வேதனையின் புகைப்படங்கள்

(பதிப்பாசிரியர் குறிப்பு : புகைப்படக்கலை குறித்து பெர்ஜர் நிறைய எழுதியிருக்கிறார்.   புகைப்படத்தை அனுபவம் மற்றும் நினைவின் சூழமைவினுள்  இருத்திக் காண வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்துகிறார். ஏதோ ஓரிடத்தில் (சொன்டாக் பற்றிய அவரது கட்டுரையில் என்று நினைக்கிறேன்), புகைப்படம் என்பது “கண்கவர் காட்சி”யாவது குறித்து அவர் எழுதியிருக்கிறார்- “உடனடி எதிர்பார்ப்புகள் கொண்ட காலாதீத நிகழ்” ஒன்றை உருவாக்கி, நினைவைத் தேவையற்றதாக்குகிறது என்கிறார் அவர்.

பெர்ஜரைப் பொறுத்தவரை, சூழமைவு மட்டுமே ஒரு புகைப்படத்தை அதன் காலத்துடன் மீண்டும் இணைக்க முடியும். இச்சூழமைவு, “சமூக நினைவால்” தோற்றுவிக்கப்படுகிறது, வரலாற்று காலமே பெர்ஜர் சுட்டும் காலம். நாம் புறத்தோற்றம் என்று பேசுவோமானால், போரில் சிதையுண்ட உடலின் புகைப்படம், வாகன விபத்தில் சிதையுண்ட உடலின் புகைப்படத்திலிருந்து வேறுபடுவதில்லை. ஆனால் அதன் கூறுமொழி- உதாரணத்துக்கு, சிதையுண்ட உடலை தேசீயக் கொடியில் சுற்றி வைத்தல், அல்லது, சக போர் வீரர்கள் கண்ணீர் மல்க அதைச் சுற்றி நிற்பதைச் சித்தரிப்பது- அதை வேறொன்றின் குறியீடாக்குகிறது: இதோ தன் தேசத்துக்காக தன்னுயிர் ஈந்த தியாகி இவன். அல்லது, புகைப்படத்துக்கு சில தலைப்புகள் அளிக்கப்பட்டிருக்கலாம் (‘இராக்கில் அமெரிக்க ராணுவப்படையினர் உடனிருந்த லிண்ட்சே எடுத்த புகைப்படம் இது’). இத்தகவல்கள் புகைப்படத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கின்றன- காட்டுமிராண்டி இசுலாமிஸ்டுகளால் கொலை செய்யப்பட்ட தியாகி என்பது போன்ற உணர்த்தல்கள்.

ஆனால் இவை அனைத்தும் அவனை மரணத்துக்கு இட்டுச் சென்ற சந்தர்ப்ப நிலைகள் அளிக்கக்கூடிய உண்மையான சூழமைவை மறைக்க முடியாது- முதலில் இந்த இளைஞன் ஏன் போர் புரியச் சென்றான், இந்தப் போருக்கான உண்மையான காரணங்கள் என்ன, கல்லூரிக் கல்வி பெற இயலாத காரணத்தால் அவன் ராணுவத்தில் சேர்ந்தானா, அப்படியானால் அந்தப் பரிசைக் காட்டி ராணுவம் அவனைக் கையகப்படுத்திக் கொண்டதா, பெருந்திரள் மக்களைக் கொன்றழிக்கும் ஆயுதங்கள்தான் இராக்கில் அமெரிக்க ராணுவம் போர் புரியக் காரணமா, இப்படி பல கேள்விகள். இந்தச் சூழமைவு இல்லாமல் புகைப்படங்கள் கண்கவர் காட்சிகள் ஆகின்றன. இங்கு வியட்நாமில் சிதையுண்ட உடலுக்கும் இராக்கில் சிதையுண்ட உடலுக்கும் வேறுபாடில்லை. “போர் கொடுமையானது,” அல்லது “கம்யூனிஸ்டுகள்/ இசுலாமிஸ்டுகள் கொடியவர்கள்”, என்று எண்ணுவது போன்ற ஒரு பொதுப்படையான உணர்வை மட்டுமே வெறும் புகைப்படங்கள் அளிக்கின்றன. இந்த அறவுணர்வை ஆளும் வர்க்கம் தனக்குச் சாதகமாய்ப் பயன்படுத்திக் கொண்டு, போருக்கென புனையப்பட்ட காரணங்களை நிரந்தரமாக்குகின்றன.)

ஜான் பெர்ஜர் (ஜூலை, 1972)

வியட்நாம் செய்தி இன்று காலை தினசரிகளின் தலைப்புச்செய்தியில் இடம் பெறவில்லை. அமெரிக்க விமானப்படை வடக்கு பகுதியில் குண்டு வீச்சுக் கொள்கையை திட்டமிட்டபடி கடைபிடித்து வருகிறது என்ற எளிய குறிப்பு மட்டுமே அளிக்கப்பட்டிருக்கிறது. நேற்று மட்டும் 270 முறை விமானங்கள் குண்டுவீசித் தாக்கப் பயணித்திருக்கின்றன.

இந்தக் குறிப்புக்குப் பின்னே, வேறு தகவல்கள் குவிந்திருக்கின்றன. நேற்று முந்தைய நாள் இம்மாதத்தின் மிக வலுவான தாக்குதலை அமெரிக்க விமானப்படை மேற்கொண்டது. வேறெந்த மாதத்தையும்விட இம்மாதம் அதிக அளவில் குண்டுகள் வீசப்பட்டிருக்கின்றன. வீசப்பட்ட குண்டுகளில் ஏழு-டன் கனம் கொண்ட சூப்பர்பாம்ப்களும் அடங்கும். இவை ஒவ்வொன்றும் ஏறத்தாழ 8000 கன அடி நிலப்பரப்பைத் தட்டையாக்குகின்றன. இது போன்ற சக்திவாய்ந்த குண்டுகளோடு, மனிதர்களுக்கு எதிரான பல்வகைப்பட்ட குண்டுகளும் வீசப்படுகின்றன. ஒரு வகை குண்டு பிளாஸ்டிக் ஊசிகள் கொண்டது. அவை தசையைக் கிழித்து உள்ளே சென்று உடலில் செருகிக் கொண்டபின், எக்ஸ்-ரே கருவிகளுக்குப் புலப்படுவதில்லை. வேறொன்றைச் சிலந்தி என்று அழைக்கிறார்கள். எறிகுண்டு போன்ற ஒரு சிறு குண்டு, இதன் 30 சென்டிமீட்டர் நீள ஆன்டன்னா கூர்ந்து நோக்கினால் மட்டுமே கண்ணுக்குப் புலப்படுவது. இது தொட்டதும் குண்டு வெடிக்கச் செய்கிறது. பெரிய குண்டுகள் வீசப்பட்ட பகுதிகளில் உயிர் பிழைத்தவர்கள் அங்கு ஏற்கனவே எரிந்து கொண்டிருக்கும் நெருப்பை அணைக்கவோ, ஏற்கனவே காயப்பட்டவர்களின் உதவிக்கோ, ஓடிச் செல்லும்போது அவர்களைச் சிதறடிக்கும் நோக்கத்தில் இந்தக் குண்டுகள் பரவலாக வீசப்படுகின்றன.

இன்று வியட்நாம் புகைப்படங்கள் எதுவும் தினசரிகளில் இல்லை. ஆனால் இன்று காலை அளிக்கப்பட்ட குறிப்புகளுடன் அச்சிடப்பட்டிருக்கக்கூடிய புகைப்படம் ஒன்று இருக்கிறது. 1968ல் ஹூவேயில் Donald McCullin எடுத்த புகைப்படம் அது. ஒரு குழந்தையைக் கையில் ஏந்தி குத்துக்காலிட்டு அமர்ந்திருக்கும் முதியவர் ஒருவரின் படம் அது. அவர்கள் இருவர் உடலிலும் கருப்பு-வெள்ளை புகைப்படங்களுக்கே உரிய கருப்பு ரத்தம் ஏராளமாய் வழிந்து கொண்டிருக்கிறது.

கடந்த ஓராண்டாய், பரவலாய் விற்பனையாகும் ஒரு சில செய்தித்தாள்கள் போர் புகைப்படங்களை அச்சிடுவது சாதாரண விஷயமாகி இருக்கிறது. இவை மிகுந்த அதிர்ச்சியளிக்கக்கூடியவை என்று இதற்கு முற்பட்ட காலத்தில் இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கும். தம் வாசகர்கள் பெருமளவில் போரின் கொடூரம் குறித்து இப்போது விழிப்புணர்வு அடைந்து விட்டனர் என்பதையும் அவர்கள் உண்மையைக் காண விரும்புகிறார்கள் என்பதையும் இந்தச் செய்தித்தாள்கள் உணர்ந்து விட்டன என்ற வாதத்தால் இந்த மாற்றத்தை விளக்க முடியும். அதற்கு மாறாய், வன்முறையைச் சித்தரிக்கும் காட்சிகள் அவர்களது வாசகர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை என்று இந்தச் செய்தித்தாள்கள் நினைக்கின்றன என்றும் மேலும் பரபரப்பான வன்முறைக் காட்சிகளை அச்சிடுவதில் அவை போட்டியிடுகின்றன என்றும் வாதிட முடியும்.

முதல் கருத்தில் தீவிர லட்சியவாதம் வெளிப்படுகிறது. இரண்டாம் கருத்து வெளிப்படையாகவே நம்பிக்கை வறட்சியை உணர்த்துகிறது. அபூர்வமான சில சமயங்கள் தவிர, போரின் வன்முறையைச் சித்தரிக்கும் புகைப்படங்கள் ஒரு காலத்தில் நினைத்துக் கொண்டிருந்த அளவு தாக்கம் ஏற்படுத்துவதாய் இல்லை என்பதால்தான் இன்றைய செய்தித்தாள்கள் அவற்றை வெளியிடுகின்றன. வியட்நாம் அல்லது வட அயர்லாந்து குறித்து அதிர்ச்சியளிக்கும் புகைப்படங்களை சண்டே டைம்ஸ் போன்ற ஒரு தினசரி தொடர்ந்து பிரசுரித்து வருகிறது. ஆனால், அதே நேரம் அந்த வன்முறைக்குக் காரணமாய் உள்ள கொள்கைகளுக்கு அரசியல் ஆதரவும் அளித்து வருகிறது. இதனால்தான் நாம் இந்தக் கேள்வி எழுப்ப வேண்டும்: இப்படிப்பட்ட புகைப்படங்களின் தாக்கம் என்ன?

அரசியல் கோட்பாடு, மரணம் குறித்த புள்ளிவிவரங்கள் மற்றும் செய்தி அறிக்கைகளுக்குரிய அருவ கருத்து நிலையின் பின்னணியில் உள்ள யதார்த்தத்தை, அனுபவ யதார்த்தத்தை, அதிர்ச்சியளிக்கும் வகையில் இந்தப் புகைப்படங்கள் நினைவுறுத்துகின்றன என்று பலர் வாதிடக்கூடும். நாம் எதைக் காண மறுக்கிறோமோ, எதை மறக்க விரும்புகிறோமோ அதை மறைத்து விரிக்கப்பட்ட கருந்திரையில் இப்படிப்பட்ட புகைப்படங்கள் அச்சிடப்படுகின்றன என்றும் அவர்கள் சொல்லக்கூடும். அவர்களைப் பொறுத்தவரை, மக்கல்லின் நாம் மூடிக் கொள்ள முடியாத விழியாய் விளங்குகிறார். ஆனால் இந்தப் புகைப்படங்கள் நம்மை காணச் செய்வது என்ன?

அவை நம்மைப் பாதியில் கைவிடுகின்றன. இவற்றுக்குப் பொருந்தக்கூடிய மிகச் சரியான உரிச்சொல், உறையச் செய்கின்றன, என்பதுதான். அவை நம்மைச் சிறைப்படுத்துகின்றன. (அவற்றைக் கண்டு கொள்ளாது கடந்து செல்பவர்கள் இருப்பதை அறிவேன், ஆனால் அவர்களைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை). நாம் அவற்றைக் காணும்போது, மாற்றாரின் துயர கணம் நம்மை விழுங்கிக் கொள்கிறது. விரக்தி அல்லது சீற்றம் நம்மை நிறைக்கிறது. பிறரின் துயரத்தில் சிறிதை விரக்தி எடுத்துக் கொள்கிறது, எந்தப் பயனுமில்லாமல். சீற்றம் செயல் புரியத் தூண்டுகிறது. புகைப்படத்தின் கணத்திலிருந்து மீண்டு நம் வாழ்வினுள் திரும்ப முயற்சிக்கிறோம். அவ்வாறு செய்கையில் நாம் ஒரு வேறுபாட்டை எதிர்கொள்கிறோம். இந்த வேறுபாடு , எதை இப்போது கண்ணுற்றோமோ, அதற்குத் தக்க எதிர்வினையொன்றை நம்மால் நிகழ்த்தவே முடியாது என்று நாம் நினைக்கச் செய்கிறது.

மக்கல்லினின் முத்திரை தாங்கிய புகைப்படங்கள் திடீரென்று தாக்கும் வேதனைக் கணங்களைப் பதிவு செய்கின்றன- ஒரு பயங்கரம், காயப்படுதல், மரணம், துக்கத்தின் ஓலம். உண்மையில் இக்கணங்கள் சாதாரண காலத்தின் கதியிலிருந்து முற்றிலும் முறிந்தவை. இக்கணங்கள் சாத்தியம் என்ற உணர்வும் அவற்றின் எதிர்பார்ப்பும்தான் பிற அனைத்து வகை அனுபவ காலத்திலிருந்தும் போர்முனையில் தோன்றும் ‘காலத்தை’ வேறுபடுத்துகின்றன. வேதனைக் கண அனுபவம் தன்னை எவ்வளவு வன்மையாய்த் தனிமைப்படுத்திக் கொள்கிறதோ, அத்தனை வன்முறையோடு காமிராவும் அந்த வேதனையின் கணத்தை தனிமைப்படுத்துகிறது. ட்ரிக்கர், என்ற சொல், துப்பாக்கிக்கும் காமிராவுக்கும் பயன்படுத்தப்படும்போது, முழுமையாய் இயந்திர நிலை என்பதோடு நில்லாத ஒரு ஒப்புமையைப் பிரதிபலிக்கிறது. காமிராவால் கைப்பற்றப்பட்ட பிம்பம் இரட்டிப்பு வன்முறை இழைப்பது. இரு வன்முறைகளும் ஒரே வேறுபாட்டை வலுப்படுத்துகின்றன: புகைப்படம் எடுக்கப்பட்ட கணத்துக்கும் பிறவற்றுக்கும் இடையிலுள்ள வேறுபாட்டை.

புகைப்படத்தில் பதிவு செய்யப்பட்ட கணத்திலிருந்து நம் வாழ்வுக்குத் திரும்புகையில் நமக்கு அந்த உணர்வு இருப்பதில்லை; இந்த அறுபடல் நம் பொறுப்பு என்று நினைத்துக் கொள்கிறோம். ஆனால் உண்மையில் புகைப்படம் எடுக்கப்பட்ட கணத்துக்கு நாம் எப்படிப்பட்ட எதிர்வினையாற்றினாலும் அது போதாது என்றே உணரப்படும். புகைப்படம் எடுக்கப்பட்ட சூழலில் இருப்பவர்கள், இறந்து கொண்டிருப்பவர்களின் கரங்களைப் பற்றிக் கொண்டிருப்பவர்கள் அல்லது காயத்தில் வழியும் இரத்தத்தைக் கட்டு போட்டு நிறுத்திக் கொண்டிருப்பவர்கள், அவர்கள் நாம் பார்த்தது போல் அக்கணத்தைக் காண்பதில்லை. அவர்களது எதிர்வினை முற்றிலும் வேறு தளத்தில் உள்ளது. அப்படிப்பட்ட கணத்தை தீவிர கவனத்துடன் கண்டபின் வலுவானவர்களாகத் திரும்புவது யாருக்கும் சாத்தியமில்லை. மக்கல்லின், அவரது ‘கவனம்’ ஆபத்தானது மட்டுமில்லை, ஈடுபாடு கொண்டதும்கூட. அவர் ஒரு புகைப்படத்தின் கீழ் கசப்புணர்வுடன் இப்படி எழுதுகிறார்: “ஒரு டூத்பிரஷ் போல்தான் காமிராவைப் பயன்படுத்துகிறேன். அது வேலையைச் செய்கிறது”.

போர்ப் புகைப்படத்தின் முரண்பாடுகள் இப்போது வெளிப்படையாய் புலப்படுகின்றன. அதன் நோக்கம் அக்கறையுணர்வை எழுப்புவதுதான் என்று பொதுவாக ஒரு எண்ணம் உண்டு. அதன் மிகத் தீவிர உதாரணங்கள் – மக்கல்லின் புகைப்படங்கள் பலவற்றில் உள்ளது போல்- நம்மைக் கட்டாயப்படுத்தி அதிகபட்ச அக்கறையுணர்வைத் தூண்டும் நோக்கத்தில் வேதனைக் கணங்களைக் காட்டுகின்றன. அப்படிப்பட்ட கணங்கள், புகைப்படம் எடுக்கப்பட்டிருந்தாலும் சரி எடுக்கப்படாவிட்டாலும் சரி, பிற அனைத்து கணங்களில் இருந்தும் துண்டிக்கப்பட்டவை. அவை தாமாய்த் தனித்திருக்கின்றன. ஆனால் அந்தப் புகைப்படத்தில் உறைந்த வாசகன் இந்த அறுபடலைத் தன் தனிப்பட்ட அறக் குறையாய் உணரக்கூடும். இந்த உணர்வு எழுந்ததும் அவனது அதிர்ச்சியுணர்வும்கூட கலைகிறது. தன் அறக் குறையேகூட போரில் நிகழ்த்தப்படும் குற்றங்கள் அளவுக்கு அவனுக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடும். தன் போதாமையை மிகவும் பழக்கப்பட்ட உணர்வாய் எடுத்துக் கொண்டு அவன் அலட்சியப்படுதலாம். அல்லது, அதற்கு ஒரு பரிகாரம் தேட அவன் நினைக்கலாம்- அதன் மிகத் தூய்மையான உதாரணம் ஆக்ஸ்ஃபாம் அல்லது யூனிசெஃப் அமைப்புகளுக்கு அவன் நன்கொடை அளிப்பதாக இருக்கும்.

ஆனால் இந்த இரு இடங்களிலும் அந்தக் கணம் உருவாகக் காரணமாக இருந்தது போர் என்ற விஷயம்தான் என்பதன் அரசியல், நடைமுறையில் சுத்திகரிக்கப்படுகிறது. புகைப்படம் மானுடப் பொதுநிலையின் ஆதாரமாகிறது. அது எவரையும் குற்றம் சாட்டாமல் அனைவரையும் குற்றம் சாட்டுகிறது. புகைப்படம் எடுக்கப்பட்ட வேதனைக் கணத்தை எதிர்கொள்ளுதல் அதைவிட விரிவான, உடனடி தேவையான ஒரு எதிர்கொள்ளலுக்கு திரை போர்த்தக்கூடும். பொதுவாக நமக்குக் காட்டப்படும் போர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ நம் பெயரில் மேற்கொள்ளப்படுகின்றன. நமக்கு எது காட்டப்படுகிறதோ அது நம்மை பதைக்கச் செய்கிறது. நாம் அடுத்து செய்ய வேண்டியது, நமக்கு அரசியல் சுதந்திரம் இல்லை என்பதை எதிர்கொள்வதாக இருக்க வேண்டும். நம் பெயரில் போர்கள் மேற்கொள்ளப்படுவதைத் தீர்மானமாக பாதிக்கும் வகையில் நமக்கு எந்த ஒரு சட்டப்பூர்வமான வாய்ப்பையும் தற்போது நிலவும் அரசியல் அமைப்புகள் வழங்குவதில்லை. இதை உணர்ந்து அதற்குத் தக்க வகையில் செயல்படுவது ஒன்றுதான் புகைப்படம் நமக்கு எதைக் காட்டுகிறதோ அதற்குத் தக்க வகையில் எதிர்வினை ஆற்றுவதாக இருக்கும். ஆனால் இந்த உண்மையை நாம் உணர்வதற்கு எதிராக புகைப்படம் எடுக்கப்பட்ட கணத்தின் இரட்டை வன்முறை இயங்குகிறது. இதனால்தான் அவற்றைப் பின்விளைவுகள் குறித்த எந்த அச்சமும் இல்லாமல் அச்சிட முடிகிறது.

(photo credit – Traces of the Real)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.