குவெம்புவின் படைப்புலகம்

This entry is part 18 of 45 in the series நூறு நூல்கள்

கர்நாடகத்தின் பண்பாட்டுத் தலைமகன் எனப் போற்றப்படும் குவெம்புவின் முழுப்பெயர் குப்பளி வெங்கடப்பா புட்டப்பா என்பதாகும். 1909-இல் தோன்றி 1994-இல் மறைந்த அவர் இந்நூற்றாண்டின் மிகச்சிறந்த மாபெரும் இலக்கியமேதைகளில் ஒருவர் எனத் துணிந்து உரைக்கலாம். அவர் தோன்றிய குப்பள்ளி என்னூம் சிற்றூர் ஷிவெமொக்க மாவட்டத்தில் தீர்த்தஹள்ளிக்கு அருகில் உள்ளது. தீர்த்தஹள்ளியில் தொடக்க மற்றும் நடுநிலைக்கல்வியை முடித்தவர், பின்னர் மைசூரின் வெஸ்லியன் மிஷன் ஹைஸ்கூலில் படித்தார். பின்பு மகாராஜா கல்லூரியில் தம் பட்டப் படிப்பை முடித்தார்.

குவெம்புவிற்கு ஹேமாவதி என்னும் மனைவியும் நான்கு மக்களும் உண்டு. குவெம்பு கவிதை, சிறுகதை, கட்டுரை, நாவல், என்னும் துறைகளில் முத்திரை பதித்தவர் ஆவார். இவரை, பம்பா விருது, சாகித்ய அக்காதமி விருது, ஞானபீட விருது ஆகியவை வந்து அடைந்தன. ஆசிரியராய், கல்லூரி முதல்வராய், பல்கலைக் கழகத் துணைவேந்தராய்ப் பதவிகள் வகித்தவர் அவர். மைசூர், பெங்களுர், கான்பூர், குல்பர்கா, ஆகிய பல்கலைக் கழகங்கள் அவருக்குக் கௌரவ டாக்டர் பட்டங்கள் அளித்துத் தம்மைப் பெருமைப் படுத்திக் கொண்டன. மேலும் பத்மபூஷண், கர்நாடக ரத்னா, கர்நாடக அரசவைக் கவிஞர் போன்ற பெருமைகளும் அவருக்குக் கிடைத்தன.

குவெம்பு அவர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளைக் கவிதைகள், காவியச் சுருக்கம், நாவல், நாடகங்கள், பண்பாட்டுக் கட்டுரைகள், இலக்கியப் படைப்புகள் என வகைமைப் படுத்தி அனைத்தையும் தொகுத்து பெங்களுரின் ”குவெம்பு பாஷாபாரதி பிராதிகாரா” வெளியிட்டிருப்பது பாராட்டற்குரிய ஒன்றாகும்.

குவெம்புவின் கவிதைகள் எளிமையானவை; வாசிக்கும் வாசகனை உடனே தம்முள் ஈர்க்கக் கூடியவை; கருத்துகளைத் துணிந்து கவிநயம் குன்றாமல் சொல்லக் கூடியவை. “இந்தியா கிராமங்களில் வாழ்கிறது” என்றார் காந்தியடிகள் கிராமத்தின் முக்கியமான தொழில் விவசாயம்தான்; அத்தொழிலைச் செய்யும் விவசாயியைத் தியாகி என்றும், யோகி என்றும் குவெம்பு போற்றுகிறார். உலகில் எச்செயல்கள் நடந்தாலும் அவன் தன் பணியை விடாமல் செய்துகொண்டே இருப்பான். அதனால்தான் அவனை “ஏரின் யோகி” என்கிறார் அவர். அவன் தன் தொழிலை இடைவிடாமல் செய்து வருவதால்தான் இவ்வுலகில் மன்னர்கள் ஆண்டனர். சிற்பிகள் சிலகளைச் செதுக்கினர். கவிஞர்கள் கவிகள் புனைந்தனர்” என்று அவர் பாடுகிறார். அதுவும் பலனை எதிர்பாராமல் தன் பணியை ஒரு கர்மம் போலச்செய்து வருகிறான். அதனால்தான், குவெம்பு

”ஏர்கொழுவில் அடங்கிஉள்ளது கர்மம்
ஏர்மீது நின்றுளது தர்மம்”

இப்பாடலை மொழிபெயர்த்தவர் பயன்படுத்தும், யோகி, ராகி, கர்மம், தர்மம் போன்ற சொற்கள் பொருளமைதியோடு ஓசைநயமும் கொண்டு விளங்குகின்றன.

”பிறைச்சந்திரன்” என்றொரு கவிதை. அதில் ஒரு சிறுவன் தன் தாயைப் பார்த்துத் தனக்குத் தெரிந்த உவமையைக்  கொண்டு,

”கடவுளின் பெப்பர்மிண்டா அம்மா
வானில் சுழலும் சந்திரன்”

என்று எளிமையாகக் கேட்கிறான். சாதாரண பெப்பர்மிண்ட் மிட்டாயானது சுவைக்கச் சுவைக்கத் தேய்ந்து மறைந்து போகும். ஆனால் வானில் உள்ள பெப்பர்மிண்ட்டான பிறைச் சந்திரன் ,”எவ்வளவு சுவைத்தாலும் செலவாகாமல் வளர்கின்ற பெப்பர்மிண்ட்டா” எனக் கேட்கிறான் அவன். மேலும் கவிதை வளர்கிறது. ”அந்த பெப்பர்மெண்ட் எனக்குக் கிடைக்குமா அம்மா” என் அவன் அம்மாவிடம் கேட்கிறான். அம்மா பதில் சொல்கிறாள்.

”நீயும் கடவுளின் குழந்தையானால்
உனக்கும் தருவான் கண்ணே”

இப்போது சிறுவனுக்கு ஓரளவு புரிகிறது. கடவுளின் குழந்தையாக வேண்டுமானால் தாயைப் பிரிய வேண்டும். ஆனால் அவன் தன் தாயைக் கடவுளைவிட மேம்பட்டவராகக் கருதுகிறான். எனவே தன்னிடமிருந்து தன் தாயைப் பிரிக்கின்ற பெப்பர்மிண்டே வேண்டாமென உறுதியாகக் கூறுகிறான்.

”கடவுளின் குழந்தையாக விரும்பமாட்டேன்
அவனை மீறியவள் நீயம்மா
தாயைப் பிரித்துக் கடவுளிடம் சேர்க்கிற
பெப்பர்மிண்ட்டும் வேண்டாமம்மா”

கடவுளை விடத்தாயை உயர்வாகக் காட்டும் எளிமையான கவிதை இது. அதுவும் சிறுவன்  பார்வையில் கூறப்படுவதால் இது மேலும் சிறக்கிறது.

சில சாத்திரங்கள் அவை தோன்றிய காலத்துக்கு மட்டுமே உரியவையாகும். கால மாறுதலுக்கேற்ப அவை மாற்றப்படவேண்டும். ஏனெனில் மாந்தன் அறிவு வளர்ந்துகொண்டே போகும் தன்மை உடையது. அவ்வளர்ச்சிக்கேற்ப அவனுக்கு வழிகாட்டுக் சாத்திரங்களும் மாறவேண்டும் அல்லது மாற்றப்படவேண்டும். அதனால்தான் குவெம்பு,

”தாகத்துக்கு வருகிற சோதரனுக்கு நீர் கொடுக்க
மனுசாத்திரத்தைப் பிரித்துப் பார்க்க வேண்டுமா என்ன?”

என்று வினா தொடுக்கிறார். பஞ்சமன் ஒருவன் குழந்தை ஏரி நீரில் மூழ்கும்போது அதைக் காப்பாற்றாமல் பக்கத்திலேயே குளித்துக் கொண்டிருக்கும் ஒரு பிராமணன் நான் அதைத் தொட்டால் என் பிராமணத்துவம் கெடும் எனச் சும்மா இருக்கலாமா? என்பது குவெம்பு தொடுக்கும் கேள்வி. அப்படித்தான் சாத்திரம் சொல்கிறது எனில் சொன்ன மனுவையும், அவன் சொன்ன சாத்திரத்தையும் பிணைத்து வீசியெறிவோம் என்கிறர் அவர். நம் இதயம் சொல்வதே தரும நீதி எனச் சொல்லும் குவெம்பு, அக்கவிதையைக் கடைசியில்

”அந்நாள் முனிவரும் நம்போல மனிதரே
அவரின் சாத்திரம் அவர் காலத்துக்கு மட்டுமே
காலத்துக்கேற்ப தேசத்திற்கேற்ப
நம்மிதயமே மேன்மையான நீதிநூல் நமக்கு”

என்று [“எந்தக் காலத்து சாத்திரம் என்ன சொன்னால் என்ன?”]முடிக்கிறார். “கடவுள் சாட்சியானார்’ கவிதையில் உள்ள ‘நீளடவி” என்னும் சொல்லும், ‘அலைபுனல்’ என்னும் வினைத்தொகைச் சொல்லும் மொழிபெயர்ப்பாளரின் திறமைக்குச் சான்றாக விளங்குகின்றன.

அடுத்து குவெம்பின் சில சிறுகதைகளைப்பற்றிப் பார்ப்போம்.

”மீனாட்சியின் வீட்டு வாத்தியார்” என்று ஒரு சிறுகதை. கதை எனும் அளவில் அது மிகச் சாதாரணமானதுதான். ஆனால் அதில் குவெம்பு மனிதமன ஓட்டங்களை நன்றாகவே பிரதிபலித்திருக்கிறார் எனச் சொல்லலாம். மனம் தானாகவே சிலவற்றைக் கற்பனை செய்து பார்க்க முழு உரிமை உடையது. ஆனால் அக்கற்பனையின் விளைவாக அம்மனம் எடுக்கும் முடிவுகள்தாம் முக்கியமானவை என்கிறார் இக்கதையில் குவெம்பு. மேலும் மனம் ஒரு குரங்கு என்பதைப் போல அது தன் முடிவுகளைச் சட்டென்று மாற்றிக்கொள்ளவும் கூடியது என்றும் மறைவாக விளக்குகிறார்.

ஒரு வாத்தியார் மீனாட்சியின் வீட்டுக்கே வந்து அவளுக்குப் பாடங்கள் கற்பிக்கிறார். அவருக்கு மீனாட்சியின் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டுக் காதலாக மாறி விடுகிறது. அவள் தனக்காகவே என்னும் எண்ணத்தை வளர்த்துக் கொள்கிறார். மீனாட்சிக்கே உரிய அந்தப்பருவமும் அவளை நாணம், புன்னகை, மருள் பார்வை எல்லாம் கொடுக்கிறது. மீனாட்சியும், அவளது பெற்றோரும் செய்யும் செயல்கள், காட்டும் பணிவுகள் எல்லாம் ஒரு வாத்தியார் என்பதற்காகவே என்பதை அவர் எண்ணாமல் கற்பனையின் உச்சிக்கே போய் மீனாட்சியின் பெற்றோரே அவளைத் தனக்குக் கொடுக்கும் செய்தியைப் பேசுவார்கள் என்று அவர் நினைக்கிறார். அப்போது இதுவரை அவர் வந்து சொல்லிக்கொடுத்த பாடம் போதும் என நிறுத்தி விடுகிறார்கள்.

மீனாட்சிக்குத் திருமணம் நிச்சயமாகிறது. பெற்றோர் பார்த்த ஒருவனுக்கு மனமுவந்து இரண்டாம் தாரமாக ஒத்துக்கொள்கிறாள். வாத்தியார் மனம் உடைந்து போகிறார். பெயர் போடாமல் ‘மொட்டைக் கடிதங்கள்’ எழுதியும் அவற்றை மணமகன் பெரிதாக எண்ணவில்லை. திருமணம் முடிகிறது.

இப்போது அவர் நிலையை, “நிராசை என்ற தவாவிலிருந்து பேராசை என்ற நெருப்பில் விழுந்த்து அவர் மனம்” என்று குவெம்பு எழுதுகிறார். மொழிபெயர்ப்பாளர். இதில் ‘தவா’ எனும் சொல்லின் பொருள் விளங்கவில்லை.

தன்னைக் காதலித்து ஒரு காமப்பேயின் வாயில் இருக்கும் மீனாட்சியைக் காப்பாற்ற வேண்டும் என அவர் நினைக்கிறார். ”மீனாட்சியின் மானத்தை ரட்சிக்கவேண்டும் என்கிற எண்ணம் மனத்தில் வந்ததால் ஒரு கூர்மையான கத்தியை வாங்கினார்” என்கிறார் குவெம்பு. ஒரு நாள் இருட்டான மாலை நேரத்தில் மீனாட்சியின் கணவனைக் கொல்ல அவன் வீட்டிற்குச் செல்கிறார். ஆனால் அவரைப் பார்த்துவிட்ட அவன் அவரை உள்ளே அழைக்கிறான். வீட்டினுள் சென்று பார்க்கிறார். அந்த வீடு கலாச்சாரம், ரசனை, அழகு மிகுந்த வீடாக இருந்தது. வீட்டின் ஒவ்வொரு அலங்காரங்களும் அவரை வசீகரித்து அவனைப் பற்றி ஓர் உயர்ந்த எண்ணத்தை ஏற்படுத்தி அவர் மனத்தை மாற்றி விடுகின்றன. மீனாட்சி அவரை அறிமுகப்படுத்த அவன் மகிழ்கிறான். கத்தியை முன்பு மீனாட்சி கேட்டதாகக் கொடுத்து விட்டுப் போகிறார். கதை முடிகிறது.

மீனாட்சியின் கணவன் கத்தியைப் பார்த்து, :அட, எவ்வளவு கூர்மையாக இருக்கிறது” என்கிறான். அது கத்தியைப் பற்றியன்று; நம் மனம் பற்றிய சொற்களே. ஆமாம் இந்த மனம் அவ்வளவு கூர்மையானது; நல்லவரின் உள்ளத்தைக் கிழித்துப் போடும் அளவுக்குக் கூர்மையானது. மேலும், “நம் பெண்களுக்கெல்லாம் ஒவ்வொரு கத்தியைக் கொடுக்க வேண்டும் அய்யா; இல்லையென்றால் போக்கிரிகளுக்கும் புத்தி வருவதில்லை” என்று வாத்தியார் சொல்வது சுய பரிசோதனை போல இருக்கிறது.

கடைசியில் வாத்தியார், மீனாட்சியை ’அம்மா’ என்று அழைப்பது அவரின் மனம் முழு மாற்றம் அடைந்ததைக் காட்டுகிறது. மேலும், “இங்கு வந்தது கங்கையில் குளித்தது போல் இருக்கு எனக்கு” என்று சொல்லும்போது அவர் மன அழுக்குகள் விலகிவிட்டதைக் காட்டுகிறது. மொழிபெயர்ப்பாளர் “பசங்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்து….” என்று கொச்சைச் சொல்லான ‘பசங்க’ என்பதைத் தவிர்த்து இருக்கலாம். பிள்ளைகள் என்றே சொல்லலாமே?

இத்தொகுப்பில் நாவல்கள் பகுதியில் இரு நாவல்கள் உள்ளன. முதல் நாவலின் பெயர் “கானூரின் எஜமானி சுப்பம்மா”  என்பதாகும். ஒரு கிராமத்தில் பாகப்பிரிவினைக்குப் பஞ்சாயத்து நடக்கிறது. அதைச் சொல்லும் முன்னர் சீதை—பூவைய்யன் உரையாடல் மூலம் இயற்கையை நேசிப்பதைக் குவெம்பு காட்டுகிறார். தொட்டால் தீட்டு என்று சமூகத்தில் இருந்த கொடுமையைக் லட்சுமியிடம் குழந்தையை நஞ்சன் கொடுக்க மறுப்பதிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.

பாகப்பிரிவினையில் சந்ரேய கவுண்டர் தனது அண்ணன் மகனான பூவையனை ஏமாற்ற வேண்டும் என முன்கூட்டியே திட்டமிட்டு ஆள் சேர்த்துப் பஞ்சாயத்தில் பேசுகிறார். முதலில் சற்று எதிர்ப்பு தெரிவித்த பூவைய்யன், அவன் அம்மா சொல்வது போல ”சந்யாசியைப் போல எதுவும் வேண்டாம்” என்கிறான். மேலும் அவன், மிகச்சாதரணமாக, “அவங்க செஞ்ச அநியாயம் அவுங்களுக்கே இருக்கட்டும்; தங்கத்தைச் சேர்த்து வைத்துக்கொண்டு சுகத்தைக்கோண்டோர் உலகில் நிறையப் பேர் இல்லை” என்று கூறி விடுகிறான். பாகம் பிரித்த சில மணிகளிலேயே அதிகம் வாங்கிக்கொண்ட சந்ரேய கவுண்டர் அதிகம் குடித்துக் கீழே விழுந்துக் காயம் படுகிறார்.

குவெம்பு அந்நாவலை இப்படி முடிக்கிறார். “சிறந்த ஒன்றைக் கீழான ஒன்றிற்கு ஒப்பிடுவதானால் சந்திரனைச் சுற்றியுள்ள ஒளிவட்டத்தைப் போல் அவர்கள் அனைவரையும் கள்ளின் நாற்றம் சுற்றியிருந்தது”

சந்திரனாக பூவைய்யனையும், சந்ரேய கவுண்டரைக் கள்ளின் நாற்றமாகவும் மறைமுகமாக உருவகப்படுத்தப்பட்டிருப்பதை உணர முடிகிறது.

இரண்டாவது நாவல் “மலைகளில் மணப்பெண்” முழுக்க முழுக்க  மலைப்பகுதியில் நடக்கிறது. குவெம்புவின் வருணனைகள் மலைப்பகுதியைக் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகின்றன. குத்தி என்பவன் திம்மி எனும் பெண்ணைத் திருமணம் செய்யத் தன் வீட்டிற்கு மலைக்காட்டைக் கடந்து அப்பெண் வீட்டார் அறியாமல் அழைத்துச் செல்கிறான், வழியில் புலியின் உறுமல், சிறுத்தையின் வருகை எல்லாவற்றையும் கடந்து அவர்கள் காதல் போகிறது. இரவு ஒரு பாழ் மண்டபத்தில் தங்க வேண்டி இருக்கிறது.

ஒரே கம்பளியில் உடல் நெருக்கமாக இருவரும் படுத்துக் கொள்கின்றனர். இருவரும் ஏற்கனவே உடல் சுகம் அடைந்தவர்கள். ஆனாலும் இப்பொழுது யார் முதலில் தொடங்குவது எனும் தயக்கத்திலேயே வேறு எதுவும் நடக்காமல் இரவைக் கழிக்கின்றனர். கம்பி மேல் நடக்கும் இந்த இடத்தை குவெம்பு மிகச் சாதாரணமாகக் கடந்து போகிறார்.

இதே நாவலின் அடுத்த பகுதியில் முகுந்தய்யா—பீஞ்சலு காட்டப்படுகிறார்கள். இருவரும் சிறுவயது முதலே காட்டில் விளையாடியவர்கள். முகுந்தய்யா மேல்சாதிக்காரன்; பீஞ்சலு தீண்டப்படாத சாதியை சேர்ந்தவள். இப்போது பீஞ்சலுவிற்கும் அய்த்தா என்பவனுக்கும் திருமணமாகி இருவரும் முகுந்தய்யாவின் பண்ணையில்தான் வேலை செய்கிறார்கள். மூவரும் ஒரு நாள் காட்டிற்கு நண்டு பிடிக்கப் போகிறார்கள். எப்படியாவது  பீஞ்சலுவின் கணவன் அய்த்தாவை அவளிடமிருந்து பிரித்து அனுப்ப வேண்டும் என்பதில் முகுந்தய்யா குறியாக இருந்து அவனை அப்புறப்படுத்துகிறான். தனியாய் இருக்கும் அவள் மனத்தில் ஆரம்பத்திலிருந்தே முகுந்தய்யாவைக் கணவனாக எண்ணிய நினைவு தலை தூக்குகிறது. அவள் தன்னை அவனுக்கு அர்ப்பணிக்கத் தயாராக இருக்கிறாள். ”தன்னைக் கைப்பிடித்த கணவனுக்குத் துரோகம் செய்கிறேன் என்ற உணர்வு அவளுக்குக் கடுகளவும் இருந்திருக்காது” என அவள் மனநிலை கூறப்படுகிறது.

ஆனால் முகுந்தய்யா அவளைத் தனியாக நிறுத்தியதே ஏனென்று தெரியும்போது முகுந்தய்யா உயர்ந்து போகிறான். தான் விரும்பும் பூவள்ளி சின்னம்மாவை வயதான, குடிகாரனான நோயாளியான ஹெக்கடே என்பவனுக்குத் திருமணம் செய்யவிருப்பதைத் தடுத்து நிறுத்த, அவளிடம் போய் ரகசியமாகக் கூறுமாறு முகுந்தய்யா பீஞ்சாலியிடம் கேட்கிறான். இது எதிர்பாராத திருப்பம்.

இங்கும் தவறு செய்யக்கூடிய சந்தர்ப்பம் இருந்தும் இருவரும் நேர்மையாக இருப்பது நாவலின் ஒரு வகை உத்திதான். இந்நாவலும் இறுதியில் ஹெக்கடே காட்டில் தடுமாறி விழுவதும், அவரைத் தீண்டத் தகாதவர்கள் தாங்கிப் பிடிப்பதுமாகவும் முடிகிறது.

ஆக குவெம்புவின் இவ்விரு நாவல்களும் அறம் மற்றும் தனிமனித நம்பிக்கைகளின் மீது எழுப்பப்பட்டுள்ளது என்று கூறலாம்.

இத்தொகுப்பில் குவெம்பு எழுதிய நான்கு நாடகங்கள் உள்ளன. நான்கும் தொன்மங்களைக் கட்டுடைத்துப் பார்க்கும் விதத்திலேயே எழுதப் பட்டுள்ளன.

முதல் நாடகம், “துப்புரவாளன்” என்பது. இதில் சிவபெருமானே ஒரு பாத்திரமாக வந்து போகிறார். பார்ப்பனன், கவிஞன், உழவன், இளைஞர் ஆகியோர் கவனிக்காமல் போய்க்கொண்டிருக்க அங்கு அமர்ந்துகொண்டிருக்கும் துப்புரவாளனின் முன் தோன்றிய சிவன், ”நானே ஒரு துப்புரவாளன்” என்கிறார். அவர் நான், “இவ்வுலகில் பாவத்தை நீக்கித் துப்புரவு செய்கிறேன்” என்கிறார். மேலும் ”நான் பாவியாக இருந்ததால் கங்கையைச் சூட்டினார் என் தலையில்; நான் தீண்டத்தகாதவனாக இருந்ததைப் போக்க நெற்றிக்கண் வைத்தனர்; என்னைத் தூயோன் ஆக்க என் கழுத்தில் அரவை அணிவித்தனர்” என்றெல்லாம் மொழிகிறார். அவர், “வீதி பெருக்கும் ஏழை உள்ளத்தில் நானிருப்பேன்; உழுதுவரும் உழவன் உள்ளத்தில் நானிருப்பேன்” என்கிறார். “என் துடைப்பம் போன்ற சூலம் பெருக்கிக் கொண்டிருக்கிறது உலகின் வீதிகள்; ஊரின் தோட்டி நீ; உலகின் தோட்டி நான்” என்று கூறி அவர் முடிக்கிறார்

இரண்டாவது நாடகத்தின் பெயர் “மயான குருட்சேத்திரம்” என்பதாகும். குருட்சேத்திரப் போரின் இறுதிக்  கட்டத்தில் துரியோதனன் தொடை பிளக்கப்பட்டு விழுந்து கிடக்கும் காட்சியில் நாடகம் தொடங்குகிறது. அந்த ஒரே காட்சியில் நாடகம் முடிகிறது. முதலில் கிருஷ்ணனைச் சாடும் துரியோதனன் “எல்லாம் மாயை;  நாம் எல்லாரும் இங்கு  நடிக்க வந்தவர்கள்” என்று கண்ணனால் உணர வைக்கப்படுகிறான்.

மூன்றாவது நாடகம் முக்கியமானது; இதன் பெயர், “கைவிரலுக்குக் கழுத்து” என்பதாகும்.  இதுவும் மகாபாரதத்திலிருந்து எழுதப்பட்டதுதான். ஏகலவ்யன் பெருவிரலைக் குரு தட்சிணையாகத் துரோணர் கேட்கிறார். வெட்டி அவன் தருகிறான். அங்கு எழும் குருதியில் துரோணர் தன் கழுத்து வெட்டப்படுவதைக் காண்கிறார். ஏகலவ்யனின் அன்னை தன் மகனின் பெருவிரல் துண்டாடப்பட்டு இருப்பதைப் பார்த்து, “யாருக்கோ பலி என் குழந்தையின் பெருவிரல்; பலியாகட்டும் அந்த பாவியின் கழுத்து” என்று தீச்சொல் இட்டு விடுகிறாள். அப்பொழுது கூட “என் தியாகம் வீணாயிற்றே” என்றுதான் ஏகலவ்யன் வருந்துகிறான்.

நான்காவது நாடகம் “சூத்திரத் துறவி”. ”சம்புகன் என்ற சூத்திரன் முனிவனாகித் தவம் செய்ததால் என் மகன் இறந்து போனான்” என்றொரு பார்ப்பனன் வந்து இராமனிடம் முறையிடுகிறான். இராமன் அவனுக்கு உண்மையை உணர்த்த சம்புகன் மீது  பிரம்மாஸ்திரம் எய்கிறான். அது சம்புகனை வலம் வந்து திரும்புகிறது. பார்ப்பனனிடம் இராமன் “இந்த அஸ்திரம் புனிதரை அவமதித்தவனை, அதாவது உன்னையே தொட வருகிறது” என்கிறார். இறுதியில், அந்தப் பார்ப்பனன் “சாத்திர மூடனுக்கு, சாதியென்னும் செருக்குற்றவனுக்கு எந்த மரம் ஆயின் என்? நெருப்பு தர மறுத்திடுமோ? நெருப்பினும் மேல் கீழோ?” என்று அறம் உணர்கிறான்.

இந்த நாடகங்கள் எல்லாமே, “கடிதோச்சி மெல்ல எறிக” என்று எழுதப்பட்டுள்ளது எனலாம்.

மேலும் இத்தொகுப்பில். நவீன உரைநடை, பண்பாட்டுக்கட்டுரைகள், இலக்கியக் கட்டுரைகள் ஆகியவையும் உள்ளன. அவை குவெம்பின் பல்வேறு கருத்துகளை எடுத்து இயம்புகின்றன. உரைநடையில் ‘ஜகம்’ விருட்சம்’ போன்ற மொழியாக்கங்களைத் தவிர்த்திருக்கலாம். “பள்ளத்தாக்கில் தூரத்தில் குரைத்துக் கொண்டிருந்த கிராமத்து நாய் இருளின் மௌனத்திற்குச் சத்தமெனும் கல்லை எறிந்தது” [பக்;241] போன்ற கவிநயம் மிக்க மொழிபெயர்ப்புகளோடு, ”ஈடு போடுதல்” [பக்: 246] எனப் புரியாதவையும் இருக்கின்றன.

தொகுப்பில் நிறைய அச்சுப்பிழைகள் உள்ளன. தொகுப்பின் அச்சமைப்பும், கட்டமைப்பும் மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளன.

 

குவெம்பு வாசிப்பு — குவெம்புவின் தேர்ந்தெடுக்கபட்ட படைப்புகள்
ஆசிரியர் குழு: தமிழவன், அன்பன், முனைவர் ஜெயலலிதா;
வெளியீடு : குவெம்பு பாஷாபாரதி பிராதிகாரா; கலாகிராமம்; ஞானபாரதி; பெங்களூர் பல்கலைக்கழகப் பின்புறம்; மல்லத்தள்ளி; பெங்களூர்—560 056
பக் : 402;
விலை :ரூ 150
பேசி : 23183311;  23183312

Series Navigation<< பாரதியின் இறுதிக்காலம்தி.ஜானகிராமனின் மோகமுள் வாசிப்பு அனுபவம் >>

One Reply to “குவெம்புவின் படைப்புலகம்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.