வீடு திரும்பியதும்
பைதுழாவித் தேடும் சாவி திறக்கிறது
அனல்வீசும் சாபமொன்றை.
வளையல்களின் அரவங் கேட்டதும்
ஜன்னல் வழிக் குதித்தோடிய
பூனையைப் பின் தொடர
விரிந்தது வெறிச்சோடியிருந்த மறுபக்க வீதி.
ஆடை களைந்து
வெயில் நனைத்திருந்த கம்பிகளில் சாய
நகர மறுத்தன கடிகார முட்கள்.
காபியாகவே இருந்தாலும்
ஒரு கோப்பையளவு தயாரிப்பதென்பது
ஓர் துன்பியல் சம்பவம்.
குறுந்தகவல் ஒலிகளால் நிரம்பி வழிந்த அறையில்
மௌனமாய்க் கலைந்து கிடந்தன
நிராகரிக்கப்பட்ட என் கவிதைகள்.
இங்கே நிலைக் கண்ணாடியில்
அசையும் பொருள் நானாக இருக்கக் கூடும்.
இந்நொடி
காலிக்கோப்பையை வரிசையாகச் சுற்றிவந்து
என் தனிமையைத் தின்றுகொண்டிருக்கும்
இந்த எறும்புகளைக்
கொல்லுவதா? விட்டுவிடுவதா?
~oOo~
ஏதிலி மரமும் அவளின் முத்தங்களும்
பச்சை பச்சையாய்
அள்ளி முடிக்க முடியாத
இலைக்கூந்தல் மரத்தடி
பருத்துச் சடைத்த
வேர்க்கால் திரண்டு
அவளை மடியாகித் தாங்கிற்று
அதற்குள்
கேத்தல் தண்ணீராய் ததும்பியது
உயிரின் சூடு
அநாதித் தனிமையில்
கஸலின் இழையோடும் சோகமாய்
வலித்திருந்தது ஏதிலி மரம்
அவள் அதனுடன்
அந்தரங்கமாய்ப்
பேசத் தொடங்கியிருந்தாள்.
மரங்களின் மொழி
எல்லோருக்கும் புரிவதில்லை.
அவளது செவ்வூதா உதடுகளில்
சுரந்த தேன் சொற்களால்
மரமெங்கும் காதுகள் முளைத்தன.
மரத்தை நிரம்பவும் பிடித்திருப்பதாக
அவள் சொன்னாள்
மிக நேசிக்கும் ஒரு பாடலைப் போல
அதன் சிரிப்பின் வசீகரம்
அவளுக்கு
ஒரு பெயரிலில்லாத புராதன இசைக்கருவியை
நினைவூட்டியது.
வெடித்துக் கிடந்த தண்டுப் பாளங்களில்
ஆண்டுகள் கனத்தன.
அதன் வயிரம் பாய்ந்த பிளவுகளில்
அவள் மிக மெதுவாய் முத்தமிட்டாள்
மரம் பூக்களை
வியர்க்கத்தொடங்கியது.
அவள்
விரல்களாகி ஊர்ந்தாள்
மரம் மயிர்கள் குத்திட்டுச் சிலிர்த்தது.
குறுங்கூதல் காற்றாகி அவள்
மரத்தின் கூந்தல் கோதினாள்
மரம் அசைந்து கொடுத்தது
அவள்
சிறுதூறலாகி அதை நனைத்தாள்.
மரத்தின் உடம்பு
மழைக்காளான் போன்று
மென்மையாகி விட்டது
அவன் அதன் வெப்பத்துக்குள்
தன்னை ஒதுக்கிக் கொண்டாள்
மழை வலுத்துப் பெய்யத்தொடங்கியது.
ஏகாந்தமும், இயலாமையும் அள்ளித் தெளித்திருக்கிறது சுபத்திரா ரவிச்சந்திரன் கவிதையினில். வாழ்த்துக்கள் கவிதாயினிக்கு