இந்த வருட மழை
இது என்னதிது
மழைக் காலத்தில்
மழையைப் பற்றிய ப்ரக்ஞை
இல்லாத இருப்பு!
வீட்டிலிருந்து இறங்கும்போது மழை..
அப்போதும் குடையைப்
பற்றிய நினைப்பு.
இங்கங்கென்று
செல்லும் இடமெல்லாம்
மழை தொடங்கி முடிகிறது.
அப்போதும் செல்லும் இடம் பற்றியே நினைப்பு.
துணிகள் உலரவில்லையென்றால் மட்டும்
மழை பெய்ததா என்று சந்தேகம்.
நகரும்போது, ஜன்னலோரத்தில்
மரங்கள் குதித்து மறைகின்றன.
நான் நகர்ந்து நகர்ந்து
அடுத்த மழைக்கே சென்றுவிடுவேன் போலிருக்கிறது.
மழை முடிந்த ஈரத் தரை
மெல்லிய புன்னகை போல
உலர்கிறது.
~oOo~
பாதை
பாதை என
தனியாக ஒன்று
எங்குமில்லை..
என் ஒவ்வொரு காலடிக்கும்
முன்பு கைப்பிடி கருங்கற்களை
நானே நிரப்பியப்படி செல்கிறேன்
இதற்கு
வெறும் தரையிலேயே
நடந்து விடலாம் தான் ..
நடக்கின்ற தைரியம் முளைப்பதே
பாதையென கொள்வதில் என்பதனால்
கற்களை பாதையாக்கிய பயணம்
தடம் பதித்து தெரிவிக்கவோ
கம்பள வரவேப்பு ஏற்கவோ அல்ல.
பாதை போட்டு திரிந்தாலாவது
அடைகிற இடம் புலப்படலாம்..
அருகிலிருப்பவரின் பாதைகள்
அக்கரைகளாக அச்சுறுத்துவதில்
இடைவெளி வெறுந்தரைகள்
ஆறாக அரற்றுகிறது
நான் வீசிய ஒவ்வொரு
அங்குல பாதைகள் மட்டுமே
கதை பேசி அழைத்து செல்கிறது
நடு ஆற்றில் விழுந்து விடமாட்டாயென
கைப் பிடித்து..
– சித்ரா
~oOo~
சிட்டுக் குருவியின் பறத்தல்
எனக்கென்ன தெரியும் ஒரு சிட்டுக் குருவியின் பறத்தலைப் பற்றி?
எங்கிருந்தோ ’விசுக்’கென்று குதித்து
காலத்தின்
ஏக போக விளைச்சலில்
ஒரு விநாடியைக் கொத்தி உருவி எடுத்துக் கொண்டு பறந்து போகும்.
தாமதித்திருந்தால்
சிறிது அதைப் பற்றி கேட்டிருக்கலாம்.
தாமதிப்பதில்லை
அது.
அது
அவசரமல்ல.
அது என்னைப் புறக்கணிக்கிறது என்று அர்த்தமல்ல.
அடுத்த விநாடியை
அது காத்திருக்க வைப்பதில்லை.
அடுத்த விநாடி
பூத்து
உதிர்வதற்கு முன்னமேயே
முழுக்க
வாழ்தலின்
தீவிரம்
அது.
முன் குதிக்கும் துள்ளி சிட்டுக் குருவி எதிர்பாராதபடி
மறுபடியும்.
சற்றும் தாமதமில்லை அதன் சிலிர்ப்பில் நான்
மனம் பறிகொடுக்க.
இந்த பதிப்பின் மூன்று கவிதைகளுமே அருமை. நான் ரசித்த சில வரிகளை பகிர விரும்புகிறேன்.
இந்த வருட மழை:-
நான் நகர்ந்து நகர்ந்து
அடுத்த மழைக்கே சென்றுவிடுவேன் போலிருக்கிறது.
அருமையான சிந்தனை
பாதை:-
அருகிலிருப்பவரின் பாதைகள்
அக்கரைகளாக அச்சுறுத்துவதில்
இடைவெளி வெறுந்தரைகள்
ஆறாக அரற்றுகிறது
-அனுபவங்களையும் வெற்றிக்கான காத்திருத்தலையும் படம் போட்டுக் காட்டும் வார்த்தைத் தேர்வு.
சிட்டுக் குருவியின் பறத்தல்
ஒரு விநாடியைக் கொத்தி உருவி எடுத்துக் கொண்டு பறந்து போகும்
-கவிதையின் இந்த வரியை வாசிக்கும் தருணம் இதயத்தில் கொத்தலின் வலி. அருமை.
சிறந்த கவிஞர்களின் தொடர்ந்த பங்கேற்பால் ,சொல்வனத்தின் இப் பகுதி ஒவ்வொரு இதழின் மிகச் சிறந்த பகுதியாகி மிளிர்கிறது. பங்கேற்கும் கவிஞர்களுக்கும்,கவிதைகளைத் தேர்வு செய்யும் குழுவினருக்கும் நன்றி. தொகுப்பாக வெளியிட்டால் பலரும் பயனடைவர்…கோரா