குளக்கரை


[stextbox id=”info” caption=”சுதந்திர அடக்குமுறை”]

துருக்கி யூரோப்பில் சேரும் கனவைக் கைக் கொண்டு பல வருடங்களாகி விட்டன. ஆனால் இன்னமும் துருக்கி யூரோப்பில் ஒரு இணைநாடாகவோ, பகுதியாகவோ ஆகவில்லை. அது நடக்குமா என்பது ஐயமே, ஏனெனில் இந்த முனைப்பு சில பத்தாண்டுகளாக முன்வைக்கப்பட்டும் சிறிதும் முன்னேற்றம் இல்லாத ஒரு நாட்டமாக இருக்கிறது. இடையில் பழைய துருக்கிய  ‘செகுலரிய’ ராணுவ அரசு ஒழிக்கப்பட்டு, இஸ்லாமிச அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி சுமார் பத்தாண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது.

ஆசியாவுக்கும் யூரோப்புக்கும் இடையில் மத்திய நிலையில் இருக்கும் அந்நாடு, ஒரு நூறாண்டுக்கு முன்பு ஆசியச் சார்பை விட்டு விட்டு, யூரோப்பியச் சாய்வைத் தேர்ந்தெடுத்தது. அது அப்போது நாட்டை ஆண்ட மேல்நிலை மனிதர்களின் தேர்வு. குறிப்பாக ராணுவத்தின் உயர் மட்டத்தினர் எடுத்த முடிவு. துருக்கியர்கள் தமது பல நூறாண்டுகால இஸ்லாமியச் சாய்வை முடக்கி வைத்து விட்டு, ‘செகுலரிய’ வடிவு கொண்ட வாழ்வை ஒரு அரை நூறாண்டு போல முயன்று பார்த்தனர். அது பல காரணங்களால் வேலைக்கு ஆகாது என்ற முடிவுக்கு அடித்தள மக்கள் முடிவெடுத்ததன் விளைவு, இஸ்லாமிசம் மறுபடி மேலெழுந்து, ஜனநாயக முறைகளைப் பயன்படுத்தி அதிகாரத்தைக் கைப்பற்றியது. ராணுவம் பின்னொதுக்கப்பட்டது. மேற்கின் சாய்வில் நாட்டை ஆண்ட ‘செகுலரியம்’ கடுமையாக உடைக்கப்பட்டு நொறுங்கி வருகிறது.

ரெஜெப் தய்யிப் எர்த்வான் (Recep Tayyip Erdoğan) இன்று நாட்டை ஆளும் அதிபர். கடந்த பல வருடங்களாக நாட்டை ஆளும் எர்த்வான் படிப்படியாக நாட்டை மேலை மாதிரியில் நடத்தியதால் விளைந்த, எந்த ஜனநாயக அமைப்பு தான் பதவிக்கு வர உதவியதோ அதை படிப்படியாக உடைத்துக் கொண்டிருக்கிறார். சென்ற நூற்றாண்டில் ‘30களில் துவங்கி பல பத்தாண்டுகள் முயன்று, நவீன காலத் துருக்கிக்கு அடிகோலிய முஸ்டஃபா கெமால் அடாடுர்க் ஒரு புறம் நவீனப்படுத்திக் கொண்டே, இன்னொரு புறம் துருக்கியை தேசியத்துக்குள் இட்டுச் சென்றார். நவீனப்படுத்தலும் தேசியமும் ஒன்றையொன்று வெறுப்பவை என்பது கடந்த நூறாண்டு வரலாற்றைப் பார்த்தால் புலப்படும். நவீனப்படுத்தல் என்பது மேலை மதிப்பீடுகளை உலகத்து மதிப்பீடுகளாகக் கருதி மேற்கல்லாத மக்கள் திரள் மீது அவற்றைச் சுமத்துவது, அல்லது பல விளம்பர உத்திகளைப் பயன்படுத்தி கவர்ச்சியான பொருளாக அவர்களிடம் அதை விற்பது போன்ற நடவடிக்கைகளை நம்பியே உலகெங்கும் பரவி இருக்கிறது. அரை நூறாண்டு உலகைத் தன் மாயையில் பிடித்து வைத்திருந்த நவீனப்படுத்தல் என்ற உலகச் சக்தி, தமக்கு எதையும் கொடுக்காமல், தம்மை மேன்மேலும் வறியராக ஆக்குவதைத்தான் செய்கிறது என்பதை அறியத் தொடங்கி இருக்கிற பல நாட்டு மக்கள், குறிப்பாக பற்பல மேற்கல்லாத நாடுகளிலும், (சில மேலை நாடுகளிலுமே கூட) இப்போது நவீனப்படுத்தலுக்கு எதிரான வலுவான இயக்கங்களை உருவாக்கி அதிகாரத்தைக் கைப்பற்றத் துவங்கி இருக்கின்றனர்.

அதன் ஒரு வடிவு எர்த்வானின் இஸ்லாமிச அரசு. எர்த்வான் அடாடுர்க்கின் மேற்கு நோக்கிய சாய்வை ஒருபுறம் மறுதலித்துக் கொண்டே இன்னொரு புறம் துருக்கியை யூரோப்பிய யூனியனில் சேர்க்கவும் முயன்று கொண்டிருக்கிறார். அதற்குப் பற்பல காரணங்கள் உண்டு. ஒன்று யூரோப்பிய யூனியன் பிரதேசம் இன்னமும் உலகின் வளமான பொருளாதாரச் சூழல்களில் ஒன்று. இன்னமும் உலகத் தொழில் நுட்பம், பொறியியல் முன்னேற்றம், மேலும் உற்பத்தித் திறன் ஆகியவற்றில் மிக முன்னேறிய பகுதி. இதோடு சேர்வது துருக்கியை அத்தகு திறன்களும் வலுவும் மிக்க பகுதியாக ஆக்குவதற்கு உதவும் என்பது துருக்கியின் மேல்மட்டத்தினரின் எண்ணம். வருங்காலத்தில் வெறும் விவசாய நாடாகவோ, தொழில் நுட்பத்திற்கு மேலை நாடுகளை நம்பியே இருக்கும் நாடாகவோ இருந்தால், சில ஏகாதிபத்திய நோக்குள்ள நாடுகளும் (அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்றன) வேறு சில வன்முறையைத் தம் துருப்புச் சீட்டாக நம்பி இருக்கும் நாடுகளும் (பாகிஸ்தான், வட கொரியா போன்றன) அப்படி ஒரு சாத்வீக நாட்டை ஏறி மிதித்துச் சவக்காடாக ஆக்கி விடும் அபாயம் மிக அதிகம். இது எர்த்வானுக்கும் தெரியும், இஸ்லாமிசமே உலக ஏகாதிபத்தியத்துக்குப் பேராசையோடு உலவும் ஒரு இயக்கம் என்பதால் அதற்கும் நன்கு தெரியும். எனவே துருக்கி ஆதாயம் தேடி ஆற்றோடு போகத் தயங்கவில்லை. ஆனால் தேசியம் என்ற பெயரில் அடாடுர்க் உருவாக்கிய கொள்ளிப்பிசாசு எர்த்வானுக்கு இப்போது இஸ்லாமிசம் என்ற கருப்பங்கியின் உள்ளே இருந்து கொண்டு யூரோப்பிய யூனியனின் ஆவியுறிஞ்சும் அணைப்பைத் தடுக்க உதவுகிறது. அவர் தன் நிலைகளை மாற்றாமல் யூரோப்பிய யூனியனோடு இணைய விரும்புகிறார்.

ஆனால் யூரோப்பிய யூனியன் தன் மதிப்பீடுகளுக்கு இணங்கிய நாடுகளையே உள்ளே இழுப்பது என்று ஒரு கருத்தைக் கொண்டிருக்கிறது. அந்த முன் முடிவுக்குத் துருக்கி ஒரு சவாலாக இருக்கிறது. யூரோப்பிய யூனியனுக்கு கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை. (மீசைய்ஐ இந்த விஷயத்தில் துருக்கிக்கு ஒத்ததாக வைத்துக் கொள்வோம்.) ஆசியாவிலிருந்து துருக்கியை அகற்றி யூரோப்புடன் இணைத்தால் யூ.யூவுக்கு அது ஒரு அரணைக் கொடுக்கும் என்று யூ. யூ எண்ணுகிறது. தவிர ரஷ்ய ஏகாதிபத்தியத்துக்கு ஒரு தடுப்பாகத் துருக்கி இருக்கும் என்பதும் யூ.யூவின் கருத்து. அதே நேரம் துருக்கியில் இப்போது மேலோங்கி வரும் இஸ்லாமிசத்தை யூ.யூ விரும்புவதில்லை. ஆக யூ.யூவுக்கு இது கெட்ட நேரம். எந்தத் தேர்வும் அதற்கு நல்ல விளைவைக் கொடுக்காது. அதே நேரம் துருக்கியை விட்டு விடவும் யூயூவுக்கு இயலாது. துருக்கியே மேற்காசிய இஸ்லாமிசத்துக்கு முன்னணியாகவும், அதன் உலகாளும் பேராசைக்கு காப்பாக இருக்கும் கோட்டையாகவும் மாறிவிட்டால் யூ.யூவின் ஆள்வோருக்கு இரவில் உறக்கம் வராது.

துருக்கியில் இதற்கிடையில் 2015 இல் ராணுவத்தினரும், பற்பல ‘செகுலரியர்களும்’ (அனேகமாக அரசு ஊழியர்களில் ஒரு பெரும்பகுதியினர்) கூட்டணி வகுத்து எர்த்வானின் அரசைக் கவிழ்த்து நாட்டை மறுபடி முந்தைய ‘செகுலரிய’ப் பாதையில் செலுத்த எண்ணி, ஒரு ராணுவப் புரட்சியை நடத்தினர். அதை மக்களின் எழுச்சி துப்புரவாக ஒடுக்கி விட்டது. மக்கள் மட்டுமல்ல, ராணுவத்தில் இஸ்லாமிசத்தால் மேலெழுந்த குழுக்களும், இஸ்லாமிசத்தின் உதவியால் செகுலரியர்களின் ஆக்கிரமிப்பை ஒடுக்கி அதிகாரத்தைச் சுவைத்து விட்ட அதிகாரிகளும் இந்தப் புரட்சிக்குத் துணை போகவில்லை என்பதும் ராணுவப் புரட்சி வீழ்ந்ததற்குச் சில காரணங்கள்.

கடந்த ஒரு வருடமாக எர்த்வான் அரசிலும், சமூகத்திலும் ‘செகுலரியர்கள்’ என்ற முத்திரை கொண்டவர்களையும், தன் விமர்சகர்களையும் பதவிகளில் இருந்து அகற்றி, பலரைச் சிறையிலிட்டு, பத்திரிகையாளர்களைக் கைது செய்து இஸ்லாமிசம் எங்கெல்லாம் அதிகாரத்தைக் கைப்பற்றுகிறதோ அங்கெல்லாம் என்ன செய்யுமோ அதை எல்லாம் செய்து கொண்டிருக்கிறார்.

யூ.யூ இவற்றைப் பார்த்துப் பொருமுகிறது, துருக்கியே கபர்தார், உன் நடத்தை சரியில்லை என்றெல்லாம் சும்மா பூதஞ்சி காட்டுகிறது. இன்னொரு புறம் யூரோப்பிய யூனியனின் அதிகாரிகள் துருக்கி இன்னமும் யூ.யூவில் சேர்வதையே யூரோப்பிய யூனியன் விரும்புகிறது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். வழக்கமான இடது சாரிகள்/ ஆம்னெஸ்டி தன்னார்வலர்கள், இன்னும் பற்பல ‘செகுலரியர்கள்’ யூரோப்பில் துருக்கியின் இஸ்லாமிச அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்துக் கொண்டு எதிர்ப்பைத் தெரிவிக்கிறார்கள்.

இந்தச் செய்திகளைச் சுருக்கமாகச் சுட்டும் இரு லிங்குகள் இங்கே.

https://www.theguardian.com/world/2017/jul/15/turkey-sacks-over-7000-civil-servants-for-alleged-links-to-terror-groups

https://www.theguardian.com/world/2017/jul/25/eu-urged-to-call-off-turkish-accession-talks

[/stextbox]


[stextbox id=”info” caption=”சிரிப்பதற்கு சுதந்திரம்”]

நவீன மயமாதல் என்ற ஒரு கானல் நீரை மேலை நாடுகள் துரத்தவாரம்பித்து சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாகி விட்டது. உறுதியான மாற்றமாக நவீனத்துவம் மேற்கில் உருவெடுக்க முதல் நூறாண்டு பூராவுமான முயற்சி தேவைப்பட்டது. கடும் உழைப்புப் பாசறையாக இருந்த மேற்கின் தொழிற்சாலைகள் மேற்கின் விவசாயப் பண்பாட்டின் முதுகெலும்பை உடைக்க அத்தனை காலம் ஆகியது. நவீனப்படுதல் எப்படி வாழ்வையும், பண்பாட்டையும், பொருளாதாரத்தையும் ஒரு புறம் சில்லு சில்லாக உடைக்கிறதோ, அதே போலவே நவீனப்படுத்தலின் ஆதார சக்தியான தொழில் மயமாதல், அறிவியல் வளர்ச்சி, எல்லாவற்றுக்கும் மேலாக அளவைகளின் கூர்மை போன்ற பல காரணிகள், ஒரே வகைத்தான வளர்ச்சியைப் பெறாது பற்பல விதமாக மாறுகின்றன.

இதன் கூட்டு விளைவு, நவீனமாகி விட்டதாக ஒரு பிம்பத்தைக் கொண்ட மேலை நாடுகள் கூட தம் நடுவே பற்பல பகுதிகளில் பெரும் சீரழிவும், கடும் தேக்கமும், தொய்வும் கொண்டு விளங்குகின்றன. வேறுசில பகுதிகளில் ஆடம்பரமும், ஆர்ப்பரிக்கும் ஊடகப் பரபரப்பும், கேளிக்கைகளும், கொண்டாட்டமும், ஏராளமான செல்வப் புரளலும் காணப்படும் அதே நேரம் அண்டை நிலப்பகுதிகளில் சீரழிவு, வறுமை, வன்முறை, ஏன் கொத்தடிமை முறைகள் கூடக் காணப்படும் விசித்திரத்தை மேலை நாடுகளில் பார்க்கலாம். அவற்றின் கரிப்பிரதிகளான பற்பல மெட்ரோ பெருநகரங்களில் பல நாடுகளிலும் இதே போன்ற சீரற்ற பெரும் ஏற்றத் தாழ்வுகள் கொண்ட பொருளாதாரம், பண்பாடு, வாழ்க்கை நிலைகளோடு மக்கள் திரண்டிருப்பதை நாம் காணலாம்.

இதை ஒரு புறம் நினைவு வைத்துக் கொண்டால், இன்று அமெரிக்கா எனப்படும் பிரமைகளின் கூட்டுருக் கொண்டதோர் நாட்டில், எப்படி என்னென்னவோ கோணல்கள் காணப்படுகின்றன என்பதும், இன்னொரு புறம் அதன் தொழில் வளர்ச்சி, அறிவியல் திறன் ஆகியன அபரிமித வேகத்தில் மாறிக் கொண்டிருப்பதையும், வேறொரு புறம் அதன் சமூக ஒழுங்கு, அரசியல் அமைப்புகள் தம் எதார்த்த நிலைகளை இழந்து பெரும் நாடகக் களங்களாக ஆவதும் புரியத் தொடங்கும். புரிவது என்றால் ஏதோ மர்மம் அவிழ்ந்து தெளிவு வந்து விட்டது என்றில்லை. இவை ஏன் மர்மமாக இருக்கின்றன என்பதுதான் புரியும். அதை அவிழ்க்கக் கூடிய ஒன்றிணைந்த கருத்தியல் விளக்கம் ஏதும் யாராலும் இன்னும் உருவாக்கப்பட்டு விடவில்லை. அப்படி ஒரு ஒன்றிணைந்த கருத்தியல் விளக்கம் சாத்தியம் என்று நாம் எதிர்பார்ப்பது கூட இனிச் செல்லுபடியாகாது.

இந்த வகைக் கோணல்களில் ஒன்று, டானல்ட் ட்ரம்ப் என்ற விசித்திரப் பேர்வழி அந்த நாட்டின் அதிபரானது. இயனெஸ்கோவின் அபத்த நாடகத்தை (காண்டா மிருகங்கள்!) ஒத்த ஒரு அரசியல் நாடகம் அமெரிக்காவில் இப்போது நடந்தேறிக் கொண்டிருக்கிறது. அதே நேரம் இது துருக்கியின் இஸ்லாமிச நாடகத்தை ஒத்ததாகவும், ரஷ்யப் புடினியத்தை ஒத்ததாகவும் உள்ளதையும் நாம் பார்க்கலாம். மூன்று களங்களிலும், கிட்டத் தட்ட நூறாண்டுகளாக ஓரம் கட்டப்பட்டு அலட்சியம் செய்யப்பட்ட மக்கள் குழுக்கள், தமது நம்பிக்கை நட்சத்திரமாக ஒரு எதேச்சாதிகாரியைத் தேர்ந்தெடுத்து அதிகாரத்தில் அமர்த்துகிறார்கள். அதற்கு அவர்கள் பயன்படுத்தும் வழி முறை ஜனநாயகத் தேர்தல்.

http://www.newyorker.com/magazine/2017/07/24/how-trump-is-transforming-rural-america

ஆனால் அந்தத் தேர்தலில் பதவிக்கு வருபவர்கள் எந்த அமைப்புகள் அம்மக்கள் குழுக்களை அலட்சியம் செய்து சிறு குழுக்களான மேல்நிலை மக்கள் நாட்டை தம்மிஷ்டத்துக்குச் சுரண்ட வழி செய்தனவோ அந்த அமைப்புகளையே படிப்படியாக உடைக்க முற்படுவதை நாம் காணலாம். இது ஏதோ நல்லதுதானே என்று நாம் கருத இடமில்லை. ஏனெனில் உடைக்கும் எதேச்சாதிகாரிகள் விரும்புவது வழிமுறைகளோ, விதிகளோ, ஒழுங்கோ இல்லாத ஒரு அமைப்பு. வல்லவன் வெல்லுவான் என்ற போர்முறைச் சிந்தனை. ‘நாகரீகத்துக்கு’ எதிரியான வன்முறை, தில்லுமுல்லு, பொய்களின் கூட்டமைப்பு.

இதில் அபத்தம் என்ன என்றால், உடைப்பவர்கள் எந்த மக்கள் தம் வாழ்வுக்கு விடிவு வரும் என்றெண்ணி இந்த எதேச்சாதிகாரிகளைத் தேர்ந்தெடுத்தனரோ அந்த மக்களுக்கு விடிவு வரும் வாய்ப்பே இல்லாத ஒரு பாதையை, ஒரு அதிகார வடிவை, பொருளாதாரச் சூழலை இந்த எதேச்சாதிகாரிகள் கொணரப் போகிறார்கள் என்பதுதான். ஆனால் அம்மக்கள் இன்னமும் இவர்களை நம்பி ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கின்றனர். உண்மை என்னவென்றால் உலகின் பற்பல நாடுகளிலும் அதிகாரத்தில் உள்ளவர்கள் பெரும் வக்கிரர்கள், மக்களின் எதிரிகள். அந்த வக்கிரர்களின் தலைமையில் இவர்கள் உள்ளனர்.

அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த அரசியல் நாடகத்தில், அதிபர் தமது சட்ட மந்திரி போன்ற பதவிக்குத் தேர்ந்தெடுத்த ஒரு நபரை ‘முறைப்படி’ தேர்ந்தெடுக்கக் கூட்டப்பட்ட ஒரு அவையில், பார்வையாளர் ஒருவர் அங்கு இந்த நபரின் ‘நேர்மை, நம்பகத்தன்மை, நியாய உணர்வு’ போன்றன விதந்தோதப்பட்டதைக் கேட்டுத் தன்னை அடக்க முடியாமல் சிரித்து விடுகிறார். அப்படிச் சிரித்தது அவையின் ஒழுங்கைக் கெடுக்கச் செய்யப்பட்ட முயற்சி என்று சொல்லி அவரை அவை அதிகாரிகள் கைது செய்து அவர்மீது வழக்குத் தொடர்கிறார்கள். அவரை ஒரு நீதிமன்றத்தில் ஜூரிகள் முன்னிலையில் விசாரித்து, ஜூரிகள் அவர் குற்றவாளி என்று முடிவு சொல்கிறார்கள். அவருக்கு என்ன தண்டனை வழங்கலாம் என்று இனி நீதிபதி முடிவு செய்வார். ஆக அமெரிக்காவில் என்னவொரு சட்ட அமைப்பு இருக்கிறது என்றால், அரசு நிகழ்ச்சியில் விசாரணை நடக்கும்போது சிரித்தால் சிறை தண்டனை கிட்டும் வாய்ப்பு அதிகம் என்பதுதான் அது. அந்தச் செய்தியை இங்கே காணலாம்:

www.huffingtonpost.com/entry/laughed-jeff-sessions-desiree-fairooz_us_5963a523e4b0615b9e9367cb

சமீபத்தைய செய்தி: ஜூரிகளின் முடிவை ஏற்க மறுத்து அந்த நீதிபதி இந்தப் பெண்ணை விடுவிக்க உத்தரவு பிறப்பிக்கிறார். அபத்த நாடகமே எங்கும் நிலவும் நாட்டில், ஒரு சிலருக்கு இன்னமும் புத்தித் தெளிவு இருக்கிறது என்பது புலனாகலாம். ஒரு வேளை மேற்சொன்ன சீரற்ற நிலைமையில் ஒரு புறம் சீர்மை இன்னும் இருப்பதற்குக் காரணம் இப்படிச் சிலர் நீதிபதிகளாக இருப்பது என்றும் நாம் கருதலாம்.

http://www.thedailybeast.com/judge-tosses-conviction-of-woman-who-laughed-at-sessions-hearing

[/stextbox]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.