லாப்டாப் கொண்டு உங்கள் கார்களைத் தானோட்டிக் கார்களாக்கலாமா?

ஊடகங்கள், கார்த் தொழில் விற்பனையாளர்கள் மற்றும் பல முறைகளில் நுகர்வோர் இந்தப் புதிய தொழில்நுட்ப புரிதலில் குழப்பமடைந்திருப்பது இயற்கையே. இந்தப் பகுதியில், சில குழப்பங்களைத் தெளிவாக்க முயற்சிப்போம்.

தானோட்டிக் கார்கள் அனைத்தும் மின்சாரத்தில் வேலை செய்யும் கார்கள்

தானோட்டிக் கார்கள் மின்சாரக் கார்களாக இருக்க வேண்டியதில்லை. பெட்ரோல் மற்றும் டீசல் கார்களும் தானோட்டிக் கார்களாக உருவாக்கலாம். அடிப்படை இயக்கம் மின்சார மோட்டார், அல்லது தொல் எச்ச எரிபொருள் எஞ்சின் (fossil fuel engine) எதுவாக இருந்தாலும் சரி. மெர்சிடிஸ், பி.எம்.ட்பிள்யூ. ஜி.எம்., ஃபோர்டு அனைவரும் தங்களுடைய தானோட்டிக் கார் தொல் எச்ச எரிபொருள் எஞ்சின் கொண்டு இயங்கும் என்றே சொல்லியுள்ளார்கள். கூகிளின் தானோட்டிக் கார்கள் இதுவரை பெட்ரோல் அல்லது ஹைப்ரிட் கார்கள். இந்தத் துறையில், மின்சாரக் கார் தயாரிப்பாளர் டெஸ்லா மட்டுமே. டெஸ்லா, மின்சாரக் கார் தயாரிக்கும் நிறுவனம். அடுத்தக் கட்டமாக தானோட்டிக் கார்களைத் தயாரிக்க முயன்று வருகிறார்கள். இதைத் தவிர, இவர் இரண்டு விஷயம் சம்பந்தமற்றவை.

 

தானோட்டிக் கார்களை வாங்கி எளிதில் இந்தியா போன்ற நாடுகளில் பயன்படுத்தலாம்

கேட்க நன்றாக உள்ளது. ஆனால், நடைமுறையில் பல சிக்கல்கள் உள்ளன. தானோட்டிக் கார்களுக்கு மிக முக்கியமான விஷயங்கள்;

  • வரை பாதைகள் சரியாக நிறுவப்பட வேண்டும்
  • போக்குவரத்து,  வரை பாதைகள் மூலமாக நடக்க வேண்டும்
  • போக்குவரத்துக் குறிகைகள் ஒவ்வொரு சாலையிலும் சரியாக நிறுவப்பட வேண்டும்
  • போக்குவரத்துச் சாலைகளில் வேக எல்லைகள் நிர்ணயிக்கப்பட வேண்டும்

படிக்கும் பலருக்குச் சற்றுக் கசப்பாக இருக்கக்கூடும். அதிகக் கம்பித் தொலைப்பேசிகள் சார்ந்த கட்டமைப்பு பெரிதாக இல்லாமல், செல்பேசி தொடர்பியலில் மேற்கத்திய நாடுகளை விட முன்னேறிய இந்தியா ஏன் இந்தத் தொழில்நுட்பத்திலும் முன்னேற முடியாது? விஷயம் தொழில்நுட்பம் சார்ந்தது அல்ல; போக்குவரத்து ஒழுங்கு சார்ந்தது. அத்துடன், பல தரப்பட்ட போக்குவரத்து அமைப்புகள் (ஆட்டோ, பைக், ஸ்கூட்டர், மாட்டுவண்டி, ரிக்‌ஷா) ஒரே சாலையைப் பயன்படுத்தும் இந்தியாவில், கணினிகள் குழப்பமடைய நிறைய வாய்ப்புகள் உள்ளன.

பல ஆண்டுகள் மேற்குலகில் சோதனைக்குப் பின்னரே இந்தியா போன்ற வளரும் நாடுகளில் சோதிக்க முடியும். அப்படியே இந்தத் தொழில்நுட்பம் வந்தாலும், இந்தியாவில், இந்த ஒழுங்கு ஓரளவு உள்ள நெடுஞ்சாலைகளில் மட்டுமே பயன்படும். ஒரு இந்திய முயற்சியின் விடியோ இங்கே;

 

தானோட்டிக் கார்கள் விடியோ காமிரா மூலம் நாம் பார்ப்பது போலப் பார்த்துச் செயல்படுகின்றன

நாம் பார்ப்பது முப்பரிமாணத்தில், வண்ணக் காட்சிகள். ஆனால், வாகனத்தைச் செலுத்த இத்தனை சிக்கலானக் காட்சித் தேவையில்லை. ஒரு காரைச் செலுத்தும் கணினிக்கு முக்கியமான தேவை, சுற்றிலும் உள்ள வாகனங்களின் அளவுகள், அவற்றின் வேகம், பயணிக்கும் திசை, மற்றும், வரைபாதை. மற்ற விஷயங்கள் தேவையில்லாத மனித கவனச்சிதைவுகள்.

சில விஷயங்களைக் காமிராவை மட்டுமே நம்பியிருக்க முடியாது. தொலை தூரத்தில் உள்ள வாகனங்கள் பற்றிய கணிப்புக்கு லேசரும் (laser rangefinder), மிக அருகில் இருக்கும் வாகனங்கள் பற்றிய கணிப்புக்குக் கேளா ஒலியும் (ultrasonic) , நடுவாந்திர தூரத்திற்கு, காமிராவும் தானோட்டிக் கார்கள் பயன்படுத்துகின்றன.

தானோட்டிக் கார்களை எளிதில் இணைய விஷமிகள் கடத்திப் பயணிகளுக்கு ஆபத்து விளைவிக்கலாம்

’கருவிகளின் இணையம்’, கட்டுரைத் தொடரில், பாதுகாப்பு அபாயங்கள் பற்றி விரிவாகப் பார்த்தோம். தானோட்டிக் கார்களில் இணைய விஷமிகள் கையில் சிக்கிப் பயணிகளுக்கு ஆபத்து விளைவிக்கலாம் என்பது ஒரு நியாயமான பயம். ஆனால், இன்றைய கார் தயாரிப்பாளர்கள், ஆரம்பச் சறுக்கல்களிலிருந்து விடுபடத் தொடங்கி விட்டார்கள். இவர்களுக்கும் இந்தச் சவால் புரிகிறது. நிறையத் தானியக்கம் உள்ள கார்களில் அதிக கவனமின்றி அவசரமாகச் சந்தைக்குக் கொண்டு வந்ததன் விளைவு இவ்வகை இணையத் தாக்கல்கள்.

உஷாராகிவிட்ட தயாரிப்பாளர்கள் இணையத் தொடர்புகளில் தகுந்த பாதுகாப்பு அம்சங்களைச் சேர்ப்பார்கள் என்று நம்ப நிறைய வாய்ப்பு உள்ளது. பொது மக்களின், தானோட்டிக் கார்களைப் பற்றிய பயங்களில் இதுவும் முக்கியமான ஒன்று.

டெக்னிகலாகச் சொல்ல வேண்டுமானால், குறிமறையாக்கத்திற்கு வேண்டிய செயலி சக்தி இவ்வகை கார்களில் ஏராளம். சொல்லப் போனால், நம்முடைய அன்றாட கணினிகளை விட மிகவும் சக்தி வாய்ந்த கணினிகள் இவ்வகைக் கார்களை இயக்குகின்றன. செயலியை சாக்காகச் சொல்லி எந்தத் தயாரிப்பாளரும் பாதுகாப்பு விஷயத்தில் பின்வாங்க முடியாது.

 

நமது அன்றாட லாப்டாப் கணினியில் மென்பொருளைக் கொண்டு கார்களைத் தானோட்டிக் கார்கள் ஆக்கிவிடலாம்.

தொழில்நுட்பப் பகுதியில் முக்கியமான ஒரு விஷயம் இந்தத் தொழில்நுட்பத்தில், மிகவும் அவசியமானது சக்தி வாய்ந்த ஒப்பிணைவுக் கணிமை தேவை (parallel computing requirement) என்பது. நம்முடைய சாதாரணக் கணினிகள் வேலைக்கு ஆகாது. மேலும், நாம் திறன்பேசியில் தரவிறக்கம் செய்யும் சாதாரண நிரல் அல்ல இது. பல்லாயிரம் மணி நேரப் பயிற்சி பெற்றச் செயற்கை நரம்பணு வலையமைப்புகள் பாதுகாப்பான பயணத்திற்கு அவசியம்.

இப்படி யாராவது சொன்னால், அங்கிருந்து தயவு செய்து விலகுங்கள்.

 

கருவிக் கூட்டு (sensor kit) ஒன்று கிடைக்கிறது. இதை எளிதில் காருடன் இணைத்தால், சாதாரணக் கார், தானோட்டிக் காராக மாறிவிடும்.

இது எதிர்காலத்தில் சாத்தியமாக இருக்கலாம். ஆனால், இவ்வகைக் கருவிக்கூட்டுக்கள் தானோட்டிக் கார்களின் ஒரு சின்னப் பகுதி மட்டுமே. இவ்வகை கருவிக் கூட்டுக்கள் ஓரளவு தானியக்கத்திற்குப் பயன்படலாம். இன்றைய தொழில்நுட்ப அளவை வைத்துப் பார்த்தால், இது ஒரு மிகவும் அபாயமான முயற்சி. தயவு செய்து தவிர்க்கப் பாருங்கள்.

 

எந்தக் காரை வேண்டுமானாலும் தானோட்டிக் காராக்கி விடலாம். எல்லாம் மென்பொருள் விஷயம்தான்.

நிச்சயமாக முடியாது. ஒவ்வொரு தானோட்டிக் காரின் வடிவமைப்பிலும், அடிப்படையில் ஒரு வாகன ப்ளாட்ஃபார்ம் உள்ளது. அடிப்படை வாகனம் கணினியின் ஆணைப்படி சில அடிப்படை விஷயங்களைத் தானாகவே செய்ய வேண்டும். உதாரணத்திற்கு, வேகத்தைக் கூட்டுவது, குறைப்பது, நிற்பது, போன்ற அடிப்படை விஷயங்கள் அவசியம் தேவை. இவ்வகை வசதிகள் இல்லாத கார்களில், எந்த மென்பொருளைக் கொண்டும் ஒரு வாதத்திற்குக் கூடத் தானோட்டிக் காராக மாற்ற முடியாது.

 

என்னுடைய காரில் பல தானோட்டி விஷயங்கள் உள்ளன. தானே நிறுத்தும், முன்னே செல்லும் கார் பக்கத்தில் வந்தால் தானே பிரேக் செய்யும், வரை பாதையிலிருந்து சறுக்கினால், தானே வரைபாதைக்குள் கொண்டு வரும். இதுவும் தானோட்டிக் கார்தான்,

இதைப் பற்றி முன்னமே சொல்லிவிட்டாலும், சற்று இங்கு விளக்க முயற்சிப்போம்.

இங்கு சொல்லப்படும் அம்சங்கள் தானியக்க விஷயங்கள். இவ்வகை அம்சங்களுக்கு, அவசியம் ஒரு ஓட்டுனர் காரில் தேவை. அத்துடன், மிக குறைந்த நேரத்திற்கே இவ்வகைத் தானியக்கம் உதவுகிறது. தானோட்டிக் கார் என்பது, ஓட்டுனர் எப்பொழுதும் தேவையற்ற வாகனங்கள்.

இக்கட்டுரை எழுதும் நேரத்தில் (நவம்பர் 2016), சாலைகளில் உள்ள ஒரே தானோட்டிக் கார் டெஸ்லா. மற்ற கார்கள் சோதனையில் உள்ளன. இன்றைய டெஸ்லாவும் அதன் ஆட்டோபைலட் வசதி வெறும் 8 நிமிடங்களுக்கு மட்டும்தான். இதற்கு இன்றைய சாலைச் சட்டங்கள் அனுமதிப்பதில்லை. இன்னும் 3 முதல் 5 வருடங்களில் சட்டங்கள் மாறினால், தொழில்நுட்பம் வளர்ந்தால், உண்மையான தானோட்டிக் கார்கள் சில பகுதிகளில் இயங்கலாம்.

இன்று (2016/2017) உணமையான தானோட்டிக் கார் என்பது பொதுச் சாலைகளில் சோதனைக் கார்கள் மட்டுமே.

 

தானோட்டிக் கார்களின் முதல் மாடல்கள் நுகர்வோருக்காகத் தயாரிக்கப்படும்.

தானோட்டிக் கார்களைப் பற்றிய மிகப் பெரிய தவறான கருத்து இதுவாகத்தான் இருக்கும். சாதாரணர்களுக்கு இந்தத் தொழில்நுட்பத்தில் முழுவதும் நம்பிக்கை வர பல்லாண்டுகள் ஆகும். அப்படியே சற்று நம்பிக்கை வந்தாலும், ‘நான் ஒன்றும் இவர்களது சோதனை எலியல்ல. எனக்கு என்ன அவசரம். எந்தச் சந்தேகமும் இல்லாமல் நிரூபிக்கப்படும் வரை காத்திருக்கத் தயார். அத்துடன், ஒரு எந்திரம் என்னுடைய காரை இயக்குவது என்பது சீரணிக்க முடியாத விஷயம்’ – இதுவே பலரின் வாதம்.

ஆரம்பப் பயன்பாட்டாளர்கள் பெரும்பாலும், இரு தரப்பினர் என்று நம்பப்படுகிறது. முதல் வகை இணையம் மூலம் வாகனங்களை வாடகைக்கு விடும் யூபர் போன்ற நிறுவனங்கள். இவர்கள் இந்தத் தொழில்நுட்பத்தை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்ல உத்வுவார்கள் என்று நம்பப்படுகிறது. யூபரின் மிகப் பெரிய செலவு அம்சம் கார்களை இயக்கும் ஓட்டுனர்கள்.

இன்னொரு ஆரம்ப பயன்பாட்டாளர், வட அமெரிக்கா மற்றும் யூரோப்பில் லாரிகளை இயக்கும் நிறுவனங்கள். பெரும்பாலும், நெடுஞ்சாலைகளில் சரக்குகளை ஏற்றிச் செல்லும் லாரிகள் இன்று சரியாகச் சரக்கைச் சேர்ப்பிக்க ஓட்டுனர்களை நம்பியுள்ளது. வட அமெரிக்கா போன்ற ராட்சச நிலப்பரப்பில், லாரிகள் பல நாட்கள் பயணிக்கின்றன. ஃப்ளாரிடாவில் விளையும் ஆரஞ்சு பழம் தாங்கிய லாரி டென்வர் போன்ற இடங்களை அடைய 3 நாட்கள் ஆகும். அதைவிட மோசம், கனடாவின் பிரிடிஷ் கொலம்பியாவில் விளையும் பழங்கள் ஹாலிஃபாக்ஸ் சென்றடைய 10 நாட்கள் ஆகும். இதில் சில நாட்கள் ஒட்டுனர்களின் ஓய்வுக்காக செல்கிறது. இங்குதான் தானோட்டி வாகனங்கள் மிகவும் பயனுக்கு வரும், ஓய்வு இல்லாமல் இயக்கவல்ல எந்திரங்களாக லாரிகள் மாறி விடும். இவ்வகை லாரி நிறுவனங்கள் செயல்திறனின் பெரிய முன்னேற்றத்தை எதிர்பார்க்கின்றன.

உடனே, உலகம் முழுவதும் அடுத்த வருடம் இது நடைபெறும் என்று சொல்வதற்கில்லை. அதிகப் பனியில்லாத, ஏராளமான மழையற்ற பகுதிகளில் முதலில் இவை சோதிக்கப்படும். நாளடைவில் மற்ற இடங்களுக்கும் பறவலாம்.

நுகர்வோர் முதலில் இவ்வகைக் கார்களை அதிகமாக வாங்குவார்கள் என்று சொல்வதற்கில்லை.

 

தானோட்டிக் கார்கள் நமது வியாபாரக் கணினிகள் போல முடிவெடுக்கும் கணினிகள். எந்த வாகனம் எப்படி வருகிறது என்று இப்படி முடிவெடுக்கிறது.

தொழில்நுட்பப் பகுதிகளில், செயற்கை நரம்பணு வலையமைப்புகள் பற்றி விளக்கியிருந்தேன்.  மிக முக்கியமான விஷயம் இவை லாஜிக் மூலம் இயங்குவதில்லை. வியாபாரக் கணினிகளின் மென்பொருள் லாஜிக்கை மையமாகக் கொண்டவை.

இவை பெரும்பாலும், ‘இது நடந்தால், இது செய்யவும்’ என்ற சட்டங்களுக்கு உட்பட்டு இயங்குபவை. வாடிக்கையாளர் 1000 ரூபாய்க்கு மேல் வாங்கினால், 2% தள்ளுபடியைக் கணக்கிடவும் என்று நிரலப்படுவது வியாபார உலகில் சகஜம். ஒரு பிரச்னையை மட்டுமே ஒரு நேரத்தில் தீர்க்கும் சக்தி கொண்டவை இவ்வகை நிரல்கள். இன்றைய கணினிகள், பல்வேறு நிரல்களை ஒரே நேரத்தில் இயக்குவது போன்ற மாயையை ஏற்படுத்தினாலும், (இவை உள்ளுக்குள், ஒன்றன் பின் ஒன்றைத்தான் செய்கின்றன – இவற்றின் வேகம் பல நிரல்களை ஒரே நேரத்தில் இயக்குவதைப் போன்று தோற்றுவிக்கிறது), ஒரே நேரத்தில் ஒரு பிரச்னைதான்.

ஒரு வியாபாரக் கணினி நிரல் முன் 40 வாடிக்கையாளர்கள் பல்வேறு ரூபாய்களுக்கு பொருட்களை வாங்கி வந்தால், என்ன செய்யும் லாஜிக்? இவ்வகைப் புதிய பிரச்னைகளுக்குப் புதிய அணுகுமுறைகள் தேவை. வியாபாரத்தில் உள்ளது போல, பல கெளண்டர்களைத் திறந்து சமாளிக்க முடியாது. கெளண்டர்கள் பல இருந்தாலும், ஒவ்வொரு கெளண்டரும் ஒரு நேரத்தில் ஒரு பிரச்னையை மட்டுமே தீர்க்கும்.

 

ஒரு கார்த் தயாரிப்பாளர் தானோட்டிக் காரை டெமோ செய்தால், அடுத்த வருஷம் தானோட்டிக் காரை அறிமுகப் படுத்தும் என்று அர்த்தம்.

காரின் சில வெளிபுற விஷயங்கள், மற்றும் சின்ன சின்ன மின்னணு ஜிகினா விஷயங்களை நமக்குக் காட்டியே கார்த் தயாரிப்பாளர்கள் உண்மையான முன்னேற்றம் எதுவென்று மறக்கடிப்பதில் வெற்றி கண்டுள்ளார்கள். டெமோ தானோட்டிக் கார் அடுத்த வருடம் ஷோரூமிற்கு வர இது ஒன்றும் சின்ன முன்னேற்றம் அல்ல.

முக்கியமாக, இவ்வகை தானோட்டி கார்கள் நிறைய நகர, புற நகர, நெடுஞ்சாலை, மலைப்பகுதி மற்றும் வித விதமான சாலை குறிகைகள் எல்லாவற்றிலும் தேர்ச்சி கொடுக்கப்பட வேண்டும். கூகிள் 7 ஆண்டு காலமாகத் தன்னுடைய தானோட்டிக் கார்களைப் பயிற்சி தருவதற்கு உண்மையான காரணம் பயிற்சி. எங்கு சிக்கலான சிக்னல் வரும், எங்கு சைக்கிள் வரும், எங்கு பாதசாரி வருவார் என்று திட்டவட்டமாகச் சொல்ல முடியாது. சாலைகளில் உள்ள தடங்கல்களைச் சமாளிப்பதற்கும் பயிற்சித் தேவை.

நேற்று ஓட்டுனர் பயிற்சிக்குச் சென்ற மகனிடம் புதிய காரை யாராவது ஒப்படைப்பாளர்களா?

 

தானோட்டிக் கார்களுக்குத் தனியாக பிரத்யேக சாலைகள் உருவாக்க வேண்டும்

சில நகர அரசாங்கங்கள் இவ்வறு சிந்திப்பது உண்மை. பெரும்பாலும்,ஊபர் போன்ற நிறுவனங்கள் இதன் முதல் பயன்பாட்டாளர்கள் என்று நம்பப்படுவதால், இது போன்ற நிறுவனங்கள் சாலைப் பராமரிப்பிற்கு, சவாரி ஒன்றுக்கு இத்தனை கட்டணம் என்று அளிப்பார்கள் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடே இது. ஆனால், இதில் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை.

தமிழ்ப் பரிந்துரை

தமிழ்ச் சொற்கள் எல்லோருக்கும் புரிய வேண்டும் என்று சில ஆங்கிலச் சொற்களை கட்டுரையில் பயன்படுத்தியுள்ளேன். கார் சம்பந்தமான பல தொழில்நுட்பச் சொற்கள் தமிழில் அதிகம் புழக்கத்தில் இல்லை. உதாரணம், ஆக்ஸிலரேட்டர் மற்றும் ப்ரேக். இதை தமிழில் மொழிபெயர்த்தால், நம்மில் பலருக்கும் புரியாது. இதனால், இது போன்ற வழக்குச் சொற்களை அப்படியே பயன்படுத்தியுள்ளேன். சில புதிய சொற்களுக்கு நிகரான சில தமிழ்ச் சொற்களை இங்கு பரிசீலனைக்கென முன்வைக்கிறேன்

ஆங்கிலச் சொல் தமிழ்ப் பரிந்துரை
Fossil fuel engine தொல் எச்ச எரிபொருள் எஞ்சின்
Ultrasonic கேளா ஒலியும்
Parallel computing requirement ஒப்பிணைவுக் கணிமை தேவை
Sensor kit கருவிக் கூட்டு

 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.