பிரெஞ்சு இந்திய காலனி இலக்கியம் – பகுதி 3

ஆங்கிலேய அரசருக்கென ஊழியம் செய்யத் தொடங்கி அதில் நடந்த மனிதக்கீழ்மைகளையும் வக்கிரங்களையும் வெளிச்சம் போட்டுக்காட்டியதில் உச்சம் கண்டு தேசத்துரோகி எனும் பட்டத்தோடு ரோஜர் கேஸ்மெண்ட் எனும் அயர்லாந்து நாட்டுப் போராளியின் வாழ்வு தூக்கில் முடிந்தது. சரியாக நூறு வருடங்களுக்கு முன்னால் நடந்தது என்றாலும் அயர்லாந்து நாட்டு மக்கள் இன்றும் மறக்கவில்லை. அயர்லாந்து நாட்டு விடுதலைப்போரில் ரோஜர் கேஸ்மெண்ட் ஒரு முக்கியமான சகாப்தம். காங்கோ நாட்டின் அட்டூழியங்களை உலகுக்கு அறிமுகப்படுத்தியது ஆங்கிலேய காலனி ஆதிக்கத்திற்கு அடிக்கப்பட்ட முதல் எச்சரிக்கை மணி எனக் குறிப்பிடலாம். அந்த நெடும் கதையை இங்கு பார்க்கப்போவதில்லை என்றாலும் ரோஜர் கேஸ்மெண்டின் கதை நவீன ஆங்கிலேய இலக்கியத்துக்கு மிக முக்கியமான தொடக்கத்தைத் தந்தது. அவர் நாவலாசிரியர் ஜோஸப் கான்ராட்டின் நண்பர். இருவரும் ஆப்பிரிக்க நாடான காங்கோவில் சந்தித்திருக்கின்றனர். சொல்லப்போனால் Heart of Darkness நாவலுக்கான பார்வை ரோஜர் கேஸ்மெண்டிடமிருந்து கான்ரார்ட் பெற்றது. அதுவரை ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு ஊதியம் செய்துவந்த ஜோசப் கான்ரார்ட் ரோஜருடனான நட்புக்குப் பிறகே அங்கு அடிமைத்தனத்தின் கொடூரங்களை கவனிக்கத் தொடங்கினார். மனிதக் கீழ்மையின் ஆழத்திற்கு தரைதட்டாது. ஒவ்வொரு வன்முறையும் முந்தையதை விட மேலும் தீவிரமாகவும் கொடூரமாகவும் மாறிவருவது நம் காலத்தின் வரலாறு.

 

நீலக்கடல் நாவலில் அப்படி ஒரு நிகழ்வு உண்டு. பிரெஞ்சு காலனியான மொர்ரீஸியஸ் பகுதியிலிருந்த போல்துரை பண்ணை அப்படி ஒரு கொடூரங்களின் கூடமாக அமைந்திருந்தது. பொதுவாகவே கரும்பு பண்ணையில் நூற்றுக்கணக்கான அடிமைகளும் அவர்களது குடும்பங்களும் ஊழியம் செய்துவருவார்கள் என்றாலும் அவர்கள் அப்பகுதியின் அனைத்து துரைகளுக்கும் அடிமைதான். ஒப்பந்தத் தொழிலாளர்களாக ஒரு தோட்டத்தில் வேலை செய்துவருபவர் பிற இடங்களில் வேலைக்கும் செல்லமுடியாது தப்பிக்கவும் முடியாது. இடுப்பு ஒடிய குனிந்து வேலை செய்பவர்களைக் கண்காணிக்க ஆப்ரிக்க அடிமைகளை கங்காணிகள் அமர்த்தியிருப்பார்கள். கேமரூன் பகுதியிருந்து இதற்கென பல ஆப்பிரிக்க அடிமைகள் வேலைக்கு அழைத்துவரப்பட்டனர். இந்திய தோட்டத் தொழிலாளிகளைக் கண்காணிக்கவும் அவர்கள் கடும் உழைப்புக்குப் பின்னே ஓய்வெடுக்க எண்ணும்போதே சவுக்கால் அடிக்கவும் கேமரூன் அடிமைகள் பழக்கப்பட்டிருந்தார்கள். அப்படியான ஒரு கூட்டத்திலிருந்து தப்பிய ஒரு இந்தியகூலியின் சாவுக்குப் பழிவாங்குவதற்காகப் பல வருடங்கள் பண்ணையில் வேலை பார்த்த கூலிக்காரர்கள் பலரும் சேர்ந்து போல்துரையை கொடூரமாகப் பழிவாங்கும் நிகழ்வு மிக உயிர்ப்பானப் பகுதியாக நாவலில் உள்ளது. போல்துரையின் சாவு மிகவிரைவாக அத்தீவில் தீயச்செய்தியாகப் பரவியது. பிரெஞ்சு அதிகாரிகள் இதற்கெல்லாம் அஞ்சவில்லை. அடிமைகளின் மீதான கட்டுப்பாடுகள் மேலும் அதிகரித்தது. அடிமைகளின் குடும்பங்கள் கடத்தப்பட்டன. மேலும் சந்தேகத்துக்கு இடமாக இருந்த தேவையானி குடும்பமும் ஊரைவிட்டுச் செல்வதற்காகத் தயாராகிறது. அதற்குப் பின் மொர்ரீஸியஸ் பழைய நிலைக்கு என்றும் திரும்பவில்லை. பயத்தால் சாம்ராஜ்ஜியத்தை நிலைநாட்டியிருந்த பிரெஞ்சு காலனியரசுக்கு அடிமை ஒருவன் ஒருமுறை முதலாளியை எதிர்க்கத் துணியும் சித்திரம் அதிர்ச்சியைத் தந்திருக்கும். அதற்குப் பிறகு சாமானியர்களுக்கு அளிக்கப்படும் துளி சலுகையும் அங்கு கிடைக்கவில்லை. அதற்குப் பின்னர் 1830களில் அடிமைத்தனத்தை சட்டத்தின் மூலம் ஆங்கிலேய அரசு நிறுத்தும் வரை இது தொடர்ந்தது. ஒப்பந்தக்கூலிகள் என அடுத்தகட்ட அடிமைமுறை பிற்பாடு தொடங்கியது. அதன் ஆட்டவிதிகள் வேறானவை.

 

ரோஜர் கேஸ்மெண்டின் வாழ்வும் அப்படித்தான் ஆனது. அடக்குமுறையை எதிர்பவர்கள் மீது சர்வாதிகாரம் பலமடங்கு சக்தியோடு திரும்ப அடிக்கும். நேரடியாகவும் மறைமுகமாகவும். ரோஜர் கேஸ்மெண்ட் தனது நாட்குறிப்பில் எழுதியிருந்த ஓரினச்சேர்க்கை ஆர்வங்களைக் கொண்டு அவர் மீது அவதூறு பரப்பப்படுகிறது. ஐரிஷ் போராட்டத்திற்காக ஆட்களைத் திரட்டித் தருபவராகவும் ஆங்கிலேயரின் தேசத்துரோகி என முத்திரை குத்தப்பட்டவராகவும் ஆனதால் அவர் சிறைக்குத் தள்ளப்பட்டார். அவரை விடுதலை செய்யக்கோரி ஐயர்லாந்தின் பிரபல கலைஞர்கள் பலரும் பிரிட்டீஷாருக்கு எதிர்மனு கொடுத்தனர். அதே சமயம் இந்த வழக்கை விசாரித்த குழுவினர் அவரது பாலிய வக்கிரங்கள் எனும் கதைகளை அவரது கருப்பு நாட்குறிப்பு எனப்படும் ஆவணத்திலிருந்து எடுத்து மக்களுக்கு அளித்தனர். அப்போது பொதுவாழ்வில் பிரபலமாக இருந்த பலரும் ரோஜர் கேஸ்மண்டுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. ஆஸ்கார் வைல்டுக்கு ஆன அதே கதை தான். வாழ்வில் முரண்களுக்குத் தான் ஆச்சர்யமே இல்லையே. ஆங்கிலேயரின் காங்கோ காலனியில் நடந்த அட்டூழியங்களை ரோஜர் கேஸ்மண்டு மூலமாக அறிந்துகொண்டு நாவலாக எழுதிய ஜோசப் கான்ரார்ட் கடைசிவரை  அவருக்கு ஆதரவு தெரியவிக்கவில்லை. எப்பேர்ப்பட்ட அவலம் இது? காங்கோவில் நடந்த மனிதக் கீழ்மைகளுக்கு எவ்விதத்திலும் குறைவில்லை இது. நிறம், இனம், தேசம் பாராது சகலர்களிடமும் மண்டிக்கிடக்கும் கீழ்மைக்கு அளவேயில்லை. சில மாதங்கள் கழித்து போதிய ஆதரவு பெறாததால் ரோஜர் கேஸ்மண்ட்க்கு  தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.  தனது இனத்தின் குரலைக்கூட நசுக்கும் மூர்க்கத்தனம் காலனி அதிகாரத்திடம் இருந்தது என்பதற்கு இதைவிட பெரிய சாட்சி தேவையில்லை.

 

தேசம், இனம் போன்ற அடையாளங்களின் மீது அதீதப்பிடிப்பும், அமைப்புகளுக்குப் பின்னால் கண்மூடித்தனமாகச் செல்பவர்களின் தீவிரமும் மனதின் கீழ்மையை வெளிக்கொண்டுவரும் செயல்களில் ஈடுபட்டு வருவதை மனித வரலாற்றில் தொடர்ந்து பார்த்துவருகிறோம். பிரெஞ்சு காலனி அரசாங்கமும் அந்த அதிகாரத்தின் மீது கட்டப்பட்ட ஒன்றுதான். நீலக்கடல் நாவலில் அதீத பேராசையினால் இரு வேறு நாட்டின் நிலப்பகுதியின் வளங்கள் சீரழிக்கப்படுவதும், மெல்ல பண்பாட்டு அடையாளங்கள் உருவாகி மீண்டும் அழியும் சித்திரமும் வெளிப்படும் இப்படிப்பட்ட பல சித்தரிப்புகள் உள்ளன. ஹிந்து சமுதாயத்தின் கீழ்மட்டத்தில் இருக்கும் மக்கள் மெல்ல தங்கள் உழைப்பின் மூலம் அடிமைகளாகவும் கூலிகளாகவும் முன்னேறி புது நிலத்தை வளர்ப்பதும், பின்னர் தாங்கள் உருவாக்கிய நிலத்திலேயே அடையாளத்தை இழந்து நிற்பதுமான வளர்சிதை மாற்றம் வரலாற்றுப் பரிணாமமாக உருவாகியுள்ளது. பிரபஞ்சனின் ‘வானம் வசப்படும்’, ‘கண்ணீரால் காப்போம்’ போன்ற நாவல்களில் இல்லாத சித்திரம் இது.

 

ஒரு வரலாற்று நாவலுக்குத் தேவையான  பண்பாட்டு மாற்றங்களின் அழகியல் இல்லாதது பிரபஞ்சனின் நாவல்களில் உள்ள விடுபடல்களாக நாம் பார்க்கலாம். நாகரத்தினம் கிருஷ்ணாவின் நாவல்களில் நில உடைமைகளின் மாற்றத்தால் சமூகத்திலும் பண்பாட்டிலும் நடக்கும் மாற்றத்தின் சித்திரம் முக்கிய பங்கு வகிக்கும். நீலக்கடலின் முடிவு பிரெஞ்சுகாலனி அரசின் ஆரம்பநாட்களுக்குச் சற்று பின்னே செல்லும். தேவேந்திரனும் தேவையானியும் அழிந்து நிற்கு விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் கோட்டுருவங்களாகத் தோன்றிவரும் போது அக்காலத்தின் பொலிவற்ற நிலையும், நிலம் ஒரு பெரும் அதிகாரத்தின் கையிலிருந்து நழுவும் சித்திரமும் நமக்குக் கிடைக்கின்றது. துலுக்க நவாப்களின் ஆட்சியில் நடைபெறும் இந்த நில மாற்றம் செயலாற்ற முடியாத சொந்த இனத்தினரின் கண்முன்னே நடந்த ஒரு அநீதி. துலுக்க நவாப்களும், தஞ்சை மராட்டாக்களும், ஆங்கிலேயரும், பிரெஞ்சு தேசத்தவரும் போடும் ஒப்பந்தத்தில் பலியாகும் பலிகடாவாக வட ஆற்காட்டு நில மக்களின் நிலை இருந்தது. இப்படிப்பட்ட சித்திரம் நமக்கு பிரபஞ்சனின் நாவலில் கிடைப்பதில்லை. நீலக்கடல் மற்றும் செஞ்சியை மையைமாகக் கொண்ட நாகரத்தினம் கிருஷ்ணாவின் மற்றொரு நாவலான ‘கிருஷ்ணப்ப நாயக்கர் கெளமுதி’யிலும் நமக்கு இவை கிடைக்கின்றன.

 

இதற்கு முக்கியமான காரணம் நம்காலகட்டத்தில் காலனியாதிக்க காலம் மீது போட்டுப்பார்க்கப்படும் பலவித சோதனைகளும் ஆய்வுகளும் எனலாம். இன்று நாம் காலனியாண்டுகளைத் திரும்பப்பார்க்கும்போது ஒரு முறையான சமூக, வர்த்தக மற்றும் நாட்டாரியல் ஆய்வுக்கான குறுக்குவெட்டுத் தோற்றத்தை நமக்கு அளிக்கின்றன. ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குத் தாவி நம்மால் சரித்திர இடைவெளிகளையும், உலக சரித்திரத்தின் தாக்கத்தில் உருவான விளைவுகளையும் ஒரு புதிர்போல போட்டுப்பார்க்க முடிகிறது. மற்றொரு முக்கிய காரணம், காலனி அரசு வீழ்ச்சியின் போதும் அதற்குப் பின்னரும் நிகழ்ந்த சமூக அரசியல் மாற்றங்கள்.

 

பொருளியல் மாற்றங்களால் நடக்கும் இடப்பெயர்வும், சமூக அடுக்கு மாற்றங்களும் நவீன வரலாற்று ஆய்வுக்கு அத்தியாவசியமான ஒன்று. அன்றாட உணவு மற்றும் வாழ்வாதாரத் தேவைக்காக இடப்பெயர்வு நடக்கும்போது மக்கள் திரள் அடிமை வாழ்வுக்கும் தயாராக இருக்கிற அவலம் என்பதை மனித வரலாற்றின் கதையாகப் பார்க்கலாம். அப்படிப்பட்ட புது பொருளாதார மாற்றங்கள் சமூக அடுக்குகளைக் கலைத்துப்போடும். லே மிராப்ளே நாவலில் பிரெஞ்சுப் புரட்சி காலகட்டத்தில் எப்படி மக்கள் எலிகளைப் போல வாழ்ந்துவந்ததனர் என்பதைக் காட்டுகிறது. பொருளாதாரத் தேவைகளைக் கைப்பற்றுவதன் விளைவாக அதிகாரம் தலைகீழாக மாறுகிறது. வட ஆற்காட்டு மாவட்டத்தின் நிலப்பகுதிகளான செஞ்சி, திருவண்ணாமலை, புதுச்சேரி பகுதிகள் கடந்த நானூறு ஆண்டுகளில் தெலுங்கு பேசும் நாயக்கர் சமூகத்தின் கைகளிலிருந்து மாறிவந்துள்ள சித்திரத்தை இதனுடன் ஒப்பிடலாம். இது வரலாற்றின் பெரும்போக்கில் சிறு நகர்வு என்றாலும் இந்த சமூக மாற்றம் ஒரு பண்பாட்டு மாற்றமாக உருமாறும் விதத்தை இலக்கிய ஆசிரியன் ஆர்வத்துடன் நோக்குவான். அப்படி நோக்கும்போது காலத்தின் கணக்கில் அடங்காது மீறி மனித வாழ்வு சாராம்சம் கொள்ளத் தொடங்குகிறது.

 

இந்த பண்பாட்டு மாற்றங்களை அடையாளம் கண்டு கொள்ளும்தோறும் வரலாற்றின் சுழிப்புகளைக் கொண்டு புனையும் ஆசிரியனின் உணர்வுக்கொம்புகள் தீவிரம் கொள்ளத்தொடங்குகின்றன. அதில் அவன் பண்டைய காலத்தைப் பார்ப்பதில்லை. மாறாக மிக உயிர்ப்பான வாழ்வைப் பார்க்கிறான். வண்ணமிக்க அந்த வாழ்வில் சலிப்பும், சந்தோஷமும், துக்கமும், விரக்தியும் நம்முன்னே நடப்பதுபோலத் தோன்றும். அவனால் அதைத் தொட்டு கலைத்து ஒரு புது வாழ்வை எழுதிவிட முடியும். அதற்குத் தேவையான கருவிகள் அவனிடம் உண்டு.

 

முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் சூயஸ் கால்வாய் இல்லாத நாட்களில் ஆப்பிரிக்க கண்டத்தைச் சுற்றி வரும் ஐரோப்பிய கப்பல்கள் நன்முனை புள்ளியைக் கடக்கும்போது பலத்த சூறாவளிக்காற்றில் சிக்கிக்கொண்டு தென் துருவக்கடல் நோக்கி துரத்தப்படும். இதைத் தவிர்க்கும் வானியல் சாஸ்திரங்களை மறுமலர்ச்சி அறிவியலளாளர்கள் ஆராய்ந்தனர். கப்பல்கள் தக்க பருவத்தில் நன்முனைப்புள்ளியைக் கடக்கும் அறிவியலை கணக்கிட்டனர். ஆனால் அதுமட்டும் போதவில்லை. ஆப்பிரிக்காவை நீளவாக்கில் முழுவதுமாகக் கடப்பதற்குள் கப்பலின் சரக்குகள் தீர்ந்துபோவதும், மாலுமிகள் உடல்நலமில்லாமல் சிகிச்சைக்காகக் காத்திருப்பதும் வணிகத்துக்குப் பெரிய ஆபத்தாக இருந்தன. இந்த நேரத்தில் மொர்ரீஸியஸ், ரெயூனியன் போன்ற சிறு தீவுகள் இந்தியாவுக்கும் நன்முனைக்கும் இடையே நல்ல தங்கு நிலமாக இருந்தது. இப்படிப்பட்ட போக்குவரத்தைச் சமாளிப்பதற்காகவும், தேவையான பொருட்களைச் சேகரிக்கவும், கரும்பு, சர்க்கரை போன்ற பண்ணைகளில் விளைச்சலை அதிகரிக்கவும் ஆங்கிலேயர்களும் பிரெஞ்சு அரசுகளும் மாறி மாறி இந்தச் சிறு தீவுகளின் ஆளுகைக்குப் போட்டி போட்டன. நீலக்கடலில் வரும் இந்திய அடிமைகள் இத்தீவுகளை நவீனமாக்க வந்தவர்கள், இந்த உலகப்பொருளியலில் ஒரு முக்கியமான பங்கு வகித்தவர்கள் எனும் நோக்கத்தில் பார்த்தால் இதன் விஸ்தாரம் புரியும். அதே போல சூயஸ் கால்வாயின் கட்டுமானத்துக்காக தறுவிக்கப்பட்ட அடிமைகளின் எண்ணிக்கை கணக்கில் அடங்காதது. இந்த சித்திரத்தைப் பற்றிய புரிதல் இல்லாமல் இன்றைய நவீன புனைவாசிரியன் ஒரு வரலாற்று நாவலை எழுதமுடியாது. அப்படி எழுதப்புகுந்தால் அது மிக குறைவுபட்ட சித்திரமாக ஆகிவிடும்.

 

நாகரத்தினம் கிருஷ்ணாவின் இடப்பெயர்வு நாவல்கள் அவரது முன்னோர்கள் விட்டுச் சென்ற இந்த இடைவெளியை மிகக்கச்சிதமாக நிரப்புகிறது. அதற்குத் தேவையான பயணிகளின் நாட்குறிப்புகளும், இறையியலாளர்களின் பயணக்குறிப்புகளும் மூல மொழியான பிரெஞ்சில் வாசித்து அறிந்துகொள்ள முடிந்திருப்பது தமிழ் புனைவுவின் அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு உபயோகமாக அமைந்துள்ளது. சஞ்சய் சுப்ரமண்யம், நாராயண ராவ், டேவிட் ஷுல்மான் (Textures of Time) போன்ற வரலாற்றாய்வாளர்கள் தெலுங்கு, தமிழ், ஸ்பானிஷ் போன்ற பல மொழிகளில் கிடைக்கும் மூலத் தரவுகளைக் கொண்டு வரலாற்றை அணுகுவதற்கு புது சாளரங்களைத் திறந்துவிட்டிருக்கிறது. அதுபோல இக்காலத்துப் புனைவாசிரியர்கள் மூல நூல்களைக் கொண்டு தங்கள் கற்பனையால் அந்த பண்பாட்டுச் சித்திரங்களை மீட்டுருவாக்கும் காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். இனி திரும்பிச் செல்ல முடியாது. கடந்த பத்து ஆண்டுகளில் தமிழில் வந்த வரலாற்று நாவல்களில் இந்த போக்கைக் காண முடியும் – காவல்கோட்டம், கொற்கை, வெண்முரசு, அஞ்ஞாடி, நீலக்கடல் போன்ற அனைத்து நாவல்கள் மிகத் தீவிரமான வரலாற்று ஆய்வுகளுக்குப் பின்னரே எழுதப்பட்டிருக்கின்றன. அவற்றின் மிக அதிகமான பக்க அளவுக்கும் இது ஒரு காரணம் ஆகும். ஒரு ஆச்சர்யமான ஒப்புமையை வாசகர்கள் செய்ய முடியும் என்பதாலேயே விளைந்தது இக்கட்டுரை – பிரபஞ்சனின் வானம் வசப்படும் மற்றும் நாகரத்தினம் கிருஷ்ணாவின் நீலக்கடல் ஆகிய இந்த இரு நாவல்களும் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தைப் பற்றிய வரலாற்றைப் பேசுகின்றன. அதே ஆட்கள் உண்மை மனிதர்களாக வலம் வருகிறார்கள். மூல நூலாக ஆனந்தரங்கப்பிள்ளையின் நாட்குறிப்பை எடுத்துக்கொண்ட பிரபஞ்சன் பெரும்பாலும் அதிலிருந்து விலகவில்லை. நாகரத்தினம் கிருஷ்ணாவின் ஆய்வு அவரை பல மூல நூல்களுக்கும் பல நிலப்பகுதியையும் உலக வரலாற்றையும் காலனி வாழ்வையும் தொட்டுப்பேச வைத்திருக்கிறது. இனி வரலாற்றுப் புனைவு இதன் மேல் ஏறித்தான் பயணம் செய்ய முடியும். இதன் சாத்தியங்கள் என்னென்ன?

(தொடரும்)

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.