ஊற்றுகள்

அதிகாலைப்பறவைகளின் உவகைமொழிகளை மூழ்கடித்தபடி கணபதிபாளையத்தை எழுப்பிக்கொண்டு போர் -வண்டி முடக்கு வேம்பைக் கடந்து நின்றது.பறவைகள் எழுந்து வயல்காட்டுப்பாதையில் பறந்தன.அப்போதுதான் அசந்து படுத்த நாய்கள் சுழன்றெழுந்து குரைத்து, பின் நிதானம் கொண்டு சுற்றிவந்தன.மாசி மாதக் கிழக்கு கொள்ளைச்சிவப்பாக விடிந்தது. சில வெள்ளைநிறக் கூரைவீடுகளும், முற்றம் வைத்த மஞ்சள் ஓட்டுவீடுகளும், மில்லெனியத்திற்குப் பின், திண்ணைகள் இல்லாது கட்டிய பச்சை,ரோஸ், ஊதா நிறச் சிறு மாடிவீடுகளுமாகத் தெரு வளைந்து நெளிந்திருந்தது.

இரும்புக் குழாய்களை இறக்கிப் போட்டுவிட்டு சந்தின் முனையில் பெருஞ்சத்தத்துடன் துளைக்கத் துவங்கினர்.வெயிலேறத் தொடங்கியதும் வயல் வேலையில்லாததால் ஆடுமாட்டிற்கு தண்ணீர்காட்டி, தீனி பிடுங்கிப் போட்டுவிட்டு,தெருஆட்கள் அந்த இடத்திற்கு அருகிலிருந்த வேம்படியில், வீடுகளின் நிழல்களில் கூடினார்கள். களிங்கன் வீட்டுப் பின்பக்கம் வெட்டிப்போட்டிருந்த புங்கைமரத்தின் அடிமரத்திலமர்ந்தார் ராசுநாய்க்கர். சற்றுத்தள்ளி பொம்மன்பூசாரி பெருமூச்சுடன் சற்று நைந்த வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு அமர்ந்தார்.

“ஒடம்பு கனத்துக்கிச்சு. நீ மூங்கிக்குச்சி மாதிரி அப்புடியே இருக்க,”என்றார் பூசாரி.

“ஒடம்பு கனக்கவும் நிறம்கூடிப் போய் நல்லாத்தானே இருக்காப்ல,”என்று ராசுநாய்க்கர் சட்டையில்லாத உடலைத் துண்டால் தட்டிக் கொண்டார்.

“வயித்துக்குப் போட்டாச்சா ராசு?”என்றபடி வெற்றிலையை எடுத்தார் பூசாரி.

“நீராரம் ஆச்சு. பெருகின ஆளு..வௌக்கமா தின்னுருப்பீரு,”என்று மெலிதாகச் சிரித்தபடி சுண்ணாம்பு டப்பாவை எடுத்தார் ராசு.

“வூட்டம்மா கட்டில்ல கெடக்குறது மறந்து போச்சா?கம்மஞ்சோறும் முருங்கக்கீர கொழம்பும். உங்கக்கா வக்கிற ருசி வரல,”என்றார் பூசாரி.

“நாக்கத் தட்டிவக்க காலம் வந்துருச்சு,”என்ற ராசுநாய்க்கர் எழுந்து பழுப்படித்த வேட்டியை உதறிக் கட்டிக்கொண்டு நின்றார்.

“ம். நீ சொல்றது புரியாம இல்ல.இந்தப்பிள்ளைகளுக்கு மாசத்துக்கு ரெண்டுநாளு கம்மஞ்சோறு திங்க கசக்குது.சலிச்சுக்குதுங்க.இந்தக் காய்ச்ச காய்ஞ்சா எங்க வயக்காட்டுல கம்பும் அடுத்தவெயிலுக்கு மிஞ்சாது.இந்த எடத்துல தோண்டுறாங்களே…தண்ணிவருமா?”

“வரும்ன்னு தானே இத்தன சத்தமும். உங்க புஞ்சைக்கி கேணியில தண்ணியில்லன்னா இதப்போல குழா இறக்கலாமில்ல,”என்றார் ராசு.

“கடன வாங்கி குழா எறக்கி வரும்படி இல்லாம போச்சுன்னா? கையில காசிருந்து செய்யனும். எத்தன கேணி பாத்திருப்ப இங்கன தண்ணிவருமா?..சும்மா சொல்லு..”

“என்னக் கேட்டா..கேணி முடக்குலதான் இப்பக்கித் தண்ணிவரும்”

“அந்தக் கேணியிலயே தண்ணி இல்லப்பா!”என்றார் பூசாரி.

“மேங்கேணில்ல? இங்க தொளக்கிறாப்புல அங்க தொளச்சா தண்ணி வரும்”, என்றார் ராசு.

“ச்ச்..அதவிடு. இங்க சொல்லு.”

ராசு அமைதியானார். இருவரும் வெற்றிலையை மென்றனர்.

“எத்தன மனுசங்க இருந்த மனசிது. … இப்ப ஒழிஞ்சி கிடக்கு,”என்று வாய்க்குள் சொல்லியபடி அமர்ந்திருந்த புங்கமரத்தை வலதுகையால் தட்டினார்.

“அக்கா கட்டிலில கிடக்குக்குல்ல…அதான் கண்டத நெனக்கத் தோணுது.”

“இப்பவோ, நாளக்கோ போயிட்டாதான் அதுபடுறபாடு முடியும். அதனால இல்ல..இதுவேற.”

“ம். நீ சொல்றதும் சரிதான்.எனக்கும் விடியகாத்தால எழுந்திருக்கையில இந்தநெனப்பு வந்தா பகீர்ன்னு இருக்கும். அப்பிடியே.. எந்திருச்சி வாசலுக்கு வந்து கெழக்கால பாத்தா அடுப்பில வேல செஞ்சுகிட்டிருக்க அக்கம்மா, எங்காளுக்கிட்ட ‘அண்ணே எந்திருச்சிடுச்சு  டீத்தண்ணி வாங்கிட்டு வர்ரத்துக்கு’ன்னு சிரிப்பா, இந்தட்டம் அடுப்பத் தள்ளிக்கிட்டே ஒங்க வூட்டுல யாராச்சும்  ஏதாச்சும் பேசுவாங்க.அப்படி இப்படின்னு மனசு நேரா ஒக்காந்துக்கும். நம்ம சோட்டு ஆணுபொண்ணெல்லாம் மண்ணுக்குள்ள போயிட்டேயிருக்குல்ல. என்னதான் பிள்ள,பேரப்பிள்ளகள்னாலும் நம்மள நெசமாபுரிஞ்சிருக்கற, நம்மளபெரிசா நெனக்கிறவங்க, நம்மளோட பிறந்த  வளந்த ஊர்காரங்க தானே?”என்றார் ராசு.

பூசாரி,“மூணாநாளு செத்துப் போனாளே பாருவதி.. இந்தப்பக்கம் வந்தான்னா, ரெண்டுவெத்தல தராமா வாசலத் தாண்டி போமாட்டா.இல்லன்னாலும் வாயி என்னமான்னு இருக்கு, வெத்தல குடு மாமான்னு வாங்கி, வாசல்ல இருக்குற அடுப்புப்பக்கத்தில ஒக்காந்து, வெத்தலயில அவ சுண்ணாம்புத் தடவர நேக்கிலயே நமக்கு பிடிகெடச்சிரும், யாரப்பத்தி பேசலான்னு மனசத்தட்டிப் பாத்துக்கிட்டிருக்கான்னு.தெக்கம்பாக்க கடிச்சுக்குக்கிட்டே அங்க, இங்கன்னு போக்குக் காட்டிக்கிட்டே பேச்சுக்கு வந்துருவா.வெத்தலய மெல்லுற நேரத்துல என்ன பேசுறதுன்னு நெனப்பாளாயிருக்கும்.மொதச்சாரு துப்பிட்டுவந்து  எந்தவூட்டயாவது மந்தையில வச்சிட்டுதான் போவா.போறத்துக்கு முந்தி, “மனுசன்னா அப்படித்தானே மாமா? மத்தவங்க மனசுக்குன்னு நடந்தா..எத்தன மனசுக்குன்னு நடக்கறது. அவங்கவுங்க மனசுக்குள்ளது…என்ன சொல்ற?”ன்னு எல்லாரையும் நல்ல மனுசருனுட்டு போயிருவா?”என்று சிரித்தார்.

“ஆமா. மனுசவாயி மந்தையில வச்சுப் பேசாத வூடுன்னு எதாச்சும் உண்டா?”என்று சிரித்தார் ராசு.

பொழுது நடந்துகொண்டிருக்க ஆட்கள் தாயம் ஆடுவதற்காகக் கேணிமுடக்கின் பெருந்திண்ணைக்கும், தலைசாய்க்கலாம் என்று பக்கத்திலிருந்த வாய்ப்பான திண்ணைகள் நோக்கியும் கலைந்தார்கள்.  சுக்கான்புகையாக பெருமூச்சுவிட்டுக் கொண்டிருந்தது இயந்திரம். வெண்புகை.வெயிலில் ராசுநாய்க்கரின் இளஞ்சிகப்பு கடுக்கன் அவர் தலைதிரும்புகையில் ஒளிர்ந்தது.

“மூணுமாசப்பிள்ள மூச்சுவிட முடியாமக் கெடக்கு. இன்னும் தண்ணியக் காணூம்”,என்று தென்னமரத்துவீட்டுக்காரம்மா சொல்லிக் கொண்டிருக்கையில் முந்நூறுஅடி இறங்கியிருந்தது.

ராசு,“நானாவே தனியா நீரோட்டம் பாத்து வெட்டுன மொதக்கேணி இவுங்கக் கேணிதான்,”என்றார்.

“தண்ணி வரவரைக்கும் தூக்கம் வந்திருக்காதே?” என்று சிரித்த பூசாரியின் காதில் கொத்தமல்லிவிதை வளையம் ஆடியது.

“எத்தன மட்டுல கண்ணுத் தொரக்குமோன்னு தான் மனசு சலசலங்கும். தண்ணிவராம இருந்ததில்ல,”என்றார் ராசு.

“ம்” என்றபடி முதுகில் அமர்ந்த தட்டானை விரட்டினார் பூசாரி.

“இது ஊத்து பூமிய்யா.வெயிலும் மழயும் முழுவிச்சுல வர்ர பூமி.அதா.. அந்த புங்கமரம் நிக்குது பாரு.அங்கன நல்ல ஊத்து உண்டு.”

“எப்படி சொல்ற?”என்றார் பூசாரி.

ராசு,“இந்த காய்ச்சல்லயும் மரத்தப்பாரு. ஓங்கி எலவிரிச்சு நிக்குதுல்ல.வேரு கைரேகையாட்டம் ஓடி தண்ணிய புடிச்சதுனால வந்த வாழ்வு அதுக்கு,”என்றார்.

“சின்னப் பயகல்லாம் பாங்கியில கடன வாங்கி குழாஎறக்கி நெல்லு நடறானுங்க…!”என்றார் ராசுநாய்க்கர்.

“நானு வெத்தாளுன்னு தெரியாதா? சும்மா வயலுக்கும் வீட்டுக்கும் நடக்கறேன். பயதான் எல்லாம். எம்பேத்தி கல்யாணக்கடனே மிச்சமிருக்கு.கட்டில்ல போறேன்னு ஒன்னு கிடக்கு.செலவுக்கு என்ன பண்றதுன்னு அலையறான்.இதுல என்ன பண்ண?”என்று பூசாரி துளைத்து இறங்கும் இரும்பைப் பார்த்துக் கொண்டிருந்தார். புகை ஏறியபடியிருந்தது.

“இன்னும் ஏன் தண்ணி வரல? சுத்தி தண்ணிய உறிஞ்சாச்சு. அதான் ஊத்து இல்ல,”என்றார் பூசாரி.

“முன்னப்பின்ன எனக்கு பதினஞ்சு பிராயமிருக்கறப்ப  துரசாமி நாய்க்கர் கூட கேணிவெட்டப் போவேன்.அவரு கங்கநீரோட்டம் கணிச்சு அம்படிச்ச அர்சுனன் கதய சொல்வாரு.”

“அது என்ன?”

“சண்டகளத்துல பிஷ்மரு கொறஉசுராக் கிடக்கயில தண்ணி தான் கேட்டாராம். மகராசனானாலும் கடசி தவிப்பும் தாவமும் தண்ணிக்கு தானேம்பாரு துரசாமியண்ணன். இவன் ஊத்து கணிச்சு அம்பு போட்டிருக்கான். என்கிட்ட இவரு, ‘அப்படி இருக்கனுன்டா செய்யற தொழிலும்பாரு.’ஆழத்து நீரோட்டமாட்டம் அந்த கத உள்ள ஓடிகிட்டே இருக்கு.”

“சரிதான். நானும் அவருசொல்ல கத கேட்டிருக்கேன்.”

ராசு,“கருத்தபிள்ளய கட்டிவச்சிட்டாங்கன்னு நான் சலிச்சுக்கிட்டப்ப அவருதான், சும்மா நல்லாயிருக்க பொழப்ப நாறடிச்சுக்காம ஆத்துத்தண்ணி போறப்போக்குல போறாப்புல நீயும்வாழ்க்கபோக்குல போடன்னாரு,”என்றார்.

“ம்ம்…தண்ணி வரது மாறி தெரியலயே?” என்ற பூசாரி மேற்குபக்கமிருந்த சாக்கடையைப் பார்த்துசிரித்தபடி, “புள்ளகுட்டியோட வாரா பாரு… செவலக்கோழி. இங்கனதான் தண்ணிகுடிக்க வாட்டமுன்னு கண்டுவச்சிருக்கா .அதோ கடசில வாரானே..புள்ளிவச்சவன், அவன்தான் கடசியா சாக்கடையில எறங்கி முதல்ல ஏறுவான்”,என்று சொல்லிக் கொண்டிருக்கையிலேயே கோழிக்குஞ்சுகள் சாக்கடையில் குதிக்கத் தொடங்கியிருந்தன.

வெள்ளயம்மா அத்தை இரண்டுஆடுகளும், மூன்றுகுட்டிகளுமா வயலில் இருந்து  தண்ணி வைக்க ஓட்டிக் கொண்டு வந்தாள். ஆடுகள் சத்தத்தைக் கேட்டு மிரண்டு பின்வாங்கிக் கத்தின.

“நா கூடவாரப்ப என்னடி உங்களுக்கு? தாதா த்ததா,”என்று மெதுவாக ஆடுகளை நகர்த்திக் கூட்டிக்கொண்டு நகர்ந்தாள்.

உச்சிப்பொழுதாகையில் நானூறுஅடிக்குமேல் குழாய்கள் இறங்கியிருந்தன. அதிகாரிகள் வந்து பேசிக்கொண்டிருக்கையில் இயந்திரம் நிறுத்தப்பட்டது.

“பொகஞ்சு போச்சாட்டுக்குடா..,”என்றபடி இரண்டுபயல்கள்  இருசக்கரவாகனத்தில் கடந்து போனார்கள்.

சத்தம் நின்றதும் அப்பாடா என்றிருந்தது. குழாய்களை எடுத்து அடுக்கும் சத்தம் ‘டம்டம்’ என்றதிர்ந்தது.

வரைபடத்தை வைத்து, “ இந்தவார்டுல இந்தச் சந்தில் ஒரு குறி போடு,”என்று ஆட்கள் கிளம்பினார்கள். ஆழ்குழாயினருகே மிருதுவான சுக்கான் வெண்மணல் சிமெண்ட் குவியல் போல குவிந்திருந்தது.பெண்கள் காரைத்தட்டுகளும், அகலப் பாத்திரங்களுமாக வந்து மண்ணை அள்ளி்க் கொண்டுபோய் வாசல்களுக்கு நிரவிக் கொண்டிருந்தார்கள்.

தண்ணிக்கு வந்த மண்ணாண்டி வீட்டு மாடுகள் தயங்கி நின்றவுடன்,இளைய செவலை கல்தொட்டி நீரைப் பார்த்த மாத்திரத்தில் கயிற்றிலிருந்து நழுவி ஓடிவரவும் பின்னாலேயே மூத்ததுகள் உடல்தசைகளும், மடியும் அதிர வேகநடையில் வந்துவிட்டதைக் கண்ட அந்தவீட்டய்யா சிரித்தபடி, “அகராதிப்பிடிச்சவ…ஆனா காரியக்காரி. அம்மாக்காரிகளயும் கூடவே இழுத்தாந்துட்டா”,என்று பேசிக்கொண்டிருக்கையிலேயே ஈய அன்னபேசினிலிருந்த தவிட்டுநீரைக் குடித்துமுடித்தவுடன்,பேசினை காலால் எத்தி உருட்டி பின்முதுகில் அடிவாங்கியது இளையசெவலை.செவலை உடலை பின்னால் வளைத்து அடித்தக்கையிலிருந்த தவிட்டை நக்கியது. அய்யா புன்னகைத்தப்படி அதை முதுகில் ஓங்கித் தட்டித் தடவினார்.

ராசுநாய்க்கரும், பூசாரி தாத்தாவும் எழுந்து உடல்முறுக்கிக்  கொள்கையில் வண்டி கிளம்பிச் சென்றது.

“எங்கஅம்மா இருந்தாள்ள..கருங்காப்பி வச்சு சொம்புல குடுக்கும். என்னிய பாக்கறதில என்ன சொகமோ?! அதுக்குதான் தெரியும்.பாத்துக்கிட்டே இருக்கும். உங்கக்கா கூட அவமவன அப்பிடிதான் பாக்கும். நமக்குதான் பிடிச்சுக்க ஒன்னுமில்ல,”என்றார் பூசாரி.

“அப்பிடியில்ல மாமா. இந்தவயசில மனுசங்கள அப்பட்டமா தெரியுது.கொரங்குகுணம்..செத்தக்குட்டிய பிடிச்சுக்கிட்டே அலயறாப்புல.எதையும் நினக்காத..நெனச்சா வேதன,”என்றார் ராசு.

அவர்கள் தேநீர்க் கடைக்குச் சென்று திரும்புகையில் தூரல் ஆரம்பித்தது.ராசு புன்னகைத்துக் கொண்டார். முடக்கில் நாற்பதுஆண்டுகளுக்குமுன் ராசு  ஆட்களோடு சேர்ந்து வெட்டி இப்போது சொட்டுநீரில்லாமல் கிடக்கும் கிணற்றைக் கடக்கையில், “ இப்பக்கூட இந்தஇடம் தோண்டினா கசிஞ்சு வரும்.எல்லாஎடத்திலயும் ஊத்து இருக்குமா?ஆனா ஊத்தில்லாத நெலமுமில்ல மாமா,” என்றார்.

பூசாரி,“அது சரிதாம் மாப்ள,”என்று நடந்தார். கிணறின் உள்ளிருந்த சந்துகளிலிருந்து சிட்டுகள் விருட்டென பறந்தன.சில சிட்டுகள் ஆகாயத்திலிருந்து சர்ரென்று கிணற்றுக்குள் பாய்ந்தன.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.