மறுபடியும் ஜென்கின்ஸ்- அதாவது ‘ஒருங்கிணைந்த கட்டமைப்பு’

ஜென்கின்ஸை பற்றிப் பேச வேண்டியது நிறைய இருக்கிறது. கமலஹாசனை வெறும் நடிகர் என்று கடந்துவிடமுடியாது; கண்ணதாசனை சினிமாவில் பாட்டெழுதியவர் என்று ஒற்றைவரியில் சொல்வது நம்முடைய அறியாமையே தவிர வேறில்லை.

ஜென்கின்ஸை, ஒருங்கிணைந்த கட்டமைப்பை தரும் ஒரு பயன்பாடு என்னும் பார்வையைத் தாண்டி வேறு கோணங்களிலும் அணுக வேண்டியிருக்கிறது. முதலில் தொடர்ச்சியான ஒருங்கிணைப்பின் (Continuous Integration) அவசியம் ஏன், அதில் ஜென்கின்ஸின் பங்கு ஆகியன குறித்து விவாதிக்க வேண்டியிருக்கிறது.

ஏன் ஜென்கின்ஸ் என்பதற்கு வெளிப்படையான பதில்கள் உண்டு. ஜென்கின்ஸ், இலவசமாக கிடைக்கிறது. ஆட்டோமேஷன் மேலும் கட்டமைப்பு மேம்பாட்டுத் (automation & configuration management) துறைகளில் அது வெகு பிரபலம்.  அதன் காரணமாகத்தான் சி.ஐ என்னும் Continuous Integration பற்றி பேசும்போது, ஜென்கின்ஸிலிருந்து ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது.

சி.ஐயின்( Continuous Integration) அடிப்படையே ஐ.டி சார்ந்த செயல்பாடுகளை துரிதமாக்குவதுதான். புதுப்புது மாற்றங்கள் வந்து குவியும்போது, அத்தகைய மாற்றங்களை ஒருங்கிணைத்து, உடனடியாக அமலுக்கு கொண்டு வருவது என்பது மிகக் கடினமான, சவாலான பணி. ஏற்கனவே நடைமுறையில் உள்ளவை எந்தவித இடையூறும் இன்றி செயல்பட்டாக வேண்டும். அதே நேரத்தில் புதிய மாற்றங்களையும் அமலுக்கு கொண்டு வந்தாகவேண்டும்.

உதாரணத்திற்கு ஏதாவது ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் செயல்பாட்டை எடுத்துக் கொள்வோம்.  3,4 பேரைக் கொண்டுள்ள திட்டக்கமிஷன் கூடி மாற்றங்களைச் செய்ய முடிவெடுக்கும். அதற்கான ஆரம்பக் கட்ட நடவடிக்கைகளில் 5,6 பேர் சம்பந்தப்பட்டிருப்பார்கள். 7, 8 பேர் இணைந்து செயல்பட்டு மாற்றங்களைக் கொண்டு வந்துவிடுவார்கள். ஆனால், அவையெல்லாம் சரியாகச் செயல்படுமா அல்லது ஏற்கனவே நடைமுறையில் உள்ளவற்றில் ஏதாவது பாதிப்புகள் ஏற்படுத்துமா என்பது குறித்து முழுமையான பார்வையோ, உறுதிப்பாடோ அவர்களிடம் பெறமுடியாது.

மாற்றங்கள் வந்தவுடன் அவற்றைப் பரிசோதித்து, அமலுக்கு கொண்டு வருவதற்குப் பத்து பேர் இருப்பார்கள். (QA, CM & deployment team) இவர்களது பணியே ஒட்டுமொத்த நிறுவனத்தில் மிகமுக்கியமானது. தனித்தனியாகச் செய்யப்படும் மாற்றங்களை ஒருங்கிணைப்பதும், ஏற்கனவே உள்ள நடைமுறைகளைச் சிதைத்துவிடாமல் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவதும் இவர்களது பொறுப்பு.  இதென்ன புதிதா, காலம் காலமாக அனைத்துத் துறைகளிலும் செய்யப்பட்டுவரும் நடைமுறைகள்தானே?  நியாயமான கேள்விதான்.

அப்போதெல்லாம் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மாற்றங்களை அமல்படுத்துவார்கள். இரவும் பகலுமாக நான்கு நாட்கள் கூடிப் பேசுவார்கள்.  ஒரே குழு, பத்து நாட்கள் உட்கார்ந்து நிரல் (coding) எழுதுவார்கள். எழுதியதைச் சரிபார்க்க இன்னொரு பத்து நாட்கள் ஆகிவிடும். போட்டி நிறைந்த இவ்வுலகில் பத்து நாட்கள் என்பது அதிகக் காலம். அதற்குள் வாடிக்கையாளர்களின் தேவையே மாறிப்போய்விடும். காலையில் முடிவெடுத்தால், மறுநாள் காலையில் மாற்றங்களை அமல்படுத்த வேண்டியிருக்கும். போதுமான நேர அவகாசமில்லை என்பதற்காகச் செய்ய வேண்டியவற்றைச் செய்யாமல், அவசர அவசரமாகப் பணியை நிறைவேற்ற முடியாது. குறுகிய காலம் என்பதற்காக நடைமுறைகளை நமக்கேற்றபடி திருத்தியெழுதினால், தரம் குறைந்துவிடும்.

மாற்றங்களை அமல்படுத்த பத்து மணி நேரம் வேண்டுமானால் காத்திருக்கலாம். பத்து நாட்களெல்லாம் காத்திருக்க முடியாது. எப்படித்தான் சமாளிப்பது?  வேறு வழியில்லை. விரைந்து செயல்பட்டாகவேண்டும்.

நிரல் தயாரானதும் குறைவான நேரத்திற்குள் மற்ற செயல்முறைகளை முடித்துவிட்டால், குறைவான கால அவகாசத்தில் இறுதிப் பொருளைப் (deliverable) பார்க்கமுடியும்.  இதனால் உடனுக்குடன் முடிவுகளைப் பெற்று, அதை அலசி ஆராய முடியும்.  எடுத்துக்கொள்ளப்படும் நேரம் (quick turn around time) என்பது ஒவ்வொரு கட்டத்திலும் முக்கியமான விஷயம்.

ஐ.டியில் மட்டுமல்ல உலகளாவிய அனைத்துத் தொழிற் நிறுவனங்களிலுமே இதைத்தான் வலியுறுத்துகிறார்கள். சுழற்சிக் காலம் (cycle time) குறைக்கப்பட்டாக வேண்டும். எல்லாத் துறைகளிலுமே முன்னணிக் காலமும் ( lead time) சுழற்சிக் காலமும் (cycle time) முக்கியமானவை. நிறுவனத்தின் பொருளாதார வலிமையோடு சம்பந்தப்பட்டவை. நிறுவனத்தின் செயல்பாடுகளை முடிவெடுப்பதும் இவையே.

மதிப்பீட்டு காலம்  (lead time) என்பது ஒட்டு மொத்தப் பணியை செய்து முடிக்க நாம் வாடிக்கையாளருக்கு அளித்த இறுதி உறுதி.   இதை நம்மால் குறைக்கவோ, கூட்டவோ முடியாது. வாடிக்கையாளரால் மட்டுமே முடியும்.  ஆனால் சுழற்சிக் காலம் என்பது ஒட்டுமொத்தப் பணியைச் செய்துமுடிக்க நாம் எடுத்துக்கொள்ளும் காலம். சுழற்சிக் காலத்தைப் பொறுத்துத்தான் முன்னணிக் காலத்தை முடிவு செய்யமுடியும். அதற்கு கள யதார்த்தம் கைவசமாக வேண்டும்.

பணியைச் செய்து முடிக்க நிஜமாகவே ஆகும் காலத்தை எந்தவொரு நிறுவனமும் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். அங்குதான் முதல் கோணல் எழும். அதைப் பொறுத்தே பணியின் தலைவிதி அமைகிறது.  சுழற்சிக் காலத்தில் குறுக்கிடும் இடையூறுகளை முன்கூட்டியே கணிக்கத் தெரியவேண்டும். குறைந்தபட்சம் தயாராகவாது இருக்கவேண்டும்.  எதிர்பாராத இடையூறுகளைப் புரிந்து கொள்ளமுடியும். தெரிந்தே செய்யப்படும் தவறுகளைத் தவிர்க்க வழியுண்டா?

சுழற்சிக் காலம் என்பது நியாயப் படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும். குறிப்பாக, மாற்றங்களை அமலுக்குக் கொண்டுவரும் எந்தவொரு நடவடிக்கையையும் (configuration changes, deployment, testing) அதிக காலத்திற்கு நீட்டிக்க முடியாது. அதை எப்படியாவது குறைத்தாக வேண்டும். சுழற்சிக் காலத்தைக் குறைக்கும் எந்தவொரு நிறுவனமும், சவால்களை எதிர்கொள்ளத் தயாராக, வெற்றியின் அடுத்த படிக்கட்டுகளில் நிற்கிறது என்று அர்த்தம்.

சி.ஐ என்பது  இல்லாத காரணத்தால் ஒட்டுமொத்த வளர்ச்சிச் சுழற்சியும் (Systems development cycle) தடுமாறுகிறது.  ஒவ்வொரு கட்டத்திலிருந்தும் இன்னொரு கட்டத்திற்கு கடப்பதற்கு ஏராளமான நேரம் செலவாகிறது. உலகமே துரித கதியில் (agility) இயங்கும்போது அதற்கேற்பத் துரிதமாகச் செயல்பட வேண்டியிருக்கிறது. ஜென்கின்ஸ் இந்த இடைவெளியை இட்டு நிரப்புகிறது.

ஜென்கின்ஸ் தரும் பைப்லைனிலிருந்து (Pipeline) ஆரம்பிப்போம்.

நிரலில் மாற்றங்கள் செய்யப்பட்டதும், ஒட்டுமொத்த நிரல் கோப்பை (Build) உருவாக்கும் பணி ஆரம்பமாகிறது. இந்தப் புள்ளியிலிருந்து ஒட்டுமொத்தப் பணிகளையும் ஒருங்கிணைத்துச் செய்து தருவதுதான் ஜென்கின்ஸின்  பைப்லைன்.

பைப்லைன் என்பது  நிரலை இயக்குவதற்கு தேவையான அனைத்து அடிப்படை சங்கதிகளையும் பெற்றுத்தரும் ஒட்டுமொத்தக் கட்டமைப்பு, திரட்டி (aggregator). இது ஒன்றும் புதிதல்ல. பணி மேலாண்மை (work flow)  என்று காலம் காலமாக நாம் குறிப்பிடும் சொல்தான். ஒட்டுமொத்த வளர்ச்சிச் சுழற்சியில் (Systems development cycle), சின்னச் சின்ன பணிகளில் ஆரம்பித்து பெரிய பணிகள் வரை அனைத்தையும் ஒவ்வொரு நடவடிக்கையாக அலசி ஆராய்ந்து, அவற்றின் முக்கியத்துவம், அதன் சார்ந்திருக்கவேண்டிய தன்மை (dependency) ஆகியவற்றைப் பொறுத்து வகைப்படுத்தி (Prioritized task) ஒட்டுமொத்த ப்ளூ பிரிண்டை நமக்கு அளிப்பதும் பைப்லைன்தான். பைப்லைனை இறுதி செய்துவிட்டால் போதும். நிரல் தயாரானதும் அது  இறுதிப்பொருளைக் கொண்டு வருவது வரை அனைத்தும் ஜென்கின்ஸ் வசம் வந்துவிடும்.

சி.ஐ உலகில் மாற்றங்களை அனுப்பி வைப்பதுடன் நிரல் எழுதுபவர்களின் பணி முடிந்துவிடுகிறது. நிரலில் (script) செய்யப்பட்ட புதிய மாற்றங்களை அலசி, ஆராய்ந்து, எந்த குறிப்பிட்ட நிரல் தொகுப்பில் (module) மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன என்பதை அறிந்து அந்த நிரல் தொகுப்பில் (module) மட்டும் மாற்றங்களை அமலுக்குக் கொண்டு வருகிறது. பதிதாக செய்யப்பட்ட மாற்றங்களினால் நிரல் அடித்தளத்தில் (codebase) மாற்றங்கள் ஏற்பட்டால் சம்பந்தப்பட்டவர்களின் கவனத்திற்கும் கொண்டு வருகிறது. ஆகவே சிறு பங்கு சோதனையில் (unit testing) ஆரம்பித்து இறுதியான ஒருங்கிணைந்த சோதனை (integrated testing) வரை அனைத்தையும் ஜென்கின்ஸ் பணியால் ஒருங்கிணைக்க முடிகிறது.

சரி, பைப்லைனில் என்னவெல்லாம் இருக்கிறது?  மூன்று முக்கியமான விஷயங்கள் உள்ளன. ஸ்டெப்(Step), நோட்(Node) மற்றும் ஸ்டேஜ் (Stage). ஜென்கின்ஸ் போன்ற  சி.ஐ. தொகுப்புகளின் ஆதார சுருதி இவை.

ஸ்டெப் என்பது ஒற்றை வரிக் கட்டளை. என்ன செய்ய வேண்டும் என்று ஜென்கின்சுக்கு உத்தரவிடும் ஒரு சாசனம். நேரடியான ஒற்றை வரி கட்டளை!  உங்களை யோசிக்க விடாது. என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும். அவ்வளவுதான்.

அடுத்ததாக நோடு,  பைப்லைன் கட்டமைப்பில் நோடு முக்கியமான பகுதி. அதென்ன நோடு[V7] [rj8] ?  அதுவும் ஒரு கணிப்பொறிதான். மேகக்கூட்டத்தில் (cloud) உள்ள இன்னொரு கணிப்பொறி. அது குருவோ, சிஷ்யனோ எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிlட்டும். பேதமில்லை. ஜென்கின்ஸ் உலகம், சமரச சன்மார்க்கம் உலவும் இடம்.

நோடு என்பது ஸ்டெப் மூலமாக வரும் கட்டளைகளை சிரம் தாழ்த்தி ஏற்றுக்கொண்டு செவ்வன செய்வதுதான்.  ஜென்கின்ஸ்பணி (job) மூலமாக வந்து சேரும் கட்டளைகளை பிரித்து, அதை இயக்குவதற்கான முஸ்தீபுகளை செய்கிறது. பெரிய நிறுவனங்களின் செயல் கட்டமைப்புகளை நிர்வகிக்கும் குழுவின் (configuration management) பணிகள் இவை. ஒற்றை ஆளாக, இதை ஜென்கின்ஸ் செய்து முடிக்கிறது.

நோடு, இரு வேறு பணிகளைச் செய்கிறது. முதல் பணி, ஸ்டெப்பை, ஜென்கின்ஸ் பில்ட் கியூவில் (Build queue) சேர்த்துவிடுகிறது. அதென்ன பில்ட் கியூ?  திருப்பதி தரிசன வரிசை போன்றது ஜென்கின்ஸ் ஜாப் வரிசை! நோடு, ஃப்ரீயானதும், பில்ட் கியூவில் காத்திருக்கும் ஸ்டெப் களத்திற்கு அனுப்பி வைக்கப்படும். எந்த சிஸ்டமும் சும்மா இருந்துவிட முடியாது. மனிதவளங்களை கையாளும் பெரிய மேலாண்மை அதிகாரிகளை விட ஜென்கின்ஸ் பலமடங்கு துரிதம்!

எதை முதலில் அனுப்புவது, எதை நிறுத்தி வைப்பது என்பன போன்ற கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்ட சங்கதிகளும் ஜென்கின்ஸ் கட்டுப்பாட்டில் இருக்கும். இவையெல்லாம் பைப்லைனை பொறுத்தே முடிவு செய்யப்படுகிறது. தடுப்பதோ, நிறுத்துவதோ அனைத்தும் அனுமதியை  (access level) பொறுத்து முடிவு செய்யப்படும்.

நோடு, இன்னொரு முக்கியமான பணியையும் செய்துவிடுகிறது. இயங்குமிடம் (Slot) கிடைத்தபின்னர் இயங்கு தளத்தை (work space) உருவாக்குவது. அதாவது ஜென்கிஸ் பணியை இயக்குவதற்கான பிரத்யேக வசதிகளை நோடு செய்து தருகிறது. உதாரணத்திற்கு வீடு வாடகைக்கு கிடைத்தால்போதுமா?  நமக்கென்று தேவைப்படும் சில வசதிகளும் வேண்டுமே. ஏ.சி இருந்தாக வேண்டும், மின்விசிறி வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக இணைய வசதி.

இவையெல்லாம் அடிப்படை வசதிகள் அல்ல. சம்பந்தப்பட்ட ஜென்கின்ஸ்  பணியின்  இயக்கத்திற்கான சில தனி வசதிகள். லைப்ரரி கோப்புகள், சில பிரத்யேக மாற்றங்கள் (configuration settings). இத்தகைய மாற்றங்கள் நீண்ட காலத்திற்கு இருக்கப் போவதில்லை.  ஜென்கின்ஸ் ஜாப் ஓடி முடியும்வரை மட்டுமே  இவை உயிரோடு இருக்கும்.

ஜென்கின்ஸ் ஜாப் ஒவ்வொன்றிலும் ஒரு இயங்கு தளம் (work space) உருவாக்கப்படுவதன் நோக்கம், பைப்லைனில் எந்தவொரு பின்னடைவும் வந்துவிடாமல் பார்த்துக்கொள்வதுதான். ஒரு சில ஸ்டெப் எதிர்பார்த்த நேரத்தை விட அதிகமான நேரத்தை எடுத்துக் கொண்டால், அதன் காரணமாக மற்ற ஸ்டெப் பாதிக்கப்படும். அதன் காரணமாக ஒட்டுமொத்தமாக  பைப்லைன் பாதிக்கப்படும். ஆகவே, இயங்குதளத்தை சரியான முறையில் நிர்வகித்து ஆயுட்காலத்தை வடிவமைப்பதன் மூலமாக ஒட்டுமொத்த பைப்லைனை சிறப்பாக கையாளலாம்.

அடுத்தபடியாக ஸ்டேஜ்.  அமைப்பு ரீதியாக தனித்தனி குழுக்களாக இருப்பவை. ஒட்டுமொத்த பைப்லைனை ஸ்டேஜ் என்னும் தனித்தனி அலகுகளாக பிரிக்கலாம். ஒவ்வொரு ஸ்டேஜ் பகுதியும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஸ்டெப்களை கொண்டிருக்கும். ஸ்டேஜ் என்பதே ஒரு பெரிய ஸ்டெப் என்றுதான் சொல்லவேண்டும். ஒவ்வொரு ஸ்டெப்பும் அதற்கேயுரிய ஏபிஐகளை (API) கொண்டிருக்கும். வெவ்வேறு எண்ணிக்கையிலான ஸ்டெப் இருக்கும்போது, அவற்றிற்கிடையே உள்ள ஒற்றுமைகள், அவை சார்ந்து இருக்கும் தன்மையைப் பொறுத்து ஸ்டேஜின் முக்கியத்துவம் அமையும்.

ஸ்டெப், நோடு, ஸ்டேஜ் என்பதுதான் ஜென்கின்ஸின் மும்மூர்த்திகள். ஏதாவது ஒரு மூர்த்தியின் கீர்த்தி குறைந்தாலும், ஜென்கின்ஸின் செயல்திறன் வெகுவாக பாதிக்கப்பட்டுவிடும். மும்மூர்த்திகளை இன்னும் எளிமையாக அறிமுகப்படுத்தமுடியும்.

மாஸ்டர் -குரு. இதுதான் ஜென்கின்ஸின் அடிப்படைக் கட்டுமானம். ஒட்டுமொத்த பில்ட் சிஸ்டம். பைப்லைன் ஸ்கிரிப்ட் அனைத்தும் அலசப்பட்டு, நோடு கிடைத்ததும் சம்பந்தப்பட்ட நோடுக்கு கச்சிதமாக அனுப்பி வைக்கும் பணியை இதுதான் செய்கிறது

ஏஜென்ட் – சிஷ்யன். மாஸ்டர் அனுப்பும் கட்டளைகளை ஏற்றுக்கொண்டு, சம்பந்தப்பட்ட ஸ்டெப்புக்கு தேவையான கட்டமைப்பைச் (configuration setup) செய்து தருகிறது. என்ன செய்யவேண்டும், எத்தனை முறை இயக்கவேண்டும் என்பதெல்லாம் குருவின் கட்டளை. அதற்கு ஏற்றபடி செயல்படவேண்டியது சிஷ்யனால் தீர்மானிக்கப்படுகிறது.

எக்ஸிகியூட்டர் (executor) – பணியாள் என்று சொல்லலாமா? எழுதப்பட்ட கட்டளையை இயக்குவது இதன் பணி. குருவிடமோ, சிஷ்யனிடமோ எல்லோரிடமும், எந்நேரமும் பணிபுரியக்கூடிய எளியோன். யார், எப்போது அழைத்தாலும் சென்று, கொடுக்கப்பட்ட கட்டளையை அப்படியே நிறைவேற்றிவிடும்.  இதன் தலைவிதியை நிர்ணயிப்பதுதான் த்ரெட் (thread). பைப்லைனின் தேவைக்கேற்ப இதன் ஆயுட்காலத்தை ஜென்கின்ஸ் முடிவு செய்யும். ஒவ்வொரு எக்ஸிகியூட்டருக்கும் ஜாவா மொழிச் சரடு ( java.lang.thread) உண்டு. எவ்வளவு நேரம் இயங்க வேண்டும் என்பதை இதன் மூலம் தீர்மானித்துவிடலாம்.

சரி, ஜென்கின்ஸை எப்படிப் பயன்படுத்தலாம்?  இருவகைகளில் அதைச் செய்யமுடியும். ஜென்கின்ஸ் தன்னுடைய வெப்சர்வரை பயன்படுத்தி, முழு கட்டுப்பாட்டையும் செயலுக்கு கொண்டு வந்து செய்யப்படும் முழுமையான தொகுப்பாக (standalone) பயன்படுத்திக்கொள்ளலாம். அல்லது  டாம்கேட் (Tomcat) போன்று ஏற்கனவே உள்ள கட்டமைப்பின் (existing framework) ஒரு பகுதியாகவும் செயல்படவைக்கலாம்.

பல்முனை தொடரமைப்பு (Multi-branch Pipeline) ஜென்கின்ஸின் முக்கியமான அம்சம் என்று சொல்லலாம். ஒரே நிரல், வெவ்வேறு கட்டமைப்புடன் வெவ்வேறு இயங்குதளங்களில் இயக்கப்படவேண்டும் என்றால் மல்ட்டி பிரான்ச் அவசியமாகிறது. மிகப்பெரிய நிறுவனங்கள், ஒரே ஒரு இயங்குதளத்தை நம்பியிருப்பதில்லை. அதே நேரத்தில் ஒவ்வொரு இயங்குதளத்தை தனித்தனியாக நிர்வகிக்கவும் அதற்காக நேரம் செலவழிக்கவும் தயாராக இல்லை. இந்நிலையில் எழுதப்படும் நிரலை தேவைக்கேற்ப பயன்படுத்த பதிப்புக் கட்டுப்பாடு (version control) அவசியமாகிறது.

பதிப்புக் கட்டுப்பாட்டின் மூலமாக மூல நிரலில் (original code) மாற்றங்கள் செய்துவிடாமல் கட்டமைப்புக் கோப்புகளில் (configuration files) மட்டும் மாற்றம் செய்வதன் மூலம் எந்த இயங்குதளத்தில் (environment) இயக்கப்பட வேண்டும் என்பதை நிர்ணயிக்கலாம். யார், எப்போது, எங்கே, எத்தகைய மாற்றங்களை செய்தார்கள் என்பது போன்ற ஒட்டுமொத்த ஜாதகத்தையும் பதிப்புக் கட்டுப்பாட்டுச் செயலிகள் மூலமாக பெற்றுவிடமுடியும்.

சரி, ஏன் ஜென்கின்ஸ்? ஒப்பன் ஸ்டாக்கும் (open stack) கட்டற்ற மென்பொருள்தான். ஜென்கின்ஸை விட எல்லாவிதத்திலும் மேம்பட்ட பாம்பூவை (bamboo) வரவேற்கலாம்.  நிறுவனங்களின் கட்டமைப்பை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு செயல்படுவதில் ஷெஃப் (chef) ஜென்கின்ஸை மிஞ்சுகிறது. இலவசமெல்லாம் வேண்டாம். உதவிக்கு வரவேண்டும். காசு கொடுத்து வாங்க ரெடியென்றால் டீம் சிட்டி (team city) இருக்கவே இருக்கிறது. இவையெல்லாம் எந்தளவுக்கு டாக்கர் (docker) உடன் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன? சரியான தீர்வுகள்தானா? நாளைய விடியல் என்பது டெவ்ஆப்ஸை (DevOps) பொறுத்தது.  எளிமையிலும், துரிதத்திலும், செயல்பாட்டிலும் முன்னணியில் நிற்கப்போவது யார்? தேடலைத் தொடர்வோம்!

***

Feature image: A 1927 movie poster for Fritz Lang’s classic sci-fi masterpiece Metropolis by Boris Bilinsky, shared by Simon Perkins and released under Creative Commons 2.0.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.