இறுதி வரை உறுதி குலையாத லியு ஷியாவ்போ

(மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: சீனாவில் சட்டபூர்வமாய் உறுதியளிக்கப்பட்ட உரிமைகளை நடைமுறைப்படுத்தக் கோரி போராடிய லியு ஷியாவ்போ சிறைக்காவலில் மரித்தார். அவர் புதைக்கப்பட்ட இடம் ஒரு நினைவகமாய் மாறலாம் என்று அஞ்சி சீன அரசு அவரது உடலை எரித்து அதன் சாம்பலைக் கடலில் வீசியது- இத்தனைக்கும் லியு ஷியாவ்போ சீன மக்களில் வெகு சிலருக்கே அறிமுகமானவர். அவரது மரணத்தைத் தொடர்ந்து நியூ யார்க்கர் இதழில் எவென் ஆஸ்நோஸ் எழுதியுள்ள அஞ்சலியின் தமிழாக்கம் அளிக்கப்படுகிறது. தமிழாக்கம்: அ. சதானந்தன் )

மரணம் லியு ஷ்யாவ்போவின் பெயருக்கு ஒரு புதிய ஆற்றல் அளித்திருக்கிறது. அவர் உயிருடன் இருந்த காலத்தில் எப்போதும் இப்படிப்பட்ட ஆற்றல் அவர் பெயருக்கு இருந்ததில்லை. அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஒரே சீனரான லியு அவரது எழுத்துக்காகச் சிறையிடப்பட்டார். அவர் எழுதியவை தனக்கு எதிரான கலகத்துக்கு இணையானவை என்று கம்யூனிஸ்ட் கட்சி கருதியது. லியு கல்லீரல் புற்று நோய் முற்றிய நிலையில் அவதிப்படுவதாய் சில வாரங்களுக்கு முன் அக்கட்சி தகவல் வெளியிட்டது. சிகிச்சை பலனளிக்கக்கூடிய நிலையை கிட்டத்தட்ட அவர் கடந்திருந்தார். சிறையறையிலிருந்து அவர் சீன மருத்துவ பல்கலையின் முதன்மை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவரது படுக்கை காவலர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. அவர் எவரிடமும் பேச அனுமதிக்கப்படவில்லை. மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்லவும் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. சென்ற வாரம், வியாழக்கிழமையன்று அவர் இறந்தார். அவரது வாழ்வு எப்படி இருந்ததோ அவ்வாறே அவரது மரணமும் அமைந்தது: சிறைக்காவலில், வெளியுலகத் தொடர்பின்றி; ஆனால் ஒருபோதும் உறுதி குலையாத வாழ்வு, மரணம்.

லியு பதினேழு புத்தகங்கள் எழுதியிருக்கிறார். அவற்றுக்குக் கூடுதலாக, நூற்றுக்கணக்கான கட்டுரைகள், கவிதைகள், நீண்ட அரசியல் அறிக்கைகள். பீஜிங்கில் நான் 2007ஆம் ஆண்டு அவரைச் சந்தித்தபோதே அவர் மும்முறை சிறைப்பட்டிருந்தார். டியன் ஆன் மென் சதுக்கத்தில் நிகழ்ந்த போராட்டங்களுக்கு தலைமையேற்று செயல்பட்டார் என்று, “எதிர்ப்புரட்சி பிரசாரம் மற்றும்  தூண்டுதல்” குற்றம் சாட்டி அவருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது முதல் முறை. “கருங்கரம்” என்று கட்சி அவருக்கு பெயரிட்டிருந்தது- மறைந்திருந்து சீரழிக்கும் பெருந்தலை. ஆனால், சீனா பற்றி எழுதியிருந்த ஒரு புத்தகத்தில் நான் லியு குறித்து குறிப்பிட்டிருந்தது போல், தனக்கு பெருமை சேர்க்கும் “கௌரவப் பதக்கம்” என்று அந்த அடைமொழியை அவர் ஏற்றுக்கொண்டார். சிறைக் கம்பிகளுக்குப் பின்னே தனக்கென இருக்கக்கூடிய மிகச் சில விஷயங்களில் அதுவும் ஒன்று என்பது அவரது எண்ணம். சிறைக் கவிதையொன்றில், “ஒரு பொய்யன்றி/ எனக்கென எதுவும் இல்லை”, என்று அவர் எழுதினார்.

நான் அவரைச் சந்தித்ததற்கு அடுத்த ஆண்டு அவர் நான்காவது முறையாக சிறையிடப்பட்டார். அதுவே அவருக்கு அளிக்கப்பட்ட இறுதி தண்டனை. நீதித்துறையில் சுதந்திரம், உயர் பதவிகளுக்கு தேர்தல் என்பது போன்ற பத்தொன்பது சீர்திருத்தங்களை வலியுறுத்தி எழுதப்பட்ட கோரிக்கை அறிக்கையின் ஆசிரியர்களில் அவரும் ஒருவர். “அரசு அதிகாரத்தைக் குலைக்கத் தூண்டுதல்” என்று குற்றம் சாட்டப்பட்டு, அவருக்கு பதினோரு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இப்போது லியுவின் வாழ்வு வரலாற்றுப் புத்தகங்களில் பெறும் இடம் சீனாவின் சாதாரண ஆண்களுக்கும் பெண்களுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் இல்லை: கார்ல் வான் ஒஸியெட்ஸ்கிக்குப் பின் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்களில் இவர் மட்டுமே சிறையில் மரணமடைந்திருக்கிறார். ஒஸியெட்ஸ்கி போருக்கு எதிராகவும் நாஜிக்களுக்கு எதிராகவும் போராடி 1938ஆம் ஆண்டு மரித்த ஜெர்மானியர். பரிசு தொடர்பான பெருமையொன்று ஏற்கனவே லியு மற்றும் ஒஸியெட்ஸ்கிஆகிய இருவரையும் இணைத்திருந்தது- இருவருமே நேரடியாக நோபல் பரிசு பெற அனுமதிக்கப்படவில்லை. வரலாற்றுப் பக்கங்களில் இவ்விருவரும் இணைந்திருப்பது பொருத்தமானதாகவும் துயர்ச்செய்தியாகவும் உள்ளது: லியுவின் சக தேசத்தினர் நாஜிக்கள் அல்ல. ஆனால் அவரது உயிரைக் காப்பாற்றுவதற்கான ஒவ்வொரு வாய்ப்பையும் அவரது அரசு தவற விட்டது. அல்லது, இந்த ஒப்புமையால் தானும் தன் மக்களும் களங்கப்படுவதை அது தவிர்த்திருக்கலாம். அந்த வாய்ப்பையும் சீன அரசு தவற விட்டுள்ளது.

உலகெங்கும் லியு ஒரு மகத்தான அற ஆளுமையாய் நினைவு கூரப்படுவார்: பத்தியாளர், நிகலஸ் க்ரிஸ்டாஃபின் சொற்களில், “நம் காலத்து மண்டேலா” என்று; பென் (PEN) அமேரிக்கா அமைப்பு, “உலகெங்கும் சர்வாதிகாரத்துக்கு எதிராய்ப் போராடும் எழுத்தாளர்களின் சகா”, என்று அழைக்கிறது. லியு மரணமடைவதற்கு சில காலம் முன் ஜெரெமி ஆர். பார்ம் என்ற புகழ்பெற்ற ஆஸ்திரேலிய சீனத்துறை வல்லுநர் அவருக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர், “சீனாவின் மற்றுமை: சாத்தியங்கள், நம்பிக்கை, மானுட நேயம் இவை கொண்ட சீனா”வின் அவதாரம் என்று லியுவைக் குறிப்பிடுகிறார்.

ஆனால், இதில் ஒரு சோகம், சீனாவில் அவரது மறைவு குறித்த துயரம் மிகவும் தீனமானதாய் இருக்கும். சக அரசியல் எதிர்ப்பாளர்கள், அவரை நேசிப்பவர்கள், எழுத்தாளர்கள், களப்பணியாளர்கள் சிலர் அவரது நினைவை ரகசியமாய்ப் போற்றுவார்கள். வெளிப்படையாய் அவருக்கு அஞ்சலி செலுத்துவதில் கைதாகும் சாத்தியம் உள்ளது. ஆனால் பொதுமக்களிடையே அவரது இழப்பு பெருமளவு உணரப்படாமல் போகும். ஏனெனில், பல ஆண்டுகளாக அவரது எழுத்தைப் பதிப்பிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. மிகுந்த போராட்டங்களுக்குப் பின் சீனா பெற்றுள்ள செல்வச் சிறப்பைச் சீர்குலைப்பதை நோக்கமாய்க் கொண்ட தேசத்துரோகி என்று அவருக்கு எதிராய் திட்டமிட்டு பிரசாரம் செய்யப்பட்டுள்ளது. அது எப்போதுமே ஒரு அபாண்டமாய்த்தான் இருந்திருக்கிறது.

இதைத் தவிர்க்க முடியாது- மேற்குலகில் சிலர் லியு ஷ்யாவ்போவின் நினைவைப் போற்றுவது என்பது சீனாவுக்கு எதிரான குற்றமாக இருக்கும் என்று நினைப்பார்கள் (அதைவிட, நடைமுறை உலகில், அதன் அரசுடனான உறவில் சிக்கல்கள் ஏற்படுத்தக்கூடியது என்று நினைக்கக்கூடும்). இது ஒரு தவறாக இருக்கும். லியுவின் நினைவைப் போற்றுவது என்பது சீனாவில் சிறந்தவை எவையோ அவற்றுக்கு அர்ப்பணம் செலுத்துவதாக இருக்கும். அவர் இறுதி வரை சீன அரசியலமைப்புச் சட்டத்தில் தார்மீக நம்பிக்கை கொண்டவராகவே இருந்தார்- சட்டத்தில் அனுமதிக்கப்பட்ட சுதந்திரங்கள் பாதுகாக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு பெற்றிருக்காதவர்கள் அவரை நம்பிக்கை வறட்சி கொண்டவர் என்று தவறாய்ப் புரிந்து கொள்வது எளிது. மாறாய், நேரடிச் சந்திப்பில், அவருக்கு இருந்த நன்னம்பிக்கை நம் தன்னம்பிக்கையையும்கூட குலைக்கக்கூடும். 2007ஆம் ஆண்டு, அவர் வசித்துக் கொண்டிருந்த அடுக்ககம் ஒன்றின் அருகில் இருந்த தேநீர்க்கடையில் அவரை நான் சந்தித்தேன். அன்று அவர், சீனா மேலும் வலுவடைந்து புற உலகுடன் மேலும் நெருக்கமான தொடர்புகளை உருவாக்கிக் கொள்ளும்போது, “இப்போதுள்ள அதிகார அமைப்பு இன்னும் தன்னம்பிக்கை கொண்டதாக மாறலாம்”, என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார். “அது மேலும் மென்மையானதாக மாறலாம், மேலும் நெகிழ்வுத்தன்மை கொள்ளலாம், தன்னை மேலும் திறந்து கொள்ளலாம்”, என்றும் அவர் சொன்னார். அவரது கணிப்பு, இப்போது பொய்த்துப் போய் விட்டது. அதற்காக, அவர் தன் உயிரை விலை கொடுத்திருக்கிறார்.

லியு உயிரோடு இருந்த காலத்தில் வெளியுலகம் அவருக்கு உதவியாய் இன்னும் எதுவும் செய்திருக்க முடியுமா என்று நினைப்பவர்களுக்கு, அவரது சுதந்திர நாட்டத்தைக் கொண்டாட ஒரு இறுதி வாய்ப்பு உள்ளது. அவரது மனைவி, லியு ஷ்யா, எந்த குற்றமும் சாட்டப்படாமல், பல்லாண்டுகளாக வெவ்வேறு வகைகளில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். இனி அவரது நிலை என்ன என்பது குழப்பமாக இருக்கிறது. ஆனால் உலக அளவில் ஒரு வலியுறுத்தல் செய்யப்பட வேண்டும்- மீண்டும் மீண்டும், தொடர்ந்து- அவர் சராசரி வாழ்வு வாழ அனுமதிக்கப்பட வேண்டும். அவர் மீது தான் கொண்டிருந்த காதலை, சிறைப்பட்டிருந்த லியு ஒரு முறை எழுத்தில் வெளிப்படுத்தினார். “உயர்ந்து எழும்பும் சுவர்களைத் தாண்டி, என் சிறைச் சாளரங்களைத் துளைத்து உட்புகும் கதிரொளி உன் நேசம், என் சருமத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் அது தடவிக் கொடுக்கிறது, என் உடலின் ஒவ்வொரு திசுவிலும் அது வெம்மையாகிறது… சிறையிலுள்ள என் காலத்தின் ஒவ்வொரு நிமிடத்தையும் நிறைத்து அது பொருள் பொதிந்ததாய்ச் செய்கிறது”.

***

இங்கிலிஷ் மூலம்:

http://www.newyorker.com/news/news-desk/the-unbroken-liu-xiaobo