உள்ளிருக்கும் எதிரி

[டப்ளின் ரெவ்யு ஆஃப் புக்ஸ் என்ற இலக்கியப் பத்திரிகையில் வெளியான ஒரு கட்டுரையைத் தழுவி எழுதப்பட்ட கட்டுரை இது.]

இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில், மிகத் தெளிவாகவும், உறுதியாகவும் நல்ல நிலையில் வந்து சேர்ந்து விட்டன என்று கருதப்பட்ட நாடுகள் பெரும்பாலும் யூரோப்பில்தான் இருந்தன.  சுமார் ஐம்பதாண்டு கால வளமான வாழ்வை அனுபவித்த பிறகு, இறங்குமுகமான நிலையில் தம் நாடுகள் இருப்பதை அறிந்து, இன்று யூரோப்பியர்கள் கலக்கத்தில் இருக்கிறார்கள்.

வெறும் உடலுழைப்புக்குத்தான் ஆசியர் சரி என்று கருதிய மேலை நிறுவனங்கள், மாசுபடுத்தும் உற்பத்தி முறைகள் கொண்ட பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளைத் தம் நாடுகளிலிருந்து அகற்றி, சீனாவிலும், பல ஆசிய நாடுகளிலும்  நிறுவ முன்வந்து ’முதலீட்டு உதவி’ செய்தன. உற்பத்தித் தொடர் வரிசையில் இறுதி நிலையில், வெறும் தொகுப்பு வேலை மட்டும் செய்யத் துவங்கிய சீனத் தொழிற்சாலைகள், அடுத்தடுத்த கண்ணியாக உற்பத்திச் சங்கிலியில் மேலே ஏறி முதலீட்டுச் சாதனங்கள் எனப்படும் உற்பத்தி முறையளவு வளர்ந்துவிடுவார்கள் என்பதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. இந்த மேலேகுதல் சீனருக்கு மட்டுமல்ல பல ஆசிய நாடுகளுக்கும் சாத்தியமாகி இருக்கிறது. தாய்வான், கொரியா, இந்தியா, சமீபத்தில் வியத்நாம், இந்தோநேசியா என்று பல நாடுகளில் உற்பத்தி முறைகள் உள்நாட்டிலேயே நிறைய மேம்படுதலுக்குச் சென்றிருக்கின்றன. இதே கால இடைவெளியில் மேலை நாடுகள் தொழில் உற்பத்தியில் தம் பங்கைக் குறைத்துக் கொண்டு, கருத்து/ஆய்வு/தொழில் நுட்ப மேம்படுத்தல் போன்றவற்றில் தம் கவனத்தைப் பெருமளவு செலுத்தி அங்கு ஆதிக்கம் பெற்றுள்ளனர் என்பது உண்மை, என்றாலும் இவற்றிலும் சமீபத்துப் பத்தாண்டுகளில் அவர்களுக்கு ஆசிய நாடுகளிலிருந்து சவால்கள் எழத் துவங்கியுள்ளன.  பல மேலை நாடுகள், குறிப்பாக அமெரிக்கா, ஏராளமான பொருட்களின் உற்பத்தியை அயல் நாடுகளுக்கு மாற்றி விட்ட நிலை இன்று.

லாப விகிதத்தைத் தொடர்ந்து அதிகரிக்கவோ, அல்லது இருக்கிற உயரளவிலேயே வைத்திருக்கவோ, அயல்நாடுகளில் முதலீடு செய்யத் துவங்கிய மேலை நிறுவனங்களில் பலவற்றை, இன்று சீனர்கள், கொரியர்கள், ஏன் இந்தியர்கள் கூட வாங்கி வருகிறார்கள். அதோடு, பல மேலை நாடுகளில் சமீபத்துப் பத்தாண்டுகளில் மேலோங்கி வரும் அயல் மனிதர் மீதான வெறுப்பு என்பதும், அதொட்டிய பொருளாதாரக் கொள்கைகளும், சொந்த நாட்டிலேயே உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்களுக்கே முன் தேர்வு என்றாக்க வேண்டுமென உந்துவதால், மேற்சொன்ன ஆசிய நிறுவனங்கள், தாம் வாங்கிய மேலை நிறுவனங்களின் உற்பத்திக்கான தொழிற்சாலைகளை மேலை நாடுகளிலேயே கூட நிறுவியுள்ளன, அல்லது அங்கேயே தொடர்கின்றன. இறுதி நிகர லாபம் மட்டும் ஆசியாவுக்குப் பாய்கிறது.

சில நூறாண்டுகளாக ஆசிய, ஆஃப்ரிக்க நாடுகளிலிருந்து பெரும் செல்வத்தை மேலை நாடுகளுக்கு எடுத்துப் போய்க் கொழிப்புள்ள நிலப் பகுதிகளாக ஆன யூரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் இன்று பல வகைகளில் வாழ்வுத் தரத்தை மெள்ள மெள்ள இழக்கத் துவங்கியுள்ளன.  உயர் நிலைத் தொழில் நுட்பத்தில் நாட்டின் பொருளாதார வளத்தைக் குவித்தால் ஏராளமான தொழிலாளர்கள், இதர உழைப்பாளிகளுக்கு வேலை வாய்ப்பும் குறைந்து, வாழ்வாதாரங்களும் வற்றி விடுகின்றன. சர்வீஸ் எகானமி எனப்படும் சேவை செய்து பொருளீட்டும் முறை பரந்த ஜனத்தொகையிடம் சராசரி வளம் உயர் நிலையில் இருப்பதை நம்பி இருக்கிறது. சிறு தொகை மக்கள் கூட்டத்திடம் மட்டும் வளம் குவிந்தால் சேவைப் பொருளாதாரம் இயங்குவது சாத்தியமாகாது.

இந்தச் சரிவின் விளைவாக, யூரோப்பியர் நடுவேயே முன்பிருந்த ஒற்றுமை நோக்கு இப்போது இல்லை. சமீபத்து யூரோப்பிய ஒன்றியம் என்ற அமைப்பும், அனைத்து யூரோப்பிய நாடுகளையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து இணைக்கப்பட்ட யூரோப்பியப் பண்பாடு, வரலாறு, அரசியல் ஆகியனவற்றால் தாம் மேம்பட்ட நிலையில் தொடர வேண்டும் என்று எடுக்கப்பட்ட முயற்சிகளும் இன்று உள் முரண்களாலும், பற்பல அசமத்துவங்களாலும் சிதறத் துவங்கியுள்ளன. இந்தச் சிதறலில் ஒரு கட்டத்தில்தான் பிரிட்டன் யூரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகத் தீர்மானித்தது. இது சென்ற வருடம் நடந்த தேர்தலில் பிரிட்டிஷ் மக்களால் தீர்மானிக்கப்பட்டது.

முன்பெல்லாம் ஆசியர், ஆஃப்ரிக்கர்கள்தான் பிரிட்டனில் இளக்காரமாகப் பார்க்கப்படுவர். சக யூரோப்பியரிலும் சில பகுதி மக்கள் மீது பிரிட்டிஷ் மக்களுக்கு அதிக அபிமானம் இருந்ததில்லை என்றாலும் சக வெள்ளையரை பிரிட்டிஷ் மக்கள் வெறுத்ததில்லை. யூரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் இணைந்த பிறகு பல நாட்டு யூரோப்பியரும் பிரிட்டனில் குடியேறவும், கீழ் நிலை பிரிட்டிஷ் மக்களில் பலருக்கு வேலை வாய்ப்புகள் குறைந்தன, பல துவக்க நிலை வியாபாரத் தலங்கள் பல நாட்டு மக்களால் துவங்கப்பட்டன, அல்லது அவர்களிடம் விற்கப்பட்டன. சீனர்கள், ரஷ்யர்கள், மேலும் பல நாட்டுப் பெரும் பண முதலைகள் லண்டனிலும் இதர முக்கியமான பெருநகரங்களிலும் நிலம், கட்டடங்கள் என்று வாங்கத் துவங்கியதில் அங்கெல்லாம் வீடுகளின் விலை மிக உயர்ந்து சாதாரணப் பிரிட்டிஷ் மக்களுக்கு அங்கு வசிப்பது கடினமாகி வந்தது. இந்த மாறுதல்களால் பிரிட்டிஷ் மக்களுக்கு அன்னியர் மீதான சகிப்பின்மை கூடத் துவங்கியது.

இது போன்ற பல பொருளாதார, அரசியல் மாறுதல்களின் விளைவுகளை அத்தனை சுலபமாக மதிப்பிட முடியாத நிலை இன்று உள்ளது. இருப்பினும் டப்ளின் ரெவ்யு ஆஃப் புக்ஸ் பத்திரிகையில் ப்ரெக்ஸிட் தேர்தலின் ஒரு விளைவைப் பற்றிய ஒரு கட்டுரையை பதிவாக வெளியிட்டிருக்கிறார்கள். எழுதியவர் பெயர் இல்லாததால் ஆசிரியர் குழு வெளியிட்டது என்று எடுத்துக் கொள்ளலாம்.

அதன்படி, பிரெக்ஸிட் முடிவால் யூரோப்பிலிருந்து பிரிட்டன் பிரியத் தீர்மானித்தது என்பதால், ஸெஃபார்டிக் பிரிவைச் சார்ந்த பிரிட்டிஷ் யூதர்கள் பெரும் எண்ணிக்கையில், பிரிட்டனிலிருந்து வெளியேறத் தீர்மானித்து போர்ச்சுகீசியக் குடிமக்களாக ஆக விண்ணப்பித்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது. இதற்கு இன்னொரு உந்துதலாக, சமீபத்தில் போர்ச்சுகலில் ஒரு சட்டம் திருத்தப்பட்டது, அதன்படி யூதர்கள் இனி அங்கு குடியேறலாம். இதே போல ஸ்பெயினிலும் சட்டம் திருத்தப்பட்டிருக்கிறது.ஐபீரிய தீபகற்பத்தில் (ஸ்பெயின்/ போர்ச்சுகல் நாடுகள் உள்ள நிலப்பகுதி இது)  15 ஆம் நூற்றாண்டில் யூதர்கள் வலுக்கட்டாயமாகக் கதோலிக்கக் கிருஸ்தவத்துக்கு மதம் மாற்றப்பட்டார்கள், அல்லது நாடு கடத்தப்பட்டார்கள், அல்லது மதம் மாறிய யூதர்கள் இன்னும் பழைய மதத்தைக் கைவிடாமல் இருப்பதாகச் சந்தேகிக்கப்பட்டால் சர்ச்சால் தண்டிக்கப்பட்டு, அவர்கள் கம்பங்களில் கட்டிப் பொதுவில் வைத்து எரிக்கப்பட்டார்கள். எத்தனை கருணை!

அந்தக் கொடுமைக்கு ஈடு கட்டும் நடவடிக்கையை இன்று ஸ்பெயினும், போர்ச்சுகலும் எடுக்க என்ன காரணங்கள் என்பதைத் தெரிந்து கொள்ள மேலும் தகவல் தேட வேண்டி இருக்கும். இங்கு ஸெஃபார்டிக் யூதர்கள் இத்தனை காலம் பிரிட்டனில் இருந்து விட்டு இப்போது ஏன் குடி பெயர முனைகிறார்கள் என்பதை மட்டும் பார்க்கலாம்.

இந்த மனமாற்றம் பற்றிய ஒரு செய்தி அறிக்கையை த கார்டியன் என்னும் பிரிட்டிஷ் பத்திரிகை வெளியிட்டது சென்ற டிசம்பர் மாதம். அதற்கான சுட்டி கீழே: Brexit vote sparks rush of British Jews seeking Portuguese passports | World news | The Guardian

ஜில்லி ட்ரேய்கர், லண்டனில் வசிக்கும் ஷெபார்டிய யூதர். இவர் போர்ச்சுகீசிய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கவிருக்கிறார். “இங்கிலாந்தின் மிகப் புராதனமான யூதக் குடும்பம் ஒன்றிலிருந்து வருவது குறித்து எனக்கு மிகவும் பெருமைதான். [ஆனால்] வரலாற்று ரீதியாகப் பார்த்தால், நான் வெறும் இங்கிலிஷ்காரி என்று நினைக்கவில்லை. நான் யூரோப்பைச் சேர்ந்தவளாகவே உணர்கிறேன், நான் வெறும் இங்கிலிஷ் பெண்ணில்லை. நான் யூரோப்பைச் சேர்ந்தவள், அப்படியே இருக்கத்தான் விரும்புகிறேன்.” என்கிறார்.

பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில் ஐபீரிய தீபகற்பத்திலிருந்து ஸெஃபார்டிய யூதர்கள் வெளியேற்றப்படுகிறார்கள். அங்கிருந்து வட ஆஃப்ரிக்கா, தென் மேலும் மத்திய அமெரிக்கா, பால்கன் பிரதேசம் மற்றும் பல இடங்களில் தஞ்சம் புகுந்து குடியேறிகளாகிறார்கள். யூரோப்பில் 20 ஆம் நூற்றாண்டு வரை கூட யூதர்கள் பல வன்கொடுமைகளுக்கு ஆளானார்கள் என்பதை நாம் அறிவோம். இன ஒழிப்பு முயற்சிகளின் இலக்காகவும் பல பத்தாண்டுகள் இவர்கள் இருந்தனர். இத்தனைக்கும் இவர்களில் ஒரு சாரார் உலக உழைப்பாளர்களின் நலன் காக்க விரும்பும் இடது சாரி இயக்கங்களில் பல நாடுகளில் முன்னணியில் இருந்து போராடியும் இருக்கிறார்கள். இருந்தும் உலக இடது சாரிகளின் பெரும் எதிர்ப்புதான் இவர்களுக்கு இன்று வரை கிட்டி வருகிறது.

யூதர்களில் உள்ள இரு பெரும் குழுவினரில் ஸெஃபார்டியர்கள் ஒரு குழு என்றால் மற்ற பெரும் குழு ஆஷ்கெனாஸியர்கள். ஆஷ்கெனாஸி என்றால் ஜெர்மனியைச் சார்ந்த யூதக் குழுவினர் என்று பொருள். இவர்கள் அனேகமாக ஜெர்மனி, ஃப்ரான்ஸ், கிழக்கு யூரோப்பிய நாடுகள் ஆகியவற்றில் வசித்தவர்கள். ஸெஃபார்டிய யூதர்களோ பெரும்பாலும் ஸ்பெயின், போர்ச்சுகல், வட ஆஃப்ரிக்கா, மேற்காசியா (மத்திய கிழக்கு நாடுகள்) போன்ற பகுதிகளில் வசித்தவர்கள். ஸெஃபார்டியர்கள் இரு பிரிவினராக உள்ளவர்கள். ஸெஃபார்டிம் எனப்படுவோர் ஸ்பெயின், போர்ச்சுகள் பகுதிகளில் இருந்து வந்தவர்களாக இருக்கையில், மிஸ்ராகிம் அல்லது மிஸ்ராகியர்கள் என்பார் இன்னொரு உட்குழு, இவர்கள் பெருமளவும் வட ஆஃப்ரிக்கா மற்றும் மேற்காசிய நாட்டு மக்களாக வாழ்ந்தவர்கள்.

வரலாற்றுப் போக்கில் பற்பல விசித்திரங்கள் உண்டு. வட ஆஃப்ரிக்கா, மேற்காசியா பகுதிகளில் வாழ்ந்த யூதர்கள் அனேகமாக முஸ்லிம் நாடுகளில் வாழ்ந்தனர். 1400 வரையில் ஸ்பெயினும் போர்ச்சுகல், வட ஆஃப்ரிக்கா மற்றும் மேற்காசியா பகுதிகள் எல்லாமே முஸ்லிம் ஆட்சியில் இருந்த பகுதிகள். அப்பகுதிகளில் யூதர்கள் ஒரு சில கட்டுப்பாடுகளைத் தவிர அனேகமாக தம் போக்கில் இருக்க அனுமதிக்கப்பட்டிருந்தனர். பயணிப்பதும் தடை செய்யப்படவில்லை. ஆனால் ஐபீரிய தீபகற்பம் (ஸ்பெயின்/ போர்ச்சுகல்) கிருஸ்தவர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர் யூதர்கள் வலுக்கட்டாயமாக மதம் மாற்றப்பட்டார்கள் அல்லது துரத்தப்பட்டார்கள். கணிசமான எண்ணிக்கையில் கொல்லவும் பட்டார்கள். அங்கிருந்து தப்பிப்போன யூதர்கள், அனேகமாக ஸெஃபார்டியர்கள், பெரும்பாலானோர் வட ஆஃப்ரிக்காவில் அல்லது மேற்காசியாவில் இருந்த மிஸ்ராகிய யூதர் குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.

இதில் வரலாற்று விசித்திரம் என்ன? முன்பு முஸ்லிம் நாடுகளில் உரிமைகளோடு இருந்த யூதர்கள் இன்று முஸ்லிம் நாடுகளில் கடுமையாக வெறுக்கப்படுகிறார்கள். குறிப்பாக இஸ்லாமிசத் தீவிர வாதம் யூதர்களை ஒழிக்க வேண்டும் என்றே உலகெங்கும் பிரச்சாரம் செய்கிறது. இதனால் சமீப காலம் வரை துருக்கியில் வசித்த யூதர்கள் கூட வெளியேற முற்பட்டிருக்கின்றனர். முன்பு கிருஸ்தவ நாடுகளில் கொடுமைப்படுத்தப்பட்டு, கேவலமான நிலையில் வாழ்ந்த யூதர்கள் இன்று அந்நாடுகளில் குறைவான வெறுப்புக்கு நடுவில், அனேகமாக நன்னிலையில் வாழ்கிறார்கள்.

இது போன்ற விசித்திரங்கள் பலவற்றை நாம் மனித/ உலக வரலாற்றில் காணலாம். ஆனாலும் வரலாற்றை அறிவியல் முறைகளால் (பகுத்தறிவால்) அலச வேண்டும் என்று சொல்லும் வினோதப் பேர்வழிகள் நிறையப் பல்கலைகளில் உலவுகிறார்கள். அதுவும் இன்னொரு விசித்திரம்தான்!

இஸ்ரேலில் இன்று இருப்பவர்களில் பெரும்பாலானோர் (பாதிக்கும் மேற்பட்டவர்கள்) மிஸ்ராகியர்கள். இவர்களில் பலர் அப்பகுதியில் பண்டைக்காலம் தொட்டு வாழ்ந்து வருபவர்கள். அல்லது இஸ்ரேல் ஸ்தாபிக்கப்பட்ட பின்னர் பல அரபு நாடுகளில் இருந்து துரத்தப்பட்டவர்கள். மீதம் அனேகமாக ஆஷ்கெனாஸியர்கள்.  அமெரிக்காவில் உள்ள யூதர்களில் பெரும்பாலானோர் ஸெஃபார்டியர்கள். 1684 இல் நியூயார்க்கில் முதல் யூதப் பிரார்த்தனைக் குழு ஸ்தாபிக்கப்பட்டது என்று இந்தக் குறிப்பு சொல்கிறது: Judaism 101: Ashkenazic and Sephardic Jews

ஸெஃபார்டியர்கள் ரொமான்ஸ் மொழி என்று அறியப்பட்டதன் ஒரு வட்டார வழக்கையே பேசினார்கள். அது ஓரியண்டல் லாட்டின் என்று கூட அறியப்பட்டிருந்தது. மாறாக ஆஷ்கெனாஸியர்கள், ஜெர்மன் மொழியின் ஒரு வட்டார வழக்கான யிட்டிஷ் என்ற மொழியைப் புழக்கத்தில் கொண்டிருந்தனர். இது ஜெர்மன், ஹீப்ரூ மேலும் அரமைக் மொழிகளின் கலவை, இதில் ஸ்லாவிய மொழிகளின் சொற்களும் நிறைய உண்டு. ஆஷ்கெனாஸிய யூதர்கள் இந்த நிலப்பகுதிகளில் வாழ்ந்ததால் தம் மூல மொழியான ஹீப்ரூ/ அரமைக் ஆகியனவற்றோடு வாழ்நிலங்களின் மொழிகளையும் கலந்து பேசியிருக்கிறார்கள்.

இதனால் ப்ரீமோ லெவி (புகழ் பெற்ற இதாலிய எழுத்தாளர், யூதர்) ஆஷ்விட்ஸின் கொடும் முகாமில் அடைக்கப்பட்ட போது அங்கிருந்த பெரும்பான்மையினரான கிழக்கு யூரோப்பிய யூதர்களால் ஏற்கப்படவில்லை என்பதைப் பற்றி வாசகர்கள் படித்திருக்கக் கூடும். இத்தாலிய ஸெஃபார்டியரான ப்ரீமோ லெவிக்கு யிட்டிஷ் மொழி பேசத்தெரியவில்லை என்பதே அவரை மற்றவர்கள் யூதர் என ஏற்காததற்குக் காரணம். கிழக்கு யூரோப்பிய யூதர்களுக்கு, யூதர் என்றால் யிட்டிஷ் பேசத் தெரிந்திருக்க வேண்டும் என்ற கருத்து இருந்தது. [ இது சம்பந்தமாக ஃப்ரான்ஸ் காஃப்காவின் யூத அடையாளம், அவருடைய மொழிப்பயன்பாடு ஆகியன பற்றிய ஒரு குறிப்பை, இந்த இதழில் மகரந்தம் பகுதியில் காணலாம்.][1]

அந்தக் கால கட்டத்தில் மட்டுமல்ல, பல நூறாண்டுகள் கழித்தும், பிரிட்டன் பல வகை, பல நிலங்களிலிருந்து புகலிடம் தேடி ஓடியவர்களுக்கு தஞ்சம் புகத் தக்க இடமாகத் தெரிந்திருக்கிறது. இதுவும் ஒரு வரலாற்று முரண் தான், ஐயமில்லை. எந்த ஏகாதிபத்தியம் உலகெங்கும் தன் படைகளை அனுப்பிப் பல பண்டை நாகரீகங்களை அழித்து, லட்சக்கணக்கான மக்களை ஆசிய ஆஃப்ரிக்க மண்ணில் கொன்று குவித்ததோ, அதே ஏகாதிபத்தியத்தில் ஒரு பகுதியினர், சுதந்திரம், நீதி, மனித உரிமை என்று அறம் பற்றிப் பேசி, புத்தகங்கள் எழுதி, அதை ஒரு அரசியல் தத்துவமாகவும் முன்வைத்துக் கொண்டிருந்தனர்.

இவர்கள் ஏகாதிபத்தியத்தைக் கைவிடச் சொல்லிப் போதிக்கவில்லை, மாறாக இந்த ஏகாதிபத்திய முயற்சி ஏதோ மனிதப் பரிணாமத்தில் தவிர்க்கவியலாத ஒரு படிக்கட்டு, இதன் மீது நின்று மானுடம் அடுத்த கட்டத்துக்குப் போகவியலும் என்று கருதியதோடு அதையே ஒரு கோட்பாடாகவும் உலகுக்குப் போதித்தனர். அதாவது உலகத்துக்கே நாகரீகத்தை யூரோப்பியர்கள், அதுவும் குறிப்பாக பிரிட்டிஷார்தான் கற்றுக் கொடுத்தவர்கள், கொடுக்கவிருக்கிறவர்கள் என்ற சுயமயக்கக் கருத்துக்கு இந்த ‘தத்துவாளர்கள்’, சிந்தனையாளர்களும் கட்டுப்பட்டுத்தான் இருந்தனர். இந்த மயக்கம் பல உலகப் புரட்சியாளர்களுக்கும் அன்று இருந்தது.

எத்தனை தூரம் ஒரு வரலாற்றுச் சூழல்-இதைக் கருத்துத் தொடுவான் என்று ஒரு உருவகம் வருணிக்கிறது- தனி மனிதச் சிந்தனையின் பெரும் வீச்சைப் பாதிக்கும், குறுக்கும், அல்லது அடைக்கும் என்பனவற்றை 17-19 ஆம் நூற்றாண்டில் இருந்த பல யூரோப்பியச் சிந்தனையாளர்களின் கருத்துகளைப் பற்றி யோசித்தால் புரியும்.  படிப்படியாக மானுடம் முன்னேறி, அனைத்து நிலங்களிலும் அரசியலமைப்புகளின் ஒரே வகை உருக்கள் வழியே தேறி வந்து, இறுதியில் அற்புதங்களால் நிறைந்த, கற்பனா-சமத்துவ சொர்க்கத்தில் வந்து சேர்வார்கள் என்ற சிறுபிள்ளைத்தனமான நம்பிக்கையால்தான் மொத்த உலக முற்போக்குக் கருத்தியலும் இயங்குகிறது. புராதன நாடோடிகளின் மாயா ஜால மத நம்பிக்கை ஊடுருவிய கருத்தியல் அது. ஆனால் என்றென்றைக்கும், நாளைய உலகுக்கான கருத்துகளைத் தாம் மட்டுமே கட்டுவதான பெரும் பிரமையும் இவர்களிடம் உண்டு என்பது ஒரு கோணத்தில் அபத்தமாகத் தெரியும், இன்னொரு கோணத்தில் இப்படிப்பட்ட மயக்கங்களை நம்பித்தான் மனிதரின் மத நம்பிக்கைகள் தொடர்கின்றன என்பது உடனே புரியும். எது மதம் என்று அறியப்படுகிறது என்பது அந்தந்த காலத்து முத்திரை குத்தும் அதிகாரம் யாரிடம் உள்ளது என்பதைப் பொறுத்தது, அவ்வளவுதான். இதில் ‘அறிவார்ந்த’ அணுகல் என்பது ஏதும் செயல்பாட்டில் இல்லை.

பிரிட்டனின் பிராபல்யத்தை நம்பி அன்று ஸெஃபார்டிய யூதர்கள், ட்யூடர்களின் முடியாட்சி நடந்த பிரிட்டனுக்கு வந்து சேரும்போது, அவர்களுக்கு ஏதும் வரவேற்பு கிட்டவில்லை. அயல் நிலத்தவரின் வரவு, தம் நடுவே அவர்கள் வாழ்வது, அவர்கள் பொருளாதார நடவடிக்கைகளில் பங்கெடுப்பது எல்லாம் உள்நாட்டு மக்களால் எதிர்க்கப்பட்டன. 1517 இல் நடந்த கலவரத்தில் லண்டனில், தொழில் துறையில் பயிற்சியாளர்களாக இருந்தவர்கள், அன்னிய சமூகக் குழுவினர்களைத் தாக்கினர். அதிகாரிகள் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஒன்றை நடத்தி, மக்கள் நினைப்பதை விட மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே அன்னியர்கள் அங்கே இருந்தனர் என்பதைக் காட்டி மக்களுக்கு பாதுகாப்புணர்வைக் கொணர முயன்றனர். ஆனாலும், தூக்குக் கயிற்றில் தொங்க விடப்பட்ட அன்னியருடைய படங்களோடு சுவரொட்டிகள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருந்தன, அன்னிய உழைப்பாளிகள் என்ற வடிவில் அயல்நாட்டு ஒற்றர்கள் ஊடுருவ வாய்ப்பு அதிகம் என்பது அடிக்கடி அதிகாரிகளுக்கு ‘அறிவுறுத்தப்பட்டது’, மேலும் கைவினைஞர்களும், எந்திரப் பொறியாளர்களும் அன்னியத் தொழிலாளர்களின் இறக்குமதியால் வறுமையில் தள்ளப்படுவது நேரும் என்றும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன. அன்னியத் தொழிலாளர்களின் தொழில் நுட்ப அறிவும், அறிவுத் திறனும் உள்ளூர் மக்களால் போட்டியிட முடியாத அளவு அதிகம் என்பது போலவும் கருத்து தெரிவிக்கப்பட்டது போலும்.

ஜேம்ஸ் ஷபீரோ என்பவர் டப்ளின் ரெவ்யு பத்திரிகையில் (2016) பிரசுரித்த ஒரு கட்டுரையில் எலிஸபெத்திய இங்கிலாந்தில் யூதர்கள் நிலை பற்றிய ஒரு அலசல் இருந்தது. கட்டுரையின் தலைப்பு, ‘ஷேக்ஸ்பியரும், யூதர்களும்.’ அதில் அவர் எழுதிய ஒரு பத்தியின் சாரம்:

நவீன காலம் துவங்குகையில் யூரோப்பில், யூதர் என்பவர் யார் என்று இனம் காண்பது இடைவிடாத பிரச்சினையாக இருந்ததாகத் தெரிகிறது. இந்தப் பிரச்சினையை மேலும் கடும் சிக்கலாக்கியதற்குக் காரணம் தேடினால், கிருஸ்தவத்தின் தற்காப்பு முயற்சி என்ற பெயரில் ஸ்பானிய, போர்ச்சுகீசிய அரசும், சர்ச்சும் இணைந்து நடத்திய கொடும் விசாரணைகள் அளவு வேறு எதுவும் இராது.  1492 ஆம் ஆண்டிற்குள், ஸ்பெயினை ஆண்ட இஸபெல்லாவும், ஃபெர்டினாண்டும் நிறைய முயற்சிகள் செய்தும் கிருஸ்தவத்துக்கு மதம் மாறத் தயாராக இல்லாதவர்களையும், இன்னமும் யூதமதத்தையே பிடித்துக் கொண்டிருப்பவர்களையும், தங்கள் ராஜ்ஜியத்திலிருந்து வெளியேற்ற முடிவு செய்திருந்தனர். அந்த நாட்டில் யூதர்கள் சில லட்சம் பேராவது இருந்திருப்பார்கள் என்று வரலாற்றாளர்களால் கருதப்படுகிறது. இவர்களில் முக்கால் வாசிப் பேர் இதற்குள் கிருஸ்தவர்களாக மாறி இருந்தனர், சிலர் விரும்பி, பலர் வலுக்கட்டாயத்தால். புதுக்கிருஸ்தவர்களான ஸ்பானியர்களில் (கன்வெர்ஸோஸ்) பலரும் நாட்டின் அறிவாளர்கள், மற்றும் சமூக அந்தஸ்து உள்ளவர்களில் உறுப்பினர்களான, மேல்நிலை மக்களாக இருந்தவர்கள்.

ஆனால் வலுக்கட்டாயத்தின் பேரில் மத மாற்றப்படுவது எத்தனை தூரம் உறுதியான மாற்றமாக இருக்க முடியும்? அல்லது ஒருவர் பொருளாதாயத்துக்காக, அந்தஸ்துக்காக மாறுவதற்குத்தான் எத்தனை ஸ்திரத்தன்மை இருக்கும்?

பொதுவெளியில் காட்டப்பட்ட அடக்குமுறை நடவடிக்கைகளும், ‘நீதி விசாரணை’ என்ற பெயரில் செய்யப்பட்ட படுகொலைகளும் எத்தனை இருந்தாலும், திரைமறைவிலும், பதுங்கியிருந்தும் செயல்பட்டு, அரசியல் ரீதியாக ஆட்சியைக் கவிழ்க்க முயலும் யூதர்களின் இருப்பு குறித்து ஸ்பெயினும், போர்ச்சுகலும் தொடர்ந்து அச்சத்திலேயே இருந்தன. ரத்தச் சட்டங்கள் என்று பெயரிடப்பட்டவை நிறைவேற்றப்பட்ட பின்னர், இவை ‘சுத்தமான ரத்தம்’ என்ற கருத்தின் பேரில் உருவானவை, புதுக்கிருஸ்தவர்களுக்கும், பழைய கிருஸ்தவர்களுக்குமிடையே வேறுபாட்டைக் காட்ட எழுதப்பட்டவை, ஒன்று தெளிவானது. மதமாற்றங்களும், சிறுபான்மையினரைப் பெரும்பான்மையினர் நடுவே கரைத்து ஒன்றுபடுத்தி விடும் முயற்சிகளும் நல்ல விளைவைக் கொடுக்கவில்லை என்பதை இவை உறுதி செய்தன.

ஷபீரோவின் பார்வையில் அங்கு நிறையவே மூலவேர்களை மறந்து போதலும், புதுச் சமூகத்தில் கரைந்து ஒன்றுவதும் நடந்திருந்தது. 2008 இல் நடந்த ஒரு மரபணு ஆய்வில், ஸ்பெயினில் மாதிரி ஆய்வில் கலந்து கொண்டவர்களில் 20 சதவீதம் நபர்கள் யூத வம்சாவளியைச் சேர்ந்தவர்களாக இருந்திருப்பார்கள் என்பது கண்டு பிடிக்கப்பட்டது. தவிர ரத்தச் சட்டங்கள், கிருஸ்தவத்தின் மைய நிலைப்பாடு ஒன்றைத் தெளிவாகவே மறுதலித்தன- அதாவது கிருஸ்தவம் மனிதர் அனைவருக்கும் பொதுவானது என்ற சாதிப்பை இந்தச் சட்டங்கள் மதிப்பில்லாததாக்கின. செயின்ட் பால் எழுதி இருந்தார்:

உங்களில் எத்தனை பேர் முழுக்கு பெற்று கிருஸ்துவுக்குள் வந்தீர்களோ, அவர்களெல்லாம் கிருஸ்துவை ஏற்றுக் கொண்டீர்கள். இனி எவரும் யூதரோ, கிரேக்கரோ இல்லை, யாரும் கட்டுப்பட்டவரோ, சுதந்திரமானவரோ இல்லை, ஆணோ, பெண்ணோ இல்லை: நீவிர் எல்லாம் ஜீஸஸ் கிருஸ்துவில் ஒன்றானீர்.

ஆனால், சகோதரத்துவத்தின் பேரில் இயங்கும் ஒரு மதம், இப்போது வம்சாவளியின் பேரில் இயங்கும் -யூதத்தைப் போன்ற- ஒரு மதத்தின் இடத்தைப் பிடித்துக் கொண்டதாகத் தெரிகிறது.[2]

நாடுகடத்தப்படுவது என்பது வெளி நிலங்களில் குடியேறுவதில்தான் முடியும். ஸ்பானிய மற்றும் போர்ச்சுகீஸிய யூதர்கள், இவர்கள் இப்போது வழக்கமாக மர்ரானோஸ் என்று அறியப்படுகிறார்கள்,1492க்குப் பிறகு இத்தலி, ஆட்டமான் சாம்ராஜ்யப் பகுதி, வட ஆஃப்ரிக்கா, ஃப்ளாண்டர்ஸ் மற்றும் இங்கிலாந்தையும் சேர்த்து இதர மையங்களுக்குக் குடியேறப் போனார்கள். 1540 இல் ஸ்பெயினில் நடந்த கடும்விசாரணையில் (இன்க்விஸிஷன்) கொடுக்கப்பட்ட சாட்சியப்படி, ஒரு போர்ச்சுகீஸிய மர்ரானோ, லண்டனில் அப்போது இந்த அகதிகளுக்குத் தஞ்சம் கொடுக்கும் ஒரு வீட்டை நடத்தி வந்தார், அதில் உள்ளூர் யூதச் சமூகம் சென்று வழிபாடு நடத்த ஒரு வணக்கத் தலமும் (ஸினகாக்) இருந்தது. மேலும்….

அன்று ஆல்விஸ்ஸின் வீட்டுக்கு, சுமார் 20 நபர்கள் போல இருக்கும், பொய் கிருஸ்தவர்கள் வந்தார்கள், அவர்களில் இவர் பார்த்தவர்கள்: டியாகோ டெல்லா ரோஞ்னாவும், அவர் மனைவியும், என்ரிகோ த டோவாரும் மனைவியும், ஹோர்ஹே டியெஸ், கொன்சாலெஸ் த காப்ராவும் மனைவியும், அவர்கள் மகன் பீட்டரும் மனைவியும், அந்தொணியோ டெல்லா ராஞ்னா, ஆனா பியென்டோ,மேலும் ரொட்ரீகோ பின்டோ, அவள் சகோதரன் மேலும் லண்டனில் பலர்… மேலும் போர்ச்சுகலில் இருந்து அகதிகளாக இங்கிலாந்துக்கோ, ஃப்ளாண்டார்ஸுக்கோ பிறகு அங்கிருந்து துருக்கிக்கோ செல்லும் பொய் கிருஸ்தவர்கள், மேலே சொன்ன ஆல்விஸ்ஸின் வீட்டுக்கு வருகிறார்கள், அவர்கள் எங்கே போக விரும்புகிறார்களோ அதற்கு அவர் உதவுகிறார்.

இந்தக் கட்டாயவிசாரணையில் யூதர் என்று சொல்லப்பட்ட இன்னொருவர் கொடுத்த சாட்சியப்படி அவர் பெயர் டன்ஸ்டன் அம்ஸ் அல்லது அன்ஸ் (முன்பு ஆனெஸ் என்றிருந்த பெயர்). இவர் 1594 இல் இறந்தபோது, லண்டனில் இருக்கும் செய்ண்ட் ஓலேவ் சர்ச்சில், அவருடைய பிரார்த்தனை இருக்கையின் கீழேயே புதைக்கப்பட்டாராம்.  அம்ஸ், ஸ்பெயினில் இருக்கும் வல்லாஓலிட் நகரில் இருந்த ஒரு மதம் மாற்றப்பட்ட (கன்வெர்ஸோ) குடும்பத்தில் பிறந்தவர், இங்கிலாந்துக்குச் சிறுவனாக இருக்கையில் அழைத்து வரப்பட்டவர், செல்வந்தரான வியாபாரி, அரசியின் மளிகைத் தேவைகளுக்குப் பொருட்களைக் கொணர்ந்து, வியாபாரம் செய்தவர், இறுதியில் ஒரு கனவானாக உயர்த்தப்பட்டு, தனக்கென்று சின்னம் பொறித்த கேடயம் வைத்துக்கொள்ள 1568 ஆம் ஆண்டு அனுமதி பெற்றவர். இவருடைய சகோதரர் ஃப்ரான்ஸிஸ்கோ, ராணுவத்தில் சேர்ந்து, யோல் (Youghal) என்னும் இடத்தில் இருந்த இங்கிலிஷ் ராணுவ முகாமிற்குத் தலைமை வகித்தார், பிறகு ஃப்ரான்ஸிஸ் ஆன்யாஸ் என்ற பெயரில் அந்த ஊருக்கு நகர சபைத் தலைவராக இருந்தார். டன்ஸ்டன், ஃப்ரான்ஸிஸ்கோ ஆகிய இருவரின் சகோதரி ஸாரா, செல்வந்தரான மருத்துவர் ராட்ரீகோ லோபே என்பவரை மணந்தார். (“one, that maketh as great account of himself, as the best: & by a kind of Jewish practis, hath growen to much wealth, & sum reputation”) ராட்ரீகோ லோபே பற்றி விக்கிபீடியாவில் கிட்டுவதைப் பார்க்கவும்: Roderigo Lopez – Wikipedia

அந்தக் குறிப்பில் கவனிக்கத் தக்க ஒரு வரி: ஐபீரிய தீபகற்பத்தில் (அதாவது ஸ்பெயின்/ போர்ச்சுகல் நாடுகளில்) கன்வெர்ஸோ (மதமாற்றப்பட்ட) மருத்துவர்கள் தம் நோயாளிகளைக் கொன்றதாகவோ, அல்லது விஷம் வைத்துவிட முயன்றதாகவோ குற்றம் சாட்டப்பட்டார்கள் என்பது.

ராட்ரீகோ லோபேயும் அரசியை விஷம் வைத்துக் கொல்ல முயற்சி செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு, தூக்கிலிடப்பட்டார். அதோடு, இவருடைய உடல் வெட்டிச் சிதைக்கப்பட்டது. இது நடந்தது 1594 இல்.

ஆனால் எலிஸபெத் ராணி இவருடைய மனைவி/ குழந்தைகளுக்கு இவருடைய சொத்துக்களைத் திருப்பிக் கொடுத்து விட்டதால் இவர் மீது வைக்கப்பட்ட குற்றச் சாட்டுகளை அவர் நம்பவில்லை என்று வரலாற்றாளர்கள் சாதிக்கிறார்கள். எது உண்மை? இத்தனை காலம் கழித்து அறிவதுதான் சாத்தியமா?

இவர்தான் ஷேக்ஸ்பியரின் ஷைலக் பாத்திரத்துக்கு முன்மாதிரியாக இருந்திருப்பார் என்று சிலர் கருதுகிறார்கள். லோபே இறுதிவரை தான் நிரபராதி என்று உறுதியாகச் சொன்னார். தூக்குமேடையில் கூட, தான் “ராணி மீது அன்புள்ளவன் என்றும், தான் ஜீசஸ் கிருஸ்து மீது தனக்கிருந்த அன்புக்கு அந்த அன்பு ஈடானது,” என்றும் சொன்னதாகவும், சூழ நின்றவர்களிடம், ஒரு ’யூதத்’ தொழிலைச் செய்யும் நபரிடமிருந்து (அன்று மருத்துவர்களில் பெரும்பாலானோர் யூதர்களாக இருந்தனர்) இப்படி ஒரு அறிக்கை வெளிப்படுவது ஏளனத்துடனேயே பார்க்கப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது.

பொதுவில் வைத்து இப்படி அவமதிக்கப்பட்ட போதும், அவதூறால் தாக்கப்பட்ட போதும், ஏளனப்படும்போதும், சில நேரம் அடி, உதைத் தண்டனைகள் பெறும்போதும், ஏன் மரண தண்டனை கூடப் பெறும்போதும், யூதர்களின் நிராதரவான நிலை- பல நூறாண்டுகள் நீடித்த இந்த அவல நிலை, பெரும்பாலும் சூழ நின்று பார்த்திருந்தவர்களுக்கு கேளிக்கையாகவே இருந்திருக்கிறது. இந்தச் சமூகக் குழுவை இப்படி அவமதிப்பது ஏன் இத்தனை நாடுகளின் மக்களுக்கு உற்சாகத்தையும், மேன்மேலும் இழிவு செய்யும் நோக்கத்தையும் கொடுத்தன? ஷைலக்கின் வார்த்தைகளிலேயே சொல்வதானால், யூதருக்கென்ன எல்லாரையும் போல கண்களும், கைகளும், உடலுறுப்புகளும், பரிமாணங்களும், உணர்வுகளும், பாசமும், உத்வேகங்களும் இல்லையா?

ஆ… யோசித்துப் பார்த்தால் அவர்களிடம் இவை இல்லை என்ற கருத்துதான் அதிகம் நிலவுகிறதாகத் தெரிகிறது. நவீன இங்கிலாந்தில் சேர்ந்திருக்கும் ‘கட்டுக்கதைகள்’ என்னென்ன விதங்களில் யூதர்கள் மற்றவர்களைப் போன்றவர்கள் இல்லை என்று நிரூபணங்கள் இருப்பதாகவே தெரிவிக்கின்றன.

முதலாக, அவர்கள் உடலளவிலேயே வித்தியாசமானவர்கள். கருப்பாக (ஸ்வார்ட்) நிறத்தால் இருப்பவர்கள், பெரும்பாலான பேர் ஒரு விசேஷமான அடையாளத்தையும் சுமந்தவர்களாம், அது அவர்கள் உணர்ச்சி வசப்படும்போது வெளித் தெரியுமாம், அது சில நேரம் இரண்டு, சில நேரம், மூன்று மேல் நோக்கிய கீற்றுகளாக, கீழ்ப்புறத்தில் இரண்டு சதுர அடிக்கு ஒரு கோடு போன்றதோடு இணைந்திருக்கும் உருவில் தெரியும். “இதுதான் ஏபெல்லைக் கெயின் கொல்லும்போது அவனுடைய நெற்றியில் தெரிந்த குறி.” அவர்களிடம் ஒரு வாடை வீசுமாம்:

அவர்களின் உடலில் ஒரு சாபம் வீழ்ந்திருக்கிறது போலத் தெரிகிறது. அவர்களின் அருவருப்பான தோற்றத்தையும், வினோதமான கண்களையும் பாருங்கள், அவை பிறரிடமிருந்து அவர்களை வேறுபடுத்திக் காட்டும். நாற்றம் என்பதைத் தவிர வேறெப்படியும் வருணிக்க முடியாத ஒரு மோசமான வாசனையை அவர்களிடம் நீங்கள் பெறுவீர்கள், மற்ற எந்த நாட்டு மக்களையும் விட இவர்களிடமே இந்த நாற்றம் பிரிக்க முடியாதபடி உள்ளேயே இருக்கிறது.

[இது ஒருவரின் கருத்து என்று சுட்ட டப்லின் ரெவ்யு ஆஃப் புக்ஸ் இதை மேற்கோளாக உருவமைத்துக் காட்டுகிறது.]

அவர்கள் திடீரெனக் கீழே விழும் நோயால் பாதிக்கப்படுபவர்கள். (வலிப்பு நோய் இருப்பதால் மயக்கமடித்து விழுவதைச் சொல்கிறார்கள்.) பெண்கள் மட்டுமல்ல, யூத ஆண்களுமே மாத விலக்கு அடைவதாக நம்பப்படுகிறது. இப்படி இழக்கப்பட்ட ரத்தத்தை ஈடு செய்வதற்காகத்தான், ஒருவேளை அவர்கள் சிறு குழந்தைகளைக் கடத்துவதிலும், அவர்களைச் சிலுவையில் அறைவதிலும், அவர்களிடமிருந்து ரத்தத்தை எடுப்பதிலும் ஈடுபடுகிறார்கள் என்றும் நம்பப்படுகிறது. ஹ்வான் டெ கின்யொனெஸ் என்ற ஸ்பானிய மருத்துவர் யூதர்களுக்கு வால் உண்டு என்று சாதிக்கும் ஒரு புத்தகத்தை எழுதினார். அவர்களுடைய வாயில் துர்நாற்றம் வீசும், அவர்கள் முலைப்பாலும் உண்ணும் பழக்கமுள்ளவர்கள் என்றும் நம்பப் படுகிறது. (இதில் விசித்திரம் என்னவென்றால், இத்தனை தெளிவான வேறுபாடுகளை அங்க அவயங்களில் கொண்டிருப்பவர்களை, கிருஸ்தவர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டவென்று தலைப்பாகை, வித்தியாசமான மேலங்கி, தவிர துணியாலான அடையாளச் சின்னம் என்று பலவற்றை அணியும்படி யூதர்கள் ஏன் கட்டாயப்படுத்தப் பட்டார்களாம்?)

இதைத் தவிர யூதர்களுக்கு புத்தியிலும் குறைபாடுகள் இருந்தன என்றும், குணமும் குறைந்தவர்கள் என்றும் நம்பப்பட்டது. அவர்களுக்கு “இலேசான, அந்தரத்தில் மிதக்கிற, தீவிரவாதத்தால் பீடிக்கப்பட்ட புத்தி இருக்கிறது, நாளை உலகம் முடியப் போகிறது என்று முழங்கும் சிலரைப் போன்ற தீவிர வாதிகள் இவர்கள். (ப்யூரிடன்கள் போன்றவர்களாம்.)” தம் குழுவோடேயே ஒடுங்குபவர்கள், தம் அனைத்தையும் தம் மக்களுக்குள்ளேயே வைத்துக் கொள்பவர்கள். பெரும் கோழைகள், அதனால் ஆயுதம் தரிக்கும், மதிப்புள்ள தொழில் எதையும் செய்ய லாயக்கற்றவர்கள்.

ஆனாலும், அவர்கள் ‘சதிவேலை’ செய்யும் கலகக்காரர்கள். அவர்கள் அனேக நேரம் பாலடையாளத்தை மாற்றி உடை அணிபவர்கள். துவக்கத்தில் அவர்கள் இடையர்கள் என்றாலும், அவர்கள் அடிக்கடி சிறைவாசம் பெறுவதாலும், யூதரல்லாதவர்கள் ஊழலில் சிக்குவதாலும், இன்று யூதர்கள் ‘வியாபாரிகளாக, தரகர்களாக, எத்து வேலை செய்பவர்களாக’ ஆகி விட்டார்கள். நேர்மையான விவசாய வேலைக்கு இவர்கள் சிறிதும் ஏற்றவர்கள் இல்லை. இதை எல்லாம் தாண்டி, கிருஸ்துவை இவர்களே சிலுவையில் அடித்தார்கள், அதற்குப் பிறகும் பிடிவாதமாகத் தம் பிழைபட்ட மதத்திலேயே இன்னும் இருக்கிறார்கள், ஏற்கனவே வந்து விட்ட மெஸையாவை நம்பாமல், முட்டாள்தனமாகவும், வீணாகவும் மெஸையா இன்னும் வரவிருக்கிறார் என்று நம்பிக்கொண்டு இருக்கிறார்கள்.

~oOo~

“இப்படிப்பட்ட ஒரு மக்கள் யூரோப்பில் வரவேற்பு பெறாமல் போனதில் என்ன வியப்பு இருக்க முடியும்?”  என்று முடியும் இந்தக் கட்டுரையின் கிண்டல் இலேசானதாக இருந்தாலும், அதனுள்ளிருக்கும் நிராசை நமக்கு நன்றாகவே புரியும். ஏனெனில் இந்தியாவிலோ, தமிழகத்திலோ இத்தகைய அரசியல் நிறையவே உலவுகிறது. வேறெதிலும் உலக மக்கள் நடுவே பொதுக் குணங்கள் இல்லாவிடிலும், இப்படி வெறுப்பு வளர்த்துக் கொண்டு திரிவதில் அனேக மக்களிடம் ஒத்த நடத்தையே தெரிகிறது.

~oOo~

பஞ்சநதம் / ஜூலை, 2017


அடிக்குறிப்புகள்:

கட்டுரையின் ஒரு பகுதிக்கு மூலக் கட்டுரை இங்கே: http://www.drb.ie/blog/comment/2017/02/27/the-enemy-within

[1] காஃப்காவின் மொழிப்பயன்பாட்டு வழக்கங்களும், அவற்றின் பல வரலாற்றுச் சூழல் தொடர்புகளும் பற்றிய ஒரு கட்டுரையை இங்கு காணலாம். இது ஒரு புத்தக மதிப்புரை.

http://scholarworks.umass.edu/cgi/viewcontent.cgi?article=1051&context=edge

[2] இங்கு சகோதரத்துவம் என்ற வருணனையில் ஒரு விமர்சனம் மறைந்திருக்கிறது. அந்தக் கோட்பாட்டில் பெண்களுக்கு கிட்டத்தட்ட இடமே இல்லை. இருந்த இடமும் அடிபணிந்து சேவை செய்யும் இடம்தான். வம்சாவளி மதச் சமூகங்களிலும் பெண்களுக்கு அத்தனை உயரிய ஸ்தானம் இராது என்றாலும், வம்சாவளி மதங்கள் மீது, சகோதரத்துவம் பேசும் மதங்களின் விமர்சனங்களில் ஒன்று, அவை பெண்களைத் தாழ்வாக நடத்துகின்றன என்பது. இது முன் சுட்டிய வரலாற்று விசித்திரப் போக்குகளில், நிலைகளில் இன்னொன்று. கரிப்பானை, வெந்நீர்ப் பாத்திரத்தைப் பார்த்து நீ கரி என்று இழிவு செய்த கதைதானிது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.