார்கள். இருந்தும் உலகம் எப்போதாவது வரைபடத்தோடு ஒட்டி இருக்குமா என்ன? எதார்த்தம், இவர்கள் போடுகிற திட்டங்களை எல்லாம் தொடர்ந்து முறியடித்துக் கொண்டே இருக்கும். அதனால், எங்காவது கசகிஸ்தானில் அல்லது மங்கோலியாவில் தெருவோரத்தில் ஒன்றுக்கிருந்ததற்காக, அல்லது டீக்கடையில் சரியான காசைக் கொடுக்காததற்காக, அல்லது செங்கன் விஸாவை துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தில் இட்டாலியிலோ, பெல்ஜியத்திலோ மூன்று நாள் சிறையில் கிடந்து விட்டு, இந்திய அரசின் தூதுவரைத் தொல்லை செய்து, அடிப்படைப் பாடம் சிலவற்றைக் கற்பார்கள். அதில் ஒன்று, இந்திய வெளிநாட்டுத் தூதரகத்தைப் போல செயல் முனைப்பே இல்லாத அலுவலகம் வேறொன்று உலகில் இராது. அந்தத் தூதுவர் வந்து மீட்பது என்பது கானல் நீரைப் பருகித் தாகம் தீர்த்துக் கொள்வதை ஒத்த கனவு. தூதுவர்களை ரொம்பவும் குறை சொல்லவும் முடியாது. வேலியில் போகிற ஓணானைச் சட்டைக்குள் விட்டுக் கொண்டு குடைகிறது என்று அலறினால் தூதுவர் என்ன செய்வார்? இவர்களை யார் உலகம் பூரா மோட்டர் சைக்கிளில் சுற்றுகிறேன் என்று கிளம்பச் சொன்னார்கள்? தூதுவர் ஏன் இவர்களை வந்து காப்பாற்றப் படாத பாடு பட வேண்டும்? இதைச் சொன்னால் மார்கோ போலோ, யுவான் சுவாங் என்று காப்பிய நாயகர்கள் கணக்கில் தம்மைச் சேர்க்கச் சொல்லி ட்ராமா போடுவார்கள் நம் உலகச் சுற்றுலா நாயகர்கள். சரி கிளம்பினீங்க, உலகம் சுற்றும் வாலிபன் மாதிரி ஒரு பாட்டும் டான்ஸுமாப் பொழுது போக உதவற படமாவது எடுத்தீங்களாய்யா  என்றால் உலகம் சுற்றுபவர் எல்லாம் எம்ஜிஆரா என்ன?

இப்படித்தான் ஒரு சில பத்தாண்டுகளுக்கு முன்பு, பொருளாதார அகதியாகத் தான் போய்ச் சேர்ந்த இங்கிலாந்தில் சும்மா கிடக்காமல், மிஹிர் சென் என்ற நபர், உலகின் ஏழு கடல்களிலும் நீந்திக் கடப்பேன் என்று ஒரு முயற்சியைத் துவங்கினார். ஏழு கடல்களையும் கடக்க அவர் இரு கரைகள் எங்கே குறைவான தூரமோ அந்த இடமாகத் துவங்கினார் என்றாலும் ஒவ்வொன்றும் பல பத்து மைல்கள் தூரம் இருந்த இடங்கள். அவற்றை அவர் நீந்திக் கடந்ததற்காக அவருக்கு பத்ம பூஷன் விருது கூடக் கிட்டியது. ஆனால் விதி யாரை விட்டது? சும்மா இருக்காமல் கொல்கத்தாவுக்கு வந்து குற்றவியல் வழக்கறிஞராகப் பணியாற்றத் துவங்கினாராம். வங்காளிகளுக்கே கொல்கத்தா என்பது யூதர்களுக்கு யெருசலேம் மாதிரி. நம் திருநாளைப் போவார் பொன்னம்பலத்துக்குப் போக வாழ்நாள் பூரா கனாக் கண்ட மாதிரி எந்த நாட்டிலிருந்தாலும் அழுக்கு அப்பிய கொல்கத்தாவுக்குத் திரும்பி விடவே அனைத்து வங்காளிகளுக்கும் கனவு, தினம் வரும் போலிருக்கிறது. கடுகெண்ணெயில் பொரித்த அந்த லுச்சியை, வேக வைத்து உப்பு மாத்திரம் போட்ட உருளைக் கிழங்கோடு தெருவோரத்துத் தகரக் கூரைக் கடையில் வாங்கிச் சாப்பிட்டால் கங்கையில் முழுக்குப் போட்ட இந்து மொட்டையர் மாதிரி ஆன்மா சாபல்யம் அடைந்ததாக உணர்வார்கள் வங்காளிகள். கூடவே ‘ரெண்டு ரொஸகொல்லாவும்’ சேர்த்துக் கொண்டால் விஷ்ணுபதமே அடைந்த மாதிரி இருக்கும் போலிருக்கிறது. அல்லது சுவனமே போய் விட்ட மாதிரி.

இப்படிக் கொல்கத்தாவில் குற்றவியல் வழக்கறிஞராகப் பணியாற்றியபடி, மிச்ச நேரத்தில், பட்டு ஆடை ஏற்றுமதி செய்து நிதிவசதி உள்ளவராக ஆனவரைப் பார்த்துப் பொருமுபவர் யாராக இருக்கும். சாதாரண நபர் எல்லாம் இல்லை. சுமார் நாற்பதாண்டுகள் வங்கத்தை ஆண்ட முதல்வருக்கே இவரைத் தாங்க முடியவில்லையாம். விக்கிபீடியா பதிவு சொல்கிறது. பொதுவாக உலகெங்கும், சீனாவைத் தவிர, கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களுக்கு இப்படி சதா உழைப்பு, உற்பத்தி என்று அலைபவர்களைக் கட்டோடு பிடிக்காது. அவர்களுக்கு சுவர்க்கம் என்பதே மண்ணில் காலூன்றிய கருத்தியல்படி, எந்நேரமும், கலங்காமல் சும்மா கிடப்பதுதான். மிஹிர் சென்னைப் பார்த்தாலே காந்தலாக இருந்திருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு.

அவரை அந்தக் கட்சி எப்படி ஒழித்துக் கட்டியது என்பதை விக்கி குறிப்பில் பார்க்கலாம். சும்மா இருப்பதே சுகம் என்று கருதும் கருத்தியலை மைய அரசியல் கொள்கையாகக் கொண்ட கட்சிக்கு- மூலவரே சொல்லி இருக்கிறார், காலையில் கோழிக்கறி சாப்பிட்டு விட்டு, உல்லாசமாக சிற்றருவி பக்கம் போய், ஒரு தூண்டிலைப் போட்டு ரெண்டு மீன் பிடித்து வந்து, பொறியலாக லஞ்ச் சாப்பிட்டு விட்டு, கொஞ்சம் கவிதை எழுத முயற்சி செய்து, அதை முடிக்காமல் அப்படியே வைத்து விட்டு, தேநீர் அருந்தி, பின் மாலையை ருசிக்க பானங்கள் அருந்தி விட்டு உறங்க வேண்டும் என்பதே அவருடைய வாழ்க்கை இலக்கு. அதுதான் மானுடத்துக்கு உய்வு என்று வேறு சொல்கிறார். அவருக்கு முழு விசுவாசம் தெரிவிப்பவர்கள் வங்கக் கம்யூனிஸ்டுகள்- அப்படிச் சும்மா இருந்தே வங்காளம், கேரளா ஆகிய இரு மாநிலங்களையும் ஐம்பதாண்டுகளாக ஆண்டு உருப்படாமல் அடித்த கட்சிக்கு, மிஹிர் சென் போன்ற நபர்களைப் பிடிக்காததில் அதிசயம் ஏதும் இல்லைதான். அட, சும்மா இருக்காம, கடல்களைக் கடந்து நீந்தறாராமில்லே, என்னவொரு பூர்சுவாத்தனம் என்று கருதி இருப்பார்கள்.

அதில் அபத்தம் என்னவென்றால், பூர்சுவா என்றால் உழைக்காதவன் என்றும் இவர்களே கருதுவதுதான். [ ஆமாம், அடையாள அரசியல் யுகத்தில் அந்த பூர்சுவா ‘ன்’ என்றுதான் குறிக்கப்பட வேண்டும். தப்பிக் கூட ‘ள்’ ஆக இருக்கக் கூடாது. ]

போகட்டும். மிஹிர் சென்னைப் போல யோசிப்பவர்கள் ஸ்வீடனிலும் சிலர் உண்டு. ஸ்வீடனில் கொஞ்சம் இடது சாரித்தனமும், கொஞ்சம் ஃபாசிசமும், கொஞ்சம் பழமை வாதமும், கொஞ்சம் அடாவடி/ தத்தாரி நாகரீகம் [அதுதான் கோத், பச்சை குத்தல், தலையை மோஹாக் பாணியில் வெட்டிக் கொண்டு புற்று நோயைக் கொணரும் ரசாயனச் சாயங்களால் பஞ்ச வர்ணக் கிளியைப் போல வண்ணக் கலவையாக்கிக் கொண்டு, உடல் பூரா சங்கிலியைச் சுற்றிக் கொண்டு திரிவது சொர்க்கம் என்று நினைக்கும் கூட்டத்தைப் பாருங்கள், தெரியும்.] தேடும் போக்கும் என்று எல்லாம் கலந்த பஞ்ச அமிர்த அரசியல்/ பண்பாடு நிலவுகிறது என்று நமக்குத் தெரியும். [அதுதான் இந்த கேர்ல் வித் அ ட்ராகன் டாட்டூ நாவல்கள், ஹென்னிங் மாங்கெல் புத்தகங்கள், பெரிமான் படங்கள் என்று தமிழருக்கு அறிமுகம் செய்யப்பட்ட பல பண்பாட்டு ‘எச்ச சொச்சங்கள்’ இருக்கின்றனவே. ]

அங்கு வ்யூவர்டோன்யோ (Övertorneå) என்ற ஒரு சிறு நகரில், பொழுது போகாதவர்கள் நிறைய இருந்திருப்பார்கள் போல இருக்கிறது. ஆனால் சும்மா இருப்பதை விரும்பாத மிஹிர்சென் கோஷ்டி போலவும் இருக்கிறது. அதனால் ஒரு போட்டி வைக்கலாம் என்று யோசித்து (ஆமாம், ரூம் போட்டு யோசித்திருப்பார்கள்! குளிர் அதிகமான நாடாயிற்றே.) அட இது நல்ல யோசனையாக இருக்கிறதே என்று ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள். அதன்படி, உலக சாம்பியன்ஷிப் விருது வழங்கும் போட்டி ஒன்றை நிறுவி இருக்கிறார்கள். எதற்கு சாம்பியன்ஷிப் விருது? அந்த ஊரில் கோடையில் கொஞ்சம் கொசுக்கள் மண்டுமாம். அந்தக் கொசுக்களை யார் அதிகமான எண்ணிக்கையில் பிடித்துக் கொண்டு வருகிறார்களோ அவர்களுக்கு இந்த விருது கிட்டும். போட்டியின்னா இது இல்லே போட்டி? ஆரம்பித்து அத்தனை நாட்களெல்லாம் ஆகி விடவில்லை. 2015 இல் துவங்கிய இந்தப் போட்டி இந்த வருடம் வரை தொடர்கிறது. ஆண்டுக்கு ஒரு முறை நடக்கிறது.

முன் கூட்டித் தீர்மானிக்கப்பட்ட இடத்தில், புதர்கள் மண்டிய பகுதிக்குள் போட்டியாளர்கள் ஓடி நுழைய வேண்டும். குளிக்காமல், அழுக்கு மூட்டையாகக் கருப்புச் சட்டை பாண்டெல்லாம் போட்டுப் போனால் கொசுக்கள் துரத்தும் என்று சிலர் கண்டு பிடித்திருக்கிறார்களாம். அட நம் பகுத்தறிவு ஜோதியின் பண்பாட்டுக் கண்டு பிடிப்புகள் ஸ்வீடன் வரை போய் விட்டதே என்று வியக்காதீர்கள். மூலகர்த்தாக்களே யூரோப்பியர்கள்தான். குளிக்காமல் அழுக்கு மூட்டையாக இருப்பதை ஆயிரம் ஆண்டுகளாகப் போற்றி வரும் நாகரீகம் அது. ஷாஜஹான் அவைக்கு வந்த ஃப்ரெஞ்சுக்காரர்களை அந்த அவை எப்படிப் பார்த்தது என்று படித்துப் பாருங்கள் தெரியும், யூரோப்பியர் என்ன வகையாக மிக நாகரீகமாக ஒரு காலத்தில் இருந்தனர் என்று.

இப்படிப் போட்டி இடுவோருக்குப் பதினைந்து நிமிடம் அவகாசம் உண்டு. கொசுவைப் பிடிக்க ஒரு பொறியும் கொடுக்கப்படும். பதினைந்து நிமிடத்தில் யார் அதிகம் கொசுக்களைப் பிடிக்கிறார்கள் என்று கணக்கிட்டு, ஜெயிப்பவருக்கு 10,000 ஸ்விடிய க்ரோனர் பரிசு கிட்டும். (சுமார் 1150 அமெரிக்க டாலர்கள்.) 2016 இல் போட்டி இட்டவர்கள் மொத்தம் சேர்த்து 600 கொசுக்களைத்தான் பிடித்திருக்கிறார்கள். அதனால் நம் ஊர் ‘சண்டியர்களுக்கு’ வெல்லும் வாய்ப்பு அதிகம்.

எந்த விமானம் அங்கே போகிறது என்று பார்க்கத் துவங்கியாயிற்றா? இந்தச் செய்தியை இந்தத் தளத்தில் பார்க்கலாம்.

http://www.atlasobscura.com/places/the-unofficial-mosquito-catching-world-championship
[/stextbox]


[stextbox id=”info” caption=”சமூகத் தோட்டம்”]

தமிழ் நாட்டில் எந்தச் செய்தித்தாளைத் திறந்தாலும், அல்லது எந்தச் செய்தி ‘சானலை’ப் பார்த்தாலும், அல்லது எந்தத் தெருவில் நடந்தாலும் நமக்குக் கிட்டும் ஒரு தவிர்க்க முடியாத செய்தி ‘போராட்டம்’, ‘எழுச்சி’, ‘பேரணி’, மாபெரும் கூட்டம், அறப்போர் என்ற கோஷங்கள்.

இவற்றை மட்டும் யாராவது ஒரு அயல் கிரகத்து மனிதர் பார்த்தால் தமிழ் நாட்டு மக்களுக்குத் தினம் வேலையே இப்படி ஊர்வலம் போவது, பெரும் கூட்டங்களில் அமர்ந்து பிரியாணி சாப்பிடுவது, அல்லது ஏதாவது அலுவலகம் முன்பு நின்று கோஷம் போடுவது போன்றனதான் என்று தோன்றும். அது அத்தனை தூரம் தவறான கணிப்பாகவும் இராது.

ஏனெனில் இதைப் போன்ற பல உருப்படாத நடவடிக்கைகளில் ஈடுபட என்று ஒரு பெரும் படையே தமிழகத்தில் இருக்கிறது. அவர்களுக்கு அன்றாட வேலையே ஏதாவது ஒரு அணியில், கூட்டத்தில், போராட்டத்தில் பங்கெடுத்து அதற்கான ஊதியத்தை அந்தக் கூட்டம்/ போராட்டத்தை ‘ஒருங்கமைப்பவர்’ எனப்படும் அரசியல் சூதாட்டக்காரர்/ முதலாளி இறுதியில் கொடுப்பதை வாங்கிக் கொண்டு வீடு போய்ச் சேர்வதுதான்.

பெண்களாக இருந்தால் வீட்டில் கொண்டு போய் கூலியைக் கொடுப்பார்கள், ஆண்களாக இருந்தால் இருக்கவே இருக்கிறது, தமிழக அரசின் கஜானாவில் நிதி சேர்க்க அரசு அமைத்திருக்கிற திருத்தலங்கள். சுமார் 6000 தலங்கள் தமிழ் நாட்டில் இருக்கின்றனவாமே? இந்த டாஸ்மாக் கடைகள் மூலம் அரசுக்கு நிதி உதவி செய்து, நாட்டுக்குத் தம்மாலான அனைத்து உதவிகளையும் செய்வதற்காக, போராடிப் பெற்ற கூலியை எல்லாம் அங்கு திரவ முழுக்கு போட்டு, அர்ப்பணித்து விட்டு கட்டிய வேட்டி கூட இல்லாமல் வீடு வந்து சேர்வார்கள்- அன்று இல்லை என்றால் அடுத்த ஓரிரு நாட்களுக்குள்.

ஆனால் போராட்டமே வாழ்வான தமிழர் வாழ்வில் இதை மட்டும் சும்மா விடுவார்களா? இந்த டாஸ்மாக்குக்கும் வந்தது கேடு. அதற்கு எதிராகவும் போராட்டங்கள் நடக்கின்றன. அந்தச் செய்தி இங்கே:

http://www.bbc.com/tamil/india-40372086

அவை வெற்றி பெற வாய்ப்பு குறைவு என்று பிபிசி வழக்கம்போல எதிர்மறையான செய்தியையே தெரிவிக்கிறது. இந்தியா உருப்படாமல் போனால் பிபிசிக்குக் குதூகலம், நிறைய செய்தி கிட்டுமே, அதுதான் காரணமாக இருக்கும், வேறென்ன? போராட்டம் வெற்றி பெற்று விட்டால் பிபிசிக்குச் செய்தி கிடைப்பது குறைந்து விடும். மக்கள் சுபிட்சமாக, சந்தோஷமாக இருந்தால் பிபிசியின் மெஜாரிட்டி வெள்ளை ஆண் அதிகாரிகளுக்கு வேலை இல்லாமல் போய்விடாதா?

***

ஆனால் உலகில் பல பகுதிகளில் இப்படி எப்போதும் எதிர்மாறான வேலைகளையே செய்து கொண்டு போராட்டம் நடத்திப் பலருக்கு அலுத்து விட்டிருக்கிறது. இவர்களில் சிலர் ஆக்க பூர்வமான ‘போராட்டங்கள்’ நடத்த முன் வந்திருக்கின்றனர். கூட்டம் போட்டு, ஆரவாரம் செய்து, போலிஸ் மேல் கல்லெறிந்து, புகை குண்டுகளைச் சந்தித்து வீரர்களாக செல்ஃபி எடுத்துக் கொள்வதெல்லாம் சலித்து விட்டது போலிருக்கிறது.
இப்படிச் சலித்துப் போய், ஆக்கத்துக்குத் திரும்பி உள்ள, மைக்கெ மயெஸ்கி (Maike Majewski) என்ன சொல்கிறார்? எப்பப் பார்த்தாலும் எதையாவது எதிர்த்துக் கொண்டே இருப்பது எனக்குச் சலித்து விட்டது. நாம் எல்லாரும் இயற்கையை ரொம்பவே கொள்ளை அடித்திருக்கிறோம். இந்த ரூட்லேயே போனால் எல்லாம் அழியும். அதை எப்படிச் சரி செய்வது என்று பார்க்க விரும்பினேன். “குறைவாக வைத்துக் கொள்வது எப்படி நிறைவாக இருக்கும்? நாம் எப்படி நல்லதொரு வாழ்வு நடத்துவது?” என்று கேட்டுக் கொண்டேன் என்கிறார். (டெர் ஷ்பீகல் பத்திரிகைக்கு இவர் கொடுத்த பேட்டியின் ரத்தினச் சுருக்கம் இது. கீழே சுட்டி உண்டு. பார்க்கவும்.)

நகர்களில் இல்லாத ஒன்று தோட்டங்கள், விசாலமான திறந்த வெளிகள். அதனால், இவற்றை உருவாக்கத் திட்டமிட்டு, இவரும் பல கூட்டாளிகளுமாக இப்போது சில நகர்களில் பலபண்பாட்டியச் சமூகத் தோட்டங்களை நிர்மாணிக்கிறார்கள். உதாரணமாக, பெர்லின் நகரில் ஏகப்பட்ட கட்டுமான வேலைகளும், பெரும் நிர்வாக அமைப்புகளுக்கான கட்டடங்கள் கட்டப்படுவதும் நடப்பதால், அங்கு இப்படித் தோட்டங்கள் போட இடம் கிட்டுவது கடினம். இருந்தும் இண்டு இடுக்குகளில் அங்கு கிட்டும் சில இடங்களில் மரத் தடுப்புகளில் உயர்த்தப்பட்ட பெட்டிகளில் தோட்டம் போடுகிறார்கள்.

இப்படிப்பட்ட செயல்திட்டங்கள் இப்போது ஜெர்மனியில் வளர்ந்து வருகின்றன. பீலஃபெல்ட், ட்ரெய்ஸ்டென், எஸ்ஸென், ஹான்னோவர் போன்ற நகர்களிலும், விட்ஸென்ஹௌஸென், எம்ஸ்கெர்ச்சென் போன்ற சிற்றூர்களிலும் கூட இவை உருவாகி இருக்கின்றன.

வளர்ந்து வரும் இந்த இயக்கத்தில் 40% த்தினர் ஜெர்மன் மொழி பேசத் தெரியாதவர்கள் என்பதால் அதிகமாக இங்கிலிஷ் பேசப்படும் இடமாக இந்தக் கூட்டங்கள் உள்ளனவாம். வெகுகாலமாக ஜெர்மனியில் வளர்ந்து வந்திருக்கிற பசுமை இயக்கங்களை நாடாமல் இவர்கள் பெருமளவு ஆங்கிலோ-அமெரிக்க இயக்கங்களை நாடுகிறார்களாம். அவை செயல்வழித் திட்டங்களைக் கொடுக்கின்றன, மரபு ஜெர்மன் பசுமைப் போராட்டங்களைப் போல அரசியல் கருத்தியல் இயக்கங்களாக மட்டும் இல்லை என்பது ஒரு காரணமாக இருக்கலாம்.

ராப் ஹாப்கின்ஸ் என்ற சமூகவியலாளர் தெற்கு இங்கிலாந்தில் போதனையாளராக இருக்கிறார். அவர்தான் இந்த இயக்க அடையாளமாக உலகத்துக்குத் தெரியும் முகம் என்று மாயெஸ்கி சொல்கிறார். ஹாப்கின்ஸோ ஆஸ்திரேலிய சூழலியக்கத்திலிருந்து தனக்கு உந்துதல் கிட்டியதைச் சொல்கிறார்.

இங்கிலாந்தில் இருக்கும் டாட்னெஸ் என்கிற சிறு கூட்டுறவுச் சமுதாயம், சுமார் 8000 பேர்களைக் கொண்டது, அது இந்த இயக்கத்தின் தலை நகரம் என்று கூடச் சொல்லலாம். ட்ரான்ஸிஷன் மூவ்மெண்ட் என்று இங்கிலிஷ் பெயர் கொண்ட இந்த இயக்கம் 40 நாடுகளில், சுமார் 4000 குழுக்களைத் தனது இயக்கத்தில் உள்ளவர்களாகக் கருதுகிறதாம்.

இந்தச் செய்தி இந்த இயக்கத்தின் வலுக்கள், மெலிவுகளைப் பேசுகிறது. படித்துப் பாருங்கள்.

http://www.spiegel.de/international/zeitgeist/social-design-award-transition-movement-promotes-a-more-sustainable-world-a-1158703.html

சமீபத்தில் ஒரு ஃப்ரெஞ்சு சினிமாவும் இந்த இயக்கத்தின் பல செயல்பாடுகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது. ஆவணப்படமான அதன் தலைப்பு: டுமாரோ. அதில் இந்த டாட்னெஸ் நகர் மட்டுமல்ல, கூத்தம்பாக்கம் என்ற சென்னை நகரத்துப் புறநகர்ப் பகுதி பற்றிக் கூட சில நிமிடங்கள் படமெடுக்கப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். இளங்கோ ரங்கசாமி என்ற ஊரவைத் தலைவர் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? எந்தத் தமிழ் செய்தி அமைப்பாவது இவரைப் பேட்டி கண்டு படம் போட்டுப் பிரசுரித்ததா? அதற்கு ஒரு ஃப்ரெஞ்சு தன்னார்வலக் குழுதான் வர வேண்டி இருக்கிறது. சமத்துவபுரத்தின் அருமையைப் பேசுகிறார் அவர் இந்தப் படத்தில் சில நிமிடங்களில்.

அந்தப் படம் ஃப்ரான்ஸில் வெளியாகி அந்த வருடத்தின் உச்ச வருமானம் உள்ள படங்களில் ஒன்றாக ஆகி விட்டது. ஆவணப்படங்கள் இப்போது கதைப் படங்களுக்கிணையாகச் சம்பாதிக்கத் துவங்கியுள்ளன. இதன் முன்னோடிக் குறும்படம் ஒன்றை வலையில் தேடிப் பெறமுடியும். அது இங்கே:

[/stextbox]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.